ராகம் 4

ராகம் 4

கண்ணை கவரும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க, அந்த மலர்களின் மனம் மனதை மயக்க, ரம்யமான ஏகாந்தம் சுற்றி வளைக்க, தன்னை மறந்து அதில் லயக்க வேண்டிய பெண்ணவளோ, கருமேகம் சூழ்ந்த வானத்தை வெறித்திருந்தாள்.

ஈரக்காற்றின் குளுமை பெண்ணின் உடலை தழுவி சிலிர்க்க வைத்தது. அந்த குளுமை பெண்ணின் உடலை குளிர வைத்ததே அன்றி மனதை அல்ல. மனம் உலைக்கலமாக கொதித்தது.

கார்மேகங்கள் மழை பொழிய காத்திருப்பது போல், பெண்ணின் விழிகளும் பெருமழையை உள்ளடக்கி வைத்திருந்தது. 

‘தன்னால் தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்வும், இந்த வானத்தை போல் இருண்டு விடுமோ?’ என்ற பயம் பாவையின் உள்ளத்தை அலைக்கழித்தது.

அவளது பயத்திற்கும் குழப்பத்திற்குமான காரணம் என்ன?

காந்திமதி பாட்டியும், ருத்ராவின் அன்னை அம்பிகா தேவியும் உரையாடியதை கேட்க நேர்ந்ததே.

அவர்கள் தொலைப்பேசியில் உரையாடியது, தற்செயலாக அவளது காதில் விழுந்தது. அதை கேட்டதிலிருந்து பெண்ணின் மனதில் பெரும் போராட்டம் உருவானது.

“அம்மா! அவங்களுக்கு டைவர்ஸாகவும் தம்பிக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.” என தேவியின் பேச்சை கேட்ட, பிருந்தாவின் கால்களின் கீழ் பூமி நழுவியது.

பாட்டி கைப்பேசியை ஸ்பீக்கரில் வைத்து பேசிக்கொண்டிருந்தார். அதனால் எதிர்ப்புறம் இருப்பவர் பேசுவதையும் பிருந்தாவால் தெளிவாக கேட்க முடிந்தது.

“நம்ம தம்பி இதுக்கு ஒத்துக்கும்னு நினைக்கிறயா?” சந்தேகமாக பதில் வழங்கினார் பாட்டி.

“ஒத்துக்க வச்சு தான் ஆகணும். வேற வழி இல்ல.”

“என்னமோ போ எனக்கு மனசே ஒப்பல.” என்றார் சலித்த குரலில்.

“புத்தி கேட்டு போய் இவ அவனை பிரிஞ்சா, அவனை தனியா விட முடியுமா என்ன?”

“இந்த பொண்ணுக்கு ஏன் தான் இப்படி புத்தி கெட்டு போச்சோ தெரியல? வரட்டு பிடிவாதத்தால் நல்ல வாழ்க்கையை தொலைக்க பார்க்குது.”

“எல்லாம் நேரம். சேர்க்கை சரியில்ல. வேற என்னத்த சொல்றது? இன்னும் எவ்வளவு நாள் அவனும் துணை இல்லாமல் இருப்பான்.”

“நீ சொல்றதும் சரி. நம்ம சொந்தத்துக்குள் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வச்சுடலாம்.” பாட்டி மகளின் பேச்சுக்கு இணங்கினார்.

அதற்கு மேல் அங்கிருந்து கேட்கும் மனதிடமில்லாத பிருந்தா, அந்த இடத்தை விட்டு அகன்றாள். அப்போது ஆரம்பித்த மனப்போராட்டம் வெகு நேரமாகியும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

‘மனித மனம் ஒரு குரங்கு’ என்பதுபோல அவளது மனமும் அங்கும் இங்கும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. தான் செய்தது சரியா? தவறா? ஒரு முடிவெடுக்க முடியாமல் மனம் தடுமாறியது. 

நிதர்சனம் மண்டையில் உறைக்க, எதிர்காலத்தை நினைத்து தவிக்க தொடங்கினாள். 

