ராட்சசியே உன் ரட்சகன் நான் 2

IMG-20211115-WA0021-4c5d0de2

ராட்சசியே உன் ரட்சகன் நான் 2

 

வண்ணமயில் முருகன் திருவடி

விரும்பி உனை தொழுதேன் தினசரி

சின்ன குகன் கந்தன் மலரடி

நினைந்து உனை பணிந்தேன் அனுசரி

சரணடைந்தேன் உன்னிடமே…

அருள்தருள்வாய் அனுதினமே…

 

கைகூப்பி மனமுருகி வேணி பாட, அருளருகே நின்று அவளைப்போலவே கைகூப்பி, தன் சின்ன குரலில் பின்பாட்டு பாடினான் அந்த நாலு வயது சிறுவனும்.

 

வணங்கி முடித்ததும், அவன் நெற்றியில் திருநீறு பட்டை இட்டவள், தன் நெற்றியிலும் கீற்றாக இட்டு கொண்டாள்.

 

அந்த சிறுவன், “உனக்கு மத்தும் சின்னதா வச்சிக்கித, எனக்கு மத்தும் பெருசா பத்த போதுற” என்று தன் கையில் திருநீற்றை அள்ளி அவள் நெற்றியில் அப்பி பட்டை இட்டான் அவன்.

 

“டேய்… கதிரு” என்று அலறியவளின் கண்களில் திருநீறு பட்டு உறுத்தலானது. அவள் கண்களைக் கசக்கவும், கதிர் சற்று மிரண்டு விட்டான்.

 

“அய்யோ பாத்தீ… வாணி அலுவுது வா…” பேரனின் அலறல் கேட்டு, கௌரி ஓடி வந்தார்.

 

அங்கே, வாணி கண்களை திறக்க முடியாமல் அவதிப்பட்டிருக்க, பக்கத்தில் கதிர் உதடுகள் பிதுங்க அழுகைக்கு தயாரானான்.

 

“டேய் கதிரு, எனக்கு ஒன்னும் ஆகலடா, திருநீறு கண்ணுல பட்டுடுச்சு, அவ்வளோதான், சரியாயிடும்” என்று வேணி அவனை சமாதானம் செய்தாள்.

 

அவர்கள் அருகில் வந்த கௌரி, “நீ போய் முகத்தை கழுவிட்டு வா வேணி” என்று மகளை அனுப்பிவிட்டு, “நீ சாப்பிட வாடா, எப்ப பார்த்தாலும் ஏதாவது சேட்டை செஞ்சு வைக்கறடா” என்று அலுத்துக் கொண்டார்.

 

“இல்ல பாத்தி, நான் சாமி பொத்து வச்சேன், வாணி அலுவுச்சு” என்று விளக்கம் கூறினான் அவன்.

 

“ம்ம் சரிதான், வயசு நாலு ஆகுது, ஆனா இன்னும் டானா, ழனா சொல்ல வரல உனக்கு?‌ பொட்ட பொத்துங்கிற, பாட்டிய பாத்திங்கிற, உன் டீச்சர் ரொம்ப பாவம்டா.” 

 

அவர் டீச்சர் பற்றி பேச்சு எடுத்ததும் நினைவு வந்தவனாக, ‌”பாத்தி, சர்மி தீச்சர், என்னை குத் சொன்னாங்க” என்று பெருமையாக சொன்ன பேரனின் மழலையில் அவருக்கு‌ சிரிப்பு தான் வந்தது.

 

முகத்தை துடைத்துக்கொண்டு அங்கே வேணி வர, “நம்ம கதிருக்கு எப்ப டானா உச்சரிப்பு சரியா வரும் வேணி? எனக்கு என்னவோ கவலையா இருக்கு. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டலாமா?” என்று கவலையாக கௌரி கேட்டார்.

 

“அதெல்லாம் அவசியம் இல்லமா, ஸ்கூல் போறான்ல இப்ப. பசங்க கூட பேச பேச சரியாகிடும், நீ‌ கவலைபடாத மா” என்றவள், தட்டை எடுத்து இட்லி, தேங்காய் சட்னி வைத்துக்கொண்டு, தானும் சாப்பிட்டபடி, கதிருக்கும் ஊட்டிவிட்டாள்.

