ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 4

“டேய்! மச்சான் என்ன பண்ணுறடா?” வேகமாக அவனை நோக்கி வந்த அருண், அவளிடம் இருந்து அவனை பிரித்தான்.

“என்ன பேச்சு பேசுறாடா இவ?” என்றான் கோபமாய்.

“டேய்… வேலை செய்யுற உனக்கே இவ்வளவு இருக்கும் போது, சம்பளம் குடுக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்.”

“என்னடி இருக்கும்… சொல்லு என்ன இருக்கும்?” மேலும் அவளை நோக்கி வர,

“டேய்… டேய்… வினையை இழுக்காதடா.” பதறிய அருண் அவனை இழுத்துக் கொண்டு நடந்தான்.

“பிளடி பெக்கர்ஸ்.” அவர்களை பார்த்து முணுமுணுத்தவள், அங்கு வேடிக்கைப் பார்த்தவர்களைப் பார்த்து, “இங்க என்ன பார்வை வேண்டி இருக்கு. ஒழுங்கா வேலையை பாருங்க.” அவர்களிடம் கத்திவிட்டு அறைக்கு சென்றாள்.

‘அவனை ஏதாவது செய்யணும்.’ தீவிரமாக யோசித்தபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்திருந்தாள் ஆரா.

“வைக்கிறேன்டா ஆப்பு.” முடிவெடுத்தவள், காரில் ஏறி ஆவேசத்துடன் கார்மெண்ட்ஸ் நோக்கி சென்றாள்.

                                         ***

அசோகனின் கார் உள்ளே நுழையவும், வாட்ச்மேன் கேட் திறக்க, “என்னை தேடி யாராவது வந்தாங்களா?” என்று கேட்டார்.

“எஸ் சார். ரெண்டு பேர் வந்திருக்காங்க. உங்களுக்காகதான் வெயிட் பண்ணுறாங்க.”

“ஓகே…” என்றவர் வேகமாய் உள்ளே நுழைந்தார்.

“உள்ளே வாங்க.” என்றபடி அவர்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தார் அசோகன்.

“அந்த பொண்ணு எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?”

“சார் நீங்க ஏதோ தப்பா சொல்லிருக்கீங்கன்னு நினைக்கிறேன். தம்பி காலேஜ்ல நீங்க சொன்ன பேர்ல யாருமே படிக்கல.”

“என்னைய்யா சொல்லுற நீ!” அப்பட்டமான அதிர்ச்சி அவரிடம்.

“ஆமா சார். அந்த காலேஜ்ல சைதன்யான்னு யாருமே படிக்கல.”

“சரி. நீங்க போகலாம்.” என்றவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“அவன் கூட படிக்கிற பொண்ணுன்னு அன்னைக்கு சொன்னானே? இந்த தன்யா அந்த சைதன்யா இல்லையா? அப்போ அந்த ஆக்சிடென்ட் நடந்தப்போ இவன் கூட இருந்தது யாரு? சைதன்யான்னு அவன் சொன்னானே? அவ இல்லையா? அவ இல்லன்னா இந்த தன்யா யாரு? ஆரியனுக்கு எப்படி பழக்கம்? அவன் லைஃப்ல என்னதான் நடந்தது?” தலையை பிய்க்க ஆரம்பித்தார் அசோகன்.

“சார்.” மேனேஜர் கதவை தட்டவே,

“எஸ். கம்மிங்” என்றவர், அதன் பிறகு வேலைகளோடு ஒன்றிப் போனார்.

அடுத்த சில நிமிடங்களில், புயல் வேகத்தில் கார்மெண்ட்ஸ் உள்ளே நுழைந்த ஆராவைக் கண்டு அதிர்ந்துதான் போனார் அசோகன்.

அவளது முகத்தைப் பார்த்து, “ஆரா என்னாச்சுடா?” என்றார் பதட்டத்துடன், அவளது முகம் கறுத்து, சிறுத்து போய் இருந்தது.

“அவனை விடக் கூடாது டாடி.” கண் மண் தெரியாத கோபம் அவள் முகத்தில் தெறிக்க, புரியாமல் விழித்தார் அவர்.

“யாரைடா சொல்லுற?” அவருக்கு புரியவில்லை.

“எல்லாம் அவனைதான் டாட். மில்லில் நேத்து என்கிட்ட பிரச்சனை பண்ணினானே அவன்தான்.”

