ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 3

“ஏய் சிங்காரி! யார் புடவை இது?” காரை வேகமாக அறைந்து சாற்றி கோபமாய் வீட்டுக்கு வந்த பேத்தியை பார்த்து கேட்டார் ஆண்டாள்.

காலையில் போகும் போது கட்டிய புடவை இல்லாமல், இப்பொழுது வேறு புடவை கட்டி வரும் அவளை விசித்திரமாகவும் பார்த்து வைத்தார்.

அவனை பார்த்ததில் இருந்து காரணமே இல்லாமல் அவன் மேல் கோபமாய் வந்தது. அவனை எங்கோ பார்த்த நினைவு வேறு அவளை அழுத்த, மிகவும் கோபத்தில் இருந்தாள் ஆரா.

அவனிடம் புடவையை தூக்கி வீசியவள், நேராக வீட்டை நோக்கிதான் வந்திருந்தாள். ‘எவ்வளவு கொழுப்பிருந்தா என் மேலையே காஃபியை ஊத்திருப்பான். முதலாளின்னு ஒரு மரியாதை இருக்கா?’ அவளால் தாங்கமுடியவில்லை.

“ஏன்டி சிங்காரி நான் கேட்டுட்டே இருக்கேன் நீ போயிட்டே இருக்க?”

“வாயை மூடு கிழவி.” கத்தினாள் ஆரா.

அவளது காட்டுக்கத்தலில் ஒரு நிமிடம் அதிர்ந்தவர். பின், “நான் ஏன்டி வாயை மூடணும். நீ மூடுடி உன் வாயை.” அவளுக்கு மேல் கத்தியவர்,

“போனவ போன வேகத்தில வந்திருக்காளே, என்னாச்சோ ஏதாச்சோன்னு அக்கறையா கேட்டா ரொம்பதான் சிலுத்துகிற, எப்படியோ போ.” கடுகடுத்தவர்,

“மணி அவளுக்கு சூடா ஒரு காஃபி குடு. காரம் குறையட்டும்.” என்று எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தார்.

இருந்த கோபம் மீண்டும் அதிகரிக்க, “இனி இந்த வீட்டுல காஃபி யாரும் குடிக்க கூடாது. காஃபி பேச்சை இங்க யாரும் எடுக்கக் கூடாது. அப்படி யாராவது காஃபி குடிச்சா நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.”

“இப்போ மட்டும் மனுஷியா இருக்கியா சிங்காரி நீ?”

“கிழவி நீ வாயை மூடல. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” பல்லை கடித்தவள் அறை நோக்கிச் செல்ல மாடி ஏறினாள்.

‘நீ என்னமும் பண்ணு.’ எண்ணியவர், “மணி எனக்கு சூடா காஃபி கொண்டுவா கொஞ்ச கூல் பண்ணுறேன்.” என,

மாடி ஏறியவள், அப்படியே நின்று அவரை திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

‘உன் முறைப்பு என்னை ஒன்னும் செய்யாதுடி சிங்காரி.’ அவளை பாராது, சமையல் அறை வாசலை எட்டிப் பார்த்தார்.

மணி தயங்கி தயங்கி வெளியே வர,

“மணிஈஈ” இவளது கத்தலில் கையில் இருந்த காஃபியை தவற விட்டார் அவர்.

“டேய்! உனக்கு என்னாச்சு?” ஆண்டாள் எழுந்து அவனை நோக்கி வர, கனகு மாஃப் எடுத்து வந்து காஃபி சிந்திய இடத்தை துடைக்க,

“ஏய்!”

“மேடம்…” பயந்தபடியே அவளை பார்த்தாள் கனகு. இன்று ஆராவிடம் பேசவே மிகவும் பயமாக இருந்தது. தினமும் அவளிடம் பேசுவதற்கு பயம்தான். இன்று மிகவும் பயமாக இருந்தது.

“உன் வேலை எது?”

“தம்பியை பாத்துகிறது.”

