RR 11&12

ரௌத்திரமாய் ரகசியமாய்-11

 

வானில் தோன்றிய வெளிச்சக் கீற்று அந்த அறையின் மெல்லிய திரைச்சீலையை தாண்டி லேசாக உள்ளே எட்டிப் பார்த்தது. இன்னும் சில நாழிகைகளில் பொழுது விடிந்து விடும். ஆனால்  அவன் இன்னும் உறங்கவில்லை காரிருளுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் அலை மோதினான் பரத்.

நாளுக்கு நாள் தொழிலில் அழுத்தம் கொடுக்கும் ருத்ரன் ஒரு புறம். கூடவே இருந்து குடைச்சல் கொடுக்கும் லால் ஒரு  புறம். நிரூபமாவின் நச்சரிப்பு  இன்னொரு புறம். இதில் தற்போது ரோஷினியும் சேர்ந்து கொண்டாள்.

அன்று ரோஷினி தன் குழந்தையை தாறுமாறாக அடிக்கும் காட்சி அவனுக்கு நேரலையாக காண்பிக்கப்பட்டது‌. (அது எப்படி என்று  பிறகு சொல்கிறேன்)

அந் நேரம் அந்த வழியாக பயணம் செய்தது கூட நல்லதாக போயிற்று. நிரூபமா அவனோடு இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அவன் சென்று கொண்டிருந்த வேலையையும் மறந்து அந்த இடத்திற்கு சென்றான். 

அனன்யா பிறந்தது முதல் அந்தக் குழந்தையை அவன் தூக்கிக் கொஞ்சியது கிடையாது‌. ஏன் அதன் தகப்பன் என்கிற ஸ்தானத்தையே வழங்க மறுத்தவன் அவன்.

அன்றொரு நாள் அவன் வேறு வேலை நிமித்தமாக மருத்துவமனை சென்ற போது தான்  முதன் முதலில் அனன்யாவை கண்டான். அவசரமாக ஸ்டச்சரில் கொண்டு வரப்பட்டது அந்த குழந்தை. அப்போது கூட அது அவன் குழந்தை என்று தெரியாது.

பக்கத்தில் மாயா கூட இருந்ததை கண்டவன் இது தன் குழந்தை என்று புரிந்து போனது. அதை விட அந்தக் குழந்தையின் தோற்றம். பால் நிறம். சுருள் சுருளான அழகிய சாக்லேட் நிறக் கூந்தல். குழந்தை படுத்திருந்த தோற்றத்தை பார்த்ததும் உள்ளுக்குள் ஏதோ நழுவியது போல் உணர்ந்தான்.

கூடவே அவர்களுக்கு பாதுகாப்பாக இரு கருப்பு உடை அணிந்த இரு பாதுகாவலர்கள் இருப்பதை கண்டு அமைதியாக சென்று விட்டான்.

ரோஷினியை அவனுக்குப் பிடிக்காது. அப்படியிருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு திருமணம் செய்து கொண்டான். இப்போதும் கூட அவளை வெறுக்கிறான். அவளை வதைக்க நினைக்கிறான்.

இத்தனை நாள் வரை அவன் குழந்தையை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியதில்லை. ஆனால் ஒரு முறை பார்த்த பின் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. அதனால் தான்‌ அன்று ரோஷினி‌ அனன்யாவை அடித்தது பொறுக்க முடியாமல் தான்  பல வருடங்கள் கழித்து அந்த வீட்டு வாசல் படியை மிதித்தான்.

அன்று அவன் குழந்தை யாரோ போல பார்த்ததை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ரோஷினியை அடியோடு வெறுக்கும் அவனால் தன் சாயலில் இருக்கும் குழந்தையை வெறுக்க முடியவில்லை.

அதிலும் அன்று அவள் ‘அப்படியே உன் அப்பன் குணம்’ என்று அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே ரோஷினியின் மீது அளவுகடந்த ஆத்திரம் வந்தது‌.

‘கண்டவன் குழந்தைக்கு எல்லாம் அப்பன் நானில்லை’ பல வருடங்களுக்கு முன் அவன் வெறுப்பாய் உமிழ்ந்து விட்டு வந்த வார்த்தைகள் இன்று அவனையே காயப்படுத்தியது. அவன் ரோஷினியை வதைப்பதற்காக கூறிய வார்த்தைகள் அவை. ஆனால் இன்று அவனை ஏதோ செய்தது.

மறு நாள் காலையில் அனன்யா படிக்கும் பள்ளிக்கு அமைந்திருக்கும் தெருவின் எதிரே காரை நிறுத்தி கவனிக்கத் துவங்கினான். காலையில் குழந்தை மாயாவுடன் காரில் வந்து இறங்கியது. டிரைவர் மாயா இருவரை தவிர வேறு யாரும் வரவில்லை என்பதை குறித்துக் கொண்டான்.

