ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 12

கஷ்டப்பட்டு பறித்து வந்திருந்த பழத்தை, அங்கயே வீசிவிட்டு அவளை தேடி ஓடினான். சங்கிலி இழுத்து சென்ற பாதை வரை ஓட எங்கும் அவளை காணவில்லை.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி, குனிந்து நின்றவன், ‘எங்க போனா?’ யோசித்தான்.

சங்கிலி தடம் முடியும் இடம், பாறையாய் இருக்க, அதன் மேல் ஏறி நின்று பார்க்க கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை.

“அதுக்குள்ள காட்டை விட்டு வெளியே செல்ல முடியாதே?” யோசித்தவன் மீண்டும் அவளை கட்டி வைத்த இடம் நோக்கி வந்தான்.

அங்கு இல்லாமல் போகவும், எதிர் திசையில் வேகமாய் ஓடினான். பெரும் இரைச்சலுடன் அருவி விழ, ‘உள்ளே குதிச்சிருப்பாளோ?’ என்ற எண்ணம் தோன்ற உடனே அந்த எண்ணத்தை அழித்தான்.

‘அப்படி அவள் செய்யமாட்டாள்.’ எண்ணியவன் எங்கும் சுற்றிப் பார்த்தான். அங்கும் இல்லாமல் போக, அவளை தேடி ஓடி களைத்தவன்…

திரும்பி குகையை நோக்கி நடந்தான். குகைக்கு அருகில் வர, அங்கிருந்த பாறையில் அமர்ந்திருந்தாள் ஆரா.

ஓடி வந்தவன், “எங்க போன நீ?” என்றான் அவளை பார்த்து.

கையில் வைத்திருந்த ரம்புட்டான் பழத்தை தோல் நீக்கி வாயில் போட்டவள், “ரொம்ப களைச்சு தெரியுற? ரொம்ப தூரம் ஓடினியா என்ன?” அவனை பார்த்து கிண்டலாய் கேட்டாள்.

இவளை கட்டி வைத்திருந்த இடத்தை பார்த்து அவன் அதிர்ந்தது. பின் அங்கிருந்து வேகமாய் ஓடியது எல்லாம் ஒரு மரத்தின் பின் நின்று பார்த்தவள், அவள் கீழே சிதற விட்டிருந்த பழைத்தை எடுத்துக் கொண்டு குகை நோக்கி வந்திருந்தாள்.

“அறிவிருக்காடி உனக்கு. ஏதாவது காட்டுவாசி கிட்டயோ இல்ல அனிமல்ஸ் கிட்டையோ மாட்டியிருந்தா என்ன பண்ணியிருப்ப.” இறுக்கத்துடன் அவன் வினவ,

“உன்கிட்ட மாட்டினதுக்கு அவங்ககிட்ட மாட்டிருந்தா பிரச்சனையே இல்லையே?” தோளை குலுக்கிக் கொண்டாள்.

“அவ்வளவு கொழுப்பா?” அவள் மேல் பாய,

“சும்மா குதிக்காத. உன்னை இனி நான் நிம்மதியாவே இருக்க விடமாட்டேன்னு சொன்னேன்தானே. இனி தினம் தினம் இப்படிதான் ஓடவைப்பேன்.” என்றாள்.

“எங்க போன நீ?” என்றான் இப்பொழுது நிதானமாக,

“நான் எங்கையும் போகலியே?” தோளை குலுக்க,

அவளது செயல் அவனுக்கு ஆத்திரத்தை உண்டாக்க, சங்கிலியை பிடித்து இழுத்தான்.

அவள் காலில் கட்டியிருந்ததால், அவளும் அந்த சங்கிலியோடு வழுக்கிக் கொண்டு வர, அவளை குண்டுகட்டாக தூக்கியவன், குகைக்கு உள்ளே பொத்தென்று போட்டான்.

“தினம் தினம் நீ என்னை சமாளிக்க முடியாமல் போராடுறதை நான் பார்த்து ரசிப்பேன்.” என்றவள் கண்களில் ஒரு வித குரூர திருப்தி நிலவியது.

அதை கண்டவனது மனம் கொதிக்க, அவளை மீண்டும் அந்த மரத்தில் பிணைத்து கட்டியவன், என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று உணராமலே, அடுப்பில் வைத்திருந்த கொதிநீரை எடுத்து அவளது காலில் ஊற்றினான்.

