ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 16 

அவனது கோபத்தை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை ஆரா. ஒரு நொடி அதிர்ந்து விழித்தவள், “என்ன… என்ன கத்துற? உண்மையதான சொன்னேன். எங்க வீட்டோட மொத்த சந்தோசத்தையும் ஒண்ணுமில்லாம ஆகிட்டா.” அவளின் கோபம் இத்தனை நாள் அவள் அடைந்த துயரத்தின் வெளிப்பாடாய் இருந்தது.

“அவளை பத்தி தெரியாம வாய் விடாத ஆரா. அவ தேவதை… அவ இருக்க இடம் எப்பவும் சந்தோசமாதான் இருக்கும்.” அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான் சைத்தன்.

“நாங்க என்ன ஷைத்தானா?” பல்லைகடித்துக் கொண்டு கேட்டாள் ஆரா.

‘அது எப்படி அவன் இன்னொருத்தியை தேவதை.’ என்று கூறலாம் என்ற கோபம் அவள் குரலில் ஒளிந்திருந்தது. அதை கவனிக்கும் நிலையில் இல்லாத சைத்தன் அவளை முறைத்தான்.

“அவ உனக்கு யாரு?” என்றாள் தணிந்து, அவனிடம் அவள் கேட்க வேண்டியவை நிறைய இருக்க, குரல் தானாகவே தணிந்தது.

“அவ எனக்கு தங்கை.” அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்து.

“ஓஹோ… அப்போ நீயும் பிச்சைக்கார குடும்பம் தானா?” ஏளனமாகக் கேட்டாள்.

“அவங்களும் மனுஷங்கதான் ஆரா.” என்றான் அவள் முகத்தில் வந்த ஏளனத்தைப் பார்த்து.

“யார் இல்லன்னு சொன்னா?” அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

‘ச்சை’ மிகவும் வெறுத்துப் போனான் சைத்தன். அவன் எண்ணியதற்கு நேர் மாறாக இருந்தாள். அவள் இப்படிதான் என்ற வரையறையை தாண்டி அவன் கண்களுக்கு தோன்றினாள்.

அவன் எண்ணத்திற்கும், யோசனைக்கும் அப்பார்ட்பட்டவளாய் இருந்தாள். அவன் எண்ண அலையை மீறியவளாய் இருந்தாள் அவள்.

அதன் பிறகு அவன் அவளிடம் பேசவில்லை, இவளும் அவனிடம் பேசவில்லை. ஆனாலும் நேரத்துக்கு நேரம் ஏதோ ஒன்று சமைத்தேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு அவனுக்கும் உண்ண கொடுத்தாள்.

இரவு உறக்கம் கொஞ்சமும் வரவில்லை சைத்தனுக்கு. உடல் வலி ஒரு பக்கம்… கால் வலி ஒரு பக்கம் என தவித்துக் கொண்டிருந்தான்.

விடிய விடிய விழித்தே இருந்தான். சைதன்யாவும் ஆரியனும் மாறி மாறி அவன் மனதில் உலா வந்தனர்.

ஆரியன் மேல் உள்ள காதலை முதல் முதலாக அவனிடம்தான் கூறினாள் சைதன்யா. அவனிடம் கூறும் பொழுது அவள் கண்களில் வழிந்த காதல்.

‘என் குட்டி தங்கையா! அதுவும் காதலா!’ என்றுத்தான் தோன்றியது.

ஆசையாய் காதல் மொழிந்தவள், ஆரியனை அகம் நிறைத்து அவள் முகம் காட்டிய ஜாலங்கள்தான் எத்தனை வசீகரமானது. எல்லாம்… எல்லாம்… அழித்துவிட்டனர்.

ஆராவின் குடும்பத்தை நினைக்கும் பொழுதெல்லாம் ஜுவாலையின் தாக்கம்!

ஒற்றை பெண்ணை பெற்று வளர்த்த மீனாம்மாவை நினைத்தால் அவனால் தாங்கமுடியவில்லை. சந்தோசமாக இருந்த குடும்பத்தை நடைபிணமாக மாற்றியவர்களை என்ன செய்வது?

