ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 6

அந்த மலர் சோலைக்குள் அவனை அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆரா. அவனது கை அவளை தோளோடு அணைத்துப் பிடித்திருந்தது.

அருகில் அருவியின் ஓசை அவள் காதை நிறைக்க, அவனை பார்த்தாள்.

“என்னடா?” அவனது கேள்வியில்,

 “அருவிக்கு போகலாமா?” என்றாள் கண்களில் காதலுடன்.

 “அருவி ரொம்ப ஃபோர்ஷா இருக்குடா… வேண்டாம்.” அவனும் இத்தனை ஃபோர்ஷாக இருக்கும் என நினைக்கவே இல்லை.

அத்தனை ஆசையாக அவளை அழைத்து வந்திருந்தான் அவன். ஆனால் அருவியில் ஓசை அவனையே திகைக்க வைத்திருந்தது. அத்தனை ஃபோர்ஷாக இருந்தது நீரின் வேகம்.

ஆனால், முதல் முறையாக அவள் கண்களில் காதலுடன் கேட்கவும் அவனால் மறுக்க முடியவில்லை.

“நான் உங்களை இப்படி பிடிச்சுகிறேன். போகலாமா?” அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆசையாக கேட்கவும் அவனுக்கு மறுக்க தோன்றவில்லை.

“வா” அவளை கையோடு பிணைத்து அருவி பக்கம் அழைத்து சென்றான்.

அருகே செல்ல செல்ல அந்த அருவியின் சாரல் முகத்தில் மோத, அருவியின் இரைச்சல் பேரிரைச்சலாக காதில் மோதியது.

“அருவிக்கு வெளியே வந்திராதே ஆரா. இந்த இடத்தில அப்படியே நில்லு. வெளிய வந்தா ஃபோர்ஷா வர தண்ணீர் இழுத்துட்டு போய்டும்.” அவளை தன் கைவளைவுக்குள் நிறுத்தி கொண்டு கூறினான்.

அவனின் கையை கெட்டியாக பிடித்தபடி அந்த நீரில் நின்றிருந்தாள். சில்லென தலையில் பயங்கர அழுத்தமாக தண்ணீர் விழ ஒரு நிமிடம் தடுமாறி அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

“வெளிய போகலாமா? உன்னால நிக்க முடியலையா?” அவளின் முகத்தைப் பார்த்து கேட்டான்.

“இல்ல வேணாம். இதுவே நல்லா இருக்கு.” சிறு குழந்தையென கூறியவளை ரசித்துப் பார்த்திருந்தான்.

நீரின் வேகம் அதிகமாக இருக்கவும், ஆட்கள் இல்லாமல் இருக்க இருவரும் ஒரே போல் ஒரே இடத்தில் நின்று சுகமாக குளித்தனர். 

நீரின் வரத்து போக போக அதிகரிக்க, அதன் அழுத்தம் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினாள்.

கண்களை இறுக்க மூடி, ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டு மறுகையால், முகத்தில் விழுந்த நீரை துடைக்க, நீரின் வேகத்தால் அவளால் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அவளை அருகே இழுத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், நகர்ந்து அங்கிருந்த பாறையில் சாய்ந்துக் கொண்டான்.

“ரொம்ப ஃபோர்ஷாக தண்ணி விழுதுல்ல?” அவனிடம் இருந்து பிரிந்து முகத்தை துடைத்தப்படிக் கேட்டாள்.

“ம்ம்ம்… ரொம்ப…” என்றவனின் பார்வை அவள் மேல்.

அவள் கட்டியிருந்த பச்சை நிற புடவை அவள் உடலோடு ஒட்டி சோலையாய் அவனுக்கு காட்சியளித்தது. அவன் பார்வையை எங்கும் திருப்ப முடியாமல் நின்றிருந்தான்.

