ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 5

“டேய் அருண்… எழுந்திருடா.” நூறாவது முறையாக அவனை தட்டி எழுப்பினான் சைத்தன்.

‘நேத்து டோஸ் ஓவரா குடுத்திட்டனோ?’ என்ற யோசனை மனதில் ஓடியது. அன்று வெளியில் போனதை அறிந்து அருண் கேட்கவும், இன்று முன்னெச்சரிக்கையாக அவன் குடிக்கும் பாலில் ஒரு மாத்திரையை போட்டு அவனை குடிக்க வைத்து தூங்க வைத்திருந்தான்.

அருண் நன்றாக தூங்கிய பின், அவன் வேலையைப் பார்க்க சென்றிருந்தான்.

பழக்கமில்லாத மாத்திரை, அருணை அதிக நேரம் தூங்க வைத்திருந்தது. 

‘இவன் இப்படியே இருந்தா சரி வரமாட்டான். லேட்டா மில் போனா அங்க மோகினி பேய் ஆட்டம் ஆடுவா.’ அவள் ஆடுவது போன்ற காட்சியும் மனதில் விரிய, தலையை உலுக்கியவன், ஆபத்துக்கு பாவமில்லை என்றெண்ணி, கப்பில் தண்ணீரை எடுத்து வந்து அருண் முகத்தில் ஊற்றினான்.

“அய்யய்யோ மழை!” அலறிக் கொண்டு எழுந்தான் அருண்.

“அடேய் எருமை. உனக்கு மட்டும் வீட்டுக்குள்ள மழை வருதோ?” இவன் முறைக்க,

முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடி சைத்தனை முறைத்தான் அருண்.

“என்ன முறைப்பு இங்க… போ போய் முகத்துக்கு மட்டும் சோப்பு போட்டு கழுவி கிளம்பி வா.” என்று அங்கிருந்த டவலை எடுத்து அவனை நோக்கி வீசினான்.

 “நீ மட்டும் குளிச்சு கிளம்புவ. நான் குளிக்க வேண்டாமா?”

“குளிக்கலன்னா உன்னை யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. உன்னை வாசம் புடிக்கவும் மாட்டங்க. பேசாம நான் சொன்னதை செய். இல்ல நான் குளிச்சுட்டுதான் வருவேன்னு நின்னா போய்க்கோ. எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. ஏற்கனவே டைம் ஆகிட்டு.

இன்னைக்கு புதன் கிழமை கேண்டீன்ல பொங்கல் போடுவாங்க, வேணும்னா கிளம்பி வா. இல்லையா குளிச்சு சீவி சிங்காரிசுட்டு அங்க வந்து பானை சட்டியை கழுவி கவுத்து எனக்கென்ன வந்தது.” என்று கூறி சைக்கிளை எடுத்து சென்றே விட்டான்.

“இவன் வாங்கினதும் வாங்கினான் ஒரு சைக்கிளை ரொம்ப ஓவரா பண்ணுறான்… ஹும்.” முகத்தை சுழித்தவன், தன் முழங்கையை மூக்கின் அருகே கொண்டு வந்து முகர்ந்துப் பார்த்தான்.

“ம்ம்ம்… நல்லா வாசமாதான் இருக்கேன்.” என்று முகத்தை துடைத்துக் கொண்டு வேறு துணியை அணிந்து பைக் எடுத்து கிளம்பி விட்டான் பொங்கல் சாப்பிட இல்லை வேலை செய்ய.

                                        ***

காலையில் எல்லாருக்கும் முன்பாகவே மில் வந்து விட்டிருந்தாள் ஆரா. இப்பொழுது அவளது மொத்த கவனமும் சைத்தன்மேல்தான். இன்னும் அவன் வரவில்லை அவனுக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

கண்கள் மில் வாசலையேத்தான் பார்த்திருந்தது.

அருண் வந்த பின்னும் சைத்தன் வந்தபாடில்லை. ‘இவன் எங்க போனான்?’ என்ற யோசனையில் அருண் இருக்க,

‘இன்னும் அவன் வரவில்லையா? வேலையை விட்டு போய்ட்டானா? இல்ல அப்பா தூக்கிட்டாங்களா?’ இப்படியான யோசனையில் ஆரா சுற்றிக் கொண்டிருந்தாள்.