அவனுக்கு நன்கு தெரியும், சைதன்யா மறைவில் இவளுக்கு பங்கு இருக்குமென்று. இவளை விசாரித்தால் உண்மைகள் வெளியே வரும் என்ற எண்ணத்தில்தான் இவளை தூக்கினான்.

விசாரித்த வரையில் ஆரியனின் எந்த விபரமும் எங்கும் கிடைக்கவில்லை. அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா இப்படியான எந்த விசயமும் அவனுக்கு தெரியவில்லை.

அதனால்தான் மில்லில் நுழைந்தான். அசோகனை குறிவைத்து உள்ளே நுழைந்தால் முழு வில்லியாக இவன் கண்களுக்கு தெரிந்தாள் ஆரா. அதேசமயம் ஆரியன் வெளிநாட்டில் இருக்கிறான் என்ற விபரமும் தெரிய இவர்களிடம் நல்லவிதமாகவே நடந்துக் கொண்டான்.

தக்க சமயம் பார்த்து இவளை கடத்தி, அசோகனின் தவிப்பை கண்ட பின்னும், ஆரியனை கண்ணில் காணவில்லை. அடுத்து என்ன செய்வதென்று இவனுக்கே புரியவில்லை.

யோசனையாக அப்படியே படுத்திருந்தவன் தூக்கம் வராமல் அங்கும் இங்கும் புரண்டவன் மனமோ கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

                                      ***

சென்னை,

“சைத்து கண்ணா மம்மியை விட்டு எங்கையும் நகரக் கூடாதுப்பா… மம்மியை பிடிச்சிட்டு நிக்கணும் சரியா?” ஐந்து வயது குழந்தையான சைத்தனிடம் கூறிய சைலஜா துணிகடையில் நின்றுக்கொண்டிருந்தார்.

“ஒகே மம்மி.” தலையாட்டிய சைத்தன் அவரது புடவையின் நுனியை பிடித்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

“மேடம்…” என்றபடி வந்து நின்றார் சேல்ஸ்மேன் சைலேந்திரபாபு.

“சொல்லுங்க பாபு”

“இன்னைக்கு டாக்டரை பாக்க போகணும் மேடம்.” மெதுவாக கூறினார் பாபு.

“போயிட்டு வாங்க பாபு. பணம் ஏதாவது வேணுமா?”

“இல்லை… இல்லை மேடம். மீனா இங்க வருவா. அவ வந்ததும் போகணும். அதுதான்…”

“சரி பாபு போயிட்டு வாங்க…” அவர் கூறவே,

“சரிங்க மேடம்.” என்றபடி மீண்டும் உள்ளே சென்றார்.

 “அக்கா…” என்றபடி அடுத்த சில நொடிகளில் சைலஜா முன் வந்து நின்றாள் மீனா.

“ஹேய் மீனா… வா… வா” அவளை உள்ளே அழைத்தவர், “பாத்து வா மீனா…” என,

நிறைமாத வயிற்றுடன் பதுமையாக உள்ளே நுழைந்தார் மீனா.

“மீனும்மா…” என்றபடி அவரிடம் ஓடி வந்தான் சைத்தன்.

“சைத்து கண்ணா…” அவனை அணைத்தவர் அவன் உச்சியில் முத்தம் ஒன்றை வைத்தார்.

சைலஜாவின் எதிர் வீடுதான், மீனாட்சி – சைலேந்திரபாபு தம்பதிகளுடையது. சைலஜா கணவனால் கைவிடப்பட்டு, தனியாளாக நின்ற சமயம் பெரிதும் உதவியது இந்த மீனா தம்பதி.

இப்பொழுது சைலஜா கடையில் வேலை பார்க்கிறார் பாபு. சைலஜாவுக்கும் மீனாவுக்குமான சம்பந்தம் ரத்த உறவிற்கும் அப்பாற்பட்டது.

இருவரும் அத்தனை பாசமாக இருப்பர். மீனாவுக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தை தீர்த்ததே சைத்தன்தான்.

பல வருடம் கழித்து மீனாவுக்கு இப்பொழுதுதான் குழந்தை பாக்கியம் கிட்டியிருக்கிறது.

