ரகசியம் 28 💚

eiS7HUK53793-8bbfc234

கைகளைக் கட்டி தத்தமது துணைகளை முறைத்துக்கொண்டு கயலும் யுகனும் நின்றிருக்க, அவர்களைப் பார்த்து அதிர்ந்து, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தனர் தேனுவும் வீரஜும்.

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” யுகன் பற்களைக் கடிக்க, “அண்ணியாரே, நீங்களே என் தம்பிய ஹேன்டல் பண்ணிக்கோங்க” தேனுவின் காதில் கிசுகிசுத்த வீரஜ், விசிலடித்தவாறு தன் தம்பியின் முறைப்பை கண்டுக்கொள்ளாதது போல் மெல்ல அங்கிருந்து நகர்ந்தான்.

தன்னவன் செல்வதைக் கவனித்து, “உன்னை அப்றம் கவனிச்சிக்கிறேன்” தேனுவிடம் ஒற்றை விரலை நீட்டிச் சொன்ன கயல், வேகமாக வீரஜின் பின்னால் ஓட, இங்கு விடாது தன்னை தீயாய் பார்த்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து தேனுவுக்கோ அடிவயிறு கலங்கியது.

“ஹிஹிஹி… சாப்பிட்டீங்களா?” அவள் அசடுவழிந்தவாறுக் கேட்க, “என்ன நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? நான் உன்னை காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்போவாச்சும் சொல்லிருக்கேனா? ஏன் இப்படி ஒரு காரியத்தை பண்ண?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பிய யுகனுக்கு கர்ணாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்து அத்தனை கோபம். அதனாலேயே ஒருபக்கம் நிச்சயதார்த்தம் நின்றதில் சந்தோஷம் என்றால், இன்னொரு பக்கம் ஆத்திரமும் கூட.

“நிஜமாவே உங்களுக்கு என்னை பிடிக்கலையா யுகன்?” அவனின் கடினமான வார்த்தைகளில் அழுகை உண்டாக, கலங்கிய விழிகளுடன் கேட்டாள் தேனு. ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவன், மெல்ல தன்னளை நெருங்கி “அது தேனு… நீ பண்ணது தப்பு” அவள் கேள்விக்கு பதில் சொல்லாது அவளின் தப்பைச் சுட்டிக்காட்டி அவன் பேச, தேனுவுக்கு கோபம்தான் வந்தது.

“ச்சே! என்ன தப்பு? இல்லை என்ன தப்புன்னு கேக்குறேன். உங்களை விட நல்லா மாப்பிள்ளை எங்க தேடினாலும் கிடைக்க மாட்டாங்க. நீங்க உங்க சந்தோஷத்தை பத்தி மட்டும் சுயநலமா யோசிக்காம சுத்தியிருக்குறவங்கள பத்தி யோசிக்கிறீங்க. இப்போ உங்க காதலை சொன்னா என் அப்பா அவமானப்படுவாறேன்னு அவரை பத்தி யோசிச்சு உங்க ஆசைய விட்டுக்கொடுக்க முன்வந்தீங்க. ஏற்கனவே உங்கமேல நிறைய காதல் இருக்கு. இப்போ அது எல்லைய தாண்டிருச்சு. என்னால உங்கள விட்டுக்கொடுக்க முடியாது” அவள் பேசிக்கொண்டுப் போக, அதிர்ந்து விழித்தான் யுகன்.

