IMG-20211115-WA0021-f72432d0

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

ராட்சசியே உன் ரட்சகன் நான் 6

 

‘எவ்வளவு திமிர் இருந்தால் மறுமுறையும் தன் விருப்பமில்லாமல் இங்கே இழுத்து வந்திருப்பான்?’ என்று குமுறிக் கொண்டிருந்தாள் வேணி.

 

நேற்றும் இன்றும் நரகத்தில் இருப்பதைப் போல, அந்த பண்ணை வீட்டில் நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தாள். ஆம், இது பண்ணை வீடு தான். அதுவும் புதிதாக கட்டப்பட்ட வீடு என்று தெரிந்தது. ஆனால் அத்தனை கலைநயத்துடன் கட்டப்பட்ட வீடாக தோன்றவில்லை. 

 

இரண்டு மாடிகள் கொண்டு கீழும் மேலும் விசாலமான இரண்டிரண்டு அறைகள் வைத்து, கட்டப்பட்டு இருந்தது. ஹாலில் இருந்த சோபா, தொலைக்காட்சி தவிர, கீழிருந்த அறைகள் எல்லாம் எந்த பொருட்களும் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

 

மேலிருக்கும் இரண்டு அறைகளில் புது கட்டில் மெத்தை இருந்தது. அதில் ஓர் அறை முழுவதும் கதிர்வேலனின் விளையாட்டு பொருட்கள் மட்டுமே நிறைந்து கிடந்தது. ‘கொலை செய்த பணத்தில் ஊருக்கு வெளியே நிலத்துடன் புது கூடிய வீடு, மாட்டு பண்ணை, வாழுறான்டா கிங் பாண்டி!’ மனதிற்குள் கசப்பாக கௌண்ட்டர் கொடுத்துக் கொண்டாள்.

 

“வேணி வா வா… இங்க மாது இதுக்கு, நியைய மாது… கன்னுக்குத்தி கூட இதுக்கு, இங்க வா…” என்று கதிர் வேணியை இழுத்துச் செல்ல, மாடு கன்றுகளைக் கவனிக்கும் நிலையில் இல்லை அவள். 

 

நேற்றிரவு கதிருக்கு மீண்டும் காய்ச்சல் வந்திருக்க, மருந்து கொடுத்துப் பார்த்துக் கொண்டாள். தூங்கி எழுந்தவுடன் காய்ச்சல் விட்டிருந்தது. இன்று முழுவதும் மறுபடி அவனுக்கு காய்ச்சல் வரவில்லை என்பதில் அவளுக்கு நிம்மதி. குழந்தையும் இப்போது தெளிந்து இருந்தான். பழைய துறுதுறுப்பும் லொடலொட பேச்சும் அவனிடம் மீண்டிருந்தது. 

 

அவன் அறை முழுவதும் நிரம்பி கிடந்த விளையாட்டு பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து காட்டினான். 

இப்போது வேணி அருகில் இருப்பதால் அவன் துள்ளி குதித்து ஒவ்வொன்றையும் அவளுக்கு காட்டி சந்தோசப்பட்டான். ஆனால் அவன் காட்டிய எதையும் பார்த்து சந்தோசப்படும் நிலையில் தான் அவள் இல்லை.

 

நேற்று கதிரையும் வேணியையும் இங்கே இறக்கிவிட்டு போன பாண்டி, இதுவரை திரும்பி வந்திருக்கவில்லை. அவன் எப்போது வருவான் என்று தான் அவளும் காத்துக்கொண்டு இருக்கிறாள். எப்படியாவது அவனிடம் பேசி‌ புரியவைத்து கதிரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று மனதில் மறுபடி மறுபடி உருப்போட்டுக் கொண்டாள்.

 

ஆனால், இவள் சொல்வதைக் கேட்பவனா அவன்? என்று அவள் அறிவு அவளிடமே கௌண்ட்டர் விட்டது. 

 

வேறுவழி இல்லை கதிருக்காக வெட்கம், தன்மானம் விட்டு, பாண்டியிடம் கெஞ்சி கேட்டுவிட வேண்டியதுதான். அதற்கும் அவன் சம்மதிக்கவில்லை என்றால்… அவன் காலிலே விழ வேண்டியதுதான்! என்று எண்ணிக்கொண்டாள். 

