ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 15

 ‘தனும்மா… இது இந்த பெயர்’ அவளின் மூளைக்குள் நுழைய இதயத்திலோ சட்டென ஒரு வலி சூழ, காற்றாய் சில நிகழ்வுகள் கண் முன் தோன்றிட… இவன் இவனுக்கு எப்படி தெரியும் யோசித்தவள் நொடியும் தாமதிக்காமல் அவனை நோக்கி அவன் செல்லும் திசையில் ஓடினாள்.

அவள் தள்ளி விட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டவன், தன்னை நிலைபடுத்த முயன்றான். ஆனாலும் நீரின் வேகம் அதிகமாக இருக்க தன்னை நிலைபடுத்த அவனால் முடியவில்லை.

காட்டு மரங்களின் கொடிகள் நீண்டுக் கிடக்க அதை பற்றியவன், பாறைகளின் ஓரம் ஒதுங்கினான்.

   அவன் பாறையின் ஓரம் வருவதற்கும் ஆரா அவனை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

கீழே விழுந்ததில் தலையில் பயங்கர அடிப்பட்டிருக்க ரத்தம் வழிந்தது. நீரின் வேகத்துக்கு அடித்து செல்லப்பட்டதில் கால் முட்டியில் வேறு அடிப்பட்டிருக்க சரியாக அவனால் எழுந்து நிற்க முடியாமல் தடுமாறினான். கைகளில் கூட சிராய்ப்புகள்.

 “சைத்தன்…” இவள் அவனை பிடிக்க வர,

கை நீட்டி தடுத்தவனின் முகத்திலோ வேதனையின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது. அவனின் கண்களோ. ‘நீயா இப்படி?’ என கேட்க, அதை உணர்ந்த ஆராவின் பார்வையோ அவனை தவிர்த்தது.

அதனை கண்டவனின் உதடுகள் ஏளனமாய் வளைந்தன, “இப்படியே போனா கொஞ்ச தூரத்துல ஒரு பாறை வரும் அதை சுத்தி போனா ஒரு பாதை வரும் அது வழியே நடந்தா ஃபைவ் மினிட்ஸ்ல ரோட்டை ரீச் பண்ணிடுவ. அங்க நின்னு லிப்ட் கேட்டா யார் வேணாலும் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.” அவளிடம் கூறியவன் பாறையை பிடித்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தான்.

“சைத்தன் பிளீஸ் என் கையை பிடிச்சுக்கோ.” அவன் நடந்து வரும் பக்கம் பாறையில் பாசி பிடித்திருக்க, ‘வழுக்கி விடுவானோ?’ என்று பயந்துவிட்டாள்.

“தயவு செஞ்சு என் முன்னாடி இனி நீ பிளீஸ் போடாத அதே மாதிரி என்னை போடவைக்காத. இடத்தை காலி பண்ணு. எனக்கு உன் உதவி தேவையில்லை.” முகத்தில் அடித்தது போல் கூறினான்.

“சைத்தன்…” மீண்டும் அழைக்க,

“என் கண்ணு முன்னாடி நிக்காத.” அவன் கத்தவே,

“சைத்தன்… நான் சொல்லுறதை கேளு.” 

அவளை கண்டுக் கொள்ளாமல் வழுக்கும் பாசிப்பாறையை விட்டு நகர்ந்து வந்தவன், அவள் அருகில் வரும்பொழுது தடுமாற, அவன் கையை பிடித்தவள் மற்றொரு கையை அவன் இடையோடு அணைத்துக் கொண்டாள்.

அவளை தன்னில் இருந்து வலுகட்டாயமாக பிரித்தவன், “இங்க இருந்து போயிடு அதுதான் உனக்கு நல்லது.” என்றவன் கீழே காய்ந்து கிடைந்த தடியை எடுத்து தரையில் ஊன்றி நடையைக் கட்டினான்.

‘நீ என்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்.’ எண்ணிய ஆரா அவனுக்கு முன் குகைக்கு சென்றாள்.

தடியின் உதவியுடன் காலை இழுத்து இழுத்து அவன் குகைக்கு வந்து சேர வெகு நேரம் பிடித்தது.