அதே போல் பள்ளி விடும் நேரத்திற்கும் அங்கு வந்து சேர்ந்தான். பிள்ளைகளை தங்களது பெற்றோரோ பாதுகாவலரோ அழைத்துச் சென்று கொண்டிருக்க அனன்யாவை அழைத்துச் செல்ல வரும் மாயா இன்னும் வரவில்லை.

பதினைந்து நிமிடங்கள் கடந்து விட்டது. ‘குழந்தையை அழைத்துச் செல்ல வராமல் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாள் இடியட்’ பொறுமையிழந்தவன் பள்ளிக்குள் நுழைந்தான். 

பள்ளி வளாகத்தில் போடப்பட்டிருந்த கல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்த எங்கேயே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

குழந்தையை தூரத்திலேயே கண்டவனது இறுகிய முகம் இளகியது. தானாகவே அவன் கால்கள் குழந்தையை நோக்கி நடந்தன. அவள் பக்கத்தில் நெருங்க குழந்தையின் பேச்சுக் குரல் கேட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை. பின் யாரோடு பேசுகிறாள்? என்ற யோசனையுடனே அவள் கவனம் சிதையா வண்ணம் மெல்ல அருகில் சென்றான்.

“உனக்கு ரொம்ப வலிக்குதா ஆல்வின்?”  என்று கீழே புல் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து கொண்டாள். அந்த புல் தரையில் ஒரு அணில் குட்டி இருந்தது. அதற்கு அடிபட்டு விட்டது போலும். அதை பரத்தும் கண்டான்.

புல் தரையின் மீது அசையாமல் கிடந்த அந்த அணில் குட்டியின் தலையை மெல்ல தடவினாள். அவளது பிஞ்சு முகம் கவலையை காட்டியது.

“மாயா வந்ததும் உன்னை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய் மருந்து போட்டு விடறேன். நீ சீக்கிரமா சரியாகிடுவ. அப்புறம் உனக்கு நிறைய ஃப்ரூட்ஸ் தர்றேன்” என்று அவள் இரு கைகளையும் விரித்து கண்களை உருட்டி பேசிய விதத்தில்‌ இவனுக்குமே சிரிப்பு வந்தது.

“ஆனா மம்மிக்கு அனிமல்ஸ் பிடிக்காதே. உன்னைய கூட்டிட்டு என்னை அடிப்பாங்களே” அவள் முகம் வாடி விட்டது.

‘ரோஷினி உன்னை…’ பற்கள் நறுக்க அவனது இளகிய முகம் மீண்டும் இறுகியது.

அவளது மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறாள்? எதற்கெடுத்தாலும் குழந்தையை அடிக்கிறாளா? அவளுக்கு இது போதாது. ரோஷினியை இன்னும் வதைக்க வேண்டும் என்றே தோன்றியது.

குழந்தையின் வாடிய முகத்தை அவனால் சகிக்க இயலவில்லை. அவளை தேற்றிட எண்ணி அவள் முன்னே செல்ல அமர்ந்திருந்த குழந்தை அவனை அண்ணார்ந்து பார்த்தது. அவளுக்கு வந்தவனை அடையாளம் தெரியவில்லை என்பது அவளது அந்நிய பார்வையிலேயே உணர்ந்து கொண்டான். உள்ளே வலித்தது. இருந்ததாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அவள் முன் அமர்ந்தான்.

“இந்த அணில் குட்டிக்கு ரொம்ப அடிபட்டுடுச்சா?”  அதை மெல்ல கைகளில் ஏந்தினான்.

யாரோ ஒருவன் அணில் குட்டியை அப்படி தூக்கியதும் பதறியவளாய்,

“அச்சோ அங்கிள் ஆல்வினுக்கு வலிக்கும்.” என்றாள்.

‘அங்கிள்’ என்ற அழைப்பில் அவன் தடுமாறினான். 

‘குழந்தைக்கு அதன் அப்பாவை ஃபோட்டோவிலாவது அடையாளம் காட்ட  வேண்டும் என்று கூட தோனவில்லையா? பாவி’ என்று உள்ளுக்குள் அவளை திட்ட ,

‘அது என் குழந்தையே இல்லை என்று‌ சொல்லி விட்டு வந்தவன் நீ.’ என்று‌ அவன் மனசாட்சி அவனையே குற்றம் சுமத்தியது.

பின் சமாளித்தவனாக, “அதெல்லாம் வலிக்காது. நாம இந்த அணில் குட்டிக்கு மருந்து போட்டு விடலாம்.” என்றான்.

“ஐ நிஜமாவா?” அவளது முகம் மலர்ந்தது. 

குழந்தையின் மலர்ந்த முகம் அவனுள் ஏதோ புது பரவசத்தை ஏற்படுத்துவதை உணர்ந்தவன்  ‘ஆம்’ எனத் தலையசைக்கும் அதே நேரம்,

“அனன்யா” 

அந்தக் குரல் கேட்டு திடுக்கிட்டவளாய் அனன்யா திரும்ப பரத்தும் திரும்பினான்.

