ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 9

 நேரம் மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க, கண்களை மெதுவாக திறந்தாள் ஆராதனா.

அவளிடம் இருந்து சிறு முனகல், “த… தண்ணீ” என்று திக்கி திணறிக் வந்துக் கொண்டிருந்தது.

பக்கவாட்டில் கரம் ஒன்று குவளையுடன் அவள் முகத்தை நோக்கி நீண்டது. தலையை மெல்ல தூக்கி அந்த கரத்தின் சொந்தகாரரை நோக்க, கண்கள் ஒத்துழைக்கவில்லை.

ஒன்றும் புரியவில்லை. மங்கிய விழிகளை மீண்டும் மூடித் திறந்தாள். சிறு வெளிச்சம் தெரிந்தது. கண்களை நன்றாக விரித்து அந்த இடத்தை ஊன்றிப் பார்த்தாள்.

ஏதோ குகைப் போல் கண்ணுக்கு தெரிய, தலையை தூக்கிப் பார்த்தாள் முடியவில்லை. பாரமாய் இருந்தது.

நடந்ததை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்தாள். காரில் பயணித்தது, சிக்னலில் நின்றது, யாரோ பிச்சை கேட்டது அதற்கு மேல் ஒன்றும் நினைவில் வரவில்லை.

கைகளையும், காலையும் அசைத்து எழ முயற்சித்தாள் சரசரவென சங்கிலி சத்தம் கேட்டது.

மயக்கம் முற்றிலும் தெளிய, எழுந்தவள் கண்களை ஓடவிட்டாள், கைகளையும் காலையும் சங்கிலியில் இணைத்து அங்கிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்தது.

இப்பொழுது, அந்த குவளை நீட்டிய கைக்கு சொந்தக்காரனை பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். அவன் இவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 “நீ… நீ இங்க என்ன பண்ணுற?” அதிர்ச்சியுடன் கேட்டவள், அப்பொழுதுதான் கவனித்தாள்… அவன் கைகளையும் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

அதிர்ச்சி விலகாமலே, ‘என்னை சுற்றி என்ன நடக்கிறது?’ இவள் யோசித்து முடிப்பதற்குள், பக்கவாட்டில் இருந்து அவன் எழுந்து நின்றான்.

மெல்லிய விளக்கின் ஒளியில், தன் முன்னே நிழல் தெரிய நிமிர்ந்துப் பார்த்தாள்.

சைத்தன் உமேரா!

இவன் இப்பொழுது புதிதாக தெரிந்தான் அவளுக்கு. பல நாள் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டு விலகி ஓட, அவனையே வெறித்தாள்.

தன் முன் நின்றவனையே வெறித்தாள் ஆரா.

“கடைசியில் இதுதான் உன்னோட பிளானா? ஆனா ஏன்?” கேள்வியுடன் அவனை பார்த்தாள்.

“ஊப்ப்ஸ்ஸ்… யூ ஆர் சான்ஸ்லெஸ் பேபி! என்ன பாக்குற இந்நேரத்துக்கு நீ கத்தி அழுது ஆர்பாட்டம் பண்ணுவேன்னு பாத்தா? ஐ அம் இம்ஃப்ரஸ்டு.” ஒருவிதமான சிரிப்புடனேக் கூறினான்.

“என்ன சொல்ல வர?”

“வெட்டுக்கிளி மாதிரி துள்ளிகிட்டு கிடப்பியே இப்போ சாந்த சொரூபியா பேசுற அதுதான் திருந்திட்டியோன்னு நினைச்சேன்.” இப்பொழுது முகத்தில் இருந்த புன்னகை கேலியாக மாறியது.

“அதாவது நான் உன்னை பார்த்து பயந்துட்டேன்னு சொல்ல வார நீ… கரெக்ட்.”

“யா… அஃப்கோர்ஸ்.” தோள்களை குலுக்கிக் கொண்டான் சைத்தன்.

“உன் உண்மையான பேர் என்ன?”

“நீ ரொம்ப ஸ்மார்ட்டுன்னு காட்டிக்கிறியா?”

“யா… அஃப்கோர்ஸ்.” அவனை போலவே தோளை குலுக்கி கொண்டாள் ஆரா.

“உன்னோட திமிருக்கு நீ இப்படிதான் பேசுவ.”

“தேங்க் யூ… தேங்க் யூ” அவார்ட் குடுத்ததுப் போல் ரியாக்ட் செய்தாள் ஆரா.

