ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 7

‘இந்த கிழவிக்கு அறிவே இல்லை. டாடிக்கு எப்படி வேப்பிலை அடிச்சு விட்டிருக்கு.’ பல்லை கடித்துக் கொண்டு ஃபோனில் பேசிக் கொண்டிருந்த அவனை பார்த்தாள் ஆரா.

“என்ன யோசனை ஆரா?” அவன் அந்த நிதின்தான் கேட்டிருந்தான்.

“திடீர்னு எதிர்பார்க்கல?”

“ஹா…ஹா… இது திடீர்னு இல்லை ஆரா. இரண்டு மாசமா ஓடிட்டுதான் இருக்குது… ஹா… ஹா…”

‘இழிப்பை பாரு. சகிக்கல.’ பல்லை கடித்தவள்.

“டாடி சொல்லவே இல்ல?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நான்தான் சர்ஃப்ரைசா உனக்கு சொல்லலாம்னு சொன்னேன். ஹா… ஹா…”

‘அடேய்… லூசு பயலே சிரிக்காதடா. தூரத்துல பாக்குற எனக்கே சகிக்கல.’ பல்லை கடித்தாள். 

“ஓகே லீவ் இட் நிதின். அர்ஜென்ட் ஒர்க் இருக்கு. சாரி.”

“ஹலோ ஆரா… ஹலோ…” அந்த பக்கம் அவன் கத்த கத்த அழைப்பை நிறுத்தியிருந்தாள்.

அறைக்கு வந்தவள், மேஜையில் இருந்த நீரை வேக வேகமாய் வாயில் சரித்து இருந்தாள்.

‘இந்த டாட் எங்க இருந்து இவனை பிடிச்சாங்க? வீட்டுக்குப் போய் இருக்குது கிழவிக்கு. எல்லாம் அதுப் பார்த்த வேலையாதான் இருக்கும்.’ பல்லை கடித்துக் கொண்டாள்.

அதே நேரம் அவளது ஃபோன் அழைக்கவே, எடுத்துப் பார்க்க, அசோகன்தான் அழைத்திருந்தார். அழைப்பை ஏற்று காதில் வைக்க,  

“பேசினியாடா?” அழைப்பை ஏற்றதுமே கேட்டார் அசோகன்.

“டாட்… ஹீ இஸ் இரிடேட்டிங் மீ.”

“வொய்டா?”

“லீவ் இட் டாட். நாட் இன்டர்ஸ்ட்.” என்றவள் அழைப்பை நிறுத்தினாள்.  

“மேடம்.” அறை கதவு தட்டப்பட,

‘இவனுக்கு இப்போ என்ன?’ சலிப்புடன் எண்ணியவள். “எஸ்” என்றாள்.

“மேடம்.” அவள் முன் நின்றான் அருண்.

“என்ன விஷயம்?” கண்ணை கணினியில் இருந்து திருப்பாமலே கேட்டாள் ஆரா.

“மேடம் வெளிய இருக்க கேமரா ஒர்க் ஆகல.”

“இதெல்லாம் என்கிட்ட எதுக்கு மேன் சொல்லுற?”

“மேடம்…”

“இந்த ஜுஜுப்பி வேலை எல்லாம் என்கிட்ட வந்து சொல்லுற. நீயே பார்க்க வேண்டியதுதானே?”

“சார்தான் மேடம் கேமரால என்ன பிரச்சனை வந்தாலும் உங்ககிட்டையோ, இல்லை சார்கிட்டையோ சொல்ல சொல்லிருக்காங்க?” 

“சரி நான் டாடி கிட்ட சொல்லுறேன். நீ கிளம்பு.” எனவும் வெளியே சென்றான் அருண்.

ஆனால், அவரிடம் கூற மறந்து விட்டிருந்தாள் ஆரா. இதுவே அவளை நாளைக்கு சிக்கலில் மாட்டிக் கொள்ள வழிவகுத்தது.