அங்கு சக்கர நாற்காலியில் ரோஷினி அமர்ந்திருக்க, அருகே மாயாவும் நின்றிருந்தாள். ரோஷினியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“அனன்யா இங்கே வாடி” சீறினாள் ரோஷினி.

அன்னையின் சீற்றம் கண்டு பயந்தவள் நடுக்கத்துடன் மெல்ல நடந்தாள்.

குழந்தையை அவள்  அழைத்த விதத்தில் அவனுள்ளிருந்த அரக்கன் ஆட்டம் கண்டது. அதை விட குழந்தையின் கண்களில் தெரிந்த பயத்தில் அவன் மேலும் கொதித்தான். ஆனாலும் அது குழந்தையின் பள்ளி வளாகம் என்பதை கருத்தில் கொண்டு அமைதி காத்தான். அவனுக்கு அவனது குழந்தை முக்கியம். ரோஷினியை முறைக்க தவறவில்லை.

“மாயா அவளை அழைச்சிட்டு போ” அவளது கட்டளையில் மாயா அவளை அழைத்துச் சென்றாள்.

பரத்தை அவளும் வெறுக்கிறாள். அடியோடு வெறுக்கிறாள். முன்பும் அவனை பிடிக்காது. இப்போது அவனை அறவே பிடிக்காது. அவனை வெறுப்புடனே பார்த்தாள்.

“என் குழந்தையை நெருங்க ட்ரை பண்ணாத பரத்” எச்சரித்தாள்.

“இந்த நிலமையிலும் திமிரு. அனன்யா மேல ஒரு அடி விழக் கூடாது. மீறி ஏதாவது நடந்தது…” எச்சரிக்கையுடன் கூடிய அவனது இளக்காரமான பார்வை அவளது கால்களில் பட்டு நீங்கியது. அவன் சென்று விட்டான்.

அவனது இளக்காரமான பார்வையில் அவளது உள்ளம் கொதித்தது. முடிந்தால் இக்கணமே அவன் குரல்வளையை கடித்து துப்பி விடுவாள். அத்தனை ஆத்திரம் அவள் கண்களில் தெரிந்தது. ஆனால் அவளால் முடியவில்லை. தனது நிலையை எண்ணியவளது இதயம் வெடித்து விடும் போல் இருந்தது.

***

ருத்ரனும் அமரும் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவர்கள் வரவை எதிர்ப்பார்த்திருந்தவர்களோ சோர்ந்து போனார்கள். அந்நேரத்தில் எந்தப்பக்கம் செல்வது எனத் தெரியாமல் அந்த இடத்திலேயே காத்திருந்தனர். அதை விட அதற்கு மேல் ஓட முடியாமல் சோர்ந்து போனார்கள் என்று தான் கூற வேண்டும்.

“அவருக்கு என்னாச்சுன்னு தெரியலையே?” தாமிரா உண்மையில் கலங்கிப் போயிருந்தாள்.

இத்தோடு நூறு தடவைகளுக்கு மேல் இதே கேள்வியை கேட்டு கேட்டு சிந்துவை போரடித்து விட்டாள். தாமிராவின் கலக்கம் சிந்துவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அத்தோடு தாமிராவின் மனமும் அவளுக்குப் புரிந்தது. ஆனால் இது சாத்தியமற்ற ஒன்று. 

“தாமிரா லீவ் இட். அது உனக்கு மட்டுமில்ல உன் மொத்த குடும்பத்துக்குமே நல்லது” வெளிப்படையாக கூறாமல் அவளது தந்தையை நினைவு படுத்தினாள் சிந்து.

தான் கூறியது தாமிராவுக்கு புரியவில்லை என்பது அவள் பார்த்த பார்வையில் புரிந்து கொண்டாள். அதற்கு மேல் அவளும் அந்த பேச்சை வளர்க்க விரும்பவில்லை. வேறு பேச்சுக்கு மாறினாள்.

“தாமிரா இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருக்க போறோம். இரண்டு மணி நேரமா இங்கேயே தான் நின்னுட்டு இருக்கோம்” இதற்கு மேலும் இந்த இடத்திலேயே காத்திருப்பது முட்டாள் தனமாக தோன்றியது. 

“இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். இவ்வளவு நேரம் வராதவங்க இப்பே வர போறாங்களா என்ன? இவனுங்கள எப்போ பார்த்தோமே அன்னையிலருந்து நமக்கு சனி. லூசு மாதிரி இப்படியே இருக்குறதை விட்டுட்டு இந்த காட்டை விட்டு வெளியே போற வழியை பார்க்கலாம்” எரிச்சலாக வெளி வந்தன சிந்துவின் வார்த்தைகள். 