★★★

நீண்ட நேரம் சூனியத்தை வெறித்திருந்த பிருந்தாவின் உடல், ஈரக்காற்றின் குளுமையால் நடுங்கத் தொடங்கியது. பிறகே தன்னிலை உரைக்க தன்னை சுற்றி பார்த்தாள்.

அவள் இருந்தது தன் பிறந்த வீட்டின் தோட்டத்தில். அவள் பார்வை மிகுந்த ஆவலுடன் அந்த தோட்டத்தை வளம் வந்தது.

அவளுடைய நினைவுகளில் நீங்காமல், பசுமையாக பதிந்திருந்த தங்கள் பதின் வயது நிகழ்வுகள், கண் முன் தோன்றியது.

ஒரு நாள் மிகுந்த கலைப்புடன் வீடு திரும்பினார் அவர்களது அன்னை கஸ்தூரி. அப்போது பெண்களுக்கு ஒரு பதினாறு வயது இருக்கும். அன்று பிருந்தா, அம்முவுக்கு பிடித்த சிவப்பு ரோஜா செடியை தோட்டத்தில் நட்டுக்கொண்டிருந்தாள்.

அவள் வேலையாக இருப்பதை தெரிந்து கொண்ட கஸ்தூரி, “தலை வலிக்குது அம்மு ஒரு காபி போட்டு தரியா?” என, சமையலறை என்ற வார்த்தையை, வார்த்தையாக மட்டும் தெரிந்த அம்முவிடம் கேட்டார்.

அவரது வேண்டுகோளை கேட்டு ஆடி போன அம்மு, எல்லா பக்கமும் தலையை உருட்டி, “ஆண்டவா இன்னைக்கு அம்மாவை நீ தான் காப்பாத்தணும்.” என இறைவனிடம் மனு போட்டுவிட்டு சமையலறை சென்றாள். கஸ்தூரி ஹாலின் தரையில் ஒரு பாயை விரித்து படுத்தார்.

காபி போட சென்ற பெண், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், ‘ஏன் இந்த அம்மு இன்னும் வரலை?’ என நினைத்துக் கொண்டிருக்கும் போது, ஏதோ கருகிய வாடை மூக்கில் நுழைந்தது. அதனுடன் இணைந்து எரிவாயு கசியும் வாடையும் வந்தது.

பதறி அடித்து சமையலறை சென்றவர், அங்கு கண்ட காட்சியில் காளி அவதாரம் எடுத்தார்.

பாத்திரத்தை விட்டு வெளியே பொங்கிய பால், அடுப்பை அணைத்து விட்டு தீய்ந்து போனது. அடுப்பை அணைக்க வேண்டும் என்பது தெரியாத அம்மு, காபி பொடியை எடுத்து வைத்துவிட்டு, சர்க்கரையை அலமாரியில் தேடிக் கொண்டிருந்தாள்.

விரைந்து சென்ற கஸ்தூரி அடுப்பை அணைத்துவிட்டு, “ஏன் அம்மு பாலை பொங்கி சிந்தவிட்ட?”

அம்மாவின் குரல் காதில் விழுகவும், அவரிடம் திரும்பிய அம்மு, “நான் பால் ஊத்தி வைக்கும் போது அரை தேக்சா இருந்துச்சு. கொஞ்ச நேரத்தில பார்த்தா பால் எல்லாம் மேல வர ஆரம்பிச்சிருச்சு. அது மேல வரவும், நான் பாலை பார்த்து, ‘மேல வராத கீழ போ கீழ போ’ அப்படின்னு சொன்னேன். ஆனா அதுக்கு என் மேல என்ன கோபமோ தெரியல, என் பேச்சைக் கேட்காம புசுபுசுவென மேலே வந்து வெளியே சிந்திடுச்சு.” என்றாள் முகத்தை அஷ்ட கோணலாக மாற்றி.

“ஏண்டி பால் பொங்குச்சுன்னா அடுப்பை அணைக்கணும்னு கூட தெரியாதா?”

“அதை எப்படி ஆஃப் பண்றது? அது தானா ஆஃபாகிடுச்சே. அப்புறம் நான் எதை ஆஃப் பண்ண?” என்றாள் புரியாமல்.