மணியைப் பார்க்க நேரம் பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ‘இன்னும் காணுமே?’ என்று மனம் முழுவதும் யோசனையில் இருக்க, கண்கள் வாசலையும், அவன் வரும் பாதையையும் பார்த்திருந்தது.

பத்து மணியாக மூன்று நிமிடங்களுக்கு முன் மில் வந்து சேர்ந்தான் சைத்தன்.

சைக்கிளை நிறுத்தி உள்ளே வரவும் பிடித்துக்கொண்டான் அருண்.

“இவ்ளோ நேரம் எங்கடா போயிட்டு வார?”

“எங்கையும் போகலடா வர வழில சின்ன ஆக்ஸிடென்ட். அதை கிளியர் பண்ணிட்டு வரதுக்குள்ள லேட் ஆகிட்டு.”

“ஏன்டா என்கிட்ட சொல்லல. நான் வந்திருப்பேன்ல?”

“எப்படி சொல்ல சொல்லுற நான்தான் ஃபோன் வச்சுக்கலியே?”

”உன்னையெல்லாம்…” தலையில் தட்டியவன், “சொல்லு எங்க அடிபட்டிச்சு. ஹாஸ்பிட்டல் போனியா? என்ன சொன்னாங்க?” கேட்டபடி அவனை ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அருண்.

“அடியா! யாருக்குடா?” புரியாமல் கேட்டான் சைத்தன்.

“உனக்குதான்.”

“எனக்கா! டேய்… ஆக்ஸிடெண்ட் எனக்கு இல்லடா. அங்க ஒரு சின்ன பொண்ணுக்கு.” என்று இப்பொழுது இவன் தலையில் அடித்துக்கொண்டான்.

“சுத்தம்… சரி வா. மேடம் இன்னைக்கு முன்னாடியே மில் வந்துட்டாங்க?”

“அவ ஏன்டா இங்க வந்திருக்கா?” யோசனையான முகம் இவனிடம்,

“இதென்னடா கேள்வி. இது அவங்க மில் வருவாங்க போவாங்க.” என்றவன் அவனது யோசனையான முகத்தைப் பார்த்து,“ஊஹும்… நீ சரியே இல்லடா, உன்னை புரிஞ்சிக்கவே முடியல?”

“நீ என் பொண்டாட்டியா என்னை புரிஞ்சுக்க, மேடம் வேற வந்திருக்கு வேலையைப் பார்பியா? அதை விட்டுட்டு புரிஞ்சுக்க முடியல, வச்சிக்க முடியலன்னு புலம்பல் வேற.”

“ஆமாடா… உன்னை புரிஞ்சு வச்சுக்க போறேன்.” என்றான் நீட்டி முழக்கி,

“வச்சிக்க… வச்சிக்க.” கண்ணடிக்க,

“உன்னை வச்சிகிட்டாலும்…” தலையில் அடித்துக் கொண்டு வேலையைப் பார்க்க சென்றான் அருண்.

“ஏன்டா… என்னை வச்சிக்க உனக்கு என்னடா கஷ்டம்?” முறைத்துக் கொண்டான் சைத்தன்.

‘ஆண்டவா இவன் என்ன மேக்… ஒன்னுமே புரியலையே?’ எண்ணியவன் அவனை பார்க்க,

“ஏன்டா… என்னை இப்பவே வச்சிக்க போறியா?” கண்ணடித்தான் சைத்தன்.

‘சரிதான் முத்திடிச்சி.’ ஒரு மார்க்கமாக பார்த்து ஓட்டம் பிடித்தான் அருண்.

அவன் தெறித்து ஓடுவதைக் கண்டு வாய் விட்டு சிரித்தான் சைத்தன். சிரிக்கும் பொழுது மிகவும் அழகாக இருந்தான் அவன் கண்களும் சேர்ந்து சிரிக்க மிகவும் ரசிக்க வைத்தான்.

                                           ***

சைத்தன் சைக்கிளில் வருவதைக் கண்ட ஆராவின் முகம் இகழ்ச்சியாய் வளைந்தது.

“பெக்கர் பாய்.” அவனை நினைத்து ஆரா முகத்தில் புன்னகை தானாக விரிந்தது.

‘இவனுக்காகவா நான் இத்தனை மணிநேரம் காத்திருந்தேன்?’ அவளை நினைத்தே அவளுக்கு கேவலமாக இருந்தது.