“நா…நான் காதலிக்கிறேன்னு யார் சொன்னது. அப்ப..அப்படியெல்லாம் இல்லையே!” யுகன் தன் உணர்வுகளை மறைத்து அப்போதும் மறுத்துப் பேச, அவன் நாடியைப் பிடித்து நிமிர்த்தி தன் விழிகளைப் பார்க்கச் செய்தவள், “உங்க அபியண்ணா கூட நீங்க வாட்ச்சுக்கு சண்டை போடும் போது நான் அங்கதான் இருந்தேன். ஆரம்பத்துல ரொம்ப கோபம் இருந்துச்சு. ஆனா, நீங்க பேசினதை கேட்டதும் உங்களை விட ஒரு நல்ல புருஷன் எனக்கு கிடைக்க மாட்டாங்கன்னு தோனிச்சு. நான் நிஜமாவே உங்கள நிறைய காதலிக்கிறேன் யுகன், உங்களுக்காகதான் வீரா அண்ணா கூட பேசி நிச்சயதார்த்தத்தை நிறுத்தினேன். இதுக்குமேல உங்க மனசை என்கிட்ட மறைக்காதீங்க” காதலோடு பேசி முடித்தாள்.

யுகனோ சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை. பின் கைகளைக் கட்டி அவளை கூர்மையாகப் பார்த்தவாறு, “அவ்வளவுதானா, பேசி முடிச்சிட்டீங்களா? இப்போ நிச்சயதார்த்தத்தை நிறுத்தியாச்சு. மேடம் நெக்ஸ்ட் என்ன ப்ளான் வச்சிருக்கீங்க?” அவன் கோபம் கலந்த கேலியாகக் கேட்க, “ஆங் அது… தெரியல. வீரா அண்ணா பார்த்துக்குறேன்னு சொன்னாரு” என்றாள் அவள் திருதிருவென விழித்துக்கொண்டு.

“ஓஹோ! அப்போ குத்துமதிப்பா நிச்சயதார்த்தத்தை நிறுத்தியாச்சு. இனி என் அண்ணன் பார்த்துப்பான்னு ஒரு நம்பிக்கை. அப்படிதானே!” யுகன் கேலித்தொனியில் பேச, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… ஆமா” குரலைச் செறுமி தன் எண்ணத்தைச் சொல்லிவிட்டு அவள் அமைதியாக குனிந்த தலை நிமிராது நின்றிருந்தாள்.

கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டவன், சுற்றிமுற்றி பார்த்தவாறு, “இங்க நாம பண்றது வெளியில யாருக்காச்சும் தெரியுமா?” தீவிரமாகக் கேட்க, “அது எப்படி தெரியும்? எத்தனையோ ஏக்கர் நிலத்துல இந்த வீட்டை கட்டியிருக்காங்க. இங்க கொன்னு புதைச்சா கூட வெளியில யாருக்கும் தெரியாது. சோ, வாய்ப்பேயில்…” ஆர்வமாகப் பேசிக்கொண்டே போன தேனுவின் வார்த்தைகள் அடுத்தகணம் அப்படியே நின்றது.

காரணம், யுகன் அவளை அடுத்த வார்த்தை பேச அனுமதித்திருந்தால்தானே!

அவளின் இதழை அவளே எதிர்ப்பார்க்காது சிறைப்பிடித்திருந்தவன், ஆழ்ந்த அச்சாரத்தை பதித்துவிட்டே அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்திருந்தான். இதில் சிலையாக உறைந்துப்போய் நின்றிருந்த தேனுவுக்குதான் தன்னை சுதாகரித்துக்கொள்ளவே நேரம் தேவைப்பட்டது.

அதேநேரம் தன்னவனின் பின்னால் ஓடிய கயல், அவனுடைய அறைக்குள் அவன் பின்னாலேயே நுழைய, சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவனுக்கு தன்னை தொடர்ந்து வந்தவளைப் பார்த்து அத்தனைக் கடுப்பு!

“இங்க என்ன பண்ற?” வீரஜ் கோபமாகக் கேட்க, “இன்னும் எத்தனைநாளைக்கு இப்படியே இருக்க போறீங்க வீர்? எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணும்” பதிலுக்கு அவனை விட கோபமாகக் கத்தினாள் அவள்.

ஆனால், அவளின் கோபத்திற்கெல்லாம் அசரவில்லை அவன்.