அவன் பார்வை தன் மேல் விழுவதை உணர்ந்த ஆரா, அவஸ்தையாக நெளிந்தவள், ‘என்ன செய்வது?’ என ஒரு நிமிடம் தடுமாறி அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் அழகு முகத்தை நிமிர்த்திப் பார்த்தான் அவன். அந்த விழிகளின் அழைப்பும் உதடுகளின் மயக்கமும் அவனை கிறங்க வைத்தன.

அவன் மெதுவாக அவள் முகத்தை நோக்கி குனிந்தான். அவள் முகத்தை அசைக்கக் கூட இல்லை. அவனைப் பார்த்த விழிகளை எடுக்கவும் இல்லை. குனிந்த அவன் இதழ்கள் மெல்ல அவள் நெற்றியில் பதிந்தன.

அவன் கைகள் இரண்டும் அவள் இடையை சுற்றிக் கொண்டன. அவள் திமிரவில்லை. அவனும், அவளை இறுக்கமாக அணைக்கவில்லை.

பட்டும் படாமலும், தொட்டு உணராமலும் ஒரு அணைப்பு!

ஏதோ தோன்ற சட்டென்று விலகி நின்றான்.

உடல்கள் உரசியும், உரசாமலும் ஒரு நெருக்கம்!

அவளின் கேள்விப் பார்வைக்கு சிறு புன்னகையை பரிசாக அளித்தான்.

ஆனால், தன் கையை அவள் இடையில் பட்டும் படாமலும் தவழவிட்டு, “நான் ரொம்ப அவசரபட்டுட்டேன்.” மன்னிப்பு கோரும் பாவனையில் கூறினான்.

அவள் உணர்ச்சிகளோடு புரண்டுக் கொண்டிருந்ததால், அவனுக்கு பதில் அளிக்கவில்லை… அவளால் முடியவில்லை. மீண்டும் அவனே பேசினான்.

“நான் யாருன்னு நீ தெரிஞ்சுக்கணும்?”

அவளது கையை, அவனுக்கு மாலையாய் மாற்றியவள், “நீங்க யார்?” என்றாள் கண்கள் சிமிட்டி.

“நான் உன்னோட பரம எதிரி.”

“அப்படியா? என்னை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும்… ஆனால் தெரியாது.”

அவனது பதில் அவளை குழப்பத்திலும் ஆச்சரியப்படுத்தியது. “நான் யாருன்னு தெரியாமலே எனக்கு எதிரியா?” கண்கள் விரியக் கேட்டாள்.

“ஆமா. நான் உனக்கு எதிரிதான்.” என்றவன் அவளை அருகில் இழுத்து, நெற்றியில் ஒற்றை முத்தம் வைத்தான்.

தீண்டிய மேனியும், இறுகிய அணைப்பில் நெற்றி முத்தமும் முகத்தில் சில்லென்ற நீரை வாரி இறைத்ததுப் போல் இருந்தது.

டக்கென்று கண்களை திறந்தாள் ஆராதனா. 

சுற்றும், முற்றும் பார்க்க, அப்பொழுதுதான் உரைத்தது கண்டது கனவு என்று.

எழுந்து அறையின் லைட் போட்டவள், மணியை பார்க்க அது அதிகாலை நான்கு மணியை காட்டியது.

‘அதிகாலை கனவு பலிக்கும்னு பாட்டி சொல்லியிருகாங்களே?’ யோசித்தவள் அருகில் இருந்த நீரை பருகி மீண்டும் படுத்துக் கொண்டாள்.

பல எண்ணம் சிந்தனையில் சுழன்றுக் கொண்டிருந்தது.

‘அவன் யார்? அவனை போல் இருந்ததே? இந்த கனவு எனக்கு என்ன சொல்ல வருது?’ யோசனையோடு படுத்திருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

                                       ***

காலையில் மிகவும் தாமதமாக எழுந்து வந்தாள் ஆரா. முகம் பெரும் யோசனையில் இருந்தது.