பாறையில் கால் நீட்டி அமர்ந்தவனால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் இவ்வளவு தூரம் வந்திருந்தான்.

‘யாருடைய உதவியும் இல்லாமல் அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. நிதினிடம் கூறலாம்…’ என்று ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கவும், குகையின் உள்ளே சத்தம் கேட்க,

‘இவ இன்னும் போகலியா?’ யோசித்தவன், எடுத்த ஃபோனை ஃபேண்ட் பாக்கெட்டில் வைக்கவும், அவனை நோக்கி வந்தாள் ஆரா.

“இங்க உனக்கு என்ன வேலை?” அவன் கேட்கவே,

“உனக்கு வேலை செய்ய நான் இங்க இருக்கலை.” முகத்தை ஏழு முழத்துக்கு தூக்கியவள், கையில் பாத்திரம் இருந்தது.

“என்ன பண்ண போற நீ?” அவன் முறைத்துக் கொண்டே கேட்க,

அவனிடம் பதில் கூறாமல் உள்ளே சென்றவள், திரும்பி வரும்பொழுது அவள் கையில் மெடிகல் கிட் இருந்தது.

“உனக்கு எதுக்கு…” மேலும் கூற வரும் முன் அவன் வாயில் பிளாஸ்டரை ஒட்ட வைத்தவள்,

“மூச்” என்று வாயில் ஒற்றை விரலை வைத்து காட்டியவள், அவன் நெற்றியில் இருந்த புண்ணை சுடுநீர் வைத்து துடைத்தாள்.

அவன் அவள் கையை பிடித்து தடுக்க வர, அவனது கையையும் சேர்த்து பிடித்து பிளாஸ்டரை ஒட்டியவள், நன்கு வலிக்கும் படியாக அழுத்தி அழுத்தி துடைத்தாள்.

‘பாவி… கொலைகாரி… வேணும்னே’ பண்ணுறாளே அவனால் மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது.

தலையில் பட்ட காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டவள், காலைப் பார்க்க முட்டியில் ஃபேண்ட் கிழிந்து ரத்தம் வழிந்தது.

‘இதை என்ன பண்ணலாம்?’ நாடியில் விரல் வைத்து யோசிக்க,

‘ஏதோ பயங்கரமா பிளான் போடுறாளே.?’ யோசித்தவன் “ம்ம்ம்…” தலையை ஆட்டி இவளை அழைக்க, இவனை கண்டுக் கொள்ளாதவள், உள்ளே சென்று திரும்பி வரும் பொழுது கையில் கத்தி இருந்தது.

‘என்ன பண்ண போறா?’ இவன் யோசிக்கும் நொடியில், சற்றும் யோசிக்காமல் ஃபேண்டை கீழிருந்து முட்டி வரை கிழித்து விட்டாள்.

     அங்கிருந்த சுடுநீர் பாத்திரத்தை கையில் எடுத்தவள், அப்படியே அவன் முட்டியில் சரித்தாள்.

“ஆஆஆ” அவன் அலறுவதை பார்த்தவள்,

“அன்னைக்கும் எனக்கும் இப்படிதானே வலிச்சிருக்கும்.” அவனிடம் கூறியவள் பஞ்சை எடுத்து காயத்தை துடைத்து மருந்திட ஆரம்பித்தாள்.

அவள் சாதரணமாகத்தான் கூறினாள் ஆனால் அந்த வார்த்தை அவனை சுட மெளனமாக தலைகுனிந்தான். ‘உன் காலில் சுடுதண்ணீரை கொட்டிவிட்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தானே தெரியும்.’ மனதோடுக் கூறிக் கொண்டவன் அவளையே வெறித்தான்.

அவனது மௌனம் அவளுக்கு ஏதோ உணர்த்த, அதற்கு மேல் அவனிடம் ஏதும் பேசாமல் காலை கட்டி முடித்தவள், அவன் வாயில் இருந்த பிளாஸ்டரை எடுத்துவிட்டு, கையையும் அவிழ்த்தவள் அவன் கையில் இருந்த சிராய்ப்பையும் பஞ்சை வைத்து துடைத்து அதிலும் மருந்திட்டாள்.