“முடிவுதானே உனக்கு தெரிஞ்சாகணும்! இங்கயிருந்து போனதுமே நான் லண்டன் கிளம்புறேன். சீதாம்மா கூட இருக்க போறியோ, சத்யா அம்மா கூட இருக்க போறியோ அது உன் இஷ்டம். ஆனா, உன் வாழ்க்கையில நான் இல்லை கயல்விழி” அழுத்தமாக வந்த தன்னவனுடைய வார்த்தைகளைக் கேட்டு அவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

பக்கத்தில் மேசையிலிருந்த தண்ணீர் குவளையை தரையில் கோபமாகத் தூக்கி எறிந்தவள், “அப்போவும் சரி இப்போவும் சரி என்னை நீங்க ரொம்ப காயப்படுத்துறீங்க வீர், எப்போவும் உங்களை பத்தி மட்டும்தான் யோசிக்கிறீங்க. ஆரம்பத்துலயிருந்து இப்போ வரைக்கும் நீங்க என்னை எவ்வளவோ கஷ்டப்படுத்தியும் உங்களுக்காக மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கேன். நாலு வருஷம் நீங்க இறந்துட்டீங்கன்னு உறுதியா நினைச்சுக்கிட்டு இருந்தாலும் வேறொருத்தனை கல்யாணம் பண்ணணும்னு நான் யோசிச்சது கூட கிடையாது. ஆனா, நீங்க இப்போவும் என்னை பத்தி, என் காதல பத்தி யோசிக்கிறீங்க இல்லை. மனசாட்சியே இல்லாதவரு நீங்க, காதல உணரத் தெரியாத ஜடம்!” கோபமாகப் பேசிவிட்டு வெடித்து அழுதாள்.

அவள் பேசுவதை திரும்பி நின்று கேட்டுக்கொண்டிருந்தவன், அவளின் கடைசி வார்த்தைகளில் “ஆமாடீ நான் ஜடம்தான், என் மனைவியா உரிமையா என் முன்னால நீ வந்து நின்ன போதும் நான் யாருன்னு சொல்ல முடியாம உன்னை உரிமையா பார்க்க கூட முடியாம கையாலாகாத தனமா நின்னுக்கிட்டு இருந்தேனே! நான் ஜடம்தான்டீ. என்னடீ தெரியும் உனக்கு என்னை பத்தி?

நாலு வருஷம் உனக்கு என்னாச்சு ஏதாச்சுன்னு தெரியாம, எவனோ ஒருத்தனோட முகத்தை என் வாழ்நாள் பூரா இனி நான் சுமந்தாகணுங்கிற அழுத்தத்தோட நான் தவிச்ச தவிப்பு உனக்கு தெரியுமாடீ? எத்தனை முறை என்னை நானே அழிச்சிக்க ட்ரை பண்ணிருப்பேன் தெரியுமா? ஆனா, என்னை பெத்தவங்கள கொன்னவங்கள உயிரோட எரிக்க தெரிஞ்ச என்னால என்னை தைரியமா அழிக்க முடியல. கூடவே, உனக்கு நான் பண்ணி கொடுத்த வாக்கு என்னை உயிரோட கொன்னுருச்சுடீ.

என் கட்டுப்பாட்டையும் மீறி உன்னை தொடும் போது உன் கண்ணுல தெரியுற அருவருப்பு, கோபம், அந்நியத்தன்மைய பார்த்து உள்ளுக்குள்ள எவ்வளவு துடிச்சேன் தெரியுமாடீ? இதெல்லாம் உனக்கு புரியாது” தன் கட்டுப்பாட்டை இழந்து தன்னவளின் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் வீரஜ் மனம்விட்டுக் கத்த, விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள் கயல்.