 

“வேணி காலேஜ் போறேன் கதிரு, பாட்டிய தொந்தரவு பண்ணாம நீ சமத்தா இருப்பியாம்… நான் ஈவ்னிங் வரும்போது உனக்கு குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருவேனாம் சரியா?” என்று சொல்லபடி ஊட்ட,

 

வாய்க்குள் இட்லியை அதக்கியபடி, “குச்சிமித்தாய்… குவ்வி ரொத்தி…” என்று சிரித்தான் அவன். அவனோடு சேர்ந்து வேணியும் சிரித்தாள்.

 

இருவரையும் பார்த்திருந்த கௌரி முகத்தில் வாட்டமும் கவலையும் பரவியது. அதை கவனித்தவள், “என்னாச்சு மா?” என்று வினவ,

 

“போராட்டம், போலீஸ் கம்ப்ளைன்ட்னு தேவையில்லாத பிரச்சனைய இழுத்துக்கிற வேணி நீ‌… இந்த வம்பு தும்பெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று கௌரி ஆதங்கப்பட்டார்.

 

வேணியின் முகம் இறுகி போக, “அதுக்குனு கண்ணுக்கு நேரா ஒரு பிரச்சனை நடக்கும்போது என்னை சும்மா பார்த்துட்டு இருக்க சொல்றீயா ம்மா?” அவளும் ஆவேசமாக கேட்டாள்.

 

“நீ சாகணும்னு புலம்பினவன தான கொன்னிருக்கான். அதைப்பார்த்து உனக்கும் சந்தோசம் தான் இல்லயா?” 

 

“என்ன எல்லாரும் இப்படியே சொல்றீங்க… கெட்டவனோ, நல்லவனோ யாரை கொன்னாலும் கொலை கொலை தானே…! அந்த ரௌடி கொன்னதுல இவன் ஒருத்தன் கெட்டவன்கிறதால, அவன் கொன்ன எல்லாருமே கெட்டவங்க தான்னு உன்னால சொல்ல முடியுமா?”

 

அவள் ஆவேச பேச்சில், குழந்தை பயந்து சிணுங்கினான். “ஒன்னுல்ல பட்டு நீ சாப்பிடு” என்று அவனை சமாதானம் செய்து அடுத்தவாய் ஊட்டி விட்டு அம்மாவிடம் திரும்பினாள்.

 

“வெளி பிரச்சனைனா நமக்கென்னனு நாம இப்ப ஒதுங்கி இருந்துக்கலாம், நாளபின்ன நமக்கே பிரச்சனை வராதுன்னு என்ன நிச்சயம்?” 

 

“நீயே வீணா பிரச்சனையை இழுத்து விட்டுக்காதன்னு தான் நான் சொல்றேன்… அந்த ரௌடி பய கூட மோதுற வேலையெல்லாம் உனக்கு வேணாம். வயசு பொண்ணு உன்னையும் விவரம் தெரியாத‌ குழந்தையையும் வச்சிட்டு அல்லாறது எனக்குத்தான் தெரியும். நீ வீண் ஏழறைய இழுத்து விடாம இரு” என்றார் கௌரி காட்டமாக.

 

அப்போது வாசலில் கௌரியின் மாமனார் கோதண்டம் இருமும் சத்தம் கேட்டது. “இந்த கிழவனும் இருக்கேன் ம்மா கௌரி” என்றபடி அங்கே வந்தார்.

 

“நீங்க இல்லனு யாரு சொன்னது ப்பா, உங்க பேத்திக்கு நல்ல புத்திமதி சொல்லி வைங்க” என்றதும்,

 

“அம்மா வேணி…” அவர் பேச்சை ஆரம்பிக்கவும், “சாரி தாத்தா டைம் ஆச்சு, நான் கிளம்புறேன். நீங்க ஈவ்னிங் உங்க லெட்சர ஸ்டார்ட் பண்ணுங்க” என்று நழுவிக் கொண்டவள், அடுத்த ஐந்து நிமிடங்களில், தாத்தா, அம்மா, மகனிடம் விடைபெற்று அவள் பணிபுரியும் கல்லூரிக்கு கிளம்பினாள் வேணி.

 

***

 

“ஏய், அதெல்லாம் இங்க பண்ண முடியாது, கிளம்பு கிளம்பு” லெஃப்ட் ஒரு இளைஞனை அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்தான்.