மருந்திட்டு முடித்தவள், அவனை நோக்கி கையை நீட்ட, அவள் கையை ஒரு நொடி பார்த்தவன் அவளது கையை பிடித்து எழ, அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு குகையில் உள்ளே விட்டாள்.

அங்கிருந்த பாறையில் சாய்ந்து அமர்ந்தவன் காலை நீட்டி அமர்ந்தான். இருவருக்குள்ளும் மௌனம் நிலவியது. இருவரையும் வெவ்வேறு விதமான மௌனம் தாக்க அமைதியாக இருந்தனர்.

அமைதியை கலைக்கும் விதமாக அவன் பாறையை பிடித்துக் கொண்டு எழ,

“இப்போ எதுக்கு நீ எழும்புற?” அவனை பார்த்துக் கேட்டாள் ஆரா.

“சாப்ட ஏதாவது பார்க்கணும்.”

“இரு… என்கிட்ட என்ன பண்ணனும்னு சொல்லு நான் பண்ணுறேன்.” அவள் கூறவே,

“இல்ல வேண்டாம் நானே பாத்துப்பேன்.” எனவும்,

அவனை பார்த்து அவள் முறைக்க,  

“இல்ல கஞ்சி மட்டும் வைக்கணும்.” அவன் கூறவே,

“சரி.” என்றவள் அடுப்பில் விறகை வைத்து, தண்ணீர் பானையை வைத்தாள்.

“தண்ணீர் கொதிச்சதும் அரிசியை கழுவி போட்டு. அப்படியே குழைய வச்சி இறக்கு.” என்றவன் அப்படியே கண்களை மூடி அமர்ந்துக் கொண்டான்.

‘இவளது இந்த அமைதியை சாதரணமாக அவனால் எடுக்க முடியவில்லை.’ யோசித்தபடியே அமர்ந்திருந்தான்.

 வெகுநேரமாக அவளிடம் சத்தம் இல்லாமல் போகவும், திரும்பி அவளை பார்த்தான். முழங்காலை கட்டிக் கொண்டு முகத்தை காலில் புதைத்து அமர்ந்திருந்தாள்.

அடுப்பைப் பார்க்க கஞ்சியை இறக்கி வைத்திருந்தாள். “ஆரா…” அவன் அழைக்க பதில் அளிக்கவும் இல்லை அவனை பார்க்கவும் இல்லை.

“பசிக்குது ஆரா…” மெல்லிய குரலில் அவன் கூறவே,

அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன் முகத்தில் வலியை பார்த்தவள், அவனிடம் ஏதும் கூறாமல் பாத்திரத்தில் கஞ்சியை ஊற்றி வாங்கி வைத்திருந்த வத்தல் குழம்பை எடுத்து அவன் முன் வைத்துவிட்டு மீண்டும் காலில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

“நீயும் சாப்பிடு ஆரா…”

அவனை நிமிர்ந்துப் பார்த்து முறைத்தாள்.

“என்னாச்சு?” அவளிடம் கேட்டவன், ‘இத்தனை நேரம் நல்லாதானே இருந்தா?’ மனதோடு கேட்டுக் கொண்டான்.

‘நான் இன்னும் மாறவே இல்லை…’ என்பதை அவளிடம் இருந்து அடுத்து வந்த வார்த்தைகள் கூறின.

“என் பேர் உன்னை மாதிரி ஆளுங்க வாயில இருந்து வரவேக் கூடாது.” என்றாள் கடுமையாக,

‘திடீர்னு இவளுக்கு என்ன ஆச்சு.?’ யோசித்தவன், “சரி இனி கூப்டல.” என்றவன் அமைதியாக உண்டான்.

ஆனாலும் கேட்காமல் அவனால் இருக்க முடியவில்லை. “ஏன் கூப்டக் கூடாது?” மீண்டும் அவன் கேட்க,

“கூப்ட கூடாதுன்னா… கூப்டக் கூடாது.” கூறியவள், “வலி மாத்திரை ஏதாவது வச்சிருக்கியா?” என்றாள் அவனது காலை பார்த்து.

“அந்த பேக்ல இருக்கு எடு.” தட்டை கழுவி அங்கு வைக்கவும், மாத்திரை டப்பாவுடன் அவன் முன் வந்தாள்.