“ஆஆஆ.” காலை உதறி அலறியவளை பொருட்படுத்தாமல்,

“இனி ஓடுடி… நீ எப்படி ஓடுறன்னு நானும் பாக்கிறேன். நான் போராடுறதை நீ ரசிக்க போறியா? இப்போ ரசிடி நல்லா ரசி. உனக்கு நீயே போராடி ரசி. ச்சை.” கையை உதறி வெளியே சென்றுவிட்டான்.

மனம் மிகவும் கொதித்துக் கொண்டிருந்தது. ‘சைத்தன் நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?’ அவனது மனம் அவனை கேள்வி கேட்க,

அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.

அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும், அவனை கோபப்படுத்தி விடுகிறாள் ஆரா.

அவளின் நடவடிக்கைகள், அணுகுமுறை ஒவ்வொன்றும் அவனின் நிதானத்தை பிறழ செய்கிறது. அவளின் செயல்களின் விளைவு எதுவென உணர்த்திட அவளை வதைத்து விடுகிறான்.

  ‘எவ்வளவு திமிர் இருந்தால் என்னிடமே விளையாடுவாள்.’ உறுமிக் கொண்டிருந்தான்.

அவனை, அவனது கோபத்தை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. என்பது அவளது ஒவ்வொரு செயல்களிலும் உணர்ந்துக் கொண்டான் சைத்தன்.

நீரை ஊற்றியவுடன் அவளிடமிருந்து வந்த அலறலை தவிர வேறு ஒன்றும் அவள் வாயில் இருந்து வரவில்லை.

‘மயங்கி விட்டாளோ?’ யோசனையுடன் அவளை திரும்பிப் பார்க்க, காலை பிடித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள் ஆரா.

‘இதுதான் உனக்கு உன் அம்மா கத்து கொடுத்தாங்களா சைத்தன். இதுதான் நீ பெண்களை மதிக்கும் லட்சணமா? உனது செயலை உன் அம்மா அறிந்தால் உன்னை மன்னிப்பார்களா?’ அவனது செயலை அவனது மனமே காறித்துப்ப, மனம் கேளாமல் அவளை நோக்கி ஓடினான்.

அவளது காலைப் பார்க்க, சுடுநீரில் வெந்துபோய் கொப்பளித்து இருந்தது அவளது கால்.

   தன்னைத்தானே தலையில் அடுத்துக்கொண்டான். ‘என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்?’  அவனை நினைத்தே அவனுக்கு கேவலமாக இருந்தது.

‘உன்னோட கோபத்தை ஒரு பொண்ணுகிட்ட இப்படிதான் காட்டுவியா சைத்தன்.’ அவனது மனமே கேட்க அவனால் பதில் கூறமுடியவில்லை.

வேகமாய் வெளியே சென்றவன், வரும்பொழுது கையில் சில இலைகளை பறித்து வந்தான்.

அதை நன்கு கழுவி, அங்கிருந்த பாறையில் வைத்து நசுக்கி, அதன் சாறை அவளது காலில் விட்டான்.

சாறு பட்டதும் கால் ஏரிய, வேகமாய் தலையை தூக்கிப் பார்த்தவள், “என்னை தொடாத நீ… தொடாத…” என்று கத்தினாள்.

“கொஞ்ச நேரம் உன்னால அமைதியா இருக்க முடியாதா?” அவனது காட்டுகத்தலில், அதிர்ந்து வாயை மூடிய தருணத்தில் சாறை அவளது காலில் பிழிந்து விட்டு எழுந்தான்.

  கொண்டு வந்திருந்த பையில் இருந்த பால் பவுடரை எடுத்தவன், சுடுநீர் வைத்து அதில் கலந்து அவளிடம் நீட்டினான்.

“குடி.” தன்மையாகவே அவளிடம் நீட்டினான்.

“உன்கையால நான் எதுவும் திங்க மாட்டேன், குடிக்க மாட்டேன்.” வீம்பாக முகத்தை திருப்பிக் கொண்டவளின் முகத்தை வலுகட்டாயமாக பிடித்து அவள் வாயில் ஊற்ற,

அவன் முகத்திலையே துப்பினாள். அதை பொருட்படுத்தாதவன், கையில் இருந்த எல்லாவற்றையும் அவள் வாயில் ஊற்றிய பிறகுதான் நகர்ந்தான்.