                                        ***

நிதின் பற்றிய யோசனையில் அமர்ந்திருந்தார் அசோகன். இந்த சம்பந்தத்தை விட அவருக்கு மனதில்லை. இவர்களை விட பல மடங்கு வசதியில் உயர்ந்தவர்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஆக்ஸிடென்டில் தாயை இழந்தவன் அந்த நிதின். ‘துக்கம் நடந்த வீட்டில் சீக்கிரம் நல்லது நடந்தால் குடும்பத்திற்கு நல்லது’ என்று நிதின் வீட்டு குடும்ப ஜோசியர் கூறவும்,

நிதின் வீட்டினர் பெண் தேடியதில், அசோகன் வீட்டு விபரம் தெரிய உடனே தரகர்  பேச, பெரிய இடமாக இருக்கவும் விட மனதில்லை இவருக்கு.

ஆனால் மகள் என்ன கூறுவாள் என்ற பயம் இருக்க, தாயிடம் கூறினார் அசோகன். ‘நான் பாத்துகிறேன்’ என்றவர் அவராகவே பேசுவதுப் போல் பேச்சை ஆரம்பித்திருந்தார்.

‘உங்கள் மகளிடம் நான் பேசிய பிறகு மேற்கொண்டு பேசலாம் அங்கிள்.’ என நிதின் கூறியிருக்க, அசோகனும் இவளிடம் ஏதும் கூறவில்லை.  

இப்பொழுது வேண்டாம் என்று கூறவும், என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை.

                                             ***

இரவு எப்பொழுதும் போல், ஹாலில் அமைந்திருந்து தன்யா பற்றிய யோசனையில் அமர்ந்திருந்தாள் ஆரா.

‘ஆரி படித்த காலேஜ் சென்று விசாரிக்கலாமா?’ என்ற யோசனை அவளை சில நாளாய் அரிக்க, யோசித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன யோசனை சிங்காரி?” கேட்டபடி அவள் அருகில் வந்து அமர்ந்தார் ஆண்டாள்.

   “ஒரு மர்டர் பண்ணனும் அதுதான் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றாள் அவரை கூர்மையாய் பார்த்து.

 “இதெல்லாம் யோசிக்கவா செய்வாங்க சிங்காரி.?

“பின்ன பக்காவா பிளான் பண்ண வேண்டாமா?” என்றாள் மனதில் ஆண்டாளை நினைத்து.

 “கத்தியை எடுத்து ஒரே சீவு சீவுனா தலை துண்டா விழப் போகுது. இதுக்கு பிளான் போடுறாளாம் பிளான்.” கேலியாக வாய் அங்கும் இங்கு வெட்டிக் கொண்டு போனது ஆண்டாளுக்கு.

“கிழவி!” அதிர்ந்தவள், “என்ன இப்படி அசால்ட்டா சொல்லுற?” வாயில் கை வைத்து அதிர்ந்துதான் போனாள்.

“வேற எப்படி சொல்லுவாங்க? நான்லாம் மாசத்துக்கு நாலைஞ்சு பண்ணுவேன்.” என்றார் தோளை குலுக்கி.

“நீ என்ன மர்டரை சொல்லுற?” சந்தேகத்துடன் பார்த்தாள் ஆரா.

“வேற என்ன மர்டரை சொல்லுவாங்க கோழி மர்டரைதான் சொல்லுறேன்.” என்றார் கெத்தாக,

“நான் என்ன மர்டரை கேட்டேன்?” பல்லை கடித்துக் கொண்டே கேட்டாள் ஆரா.

 “நீ எதை கேட்ப கோழியதான் கேட்ப. பின்ன மனுசனை மர்டர் பண்ணவா கேட்ப. நீலாம் அதுக்கு செட் ஆகமாட்ட.” என்றார் கேலியாய்.

“கரெக்ட் ரொம்ப கரெக்ட்.” சிரித்துக் கொண்டே  கூறியவள், “கிழவி… இன்னைக்கு பிறகு உனக்கு இந்த காது இருக்கவே கூடாது.” தாவி அவர் இரு பக்க கன்னத்தையும் பிடித்து அருகில் இழுத்தவள், “உன் காதை கடிச்சு துப்புறேன் பாரு.” என்றவள், கன்னத்தில் நச்சென்று ஒரு இச் வைத்து அவரை பார்த்து சிரித்தாள்.