“ஏண்டி அடுப்பை ஆஃப் பண்ண தெரியாது. அப்புறம் எப்படி ஆன் பண்ண?” சந்தேகமாக கேட்டார்.

“அதுவா பிந்து பண்ணும்போது பார்த்திருக்கேன். அது மாதிரியே தீக்குச்சியை பத்த வச்சுட்டு, அந்த கருப்பா தெரியுதுல்ல அதை திருகி பார்த்தேன். திருகவே முடியல. அதுக்குள்ள தீக்குச்சி அணைஞ்சு போச்சு. அப்புறம் மறுபடியும் அந்த கருப்பா இருக்கிறத திருப்பி, திருப்பி, எப்படியோ கஷ்டப்பட்டு ஆன் பண்ணிட்டேன். அப்புறம் மறுபடியும் தீக்குச்சியை உரசி அடுப்பை பத்த வச்சிட்டேன்.” என பெரும் சாதனை புரிந்தது போல் பீற்றிக்கொண்டாள்.

அவள் கூறியதை கேட்டு, இறங்கி இருந்த கஸ்தூரியின் தலைவலி ஏறியது. கொலைவெறியுடன் அவளை முறைத்தார். அவளோ ஒன்றும் தெரியாத அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.

அப்போது அவள் கைகளில் இருந்த டப்பாவை கவனித்தவர், “காபி போட அந்த டப்பாவை எதுக்குடி எடுத்திருக்க?”

“இது என்ன சின்ன புள்ளத்தனமான கேள்வி?”

“கேக்கற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.” என பல்லை கடித்தார்.

“என்னமா நீ? உனக்கு காபி போட கூட தெரியாதா? காபி போடறதுக்கு சக்கரை வேண்டாமா?”

“ஏண்டி உப்பை கையில வச்சுக்கிட்டு, எனக்கு காபி போடத் தெரியாதுன்னு சொல்றியா? பதினாறு வயசு பொண்ணு உனக்கு உப்புக்கும் சர்க்கரைக்கும் கூட வித்தியாசம் தெரியாதா?” என்றார் நொந்து போன குரலில்.

அவர் கூறியதை கேட்டு திருதிருவென முழித்தவள், “ஓ இதுதான் உப்பா? சரி விடுமா ரெண்டும் வெள்ளை கலர்ல தானே இருக்கு, எத போட்டா என்ன?”

“அடி செருப்பால. சக்கரைக்கு பதில், உப்பு போட்டு தருவாளாம். உன்னை இந்த பூரிக்கட்டையாலே நாலு போடு போட்டா, இனி சக்கரைக்கும் உப்புக்கும் வித்தியாசம் தெரியும்.”

“போமா! உனக்கும் அந்த பால் மாதிரியே புசு புசுன்னு கோபம் வருது.”

“இப்பயே உன்ன நாலு சாத்து சாத்துல, நீ எல்லாம் உருப்பட மாட்ட.” என்றவர் அவளை அடிக்க துரத்தினார். 

“ஐயையோ மீ எஸ்கேப்.” என்று அங்கிருந்து ஓடியவள், தோட்டத்திலிருந்த பிருந்தாவின் பின் ஒளிந்து கொண்டு, “பிந்து, பிந்து, அம்மா என்னை அடிக்க வராங்க. காப்பாத்து.” என சகோதரியிடம் அடைக்கலம் புகுந்தாள்.

அதன் பின் பிந்து இடையில் புகுந்து, அம்மாவை சமாதானப்படுத்தி, அம்முவை அவரது அடியில் இருந்து காப்பாற்றினாள்.

அந்நிகழ்வை நினைக்கும் போது பிருந்தாவின் முகத்தில் இப்போது அழகான புன்னகை தோன்றியது.

எத்தனை ஆசைகளோடு இந்த தோட்டத்தை பராமரித்திருப்பாள்? எத்தனை பொழுதுகள் தன் உடன் பிறப்புடன் இந்த தோட்டத்தில் சிரித்து மகிழ்ந்திருப்பாள்? எத்தனை முறை தன் அன்னையின் அடியிலிருந்து தப்பிக்க,  இந்த தோட்டத்தை சுற்றிய தன் சகோதரியை காத்திருப்பாள்? எத்தனை முறை குட்டீஸ்களுடன் இணைந்து சகோதரியும் தானும் நீரடித்து விளையாடி இருப்போம்?

