அத்தியாயம் – 10
ஆராவிடம் கோபமாக பேசிய ஆண்டாள். பேரனை நினைத்து மிகவும் பயந்திருந்தார். அதே பயத்துடன் அசோகனை அழைக்க அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.
கார்மெண்ட்ஸில் நடக்கும் வேலைகளை பார்க்க சென்ற அசோகன் ஃபோனை எடுக்க மறந்து விட்டிருந்தார். செய்ய வேண்டிய வேலைகளை மேனேஜரிடம் கூறியவர் தன் அறைக்கு வந்து ஃபோனை பார்க்க, ஆண்டாளிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள்.
‘அம்மாவுக்கு என்னாச்சு?’ பதறியவர் ஆண்டாளுக்கு மீண்டும் அழைத்தார்.
ஒரே ரிங்கில் ஃபோன் எடுத்தவர், ‘ஓஓவென’ அழ ஆரம்பித்தார்.
“ம்மா… என்னாச்சு?” இவர் பதற,
“ஆரியை காணும்டா. எங்க போனான்னே தெரியல. மணியும் நானும் இங்க எல்லா இடைமும் தேடி பார்த்துட்டோம் எங்கையும் காணும்.”
“யார்கிட்டயும் அவனை பத்தி கேட்கலைதானே?” பதறிக் கேட்டார் அசோகன்.
‘அவன் இங்கு இல்லை என்பதான பிம்பத்தை ஏற்படுத்தியதால்’ இப்படிக் கேட்டார்.
“யார் கிட்ட கேட்க சொல்லுற?”
“ஒன்னும் இல்லைம்மா. நான் இதோ கிளப்புறேன் அவன் எங்கையும் போயிருக்கமாட்டான்.” என்றவர் உடனே கிளம்பினார்.
ஆராவிடம் போட்ட சண்டையால், அவளிடம் கூறியதை அசோகனிடம் கூறாமல் விட்டுவிட்டார் ஆண்டாள்.
வேகமாக வீட்டுக்கு வந்த அசோகன், வீட்டை சுற்றி தேடியவர், வாட்ச்மேனை நோக்கி சென்றார்.
“டேய்!!!” இவரது கத்தலில் அலறியடித்து அவர் முன் வந்து நின்றார் வாட்ச்மேன்.
“ஆரியன் எங்கடா?”
“ஐயா?”
“உன்னை நான் என்ன ****** இங்க வச்சிருக்கேன். அவனை வெளிய விடாதன்னு சொல்லிட்டு போனா? அவனை வெளிய விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கியா நீ?” சட்டென்று அவனை அறைந்தார் அசோகன்.
“ஐயா!” அவன் ஐயாவிடம் இருந்து முதல் அடி. அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“வாயை மூடுடா நாயே!”அவர் குரலில் இருந்தது என்ன? இத்தனை நாள் வீட்டில் காட்டாத புது முகத்தை இப்பொழுது காட்டினார் அசோகன்.
“டேய் அசோகா!” ஆண்டாளே அதிர்ந்து போய் இருந்தார் அவரை பார்த்து.
“நீ பேசாம இரும்மா. எல்லாம் உன்னாலதான். நீ பொறுப்பா இருந்திருந்தா அவனை வெளியே விட்டிருப்பியா?”
“டேய்!” ஆரா கூறிய அதே வார்த்தைகள்.
“கேட் திறந்து வச்சிட்டு எங்கடா ஊர் சுத்த போன?”வாட்ச்மேனை நோக்கி அவர் குரல் கர்ஜிக்க, பயந்து போனார் மனிதர்.
“பின்னாடி ஏதோ சத்தம் கேட்டிச்சு. என்னன்னு பார்க்கதான்யா போனேன். கொஞ்ச நேரத்தில அம்மா, தம்பியை காணும்னு தேடுறாங்க? எனக்கு எதுவும் தெரியாதுய்யா.”
அவனை கூர்ந்துப் பார்த்தவர், வேகமாய் வீட்டை நோக்கி நடந்தார்.