‘ச்சை… இவனை தூக்க, என்னமோ பாக்கிஸ்தான் பார்டர்ல குண்டு வைக்கிறதுபோல டாடி கூட சேர்ந்து  திட்டம் வேற தீட்டிருக்கேன்.’ தன்னைதானே தலையில் அடித்துக் கொண்டாள்.

அவனை பெரியாளாக நினைத்ததை நினைக்க நினைக்க ஒரு பக்கம் சிரிப்பு வந்தது. அதே சிரிப்புடன் அவனை நோக்கி விரைந்தாள்.

வந்த பார்சலை பிரித்துக் கொண்டிருந்தவர்களை மேல் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் சைத்தன். கையில் சின்ன குறிப்பேடு வைத்திருந்து ஒவ்வொன்றாகப் பார்த்து குறித்துக் கொண்டிருந்தான்.

‘டொக்… டொக்’ ஹைஹீல்ஸ் சத்தம் அருகில் கேட்க, தலையை திருப்பி பார்த்தான் சைத்தன்.

இவனை பார்த்தபடி நின்றிருந்தாள் ஆரா.

பார்த்தவன், ‘இவளா’ அலட்சியம் தோன்ற, மீண்டும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

அவனது செயல் அவளுக்கு கோபத்தை உண்டாக்க, “ஏய்” சொடக்குப் போட்டு அழைத்தாள்.

இவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை சைத்தன்.

“மிஸ்டர் உன்னைத்தான்.” என்றாள் இப்பொழுது அவனை நெருங்கி,

அவளை நோக்கி திரும்பியவன், அவளை மேலிருந்து கீழாக பார்த்தான். டைட் ஜீன்ஸ் அண்ட் குர்தியில் வந்திருந்தாள்.

“சாரி மேடம். என் பேர் ஏய் இல்ல… மிஸ்டர் சைத்தன்.” என்றான் கம்பீரமாக.

அவனது கம்பீரத்தில் ஒரு நிமிடம் ஆராவே தடுமாறிப் போனாள். ஆனால், அடுத்த நிமிடமே அவன் சைக்கிளில் வந்தது நினைவில் வர, ‘பெக்கர் பாய்… வாய் மட்டும்தான் இருக்குது.’ கேலி புன்னகை முகத்தில் தெறிக்க, அவனை அலட்சியமாகப் பார்த்தாள்.

“என் புடவை எங்க மேன்?” இப்பொழுது அவள் முகத்தில் அப்பட்டமான கேலி.

“சாரி மேடம்.”

“வொய் மேன்?”

“வாஷ் பண்ணும் போது கிழிஞ்சு போச்சு மேடம்.” என்றான் பணிவாய்.

“வாட்!” அலறியவள், “ஒரு புடவையை வாஷ் பண்ண வக்கில்லை நீ எல்லாம் என்ன மேனேஜர்.” அப்பட்டமான கோபம் அவள் குரலில்.

“சாரி மேடம். நான் இங்க புடவை வாஷ் பண்ணுற வேலை பார்க்கல.” கடுப்பாய் பதில் வந்தது அவனிடமிருந்து.

“அப்படியா?” நாடியில் கைவைத்து யோசிப்பது போல் பாவனை செய்தவள், அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தாள்.

அவளை போலவே, அவனும் அவளை மேலிருந்து கீழாக பார்த்து வைத்தான்.

‘ஆளையும் பார்வையும் பாரு’ மனதில் திட்டியவள் அவனை பார்த்து முறைத்தாள்.

‘உனக்கெல்லாம் இதுதான் சரி.’ அவனது பார்வை அவளைத்தான் மொய்த்தது.

“சார் என்ன வேலை பார்க்க இங்க வந்திருக்கீங்க?” கேட்டவளின் பார்வை அவனை கூர்மையாய் அளவிட்டது.

கையில் வைத்திருந்த குறிபேட்டை அருகில் இருந்த பார்சல் மேல் வைத்தவன், அவளை நோக்கி திரும்பி நின்று கைகளை கட்டி அவளைத்தான் பார்த்திருந்தான்.

இப்பொழுது அவன் பார்வையில் ரசனையும் தாண்டி ஏதோ ஒன்று  ஒளிந்திருந்தது!

 அவனது அந்த தோரணை அவளை அசைக்க, கண்களை அந்த குறிப்பேடு பக்கம் திரும்பியவள் அதை கையில் எடுத்தாள்.