 “யாரு சைத்தனையா சொல்லுற?”

“எஸ் டாட். அந்த சைத்தான்தான். அவன் நடவடிக்கையே சரி இல்ல. அவன் இங்க வேலைக்கு வந்த மாதிரி தெரியவே இல்லை?”

“என்ன சொல்லுற ஆரா?”

“எஸ் டாட். அவன் நடை உடை பாவனை எல்லாம் பார்த்தீங்களா? ரொம்பத் திமிர் தெரியுது. மேனேஜர் போஸ்டிங் குடுத்திருக்கீங்க அவன் டீடெயில் ஒன்னுமே இங்க இல்லையே?” என்றாள் யோசனையுடன்.

‘அவனை எங்கோ பார்த்திருக்கிறோம்.’ என்று மனதில் தோன்றிய அன்றே அவனைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆபிஸ் ஃபைல் தேடிப் பார்க்க கிடைக்கவில்லை.

“அவனுக்கு அட்ரெஸ் ஏதும் இல்லை ஆரா.”

“வாட்! அட்ரஸ் இல்லையா? அட்ரெஸ் இல்லாதவனுக்கா அவ்ளோ பெரிய போஸ்டிங் குடுத்திருக்கீங்க!” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ஆமா ஆரா. அவனுக்கு யாருமே இல்லன்னு சொன்னான். இங்க பேக்கிங் செக்ஷன்தான் வேலைக்கு வந்தான். எல்லா வேலையும் நல்லா செய்வான். ரொம்ப நல்ல பையன். நான்தான் அவனை அருண் கூட தங்க வச்சிருக்கேன்.

ஒன்னு தெரியுமா? அவனுக்கு நல்ல திறமை இருக்கு. பேக்கிங் செக்ஷன்ல வேலை பாக்குற எல்லாரும் அவன் சொல் நல்லா கேட்பாங்க. ஒரு நிர்வாகத்தையே நிர்வகிக்கிற திறமை அவன்கிட்ட இருக்கு ஆரா. அதை ஏன் வேஸ்ட் பண்ணுவானேன். அதுதான் அவனை ஒரு மாசத்தில மேனேஜர் ஆக்கிட்டேன். பழைய மேனேஜர் மாதிரி இவன் கிடையாது. இவன் நல்ல உழைப்பாளி.” என்றார் 

“ம்ம்ம்…” என்று இழுத்தவள் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

“என்னாச்சுடா?”

“நீங்க சொல்லுறது ரொம்ப இடிக்குது டாட். இவனை பார்க்க எனக்கு சரியாப் படல. அவன் என்னையே அவமானப்படுத்திட்டான். ஒருநாள் இல்லை டாட். அவனை பாக்குற நேரம் எல்லாம் அவன் என்னை அவமானப்படுத்துறான். அவன் பார்வையே சரியில்ல. அவன் நடவடிக்கையும் சரி இல்ல.

அவன் ஏதோ திட்டதோடதான் இங்க கால் வச்சிருக்கான். ஏதோ ஒரு பலமான திட்டம் அவன் வச்சிருக்கான். நாளைக்கே அவனை கொன்னுடனும் டாட். என்னையே அசிங்கபடுத்துறான் அவனை உயிரோடவே வைக்கக்கூடாது.” கண்கள் சிவக்க கூறியவளைக் கண்டு அசோகனே அஞ்சிப் போனார்.

மகள் மிகவும் கோபமாக இருக்கிறாள் எனவும், அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு, “சரிடா. நீ சொல்லி நான் செய்யாம இருப்பேனா என்னோட லக்கி சார்மே நீதான்டா. ஆனா, அவன் ரொம்ப நல்ல பையன்மா. நான் கண்டிச்சு வைக்கிறேன். அவன் இனி உன் பக்கம் வரமாட்டான்.”

அவரை முறைத்தவள், “நான் என்ன சொல்லுறேன் நீங்க என்ன சொல்லுறீங்க டாட். அவன் நம்ம கம்பெனிக்கே ஆபத்துன்னு சொல்லுறேன். அவன் நோக்கம் இங்க வேலை பாக்குறது கிடையாது. அது அவனோட ஒவ்வொரு செயல்லையும் நல்லாவே தெரியுது. அவன் நோக்கமே வேற. அதுதான் என்னதுன்னு தெரியல. அவனை இனி நான் இங்க பார்க்க கூடாது.” 