 

கதிருக்காக எத்தனை கீழிறங்கவும் அவள் தயாராக இருந்தாள். பாண்டியோடு இருந்தால் கதிரின் எதிர்காலம் பாழ்பட்டு போகும் என்ற பயம் வேறு அவளைக் கவலையுறச் செய்தது.

 

அந்த நேரத்தில் தான் ஒருத்தி அவள் முன்னே வந்து நின்றாள். வேணி யாரென்று நிமிர்ந்து பார்க்க, ஆண்கள் அணியும் சாதாரண சட்டையும், பூப்போட்ட நீள பாவடையும் அணிந்திருந்தவளை, வேணி கண்கள் சுருக்கி பார்க்க, அதேநேரம் அந்த பெண்ணும் வேணியை மேலும் கீழும் எடைபோட்டு கொண்டு நின்றாள்.

 

“நீதான் கிங்கோட மச்சினிச்சியா?” அவள் கேட்டதில், வேணியின் முகம் கசப்பைக் காட்டியது.

 

“என்னை பத்தி தெரிஞ்சிக்கணும்னு உனக்கு அவசியமா என்ன?” வேணி கடுப்பாக கேட்க,

 

“ஏன் உன்ன பத்தி நானு தெர்ஞ்சிக்க கூடாதா என்ன?” என்று அவளும் கடுகடுத்தாள்.

 

“சும்மா என்னை டிஸ்டர்ப் பண்ணாத கிளம்பு.” வேணி அவளை விரட்டவும்‌, அந்த பெண்ணுக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது.

 

“என்னாமே எங்க கிங்க உஷார் பண்ணிக்கலாம்னு பார்க்கிறீயா?” அவள் கேட்க,

 

“ச்சீ அவனையாவது நானாவது… இப்ப எதுக்கு தேவையில்லாம பேசுற?”

 

“நீ எதுக்கு தேவையில்லாம இங்க வந்து குந்திகினு கீற? புள்ளய வச்சு கிங்க வளச்சி போட்டுக்க தான பிளான் பண்ணிகீற, அதலாம் நடக்காது. ஒன்ற வர்ச்சமா நானும் ரூட் உட்றேன், கிங்கு மடங்கணுமே ம்ஹூம்.” ஆதங்கமாக ஆரம்பித்து, பெருமூச்சோடு அவள் முடிக்க, வேணியின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.

 

“இதான் கிங்கோட மவனா? அப்பிடியே எங்க கிங்க உரிச்சிவச்சிகினு கீறான்.” என்று அவள் கதிரின் கன்னம் வழித்துச் சொல்ல, கதிர் வேணியை ஒட்டிக் கொண்டான்.

 

“க்கும், ஏன்டா நீயும் உன் அப்பனாட்டம் என்னை கண்டுகீறியா பாரு.” சுணங்கிக் கொண்டவள், “நானும் கிங்க உஷார் பண்ணிக்கினு அத்த மாறியே புள்ள பெத்து கைல கொடுத்துக்கலாம்னு டிரை பண்ணிகினே, எங்கே அது என்னாண்ட சிக்கிக்கில, உன் அக்கா எனக்கு முத்திகினு புள்ளயும் பெத்துக்கீறா…” என்று அவள் புலம்பி தள்ள, வேணி முகம் சுருக்கினாள்.

 

அவள் வாயை மூடாமல், “என் பேரு ராணி!” என்றாள் மொட்டையாக.

 

“உன் பேரை நான் கேக்கவே இல்லயே.” வேணி சலிப்பாக சொல்ல,

 

“நீ கேக்க மாட்டனு தெரியும் அதான் நானா சொல்லிகினே, என்னா பிரியலயா? நான் கிங்கோட ராணி! என் பேருக்கும் அது பேருக்கும் என்னமா மேட்ச் ஆகுது பார்த்தயில்ல.” ராணி தெனாவெட்டாக பேச, வேணிக்கு சிரிப்பு வரும்போல இருந்தது. 