 

“இதெல்லாம் நீங்க செய்வீங்கன்னு விசாரிச்சு தெரிஞ்சு தான் வந்திருக்கேன்… எவ்வளோ பணம் வேணாலும் தரேன், இந்த வேலை எனக்கு முடிச்சு கொடுக்கணும்” அவன் நகராமல் கோபமாக கத்தி பேசினான். 

 

அவன் குரலை கேட்டு வெளியில் வந்த பாண்டி, “ஏ என்னா பிராபுளம் உனக்கு?” முகத்தைச் சுருக்கி கொண்டு கேட்க,

 

“நீ தான கிங்? எனக்கு தெரியும்… பணம் கொடுத்தா என்னவேணா செய்வன்னு சொன்னாங்க…” என்று அதிகாரமாக பேசிய இளைஞனை, அவன் கூர் பார்வை மேலும் கீழுமாக அளந்தது.

 

“உனக்கு என்னா செய்யணும்? அத்த மொதல்ல சொல்லு” என்றான்.

 

“நான் ஒரு பொண்ண லவ் பண்ணேன், ரெண்டு மாசம் அவ பின்னாடி என்னை அலயவிட்டு இப்ப என்னை காதலிக்கவே இல்லனு சொல்றா… அவளுக்கு ரொம்ப அழகுனு திமிரு… அந்த அழகு அவளுக்கு இல்லாம பண்ணணும்” என்றான் அவன் ஆவேசமாக.

 

பாண்டியின் நெற்றி தசைகள் சுருங்கின. “என்னா பண்ணுணும் அவள?” 

 

“என்னை வேணான்னு சொன்னால்ல… அவ மூஞ்சில ஆசிட் அடிக்கணும், அவ துடிச்சு வெந்து போறதை நான் பார்க்கணும்!” என்றான் அவன் குரூரமாக.

 

“டேய் மீச கூட முழுசா மொளைக்கல, அதுக்குள்ள ஒரு லவ்வு பெயிலியரு, இதுல ஆசீட் வேற எடுக்க சொல்ற… வேணாம்டா, ஒழுங்கு மரியாதையா கிளம்பிடு. இல்ல, சேதாரம் ஆகி போயிடுவ…” லெப்ட் அவனை எச்சரித்து விரட்ட,

 

“அதான் பணம் கொடுக்குறேன்னு சொல்றேன்ல்ல, இன்னும் என்னவாம்… நீங்க செய்யலனா வேற யாரு செய்வாங்கன்னு சொல்லுங்க, நான் அவங்கள பார்த்துக்கிறேன்” என்று எகிறினான்.

 

அவனை புருவங்கள் நெறிய பார்த்த பாண்டி, “எவ்ளோ பணம் வச்சிக்கீற?” என்று புருவம் உயர்த்தி கேட்க, அவன் தொகையை சொன்னதும், “சரி, அந்த பொண்ணு எங்க இருக்கும்?” என்று கேட்டான்.

 

“ஈவ்னிங் காலேஜ் முடிச்சிட்டு பஸ் ஸ்டாண்ட்ல காத்திருப்பா, அப்ப நான் கால் பண்றேன், நீங்க வந்திடுங்க…” என்றவன், தான் கொண்டு வந்த பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டு, லெஃப்டிடம் மொபைல் எண்ணை பெற்றுக்கொண்டு சென்றான்.

 

போகும் அவனை வெறுப்பாக பார்த்து‌ நின்ற லெஃப்டின் தோளைத் தட்டியவன், “நாம பார்க்காததா பாத்துக்கலாம் உடு லெஃப்டு, ஈவ்னிங் போணும் இல்ல, பொருள் ரெடி பண்ணி வை” என்று சொல்ல, “பண்ணிறேன் கிங்” என்று பெருமூச்செறிந்தான்.

 

***

 

மாலை, கல்லூரி முடிந்து வந்த வேணி,‌ தன் மாணவிகளுடன் பேசியபடி, அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

 

“இன்னைக்கு எங்க கூடவே வந்துட்டீங்க மேடம், ஓவர் டைம் இல்லயா?” 

 

“இல்ல நீலா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும். அதான் கிளம்பிட்டேன்.” 