இன்னும் எண்ணற்ற நினைவுகளை இந்த தோட்டம் தன்னுள்ளே அடக்கியுள்ளது. அதை இப்போது நினைக்கும் போது பிருந்தாவின் முகத்தில் புன்னகை அதிகரித்தது. கூடவே சகோதரியின் ஞாபகமும்.

சமையலறை பக்கமே சென்று அறியாத அம்மு, இப்போது நன்றாக சமைக்கிறாள். ‘அது யாருக்காக?’ நினைக்கும் போதே, மனதில் சுருக்கென்று வலி உண்டானது. 

எப்போதும் மகிழ்ச்சியும் குதூகலமாக சுற்றி வரும் தன் உடன் பிறந்தவளை எங்கு தொலைத்தேன்? இப்போதும் அவளது முகத்தில் புன்னகை இருக்கிறது. ஆனால் அது உதட்டளவில் மட்டுமே நின்றுவிட்டது. 

அவளது மகிழ்ச்சி மட்டுமின்றி, மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் கடந்த சில மாதங்களாக காணாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை நினைத்தவளின் முகம் இறுகியது. கடந்த இரண்டு வருடங்களாக, அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி மனம் அசை போட்டது.

★★★

அதே நேரம் இங்கு சென்னையில், அம்மு தன்னிடமிருந்து தப்பி சென்ற நண்பர்களை ஒரு வழியாக பிடித்தாள்.  அவர்களுடன் கட்டி புரண்டு சண்டையிட்டு முடித்து,  ஒருவழியாக சமாதானமாகினாள். 

தலை கலைந்து, உடை கசங்கி, அலங்கோலமாக காட்சியளித்த நண்பர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து கலாய்த்து கொண்டனர். களைத்திருந்தாலும் அவர்களது முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது. 

“உங்க படிப்பெல்லாம் எப்படி போகுது?” திடீரென கேட்ட அம்முவின் கேள்வியில், அனைவரின் முகமும் அஷ்டகோணலாகியது.

“சொல்லுங்கடா” மிரட்டினாள்.

“உன்னளவுக்கு இல்லைனாளும் ஏதோ சுமாரா போகுது.” என்ற கிட்டுவின் மதிப்பெண் எண்பது இரண்டு விழுக்காடு.

அம்மு அவனை முறைக்க, “போ அம்மு, எப்ப பார் படிப்பு, படிப்புன்னு போரடிச்சு போச்சு.” என அழுத்து கொண்ட சோட்டு எழுபத்து ஒன்பது விழுக்காடு.

“எத்தனை பேர் படிக்க டைம் இல்லாமல் கஷ்டப்படுறாங்க. உங்களுக்கு எல்லாம் ரொம்ப கொழுப்பா போச்சு.” என ஆதங்கத்தில் பேசிய அம்முவை நெருங்கிய பப்பு, “ஒர்க் வொயில் ஒர்க். ப்ளே வொயில் ப்ளே. என்ற ஆங்கில பழமொழிக்கு ஏற்ப படிக்க வேண்டிய நேரத்துல படிப்போம்.” என்றவன் எண்பது விழுக்காடு.

ஏதோ சொல்ல வந்த அம்முவை தடுத்து, “கவலைப்படாத அம்மு. நீ காலேஜ் பிரின்ஸ்பால் கிட்ட, ப்ராமிஸ் பண்ண மாதிரி நாங்க நல்லா மார்க் வாங்குவோம்.” என்ற பிங்கி எண்பது எட்டு.

அனைவருமே படிப்பில் முதல் நிலை மாணவர்கள். அதனால் தான் அம்மு தைரியமாக கல்லூரி முதல்வரிடம் வாக்கு கொடுத்து அவர்களை அழைத்து வந்தாள்.