 

‘மிஞ்சி மிஞ்சி போனால் இந்த பெண்ணுக்கு இருபத்தியொன்று இருபத்திரண்டு வயது இருக்குமா? என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய மனிஷி போல என்னமா வாயளக்கிறாள்?’ அவளைப் பற்றி எண்ணமிட்ட வேணி, அவளை வம்பிழுக்க, “கிங்கோட நிஜ பேரு பாண்டி தான் தெரியுமா?” என்று கேட்டாள்.

 

“அல்லாந் தெரியும். அது எப்பவும் எங்களுக்கு கிங்கு தான்.” என்றாள் ராணி அலட்டலாக.

 

“மாரி டூ பட்த்துல வந்துகிற மாறி, கிங்கு கூட எத்தனை தபா, ரௌடி பேபி டிரீம் சாங்கு போயிருப்பேன்னு தெரிமா? என் டிரீம் எப்ப நனவாகறது, ராணி எப்ப கிங்கு கூட டூயட் ஆடறதுனு நானே காத்துக்கினு கிடக்குறேன். நடுவுல வந்துகினு நீ ஆட்டய போடாலாம்னு பார்க்கறியா?” ராணி ஆதங்கமாக கேட்க, மறுபடி மறுபடி தன்னையும் அவனையும் சேர்த்து வைத்து பேசுவதில் வேணிக்கு கோபம் வந்துவிட்டது.

 

“மறுபடி என்னையும் அவனையும் சேர்த்து வச்சு ஏதாவது உளறுன… எனக்கு கெட்ட கோபம் வந்துடும்.” வேணி அவளிடம் சீற, 

 

“என்னா சவுண்டு இங்க?” அவர்களிடையே பாண்டியின் குரல் அதட்டல் விட்டது. கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வேக நடையிட்டு வரும் அவன் கெத்தில், ராணி அப்படியே உருகி கொண்டிருக்க, அவளை கலைப்பவனாக, “ஏய் உன்க்கு என்னடி இங்க வேல?” என்றான்.

 

“ம்ம் உன் புள்ளய பார்த்துகலாம்னு வந்துகினே.”

 

“பார்த்துட்டல்ல, கிளம்பு காத்து வரட்டும்.” அவன் விரட்டலில், வாயை கோணி காட்டிவிட்டு ஓட்டம் பிடித்திருந்தாள் ராணி. இத்தனை நேரம் தன்னிடம் அலட்டல் காட்டிவிட்டு, இப்போது அவனிடம் பம்மி கொண்டு ஓடுபவளை வேணி விசித்திரமாக பார்த்து வைத்தாள்.

 

“கதிரு, இப்ப ஜுரம் போய்கிச்சா, நாஷ்டா பண்ட்டியா?” என்று மகனிடம் வாஞ்சையாக கேட்டபடி, அவனை தூக்கி காற்றில் இரண்டு முறை சுற்ற, கதிர் கிளுக்கி கிளுக்கி சிரித்தான். ஆனால் வேணிக்குத் தான் பதறியது.

 

“அய்யோ, குழந்த பயப்பட போறான் இறக்கிவிடு.” என்று சத்தமிட, பாண்டி அவளை முறைத்தபடி கதிரை இறக்கி, தன் கையிலேயே வைத்துக் கொண்டான்.

 

“இன்னிக்கு தான் அவனுக்கு காய்ச்சல் விட்டிருக்கு, இப்படி சுத்தினா தலை சுத்தி போகும் குழந்தைக்கு, பயந்திடுவான் வேற.” அவனிடம் காய்ந்தாள்.

 

“ஏய், கம்முனு கிட, என் புள்ளய எப்பிடி வச்சிக்கினுனு தெரியும் என்க்கு.” பாண்டியும் அவளுக்கு நிகராக அவளிடம் காய்ந்தான்.

 

“என்ன தெரியும் உனக்கு, நேத்து சாயந்திரம் விட்டுட்டு போன குழந்தைய இன்னிக்கு சாயந்திரம் பார்க்க வந்திருக்க. இதுதான் நீ குழந்தைய பார்த்துக்கிற லட்சணமா? உடம்பு சரியில்லாத கொழந்தனு கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு?” அவள் அவனை குற்றம் சாட்ட,

 

“ஏய், அவனை பாத்துக்கதான உன்ன இட்டுக்கினு வந்துகினே, எனக்கு வேலைவெட்டி இர்ந்துக்காதா?”