“என்ன சிங்காரி ராத்திரி நீ தூங்கவே இல்லையா? கண்ணெல்லாம் சிவந்து போய் இருக்கு?” மாடியில் இருந்து இறங்கியவளை யோசனையாகப் பார்த்துக் கேட்டார்.

அவர் கேட்டதை கவனிக்காமல், அங்கிருந்த ஷோபாவில் பொத்தென வந்து அமர்ந்தாள்.

ஏதோ யோசனையில் வந்து அமர்ந்தவளை, ஆச்சரியமாகப் பார்த்தார் அசோகன்.

“உடம்பு சரியில்லையாடா?” அமைதியாக வந்தமர்ந்தவளை பார்த்துக் கேட்டார் அசோகன்.

அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்.

 அவரின் ஜில்லென்ற கை, அவளுக்கு அந்த முத்தத்தை நினைவுப் படுத்த அதிர்ந்து விழித்தாள்.

“என்னாச்சுடா?”

“நத்திங் டாட்.”

“நான் நேத்து சொன்னதை கொஞ்சம் யோசிடா அசோகா. காலாகாலத்துல இவளை ஒருத்தன் கையில பிடிச்சு குடு. முழியை பாரு பேய் முழி முழிக்கிறா. இதெல்லாம் நல்லதில்லடா சொல்லிட்டேன்.” ஆராவின் முகத்தைப் பார்த்துக் கூறினார் ஆண்டாள்.

  “உன்னால சும்மாவே இருக்க முடியாத கிழவி.” அவரை பார்த்து பல்லை கடித்தாள் ஆரா.

“ஆமாடி நான் சும்மா இருந்தா நீ என்னை விட்டு வைப்பியாக்கும்.”

“உன்னை எல்லாம் மனுஷன் வீட்டில வைப்பானா?”

“ஆரா என்னடா இது. பாட்டியை இப்படி பேசலாமா?”

“வேற எப்படி பேச சொல்லுறீங்க. நான் பேசாம நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என்கிட்ட வந்து வம்பு பண்ணுது. வேணும்னா அதை யார் கையிலையாவது பிடிச்சு குடு எனக்கு நிம்மதியா இருக்கும்.” பல்லைகடித்தாள் ஆரா.

“அடியே என்ன பேச்சு இது? பொம்பளை மாதிரி பேசுடி.”

“நான் பொம்பளைன்னு உன்கிட்ட யார் வந்து சொன்னா?”

“ஐயோ… ஐயோ… என்ன பேச்சு பேசுற நீ. சத்தமா பேசாதடி வெளிய யாருக்காவது கேட்டா எவனும் பொண்ணு கேக்கமாட்டான்.”

“எவனும் கேட்க வேண்டாம். நானே பாத்துப்பேன். இதுக்கு மேல இதை பத்தி பேசுனன்னு வை. பாட்டின்னு கூட பார்க்க மாட்டேன். ரெண்டு காதையும் கடிச்சு துப்பிருவேன்.”

“ஆரா… என்ன பேச்சு இது. உங்க ரெண்டு பேரையும் யாராலையும் திருத்தவும் முடியாது, தடுக்கவும் முடியாது ஆளை விடுங்க.” இடையில் வந்து தடுத்தவர். எழுந்து சென்றுவிட்டார்.

“க்கும்… காதை கடிப்பாளாம்ல கடிடி பாக்குறேன். சிங்காரி ஒருநாள் இருக்குடி உனக்கு. பாட்டின்னு என்னை தேடி வருவல்ல அப்போ வச்சிக்கிறேன் உன்னை.” முகத்தை நீட்டி எழுந்து சென்றார் ஆண்டாள்.

“கிழவி உன்னை வச்சிகிட்டாலும்.” அவருக்கு மேல் முகத்தை சுழித்தாள் ஆரா.

“போடி.” என்றபடி தன் அறைக்குள் நுழைந்தார் ஆண்டாள்.

“கனகு.” அங்கு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தாள் ஆரா.

“மேடம்” தயங்கி தயங்கி வந்து நின்றவளை ஏறிட்டுப் பார்த்தாள் ஆரா.

