ரசவாச்சியே விழி சாச்சியே!

  அத்தியாயம் – 11

நடுஇரவில் குளிர்தாங்காமல் உறக்கம் கலைந்தவன் திரும்பி அவளைத்தான் பார்த்தான். இன்னும் அவனைத்தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளது நடவடிக்கை கண்டு இவனுக்கு ஆச்சரியம் உண்டானது. அதேநேரம் இவளை பற்றிய எச்சரிக்கை உணர்வு உண்டானது. ‘இவளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்ற உணர்வும் வர அவளையே பார்த்திருந்தவன். அப்படியே உறங்கிப் போனான்.

                                      ***

மறுநாள் காலையில், இவளை பற்றிய நினைவில் எழுந்தவன் அவள் அருகில் வந்து அவள் கால் கட்டை நன்கு ஆராய்ந்து இழுத்து பார்த்து நகர்ந்தான்.

நெற்றியில் வடிந்த ரத்தம் அப்படியே உறைந்து இருந்தது. இப்பொழுது கண்ணை மூடி படுத்திருந்தாள். மூச்சு நன்றாக ஏறி இறங்க, ‘தூங்குகிறாள்.’ என எண்ணியவன் வெளியே நடந்தான்.

‘உண்ண ஏதாவது கிடைக்குமா?’ என்று பார்க்க கிளம்பியவன், அந்த மலையை விட்டு கீழே இறங்கினான்.

கொஞ்ச தூரம் சென்றுப் பார்த்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒன்றும் கிடைக்காமல் திரும்பி வந்தவன், அங்கும் ஓடும் ஓடையை நோக்கி சென்றான்.

முகம், கை, கால்களை சுத்தம் செய்தவன் அங்கிருந்து கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வரும் பொழுது நேரம் பத்தை தாண்டி ஓடிக் கொண்டிருந்தது.

அடுப்பை மூட்டியவன் சிறு பானையை எடுத்து வைத்து தீ பற்ற வைத்து அவளை பார்க்க, அப்பொழுதான் கண்களை திறந்துப் பார்த்தாள். கண்கள் கோவை பழங்களாய் சிவந்திருந்தது.

“மேடம் நேத்து பயங்கர தூக்கம் போல?” கிண்டலாக கேட்டான்.

ஏதுவும் பேசாமல் அவனை முறைத்தவள், திரும்பி படுக்க எத்தனிக்க, தலையை அசைக்க முடியவில்லை… அப்படி ஒரு பயங்கரமான வலி.

முகத்தை சுருக்கி வலியை பொறுத்தவள், கண்களை மூடிக் கொண்டாள். பசியில் வயிறு வேறு சத்தம் போட அப்படியே படுத்திருந்தாள்.

அவளின் நிலையை கண்டவன், மனம் கேளாமல் தான் வைத்திருந்த பிஸ்கெட் எடுத்து அவளிடம் நீட்டினான்.

“உன்கிட்ட வாங்கி சாப்டுறதுக்கு நான் செத்து போகலாம்.” உரைத்தவள் அவனையே வெறித்தாள்.

“ஐயோ!”  என்று அவன் அலற,

‘என்னாச்சு இவனுக்கு?’ என்பதாய் இவள் பார்க்க,

“உன்னை வச்சு நிறைய பிளான் போட்டிருகேண்டி. இப்போவே செத்துப் போறேன்னு சொல்லுற… இது உனக்கே நியாயமா?” என்றான் கிண்டலாக.

“பிளானா?” கண்களை சுருக்கி அவனை பார்த்தாள்.

“எஸ் பேபி.”

“உன் கன்றாவி பிளானை சொல்லு கேட்போம்?”

“முதல்ல உன்னை அடக்கணும், ரெண்டாவது நீ பேசிய பேச்சுக்கு எல்லாம் சேர்த்து என் காலுல விழுந்து உன்னை மன்னிப்பு கேட்க வைக்கணும். உன் திமிர்…. இந்த கண்ணுல தெரியுது பாரு… அதை முதல்ல அழிக்கணும். உன்கிட்ட இந்த திமிர் எனக்கு பிடிக்கல.” மிகவும் ஆவேசமாகக் கூறினான்.