 

“அடிதடி, ரௌடீசம், கை கால வெட்டறது, ஆள வெட்டறது, இதான உன் வெட்டி வேலை? ரொம்ப பெருமையான‌ பொழப்பு தான். பரம்பர தொழிலுனு நாளைக்கு கதிருக்கும் இதைதான் கத்து கொடுப்பியா?” வேணி படபடக்க, பாண்டியின் வலது கரம் அவள் கழுத்தைப் பிடித்திருந்தது.

 

“நானும் போனாபோவுதுனு உட்டா, ஓவரா பேசிக்கிற நீ.” என்று சீறியவனின் இரும்பு பிடியின் அழுத்தத்தில், அவளுக்கு மூச்சு திணற, கதிரும் புரியாமல் அழ தொடங்கி விட்டான். பாண்டி அவளை வேகமாக உதறியதில், வேணி தடுமாறி கீழே விழுந்து, வலித்த கழுத்தை பிடித்து கொண்டு, இருமினாள்.

 

“வேணி அழுவுது… வுது என்னை…” கதிரும் அவன் கையிலிருந்து நழுவிச் சென்று அவளைக் கட்டிக் கொள்ள, அவர்கள் இருவரையும் பாண்டியின் பார்வை நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. 

 

வேணி சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழவும், “சும்மா பேஜார் பண்ணிக்காத, கதிருக்கு பீவர் சரியாக்கிச்சு, நீ கிளம்பு.” அவன் சொன்னதும், வேணி அவனை முறைத்தபடி, குழந்தையைத் தூக்கிக் கொண்டாள். அவனை விடமாட்டேன் என்பதை போல.

 

“ஐய ரொம்ப சிக்கம் பண்ணிகிற நீ, கம்முனு இருந்துக்குனா கொட்டச்சலு கொடுக்குற, புள்ளய என்னாண்ட உட்டுட்டு உசுரோட கிளப்பிக்க.” அவன் விரல்  நீட்டி மிரட்ட, வேணி கதிரை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

 

“நான் எதுக்கு குழந்தைய உன்கிட்ட விட்டுட்டு போகணும்? இவன் என் அக்காவோட பையன். கதிரை பத்திரமா பார்த்துக்குவேன்னு அவகிட்ட வாக்கு கொடுத்து இருக்கேன். உனக்கு வேணுன்னா எவளையாவது கட்டிக்கிட்டு புள்ளைய பெத்துக்க, என் கதிரை மட்டும் விட்டுடு. இப்ப கூட வந்துட்டு போனாளே ஒருத்தி…” என்று ஆதங்கமாக சொல்லிவிட்டு மூச்சு வாங்க நிறுத்தினாள்.

 

“இத்தையே தான் உன்னாண்ட சொல்லிக்கிறேன். நீ எவனையாவது கட்டிக்கிட்டு… ஏன் நீ ஊரு சுத்தினுகீறீயே அந்த சோடாபுட்டியவே கண்ணாலம் கட்டிக்கினு ஒன்னில்ல எத்தினி புள்ள வேணா பெத்துக்க, நான் கேட்டுக்க மாட்டேன். என் புள்ளய பிரிக்க நின்ச்சா நான் கேட்டுக்குவேன்.” என்றவன் நக்கல் பேச்சில் அவளுக்கு சுறுசுறுவென்று ஏறியது. அதோடு ஜீவாவை அவன் சோடாபுட்டி என்று சொன்னதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவனிடம் பொறுமையாக பேச முயன்றாள்.

 

“ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரை பண்ணு. உன்னால தனியா குழந்தைய பார்த்துக்க முடியாது. உன் லைஃப் ஸ்டைல் வேற. இங்க வேலை பார்க்கறவங்க கூட ரௌடிங்க மாதிரி தான் இருக்காங்க…” அவள் பேச்சில் குறுக்கிட்டவன், 

 

“மாறி எல்லாம் இல்ல, எல்லாம் நம்ம பசங்க தான். ஒன்னா கூவத்துல நாறிக்கினு இருந்தவனுங்க தான். இப்ப அதுக்கு என்னாங்கீற?”