“ஆரி எங்க?”

“தம்பி ரூம்ல இருக்காங்க?”

“சாப்ட வரலியா?”

“அப்பவே தம்பி சாப்டுட்டாங்க மேடம்”

“என்னை தேடலியா?” அவளின் கேள்விக்கு முழித்தாள் கனகு.

‘தம்பி என்னைக்குதான் மேடத்தை தேடிச்சுது.’ என்ற எண்ணம் மனதில் ஓடியது. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

“என்ன மேடம்?” என்றாள் மீண்டும்.

“ஐ மீன்… தன்யாவை அவன் தேடலியா?”

“இல்ல மேடம் தம்பி இன்னைக்கு யாரையும் தேடல, தூங்கி எழுந்து எப்போவும் போல வெளிய வந்தாங்க. அப்புறம் அவங்களாவே டேபிள்ல உக்காந்தாங்க மணி சாப்பாடு வைக்கவும் சாப்டுட்டு ரூமுக்கு போய்ட்டாங்க.” என்றாள் விளக்கமாய்.

“அவனே சாப்டுட்டு போயிட்டானா?” மீண்டும் கேட்டவள், அவனது அறை நோக்கி சென்றாள்.

“ஆரி” அழைத்தபடியே அவன் அறைக்குள் நுழைந்தாள் ஆரா.

கண்களில் நீர் வழிய, ஜன்னலையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியன்.    

“என்னாச்சுடா ஆரி.” அழுதுக் கொண்டிருந்தவனை உலுக்கினாள் ஆரா.

“அது… அது… தன்யா.” அப்படியே நிறுத்திக் கொண்டான் ஆரியன்.

“தன்யாக்கு என்ன ஆரி?” ஆராவின் கேள்விக்கு, அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தவன்,

“தன்யா காணும்.” என்றான் கைகளை விரித்து.

“சீக்கிரம் தன்யா வருவா.” யோசனையுடன் வெளியே வந்தாள் ஆரா.

செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஆரியன்.

பல வழிகளில் முயற்சித்து பார்த்தும், அந்த தன்யாவை இவளால் கண்டுக் கொள்ள முடியவில்லை. அவளது போட்டோ வைத்து டிடெக்டிவ் நாட, அங்கு அளித்த பதில் அவளுக்கு திருப்திகரமாக இல்லை.

சொல்லப்போனால் சென்னை அட்ரெஸ் தவிர வேறு ஒன்றும் அவள் கைக்கு வரவில்லை. அவள் சென்றுப் பார்க்க பதில் என்னவோ பூஜ்யம்தான். பூட்டிய வீடே வரவேற்க, அப்படியே திரும்பியிருந்தாள்.

அசோகனுக்கு தெரியாமல்தான் இதெல்லாம் செய்திருந்தாள். அவளே நேரில் சென்று விசாரிக்க நொடி ஆகாது, அது அசோகனுக்கு தெரிந்தால் மிகவும் கவலைப்படுவார் என்றே சொல்லாமல் மறைத்துவிட்டாள்.

அவளை பொறுத்தவரை அவளது அப்பா மிகவும் நல்லவர்! எந்த கெடுத்தலும் செய்யாதவர் செய்யத் தெரியாதவர். அதனால்தான் தன்னுடைய பழி வெறியை அவரிடம் இருந்து மறைத்து வருகிறாள். 

இனி தானே களத்தில் இறங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

                                       ***            

சென்னை,

“அம்மாஆஆஆ… நான் ரெடி.” அலறலுடன் மீனா முன் வந்து குதித்தாள் சைதன்யா.

“ஏன்டி இப்படி வந்து குதிக்கிற?” அவளிடம் கூறியபடி மகளை மேலிருந்து கீழாக பார்த்தார் மீனா.