சூழ்நிலை இறுக்கமாவதை கண்ட சோட்டு, அவர்களை மாற்றும் பொருட்டு, “ஆனாலும் பிங்கி, உனக்கு அப்படி ஒரு ஆசை வந்த பிறகு, நீ எப்படி நல்ல மார்க் வாங்குவ?” என பிங்கியை வம்பிழுத்தான். 

ஒன்றும் புரியாமல் முழித்தவளை, பார்த்து, “இன்னிக்கு காலேஜ்ல இருந்து கார்ல வரும்போது அம்முகிட்ட என்ன கேட்ட…?” என முடிக்காமல் ராகமிழுத்தான்.

பிங்கிக்கு அவன் சொல்ல வருவது புரிந்ததும், “சோட்டு வாய மூடு. நீ எதுவும் சொல்ல வேண்டாம்.”

அவள் தடுத்ததும், என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்ட பப்புவும் கிட்டுவும், “சோட்டு, பிங்கிக்கு என்ன ஆசை வந்தது?” 

“அது அவளுக்கு கல்…” அதோடு அவனது வாயை பிங்கியின் கரம் மூடியது.

“டேய் சோட்டு நீ வாய தொறந்த, உன்னை கொன்னு போடுவேன்.” இப்போது மிரட்டலோடு எச்சரிக்கை வந்தது.

அதற்கெல்லாம் அசருபவனா நம்ம சோட்டு, அவளது கரத்தை தள்ளிவிட்டவன், “அவளுக்கு கல்யா…” மீண்டும் வாய் மூடப்பட்டது.

இந்த முறை அவளது கரத்தை விலக்கியவன், முன்னெச்சரிக்கையோடு அவளிடமிருந்து விலகி சென்று, “அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னு ஆசை வந்துருச்சாம்.” என சத்தமாக சொல்லியவாறு ஓடி மறைந்தான்.

பிங்கியின் முகம் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்து போனது. தன் அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருந்த பிங்கி, அப்போது அங்கு நுழைந்த ருத்ராவை கண்டதும், “மாமா” என ஓடிச்சென்று அவனது நெஞ்சில் முகம் புதைத்து தேம்பித் தேம்பி அழுதாள்.

அவள் எதற்காக அழுகிறாள் என ஒன்றும் புரியாமல் முழித்த ருத்ரா, அங்கு இருந்தவர்களை தன் கூர்விழியால் அளவெடுத்தான். அவர்களது முகத்தை வைத்து ஒன்றும் அறிய முடியவில்லை.

“என்னாச்சுடா பட்டு ஏன் அழுகுற?” தன்னிடமிருந்து அவளை பிரிக்க முயன்றான். அவள் அசைந்தால் இல்லை.

பொறுமை என்பதே இல்லாத ருத்ரா, தன் நெஞ்சிலிருந்த சிறியவளின் முகத்தை நிமிர்த்தி பொறுமையாக, அதேசமயம் அழுத்தமாக “சொல்லுடா பட்டு, எதுக்கு இந்த அழுகை?” 

அவனது குரல் அழுத்தத்தில், நடந்த முழுவதையும் தேம்பியவாறே சொல்லி முடித்தாள். அதுவரை ‘எதுவும் பிரச்சனையில் மாட்டி கொண்டாளோ?’ என பயந்திருந்த ருத்ராவின் மனம், இப்போது ‘அப்பாடி இவ்வளவுதானா?’ என நிம்மதி மூச்சு விடுத்தது.

“உன்னோட பிரெண்ட், உன்னை சும்மா வம்பு இழுத்திருப்பான். அதுக்கு இவங்க உன்னை தப்பா நினைப்பாங்களா? உன் பிரண்ட்ஸை நீ புரிந்து கொண்டது இவ்வளவுதானா? உண்மையான அன்பு இருக்க இடத்தில் புரிதல் தானா வரும். உனக்கு அவங்க மேல அன்பு இல்லையா?” என சரியான இடத்தில் தாக்கினான்.

‘ஊருக்கு தான் உபதேசம் போல.’ என அம்முவின் மனம் நொடித்துக் கொண்டது.