சின்ன சின்ன பேப்பரில் ஒவ்வொரு மாத்திரையையும் எழுதி வைத்திருந்தான். ஒவ்வொன்றாக எடுத்தவளின் கை ஒரு பேப்பரை எடுக்க, கண்களோ அவனை முறைத்தது.

“என்ன?” இவன் கேட்க,

“இந்த தூக்கமாத்திரை யூஸ் பண்ணிதான் என்னை மயங்க வச்சிட்டு நீ வெளிய போனியா?” அவள் கேட்கவே ஒன்றும் கூறாமல் தலையை குனிந்துக் கொண்டான்.

“இந்தா போட்டுக்கோ.” வலி மாத்திரை ஒன்றை அவன் முன் நீட்டியவள் சுடுநீரையும் அவனிடம் கொடுக்க, அமைதியாக போட்டுக் கொண்டவன் அவளை பார்க்க,

அவனை ஏறிட்டு பார்க்காதவள், மாத்திரையை அங்கிருந்த பேக்கில் வைத்துவிட்டு, அங்கிருந்த ஒரு பெட்ஷீட்டை எடுத்து அங்கு விரித்து, “தூங்கிறியா?” என்றாள்.

“இல்ல… நான் வெளிய எப்பவும் போல படுத்துப்பேன்… நீ இங்க படுத்துக்கோ.” கூறியவன் எழ முயற்சிக்க,

“உன்னை தூங்கிறியான்னு மட்டும்தான் கேட்டேன்.”

“இல்ல தூக்கம் வரல.” அவன் கூறவே,

அவனை கூர்ந்துப் பார்த்தவள் அவன் வலியை அவன் கண்கள் காட்டிக் கொடுக்க… அவன் அருகில் வந்தவள், அவன் கையை பிளாஸ்டர் போட்டு ஒட்ட,

“ஏய் எதுக்கு இப்போ கையை ஒட்டுற…”

அவனிடம் எதுவும் கூறாதவள், மாத்திரை டப்பாவை எடுத்து அதிலிருந்த தூக்க மாத்திரை ஒன்றை எடுத்தவள், சுடுநீரில் கரைத்து அவன் திமிர திமிற அவன் வாயில் ஊற்றினாள்.

“பழி வாங்கிறியா?” கையில் இருந்த பிளாஸ்டரை பிய்த்தவளை பார்த்துக் கேட்டான்.

“உனக்கு அப்படி தெரியுதா? அப்படின்னா அப்படியே வச்சுக்கோ.” கூறியவள் அவன் கண்கள் சொக்கவும் பெட்சீட்டில் மெதுவாக படுக்க வைத்தவள், இன்னொரு பெட்சீட்டை அங்கு விரித்து படுத்துக் கொண்டாள். நிறைய நாட்களுக்கு பிறகு நிம்மதியான தூக்கம் அவளிடம்!

  நடு இரவில் ஏதோ புரியாத சத்தம் கேட்க அதிர்ந்து விழித்தாள் ஆரா. காதை நன்கு கூர்மையாக்கி கவனிக்க சத்தம் சைத்தனிடமிருந்துதான் வந்தது.

“நீ இப்படி இருப்பன்னு நான் நினைக்கவேயில்லை தனும்மா… என் மனசுல நீ இருந்த இடத்தை, என் கண் முன்னாடி வந்த ஆரா மொத்தமா உடைச்சு போட்டுட்டா.” மேலும் அவன் கூறிக் கொண்டே செல்ல, எதுவும் அவள் காதில் ஏறவில்லை.

‘என்னை அவனுக்கு முன்னாடியே தெரியுமா?’ அவன் கூறியதில் அப்படியே அதிர்ந்துப் போனாள்.

‘உன்னை மட்டும் இல்லை உன் குடும்பத்தையே அவனுக்கு தெரிஞ்சிருக்கு.’ மனம் எடுத்துக் கொடுக்க யோசனையானாள். ‘அவனிடம் கேட்க வேண்டும்.’ எண்ணிக் கொண்டவள் படுத்துக் கொண்டாள்.