“இதெல்லாம் நடக்கும்னு நீ நினைகிறியா?” அதே திமிர் கண்களில் தெரியக் கேட்டாள்.

“ஏன்? என்னால முடியாதுன்னு நீ நினைக்கிறியா?”

“எஸ்… இங்க என்னை வச்சிருக்க ஒவ்வொரு நாளும் நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ சைத்தன்.  ஏண்டா இவளை தூக்கினோம், ஏண்டா இவளை இங்க கட்டிவச்சிருக்கோம்னு தினம் தினம் நீ வருந்துவ. உன்னை வருந்த வைப்பேன்.” மீண்டும் சவால் விட்டாள்.

சைத்தன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பின், “முடிஞ்சா செய்.” என்றவன் அவளை நோக்கி கைகளை நீட்டினான்.

யோசனையாய் இவள் பார்க்க,

“கையை குடும்மா. விஷ் பண்ணவேண்டாமா?” அப்பட்டமான கேலி அவனிடம்.

சிரித்தவள், அவனை நோக்கி கையை நீட்ட, “என்னை ஓட ஓட விரட்ட வாழ்த்துக்கள் பேபி.” சிரிப்புடனே அவள் கையை பற்றி குலுக்கினான் சைத்தன்.

   “இந்த காட்டிலையே உன்னை ஓட ஓட விரட்டி உன்னை கொன்னு நான் தப்பிச்சு போவேன்டா.” என்றாள் சவாலாக.

“வாழ்த்துக்கள்.” என்றவன் அவள் கையை மீண்டும் குலுக்கி விட்டான்.

அதற்குள் நீர் கொதிக்க, அதில் அரிசியை கழுவி போட்டவன், “உனக்கும் சேர்த்துதான் சமைக்கிறேன். தெம்பா இருந்தாதானே என்னை விரட்டி விரட்டி கொல்ல முடியும்.” கூறியவன் அவளை பார்த்து சிரித்தான்.

“நீ எனக்கு சமைச்சு போட்டு உயிர் பிச்சை தரவேண்டாம். என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.” வீம்பாகவேக் கூறினாள்.

“நிறைய சவால் விட்டிருக்க எல்லாத்திலையும் நீ ஜெயிக்க வேண்டாமா. உன் சவால்ல ஜெயிக்க முதல் விஷ் நான் பண்ணிருக்கேன் பேபி. என் ராசி நல்ல ராசியா இருக்க வேண்டாமா?”

“உன் முகத்தில, நான் எப்போ முழிச்சேனோ அன்னையில் இருந்து என் நிம்மதியே போச்சு. இதுல இவர் ராசியானவராம்.” கடுப்பாகவேக் கூறினாள்.

“அப்போ நான் ராசி இல்லையா? நீ சவால்ல ஜெயிக்க வாய்பில்லைன்னு சொல்லுறியா?” கேலி சிரிப்பு அவனிடம்.

“உன் ராசியை விட, என் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கு.”

“அவ்வளவு நம்பிக்கை உன் மேல… ம்ம்ம்ம்.” தலையாட்டிவன், “அப்படின்னா முதல்ல உன் நம்பிக்கையை நான் அழிக்கணுமே.” என்றான் அவளை ஓர கண்ணால் பார்த்தபடி.

“அது நான் செத்தாதான் முடியும்.”

“அப்போ சீக்கிரம் சாவு.” ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

அவனையே முறைத்தாள். அவளது முறைப்பை கண்டுக் கொள்ளாதவன், சாதத்தை வடித்து இறக்கி வைத்தான்.

“சொல்லு எப்போ சாவ?” கேட்டவன் சுட சுட சாதத்தை தட்டில் எடுத்து வைத்தவன், தான் கொண்டு வந்திருந்த வத்த குழம்பை எடுத்து சாதத்தில் வைத்தான்.

அவன் செயலை பார்த்தபடியே எழுந்தவள், “நீ சொல்லி நான் சாகணுமா?” கேட்டவள் அவன் வைத்திருந்த சாதத்தை எடுத்து உண்டாள்.