“டேய் அசோகா. ஏன் இப்படி நடந்துக்கிற?” அசோகனின் செயல் வித்தியாசமாய் இருக்க அவனை பார்த்துக் கேட்டார் ஆண்டாள்.
அவரிடம் ஒன்றும் கூறாமல், ஷோபாவில் வந்து அமர்ந்தவர், தலையை தாங்கிக் கொண்டார்.
‘எங்க போனான்? அவனுக்கு உடல் சரியாகிவிட்டதா? இல்ல தெரியாம வீட்டைவிட்டு போனானா? அவளை தேடி போனானா?’ அவரால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை.
சொல்லப்போனால், அவனது ஆக்ஸிடென்ட் நடந்த நாளில் இருந்து அவர், அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அவனது நடவடிக்கையை அவரால் சரியாக கணிக்கவும் முடியவில்லை.
அவர் இருக்கும் நிலைக்கு, பைத்தியம் போல் இருக்கும் மகனை வெளியே விட அவரது மனம் இடம் கொடுக்கவில்லை. நாலு பேருக்கு தெரிந்து அது நாற்பது பேருக்கு பரவி, அவர்களின் முன் பேசும் பொருளாய் மாற அசோகன் தயாராய் இல்லை.
அங்கு ஆராவை தேடுவோர் யாரும் இல்லை. மில்லில் இருந்து லேட் நைட் வந்த நாள் அதிகம். அதனால் அவளை யாரும் நினைக்கவில்லை.
இரவு மணி ஏழை நெருங்கும் நேரத்தில் ஆரியன் வீட்டுக்கு வர,
“எங்கடா போனா?” அவன் வருவதை பார்த்த ஆண்டாள் விசாரித்தார்.
டக்கென்று தலையை தூக்கிப் பார்த்த அசோகன் அவனைத்தான் பார்த்தார். ‘எங்கே சென்றான்?’ என்ற யோசனையுடன்.
தலை கலைந்து, சட்டை கசங்கி பிச்சைக்காரன் கோலத்தில் அவரையே வெறித்தான் ஆரியன்.
அவரது மகனை பார்க்க நினைக்காத கோலத்தில் இப்பொழுது ஆரியன் இருந்தான்!
அவனது பார்வை, அவரை வெறிக்க, பார்வையை திருப்பிக் கொண்டார் அசோகன்.
‘இவனுக்கு எல்லாம் நினைவு வந்துவிட்டதோ?’ என்ற எண்ணம் மனதின் ஓரத்தில் சிறிதாய் முளைத்தது.
****
மயங்கி கிடந்த ஆரா முகத்தை தட்டிப் பார்த்தான் சைத்தன். எழவில்லை அவள்.
அவளின் நெஞ்சில் காதை வைக்க, இதய துடிப்பு துல்லியமாக அவன் செவியில் விழ, அவளை தூக்கி, தான் வைத்திருந்த போர்வையில் கிடத்தியவன், வெந்நீர் வைக்க நீரை அடுப்பில் வைத்தான்.
நீர் சூடானதும், இறக்கியவன்… தான் கொண்டு வந்திருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து அதிலிருந்த பஞ்சை எடுத்து சுடு நீரில் தொட்டு அவளது காயத்தை துடைத்து காயத்தில் மருந்தை வைத்து பிளாஸ்டர் ஒட்டி விட்டான்.
அவளது புடவையில் ரத்த கரை இருக்க, சிறிது யோசித்தான். பின் என்ன நினைத்தானோ தெரியவில்லை. அவளது புடவையை மாற்றிவிட்டு, அன்று காஃபி கொட்டிய புடவையை அரைகுறையாக அவளுக்கு சுற்றியவன் அவளை விட்டு நகர்ந்தான்.
காயத்தை சுத்தம் செய்யும் பொழுது முனகியவள், அப்படியே உறங்கினாள். அவளது உறக்கத்தை உறுதிப்படுத்தியவன், பையிலிருந்து தன் ஃபோனை எடுத்து அவளை பார்ப்பது போல் அங்கிருந்த பாறையில் அமர்ந்துக் கொண்டவன், ஃபோனை ஆன் செய்து நிதினை அழைத்தான்.