 

“இதுபோல சூழ்நிலையில குழந்தை வளர்றது சரியில்லை. அது‌ கதிரோட எதிர்காலத்துக்கு நல்லதாவும் இருக்காது. அவனுக்காக மட்டும் தான் நான் இவ்வளோ யோசிக்கிறேன். நீ ஏன் புரிஞ்சிக்க மறுக்கற.” வேணி நொந்தபடி பேசினாள்.

 

“இப்ப என்னாங்கிற, என் புள்ள உன்னாண்ட இருந்துகினா நல்லா இருந்துக்குவான். என்னாண்ட இருந்துக்கினா நாறிக்குவான்னா? நாங்க வெளில பாக்க தான் கலீஜ்ஜி உள்ள மன்சு அவ்ளோ சுத்தம், டை கட்டிகினு ஜோரா டிரஸ் போட்டுகினு இருக்கறவன் மன்செலாந்தான் சாக்கடையா கிடக்கும்.”

 

“ப்ச் நான் அதை மீன் பண்ணல… குழந்தைங்க நல்ல மனநிலையில வளரணும்னா குடும்ப சூழ்நிலை தேவை. இப்படி காட்டுமிராண்டி கூட்டத்துக்கு நடுவுடுல கதிர் வளர்ந்தா அவனோட மனநிலை எப்படி இருக்கும்னு நீயே யோசிச்சு பாரு.” வேணி நிதானமாகத்தான் பேசினாள். 

 

ஆனால் அவள் தங்களை காட்டுமிராண்டி என்றதில் அவனுக்கு கோபம் எகிறியது. “ஏய்… என்னா என்னாண்ட வந்து கலாய்கிறீயா?” அவன் அடிக்க வர,

 

“உண்மைய சொன்னா உனக்கு கோபம் தான் வரும்.” அவளும் கத்தினாள்.

 

“என்னடி உண்மைய சொல்லிக்கின? என் புள்ளய உன்னாண்ட உட்டு தர ஐடியா எனக்கில்ல. வீணா என்னாண்ட அடி வாங்கி சாவாத கிளம்பிடு.”

 

“புள்ளய பெத்துட்டா மட்டும் நீ அப்பனாயிடுவியா? பொண்டாட்டிக்கு கொல்லி வச்சிட்டு, பெத்த புள்ளய அனாதையா விட்டுட்டு ஜெயிலுக்கு போனவன் தான நீ. அன்னிக்கு நானும் கதிரை கண்டுக்காம போயிருந்தா, இன்னிக்கு நீ வந்து புள்ளனு உரிமை கொண்டாட முடியுமா?” 

 

வேணி ஆத்திரமாக கேட்டதில் பாண்டியின் நெற்றி நரம்புகள் புடைத்தன. “நைனா…” அவன் சத்தமிட்டு அழைத்ததில் அவர் அவர்களிடம் ஓடி வந்து நின்றார்.

 

“கதிரு நீ கேட்ட சாக்லேட்லாம் வாங்கியாந்து இர்க்கேன் பாரு. நைனா கொடுப்பாரு போய் வாங்கிய.” என்று குழந்தையை வேணியிடமிருந்து பிடுங்கி, நைனாவிடம் தந்து அனுப்பினான்.

 

சாக்லேட் என்றதும் குதித்தோடும் கதிரை, வேணியின் பார்வை பரிதவிப்பாக தொடர, பாண்டி சொடக்கிட்டதில், அவனிடம் திரும்பினாள். 