“அந்த தம்பி இங்கதான் இருக்கானா?”

‘இல்லை’ என்னும் விதமாக அவள் தலையாட்ட,

  “அப்புறம் உனக்கு இங்க என்ன வேலை போ அங்க.” எனவும் எடுத்த இடத்தில் மாஃப் வைத்தவள், ஆரியன் அறை வாசலில் நின்றுக் கொண்டாள்.

“இனி இங்க இந்த காஃபி ஸ்மெல் வரவேக் கூடாது.” என்றவள் வேகமாய் மாடி ஏறி சென்றாள்.

 “ஏன்டி கனகு, அங்க நின்னு என்ன பராக்கு பாக்குற போ போய் ஒரு கப் காஃபி எடுத்துட்டு வா.”

“அம்மா!” இவள் பயந்துப் போய் நிற்க,

“எடுத்துட்டு வாடி. சிங்காரியை நான் பாத்துக்கிறேன்.” என்றவர் ஷோபாவில் அமர, அவருக்கு காஃபியை கொண்டு கொடுத்தாள் கனகு.

“டேய் மணி இன்னும் கல்லு மாதிரி ஏன் இங்க நிக்குற. போ போய் வேலையை பாரு.”

‘யப்பா’ உடலை ஒருமுறை சிலுத்து தன்னை நிலை படுத்தி உள்ளே சென்றார் அவர்.  

 ‘இன்னைக்கு இவளுக்கு என்ன ஆச்சு?’ என்ற எண்ணம் ஆண்டாள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும் காஃபியை ரசித்து ரசித்து குடித்தார் அவர்.

‘ஏன்டி இப்படி பேய் மாதிரி நிக்குற?’ அவளது மனசாட்சி அவளை கேட்க, அவளும் அதைதான் எண்ணிக் கொண்டிருந்தாள்.

அத்தனை பேர் வேலை பார்க்கும் இடத்தில், முதலாளி முகத்தில் வேலைக்காரன் காஃபியை ஊற்றினால் எப்படி இருக்கும். அந்த கோபம், அந்த அவமானம் அவளை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.

‘அவனை சும்மா விடக்கூடாது ஆரா.’ மனம் விடாமல் புலம்பிக் கொண்டிருந்தது.

                                           ***

காலையில் வழக்கம் போல் எழுந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சைத்தனை, உறக்கத்தில் எழுந்தமர்ந்த அருண் அதிர்ச்சியாகப் பார்த்தான்.

“டேய்! நீ எப்போடா வந்த?”

“காலையிலே என்னடா கேள்வி இது?”

“சரி சொல்லு எப்போ வந்த?”

“லூசாடா நீ… நான் எங்க போனேன் இப்போ வரதுக்கு.”

“நேத்து மில்லுல இருந்து நேரமே கிளம்பிட்ட. நான் தூங்கும் வரை வரல, அதுக்கு பிறகு எப்போ வந்த?”

“ஒ… அதுவா. இப்போ கொஞ்சம் முன்னாடிதான் வந்தேன்.” என்றான் முகத்தைத் துடைத்தபடி.

“எங்க போன?”  என்றான் யோசனையாய்.

“ரொம்ப யோசிக்காத, நீ தூங்கு.” முகத்தை துடைத்துக் கொண்டிருந்த டவலை கொண்டு அவன் முகத்தில் அடித்துச் சென்றான் சைத்தன்.

“இவனை எந்த லிஸ்ட்ல சேக்குறதுன்னே தெரியல ஆண்டவா.” தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டு, போர்வையை தலைவரை மூடி மீண்டும் படுத்துக்கொண்டான் அருண்.

சைத்தன் குளித்து கிளம்பி வெளியே வர, அருண் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவன், “இன்னுமாடா தூங்குற?” அவனை தட்டி எழுப்பினான்.

“இன்னைக்கு மில்லுக்கு வரியா சைத்தன்?”

“ஆமா. அங்க வராம எங்க போக போறேன். சரி நீ கிளம்பலியா?”