 

“மேடம், எனக்கும் உங்களமாதிரி படிச்சு முடிச்சதும் வேலைக்கு சேரணும். சஜஸ்ட் பண்ணுங்களேன்?” மற்றவள் கேட்க, “ஓ ஷுர் மா, உன்னோட டிரீம் ஜாப் என்ன?” வேணி விசாரிக்க, அந்த பெண்ணும் ஆர்வமாக விளக்கினாள்.

 

அதேநேரம், அவர்களுக்கு எதிர்பக்க சாலை ஓரத்தில், பாண்டியும் அவனுடன் அந்த இளைஞனும் அந்த பெண்கள் குழுவை நோட்டம் விட்டபடி நின்றிருந்தனர்.

 

“அந்த குரூப்ல எது உன் ஆளு?” பாண்டி கேட்க, 

 

“அந்த புளு கலர் சேரி…” என்றவனை இடைமறித்த பாண்டி, “அந்தா உசரமா ஒல்லியா இருக்கே அந்த புள்ளயா?” என்று வேணியை நோக்கி கைநீட்டி காட்டினான். அவன் பார்வை அவள்மீது அழுத்தமாக படிந்தது.

 

“இல்ல, அது லெட்சுரர்… அந்த புளு சேரி பக்கத்துல, பிங்க கலர் சுடி போட்டிருக்கா இல்ல, அவதான்” என்றான்.

 

அவன் சொன்ன பெண், வேணியிடம் ஏதோ சுவாரஸ்யமாக சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பதைக் கவனித்தான்.

 

“சரி வா…” என்று பாண்டி முன்னால் நடக்க, “நான் எதுக்கு கூட வரணும்?” என்று மிரண்டு தயங்கியவனைத் திருப்பி பார்த்து, “நீதான அந்த பொண்ணு துடிக்கிறதை நேர்ல பாக்கணும்னு சொன்ன!” என்று கேட்டதும், ஆமோதித்து தலையாட்டிவன், பாண்டியின் பின்னோடு நடந்தான்.

 

வேணியின் பார்வை வட்டத்தில் அந்த ரௌடியின் உருவம் தென்பட, அவள் அவனை கண்களை விரித்து பார்த்தாள்.

 

சாதாரண ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டில், நுனி விரலால் மீசையை நீவியபடி, இவள் மீது அசையாத  பார்வை பதித்து அவன் நடந்து வரும் தோரணையே, அவளுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது.

 

அவன் அவர்களை நெருங்கி வர, பயந்தவள் தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை அழுத்திப் பற்றிக் கொண்டாள். 

 

அதேநேரம், கைகள் வீசி அவர்களை நோக்கி நடந்து வந்த பாண்டி, தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அமில முட்டையை எடுத்தான்.

 

என்னவென்று அவர்கள் யூகிக்கும் முன்னே, நொடிக்கும் குறைந்த நேரத்தில் அந்த நிகழ்வு நடந்து முடிந்துவிட, அடுத்து கேட்ட உயிரை உலுக்கும் அலறலில் அந்த இடமே அதிர்ந்தது…!

 

ஒரு நிமிடம் முன்…

 

பாண்டி அமில முட்டையை அந்த பெண்ணை நோக்கி ஓங்க… அதில் மிரண்ட வேணி தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலில் மீதமிருந்த தண்ணீரை அவன் மீது வீசினாள். அதில் சட்டென திரும்பியவனின் தோளைபட்டையை நனைத்தது தண்ணீர்… அதேசமயம் பாண்டி கையிலிருந்த திராவகம், அவன் பின்னால் நின்றிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பட்டு தெறித்தது.

 

அதில் அதிர்ந்தவன், அடுத்த நொடியில் அவன் தோல் கறுகிய வலியில் துடித்து அலறினான்.

 

“அ… ஆ… அய்யோ… எரியுதே… ஆ…”

 

அவன் தரையில் விழுந்து துடித்து அலறியது அங்கிருந்த அனைவரையும் உலுக்கியது.

 

அருகிருந்து அதை பார்த்த வாணி கண்களை இறுக மூடித் திறந்தாள். அவள் அருகே இருந்த அந்த பெண்ணோ, கண்கள் கலங்கி விரிய, தரையில் துடிப்பவனைக் கண்டு மிரண்டு போய் நின்றாள். 