“எப்பவும் இப்படியே சிரிக்கதை விட்டுட்டு, ஏன் எல்லாரையும் அதட்டி உருட்டுற?”

“போதும் நிப்பாட்டு ஆரம்பிக்காத. என்னை மாத்தணும்னு நீ நினைக்காத. நீ வேணா மாறு.” பல்லைகடிக்க,

“நான் ஏண்டி மாறணும் சிங்காரி. நீதான் தறிகெட்டு சுத்துற. உன்னைத்தான் அடக்க வழியில்லை.”

“இங்க பார் இங்க இருக்க இஷ்டம் இருந்தா இரு. பிடிக்கலியா நான் ஏதாவது ஆஸ்ரமம் பாக்குறேன் போய் தங்குற வழியைப் பாரு.” என்றவள் எழுந்து அறைக்கு சென்றாள்.

செல்லும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார் ஆண்டாள். நிதின் அப்பொழுதான் கூறியிருந்தான் பாட்டியிடம், அவனிடம் பேசாமல் இவள் கால் கட் பண்ணியதை.

அந்த வருத்தம் இவரிடம் மலையளவு இருந்தது. நிதின் நல்லவன். சிரிக்க தெரிந்தவன். இவளைப் போல் சிடு மூஞ்சி கிடையாது.

நல்ல குடும்பம், நல்ல வேலை எல்லாம் இருக்க இருவருக்கும் விட மனதில்லை.

இரண்டு நாளில் நிதின் இங்கு வரப் போகிறானாம். நேரில் ஆராவை பார்க்க வேண்டுமாம்.

எல்லாம் எடுத்துக் கூறலாம் என்று வந்தால், சிங்காரி சிலுப்பிகிட்டு போறா? என்ன செய்வது பாவம் அவருக்கே புரியவில்லை. 

இத்தனை வருடம் அவளுடன் குப்பை கொட்டிய அவருக்கே அவளை நினைத்தால் பீதியாக இருக்க, இதில் நிதின் நிலை? இப்பொழுதே நிதினின் நாளைய நிலை கண்ணுக்கு தெரிய கண்ணை இறுக்க மூடிக் கொண்டார். கண்களில் நிதின் வந்து சிரித்தான்.

‘இதுதான் உன்னோட கடைசி சிரிப்பா இருக்க போகுது பேராண்டி.’ பேத்தியை நினைத்து பெருமை பட்டுக்கொண்டார்.

                                             ***

காலையில் கீழே இறங்கி வரும்பொழுதே, டிராவல் பாக்குடன் வந்தாள் ஆரா. அப்பொழுதுதான் ஆரியனும் எழுந்து வந்துக் கொண்டிருந்தான்.

இவளை பார்த்தவன், ஷோபாவில் வந்து அமர, அவளும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

“ஆரி.”

“ம்ம்ம்” அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“தன்யாவை நீ எங்க பார்த்த?”

“தன்யா… தன்யா காணும்?” இருகைகளையும் விரித்தான்.

“தன்யாவை நான் கூட்டிட்டு வாரேன். அவ எங்க இருக்கா?”

“அங்க… அங்க மரத்துக்கு கீழ நின்னா. நான் அவ பக்கத்துல போனானா? என்னை பார்த்து பயந்து அவ போய்ட்டா.”

“எங்க போனா?”

“தெரியல?” கைகளை விரிக்க,

“அதுக்கு பிறகு அவளை எங்க பார்த்த?”

 “அது… அது…” தலையை சொறிந்தவன், சொறிந்துக் கொண்டே இருந்தான்.

“சொல்லு ஆரி?”

“ஆங்… அங்க ஐஸ் கிரீம் கடை இருக்கும்.” என்றான் இப்பொழுது.

“நான் போய் தன்யாவை கூட்டிட்டு வாரேன். நீ சமத்தா பாட்டி கூட இருக்கணும் சரியா?”

“சரி” என்று தலையை ஆட்டியவன் எழுந்து ஆண்டாள் அருகில் சென்றான்.

அவன் செல்லவும், அவள் அருகில் அசோகன் வந்து அமர்ந்தார்.

 “எங்க கிளம்பிட்ட ஆரா?”