மீனாவை பார்த்ததும் பாபு அவளை நோக்கி வர, இருவரும் சைலஜாவிடம் விடைபெற்று வெளியே சென்றனர்.

இருவரும் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான் சைத்தன்.

பாபுவின் கையை பிடித்துக்கொண்டு மெதுவா சென்றுக்கொண்டிருந்தார் மீனா.

அங்கிருந்த கல் ஒன்று மீனா காலை தட்ட, “பாத்து வா மீனா.” விழப் போனவளை தாங்கி பிடித்தார் பாபு.

இதை கடையில் நின்று பாத்துக்கொண்டிருந்த சைத்து, “மீனும்மாஆஆஆ…”என்றபடி சைலஜாவின் புடவையை விட்டு ஓட வந்துக்கொண்டிருந்த லாரியை அவன் கவனிக்கவில்லை.

“கண்ணாஆஆ…” சைத்தன் கவனிக்காத லாரியை மீனா கவனிக்க, அவனை அழைத்தபடி சைத்தனிடம் ஓடி அவனை பிரித்திழுப்பதற்குள், டக்கென்று பிரேக் பிடிக்க முடியாத லாரி மீனாவை உரசி சென்றது.

உரசியதில் தள்ளி விடப்பட்டார் மீனா. ஒருநொடியில் நடந்து விட்ட விபரீதத்தில்… யாருக்கும் என்ன? எப்படி நடந்தது? என்று கணிக்க இயலவில்லை. அதேசமயம் மீனாவை பார்க்க ஒரு கையில் சைத்துவையும், மற்றொரு கை வயிற்றையும் பிடித்து அலறிக் கொண்டிருந்தார்.

சடுதியில் நடந்து முடிந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் இருந்த சைலஜா ஓடி வந்து மீனாவை கையில் தாங்கிக்கொண்டார்.

“மீனும்மா…”அழ ஆரம்பித்தான் சைத்தன்.

அவனை கையில் பிடித்த பாபு ஆம்புலன்ஸை  அழைக்க, கண்கள் மிகவும் பயத்தை காட்டியது.

அடுத்த சில நொடிகளில் ஆம்புலன்ஸ் அவர்கள் முன் நிற்க, மீனாவை உள்ளே ஏற்றியவர்கள் அங்கிருந்த மருத்துவமனையை நாடினர்.

மீனா அவசர பிரிவில் சேர்க்க, சைத்தன் கையில் பட்டிருந்த காயத்தை அங்கிருந்த நர்ஸ் பார்த்துக் கொண்டார்.

பாபுதான் மிகவும் கலங்கிப் போனார். பல வருடம் கழித்து மனைவி கருவை தாங்கி, இப்பொழுது ஆபத்தான கட்டத்தில் இருக்க அவரால் ஒரு நிலையில் இருக்க  முடியவில்லை. 

‘மீனாவுக்கு எதுவும் ஆகக்கூடாது.’ என்ற வேண்டுதல் சைலஜாவின் மனதில்…

“மீனும்மா.” அழுகையுடன் ஐ.சி.யூ வார்ட்டை பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன்.

இப்படியாக எல்லாரும் மீனாவும் அவள் குழந்தையும் நலமாக வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் இருக்க, மிகவும் போராட்டத்துக்கு பின் அடுத்தநாள் பெண் மகவை பெற்றெடுத்தாள் மீனா.

அவள் நலமாகி வீட்டுக்கு வரும் வரை அவளை முழுமையாக பார்த்துக் கொண்டது சைலஜாதான்.

சைலஜா தனியாக இருக்கும் பொழுது உற்ற துணையாக இருந்தது மீனா தம்பதியர்தான், இப்பொழுதும் சைத்தனை காப்பாற்றிக் கொடுத்ததும் அவர்கள்தான்.

இவர்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிப் போயினர் மீனாட்சி – சைலேந்திரபாபு தம்பதியினர்.