அவரின் இதழ்கள் தானாக புன்னகையில் விரிந்தது. ஒல்லியாக உயரமான உடல் அமைப்பில் மீனாவை அச்சில் வார்த்ததைப் போல் இருந்தவள், கண்களையும், நாசியையும் அப்படியே சைலேந்திரபாபுவை போல் பிறந்திருந்தாள்.

 கணவரின் கண்களை அப்படியே கொண்டு பிறந்த மகளை இப்பொழுதும் ரசித்துப் பார்த்தாள் மீனா.

“யம்மா என்ன சைட் அடிக்கிறியா?” கண்ணடித்தாள் மகள்.

மீனாவின் எண்ணம், பல வருடங்களுக்கு முன் சென்றது.

மீனா பல வருடம் கழித்து உண்டாகியிருந்த நேரம் அது. மனைவியை தங்க தட்டில் வைத்து தாங்கினார் சைலேந்திரபாபு.

அவளிடம் அடிக்கடிக் கூறுவார், “உன்னை போலவே ஒரு மகளை பெத்துகுடுடி மீனா.” என்று,

“எனக்கு உங்களை போலவே ஒரு பையன் வேணும்.” என்றாள் மீனா.

“நான் உன்னை போல வேணும்னு சொன்னதும் மாத்தி சொல்லுறியா நீ.” பொய் கோபம் கொண்டார் பாபு.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு உங்களை போலதான் பையன் வேணும்.” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.

அவளை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தியிருந்தார் அவர். ஆனால் அவர்கள் இருவரும் ஆசைப்பட்டது போலவே இருவரும் கலந்த கலவையாக பொன் மகளை அளித்தான் ஆண்டவன்.

இப்பொழுது மகள் முகத்தை பார்த்து சிரித்தவள், “காலேஜ் கிளம்பிட்டியா தங்கம். வா வந்து சாப்டு.”

“ம்மா… நான் என்ன தங்கமா? யாராச்சும் வந்து உரசிகிட்டு போயிட போறாங்க.”

“வாய்… வாய் என்னடி இது.” அவள் வாயில் அடித்தவள், “பேச்சை பாரு. ஒழுங்கா இருந்து தின்னுடி.” முறைத்தவள் அவளை அமர வைத்து தட்டில் இடியாப்பத்தை எடுத்து வைத்தாள் மீனா.

“சாப்டுறியா குட்டிமா.” என்றபடி வந்தமர்ந்தார் பாபு.

“ப்பா… இப்போதான் அம்மாகிட்ட சொல்லிட்டு இருக்கேன் அதுக்குள்ள நீங்க குட்டிமான்னு வந்து உட்கார்ந்து இருக்கீங்க.” பல்லைகடிக்க,

“நீ எப்பவும் எங்களுக்கு செல்லம், தங்கம், குட்டிமாதான்.” என்றார் சிரிப்புடன்.

“ரொம்ப செல்லம் குடுக்கிறீங்க உங்க பொண்ணுக்கு.” சைதன்யா கூற,

“வாயடிக்காம சாப்டுடி.” அதட்டினாள் மீனா.

“சரிம்மா… இந்தா ஒரு வாய் வாங்கிக்கோ.” எடுத்து மீனாவுக்கு ஊட்டியவள் மீண்டும் சாப்ட ஆரம்பித்தாள்.

“ஆஆ” என்று அமர்ந்திருந்த மீனா கண்கள் பெரும் கலக்கத்தை காட்டியது.

“எதுவும் நினைக்காத மீனா எல்லாம் சரியாகும்.” மீனாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார் பாபு.

மீனாவால் அப்படி இருக்க முடியவில்லை. எப்பொழுதும் அவளையே சுற்றி சுற்றி வருவாள் சைதன்யா. இப்பொழுதோ வீடே களைஇழந்தது போல் இருந்தது.

ஆனாலும், மனதின் ஓரத்தில் சின்ன நம்பிக்கை மகள் தங்களை தேடி வருவாள் என்று.