‘இனி அவளை காயப்படுத்தக்கூடாது.’ எண்ணியவன் அங்கிருந்த பாறையில் அமர, அப்படியே சரிந்துப் படுத்துக்கொண்டாள் ஆரா.  

‘அங்க நிலைமை எப்படி இருக்குன்னு தெரியலையே?’ யோசித்தவன், அவளை பார்த்தவன், ஃபோனை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த பாறையை நோக்கி நகர்ந்தான்.

நிதினுக்கு அழைக்க, அவனும் இவனுக்குதான் முயற்சித்துக் கொண்டிருந்தான். இவன் அழைப்பு வரவும் ஒரே ரிங்கில் ஃபோனை எடுத்தான் நிதின்.

“எப்படி இருக்கடா?” நிதின் கேட்க,

நிதின் குரலில் இருந்த பேதத்தை புரிந்தவன், “அங்க ஏதாவது பிரச்சனையா நிதின்?”

“நாம நினைச்சதை விட இங்க நிலைமை தீவிரமா போகுது. நீ உடனே இங்க கிளம்பி வா. அதுதான் நல்லது.” நிதின் கூறவும்,

வேறு எதுவும் யோசிக்காதவன், “என்னை விட்ட இடத்துக்கு நீ உடனே வா நிதின். நான் அங்க வெயிட் பண்ணுறேன்.” அவனிடம் கூறியவன் பாறையை விட்டு இறங்கி வந்தான்.

இவள் கால் வலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், எட்டு மணிநேரம் தாங்குவதுப் போல் தூக்கமாத்திரையை எடுத்து, பால் பவுடரில் கலந்து அவளுக்கு குடிக்க கொடுக்க,

“இப்போதான குடிச்சேன். மறுபடியும் ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுற?” இவள் கத்த,

“உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்க எனக்கு நேரம் இல்லடி.” அவளிடம் கத்தியவன், அவளது வாயை திறந்து ஊற்ற,

அதன் சுவை வித்தியாசம் உணர்ந்தவள், “என்னடா இதுல கலந்த.” கேட்க,

“விஷம் கலந்திருக்கேன். நீ எனக்கு இனி தேவை இல்லை.” பேச்சை கத்தரித்துக் கொண்டான்.

அவன் நினைத்ததுப் போல் சிறிது நேரத்தில், அவள் தூங்கவும் வேறு விலங்குகள் குகை பக்கம் வராதபடி முள்களையும் இலைகளையும் சுற்றி பரத்தி வைத்தவன், இங்கு கிளம்பி வந்திருந்தான்.

                                                  ***

ஆராவை எங்கு தேடியும் கிடைக்காமல் போக மிகவும் பயந்து போய் இருந்தார் அசோகன். இரவு முழுவதும் ஒரு பொட்டு உறக்கம் இல்லை. ஆண்டாள் அதற்கு மேல் அழ, அவரை சமாதானப்படுத்தவே முடியவில்லை.

“நீதான் அவளை கெடுத்து குட்டி சுவர் ஆகிட்ட அதுதான் அவ இப்படி பண்ணுறா? எங்க போனாலும் சொல்லிட்டு போறதே கிடையாது. பொம்பள பிள்ளையை வளர்க்க தெரியாம வளர்த்தா இப்படிதான் ஆகும்.” சரமாரியாக அசோகனை திட்டி திட்டி ஓய்ந்தவர் அறைக்குள் முடங்கிக் கொண்டார்.

வீட்டில் வேலை செய்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீடே அப்படி ஒரு அமைதியில் இருந்தது. மூன்று நாட்களாய் யாரும் உணவுண்ணவில்லை. அத்தனை சாப்பாடும் குப்பை கூடையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

இப்படி எந்த கவலையும் இல்லாமல் மூன்று வேளையும் உணவு உண்டது ஆரி மட்டும்தான். அவனையும் குறைக் கூறமுடியாது. அவனே பாவம் சித்தம் கலங்கி இருப்பவன். நேரத்துக்கு நேரம் சரியாக அவனுக்கு மட்டும் உணவை பரிமாற மறப்பதில்லை மணி.