தாமிராவுக்குமே அது சரியெனப்பட்டது. என்ன தான் இருந்தாலும் யாரோ ஒருவனை இந்தளவு நம்பியிருக்க கூடாது. அவனை பாவம் பார்த்து உதவி செய்ய விழைந்ததன் பயன் இன்று அவள் இந்த நடுக் காட்டில் நிற்பது. தேவையற்ற பிரச்சினையிலும் சிக்கி ஓடிக் கொண்டு‌ இருக்கிறாள். அவளால் கூடவே சிந்துவும் சிக்கியிருக்கிறாள்.

“சாரி சிந்து‌ என்னால உனக்கும் பிரச்சினை” உண்மையாக வருந்தினாள் தாமிரா.

“ச்சே விடு. அந்த தடிமாடு ரெண்டும் செஞ்ச வேலைக்கு நீ என்ன பண்ணுவ” என்று‌ தன் தோழியின் வருத்தத்தை போக்க முயன்றாள்.

இந்தக் காட்டை பற்றி எதுவுமே தெரியாத நிலையில் செல்வது ஆபத்து தான். ஆனாலும் இருவருமாக நிலையை சமாளிக்கத் துணிந்தனர்.

அவர்கள் இருந்த பகுதி முழுவதும் பார்வையை  சுழல விட்டவள், “எந்தப் பக்கம் போறதுன்னு தெரியலையே” குழப்பத்துடன் தாமிராவை பார்க்க,

“ட்ரை பண்ணலாம்” என்ற வார்த்தையோடு அவள் முடித்துக் கொள்ள இருவரும் அந்த இடத்தை விட்டும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

மணி ஐந்தை கடந்திருந்தது‌. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது. சுற்றிலும் உயர்ந்த அடர்ந்த இராட்சத மரங்களும் குற்றுச் செடிகளும் சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்ற ஒரு குளிர்ச்சி. சூழ்நிலையை சுற்றிலும் ஓர் கெட்டியான நிசப்தம். 

அடர்ந்த மரங்களுக்கிடையே சென்ற அந்த குறுகலான பாதையில் அவசர‌அவசரமாய் நடந்து சென்று கொண்டிருந்தனர் பெண்கள் இருவரும். இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும். முன்தின இரவிலிருந்து எதுவும் உண்ணாத சிந்துவுக்கோ பசி வேறு வந்து உயிரை வாங்கியது. தாமிராவுக்கும் அதே நிலை தான்.

“ரொம்ப டயர்டா இருக்கு சிந்து” தன்னிடமிருந்த தண்ணீர் போத்தலை எடுத்தாள் தாமிரா. வரண்டு போன அவள் தொண்டைக்கு அப்போது அது தேவைப்பட்டது.

“உனக்கு மட்டுமா டயர்டா இருக்கு எனக்கும் தான்” மீதமிருந்த தண்ணீரை தொண்டைக்குள் சரித்தாள். அவள் தாகம் தீரவில்லை. தண்ணீர் தீர்ந்து போனது.

“அச்சோ இதுவும் தீர்ந்து போச்சா?” தாமிராவின்‌ முகம் சுருங்க,  வழி நெடுகிலும் எங்கேயாவது நீர் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறதா என சுற்றும் முற்றும் பார்த்தவாறே போனார்கள். எங்கேயோ சலசலத்து ஓடுகிற நீரின் சத்தம் அவள் காதுகளில் விழ இருவருமாக அந்த திசையை நோக்கி நடந்தனர். 

“இப்படி பியர் கிரில்ஸ் லெவலுக்கு ஆக்கிட்டானுங்களே… பசி வேற வந்து வயித்துல டான்ஸ் ஆடுது. வா பூச்சி பூரான்னு எதையாவது பிடிச்சி சாப்பிடுவோம்.”  

பசியின் தாக்கத்தில் கடுப்புடன் சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த சிந்து எதேச்சையாக பார்வையை வேறு பக்கம் சுற்றிய போதுதான் அவர்கள் நடந்துசெல்லும் பாதையின் எதிர்த்திசையில்  இரு உருவம்‌ தென்பட்டது. அங்கிருந்து சற்று தூரமாக அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே அங்குமிங்கும் பார்வையை அலைய விட்டவாறு எதையோ தேடிக்கொண்டு இருந்தனர்.

“தாமிரா அங்கே யாரோ ரெண்டு பேர் இருக்காங்க” ஆராய்ச்சியாக அவர்களை பார்த்தவாறு கூறினாள்.

அவள் அப்படிச்‌ சொன்னதுமே அது ருத்ரனாக இருக்குமோ? என்று ஆர்வத்துடன் அவள் கை நீட்டிய திசையை அவசரமாக ஆராய்ந்தாள். அது ருத்ரனல்ல. வேறு யாரோ என்பதை உறுதி செய்து கொண்டவள்,

“அவங்க யாரையோ தேடிட்டு இருக்காங்க. அது நாமளா கூட இருக்கலாம். இங்கிருந்து போயிடலாம் சிந்து” என்று படபடத்தாள் தாமிரா.