                                                                    ***   

சைத்தன் வந்த நோக்கம் இன்னும் முடிவடையாமல், நாட்கள் நீண்டுக் கொண்டே இருந்தது. அசோகன் மனதில் இடத்தை பிடித்தாகி விட்டது. ஆனால் ஆரா?

அவளை கண்டால் அவன் தடுமாறுவது என்னமோ உண்மைதான். ஆனால், அந்த தடுமாற்றம் அவனை எங்கு கொண்டு செல்லும் என்பதும் அவன் அறிந்ததே. முயன்று தன்னை அடக்கியவன், வேலையை பார்க்க ஆரம்பித்தான்.  

மிகவும் தாமதமாகத்தான் மில் வந்தாள் ஆரா. வந்தவள் மில்லை சுற்றிப் பார்க்க தூரத்தில் சைத்தன் நின்றுக் கொண்டிருந்தான்.

அவனை பார்க்கவும், காலையில் கண்ட கனவு நினைவு வர, அவனை யோசனையாகப் பார்த்தாள்.

கனவில் வந்த முகம் இவன்தான் என்று அவளுக்கு தெளிவாக தெரிந்தது. ஆனால் அவன் கூற வந்ததுதான் அவளால் இனம் காண முடியவில்லை.  

அவனை பற்றிய சந்தேகம் விருட்சமாய் அவள் மனதில் விழுந்தது. அதிலும் அவன் நேற்று கார்மெண்ட்ஸில் செய்த வேலை அவளால் மறக்க முடியவில்லை.

மிக பெரிய வேலையான மிஷினை அவன் சரி செய்திருந்தான். மிகவும் நுட்பமான, கை தேர்ந்தவர்களால் மட்டுமே செய்யக் கூடிய இயந்திரகோளாறை அவன் சரி செய்திருந்தான். அது ஒன்றும் சாதரணமான வேலை அல்ல. இந்த வேலையை அவன் வெளியே சென்று தனியாக கூட பார்க்கலாம்.

இத்தனை திறமையையும் வைத்துக் கொண்டு  இவன் ஏன் இங்கு வேலை பார்க்க வேண்டும்?

ஒவ்வொரு நொடியும் மிகவும் ஆச்சரியமும், சந்தேகத்தையும் அவளில் விதைத்துக் கொண்டிருந்தான் சைத்தன்.

அவளது சிந்தனையை தடுப்பதுப் போல் அவளது ஃபோன் ஒலித்தது. எடுத்துப் பார்க்க, அசோகன்தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க டாட்.”

“வாட்சப்ல ஒரு ஃபோன் நம்பர் அனுப்பி இருக்கேன் ஆரா. கொஞ்ச நேரத்தில் வீடியோ கால் வரும் எடுத்து நல்ல விதமா பேசுடா.” என்றார்.

“யார் டாட்?”

“நமக்கு தெரிஞ்சவங்கதான்டா. நீ பேசிட்டு எனக்கு சொல்லு.” என்றவர் அழைப்பை நிறுத்தியிருந்தார்.

வாட்சப் ஓபன் செய்து, அந்த நம்பர் யாருடையது என்று பார்க்க,  ஆறு டிஜிட் இருக்க யோசனையாக பார்த்துக் கொண்டிருக்கவும், அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

ஆன் செய்யவும், “ஹாய் ஆரா…” அலட்டலுடன் அவள் முன் தோன்றினான் அழகன் ஒருவன்.

“ஹாய்…நீங்க…” இழுக்க,

“அங்கிள் உன்கிட்ட சொல்லிருக்கமாட்டாங்கன்னு நினைச்சேன் அதே போல சொல்லலியே. நான் நிதின். உன்னை கட்டிக்க போறவன்.” என்றான் ஆர்பாட்டமாக.

‘என்ன கட்டிக்கபோறியா?’ விழித்தவள், அவனைப் பார்த்து பார்மலுக்காக, ‘ஈஈஈ’ என்று இழித்து வைத்தாள். மனமோ பயங்கரமாக கொதித்துக் கொண்டிருந்தது.