இவ்வளவு நேரம், வாய் பிளந்து அவன் பேசுவதை கேட்ட பிங்கிக்கு, அவர்கள் மேல் அன்பில்லை என்று சொல்லவும் கோபம் வந்துவிட்டது, “அவன் சும்மா கிண்டலுக்கு சொன்னான். அது எனக்கு தெரியும். அவங்கள நான் சரியா புரிஞ்சு வச்சிருக்கேன்.” என்று சிறுபிள்ளையாக மிலற்றியவளின் அழுகை நின்றிருந்தது.

“அவங்களை நீ சரியா புரிஞ்சிருந்தா இதுக்கு அவசியமென்ன?” தன் சட்டையில் படிந்திருந்த அவளது கண்ணீர் கரையை காட்டினான்.

“அது… அது…” பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய பெண்ணை, பசங்கள் மூவரும் நெருங்கி சமாதானப்படுத்தினர். அதன் பிறகே அவளது முகம் பளிச்சென்றானது.

சில மணி நேரங்களுக்கு முன், ‘சிறு பெண்ணுக்கு திருமணமா?’ என தான் நினைத்ததை மறந்த அம்மு, “ஆனாலும் பிங்கி, கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு இவ்வளவு பயம் கூடாது?” வாயை விட்டிருந்தாள்.

“போ அம்மு, உனக்கு ருத்ரா மாமா மாதிரி நல்லவங்க கிடைச்சிட்டாங்க. நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ.” அவன், அம்முவை படுத்திய பாடு, கொஞ்ச நஞ்சமில்லை என்பது தெரியாத பிங்கி தன் ஆதங்கத்தில் பேசினாள்.

இப்போதாவது இந்த அம்மு வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கலாம், அப்போது அவளது நாவில் சனி பகவான் குடி கொண்டிருந்தார் போல, “ஆமா உன்னோட மாமாவ நீ தான் மெச்சிக்கணும்.” இகழ்ச்சியாக இதழ் சுழித்தாள். 

சுழித்த அந்த இதழை, தன் இதழ் கொண்டு சிறை எடுக்கும் வேட்கை பிறந்தது ருத்ராவின் மனதில். கோபத்துடன் இணைந்து தாபமும் உண்டானது.

“உனக்கு வேண்டாம்னா போ. நான் மாமாவை கட்டிக்கிறேன்.” என அம்முவிடம் சொல்லியவள், ருத்ராவிடம் திரும்பி, “மாமா, நீ அம்முவை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கோ.” என்றாள் விளையாட்டாக.

“அவ்வளவுதான பட்டு, டைவர்ஸ் ஆகவும் முதல் வேலையே அதுதான்.” அம்முவை வெறுப்பேற்ற சின்னவளுக்கு எசப்பாட்டு பாடினான்.

அவன் கூறியதை கேட்ட அம்முவின் முகம் சுருங்கியது. ‘நான் உனக்கு அவ்வளவு கசந்துட்டேனா கட்டவண்டி?’ என மனதில் நினைத்தவள், அந்த இடத்தை விட்டு அகன்று, அவளது விருப்ப இடமான தோட்டத்தை அடைந்தாள். அவளது மூளை பழைய நினைவுகளை தூண்டியது.

அம்மு எங்கே இருப்பாள் என தெரிந்த ருத்ரா, சிறிது நேரத்திற்கு பின் தோட்டத்தை அடைந்தான். அங்கு சோக சித்திரமாக அமர்ந்திருந்த, ஓவியப் பாவையை கண்டு வாசலில் தேங்கினான். ‘இப்படி நம்ம தனிமையில் தவிக்கவா உன்னை அவ்வளவு ஆசைப்பட்டு, போராடி கல்யாணம் பண்ணேன் நீலாம்பரி?’ என்றவனின் நினைவும், தங்கள் திருமண நிகழ்வுக்கு அம்முடன் பயணித்தது.

தன் மிருவின் முகம் சுருங்கியதை கண்டு மனம் வருந்திய ரிஷி, அவனது அறையில் அடைந்து மனதில் சேகரித்த நினைவுகளை அசை போட்டான்.

ராகம் இசைக்கும்