“அவங்க வேற ஆட்களா இருந்தா. ஹெல்ப் கேட்கலாம்டி” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ‘டமார்ர்’ என்று விண்ணில் ஒரு இடி முழக்கம். ஊசிச் சிதறலாய் சிலுசிலுவென மழை தூறல். இந்த அதிகாலை வேளையில் இந்த காலநிலை மாற்றத்தை  அவர்கள் இருவரும் எதிர்ப்பார்க்கவில்லை‌.‌ சற்று தொலைவில் நின்றிருந்தவர்கள் இன்னும் இவர்களை காணவில்லை.

அவர்களது கை துப்பாக்கியை தாங்கியிருக்க பெண்கள் இருவரது முகத்திலும் இப்போது கிலி பரவ ஆரம்பித்தது. இருவரது நெஞ்சமுமே பக்பக்கென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது. 

“அவங்க கண்ணுல படாம ஓடிடலாம்டி” என்று சிந்து கூற அவர்கள் இவர்கள் இருவரையும் கண்டு விட்டனர்.

சில்லென்று சிதறிய மழைத்துளியை மீறி நெற்றியில் வியர்வை அரும்பியது. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு. அவர்களது இதயம் எகிறி குதித்தது.  இப்போது அந்த இருவரும் இவர்களை நோக்கித் தான் வருகிறார்கள். உரைந்து போனார்கள் பெண்கள் இருவரும்.

“பிடிடா அவளுங்க ரெண்டு பேரையும்.” அந்த இருவரில் ஒரு தடியன்.

“ஆஆஆஆஆ…”

அவ்வளவு தான். அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆங்காங்கே மழை பெய்து வழுக்குகிற பாறைகள். ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டு மரங்கள். உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர். கண்மண் தெரியாமல் கால்கள் சென்ற திசையில் உடம்பெல்லாம் வெடவெடுக்க ஓடினர்.

அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.

இந்தப் பாதை சற்றே சீரற்ற பாதை. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின. இறைந்து கிடந்த கிடைத்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன.

உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன் அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப் போய் ஓடிக் கொண்டிருந்தனர். அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக அண்டிக் கொண்டனர் இருவரும்.

நுரையீரல் வெளியே வந்து விடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு. இதயம் ‘திடுக் திடுக்’ என்று அடித்துக் கொண்டது. அட்ரினலின் அதிகமாக சுரந்து, நாடி நரம்பெல்லாம் தாறுமாறாக ஓடியது.

குளிராலும் பயத்தாலும் உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடுத்து நடுங்கியது. மூச்சு விடுகிற சப்தம் கூட வெளியே வந்து விடக் கூடாதென வாயை இரு கைகளாலும் இறுக பொத்திக் கொண்டனர்.

அரை நிமிடம். பிறகு சிந்து சற்றே தைரியம் பெற்று தனது தலையை நீட்டி தாங்கள் ஓடி வந்த பாதையை பார்த்தாள். பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு. அந்த இருவரும் அவர்களுக்கு பக்கத்தில் தான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டு இருந்தனர். ‘ச்சோ’வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.

“இந்த இடத்தை தாண்டி எங்கேயும் போயிருக்க சான்சே இல்லை தேடு” என்றான் ஒருவன். அவர்களது பார்வை அந்த இடத்தை அலசியது.

விரிந்த விழிகளுடன் அவர்களையே பார்த்தாள் சிந்து. அதில் ஒருவன் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப, சிந்து படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள். 

தாமிராவோ பயத்தில் சிந்துவை ஒட்டிக் கொண்டாள். எதற்கும் பயந்து நடுங்கும் தோழியை நினைத்து இப்போது கோபம் வந்தது அவளுக்கு. இவளை போல் இருந்தால் உயிர் தப்பிக்க முடியாது. சுறுசுறுப்பாக யோசித்தாள்.

அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள். ‘தஸ் புஸ்’ என்ற மூச்சிரைப்புடன் கிசுகிசுப்பான குரலில் சொன்னாள்.

முதலில் தாமிரா மறுத்தாலும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாள். அந்த இருவரும் இவர்கள் மறைந்திருந்த மரத்தை நோக்கி வருவது தெரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆளுக்கொரு திசையில் புயல் போல ஓடினர். 

இதை அந்த தடியர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கும் எந்தப் பக்கம் யாரை துரத்துவதென்று தெரியாமல் ஒரு நொடி குழம்பித் தான் போனார்கள்.