இப்போதுதான் அவனின் மனநிலையை அவன் சொல்லிக் கேட்கின்றாள். முயன்று தன்னை மீட்டு, “ஆனா, எப்போ நீங்க என் வீருன்னு தெரிஞ்சதோ அப்போ நான் அடைஞ்ச சந்தோஷத்தை வார்த்தையால அளக்க முடியாது. நான் அபியா உங்கள பார்க்கல. அபியோட முகத்துக்கு பின்னால இருக்குற வீரஜைதான் காதலிக்கிறேன். நான் உங்களை ஏத்துக்க தயாரா இருக்கேன், ஏன் நீங்க அதை புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க?” இப்போதாவது தன்னை புரிந்நதுக்ககொள்ள மாட்டானா என்ற ஏக்கத்தோடு கேட்டாள் அவள்.

மெல்ல அவளருகில் நெருங்கி வந்தவன், அவளின் கன்னம் வழியே வழிந்த கண்ணீரை துடைத்தவாறு “என்னால என்னையே புரிஞ்சிக்க முடியல பாப்பா. என்னால என்னை ஏத்துக்கவே முடியல. இந்த முகத்தை ஏத்துக்க முடியல. யூ க்னோ வாட், உன்னை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். ஆனா, உன்னை நெருங்கவே ரொம்ப பயமா இருக்கு. என்னால முடியலடீ” தன் மனநிலையை அவன் விளக்க, கயலுக்கு தான் அவ்வளவு தூரம் விளக்கப்படுத்தியும் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லும் அவனின் பேச்சில் பிபி எகிறியது.

தன் கண்ணீரை துடைத்துவிடும் அவன் கரத்தை கோபமாகத் தட்டிவிட்டவள், “போதுங்க, இதுக்குமேல எதுவும் பேசாதீங்க! இப்போ உங்களுக்கு என்ன? என்னை விட்டுட்டு போகணும் அதானே! உங்க விருப்பம். இத்தனைநாள் உங்கள நினைச்சிட்டே வாழ்ந்துட்டேன். இதுக்கப்றமும் அப்படியே வாழ்ந்துக்குறேன்” ஆத்திரத்தோடுக் கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, அடக்க முடியாத கோபம், இயலாமையில் சுவற்றில் கையை ஓங்கிக் குத்திக்கொண்டான் வீரஜ் அபிமன்யு.

அன்றையநாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்திருக்க, அன்றுமாலையே எல்லாரும் ஊருக்கு செல்வதற்கு தயாராக இருக்க, காலை உணவிற்கு கூடச் செல்லாது அறையிலேயே அடைந்துக் கிடந்தான் வீரஜ்.

கண்ணாடியில் தன்னையே அவன் எத்தனை மணிநேரம் பார்த்துக்கொண்டிருந்தானோ? அவனுக்கேத் தெரியாது.  

விழிகள் கலங்க தன்னையே வெறித்துக்கொண்டு அவன் நின்றிருக்க, “நான் உள்ள வரலாமா?” என்ற சத்யா அம்மாளின் குரல்.

வேகமாக விழிகளைத் துடைத்துக்கொண்டு வரவழைத்த புன்னகையுடன் திரும்பியவன், “உள்ள வாங்கம்மா” என்றழைக்க, நாற்காலியின் சக்கரங்களைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தவரோ அவனின் சிவந்த மூக்கை வைத்தே அவன் அழுதிருப்பதை உணர்ந்துக்கொண்டார்.

“என் பையனோட முகத்தை உனக்கு கொடுத்து நான் தப்பு பண்ணிட்டனா வீரஜ்?” இப்போது எதிரிலிருப்பவனின் உண்மையான பெயரை சொல்லியே அவர் கேட்க, எப்போதும் தன்னை அவர் மகனாக பாசத்தோடு அபியென்று அழைக்கும் சத்யா அம்மா இன்று வீரஜென்று அவனை அழைக்கவும், ஒரு மாதிரி ஆகிவிட்டது அவனுக்கு.

அவரை நெருங்கி அவரருகில் முட்டி போட்டு அமர்ந்தவன், “அப்படியெல்லாம் இல்லைம்மா, நீங்க எனக்கு நல்லதுதான் பண்ணிருக்கீங்க. ஆனா, என்னாலதான்…” சற்றுத் தயங்க, அவனுடைய மனநிலை அவருக்கு புரியாமலில்லை.