முதல் கால் எடுக்கப்படாமல் இருக்கவும், சைத்தன் முகத்தில் சிந்தனை பரவியது. ‘என்னாச்சு?’ யோசித்தவன் மீண்டும் அழைத்தான்.
அடுத்த நொடியே எடுத்தவன், “எல்லாம் ஒகேவா சைத்தன்?” என்றுக் கேட்டான்.
“ம்ம்… இங்க எல்லாம் ஒகேதான். அங்க எப்படி? நீ மும்பை போயிட்டியா?”
“ஜஸ்ட் நொவ் டா. வீட்டுக்கு வந்துட்டேன். நீ சொன்னா பார்சல் அனுப்பிட்டு உடனே அங்க கிளம்பிடுவேன். டாடியும் அத்தையும் பிசினஸ் மீட்டிங் போயிருக்காங்க. அவங்க வரதுக்குள்ள நான் அங்க வந்தா நல்லா இருக்கும். நீ என்ன சொல்லுற?”
“ஓகே… பார்சல் அனுப்பிடு நிதின். அனுப்பினதும் கோவை வந்திடு. அசோகன் என்ன பண்ணுறான்னு எனக்கு அப்டேட் பண்ணு.”
“சரிடா.”
“பிறகு பேசுகிறேன்.” என்றவன் அழைப்பை நிறுத்தி அவளை மீண்டும் ஒரு முறை பார்த்தவன். அங்கிருந்த பாறையில் அப்படியே அமர்ந்தான்.
***
கண்களை மெதுவாக தட்டி திறந்தாள் ஆரா. தலை விண் விண்ணென்று தெறிக்க, கோபம் அப்படியே சைத்தன் மேல் திரும்பியது. பொதுவாக எப்பொழுதும் இவளால் வலியை தாங்கிக் கொள்ளவே முடியாது.
அப்படியான உயிர் வலியில் என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று அறியாமலே வார்த்தையை விடுவாள் ஆரா.
இப்பொழுதும் தலையில் ஏற்பட்ட வலி, அவளுக்கு கோபத்தைத்தான் உண்டாக்கியது. வலியை தாங்கி மெதுவாக எழுந்தமர்ந்தாள்.
கண்களை சுழற்றி சைத்தனை பார்க்க, அவன் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் இருந்தது என்ன? அவளுக்கு புரியவில்லை.
இரவு கமிழும் அந்த மாலை நேரத்தில், அவன் கண்களில் இருந்த தீட்சண்யம் அவளை தாக்க, குனிந்தவள் கண்களில் பட்டது, அவள் அணிந்திருந்த வேறு புடவை!
“என் புடவையை யார் மாத்தினது?” அவள் கேட்ட த்வனி அவளின் கோபத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.
“ஒரு பத்து பதினைந்து காட்டுவாசிகள் வந்துட்டு போனான்ங்க அவன்களா இருக்கலாம்?” பொறுப்பற்ற பதில் அவனிடமிருந்து வந்தது.
“இதுதான் உன் வீரமா? கட்டி போட்டு ஒரு பொண்ணுகிட்ட உன் ஆம்பிளை தனத்தை காட்டுறியே. நீ ரொம்ப பெரிய வீரன்டா.” கேலியாக சிரித்தாள் அவள்.
‘உன் திமிர் ஒருநாளும் அடங்காதுடி. இருடி வாரேன்.’ அவள் எதிரே வந்தவன், “ஒரு பொண்ணை கட்டிவச்சு வீரத்தை காட்டுறது கேவலம்தான். ஆனா நீதான் பொண்ணே இல்லையே. உன்னை நான் பொண்ணாவே பார்க்கலடி. பொண்ணா பார்த்தாதான் என் வீரத்தை உன்கிட்ட காட்ட முடியும்.”
‘நான் அவன் கண்ணுக்கு பொண்ணா தெரியலையா?’ அவள் ஈகோ தலை தூக்க அவனை வெறித்தாள்.
“நீ ஆம்பளை இல்லைன்னு சொல்லுடா.” அப்பட்டமான கேலி அவளிடம்.