                                         ***

ஆராதனாவை தேடி தேடி மிகவும் களைத்து போயினர் வீட்டினர். அவள் இருக்கும் இடத்திற்க்கு எந்த க்ளூவும் இதுவரை இவர்களுக்கு கிடைக்கவில்லை.

 ஆரா கவலையில் எல்லாரும் அவரவர் அறையில் முடங்க, மீண்டும் வெளியே சென்றான் ஆரியன்.

எங்கு எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற கவலையில் ஆழ்ந்தார் ஜனார்த்தனன். எல்லாம் ஆரம்பித்த இடத்திற்கே வந்ததுப் போல் இருந்தது அவருக்கு. இவரை போலவே மிகவும் கவலையில் அமர்ந்திருந்தார் அசோகன்.

மகளை காணாமல் மிகவும் தவித்து போய் விட்டார் மனிதர். சரியாக உண்ணாமல் உறங்காமல் முகம் களை இழந்து கண்கள் சிவந்து போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தார்.

அசோகன் நிலை என்ன என்பதை அறிய ஹோட்டலில் இருந்து மில் நோக்கி வந்துக் கொண்டிருந்தான் நிதின்.

அந்த சாலையில் மிகவும் நிதானமாக காரை செலுத்தி வந்தான். தூரத்தில் நின்றிருந்த மரத்தின் பின் ஆரியன் போல் யாரோ நிற்பதுப் போல் தெரிய காரை அந்த மரத்தின் அருகில் நிறுத்தியன் இறங்கிக் கொண்டான்.

அங்கு நின்றவன் அருகில் சென்று, “ஆரியன்” என்றழைத்தபடி அவன் தோளில் கைவைக்க,

“சின்னு…” என்றபடி திரும்பினான் ஆரியன்.

                                      ***  

  காலையில் அவனுக்கு முன் எழுந்தாள் ஆரா. அவனை பார்க்க இன்னும் உறக்கத்தில்தான் இருந்தான்.

அவன் காயத்தைப் பார்க்க, கட்டில் ரத்தம் வெளியேறி இருந்தது. ‘இன்னைக்கு மருந்து போட்டு கட்டுவோம்.’ எண்ணியவள் காயத்தை கழுவ அடுப்பில் சுடுநீர் வைத்தாள்.

அடுப்பு எரியாமல், புகை மண்டலம் கிளம்ப, இவள் இரும அந்த சத்தத்தில் எழுந்தான் சைத்தன்.

எங்கும் புகை மண்டலமாய் இருப்பதை கண்டவன், “என்ன பண்ணுற நீ?” என்றான் பதட்டத்துடன்.

“உன் காயத்தை கழுவ தண்ணீ வைக்கலாம்னு பார்த்தேன் ஆனா, தீ பத்தவே மாட்டிக்குது.” என்றாள் அடுப்பை பார்த்துக் கொண்டு.

“அடுப்பில இருந்த சாம்பலை வெளிய எடுத்தியா?” அவன் கேட்கவே,

“சாம்பலா… அதுதான் நான் போடவே இல்லையே.” என்றாள்.

அவளை பார்த்து சிரித்தவன், “நீ ஒன்னும் போடல தாயே… நேத்து சமைக்கும் போது விறகு எரிஞ்சு சாம்பல் வந்திருக்கும்ல அதெல்லாம் எடுத்தாதான் தீ பத்தும். நீ நகரு இதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.” என்றவன் எழ,

“இரு இரு…” என்றவள் “நீ எப்படி செய்யணும்னு மட்டும் சொல்லு நான் செய்யுறேன்.” என்றாள்.

“சாம்பலை எல்லாம் வெளியே எடு, அங்கிருக்க சருகுகளை எடுத்து தீ மூட்டணும்.” வேலைகளை அடுக்க திரு திருவென முழித்தாள் ஆரா.

அவளை கண்டு சிரித்தவன், “நகரு” என,

அவனது கேலிப்புன்னகையை கண்டு வெகுண்டவள், “நானே செய்வேன் நீ உக்காரு…” என கூறியவள் அவன் செய்ய சொன்னதை அவ்விடத்தையே களோபரமாக்கி செய்து முடித்தாள். அதனைக் கண்ட சைத்தனுக்கு விழி பிதுங்கியது.   