அவன் கரத்தைப் பற்றி நாற்காலியை தள்ளிக்கொண்டு சுவற்றில் தொங்கிக்கொண்டிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் அவனை அழைத்து வந்தவர், “உனக்கு தெரியுமா வீரா, நான் அபிய என் மகன் அப்படிங்குறதை தாண்டி ஒரு மனுஷனா அவனோட குணத்தைப் பார்த்து ரொம்ப பெருமைப்பட்டிருக்கேன். அவன என் வயித்துல சுமந்து பெத்தெடுக்கல. ஆனா, இப்படியொரு மகனை என் வயித்துல சுமக்குற பாக்கியத்தை அந்த கடவுள் கொடுக்கலன்னு நான் வேதனைப்படாத நாளில்லை” என்க, அந்த வார்த்தைகளில் கண்ணாடி வழியே சத்யா அம்மாளை புரியாது நோக்கினான் வீரஜ்.

“உனக்கு இது தெரியுமோ, தெரியாதோ? அபிக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது. அவனோட எதிர்ல சிகரெட் பிடிக்க கூட அவனுக்கு நெருக்கமானவங்க பயப்படுவாங்க. சிகரெட், ட்ரக்ஸ், ட்ரிங்க்ஸ் வளர்ற பசங்க கைக்கு போக கூடாதுன்னு பல போராட்டம் பண்ணிருக்கான். பல ஸ்கூல்ஸ்ஸுக்கு போய் மோடிவேஷனல் லெக்ச்சர்ஸ் கூட கொடுப்பான்.  அவனுக்கு கீழ ஒரு சேரிட்டி கூட இருந்துச்சு, உதவி பண்றதுன்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” சத்யா அம்மாள் தன் மகனின் நினைவுகளில் பேசிக்கொண்டேப் போக, வீரஜோ தன் பழக்கவழக்கங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒருகாலத்தில் பணத்துக்காக அவன் செய்த செயல்களை நினைத்துப் பார்த்தவனுக்கு தன்னை நினைத்தே அவமானமாக இருந்தது. மீண்டும் சத்யா அம்மாளே தொடர்ந்தார்.

“அவன் போனதுக்கப்றம் அந்த சேரிட்டிய எல்லாரும் தலை முழுகியாச்சு. அவன் இருக்கும் போது நடந்ததெல்லாம் இப்போ நிறையவே குறைஞ்சிட்டு. இன்னும் சொல்லப்போனா, அவனோட முகத்தை கூட அவனோட அனுமதியோடதான் உனக்கு கொடுத்திருக்கேன்” அவர் சொல்ல, அந்த வார்த்தைகளின் அர்த்தம் வீரஜிற்கு நன்றாகவே புரிந்தது, இறந்த பிறகு தன் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவன் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்தது.

“அபி அவனுக்காக யோசிச்சது கிடையாது. தன்னெதிர்ல இருக்குறவங்களோட சிரிப்புக்காக என்ன வேணா செய்ய கூடியவன். கண்டிப்பா, உன்னை பார்க்கும் போது அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். ஆனா, நீ சந்தோஷமா இல்லைன்னு எனக்கு தோனுது. உன்னை நீ மொதல்ல ஏத்துக்கிட்டாதான் உன்னை சுத்தியிருக்குறவங்க உன்னை ஏத்துப்பாங்க. கயல்விழிக்கும் உனக்கும் ஆரம்பத்துல என்ன பிரச்சினைன்னு எனக்கு தெரியல. பல போராட்டதுக்கு அப்றம் மறுபடியும் ஒன்னு சேர்ந்திருக்கீங்க. கடவுள் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்குறதில்லை வீர், உனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்திருக்காரு. பயன்படுத்திக்கோ!” சத்யா அம்மாளின் அழுத்தமான வார்த்தைகள் அவனின் ஆழ்மனதை சென்று தாக்கின.