“சென்னைக்குப்பா.” என்றவள் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏன்டா?”

“ஃப்ரென்ட் கல்யாணம் டாட்.”

“என்கிட்ட சொல்லவே இல்லையேம்மா?”

“அதுதான் இப்போ சொல்லுறேன்ல.”

“சரி விடு… எங்க தங்குவ எப்போ வருவ?”

“ரெண்டு நாள்ல வந்திடுவேன் டாட். அங்க நம்ம ஃபிளாட்ல இருந்துப்பேன் டாட்.”

“கவனமா போயிட்டு வாடா கண்ணு.”

“ஓகே டாட்.” என்றவள் அவர் கன்னத்தில் முத்தம் ஒன்று வைக்க, எல்லாத்தையும் அமைதியாக பார்த்திருந்தார் ஆண்டாள்.

“மணி.” ஆண்டாள் மணியை அழைக்கவே,

“அம்மா.” என்றபடி அவன் வந்து நிற்க,

ஆண்டாளை பார்த்தார் அசோகன்.

‘நிதின் பத்தி சொல்லுடா?’ ஆண்டாள் கண் காட்ட,

‘சென்னை போயிட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்.’ பதிலுக்கு கை காட்டினார் அசோகன்.

“ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க?” இருவரையும் பார்த்து கேட்டாள் ஆரா.

“நீ எதுல போறேன்னு உன் அப்பனை கேட்க சொன்னேன். என்னை கேட்க சொல்லுறான் அவன். அப்படி மிரட்டி வச்சிருக்க நீ?” முறைக்க,

“மணி டிஃபன் ரெடியா?” ஆண்டாளை கண்டு கொள்ளாமல் மணியை பார்த்து திரும்பினாள்.

 அவன் டிஃபன் எடுத்து வைக்க, உண்டவள், “டாட் நான் ஃப்ளைட்லதான் கிளம்புறேன். எதுனாலும் எனக்கு கால் பண்ணுங்க.”

“ஓகே மா.” என்றவர் அவளது பெட்டியை தூக்கிக் கொள்ள, 

கூலரை ஸ்டைலாக அணிந்து, பாட்டியை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு நடந்தாள் ஆராதனா.

‘போடி போ. எப்படியும் இங்க வந்துதானே ஆகணும்.’ என்றபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தார். அறையில் இருந்த ஆரியன் கண்களும் செல்லும் அவளையே வெறித்தது.

                                      ***

எப்பொழுதும் போல் மில்லுக்கு வந்த சைத்தனின் கண்கள் மில்லையே சுற்றி வந்தது. ‘அவள் எங்காவது தென்படுகிறாளா?’ அவன் பார்வை சுற்ற அவளைத்தான் காணமுடியவில்லை.

மில் வாசலில் அசோகனின் கார் வந்து நிற்கும் ஓசை கேட்க, அமைதியாக நின்று வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே வந்த அசோகன் பார்சலை பார்வையிட, சைத்தன் வெளியேப் பார்த்தான்.

‘அவள் வரவில்லை?’ அவன் முகம் சுருங்க, கைகள் அதுபாட்டுக்கு ஏதோ எழுதிக் கொண்டிருந்தது.

‘எங்க போனா? என் பிளான் சொதப்பல்தானா?’ அவனால் தாங்கமுடியவில்லை.

எதிலும் தோற்றவன் இல்லை இந்த சைத்தன் உமேரா! அவன் நினைத்ததை முடித்தே தீருவான்.

‘நிதானமா இரு.’ தனக்குதானே கூறியவன், கேண்டீன் நோக்கி சென்றான்.

அங்கிருந்து காஃபி ஒன்றை ஆர்டர் செய்தவன் நிதானமாய் யோசித்தான். ‘அடுத்து என்ன செய்வது? காலம் தாழ்த்த தாழ்த்த ஆபத்து.’ யோசித்தவனுக்கு, டக்கென்று மின்னல் வெட்டியதுப் போல் அவனை கடந்து சென்றார் அசோகன்.