 

இது எதுவுமே பாண்டியை பாதிக்கவில்லை போல, தண்ணீர் பட்டு நனைந்திருந்த தன் வலப்பக்க தோளை தட்டி விட்டவன், வேணி முன்னால் சொடக்கிட்டு, “என்மேலயே தண்ணீ ஊத்திட்டல்ல…?” என்று மிரட்டலாக எச்சரிக்கும் பார்வை பார்த்தான்.

 

ஒருவன் மீது திராவகத்தை ஊற்றி துடிக்கவிட்டு, சாதாரண தண்ணீர் ஊற்றியதற்காக முறைப்பவனை, வேணியும் மற்றவர்களும் அதிர்ச்சி அதிசயமாய் மிரண்டு பார்த்தனர்.

 

வேணி அருகில் மிரண்டு நின்றிருந்த பெண்ணை நேராக பார்த்தவன், “இது உனக்கு வச்ச டார்கெட் தான்… கொஞ்சம் மிஸ் ஆகிச்சு” என்று பாண்டி வெகு சாதாரணமாக கூறினான்.

 

அவன் சொன்னதை யோசிக்கவே, அவள் உடல் மொத்தமும் நடுங்க, பயந்து வேணியைப் பிடித்துக் கொண்டாள். வேணியும் அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டு, கண்கள் சிவந்து கலங்க அவனை ஆத்திரமாக முறைத்தாள்.

 

அவளின் முறைத்த முகத்தை கூர்ந்தவனின் நெற்றி தசைகள் சுருங்கி விரிந்து அவளை மிரட்டின.

 

அதுவரை அங்கே தரையில் அலறி துடித்தவனின் அலறல் அடங்கிவிட, அவன் நிலையைப் பார்த்தவர்கள் மிரண்டனர்.

 

“அய்யோ செத்துட்டானா…?” அதில் ஒருத்தி வாய்விட்டு கேட்டுவிட,

 

“ச்ச ச்ச மய்க்கம் தான், இதுக்கெல்லாம் செத்து தொலைய மாட்டான்” என்ற பாண்டியை இப்போது வேணி புழுவாக பார்த்தாள்.

 

அவள் பார்வை இவனை உரசி பார்த்தது. 

 

அதற்குள் அங்கே மருத்துவ அவசர ஊர்தி வந்துவிட, அந்த இளைஞனை ஏற்றிக்கொண்டு விரைந்தனர். 

 

பின்னோடு காவல்துறை வண்டியும் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஆய்வாளர் வீரமணி, அந்த இடத்தில் பார்வையை சுழற்றினார்.

 

“என்ன நடந்துச்சு இங்க? நீங்க யார்னா நேர்ல பார்த்தீங்களா…?” அவர் குரல் உயர்த்தி விசாரிக்க, வழக்கம்போல அங்கிருந்த யாருமே வாய்த்திறக்கவில்லை.

 

அவர் சலிப்பாக தலையை அசைத்துக்கொள்ள, “இன்ஸ்பெக்டர்… நான் சொல்றேன்” என்று வேணி பதில் சொன்னாள்.

 

அவர் அவளை நோக்கி வர, “இவன் தான்… இவன் தான்… அவன்மேல ஆசிட் ஊத்தினான்… நான் பார்த்தேன்” என்று தன்னை கைகாட்டி திக்கி திணறி சொன்னவளை, எரித்து விடுவது போல பார்த்து வைத்தான் பாண்டி.

 

அங்கே இருந்த பாண்டியை அப்போதுதான் கவனித்த வீரமணி, “கிங்கு… நீயா?” என்று சற்று அதிர்ந்து கேட்டார்.

 

“ஐய அது நான் இல்ல சார். இந்த பொண்ணு தான் தெரியாம உளருதுனா, நீங்களும் என்னை கேக்குறீங்களே?” என்றான்.

 

அவர் இப்போது அவனை மேலும் சந்தேகமாக பார்க்க, “என் செத்து போன‌ ஆயா மேல சத்தியம் சார், நம்பு சார்” பாண்டி  தன் கைகளை அடித்து சொன்னான்.  

 

“அப்ப நீ பண்ணலனா யாரு பண்ணது‌ கிங்கு?” அவர் அதிகாரமாக கேட்க,

 

“அப்புடி கேளு சார், நான் இப்படிக்கா நடந்துக்குனு வந்தேனா, அந்த பையன் இந்த பொண்ணயே காண்டா பார்த்துக்குனு வந்து கை ஓங்கிட்டான்… அந்த பொண்ண தான் அடிக்க போறான்னு நான் அவன் கைய சும்மா தட்டி விட்டேன் சார். அவன் கைக்குள்ள ஆசிட் வச்சிருப்பான் போல, அது அவன்மேலயே ஊத்திகிச்சு” என்று கதை‌ அளந்தவனை அங்கிருந்த அனைவருமே திகைத்து பார்த்தனர்.