“சரிமா. அவனை நான் நாளைக்கே வேலையை விட்டு தூக்குறேன்.” என்றார் சாதரணமாய்.

“டாடி!” கோபமாய் கத்த,

“என்னாச்சுடா?” என்றார் மீண்டும். அவள் ஏதோ கோபத்தில் கூறுகிறாள் என்றே இத்தனை நேரம் எண்ணிக்கொண்டிருந்தார் அசோகன்.

“அவன் உயிரோட இருந்தா நம்ம மில், கார்மெண்ட்ஸ் எல்லாம் இழுத்து மூடிட்டு போகணும். ரெடியா இருக்கீங்களா?” என்றாள் படப்படப்புடன்.

அப்பொழுதான் அவள் கூறுவது அறிவில் எட்ட, “என்ன சொல்லுற ஆரா?” என்றார் அதிர்ச்சியுடன்.

“எஸ் டாட். அவன்கிட்ட எதுவுமே சரி இல்ல. நல்லா வேலை செய்யுறான். அதே சமயம் அங்க வேலை செய்யுற ஆட்களை எல்லாம் அவன் கண்ட்ரோல்ல வச்சிருக்கான். அங்க யார் வேலைக்காரன், யார் முதலாளின்னே தெரியல. இன்னைக்கு அந்த கிழட்டு பிச்சைக்கார நாயிக்காக என்னையே மிரட்டுறான். எல்லாம் நீங்க குடுத்த… குடுக்கிற இடம்.” என்றாள் கோபத்துடன்,

இதழ் பிரியாமல் மெல்ல சிரித்தவர், மகளை அழைத்து அருகில் அமரவைத்து, “எல்லாம் சரிதான் ஆரா. எப்பவும் தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கணும் கண்ணு.  அதைதான் டாடி செய்துகிட்டு இருக்கேன். நம்மளை ஒருத்தன் எதிர்த்து நின்னா நாமளும் அவனுக்கு சமமா எதிர்த்து நிக்கக் கூடாது. அப்புறம் நமக்கும், அவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் சொல்லு?”

“டாட் இது நீங்க பாடம் நடத்துற நேரம் இல்லை. அவனை ஏதாவது செய்யுங்க.”

“இருடா… கோபப்படாத… நீ இருக்கும் உயரத்துக்கு நிதானமாத்தான் யோசிக்கணும் கண்ணு. அவனை அடிக்கலாம். நீ நான் சொல்லுறதை நிதானமாக் கேளு,

ஏதாவது ஒரு சந்தர்பத்துல யார் அடிச்சான்னே தெரியாத மாதிரி அடிச்சு தூக்கணும்டா. அப்போதான் நமக்கு பிரச்சனை வராது. நம்ம மேல பழியும் விழாது. அதை விட்டு, அவனுக்கு சரி சமமா நின்னு சண்டை போடுறது நல்லாவா இருக்குது. இதைதான் நேத்தே உன்கிட்ட சொல்ல வந்தேன் எங்க கேட்ட நீ.” என்றவர்,

 “சரி அதெல்லாம் விடு. எல்லாம் டாடி பாத்துக்கிறேன். யார் எப்படி அடிச்சான்னே தெரியாத மாதிரி அடிச்சு தூக்கிடலாம்.” சர்வ சாதரணமாக கூறினார் அசோகன்.

“வாவ்! டாட் உங்களை என்னமோ நினைச்சேன். செம நீங்க. ரொம்ப சரியா சொன்னீங்க. அடிக்கிறேன்… அவனை நான் அடிக்கிறேன்.” என்றவள்,

“டாட்… இதெல்லாம் எங்க கத்துகிட்டீங்க?”

“இதெல்லாம் கத்துக்கவா முடியும் எல்லாம் அனுபவம்தான். இவ்ளோ பெருசா தொழில் நடத்துறேன். இதெல்லாம் தெரியலன்னா எப்படி?” என்றவர் முகத்தில் மர்ம புன்னகை.

“நீங்க ரொம்ப கரெக்ட் டாட்.” மகள் சர்டிஃபிகேட் குடுக்க, பெரிய அவார்ட் வாங்கிய கர்வ புன்னகை அவர் முகத்தில்.

“ஓகே டாட். நான் கிளம்புறேன்.” என்றபடி மகள் எழ,

 “எங்கேடா வீட்டுக்கா?”