“உங்களுக்கு இப்போ என்ன தெரியணும் மேடம்.” வரவழைக்கப்பட்ட பணிவுடன் அவளை பார்த்துக் கேட்டான்.

“நத்திங்” என்றவள் அந்த குறிபேட்டை அதே பார்சல் மேல் வைத்துவிட்டு, அவனை பாராது அப்படியே திரும்பி நடந்தாள்.

கட்டியிருந்த கையை, பாண்ட் பாக்கெட்டில் நுழைத்து, திரும்பி அவளை பார்த்தவன் முகத்தில் புன்சிரிப்பு.

அறைக்கு திரும்பிய ஆராவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை, ‘இவன் ஏதோ பிளான் பண்ணுறான்?’ குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் முகமே யோசனையில் இருந்தது.

அப்படியே பேக்கிங் செக்க்ஷன் பார்க்க, அந்த முதியவரிடம் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான் சைத்தன். 

‘இவன் சிரிப்புக்கு பின்னே என்ன இருக்கு?’ என்ன நினைத்தாலும் அவனை தாண்டி அவளால் சிந்திக்க முடியவில்லை.

இவனை சந்தித்த நாளில் இருந்து, வேறு எங்கும் சிந்தனை செல்லாமல் இவனையே சுற்றி வருவதை கசப்பாக உணர்ந்தாள்.

இன்னொரு மனம், ஆரியனை பற்றி சிந்திக்க கூறியது, ஆனாலும் அவளால் இவனை தாண்டி வர முடியவில்லை.

‘இனி இங்கு வரக்கூடாது. நான் நினைக்கவும் ஒரு லெவல் வேணும். இது அவன்கிட்ட சுத்தமா இல்லை. இவனை இத்தனை நாள் விட்டு வச்சதே தப்பு. இன்னைக்கே அடிச்சு தூக்கணும்.’ முடிவெடுத்தவள், வேலையில் கவனம் செலுத்தினாள்.

மதிய உணவு உண்ண செல்லும் வரை, வேலைகள் அவளை சூழ்ந்துக் கொண்டது. ஃபோன் அழைக்கவே, அதை கையில் எடுத்தவள் மணியை பார்க்க, மதியம் மூன்றை காட்டியது.

அட்டென் செய்து காதில் வைக்க, “ஆரா?” அந்த பக்கம் அசோகன்தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க டாட்”

“இங்க கார்மெண்ட்ஸ்ல மிஷின் ஸ்ட்ரக் ஆகுது ஆரா. கொஞ்சம் இங்க வரியா?”

“உடனே வாரேன் டாட்.” என்றவள் வெளியே வர, இவளை தாண்டி கேண்டீன் நோக்கி சென்றான் சைத்தன்.

ஒரு யோசனை தோன்ற, மீண்டும் உள்ளே சென்றவள் பேக்கிங் செக்க்ஷன் நுழைந்தாள்.

அங்கு அருண் நின்று பார்த்துக் கொண்டிருக்க, “மிஸ்டர் அருண் கொஞ்சம் இங்க வாங்க.” அழைக்கவே,

“எஸ் மேடம்.” அவளை நோக்கி வந்தான் அருண்.

“மேனேஜரை நான் கூப்பிட்டேன்னு பார்கிங் வர சொல்லு.” என்றவள் வேகமாய் வெளியே சென்றாள்.

‘அவன் சும்மா இருந்தாலும் இந்தம்மா அவனை சும்மா இருக்க விடாது போல.’ எண்ணியவன் சைத்தனை அழைக்க கேண்டீன் நோக்கி சென்றான்.

“மச்சான்” உஷாராக சைத்தன் முன் வந்து நின்று அழைத்தான் அருண்.

“என்னடா?”

“மேடம் உன்னை பார்கிங் வர சொன்னாங்க?”

“என்னையா! எதுக்கு?” கேட்டவன் முகம் இப்பொழுது பெரும் யோசனையில் இருந்தது.

“தெரியல. உன்னை வர சொன்னாங்க?”

“ஓ… சரிடா நான் பாக்குறேன்.” என்றவன் கையை கழுவி பார்கிங் நேக்கி சென்றான்.

  சைத்தன் வருவதை பார்த்தவள், கார் அருகே சென்று நின்றவள் இவனை பாராதது போல் அந்த பக்கமாய் திரும்பி நின்றுக் கொண்டாள்.