சைத்தனின் தங்கையாகவே மாறிப் போனாள் மீனாவின் மகவு சைதன்யா. சைலஜா, உமேரா சில்க்ஸ்ல் பொறுப்பேற்ற பின் சைத்தன் வளர்ந்தது எல்லாம் மீனாவின் வீட்டில் சைதன்யாவுடன்தான்.

சைத்தனுக்கும் சைதன்யாவுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. சைத்தன் படித்த பள்ளியில்தான் சைதன்யாவும் படிப்பை தொடர்ந்தாள்.

சைத்தன்யாவை வேறு வீட்டு பெண்ணாக இல்லாமல் தன் குழந்தையாகவே நினைத்து அவளுக்கு சைத்தனை போல் எல்லாம் செய்தார் சைலஜா.

அதேபோல்தான் சைதன்யா வீட்டில் சைத்தனுக்கு அவளை போலவே எல்லாம் செய்வார்கள்.

சைத்தன் கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் பொழுது சைத்தன் மாமா கல்லூரியில் சைதன்யா படிப்பை தொடர்ந்தாள்.

சைதன்யா கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பொழுது, நிதின் அமெரிக்கா சென்றான். அதுவரை மூன்று பேரும் இணை பிரியாதவர்கள். சைதன்யா இருவருக்கும் செல்லம்.

நிதினை விட சைத்தன் ஒரு படி மேல். நிதின் பள்ளியில்தான் இருவரையும் பார்த்துக் கொள்வான். ஆனால் சைத்தன் அவள் கூடவே ஒன்றாகவே வளர்ந்தவன். அவளுக்கு ஒன்றென்றால் துடித்துப் போவான்.

                                           ***  

  பூஜை அறையில் இருந்து வெளியில் வந்த மீனாவை கன்னத்தில் கைவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பாபு.

தாயையும் தந்தையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் சைதன்யா.

“ம்மா… அப்பா உன்னை சைட் அடிக்கிறார்.” இங்கிருந்து கத்தினாள்.

“ஏய்… என்ன பேச்சுடி இது.” வேகமாய் வந்த மீனா மகள் வாயில் ஒரு அடியை போட்டு நெற்றியில் விபூதி பூசி விட்டார்.

“ம்மா… உன்னையே அப்ப இருந்து ஒரு மனுஷன் ரசிச்சு பாக்கிறார் அவரை கண்டுக்காம போறியே.” அருகில் இருந்த பாபுவை பார்த்தபடியே கூறினாள்.

“அரட்டை… கொஞ்ச நேரம் பேசாம இருடி.”

“ம்மா… பாருங்கம்மா அப்பாவை பத்திதான் பேசுறேன். அது கூட தெரியாம உன்னை ரசிக்கிறார்.” என்றாள் சிரிப்புடன்.

“அரட்டை… அப்பாம்மாவை பத்தி பேசுற பேச்சாடி இது.” காதை திருகினார் மீனா.

“ம்மா… வலிக்குது விடுமா.” காதை பிடித்துக் கொண்டு மகள் அலற,

மகளின் சத்தத்தில் அவள் பக்கம் திரும்பினார் பாபு.

“ஏன்டாம்மா… என்னாச்சு?” அவர் கேட்கவே,

“சரியாப் போச்சு. நீங்க அம்மாவை சைட் அடிச்சுட்டு இருந்ததை அம்மாகிட்ட சொன்னேன் டாடி. மம்மீ பனிஷ் பண்ணுறாங்க.” என்றாள் மகள் முகத்தை சுருக்கி.

“உண்மைய தானே சொல்லுறா என் பொண்ணு… அதுக்கு பனிஷ் பண்ணலாமா? நீ பண்ணுறது நல்லா இல்ல மீனா.” மகளுக்காக ஆதரவு கொடி தூக்கினார் பாபு.

“எது நல்லால்ல. சப்பாத்தியும் மீன் குழம்புமா?” இடுப்பில் கைவைத்து அவர் கேட்கவே,

“நீ ஏன்டி சாப்பாட்டுல கை வைக்குற. பொண்ணை திட்டுறதை சொன்னேன்டி…”

“பொல்லாத பொண்ணு. நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க.” முறைக்க,

“என் செல்லத்தை யார் என்ன சொல்லுறா?” என்றபடி வந்தமர்ந்தான் சைத்தன். முதல் நாள் சைதன்யா காலேஜ் செல்வதால் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான்.