 

“நான் ரௌடி பையந்தான். ஜெயிலுக்கு போனவன் தான். பொறுக்கி, பொரம்போக்கு தான். என்னை பத்தி அல்லாந் தெரிஞ்சிகினு தான் உன் அக்கா என் பின்னாடி சுத்திக்கினா. என் ஒண்டி மேல வச்ச லவ்ஸ்காக தான் உங்க அல்லாரையும் தூக்கி போட்டு என்னாண்ட வந்துகினா, 

 

நான் அவளுக்கு புள்ளய கொட்த்ததால தான்டீ நீ இப்ப அக்கா புள்ளனு என்னாண்ட மல்லுக்கு நிக்கிற. நான் எப்பிடி இருந்துகினாலும் என் புள்ளக்கு நான் தான் அப்பன். அத்த உன் அப்பன் உயிரோட வந்துகினா கூட மாத்திக்க முடியாது.” 

 

அவளுக்கு பதிலடி தருபவன் போல, ஒவ்வொரு வார்த்தைகளையும் காட்டமாக அவள்மீது கடித்து துப்பினான். அவன் கிருஷ்ணவேணியைப் பற்றிச் சொன்னதும் அவளுக்கு கண்ணீரும் கோபமும் ஒன்றாக பொத்துக்கொண்டு வந்தது. 

 

“பாவி பாவி… உன்னயே உலகம்னு நம்பி வந்தவள வாழ விடாம பண்ணிட்டு கொஞ்சகூட ஈரமில்லாம பேசுற, அவ சாகுற அளவுக்கு என்ன பண்ணி தொலைச்ச…? இப்ப கதிரையும் வாழ விடாம சாகடிக்க பார்க்குறியா?” என்றவளை அறைந்து தள்ளும் ஆத்திரம் வர, கை விரல்களை மடக்கி, அடக்கிக் கொண்டவன்,  

 

“ஒழுங்கு மரியாதையா வாய மூடிகினு கிளம்பிடு. இல்லாகாட்டி… உன்ன என்னா செஞ்சுக்குவேன்னு எனக்கு தெரியாது.” என்று நாக்கை மடித்து மிரட்டல் விட்டான்.

 

“கதிர் இல்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன். பெருசா என்ன செய்ய முடியும் உன்னால, என்னை அடிப்பியா? இல்ல என்னை கொன்னுடுவியா? கொன்னுடு. கொல்றது உனக்கொன்னும் புதுசில்லையே, கேவலம் பணத்துக்காக கொலை பண்றவன் தான நீ…” என்றவளின் பின்னந்தலையைப் பற்றி அருகிருந்த சுவரோடு அழுத்தி இருந்தான்.

 

“வேணாடீ, என்னாண்ட ரொம்ப சீண்டிக்கிற நீ, என்க்கு பொறுத்து போகல்லாம் தெரியாது.” என்றவன் கழுத்து நரம்புகள் கோபத்தில் துடித்தன.

 

அவன் முரட்டுத்தனமாக அழுத்தியதில், பின்னந்தலை அத்தனை வலிக்க, மேலும் அவன் கையில் தான் இப்படி சிக்கி இருப்பதில், அருவருப்பும் அவமானமும் தோன்றி அவளை வதைத்தது.

 

“உன் இஷ்டத்துக்கு என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டு, என்கிட்ட இவ்வளோ கேவலமா நடந்துக்கிற, நீ என்ன செஞ்சாலும் கதிரை உன்கிட்ட விடமாட்டேன். நான் செத்தாலும் பரவால்ல. கிருஷ்ணாவ கொன்னுட்ட, என்னையும் கொன்னுடு, அப்புறம்… கதிரையும் கொன்னுடு. எல்லாரையும் கொன்னு போட்டுட்டு நீ மட்டும்‌ வாழு!” இயலாமையின் விரக்தியில், வலியைப் பொறுத்துக்கொண்டு வேணி பேசிக்கொண்டே போக, தனக்கு வரும் கோபத்தில் அவளை என்ன செய்வது என்று தெரியாமல், “ச்சே…” அவளை விட்டு விலகினான்.

 

இருவருக்கிடையே சற்று நேரம் எந்த பேச்சும் இருக்கவில்லை. பாண்டி தன் கைமுஷ்டியால் தன் நெற்றியை குத்திக்கொண்டு நின்றிருந்தான். யாருமற்ற அனாதையாக பிடிப்பின்றி அலைபவனுக்கு அவனது ஒரே இரத்த சொந்தம் அவன் பெற்ற பிள்ளை மட்டும் தான். அவனையும் தாரை வார்த்து விட்டால், அவனுக்கென்று என்ன இருக்கிறது? 