அவளைபார்க்க அவனுக்கு கடுப்பாக வந்தது.

‘இவளை பாத்த நாள்ல இருந்து கடுப்படிச்சிட்டே இருக்கா. இவளை எல்லாம் சும்மா விடக்கூடாது.’ எண்ணியவன் அவளை பார்த்தான்.

“இந்த கையை மட்டும் அவுத்து விடேன் ப்ளீஸ்.”

“அட! இதுகூட நல்லாருக்கே.”

‘எது?’ கேள்வியாய் இவள் பார்க்க,

“இதோ இப்போதான் ப்ளீஸ் சொன்னியே… உன் வாய்ல இருந்து கேக்குறது நல்லாருக்குது.”

‘லூசா நீ.’ என்பது போல் அவள் பார்வை இருக்க,

“உனக்கும் எனக்கும் நல்ல புரிதல். நான் உன்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறேன்.” என்றான் இப்பொழுது.

“என்ன உளர்ற?”

“இது உளறல் இல்லம்மா நிஜம். நீ கண்ணால பேசுறது எல்லாம் நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன். அப்போ இது அதான ஜெஸி.” சிம்பு ஸ்டைலில் கூறியபடி கண்ணை சிமிட்டினான் சைத்தன்.

கண்களை சுற்றிப் பார்த்தவள், கண்ணில் கொஞ்ச நேரத்துக்கு முன் அவன் தந்த தண்ணீர் குவளை இருக்க, அதை எடுத்தவள் அவனை நோக்கி வீசினாள்.

அவள் கையை கட்டிப் போட்டிருந்தததால் அது அவன் காலில் போய் விழுந்தது.

“உன் கையை அவுத்து விடலாம்னு பார்த்தேன். அப்படி விட்டா நான் உயிரோட இருக்கமாட்டேன்னு இப்போ தோணுது. சோ நீ இப்படியே இரு.” கூறியபடி வெளியே சென்றான் சைத்தன்.

“டேய்… டேய் கையை அவுத்து விட்டுட்டு போடா.” இவள் இங்கிருந்து கத்த சத்தம் இல்லாமல் சென்று விட்டிருந்தான்.

திரும்பி வந்தவன் கையில், கொஞ்சம் சுள்ளிகள் இருக்க அதை அவள் முன் போட்டான்.

‘என்ன செய்யபோறான் இவன்?’ மீண்டும் இவள் பார்க்க.

“கன்ஃபார்ம் பண்ணிட்டேன். இது அதுதான்.” என்றான் திடீரென்று.

‘என்ன உளறல்?’ மீண்டும் அவள் பார்க்க,

“அதேதான் இது.” அங்கிருந்த அடுப்பை எடுத்து அவள் முன் வைத்தப்படிக் கூறினான்.

“உன் லூசுதனமான உளறலை என்னால கேக்கமுடியாது. கையை அவுத்து விடுடா.” கத்தினாள்.

“இதைதான் எதிர்பாத்தேன். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா ஆரா வெளில வாரா.” கேலியாகக் கூறியபடி மூன்று கற்களை எடுத்து அடுப்பாக்கி, சிறு பாத்திரத்தை வைத்தவன், அதில் கொஞ்சம் நீரை ஊற்றி வைத்து தீயை பற்ற வைத்தான்.

இவன் செய்வதையே பார்த்திருந்தாள் ஆரா. ‘இவன் என்ன செய்ய போகிறான்.’ என்று அவளுக்கு புரியவில்லை.

அவன் செய்வது ஆச்சரியமாய் இருக்க, அப்படியே பார்த்திருந்தாள்.

“என் பேர் என்னன்னு தெரியணுமா?” இப்பொழுதுதான் நினைவு வந்ததுப்போல் கேட்டான்.

“உன் பேர் எனக்கு எதுக்கு தேவையில்லாதது.” முகத்தை சுழித்தாள் அவள்.

“ரைட்… உன்னை எதுக்கு இங்க தூக்கிட்டு வந்திருக்கேன்னு உனக்கு தெரியுமா?”

“என்னை தூக்கிட்டு வரணும்னுதான நல்லவன் மாதிரி வேஷம்போட்டுட்டு என்கிட்ட வேலைக்கு வந்த… உன் வேலை முடிஞ்சதும் தானா கொண்டு விடபோற. இதை ஏன் நான் வீணா உன்கிட்ட கேட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணனும்.”