அப்போது தான் ஓடிய தாமிரா விழுந்து கிடந்தாள். மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர் அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது. தடுமாறிப்போய் கால்கள் இரண்டும் பின்னிக்கொள்ள விழுந்து உருண்டிருந்தாள்.

இரண்டு திசைகளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த அந்த இருவரும். இப்போது சற்று நிதானித்தனர். தாமிரா விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தனர். இருவருமாக  அந்த திசைக்கு விரைய ஒருவன் மற்றவனை தடுத்தான்.

“நீ அந்த பொண்ணை போய் தேடு. இவளை நான் பார்த்துக்குறேன்” என்று சொன்னதும் அவன் சிந்து ஓடிய திசையில் விரைந்தான்.

‘சர்க் சர்க்’ சருகுகள் மிதிபட அவள் முன் வருகிறான்.

‘தடக் தடக் தடக்’ அவளது இதயம் தாளம் தப்பி துடித்தது.

மழை இப்போது ஓரளவு ஓய்ந்திருந்தது. சில்லென்று மெலிதாக கூறிய சிதறல் மட்டுமே. 

அவளது முகத்திலும் கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி. அவன் ஒரு மாதிரி பார்வையுடன் அவளை நெருங்க நெருங்க வாயும் நெஞ்சும் அடைத்துப் போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்.

அவன் அவளை நோக்கி குணிய அவள் தரையில் கிடந்த மண்ணை அள்ளி எடுத்து அவன் முகத்துக்கு நேரே வீசினாள். 

இதை அவன் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. மழையில் நனைந்திருந்த கெட்டியான மண் அவன் முகத்தில் மோதி வலியை ஏற்படுத்தியது. அவனது துப்பாக்கியும் எங்கேயோ தெறித்து விழுந்தது.

“ஆஆஆஆஆ…” வலியில் அலறினான்.

அதற்குள் “ஏய்…” என்று அவன் உரும,

அந்த சிறு இடைவெளியை பயன்படுத்திக் கொண்டவளது கையில் அகப்பட்டது  ஒரு கல். அதை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள். வலி தாளாமல் தலையை பிடித்துக் கொண்டே தரையில் விழுந்தான்.

அவன் விழுந்ததும் எழுந்து ஓட முயற்சிக்க கீழே விழுந்து கிடந்தவனோ உறுமலுடன் அவளது காலை பிடித்து இழுக்க நிலை தடுமாறி மீண்டும் கீழே  விழுந்தாள் தாமிரா.

“கடவுளே!”

பதறிப்போனவளோ ஒரு நொடி கூட தாமதிக்காமல் திரும்பி இன்னொரு கல்லை எடுத்து அவளால் முடிந்த மட்டும் அவனை தாக்க அவனோ அவளது கால்களை விடாமல் அழுத்தி பிடித்து இழுக்க, ஏற்கனவே காயம்பட்டிருந்த அவளது கால் வலித்தது. விடாமல் போராடினாள்.

‘டுமீல்’

அவளது பாதத்தை பிடித்திருந்த அவனது கைகள் விடுபட்டன. தலை தரையில் சரிந்தது.

ருத்ரன் துப்பாக்கி ஏந்தி நின்றிருக்க, பக்கத்தில் அமரும் சிந்துவும் நின்றிருந்தனர்.

தாமிராவின் நிலை கண்டு சிந்துவும் பதறிப் போனாள்.

ருத்ரனது பார்வை தாமிராவிலேயே நிலைத்திருந்தது. என்னவென்று விபரிக்க முடியாத மனநிலையில் இருந்தான் அவன்.

விழிகளில் மிரட்சியை தேக்கி கீழே கிடந்த அவள் அருகே விரைந்து சென்றதும் தாமிரா அவனை கட்டிக் கொண்டாள். அவளை விலக்கத் தோன்றவில்லை. 

“எ..எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இந்த இடத்தை விட்டு போயிடலாம். ப்..ப்ளீஸ் டோண்ட் லீவ் மீ”  சிக்கி சிதறி வெளி வந்தது அவள் வார்த்தைகள்.

நனைந்த ஆடையுடன் தன்னுடைய கோட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டு  உடல் நடுநடுங்க நெஞ்சில் சாய்ந்திருந்தவளை கண்ட கணமே அவன் மனதிற்குள் கூர்மையாக ஏதோ பாய்வதை உணர்ந்தான். அவளுடைய பயமும் பாதுகாப்பற்ற தன்மையும் அவனை வருத்தியது.

“ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை. நான் இருக்கேன். இங்கிருந்து போயிடலாம்” ஆதரவாக அவள் முதுகை தடவிக் கொடுத்தான்.

அமரும் சிந்துவும் ஒருவரை பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

அதே நேரம் ஷுக் கால்கள் தடதடக்க கறுப்புடை அணிந்த பத்து பதினைந்து  பேர் அந்த இடத்தை வந்தடைந்தனர்.