 

“தப்பு என்னாண்ட தான், ஜெயில்ல இருந்து வந்துக்கின உடனே, புள்ளய உன்னாண்ட இருந்து வாங்கி, நானே வளத்துகினு இருக்கணும். சின்ன கொய்ந்தைய பொம்பள இல்லாம எப்படி வளத்துக்கிறதுனு கொஞ்சம் கம்முனு இருந்துகினே.” என்று நிதானமாக பேசியவன், அவளிடம் திரும்பினான். வேணி கண்கள் கலங்கி முகம் கன்றி நின்றிருந்தாள்.

 

“இங்க பாத்துக்க, நானும் மனுசந்தான். எனக்கும் பொண்டாட்டி, புள்ளனு வாழணும்னு ஆசையெலாம் கீது. சீக்கிரம் கண்ணாலம் கட்டிக்கலாம்னு தான் முடிவெத்துகீறேன்… கதிரையும் நல்லா பார்த்துக்குவேன். நீ கவலப்பட்டுக்காத.” என்று முதல் முறை அவளிடம் சாதாரணமாக பேசியவனை, அவள் அசாதாரணமாக பார்த்து நின்றாள்.

 

திகைப்பில் அவள் கண்கள் பெரிதாக விரிந்து சிவக்க, “உன்ன நம்பி வந்தவளை கொன்னுட்டு இப்ப‌ வேறொருத்திய தேடிக்க பார்க்கற இல்ல, ச்சீ நீயெல்லாம் மனுசன்?”

 

“ரொம்ப தான்டீ உனக்கு, இதுவே நான் செத்து உன் அக்கா தனியா நின்னுருந்தா, அவளுக்கு புது வாழ்க்கைய அமைச்சு கொடுக்க நென்ச்சிருப்ப இல்ல. இப்ப நான் எனக்குனு யோசிச்சிக்கினா தப்பா?” அவன் லாஜிக் பேச,

 

அதை கண்டு கொள்ளாமல், “நீ எப்படினா போயிக்கோ. உனக்காக வரவ கதிரை எப்படி பாசமா பார்த்துக்குவா? இதையெல்லாம் யோசிக்க மாட்டியா?” என்றாள்.

 

“அது எங் கஷ்டம், அதுக்காகவல்லாம் கதிரை உன்னாண்ட கொடுத்துக்குவேன்னு கனவு கண்டுக்காத.” என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்தவன், மாட்டு தீவனம் கொண்டு செல்லும் குட்டி யானை வண்டியின் முன்புறத்தில் அவளை ஏற்றினான். வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் ரைட் உட்கார்ந்து இருந்தான். 

 

“உன்னாண்ட ஆர்கியூ பண்ணிக்க என்னாண்ட டைம் இல்ல. கதிரு இந்த கிங் பாண்டியோட புள்ள, மைண்ட்ல பிக்ஸ் பண்ணிக்கினு கிளம்பு.” என்றவன்,

 

“ரைட்டு, இத்த இது வூட்டாண்ட வுட்டுடு, ஜாக்கிரதை.” என்று சொல்ல, “சரி ண்ணா.” என்று சொன்ன ரைட், வேணியைக் கோணல் சிரிப்போடு பார்த்தபடி வண்டியை எடுத்தான்.

 

வேணி அவனை கண்டுகொள்ளவில்லை. இந்த ரௌடியிடம் இருந்து கதிரை மீட்க, ஜீவா சொன்ன வழிதான் சரியென்று யோசித்தாள். விரைவாக அவன்மேல் வழக்கு தொடுக்க முடிவெடுத்துக் கொண்டாள். 

 

(என்னங்கடா… உள்ள வெளியே ஆடிகினு கீறீங்க. கதிர் யாருக்குனு சீக்ரம் ஒரு முடிவுக்கு வாங்க பா, கதைய வேற எட்த்துகுனு போவணும்! ஆத்தர் பாவம் சும்மா விடாது சொல்லிகினே)

***


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!