‘வந்ததே இவருக்காகதானே. அவளை பார்த்ததும் ஏன் நான் மாறினேன்? எல்லாம் அவளால. இவர் இருக்கும் வரை தோல்வி இல்லை.’ தனக்குள்ளே சிரித்தவன், ‘பொண்ணு இல்லைன்னா அப்பன்.’ கடைசி சொட்டு காஃபியையும் குடித்தவன் மில் நோக்கி நடந்தான்.

                                    ***

சென்னை சென்ற ஆராவுக்கு, தன்யாவை பற்றிய செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை. ஆரியன் படித்த கல்லூரியில் சென்று விசாரிக்க, அப்படி யாரும் படிக்கவே இல்லை என்ற பதில் கிடைக்க, அவளால் மேற்கொண்டு எதையும் யோசிக்க முடியவில்லை.

காலேஜ் வாசலில் நின்று யோசித்துக் கொண்டிருந்தாள். ‘இனி என்ன செய்வது?’ கண்களை சுழல விட்டவள் கண்களில் பட்டது வாசலில் வைத்திருந்த தங்க நிற உருவச்சிலை.

அருகில் சென்றவள் தொட்டுப் பார்க்க, உருவசிலையில் எழுதபட்டிருந்த பேர் அவளை ஈர்க்க உற்றுப் பார்த்தாள்.

“அமரர். உமேரா” எங்கோ எப்பொழுதோ அவள் காதில் விழுந்து கருத்தில் பதிந்த பெயர்.

‘எங்கு? எப்பொழுது?’ என்பதை சுத்தமாய் மறந்து விட்டிருந்தாள்.

‘தன்யாவை பற்றி இனி விசாரித்து பயனில்லை. ஆரியனை சீக்கிரம் குணப்படுத்தும் வழியை பார்க்க வேண்டும்.’ என்று அன்றே கோவை கிளம்பிவிட்டாள்.

                                                       ***

“என்ன ஆரா சீக்கிரம் வந்துட்ட?” அடுத்த நாள் காலையிலையே வந்திறங்கியவளை அதிசயமாய் பார்த்தபடி கேட்டார் அசோகன்.

“பிடிக்கல வந்துட்டேன்.” சாதாரணமாகக் கூறினாள் ஆரா.

“பிடிக்கலையா! என்னடா?”

“கல்யாணம் பிடிக்கல வந்துட்டேன்.”

“கல்யாணம் யாருக்குடி? உனக்கா இல்ல உன் ப்ரெண்ட்டுகா?” இவளிடம் கேட்டபடியே அறையில் இருந்து வந்தார் ஆண்டாள்.

அப்பொழுதுதான் அறையில் இருந்து வந்த ஆரியன், அசோகனை பார்த்ததும், அப்படியே வாசலில் நின்றுக் கொண்டான். அவரை அவன் நேருக்கு நேர் பார்த்து சில மாதங்கள் ஆகிறது. இப்பொழுது பார்த்தவன் அப்படியே பார்த்தபடி நின்றான்.

“ரொம்ப டயர்ட்… கொஞ்சம் பேசாம இரு கிழவி.” பல்லைக் கடித்தவள் எழுந்து மாடி ஏறினாள்.

அறைக்கு வந்தவள் அப்படியே படுத்துக் கொண்டாள். மிகவும் களைப்பாக இருக்க அப்படியே உறங்கியும் போனாள்.

  பதினோரு மணிக்கு போல் எழுந்தவள் மில் நோக்கி சென்றாள். முகம் பெரும் யோசனையில் இருந்தது. ‘தன்யாதான்’ அவளை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தாள்.

ஆரியனுக்கும் அவளுக்கும் பழக்கம் எப்படி ஏற்பட்டது? படிக்கும் பொழுது ஏற்பட்ட பழக்கம் என்றுதான் அசோகன் கூறியிருந்தார். ஆனால், அவன் படித்த கல்லூரியில் அப்படி யாருமே இல்லையா?

ஆரியன் இவளைப் போல் அல்ல, அவன் காலேஜ் தவிர எங்கும் செல்பவன் கிடையாது. ஹாஸ்டலில் இருந்து வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கு வந்துவிடுவான்.