“ம்ம்… புத்திசாலி. ஆனா என்னை மீறி உன்னால எதுவும் செய்யமுடியாது.” அவன் கூற,

“போடா லூசு.” அவனை பார்த்து கூறியவள் உண்பதில் கவனமாய் இருந்தாள்.

“பேருதான் பெத்த பேரு. பார்த்தா பல்லு விளக்காம விழுங்கிற?” வம்பிழுத்தான் அவளை.

“எதுக்கு விளக்கணும்?” அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

“சரிதான்.” என்றவன், அவளை பார்ப்பது போல் அங்கிருந்த பாறையில் அமர்ந்துக் கொண்டான்.

அவள் தலையை அசைக்கும் பொழுது, முகத்தை சுருக்குவதைக் கண்டவன் எழுந்து அவள் முன் வந்து நின்றான்.

“என்ன?” இவள் கேட்கவே,

“காயம் வலிக்குதா?”

“இல்ல குளுகுளுன்னு இருக்குது. மண்டையை உடைச்சுட்டு கேக்குறான் பாரு கேனை மாதிரி.” பல்லைக் கடித்து தட்டை வைத்தவள், கையை அந்த தட்டில் கழுவி அவன் முன் நகர்த்தி வைத்தாள்.

“ஏய்… தட்டை யாருடி கழுவுவா?”

“நான் ஏண்டா கழுவணும். நீதான் என்னை இங்க கொண்டு வந்து வச்சிருக்க. அப்போ நீதான் எனக்கு இதெல்லாம் செய்யணும்.” என்றவள் அங்கிருந்து நகர்ந்து பாறையில் சாய்ந்து காலை நீட்டி அமர்ந்தாள்.

அவளது செயலை பார்த்தவன், “உன்னை.” பல்லைக் கடித்துக் கொண்டான்.

“இதெல்லாம் எனக்கு செய்யத்தானே இங்க கொண்டு வந்து வச்சிருக்க. செய் மேன்.”

அவளை முறைத்தவன், தட்டை எடுத்து அந்த பக்கம் நகர்த்தி வைத்து, அவனது பையை நோக்கி நடந்தான்.

பையில் இருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து வந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

அவள் முகத்தை பிடித்து, அவளது காயத்தை ஆராய பார்க்க, அவனது கையை தட்டிவிட்டாள் ஆரா.

“என்ன? என்னை மயக்க பாக்குறியா?”

அவளை பார்த்து சிரித்தவன், “மயக்குறேனா உன்னையா? ஹா… ஹா…” சிரித்தவன், “என்னை பார்த்து மயங்குறியா நீ?” என்றான் இப்பொழுது.

“நான் உன்னை பார்த்து மயங்குறேனா?” முகத்தை சுழிக்க,

“அப்போ பேசாம இரு.” என்றவன் அவள் முகத்தை பிடித்து, நேற்று ஒட்டிய பிளாஸ்டரை பலம் கொண்ட மட்டும் வேகமாய் பிய்தெறிந்தான்.

“ஆஆஆ” அலறியவள் அவனை தள்ளி விட முறைத்தவன்,

“ஏண்டி பிசாசே. உன்னை இப்படி வச்சு மருந்து போட நினைச்சேன் பாரு.” முறைத்தவன், அவள் முகத்தை அழுத்திப் பிடித்தான்.

“டேய் விடுடா.” இவள் கத்த,

“பார்த்தியா உன் வாயை விட்டு வச்சது தப்புன்னு சொல்லுற?” குட்டியாய் பிளாஸ்டரை எடுத்தவன், அவள் கத்த கத்த அவள் வாயையும் ஒட்டினான்.

கண்ணை உருட்டி உருட்டி முறைக்க, அவள் கண்ணை பார்க்காமல், அவள் முகத்தை பிடித்து, உறைந்து இருந்த ரத்தத்தை துடைத்து ஆயில்மென்ட் வைத்து மீண்டும் ஒரு பிளாஸ்டரை ஒட்டி வைத்தான்.