அவன் தன்னைத்தானே மதிப்பிட்டுக்கொண்டான். எப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்திருக்கிறான்! இப்போது அந்த பாவத்திற்கு அடையாளமான அந்த முகத்தையும் மாற்றி பெற்றவளே பெருமைக்கொள்ளும் ஒருவனின் முகத்தை அவனுக்கு விதித்து புது வாழ்க்கையை உருவாக்கி கொடுத்திருக்கிறது விதி.

வாழ்க்கையில் சோதனைகள் கொண்டு விதி விளையாடினாலும், இப்போது அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவன் கைகளில். அவனவள் அவனெதிரே! முகத்திற்காக அல்லாது அவனுக்காக ஏற்க தயாராக இருக்கின்றாள். அவனிழந்த தாய்ப்பாசம் அவனருகே. அவன் செய்த பாவங்களை அழித்த ஒரு நல்லவனின் முகம்.

அத்தனையில் கையிலிருக்க, இன்னும் எதற்காக வாழ்க்கையின் இன்பமான நிமிடங்களை இழக்க?

“புது வாழ்க்கைய ஆரம்பி வீரா, நான் வெறும் உன்னோட முக அடையாளம் மட்டும்தான், எப்போவும் நீ நீதான். உன்னை உனக்காக ஏத்துக்குறவங்கள இழந்துராத!” கண்ணாடியில் அபிமன்யுவே அவனிடம் சொல்வது போன்ற பிரம்மை.

இருந்த மொத்த மனக்குழப்பங்களும் நீங்க, தானாக அவனிதழில் நிம்மதியுடன் கூடிய புன்னகை.

சத்யா அம்மாளோ தான் பேச வேண்டியதை பேசிவிட்டு நகரப் போக, “அம்மா…” என்றழைத்தான் வீரஜ்.

அவரும், “சொல்லு வீரா” கேள்வியாக அவனை திரும்பிப் பார்க்க, வேகமாக ஓடி வந்து சத்யா அம்மாளை அணைத்துக்கொண்டு, “நான் எப்போவும் உங்க அபிதான் அம்மா. நீங்க அபி, வீரா இரண்டுபேரையும் சுமந்து பெறல்லன்னாலும் இரண்டு பேருக்குமே இன்னொரு பொறப்பு கொடுத்திருக்கீங்க. அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லக் கூடாது. அந்த ஒரு வார்த்தை அவங்க நமக்காக பண்றதை ஈடு செய்யாது. சோ, லவ் யூம்மா” விழிகளில் கண்ணீரோடு அத்தனை பாசத்தோடு பேசினான் வீரஜ்.

சத்யா அம்மாளுக்கு இதை விட வேறு என்ன சந்தோஷம்! இத்தனைநாள் வீரஜை தன் மகன் அபியாக சத்யா அம்மாள் பார்த்திருந்தாலும் அவனிடத்திலிருந்த இறுக்கமும் ஒதுக்கமும் அவரை அவனிடத்தில் நெருங்கவிடவில்லை. ஆனால் இப்போது…

“அபி…” தாயின் ஏக்கத்தோடு அழுதுக்கொண்டே அவன் முகத்தைத் தாங்கி சத்யா அம்மாள் முத்தமிட, புன்னகை தாங்கிய கலங்கிய விழிகளுடன் அவரை அணைத்திருந்தவனுக்கு வாழ்க்கையே வசந்தமான உணர்வு!

“தேங்க்ஸ்டா அபி” தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் வீரஜ்.

சத்யா அம்மாளின் கொஞ்சல்களை ஏற்று சந்தோஷத்தோடு அறையிலிருந்து ஓடி வந்தவன், சுற்றிமுற்றி விழிகளைச் சுழலவிட்டுத் தேடியவாறு “கயல் எங்க?” என்றுக் கேட்க, அடுத்து கர்ணா சொன்ன இடத்தைக் கேட்டதும் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. கூடவே, பல இனிமையான நினைவுகள்.