“இதோ.” வேகமாக உள்ளே சென்றவன் அதே வேகத்தில் வெளியே வந்தான்.

“என்னடா?” என,

“உனக்கு ரொம்ப தைரியம் மச்சான். அதுதான் அந்த ஆண்டவன் இன்னும் கொஞ்சம் தைரியத்தை உனக்கு தரணும்னு வேண்டிகிட்டு வந்தேண்டா.” என்றவன் அவன் நெற்றியில் பெரிய பட்டை ஒன்றை தீட்டிவிட்டான்.

“டேய் என்னடா இது.”

“நேத்து அத்தனை நடந்தும் இன்னைக்கும் மில்லுக்கு போகப் போற பார்த்தியா. அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும் மச்சான். அந்த மனசு கூடவே தைரியத்தையும் தரட்டும்னு வேண்டிகிட்டு வந்தேன்.”

“அடச்சீ… தூர போ… போய் குளிச்சிட்டு வாடா.” அவனை தள்ளி பாத்ரூமில் விட்டு கதவடைத்தான் சைத்தன்.

                                      ***

“நேத்து மில்லில என்ன பிரச்சனை?” கேட்டபடி ஆரா அருகில் வந்தமர்ந்தார் அசோகன்.

அவரது கேள்வியை காதில் எடுக்காமல், ஆண்டாளை முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரா.

‘உன் முறைப்புக்கு நான் பயப்படமாட்டேன்டி சிங்காரி.’ என்றெண்ணியபடி காபியை அருந்திக் கொண்டிருந்தார்.

‘உனக்கு ஒருநாள் இருக்குடி கிழவி.’ முறைத்தவளை, அசோகன் தோள் தொட்டு அழைக்க,

“என்ன டாட்.” அவரை நோக்கி திரும்பினாள்.

“நேத்து மில்லில என்ன பிரச்சனை?” என்றார் மீண்டும்.

“அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லப்பா.”

“அதுதான் நேத்து கோவமா இருந்தியா சிங்காரி?”

“கிழவி நீ பேசாம இரு, முடியலையா ஏதாவது ஆஸ்ரமத்தில போய் சேரு போ.”  கடுப்பானாள் ஆரா.

“இது என்ன பேச்சு ஆரா?” சிறு கண்டிப்புடன் கேட்டார் அசோகன்.

“விடுடா அசோகா. என் செல்ல சிங்காரிதான சொல்லுறா விடுடா.” என்றவர், அவளை பார்த்து, “ஆஸ்ரமத்தில போய் சேர எனக்கு தெரியும்டி சிங்காரி. நீ மில்லுக்கு  போனா சண்டை பிடிக்காம வந்து சேரு.” என்றார் எகத்தாளமாக.

“யூ ஓல்டி…” பல்லை கடித்தாள்.

“விடு ஆரா.” என்றவர் தன் தாயை நோக்கி, “ம்மா கொஞ்சம் பேசாமத்தான் இரேன். அவதான் கோபத்தில இருக்கான்னு உனக்கு தெரியும்தானே பிறகு ஏன் அவளை வம்புக்கு இழுக்குற.”

“ஆமாடா… நான்தான் கையை பிடிச்சு வம்புக்கு இழுக்குறேன். இவ உன் அப்பன் பாரு.” என்றார் சிரியாமல்,

சட்டென்று சிரித்தவர், “ம்மா… ஏன்மா.” என,

ஆராவுக்கும், புன்னகை எட்டிப் பார்த்தது ஆனாலும், ‘கிழவி முன்னாடி சிரிக்க கூடாது.’ என்று வீம்பாக முகத்தை சுருக்கிக் கொண்டாள்.

“பார்த்து… பார்த்துடி சிங்காரி மூஞ்சு சுருங்கிக்க போகுது.” என்றபடி இடத்தை விட்டு எழுந்து ஆரியனை பார்க்க சென்றார்.