“ரெண்டு நாள் அடக்க ஒடுக்கமாய் இரு. அப்போதான் சீக்கிரம் ஆறும்.” என்றவன், சாப்பிட அமர்ந்தான்.

அவனையே பார்த்திருந்தாள் ஆரா. அவள் கண்களில் இருந்தது என்ன?

                                        ***

அசோகன் முகத்தில் பெரும் சோகம் அப்பிக்கிடந்தது. அவர் முன் அமர்ந்திருந்த கமிஷனர் மிகவும் யோசனையாக அமர்ந்திருந்தார்.

மகள் வீட்டுக்கு வராமல் இருக்கவும், அவள் ஃபோனுக்கு அழைக்க ‘ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.’ என்று வரவும் உடனே அவரது நண்பரான கமிஷ்னரை அழைத்து கூறியிருந்தார்.

‘நான் பார்த்துகிறேன்.’ என்றவர் நேற்று முழுவதும் எல்லா கேமராவையும் அலசி ஆராய்ந்து, பலன் அளிக்காமல் போகவே காலையில் இவரை தேடி வந்திருந்தார். 

“எந்த கேமராவிலும் உன் பொண்ணு கார் சிக்கவே இல்லையே அசோகா?” தாடையை தடவியபடி அசோகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் கமிஷனர்.

“அதுதான் எனக்கும் தெரியலடா. மில் கேமரா வேலை செய்யல போல. வாட்ச்மேன் சொல்லுறான்.”

“உனக்கு யாராவது எதிரி இருக்காங்களா?” அவர் கேட்கவே,

“எனக்கு யார் இருக்கான்னு உனக்குத்தான் தெரியுமே.”

“ம்ம்… ஆனா இப்போ அவன்தான் எதுவும் பிரச்சனை பண்ணலியே? இவ எங்க போயிருப்பா?” யோசனையுடன் கேட்டார் அவர்.

“அதுதான் எனக்கும் தெரியல. ரெண்டுநாள் முன்னாடி சென்னை போனா. அங்க ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?” அசோகனே அவருக்குள்ளே கேட்க,

“எதுக்கு போனா?” கமிஷனர் கேட்க,

“பிரெண்ட் கல்யாணம்னு போனா. ஆனா போன வேகத்தில திரும்பி வந்துட்டா. கேட்டதுக்கு பிடிக்கலன்னு சொன்னா?”

“ம்ம்…” யோசிக்க,

“ஏதாவது ஃபோன் வந்ததா?”

“இல்ல இதுவரைக்கும் வரல.”

 “ம்ம்…” யோசித்தவருக்கு பதில்தான் தெரியவில்லை.

“எதுக்கும் கவலைப்படாத. நான் பாத்துகிறேன். உன் பொண்ணு ரொம்ப தைரியசாலி.” என்று மட்டும் கூறியவர் நண்பனின் தோளை தட்டி சென்றார்.

அவர் செல்லவும், அறையை விட்டு வெளியே வந்தான் ஆரியன். அவனது பார்வை முழுவதும் அவர்மேல் இருந்தது.

‘ஆரா எங்கடா இருக்க?’ அவர் மனம் புலம்பியது.

முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தவரை விடாமல் பார்த்திருந்தான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவர் அவன் பார்வையின் பொருள் புரியாமல் விழித்தார். நேற்றிலிருந்து இதே பார்வைதான் பார்க்கிறான்.

‘இவனுக்கு என்ன ஆச்சு?’ என்ற யோசனையுடன் பார்த்தவர் மனம் முழுவதும் ஆரா நிறைந்து இருந்தாள்.

                                          ***

சாப்பிட்டு முடித்தவன், அவளை பார்க்க, இவனையே பார்ப்பதைக் கண்டு, “என்ன?” இவன் கேட்கவே,

“ம்ம்ம்”என்ற சத்தம் மட்டும் வந்தது.

ஏதோ சொல்ல நினைக்கிறாள்?’ என எண்ணியவன், அவள் அருகில் வந்து அவள் வாயில் இருந்து பிளாஸ்டரை எடுக்க,

“உன்னை எப்படி கொல்லலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்.”