“ரைட்… இனி நீயா கேக்கும் வரை நான் உன்கிட்ட என் பேரையும், உன்னை தூக்கிட்டு வந்த காரணத்தையும் சொல்லப்போறதில்லை.” என்றவன் கொதிக்கும் நீரை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ சொல்லவும் வேண்டாம், நான் தெரிஞ்சிக்கவும் வேணாம். என் கையை மட்டும் அவுத்து விடு.” என்றாள் கடுப்பாக.

“உன்னை தூக்கிட்டு இந்த மலை மேல ஏறதுக்குள்ள என் தோள்பட்டையே ஒரு பக்கமா சரிஞ்சு போச்சு.” என்றவன் கைகளை அங்கும் இங்கும் அசைத்தான்.

“என்னால முடியல ப்ளீஸ் அவுத்து விடு.” அவள் கூறவே,

அவள் முகத்தில் என்ன கண்டானோ, எழுந்தவன் அவள் கையை மட்டும் அவுத்து விட்டான்.

“அப்படியே இந்த காலையும் அவுத்து விடேன் ப்ளீஸ்.” மீண்டும் ஒரு ப்ளீஸ் போட்டுக்கொண்டாள் ஆரா.

“உன் அப்பன் உன்னை நல்லா வளத்து வச்சிருக்கான்.”

‘அப்பா…’ அப்பொழுதுதான் நினைவு வந்தவள் போல், தன் ஃபோனை தேடினாள் ஆரா.

அது கிடைக்காமல் போக, “என் ஃபோன் எங்க?” அவனை பார்த்துக் கேட்டாள்.

“நாளைக்கு அனேகமா உன் அப்பன் கையில கிடைச்சாலும் கிடைக்கலாம்.”

“அப்பா கையில கிடைக்கலாமா? அப்படின்னா ஃபோன் உன்கிட்ட இல்லையா?”

“ப்பா… உன்னோட அறிவோ அறிவு. சும்மா சொல்லக்கூடாது நீ அறிவாளிதான் ஒத்துக்கிறேன். ஏன் இந்த பொண்ணு இவ்ளோ திமிரா நடந்துக்குதுன்னு இப்போதான் தெரியுது. உன் அப்பன் உன் பின்னாடி ஏன் இப்படி சுத்துறான்னு இப்போ புரியுது. கொஞ்சம் சரக்கு உன்கிட்ட இருக்குது.”

“என் ஃபோனை குடு. தேவையில்லாம பேசாத.” முறைத்தாள்.

“இதுதான் இப்போ தேவை பேபி.” என்றவன் கொதித்த நீரில் காஃபி தூளையும், சீனியையும் கலந்தான்.

“பக்காவா பிளான் போட்டிருக்க?” தேவையானது எல்லாம் அவனை சுற்றி இருக்க கேட்டாள் ஆரா.

“யா… அப்கோர்ஸ். என்னை என்னன்னு நினைச்ச நீ. தி கிரேட் சைத்தன் உ…” கம்பீரமாக ஆரம்பித்தவன் அப்படியே நிறுத்திக் கொண்டான்.

அவனது கம்பீரம் அவளை அசைக்க, அசையாமல் அப்படியே அவனையே பார்த்திருந்தாள்.

“என்ன?” அவன் கேட்கவே.

“நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுதா? இது என் அப்பாக்கு தெரிஞ்சா உன்னை உயிரோட விடுவார்னு நினைக்கிறியா நீ?”

 “உன் அப்பனுக்கு தெரிய வரும்னு நினைக்கிறியா நீ?”

“ஏன் தெரியாது? மில் சுத்தி கேமரா இருக்குது. மில் மட்டும் இல்ல. நீ வந்த வழி எல்லா இடத்திலையும் கேமரா இருக்குது. உன்னை அப்படியே விடுவாங்கன்னு நினைக்கிறியா?” தெனாவெட்டாக கூறினாள் ஆரா.

“ஹா… ஹா…” பெரும் குரலெடுத்து சிரித்தான் சைத்தன்.

அவனது சிரிப்பில், ஒரு நொடி பயந்தவள், ‘நான் ஏன் இவனுக்கு பயப்படனும் நாளைக்கே என்னை, என் அப்பா வந்து அழைத்து செல்வார்.’ எண்ணியவள் கிண்டலாய் அவனை பார்த்து சிரித்தாள்.