“நோ டாட்… மில்லுக்குதான் போறேன். அவனை அடிக்கணும் டாட். அவனை முழுக்க நான் ஃபாலோ பண்ணனும்.” என்றவள் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

‘முதல்ல அந்த பொண்ணு கதையை பாப்போம், பிறகு இவனை கவனிக்கலாம்.’ என்று அசோகன் இவனை டீலில் விட, பல அடிகளை முன்னே எடுத்து வைத்தான் சைத்தன் உமேரா!

                                       ***

மில் நோக்கி சென்றவளை ஃபோன் அழைக்கவே, காரை ஓரத்தில் நிறுத்தி அழைப்பை ஏற்றாள்.

“சிங்காரீ…” ஆண்டாள் குரல்தான் அழுகையுடன் ஒலித்தது.

“என்னாச்சு பாட்டி!” அவரின் குரல் வித்தியாசம் உணர்ந்து கேட்டாள்.

“நம்ம… ஆ… ஆரி கீழ விழுந்து மயங்கி கிடக்கான்டி.”

“கீழ விழுந்துட்டானா? எப்போ எப்படி?” படப்படப்புடன் கேட்டவள் காரை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி திருப்பினாள்.

“நல்லாதான்டி இருந்தான். திடீர்னு, ‘தன்யா… தன்யான்னு…’ அவ பேரை சொல்லி சேர்ல இருந்து கீழ விழுந்து மயங்கிட்டான். எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல, அசோகனுக்கு போன் பண்ணினேன் அவன் எடுக்கவே இல்ல. நீ சீக்கிரம் வீட்டுக்கு வரியா சிங்காரி.” அவர் குரல் மிகவும் கலங்கி இருந்தது.

“இதோ வந்துட்டே இருக்கேன் பாட்டி. டாக்டர் அங்கிளுக்கு கால் பண்ணி வர சொல்லுறேன்.” என்றவள் அழைப்பை நிறுத்தி, டாக்டருக்கு அழைத்து விபரத்தை கூறி வீட்டை நோக்கி வேகமாய் சென்றாள்..

இப்பொழுது சைத்தன் நினைவு அவளை விட்டு விலகியிருக்க, ஆரியன் அந்த இடத்தை பிடித்துக் கொண்டான்.

‘சீக்கிரம் ஆரியன் சரியாகணும்.’ என்ற வேண்டுதல் மலையளவு அவள் மனதில் இருந்தது.

 வேகவேகமாய் காரை செலுத்தி வீட்டுக்கு வர, “பாட்டி தன்யா அவ வீட்டுக்கு போய்ட்ட, நான் கூப்ட கூப்ட வரவேயில்லை தெரியுமா.” ஆரியன் பாட்டியிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.

“உஃப்” ஆசுவாச மூச்சு விட்டவள், மெதுவாக வீட்டின் உள்ளே வந்தாள்.

“சிங்காரி வந்துட்டியா?” என்றபடி அவளை நோக்கி வந்தார் ஆண்டாள்.

“அங்கிள் என்ன சொன்னார்?”

“ஒன்னும் இல்லை. இவனுக்கு சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லிருக்கார். அடிக்கடி இப்படி வெளியே கூட்டிட்டு போக சொன்னார். இனி தூங்க மாத்திரை பகல் நேரம் குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டார்.”

“ம்ம்… சரி.” என்றவள் ஆரியன் அருகில் வந்தமர்ந்தாள்.

“நீ யாரு?” என்றான் முதல் முறையாக அவளைப் பார்த்து.

“அண்ணா!” என்றாள் ஆச்சரியமாக,

அவள் அண்ணா என்றதை கவனிக்காமல், “தன்யா என்கிட்ட சண்டை போட்டுட்டு போயிட்டா. நீ அவளை கூட்டிட்டு வாறியா?” என்றான் அவள் முகத்தை பாவமாய் பார்த்து.

அவள் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய் தெரிந்தது. ‘யார் என்று கேட்டதும் அவனுக்கு நினைவு திரும்புகிறதோ?’ என்ற சந்தோசம் மனதில் எழ, அவன் அடுத்து கூறியதில் அப்படியே சுருங்கிப் போனது.

“அவ வீடு எங்க இருக்கு சொல்லு, நான் கூட்டிட்டு வாரேன்.” என்றாள் அவளை கண்டுப்பிடிக்கும் ஆர்வத்துடன்.