 

“நம்புற மாதிரி ஏதாவது சொல்லு கிங்கு?” பாவம் அவன்விட்ட கதையில் இன்ஸ்பெக்டர் நொந்து போய் கேட்டார்.

 

“உன்கு நம்பிக்கை வரலனா, இந்த பொண்ணயே கேளு சார்” என்று அந்த பெண்ணை கைகாட்டி, “ஏன் தங்கிச்சி, நான் தான உன்ன காப்பாத்தினே, சொல்லு” என்றான்.

 

“ஐயோ இல்ல‌‌ சார் பொய் சொல்றான்” வேணி கத்தவும், அந்த பெண், “ஆமா சார்… அவன் தான் என்மேல ஊத்த வந்தான், இவர் தான் என்னை காப்பாத்தினாரு…” என்று அழுதபடி சொன்னாள்.

 

வேணி, அவளை திகைத்து பார்க்க, “நேத்து எனக்கு ப்ரோ…ப்ரோபோஸ் பணணான் சார், நான்… எனக்கு ஒத்து வராதுன்னு சொல்லிட்டேன்… என்னை திட்டிட்டு போயிட்டான்… இன்னிக்கு…” அவள் மேலே சொல்ல முடியாமல் அழுதாள். கொஞ்சம் தவறி இருந்தாலும் அவள் அல்லவா‌ வெந்து துடித்திருப்பாள்!

 

“பார்த்தியா சார், அந்த பொண்ணே சொல்லிச்சு, எனக்கு பியூர் கோல்ட் மன்சு சார், நல்லது பண்ணி தான் பயக்கம், வர்ட்டா” என்று ஒரு சலாம் வேறு வைத்துவிட்டு சென்றவனை, வேணியால் முறைக்க மட்டுமே முடிந்தது.

 

“சார் ப்ளீஸ், இந்த விசயத்துல என் ஸ்டூடன்ட நீங்க இழுக்காதீங்க… நான் ரிக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிறேன்” வேணி தன் மாணவிக்காக ஆய்வாளரிடம் பேசினாள்.

 

“ம்ம் சரிமா, ரூல்ஸ் படி அப்படி பொண்ணுங்கள கேஸ்ல இழுக்கவும்‌ கூடாது. எவனாவது ரிப்போர்ட்டர் கண்ணுல படறத்துக்குள்ள, நீங்கல்லாம் இங்கிருந்து கிளம்புங்க” என்றார் அவர்.

 

அவருக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு அவர்கள், ஆட்டோ பிடித்து கிளம்பி சென்றனர்.

 

தன் மாணவியை அவர்கள் வீட்டில் விட்டு, அவள் வீட்டு பெரியவர்களிடம் விவரம் சொல்லி, தைரியம் சொல்லிவிட்டு பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்திவிட்டு வேணி வெளியில் வர, மாலை மங்கி இருந்தது.

 

கைகடிகாரத்தில் மணியைப் பார்த்து நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள், வழியில் ஆட்டோ கிடைக்குமா என்று கவனித்தப்படியே முன்னேறி நடந்தாள்.

 

பின்னிருந்து அவள் வாயைப் பொத்தி யாரோ இழுத்து போக, பயந்து துடித்து‌ விதிர்விதிர்த்து விட்டாள். அருகிருந்த காருக்குள் அவளை தள்ளியவன், அதே வேகத்தில் சுற்றி வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.

 

அவனிடமிருந்து விலகி ஓட‌ முயன்றவளின் முயற்சி எல்லாம் அவனிடம் தோற்று போனது. “ஏய் என்ன விட்டுடு…” அவள் மூச்சுவாங்க கத்த, “என் ரூட்ல சும்மா சும்மா கிராஸ் பண்ற நீ, இன்னிக்கி உன்ன உடுறதா இல்லடி” என்றான் கிங் பாண்டி.

 

வேணி அதிர்ந்து அவனை பார்த்தாள்.

 

***