“உன் மில் கேமரா எதுவும் வேலை செய்யாதே? அது உனக்கும் தெரியும்னு நினைக்கிறேன்?”

    அப்பொழுதான் நினைவு வந்தது, ‘அருண் கேமரா வேலை செய்யவில்லை என்றுக் கூறியதும், தான் அப்படியே மறந்துவிட்டதும்.’ தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டாள்.

“என்ன அருண் சொன்னது நினைவுக்கு வருதா?”

“பக்கா பிளான்.” அவனை ஆழ்ந்து பார்த்துக் கேட்டாள்.

 “யா பேபி… மில் கேமரா மட்டும் இல்ல எந்த கேமராவிலும் உன் கார் சிக்காது. வர வழியில் ஒரே ஒரு கேமரா மட்டும்தான். அதை கிராஸ் பண்ணும்போது லாரி வந்தது. அதை நீ கவனிச்சிருக்க மாட்ட. நீதான் இங்கயே இல்லையே.” சிரித்தான்.

“இப்படி சிரிக்க உனக்கு அசிங்கமா இல்லையா?”

“நோ… நான் ஏன் அசிங்கபடணும்?” அவளிடமே திரும்பிக் கேட்டவன், தயாரித்த காஃபியை, கொண்டு வந்திருந்த ஒற்றை டம்ளரில் ஊற்றிக் குடித்தான்.

 அவனது செயல், அவளுக்கு வெறியை கிளப்ப, அவன் கையில் இருந்த டம்ளரை தட்டிவிட்டாள்.

“ஏய்!” ஆங்காரமாக கத்தியபடி எழுந்து நின்றான் சைத்தன் உமேரா!

“என்னடி விட்டா ரொம்ப ஆடுற?”

“யாருடா ஆடுறா? ஒரு பொண்ணை இப்படி கடத்தி வைக்கிறது உனக்கு வெக்கமா தெரியல.” அவன் முன் எழுந்து நின்று கத்தினாள்.

“நான் ஏன்டி வெட்கப்படணும். ஒரு பொண்ணை கடத்தி வச்சிருந்தா வெட்கப்படணும். நீதான் பொண்ணே இல்லையே.” வேகமாக சிரிக்க,

அவனது சிரிப்பு அவளுக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. “ஏய்… யாரை கொண்டு வந்து வச்சிருக்கன்னு தெரியுமா?” ஆத்திரத்துடன் கத்தினாள்.

“ஓ… தெரியுமே!” அதே ஏளன சிரிப்பு அவனிடம்.

“முட்டாள். தெரிஞ்சுமா இவ்வளவு பெரிய தப்பை பண்ணுற? எங்கப்பாக்கு மட்டும் தெரிஞ்சது உன்னை அடையாளம் தெரியாம பண்ணிடுவாங்க.”

“ஹா… ஹா…” அவன் சிரிக்க,         

அவன் சிரிக்க சிரிக்க, அவளுக்கு ஆத்திரமும் வெறியும் கிளம்பியது, “மரியாதையா என்னை கொண்டு போய் விட்டிடு. இல்லன்னா உன் பிச்சைக்கார குடும்பத்தை மொத்தமா என் அப்பா அழிச்சிடுவாரு. எனக்கு ஒன்னுன்னா எங்கப்பா எந்த எல்லைக்கும் போவார்.” எச்சரித்தாள் ஆரா.

“பிச்சைக்கார குடும்பமா? ஹா… ஹா…” அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“உனக்கு ஒன்னுன்னா உன் அப்பனால சும்மா இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுதாண்டி உன்னை தூக்கிட்டு வந்திருக்கேன்.” அவனது குரலில் வெறியும் கோபமும் தெறித்தது.

‘பக்கா பிளான்.’ அவளது மனம் அடித்துக் கூற, ஒரே தாவலில் அவன் மேல் பாய்ந்தவள், அவனை கீழே தள்ளினாள்.

அவளது இந்த திடீர் தாக்குதலை கவனிக்காதவன், பேலன்ஸ்காக அவளை பிடிக்க, சங்கிலி அவளது காலில் தடுக்க, தடுமாறி அங்கிருந்த பாறையில் மோதி விழுந்தாள் ஆரா.

அவளின் மேல் அவன் விழ, விழுந்த வேகத்தில் எழுந்தவன், அவளை பார்க்க, தலையில் ரத்தம் வழிய மயங்கி இருந்தாள் ஆரா.