அவனது தன்மானம் சீண்டப்பட, “என்னடி சொன்ன?” ஆத்திரமாக கத்தியபடி அவளருகே வந்தவன், அவள் என்னவென்று உணரும் முன்னே அதிவேகமாக அவன் கையை அவள் கன்னத்தில் இறக்கினான்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று ஆராவுக்கு புரியவில்லை. கண்ணில் பூச்சி பறக்க, காதில் சத்தம் வந்தது. கன்னத்தை நெருப்பால் சுட்டது போன்ற எரிச்சல்.
கண்ணில் கண்ணீர் கட்டியது. கீழே விழா வேண்டாமா என்று கேட்டுக் கொண்டிருந்த கண்ணீரை உதடு கடித்து நிறுத்தியவள், அவனை வெறித்தாள்.
“நீ ஆம்பிளையே இல்லடா மிருகம்… என் மேல கை வச்ச உன்னை நான் சும்மா விடமாட்டேன்.”
“உன் மேல எவண்டி கை வைப்பான். அதுகெல்லாம் நீ வொர்த் இல்லை. சேலை கட்டினவங்க எல்லாம் பெண் இல்லை முக்கியமா நீ…” ‘முக்கியமா நீ’ என்பதை நிறுத்தி நிதானமாக மிகவும் அழுத்திக் கூறினான்..
“யூ ராஸ்கல்.” அவன் மேல் பாய, அவளை தடுத்து கீழே தள்ளியவன், அங்கிருந்த பிளாஸ்டரை எடுத்து வாயில் ஒட்டி வைத்தான்.
“விடுடா… விடுடா…” அவனிடமிருந்து திமிறியவளை, அடக்கிப் பிடித்து பிளாஸ்டரை நன்றாக ஒட்டியவன் அவளை தள்ளிவிட்டான்.
‘என்ன பெண் இவள்?” இதுவரை அவன் பழகிய பெண்கள் அனைவருமே மென்மையானவர்கள், அதிர்ந்துக் கூட நடக்க தயங்கியவர்கள். தன் தேவைகளைக் கூட தவிர்த்து பிறருக்காக அனுசரித்து நடக்க கூடியவர்கள்.
தன் தேவைக்காக, தனக்கு வேண்டியவர்களின் நன்மைக்காக எந்த எல்லை வரைக்கும் செல்பவர்கள். யாரை எப்படி வேண்டுமாலும் ஆட்டிப்படைப்பவர்கள்.
பெண்களை பூக்களோடு பொருத்திப் பார்ப்பவனுக்கு யார் சொல்வது இவள் சித்திரம் அல்ல சித்திரகாரம் (புலி) என்று!
இரவு நன்றாக கவிழ ஆரம்பித்தது. இருட்டின் அமைதியில் காட்டில் சத்தம் அதிகமாக கேட்டது. ரீங்கார வண்டின் சத்தம் காதை அடைத்தது.
எங்கும் கும்மிருட்டு. குகையின் உள்ளே அவன் வைத்திருந்த விளக்கை ஏற்றி வைத்தவன். குகை வாசலில் தீ மூட்டி வைத்தான்.
மாலை போட்ட காஃபி மீதம் இருக்க, நெருப்பின் அருகில் வைத்து அதை சூடாக்கியவன், டம்ளரில் ஊற்றி, வாங்கி வைத்திருந்த பிஸ்கெட்டை காலி செய்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கு முழுக்க நீ பட்டினி கிடந்தாதான். உயிரோட மதிப்பு தெரியும்.” என்றவன் அவளை பார்க்க வைத்து உண்டான்.
‘உன் கிட்ட வாங்கி திங்குறதுக்கு நான் பட்டினி கிடந்து சாகலாம்.’ எண்ணியவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“நீ சாகனும்னு நினைச்சாலும், நான் நினைச்சாதான் நீ சாகவும் முடியும் பேபி. நீ இப்போ என் கண்ட்ரோல்ல இருக்க.” சிரிக்க,
தலையை திருப்பிக் கொண்டாள். ‘இவனுக்கு என்னதான் வேண்டும்?’ அவளால் கணிக்க முடியவில்லை. வாயைதிறந்து கேட்கவும் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அப்படியே கண்களை மூடிக் கொண்டாள்.