“இவங்க ரெண்டு பேரையும் பார்த்த ஒருத்தன் கூட இந்த காட்டை விட்டு வெளியில போகக் கூடாது” அவர்களிடம் கட்டளையிட்டான் ருத்ரன்.

ஆமோதிப்பாக தலையசைத்தவர்கள் துப்பாக்கி முளைத்த கையுடன் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றனர்.

 

ரௌத்திரமாய் ரகசியமாய்- 12

 

சில வருடங்களுக்கு பிறகு…

 

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாள் தாமிரா.

தொடைகளை இறுக்கிப் பிடித்த கடும் நீல நிற ஜீன்ஸ். ஆங்காங்கே கிழிசல்.  உடலின் வளைவு நெளிவுகளை அப்பட்டமாக எடுத்துக் காட்டும்‌ கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டீஷர்ட். 

அதற்கு மேல் ஒரு அரைக்கை வைத்த சிவப்பு நிற ஜாக்கெட். அந்த ஜீன்ஸுக்குப் பொருந்தும் வகையில் கபில நிற கிளாசிக் காம்பேட் ஷு.

முன்பு இடையை தாண்டி வளர்ந்திருந்த கூந்தல் இப்போது முதுகு வரை அழகாக வெட்டப்பட்டு ஸ்ட்ரெய்ட் செய்து விடப்பட்டிருந்தது. முன்பு திருத்தப்படாமல் இருந்த அவளது புருவ முடிகள் அழகாக திருத்தப்பட்டிருந்தது.

பளிங்கு குண்டுகள் போன்ற அவளது கண்களை கருப்பு கண்ணாடி கொண்டு மறைத்திருந்தாள். செதுக்கி வைத்தாற் போன்ற சிவந்த அதரங்கள் அடர் சிவப்பு நிற உதட்டுச் சாயத்தில் கண்களை பறித்தது.

லக்கேஜ்ஜை தள்ளிக் கொண்டு வெளியே வந்தவள் கூலர்ஸை கழற்றி பார்வையை சுழல விட்டாள்.

ரகு அவளை கண்டு விட்டான். உதடுகள் புன்னகையில் விரிய அங்கே நின்றிருந்த தாமிராவை கண்டு கையசைக்க,  அவளும் கையசைத்துக் கொண்டே நடந்து வந்தாள்.

அவளோ கேஷுவலாக அவனை நோக்கி வர தாமிராவின் நடை, உடை, பாவனை கண்டு அவன் கண்கள் விரிய, நெற்றி சுருங்க ஆச்சரியமாய் அவளையே பார்த்திருந்தான்.

இது அவனது தோழி தாமிரா தானா? அவனுக்கே சந்தேகமாக இருந்தது. ஆளே முழுதாக மாறிப்போனது போல் தோன்றியது. அவளது மென்மையான குணத்திற்கு சிறிதும் பொருத்தமற்ற நடை, உடை. முன்பிருந்த வெள்ளந்தி முகம் மாறி பக்குவப்பட்ட தோற்றத்தை கொடுத்தது. முழு அல்ட்ரா மாடர்ன் பொண்ணாக அவன் முன் வந்து நின்றவள் அவனை லேசாக அணைத்து விலகினாள்.

சாதாரண நலம் விசாரிப்புக்குப் பிறகு காரை கிளப்பினான் ரகு. அவளது பேச்சில் கூட வித்தியாசம் தெரிந்தது. முன்பிருந்த தாமிராவா? என்று கேட்டால் சத்தியமாக இல்லை என்றே சொல்ல தோன்றும். அவளது இந்த மாற்றம் அவனது மனதிற்கு சற்று நெருடலாகவே இருந்தது.

காரில் செல்லும் போதே இடையில் “நீ ரொம்ப மாறிட்ட தாமிரா” என்று மட்டுமே சொன்னான்.

பதிலேதும் சொல்லவில்லை. புருவம் சுருக்கி பார்த்தவள் கண்களை எட்டாத சின்னச் சிரிப்பு தோன்றி மறைந்ததும்,

“அப்பா‌ எப்படி இருக்காரு ரகு?” அவளது கண்களில் எதிர்ப்பார்ப்பு தெரிந்தது.

“முன்ன இருந்ததை விட இப்போ பெட்டரா இருக்காரு. ட்ரீட்மெண்ட் கொடுத்துட்டு தான் இருக்கேன்.” 

அவளால் தானே அவருக்கு இந்த நிலைமை. கலக்கத்தை காட்டிய கண்களை அவனுக்கு காட்டாமல் சாலையில் கவனத்தை பதித்தாள். 

கார் அவளது வீட்டு கேட்டினுள் நுழைய பழைய சில வேண்டாத நிகழ்வுகள் அவள் மனதை அழுத்தியது. பல வருடங்களுக்கு பிறகு அவளது சொந்த வீட்டிற்கு செல்கிறாள். 