“உனக்குபோய் நான் பாவம் பார்த்தேன் பாரு. என்னை சொல்லணும்.” என்றவன் மீண்டும் அவள் வாயை ஓட்ட பார்க்க, தலையை அசைத்து மறுத்தவள்,

மணிக்கட்டோடு சேர்த்து கட்டி வைத்திருக்கும் கையை உயர்த்தி சுண்டுவிரலைக் காட்டினாள்.

அவளிடம் ஒன்றும் பேசாமல், அவளது கை பிளாஸ்டரை எடுத்தவன், கால் கட்டை இரண்டு காலில் இருந்து ஒறையாய் மாற்றி, “போ” என்று கூறினான்.

“எங்க போக?” இவள் விழிக்க,

“என்ன?”

“நீ இங்க நின்னா நான் எப்படி போறது?”

“அதுக்கு உன்னை அப்படியே அவுத்து விட சொல்லுறியா?” அவன் கேட்கவே முகத்தை திருப்பிக் கொண்டாள்.

சிறிது யோசித்தவன், “நீதான் பொண்ணே இல்லையே பிறகு எதுக்கு என்னை பார்த்து பயப்படுற?” அவன் கிண்டலாக கேட்க,

“அப்படியா சொல்லுற? அப்போ பிரச்சனை இல்லை… நானும் உன்னை ஆம்பளையாவே நினைக்கலை.” என கூற,

அவளை முறைத்தவன், கால் சங்கிலியுடன், கை சங்கிலியை ஒன்றாக இணைத்து நீள சங்கிலியாக்கி, “ம்ம்… நட.” என்றவன் அவளை முன்னால் விட்டு பின்னால் சங்கிலியை பிடித்து நடந்தான்.

தூரத்தில் ஒரு பாறை இருக்க, “அந்த பாறைக்கு பின்னாடி போ.” கூறியவன் சங்கிலியுடன் அப்படியே நிற்க.

“நீ என்ன இங்க நிக்குற. நீ போ.” என,

“உன்னை நான் நம்பமாட்டேன்டி.” என,

“கரெட்… நல்லது.” என்றவள் அப்படியே நிற்க,

“உன்னை.” பல்லைகடித்தவன் அங்கிருந்த மரத்தில் சங்கிலியை மாட்டி பூட்டு போட்டவன், “இங்கயே இரு. எங்கையும் போகாத. போனா திசை தெரியாம எங்கையாவது மாட்டிப்ப.” அவளிடம் எச்சரித்தவன், கிழக்கு பக்கமாய் நகர்ந்தான்.

கொஞ்சம் தூரம் நடந்தவன் கண்ணில் தூரத்தில் பறவைகளின் சத்தம் கேட்க அங்கு நோக்கி வேக நடையிட்டான்.

ரம்புட்டான் மரத்தை சுற்றி பறவைகள் சுற்றவும், அங்கு நின்ற தேக்கு மரத்தின் இலையை பறித்தவன், ரம்புட்டான் பழத்தை பறித்து இலையில் மடித்து திரும்பி நடந்தான்.

திரும்பி வந்தவன், ஆராவை விட்ட இடத்துக்கு வர, அவளை காணவில்லை. ஒரு நொடி பதறியவன், அவளை கட்டி வைத்திருந்த மரத்தின் அருகே வர, மரத்தின் அருகில் சங்கிலியை பூட்டிய பூட்டு உடைந்துக் கிடந்தது.

கண்களை சுழல விட, ஒரு பெரிய கல் ஒன்றுக் கிடந்தது. உடனே அறிந்துக் கொண்டான். ‘அந்த கல்லை வைத்து பூட்டை உடைத்து தப்பிவிட்டாள்.’ என்று.

“உன்னை உயிரோட விட்டு வச்சதே தப்புடி. இருடி வர்றேன்.” சங்கிலி தடம் கீழே தெரிய அந்த பாதையில் ஓடினான்.

“அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு நீ போகமுடியாதுடி.” ஆத்திரமாய் கூறியவன் அவளை தேடி வெறியுடன் ஓடினான்.