செல்லும் அவரையே முறைத்தபடி பார்த்திருந்தாள் ஆரா.

“பாட்டிதானே கொஞ்சம் விட்டு குடுக்க கூடாதா?” கொஞ்சம் புத்தி சொல்லலாம் என்று ஆரம்பித்தார் அசோகன்.

“ஏன் அவங்க எனக்கு விட்டு குடுக்க வேண்டியதுதான. நான் அவங்க செல்ல பேத்திதான?” பதிலுக்கு கேட்க,

‘முழுசா கெடுத்து வச்சாச்சு. இனி திருத்தவா முடியும்’ தன்னைதானே நொந்துக் கொள்ளத்தான் அவரால் முடிந்தது.

“மில்லில் நேத்து ஏன் அப்படி நடந்துகிட்ட ஆரா?”

“எப்படி நடந்துகிட்டேன்.” அவரிடமே திருப்பிக் கேட்டாள் அவள்.

‘இதுக்கு மேல இவகிட்ட என்ன பேசுறது?’ எண்ணியபடி அவளை பார்க்க,

“தன்யா … தன்யா எங்க?” கேட்டபடி அறையை விட்டு வெளியே வந்தான் ஆரியன்.

கலைந்த தலையும், மாத்திரையின் வீரியத்தில் தூங்கி சிவந்த விழிகளுமாக வந்தவனை கண்ட அசோகன் டக்கென்று எழுந்து திரும்பி நடந்தார்.

“தன்யா … தன்யா காணும்” என்றபடி ஆரா அருகில் வந்தமர்ந்தான் ஆரியன்.

ஆரியன் நினைவில் தன்யா மட்டுமே இருக்க வீட்டில் யாரும் அவன் நினைவில் இல்லை. எப்பொழுதும் அவன் வாயில் இருந்து வருவது தன்யா எங்க? தன்யா காணும்?’ இது மட்டுமே.

இப்பொழுதும் அவனது தங்கையை அடையாளம் தெரியாமல் அவள் அருகில் வந்தமர்ந்தவன், தன்யாவைத்தான் கேட்டான்.

“அண்ணா… தன்யா இப்போ வருவா.”

“அண்ணா தன்யா காணும்?” என்றான் இப்பொழுது அவள் கூறிய அண்ணாவையும் சேர்த்து.

  “நீ இங்க இரு நான் தன்யாவை கூட்டிட்டு வாரேன்.” என்று அறை நோக்கி சென்றவள், வரும் பொழுது அவளது முக மாஸ்க்குடன் வந்தாள்.

 “தன்யா நேத்து அப்பா என்னை அடிச்சாங்க தெரியுமா?”

“எப்போ அடிச்சாங்க ஆரி?”

“அது… அது… நான் சேத்துல விளையாடினேனா அதை பாத்து அப்பா அடிச்சாங்க.” என்றான்.

சிறிது யோசித்த ஆரா, ‘சின்ன வயசுல நடந்ததை இப்போ சொல்லுறான். இடையில நடந்ததை எப்போ சொல்லுவான்?’ என்ற யோசனையுடன், “உங்க அப்பாகிட்ட இனி அடிக்கக்கூடாதுன்னு சொல்லுறேன் சரியா.” என,

“பசிக்கு தன்யா.” என்றான் வயிற்றை தடவியபடி,

அவள் திரும்பி மணியை பார்க்க, வேகமாய் காலை உணவை மேஜையில் வைத்தார் அவர்.

அவனுக்கு பிடித்தது போல் குட்டி தோசை அவன் முன் வைக்க, ஆர்வமாய் உண்டான் ஆரியன். அவனையே பார்த்திருந்தாள் ஆரா. கண்களில் சிறு கண்ணீர் துளி.

‘இந்த மேடம் எப்போ நல்லவங்களா மாறுது? எப்போ சீறி பாயுது ஒன்னுமே புரியலியே.’ ஆரா கண்களில் வழிந்த கண்ணீர் துளியையே பார்த்திருந்தார் மணி.