அமர்ந்திருந்த இடத்தில் இருந்து ஆராவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். வெறும் தரையில் படுத்திருந்தாள். மனதை ஏதோ செய்ய, தலையை திருப்பிக்கொண்டான்.
உறக்கம் கொஞ்சமும் வரவில்லை. என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் நான். எல்லாம் இவளால் வந்தது. என்னை இப்படி மாற்றியவளும் இவள்தான். என் பிறப்பென்ன, வளர்பென்ன நான் செய்ய நினைச்சதுதான் என்ன?
ஏதோதோ நினைவுகள் காட்சிகளாய் விரிய, தன்னிலே தர்க்கம் புரிந்தவன் அதன் தாக்கம் தாளாமல் துடித்துப் போனான்.
அங்கும் இங்கும் எழுந்து நடந்தான்.கண்களில் நீர் வழிய விழிகள் நிறம் மாறியது.
‘ஊகும்… தடுமாறக் கூடாது சைத்தன். எந்த விதமான சிந்தனைகளும் என் செயலை தடுக்க இடம் தரக் கூடாது.’ தனக்குதானே கூறியவன் தனக்கு வெறி ஏற்றிக் கொண்டான்.
கண்கள் கோவை பழமாய் சிவக்க, வேகமாய் அவளை நோக்கி சென்றவன் காலை அவளது கழுத்தில் வைத்து நெறித்தான்.
“சாவுடி… செத்து தொலை. எல்லாம் எல்லாம் உன்னால. நிம்மதியா இருக்க விடுறியா என்னை. நீ போய் சேர்ந்தா எல்லாம் சரியாகும்டி. எப்படி இருந்த என்னை இப்படி மிருகமா மாத்தினதே நீ தாண்டி. ” ஆவேசமாக கத்தியவன், அவளது வெறித்த பார்வையை கண்டு காலை அவள் கழுத்தில் இருந்து எடுத்தான்.
மூச்சு விடாமல், திமிறாமல் அவனையே வெறித்தாள் ஆரா. ‘உன்னை விடுவேனா பார்.’ அவளது பார்வை அவனுக்கு சவால் விடுவதுப் போல் இருந்தது.
“ச்சைக்.” கையை உதறியவன், தலையை கோதி பாறையில் வந்து அமர்ந்தான். அவளை பார்க்கப் பார்க்க வெறி கிளம்பியது.
பொட்டுக் கூட உறக்கம் வரவில்லை அவனுக்கு. உறங்க முடியவில்லை ஏதேதோ நினைவுகள். ‘யாரையும் விடாதே.’ என்று குமுறிக் கொண்டிருந்தது.
இடது கையை கொண்டு கண்ணை மறைத்து அந்த பாறையில் சாய்ந்து படுத்திருந்தான்.
இரவு நெடுநேரம் ஆனது. ஏதேதோ சத்தம் காதை அடைக்க, சட்டென்று ஆராவை பார்த்தான். அவளது பார்வை அவனைத்தான் விடாமல் வெறித்தது.
ரொம்ப நேரமாக அவனை வெறித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறியது சிவந்து போய் இருந்த அவளது கண்கள்.
“ஏய்! என்ன?” இவன் உறும,
“ம்ம்… ம்ம்…” என்று முனகினாள். அசையவில்லை அவன். அப்படியே பார்த்திருந்தான்.
அருகில் இருந்த விளக்கை காலால் எட்டி உதைத்தாள். தூர போய் விழுந்த விளக்கில் இருந்த எண்ணெய் சிந்தி, அங்கிருந்த சருகில் தீ பிடிக்க ஆரம்பித்தது.
அந்த தீயின் ஜூவாலையை கண்கள் வெறிக்க பார்த்திருந்தாள். அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான். ‘செத்துபோ.’ என்பதான எண்ணம் அவனிடம்.
‘ஒரு பொண்ணுக்கு இத்தனை ஆக்ரோஷம் ஆகாது.’ எண்ணியவன் அப்படியே பாறையில் படுத்து தலையை திருப்பிக் கொண்டான்.