“அது… அது… அங்க ஒரு பெரிய வீடு, அது பக்கத்துல…” நிறுத்தியவன், தலையை சொரிந்துக் கொண்டு, “ஆங்… அங்க ஒரு ஐஸ் கிரீம் கடை இருக்கும்.” என்றவன், அப்பொழுதுதான் நினைவு வந்தவன் போல், “பசிக்குது.” என்றான் வயிற்றை பிடித்துக் கொண்டு.

‘அவளை பற்றிதான் அவன் கூற வருகிறான்.’ என்று ஆர்வமாய் அவள் முகத்தை பார்த்திருந்தவள், அவனது கடைசி வாக்கியத்தில், சமையல் அறையை நோக்கிப் பார்த்தாள்.

“எல்லாம் ரெடியா இருக்கு மேடம்.” என்றபடி டேபிள் மேல் எல்லாம் அடுக்கி வைத்தார் மணி.

மதிய விருந்தை மூவரும் சேர்ந்து உண்ண, ‘எங்கிருக்கிறாள் அவள்?’ என்ற எண்ணம் மனதில் ஓட, ஆரியனையே பார்த்திருந்தாள் ஆரா.

“என்ன சிங்காரி அவனையே பாக்குற?” அவளது யோசனையான முகத்தைப் பார்த்து கேட்டார் ஆண்டாள்.

“ஏன் பாட்டி… முன்னாடி எப்பவாது அண்ணன் அந்த தன்யா பத்தி உன்கிட்ட சொல்லிருக்கானா?”

“இல்லையே சிங்காரி. உன்கிட்ட சொல்லலியா?”

“இல்ல பாட்டி அண்ணன் ஃபோன் பண்ணும் நேரம்லாம் என்னை பத்தி மட்டும்தான் விசாரிக்கும். அவனை பத்தி ஒன்னுமே சொல்லல?”

“காலேசுக்கு போவான், வருவான். அசோகன் மில்லுக்கு கூப்ட்டா கூட போகமாட்டன். வீட்டிலையேதான் இருப்பான்.” அவர் கூறவே,

யோசனையாக தலையை ஆட்டிக் கொண்டாள் ஆரா.

இவர்கள் பேசியது எதையும் காதில் வாங்காமல், தன் தட்டில் இருந்த உணவை உண்டுக் கொண்டிருந்தான் ஆரியன்.

                                     ***

“நீ ஏன் மச்சான் அவளை பார்த்தா மட்டும் அப்படி நடந்துக்கிற?” கேண்டீனில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சைத்தனை பார்த்துக் கேட்டான் அருண்.

“எவளை பார்த்து எப்படிடா நடக்குறேன்?” சாப்பாட்டை வாயில் வைத்தபடி கேட்டான் சைத்தன்.

“ஆரா மேடத்தை பார்த்து.”

“அவளா? அவளை பார்த்து இப்படி நடக்கலன்னாதான் ஆச்சரியம். பொண்ணாடா அது… பேய்…” என்றான் பல்லை கடித்துக் கொண்டு.

“இல்ல… நீ வர வர சரியே இல்ல. இரண்டு மாசம் முன்னாடி இருந்த உனக்கும் இப்போ இருக்க உனக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. உன் பேச்சு தொனி எல்லாம் மாறிட்டு. அதிலும் மேடத்தை பார்த்த நாளில் இருந்து நீ நீயாவே இல்லை.”

“ஆமாடா, அந்த பேயை பார்த்துட்டேன்தானே, அது பிடிச்சு ஆட்டுது. போவியா.” எழுந்து கைகழுவ சென்றான் சைத்தன்.

“பாக்குறேன்டா… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடுறேன்னு.” கூறியவன், கையை கழுவி அவன் பின்னே எழுந்து ஓடினான்.

“உன்னை பார்க்கவே மர்மமா இருக்குதுடா.”

“ஆமாடா. நான் மர்ம தேசத்து தலைவன். வந்துட்டான் பாரு. மர்மமா இருக்குது தர்மமா இருக்குதுன்னு. சீக்கிரம் பேக்கிங் வேலையை பார்க்கலாமா. இல்லன்னா நாளைக்கும் பேய் வந்து ஒரு ஆட்டம் போடும். பலிகாடா நீ மாட்டினாலும் மாட்டுவ. எப்படி வசதி?” ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க,

அதற்கு மேல் அவன் பேசுவானா என்ன? வேகமாய் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

‘சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போகணும்? இவனுக்கு வந்த சந்தேகம் வேற யாருக்கும் வரக் கூடாது.’ என்ற எண்ணம் சைத்தன் மனதில் தோன்ற, அடுத்தடுத்த திட்டத்தை செயல்படுத்த எண்ணினான்.   