அவள் லண்டனில் படிக்க, இவன் சென்னையில் படிப்பை முடித்தான். சைதன்யா சிறு வயதில் இருந்து பழக்கமோ? இவளது யோசனை நாலாபக்கமும் சென்றது.

அப்பொழுதுதான் உருவசிலையில் எழுதபட்டிருந்த பெயர் நினைவில் வர, கூகுளை நாடினாள்.

உமேரா செர்ச் செய்யவும், உமேரா குரூப் ஆஃப் கம்பெனிஸ், உமேரா குரூப் ஆஃப் காட்டன்ஸ், உமேரா குரூப் ஆஃப் கார்மெண்ட்ஸ், உமேரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், உமேரா குரூப் ஆஃப் தேவி சில்க்ஸ் இத்தனையும் அவள் கண் முன் விரிய கண்களை விரித்துப் பார்த்தாள். அத்தனையும் உமேரா மயம்!

‘உமேரா குரூப் ஆஃப் கம்பெனிஸ்’ என்றோ, எப்பொழுதோ அவள் காதில் விழுந்த பெயர். மிக பெரிய தொழில் சாம்ராஜ்யமே அவள் கண் முன் விரிய, அதை படிக்க ஆரம்பித்தாள்.

உமேரா மும்பையை சேர்ந்தவர். முதன் முதலில் துணி எடுத்து விற்கும் தொழில் செய்தவராம். அவருக்கு ஐந்து மக்கள். மகன் நான்கு, மகள் ஒன்று. மகள் பிறந்த பின் எல்லாம் மாற, சென்னை & மும்பை என்று தொழில் விரிந்து வளர்ந்தது.

மூத்த மகன் சுமந்த் உமேரா!

மும்பையில் உமேரா குரூப் ஆஃப் கம்பெனியின் எம்டியாக இருக்கிறார். தொழில் பின்னே ஓட திருமணத்தை மட்டும் மறுத்துவிட்டார். இப்பொழுது தனியாக வாழும் மனிதர். 

இரண்டாவது மகன் சஞ்சீத் உமேரா!

மும்பையில் உமேரா குரூப் ஆஃப் காட்டனின் எம்டியாக இருக்கிறார். காதல் தோல்வி. திருமணம் செய்யவும் இல்லை. வேறு பெண்களை ஏரெடுத்து பார்க்கவும் இல்லை.

மூன்றாவது மகன் சுமன் உமேரா!

மும்பையில் உமேரா குரூப் ஆஃப் கார்மெண்ட்ஸின் எம்டி. அண்ணன் திருமணம் செய்யாமல் நானும் செய்யமாட்டேன் என்று தனியாகவே தொழிலை பார்த்து வருகிறார். 

நான்காவது மகன் சரண் உமேரா!

சென்னையில் உமேரா குரூப் ஆஃப் இன்ஜினியரிங் உரிமையாளர். இவருக்கு திருமணம் முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஆக்ஸிடென்டில் மனைவியை பறிகொடுத்திருந்தார். ஒரு மகன் இப்பொழுது அமெரிக்கா வாசம். 

ஐந்தாவது ஸ்ரீ சைலஜா தேவி. உமேரா குரூப் ஆஃப் தேவி சில்க்ஸின் முதலாளி. காதலனை நம்பி கையில் குழந்தையுடன் தனித்து நின்ற அபலை பெண். இவளை தேற்றி இப்பொழுது முதலாளியாக பார்கின்றனர் அண்ணன்மார்கள்.

“யப்பா!” அசந்து போனாள் ஆரா.

அவளது தேடல் மீண்டும் தொடர, அவர்களின் குடும்ப படத்தை கூர்ந்துப் பார்த்தாள். ‘எங்கையோ பார்த்த முகம் அங்கிருந்த அத்தனை ஆண்களின் முகமும் ஒருவனையே அடையாளம் காட்ட, மேலும் கூர்ந்து கவனிக்க,

அதை தடுப்பது போல் ஆஃபிஸ் அறை கதவு தட்டப்பட, சலிப்புடன், “எஸ் கம்மின்.” என்றாள்.

கதவை திறந்தபடி, சிரிப்புடன் வந்து நின்றான் நிதின் உமேரா!