‘ஆரா என்னதான் கோபக்காரியாய் இருந்தாலும், வீட்டில் உள்ளவர்கள் மேல் அத்தனை பாசம் வைத்திருப்பாள்.’ என்பது அனைவரும் அறிந்ததுதான்.

பாட்டியும் பேத்தியும் எப்பொழுதும் சண்டைகாரிகளாய் இருந்தாலும், இவளுக்கு ஒன்றென்றால் உயிரையும் விடக்கூடியவர் ஆண்டாள். அதேபோல்தான் ஆராவும் இவருக்கு ஒன்றென்றால் உயிரையும் குடுப்பாள்.

‘இவருக்காகவேணும் மேடம் சீக்கிரம் வர வேண்டும்.’ என்ற வேண்டுதல் வீட்டில் வேலை செய்பவர்களிடம் அதிகமாகவே இருந்தது.

  ‘இன்று மில்லில் வேலை செய்பவர்களிடம் ரகசிய விசாரணை நடத்த வேண்டும்.’ என்று கமிஷனர் கூறியிருந்தார்.

சிந்தனையுடன் அவருக்காக காத்திருந்தார் அசோகன். பத்து மணி வாக்கில் வீட்டுக்கு வந்த கமிஷனர் சாதாரண உடையில் இருந்தார்.

“மில்லில் வேலை செய்யும் யாருக்கும் அத்தனை தைரியம் இல்லை.” என்று கூறியிருந்தார் அசோகன்.

“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை அசோகா. ஜஸ்ட் ஒரு விசாரணை. அங்கதான் நம்ம ஆரா கடைசியா இருந்தது. சோ லெட் ஸ்டார்ட் அவர் இன்வெஸ்டிகேட் தெர்.”

“ஒகேடா வா.” இருவரும் கிளம்பினர்.

இவர்கள் இருவரும் மில்லிம் நுழையும் பொழுது, யாரையோ பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தான் சைத்தன்.

“என்னாச்சு என்னாச்சு சைத்தன்?” வேகமாய் அவனை நோக்கி வந்த அசோகன் கேட்டார்.

“ஒன்னும் இல்லை சார். அனுப்ப வேண்டிய பார்சலுக்கு எல்லாம் அட்ரெஸ் தப்பா எழுதியிருக்கான். இப்போ அருண் இருந்திருந்தா எல்லாம் சரியா நடந்திருக்கும்.” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சைத்தன்.

அருண் பெயரை கூறவும் யோசனையாக சுருங்கியது கமிஷனர் முகம். தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சைத்தன் முகத்தில் புன்னகை.

‘சாரி அருண் என்னை மன்னிச்சிடு.’ மானசீகமாய் மன்னிப்பை யாசித்தான்.

“கவனமா வேலை செய்யுங்க போங்க?” வேலையாளியிடம் கூறி, கமிஷனரை அழைத்துக் கொண்டு நகர்ந்தார் அசோகன்.

தன் அறைக்கு வந்தமர்ந்தவரை ஏறிட்டுப் பார்த்தார் அசோகன். “என்ன யோசிக்கிறடா?” என்றார் அசோகன்.

“இந்த அருண் யாரு? அவனை பத்திதான் யோசிச்சுட்டு இருக்கேன்.” என்றார் அவர்.

“அவன் நம்ம மில்லுல ரொம்ப வருஷமா வேலை பாக்குறான். ரொம்ப நல்ல பையன். அவன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு லீவ் எடுத்துட்டு போயிருக்கான்.”

 “எப்போ போனான்?”

“அவன் போய் ரெண்டு மூனுநாள் இருக்கும்.” யோசனையுடன் கூறினார் அசோகன்.

“ம்ம்ம்” என்றவர் முகம் தீவிர யோசனையில் இருந்தது.

அதே நேரம் ஆபிஸ் போன் ஒலிக்கவே, அசோகனை நிமிர்ந்துப் பார்த்தார் கமிஷனர்.

“எடுத்து பேசு.” அவர் கூறவே கையில் ஃபோனை எடுத்து, “ஹலோ.” என்றார் அசோகன்.