“அப்படி கேளுண்ணா. நீ இல்லாத நேரம் என்னை எல்லாரும் திட்டுறாங்கண்ணா.” மூக்கை உறிஞ்சுக் கொண்டு சைத்தன் அருகில் அமர்ந்துக் கொண்டாள் அவள்.

“வாடா… நீ மட்டும்தான் குறை… அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்காதடா… ஒரு சொல் பேச்சு கேட்கமாட்ரா.” குறை சொன்னார்.

“விடுங்க மீனும்மா… அவ சின்ன பொண்ணு. வளர வளர சரியாகிடுவா.” மீனாவிடம் கூறியவன் சைதன்யாவை பார்த்து கண்ணடிக்க,

“நீ எப்படிடா இருப்ப. அவளை மாதிரிதான இருப்ப உன்கிட்ட சொன்னனேன் பாரு.” அவளை பார்த்து கண்ணடித்ததை பார்த்துக் கூறினார் மீனா.

“ஹீ… ஹீ… மீ இன்னைக்குதான் மொத நாள் காலேஜ் போறா திட்டி அனுப்பினா எப்படி?”   

       “இல்லனா மட்டும் நீ திட்டுடிட்டுதான் மறுவேலை பார்ப்ப.” முகத்தை தோளில் இடித்தவர், அவனுக்கு தட்டு வைத்து சப்பாத்தியை வைத்தார்.

“மீனும்மா நான் வீட்டுல சாப்டுட்டு வந்துட்டேனே.”

“அங்க சாப்பிட்டா இங்க சாப்டமாட்டியா கண்ணா?” முகத்தை பாவமாய் வைத்து கேட்க,

“மீ… சுட்ட அத்தனை சப்பாத்தியையும் தட்டுல போடுங்க. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் வயித்தை குப்பைதொட்டியாய் வைக்கிறேன்.” சிரித்துக் கொண்டே கூற,

“அவளுக்கு மேல நீ இருக்கடா படவா.” செல்லமாக அவன் தோளில் தட்டிய மீனா அவனுக்கு இரண்டு சப்பாத்தியை வைத்து மீன் குழம்பை ஊற்றினார்.

இவர்களின் சம்பாஷணையை முகத்தில் தோன்றிய சிரிப்புடன் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பாபு.

“ப்பா… என்ன அமைதியா இருக்கீங்க?” அமைதியாக இருந்தவரை கண்டு சைத்தன் கேட்க,

“ண்ணா… அப்பா அமைதியா இருக்கீங்கன்னு நீ தப்பா நினைக்குற. அவர் அம்மாவை சைட்டுறார்.” கண்ணடிக்க,

“ஏய்… என்ன பேச்சுடி இது…” மீனா அதட்ட,

“மீ… பாபுப்பாவை பார்த்தாலே தெரிது என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு.” இருவரும் மாறி மாறி ஹைஃபை அடித்துக் கொள்ள,

“டேய்…” மீனா கத்த,

“மீ நாங்க கிளம்புறோம்…” எழுந்தவர்கள் கையை கழுவி ஓடியே போயினர்.

“ரெண்டுக்கும் வாயை பார்த்தீங்களா?” தட்டை எடுத்தபடி மீனா பாபுவிடம் கூற,

“சரியாதான சொல்லுறாங்க மீனு.” ரசித்து கூறிய பாபு அவர் அருகில் வந்து நெற்றியில் கோணலாக இருந்த பொட்டை எடுத்து நேராக வைக்க,

“ஓஹோ… மீ சைத்து சரியாதான் சொல்லிருக்கா.” வெளியில் இருந்து சைத்தன் கத்த, அவன் அருகில் நின்ற சைதன்யா சிரித்துக் கொண்டிருந்தாள்.

“டேய்…” முகம் சிவந்தபடி இருவரையும் அதட்டினார் மீனா.  

“கிளம்புறோம்மா…” கூறிய சைத்தன் காரை கிளப்ப அவனுடன் காலேஜ் நோக்கி சென்றாள் அவள்.