அவளை எதையும் பார்க்கவில்லை, யாரையும் பார்க்கவில்லை. ‘இவனோடு இங்க இருப்பதற்கு இறப்பதே மேல்.’ என்ற எண்ணத்துடன் அப்படியே படுத்திருந்தாள்.
தீ வேகமாய் பரவி அவள் படுத்திருந்த பெட்ஷீட்டை பிடிக்க, நகர கூட தோன்றாமல் வெறித்தாள்.
துணி எரியும் வாசனை அவன் மூக்கை துளைக்க, திரும்பிப் பார்த்தவன், வேகமாய் எழுந்து பானையில் வைத்திருந்த நீரை எடுத்து தீயில் ஊற்றினான்.
“அறிவிருக்காடி உனக்கு.” அவளருகில் வந்து அவள் வாயில் ஒட்டி வைத்திருந்த பிளாஸ்டரை பிய்த்தெறித்தான்.
“உன்னை நான் உயிரோடவே விடமாட்டேன். இதே இடம் நல்லா குறிச்சி வை. இதே இடத்தில் உன் சாவு என் கையில்.” அவ்வளவு ஆக்ரோஷம் அவள் குரலில்.
ஒரு நிமிடம் திகைத்தான் சைத்தன். ‘இவளுள் இவ்வளவு ஆக்ரோஷமா?’ திகைத்தது என்னமோ ஒரு நொடிதான். ‘இவளுக்கே இத்தனை இருக்கும்பொழுது எனக்கு எவ்வளவு இருக்கும்.’ தீயாய் எரித்தான் அவளை.
“நீ என்னை கொல்லுவியா… அது உன்னால முடியும்ன்னு நினைக்கிறியா?”
“ஏன் முடியாது. நான் நினைச்சா எது செய்யவும் என் அப்பா தயங்கமாட்டார். எனக்காக எதையும் செய்வார். பாக்குறியா? இந்த நிமிசம் இந்த நொடி நான் நினைச்சா உன்னை என்னால கொல்ல முடியும்.”
“அப்படியா! இது நல்லாருக்கே கொல்லேன் என்னை.” இரு கைகளையும் விரித்து அவள் முன் நின்றான்.
அந்த நேரம் அவள் மனதில் தோன்றியது எல்லாம். இவனை அழிக்க வேண்டும் என்றுதான்.
கொஞ்சமும் யோசிக்காமல், எழுந்தவள் அவனை பார்க்க, அவன் கொஞ்சமாய் பின்னால் நகர்ந்தான்.
இவள் காலில் சங்கிலி இருப்பதை சுத்தமாய் மறந்தவள், அவனை தாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதில் இருக்க மேலும் அவனை நோக்கி முன்னேறினாள்.
அவன் மீண்டும் பின்னால் செல்ல, அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள், சங்கிலி அவளை இழுத்து கீழே தள்ள, அப்படியே கீழே விழுந்தாள்.
“ஆஆ” அவள் தலையை பிடித்து அலற,
அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் சைத்தன்.
இப்பொழுது தலை விண்ணென்று வலிக்க, கைகள் தானாக அடிபட்ட இடத்தை வருட, கைகளில் ரத்தம்.
“இப்போ தெரியுதா? இதுதான் நீ!” என்றான் அவள் விழுந்து கிடக்கும் நிலையைப் பார்த்து.
“இதுதான் நான் சைத்தன் உ…” நிறுத்தியவன், “சொல்லு உன்னால என்னை ஏதாவது செய்ய முடிந்ததா? இதே நிலைதான் எப்போவும். உன்னால் எதுவும் **** முடியாது.” என்றவன் அவளை அப்படியே அதே ரத்தம் சிந்தும் நிலையில் விட்டுவிட்டு, அவர் படுத்திருந்த பாறையில் வந்து படுத்துக் கொண்டான்.
படுத்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.
நிலவு ஒளியும் இன்றி, விளக்கொளியும் இன்றி நடுஇரவில் நீறுபூத்த நெருப்பாய் தகித்துக் கொண்டிருந்தாள்.