எப்பொழுதும் போல் மாலை இருவரும் வீட்டை நோக்கி பைக்கில் செல்ல, அருகில் ஒரு சூப்பர் மார்கெட் வரவும்,

“டேய் அருண் வண்டியை நிறுத்து.” என்றான் சைத்தன்.

“எதுக்குடா.?”

“நிறுத்துடா. எனக்கு கொஞ்சம் பொருள் வாங்க வேண்டி இருக்குது. நீ போ நான் வாங்கிட்டு வீட்டுக்கு வாரேன்.”

“இல்ல. நானும் உன் கூடத்தான் வருவேன்.” என்று வண்டியை நிறுத்தினான் அருண்.

“டேய். நீ போ நான் வாரேன்?”

“இல்ல… நான் உன் கூடவேதான் இருப்பேன்.” அவன் கையை பிடித்துக் கொண்டான் அருண்.

“என்டா இது. விட்டுட்டு போற லவ்வர் மாதிரி கையை பிடிக்கிற?”

“ஆமா. நீ என்னை ஏமாத்திட்டு எங்கையாவது போய்டுவ.”

“ஆமா. உன்னை ஏமாத்திட்டு விட்டுட்டு போறேன். அடச்சீ கையை எடுடா.”

‘மாட்டேன்.’ என தலையசைத்தவனை,  “உன்னை…” தன்னைத்தானே தலையில் அடித்து, அவனையும் அழைத்துக் கொண்டு கடைக்குள் நுழைந்தான்.

எப்பொழுதும் போல் ஞாயிறு மட்டும் சமைக்க சில பொருட்களை வாங்கியவன் வெளியே வர,

அருகில் சைக்கிள் கடையை பார்த்தவன் அங்கு நுழைந்தான்.

“டேய் இங்க எதுக்குடா?” அருண் கேட்கவே,

“நீ அடிக்கடி எங்கையாவது போற,  நான் மில்லுக்கு பஸ்ல போக வேண்டி இருக்குது. அதுதான் என் வசதிக்கேத்த சைக்கிள். கொஞ்ச நாள் போனதும் லோன் போட்டு ஒரு பைக் வாங்கிக்கிறேன். இப்போ இதை வாங்கிக்கிறேன்.” என்றவன் சைக்கிளை வாங்கி, அருணை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அன்று போல் இன்றும், அருண் உறங்கியதும் வீட்டை விட்டு வெளியே வந்த சைத்தன், அதே சூப்பர் மார்கெட் சென்று, சில நாட்களுக்கு தேவையான நூடுல்ஸ், பிரெட், பிஸ்கட், காஃபி பொடி என்று அத்தியாவசிய சில பொருட்களை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தவன் கையில் சைக்கிள் சீரான வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது.

கோவை – ஈரோடு ரோட்டின் இடையில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலை கண்ணுக்கு தெரிய ரோட்டை விட்டு கீழே சைக்கிளை செலுத்தினான். அந்த கரடு முரடான பாதையில் மிகவும் கஷ்டப்பட்டு சென்றது அந்த சைக்கிள்.

அதற்கு மேல் சைக்கிளில் செல்ல முடியாததால், சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு, சைக்கிளில் இருந்த பையை தோளில் சுமந்துக் கொண்டு நடந்தான்.

வெகு தூரம் சென்ற பின், மலை குகை தெரிய உள்ளே சென்று அவள் புடவைக்கு அருகே கொண்டு வந்த பையை வைத்தவன், எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தான்.

காட்டு விலங்குகளின் சத்தம் அதிகமாக கேட்கவே, அந்த விலங்குகள் மனித வாடைக்கு குகை பக்கம் வராமல் இருக்க சிறிது தூரம் சென்று அங்கிருந்த பச்சை இலைகளை பறித்து வந்து குகையை சுற்றிப் பரத்தினான்.

குகைக்கு சிறிது தூரத்தில் அருவி ஒன்று ஓட, ‘இங்கு சத்தம் போட்டாலும் யாருக்கும் கேட்காது.’ என்பதை உறுதி படுத்திக்கொண்டு மீண்டும் சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி சென்றான்.