 தண்ணீர் கை பொறுக்கும் அளவுக்கு சூடாக்கியவள் அதை இன்னொரு பாத்திரத்தில் ஊற்றியவள் மீண்டும் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அடுப்பில் வைக்க,

“ஹேய்! என்ன பண்ண போற நீ.” என்றவனிடம்,

“வேற ஒன்னும் பெருசா பண்ணல. டூ மினிட்ஸ் மேகிதான் பண்ண போறேன்.” என்றவள் அவனை சிறிதும் சட்டை செய்யாது மேகியையும் செய்து முடித்தாள்.

“சரி வா… கட்டை எடுத்துட்டு மருந்து போடலாம்.” அவள் அழைக்க,

“சாப்பிட்டு பண்ணலாம்.” அவன் கூற,

“அதெல்லாம் வேண்டாம் பாரு ரத்தம் எப்படி கட்டி இருக்குன்னு.” முறைக்க,

“இல்ல மேகி சூடு ஆறிட்டுன்னா வாய்ல வைக்க முடியாது.” அவளிடம் கூறியவன் மெதுவாக எழ,

இவள், அவன் கையை பிடிக்க வர, “இல்லை வேண்டாம்.” கூறியவன் தானே எழுந்து காலை தாங்கி தாங்கி நடந்து சென்றவன், சிறிது நேரம் கழித்து வரும்பொழுது முகத்தை கழுவி வந்திருந்தான்.

இருவருக்கும் தட்டில் மேகியை எடுத்து வைத்த ஆரா, அவள் உண்டுக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து மெல்லமாய் சிரித்தவன் அங்கு அமர்ந்து அவனும் உண்டான்.

உண்டு முடிக்கும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை. அதே போல் மருந்து வைத்து கட்டும் பொழுதும் இருவரும் எதுவும் பேசவில்லை.

காயத்தை துடைக்கும் பொழுது, நேற்று இருந்த அழுத்தம் இன்று இல்லை. மிகவும் மெதுவாக சுத்தம் செய்து கட்டுப் பொட்டுக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு இன்னைக்கு என்னாச்சு? மறுபடியும் நடிக்கிறாளா?’ யோசனையுடன் அவளது செய்யலை பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன்.  

 வேலை முடிந்தது என்பது போல் இரு கைகளையும் தட்டியவளை இவன் பார்க்க,

“என்ன பாக்குற?” என்றாள் புருவம் உயர்த்தி.

“கையை கட்டல, உன் காலையும் கட்டல, ஏன் உன் வாயை கூட கட்டல. ஆனா இன்னும் போகாம இங்க இருக்கியே என்ன விஷயம்?” என்றான் நேரடியாக,

“ஓஒ! அதுவா… நீ கட்டி போட்டு உன்கூட சில நாள் இருந்தேன். அதே மாதிரி ஃப்ரீயா இருந்தா என்னன்னுதான்?” என்றவளை கண்கள் சுருக்கிப் பார்த்தான் சைத்தன்.

அவன் பார்வையை எதிர்கொண்டவள், “சொல்லு சைத்தன். உனக்கும் என் ஆரியனுக்கும் என்ன சம்மந்தம்?” என அழுத்தமாக கேட்டாள்.

“சைத்தன்யா.” என்றான் அவனும் அவளின் அழுத்தமான பார்வையை எதிர்கொண்டு.

“அவளா! அவ எப்படி?” முகத்தில் வெறுப்பினை அப்பட்டமாக காட்டியபடி அவள் கேட்க,

அவனுக்குள் ஆராவின் மீதிருந்த சிறுநம்பிக்கையும் பொய்த்துப் போனது.

அவனின் முகம் பாராது தன்னுள்ளே உளண்டவள் வார்த்தைகளை சிதறவிட்டாள். “சைதன்யா… போயும் போயும் அவளுக்காக, என் குடும்ப சந்தோசத்தை மொத்தமா பறிச்சவளுக்காக…” இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பாளோ,

“ஆராதனா!” சைத்தனின் கர்ஜனையில் ஸ்தம்பித்து நின்றாள்.