“மேடம்…” அவன் அழைக்கவே,

அவனை நோக்கி திரும்பியவள், அவனை நோக்கி கார் சாவியை போட,

அதை கேட்ச் பிடித்தவன், அவளை யோசனையாய் பார்த்தான்.

அவனது யோசனையை கண்டு, “காரை எடு.” என்றவள் காரின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

ஒரு நொடி யோசித்தவன், தோளை குலுக்கி காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

பார்கிங்கில் இருந்து கார் வெளியே வரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

‘அங்கு செல்’ என்று அவளும் கூறவில்லை, ‘எங்கு செல்ல வேண்டும்?’ என்று அவனும் கேட்கவில்லை.

சீரான வேகத்தில் லாகவமாக அவன் கார் ஓட்டுவதையே பார்த்திருந்தாள் ஆரா.

“நீ கார் ஓட்ட எங்க கத்துகிட்ட?” செல்லும் வழியில் அவனிடம் கேட்டாள் அவள்.

அவளை ஒரு நொடி திரும்பி பார்த்தவன், மீண்டும் காரை செலுத்த,

“ரொம்ப அழகா ஓட்டுற. அவ்வளவு சீக்கிரம் இந்த காரை யாராலையும் ஓட்ட முடியாது. என் டிரைவர் மூனு மாசம் இந்த காரை ஓட்ட கத்துக்கிட்டுதான் வந்தான்.” என்றாள் கூடுதல் தகவலாய்.

“ஓ…” என்றவன் மீண்டும் காரை செலுத்த,

“நீ யார்?” என்றாள் இப்பொழுது நேரடியாக,

“நான் உங்க பார்வையில் பெக்கர் பாய் மேடம்.” என்றான் அவள் எப்பொழுதும் கூறுவதை வைத்து.

“குட்.” என்றவள் பார்வையை வெளியே திருப்பினாள்.

“எங்க போகணும் மேடம்?” அவன் கேட்கவே,

“கார்மெண்ட்ஸ் போ” என,

‘எப்படி போகணும்? வழி சொல்லுங்க.’ இப்படி எதுவும் அவளிடம் கேட்கவில்லை அவன். அவளும் கூறவில்லை.

அடுத்த சில நிமிடங்களில் கார்மெண்ட்ஸ் முன் கார் நிற்க,

‘இவன் யார்?’ யோசனையாக அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

‘இவன் வேலை செய்ய வரவில்லை.’ என்ற எண்ணம் மனதில் ஆழ பதிந்தது.

அசோகன் வாசலில் நின்றிருந்தார். “என்ன டாட் இங்க நிக்கிறீங்க மிஷின் பார்க்க யாரும் வரவில்லையா?”

“ரெகுலரா வர பையன் வெளியூர் போயிருக்கானாம். இன்னைக்கு புதுசா ஒரு பையனை அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க. அவன் சொல்லி நேரமாச்சு ஆனா இன்னும் அவன் வரல.”

“என்னாச்சு சார்?” இருவரும் பேசுவதைக் கண்டு ஏதோ சரியில்லை என்றெண்ணி சைத்தன்தான் கேட்டிருந்தான்.

“மிஷின் மக்கர் பண்ணுதுப்பா.”

“நான் வேணா பார்க்கவா சார்?”

“உனக்கு பார்க்கத் தெரியுமா?”

“முயற்சி பண்ணுறேன் சார். மிஷின் எங்க இருக்குன்னு காட்டினா நான் டிரை பண்ணுவேன்.” என்றான்.

ஆரா எதுவும் பேசவில்லை. ஒவ்வொரு நொடியும் இவனை பற்றிய சந்தேகம் வலுப்பெற்றுக் கொண்டே இருந்தது.

அசோகன் முன்னே செல்ல, அவருக்கு பின் சைத்தன் செல்ல, இருவரையும் தொடர்ந்து சென்றாள் ஆரா.

மிஷினை பார்த்தவன், அதை இயக்க கூடிய கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செட்டிங் செக்ஷன் சென்றவன் அடுத்த அரை மணி நேரம் அதற்குள் தலையை விட்டிருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் கம்ப்யூட்டரில் இருந்து தலையை வெளியே எடுத்தவன், மிஷின் அருகில் சென்று அதை இயக்க, மிஷின் தன் வேலையை சரியாக செய்தது.

இப்பொழுது ஆராவின் பார்வை முழுவதும் அவன்மேல் இருந்தது!