“என்ன சிங்காரி? காஃபி குடிச்சியா?” என்றபடி அவள் அருகே வந்தமர்ந்தார் ஆண்டாள்.

எதையும் கவனிக்காமல், ஆரியனையே பார்த்திருந்தாள்.

“ஏய் சிங்காரி!” அவளது தோளை இடிக்க,

“பாட்டி… இன்னைக்கு இவனை பக்கத்துல எங்கையாவது கூட்டிட்டு போங்க.” என்றாள் ஆரா இளகிய குரலில்.

அதேநேரம், “ஆஆஆ…” என்று நெஞ்சை பிடித்தார் ஆண்டாள்.

“என்னாச்சு… என்னாச்சு பாட்டி.” பதட்டத்துடன் அவரை உலுக்க,

“நீயா என்னை பாட்டின்னு சொன்னது?” என்றார் ஆச்சரியத்துடன்.

அப்பொழுதான் அவரது நடிப்பு அவளுக்கு புரிய, “கிழவி நீ திருந்தவே மாட்ட. உன்னை சீக்கிரம் ஆஸ்ரமத்தில் சேக்கிறேன். அங்க கிடந்து திண்டாடு. உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.” கடுப்புடன் கூறியவள் அவளின் அறை நோக்கி சென்றாள்.

“அடி போடி.” அவளை டீலில் விட்டவர், “ஆரி கண்ணா… இன்னைக்கு நீங்க பாட்டி கூட தோட்டத்துக்கு வருவீங்களாம். நான் உங்ககூட விளையாடுவேனாம்.” அவனுடன் பேசியபடியே கனகுவையும் அழைத்துக் கொண்டு தோட்டத்து பக்கம் சென்றார்.

  சிறிது நேரத்தில் இவள் கிளம்பி வர, ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தார் அசோகன்.

“டாட் கிளம்பலாமா?”

“மேடம்.” என்றபடி வந்தான் மணி.

‘என்ன’ என்னும் விதமாக இவள் பார்க்க,

“மேடம் பிரேக் பாஸ்ட்…” இழுக்க,

“வேண்டாம்.” என்று ஒற்றை வார்த்தையில் மறுத்துவிட்டு வெளியே சென்றாள்.

“ஏன்டாம்மா. சாப்ட்டு போ.” அசோகன் கூற,

“நோ டாட்… கேண்டீன்ல பாத்துக்கிறேன்.”

“ஒகேம்மா… எனக்கும் இன்னைக்கு கார்மெண்ட்ஸ்ல வேலை இருக்கு ஆரா. டிரைவரை வர சொல்லவா?” என்றார். ஆரா நேற்று கூறியதை வைத்து,

“நோ டாட். நான் இன்னைக்கு மில்லுக்கு போறேன். நீங்க கார்மெண்ட்ஸ் போங்க.” என்றவள் டிரைவரை அழைக்க,

“நானும் மில் வாரேன்…” என்று மேலும் ஏதோ கூற வரும் முன், அவரது ஃபோன் அழைக்கவே, அதை எடுத்து காதில் வைக்க, அங்கு என்ன கூறப்பட்டதோ, “இதோ வாரேன்.” என்றபடி  டிரைவரை அழைத்து தன் காரை எடுக்க சொல்லி சென்றார்.

‘என்னாச்சு இவருக்கு?’ பர்த்திருந்தவள் தோளை குலுக்கி மில் நோக்கி காரை செலுத்தினாள்.

                                        ***

குடோன் முன் கார் நிற்கும் ஓசை கேட்டு, ‘அசோகன் வந்திருக்கிறார்’ என்று அருண் வெளியே வர, அங்கு இன்றும் ஆராவை பார்த்து அதிர்ந்துப் போனான்.

வெளியே போன வேகத்தில் திரும்பி உள்ளே ஓடி வர, “ஏன்டா பேயை பார்த்தது மாதிரி வார?” என்றான் சைத்தன்.