“சார் கொரியர் பாய் வந்திருக்கான். உள்ள விடவா? இல்ல நான் வாங்கிட்டு அனுப்பவா?” வெளியில் இருந்து வாட்ச்மேன் கேட்க,

‘என்ன செய்யலாம்?’ என்று கமிஷனரைக் கேட்டார் அசோகன்.

‘உள்ள வர சொல்லு.’ அவர் கூறவே,

“அவனை உள்ள அனுப்பி விடு.” என்றவர் அழைப்பை நிறுத்தினார்.

இருவரும் எழுந்து செல்ல, “சார்… மும்பையில் இருந்து பார்சல் வந்திருக்கு.” என்றபடி கொடுத்துவிட்டுப் போனார்.

‘மும்பையா?’ என்ற யோசனையுடன் பார்சலை வாங்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

இருவரையும் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன். ‘இவங்களோட அடுத்த மூவ்மென்ட் எப்படி இருக்கும்.’ என்ற யோசனையுடன் நிதின் வருகைக்காய் காத்திருந்தான்.

அறைக்குள் நுழைந்து பார்சலை பிரிக்க உள்ளே இருந்தது, ஆராவின் ஃபோன் & பர்ஸ். பார்த்ததுமே இருவரும் அதிர்ந்துப் போயினர்.

பார்சல் கவரை அசோகன் கையில் இருந்து பறித்தவர், அட்ரஸ் பார்க்க, மும்பை மட்டும் எழுதியிருந்தது.

அதிலிருந்த சீலை ஃபோட்டோ எடுத்து டிபார்ட்மென்ட்டுக்கு அனுப்பியவர், “நான் இதை என்னன்னு பார்கிறேன்.” என்றவர் எழுந்துக் கொள்ள,

“இல்ல… இல்ல ஜனார்த்தா நான் இங்க எப்படி இருப்பேன். என் பொண்ணு எங்கன்னு தெரிஞ்சுக்குற வரை என்னால நிம்மதியா எங்கையும் இருக்க முடியாது அதோட மும்பை.

இங்கன்னா நீ இருக்கான்னு ஒரு தைரியமாவது இருக்கும். ஆனா இப்போ நான் அங்க போய் பாக்குறேன். எனக்கு அங்க கொஞ்சம் பிசினஸ் டீல்ஸ் இருக்கு அவங்களை வச்சு மூவ் பண்ணட்டுமா?”

“என்ன அசோகா நீ. மும்பையில் இருந்து பார்சல்ன்னு வந்தா அவ அங்கதான் இருப்பான்னு என்ன நிச்சயம். நம்மளை டைவர்ட் பண்ணுற ஐடியாவா கூட இருக்கலாம். கொஞ்சம் நிதானமா இரு.”

“இங்க பார்சல்ல வந்திருக்கது என் பொண்ணு திங்க்ஸ் ஜனா. அவளுக்கு என்னாச்சோ அதுவும், மும்பைன்னா அங்கதான அவ இருக்கணும். அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது இல்ல…” தன்னிலை இழந்து அசோகன் புலம்ப,   

“அங்கிள்.” என்றபடி வந்து நின்றான் நிதின்.

இவனை இந்த நேரம் எதிர்பார்க்காதவர் அதிர்ச்சியில் உறைந்தார். புதியவனின் வருகையும் அதன் வெளிப்பாடாய் நண்பன் கொண்ட அதிர்ச்சியும் கமிஷ்னர் ஜனார்த்தனின் நெற்றியை சுருங்கச் செய்தது.

அதிர்ந்து நின்ற அசோகனின் தோளில் கை வைத்து, அவனை கலைத்தவர், ‘இவன் யார்?’ என்பதாய் கண்களால் வினவ,

“ஆ… ஆங்… இதுதான் ஆராவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை.” அவர் கூறவே,

நிதினைப் பார்த்து சிரித்தவர், அவனை கையை குலுக்கிக் கொண்டார்.

‘ஆரா காணாம போன விஷயம் இவன்கிட்ட சொன்னா? இவன் என்ன நினைப்பான். இப்போ இவனை எப்படி சமாளிக்கிறது? பார்சலை எப்படி இவனிடம் கூறுவது?’ யோசனையுடன் நிதினை பார்த்திருந்தார் அசோகன்.