“மீனா நீ நிஜமாவே ரொம்ப அழகுடி. உன்னை போலவே என் பொண்ணும் ரொம்ப அழகு.” ரசித்துக் கூறினார் பாபு.

“எல்லாரும் ரொம்ப அழகுதான் நீங்க கிளம்புற வழியை பாருங்க. அக்கா கடைக்கு போயிருப்பாங்க.” மீனா நினைவுப்படுத்த, சைக்கிளை எடுத்துக் கொண்டு கடையை நோக்கி பயணித்தார் பாபு.

                                     ***   

கடந்த கால நினைவுகளுடன் தூங்கிப் போனான் சைத்தன். அடுத்த நாள் காலையில் அவனுக்கு முன் எழுந்த ஆரா, மிகவும் யோசனையானாள்.

‘அவள் நினைத்தால் இப்பொழுதுக் கூட தப்பித்து செல்லலாம். ஆனால் அப்படி செல்ல அவளால் முடியவில்லை.

காரணம் ஆரியன்!

ஆரியனை இவனுக்கு தெரிந்திருக்கிறது… அப்படியானால் சைதன்யா ஆரியனை உண்மையாக காதலித்திருக்கிறாள்.

அப்பா கூறியதுப் போல், பணத்தின் பின்னே ஓடுபவள் அல்ல இந்த சைதன்யா. இப்பொழுது அவள் எங்கே? ஆரியன் நிலை இவனுக்கு தெரியுமா?

ஆரியன் – சைத்தன்யா பிரிவுக்கு அப்பாவின் பங்கு இருக்குமோ? அதனால்தான் என்னை இப்படி வைத்திருகிறானோ? ஆரியனுக்கும் – சைதன்யாவுக்கும் எப்படி பழக்கம்?

அவளது எல்லா கேள்விக்கும் பதில் இவனிடம் கேட்டால் மட்டுமே தெரியும். அவளுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமைக் காக்க வேண்டும்.’ எண்ணியவள் தண்ணீர் எடுக்க அருவி நோக்கி நடந்தாள். 

தண்ணீர் எடுத்து திரும்பி வந்த பொழுது, வெளியில் இருந்த பாறையில் அமர்ந்து முகத்தை கழுவிக் கொண்டிருந்தான் சைத்தன்.

அவனை பார்த்தப்படி வந்தவள், நீரை அடுப்பில் வைத்து தீயை பற்ற வைத்தாள். அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன். அவன் சொல்லிக் கொடுத்ததுப் போல் சாம்பல் எல்லாம் வெளியே எடுத்து தீயை பற்ற வைத்திருந்தாள்.

இவள் அவனை பார்க்கவும், முகத்தை வேறு பக்கம் திருப்பி இருந்தான் சைத்தன்.

நேற்று ஆரம்பித்த மௌனம் இதோ இப்பொழுது வரை நீடித்தது. பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், “சைத்தன்…” என்றாள்.

எரிந்துக் கொண்டிருந்த அடுப்பையே வெறித்தான் அவன். அவளிடம் பேசும் எண்ணம் அவனுக்கு கொஞ்சமும் இல்லை.

“சைத்தன் உன்னைத்தான்…” அவனை மீண்டும் அழைக்க,

“என்ன?” என்றான் கடுப்பாக,

“நான் ஒன்னு கேட்டா பதில் சொல்லுவியா?” என்றாள் அமைதியாக,

‘சைத்தன்… உஷாரா இருந்துக்கோ இவளை நீ நம்பாதே.’ மனம் எச்சரிக்கை விடுக்க, “சொல்லு…” என்றான் முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு.

“உனக்கு என் அண்ணனை எப்படி தெரியும்?” என்றாள் நேரடியாக,

“சைதன்யா” என்றான் ஒற்றை சொல்லாக.

“எனக்கு புரியல.” அவனை பார்க்க,

ஆரியனுக்கும் – சைதன்யாவுக்கும் இடையில் ஆரம்பித்த அழகான காதலை கூற ஆரம்பித்தான் சைத்தன்.