“பேய்தான்டா வருது.” என்றான் பயந்தபடி,

“பேயா?” இவன் விழிக்க,

“மேடம் வாராங்கடா.” என,

“அப்போ பேய்தான்.” என்றவன் மீண்டும் வேலையை ஆரம்பித்தான்.

உள்ளே வந்தவள் கண்களை சுழல விட, அவளது கண்கள் அவனைத்தான் தேடி சுழன்றது. அவனை கண்டவள் அவன் அருகே நின்று பேக்கிங் செய்துக் கொண்டிருந்த முதியவரை நோக்கி சென்றாள்.

நேற்று அவள் கூறிய வேலைகள் முழுவதுமாக முடிக்கப்படாமல், இன்று வந்த பார்சல்களும் பிரிக்கபடாமல் அப்படியே இருந்தன.

“இந்த பார்சல் எங்க போகுது?” என்று கேட்டாள் அந்த பெரியவரிடம்.

 அவர் பேந்த பேந்த விழித்தார். அட்ரெஸ் ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்க, அவர் தெரியாமல் விழித்தார்.

“மேடம்… அந்த பார்சல் எல்லாம் குஜராத் போகுது மேடம்.” என்றான் பணிவாய்.

திரும்பி அவனை பார்த்தவள், “நீ என்ன அவனுக்கு வாயா? அவன் பதில் சொல்லமாட்டானா?”

“மேடம் அவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது மேடம்.”

“ஏன்? துரை அதை வாயை திறந்து சொல்லமாட்டானா?”

“அவர் சொல்லமாட்டார் விடுங்க, உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதா மேடம்?”

அவனை பார்த்து புருவத்தை உயர்த்தி யோசனையாய் பார்த்தாள் ஆரா.

“நான்தான் இங்க மேனேஜர் மேடம். நீங்க என்கிட்டதான் கேட்கணும்.” என்றவன் அந்த பார்சலில் எழுதி இருந்த அட்ரஸ் காட்டி, “பெருசாதானே எழுதியிருக்கேன். இது கூடவா உங்க கண்ணுக்கு தெரியல?” என்றான் நக்கல் குரலில்,

‘ஏன்டா இப்படி வாயை குடுத்து மாட்டிக்கிற? இன்னைக்கு என்ன நடக்கப் போகுதோ.’ என்ற கவலையில் பார்த்திருந்தான் அருண்.

அவன் நக்கல் குரலில் கூறியது, ஆராவுக்கு கோபத்தை உண்டு பண்ண, “இடியட்… யாரை பார்த்து என்ன சொல்லுற?” சைத்தன் கன்னத்தை நோக்கி இவள் கையை நீட்ட,

அதை தடுத்து பிடித்தவன், “யாருடி இடியட். யார் கிட்ட என்ன பேசணும்னு ஒரு அறிவில்ல. உன் அப்பா வயசுல இருக்க மனுஷனை போய் அவன் இவன்னு சொல்லுற?”  என்றான் கடுமையாக,

“யார் கையை யாருடா பிடிக்கிறது. ராஸ்கல்…” என்றபடி கையை அவனிடம் இருந்து உருவ பார்க்க,

அவன், அவளது கையை இறுக்க, அத்தனை பேரின் முன் அவனது செயல் அவளுக்கு அவமானத்தையும், அதீத கோபத்தையும் கொடுக்க, மற்றொரு கையால் அவன் ஷர்ட் காலரை பிடித்தாள்.

ஷர்ட் காலரை பிடித்த கையை, தன்னில் இருந்து பிரித்து, முரட்டு தனமாக அங்கிருந்த பார்சல் மேல் அவளோடு சாய்ந்தான் சைத்தன்.

இவனது செயலை அத்தனை பேரும் பார்த்திருக்க, மிக மிக அவமானமாக உணர்ந்தாள் ஆராதனா. அந்த நேரம் அவனை கொல்லும் வெறி அவளுள் எழுந்தது.