முன்பெல்லாம் அவளது வீடு தான் அவளது சொர்க்கம். வீட்டுக்குள் நுழையும் போதே அவளுக்குள் குதூகலம் பிறக்கும். 

அம்மா, அப்பா, தருண், அக்ஷரா ஆனந்த தாண்டவமாடும் வீடு அது. காரை விட்டு இறங்கியவள் வீட்டினுள் நுழைந்தாள். வீடே ஜீவனற்று எங்கும் அசாத்திய அமைதி நிலவியது.

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் வைபவம் ஒன்று நடக்க இருக்கும் வீடு எனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். 

அவளை அன்பும் ஆசையுமாக அழைக்க வாசலில் யாரும்‌ காத்திருக்கவில்லை. முன்பெல்லாம் ‘அக்கா வந்துட்டா’ என்று ஆரவாரத்துடன் அவளை அணைத்துக் கொள்ள,  தாமிராவை காணும் ஆசையில் வீட்டினர் முழுக்க அவளது வருகையை கொண்டாடுவர்.

தயங்கித் தயங்கி மெல்ல படியேறி வீட்டு ஹாலுக்குள் நுழைய சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான் தருண். அவளை கண்டவன் முகம் சுருங்கியது. அவளை ஒரு நொடி வெறித்துப் பார்த்தவன் அதற்கு மேலும் அவளை பார்க்க விரும்பவில்லை. ரீமோட்டை சோபாவில் வீசி எறிந்தவன் பட்டென்று எழுந்து உள்ளே சென்று விட்டான்.

அவளுக்குப் பின்னால் அவளது லக்கேஜ்ஜினை எடுத்து வந்த ரகு இதையெல்லாம் கவனிக்காமலில்லை. 

“தாமிரா… எப்படிடா இருக்க?” 

சமையலறையிலிருந்த வந்த அவளது தாய் சுமித்ரா ஹாலிலேயே நின்று கொண்டிருந்த மகளை  அப்போது தான் கண்டு அணைத்துக் கொண்டார்.

“நான் நல்லா இருக்கேன் மா”  அவள் குரல் சோர்வுடன் ஒலித்தது.

“மூனு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு இப்போதாவது வரணும்னு தோணிச்சே. எத்தனை வருஷமாச்சு உன்னை பார்த்து” சுமித்ராவின் கண்கள் கலங்கியது.

“அப்பா எங்க மா?” தாமிராவின் மனமோ அவளது தந்தையை கண்டிட துடித்தது.

அவளை புரிந்து கொண்டவராய் அவரது அறைக்கு அழைத்துச் செல்ல, கட்டிலில் ஒருக்களித்து படுத்திருந்த தந்தையை கண்டதும் அவளது உள்ளம் ஊமையாய் அழுதது. 

காக்கி உடையில் கம்பீரமாய் வலம் வந்த அவளது தந்தையின் தற்போதைய நிலை கண்டு பதறிப் போனாள். எப்போதும் அவளது ஹீரோ அவர் தான். 

அவரது தைரியம் தான் இத்தனை நாள் இவளை உயிருடன் வைத்திருந்தது. அவருக்கு இந்த நிலையை ஏற்படுத்திய அவளை அவளாலேயே மன்னிக்க முடியாது.  

ஆம் சில வருடங்களுக்கு முன் பக்கவாதத்தில் படுத்து விட்டார். நியூரோ சர்ஜனான ரகு தான் அவருக்கு மருத்துவம் பார்த்து வருகிறான்.

“என்னங்க தாமிரா வந்து இருக்கா பாருங்க” என்று கணவரை எழுப்பினார். 

தாமிரா என்றதும் அவர் உடலில் சிறு அதிர்வு தோன்றி மறைந்தாலும் அவர் திரும்பவி ல்லை. சுவர் பக்கமாக பார்த்திருந்தவர் தலை மட்டும் ஆடியது.

பல முறை அழைத்தும் அவர் அவளை பார்க்கவில்லை. சுமித்ரா கணவனிடம் கெஞ்சிப் பார்த்தார். அழுதும் பார்த்தார். அவர் அசைந்து கொடுக்கவில்லை. அவளது முகத்தை கூட பார்க்க இஷ்டமில்லை என்பதை சைகையால் காட்டி மறுத்து விட்டார்.

அப்பா உண்மையிலேயே தன்னை வெறுத்து விட்டாரா? துடித்துப் போனாள் தாமிரா. ஆனால் முகத்தில் எந்த வித உணர்வையும் காட்டாமல் அப்படியே நின்றிருந்தாள். சில காலமாகவே உள்ளத்து உணர்வுகளை மறைக்கப் பழகியிருந்தவளுக்கு இது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.  அந்த அறையை விட்டும் வெளியேறி விட்டாள்.

“அக்கா…” அக்ஷராவின் குரல் அவ்விடத்தை நிறைத்தது. அவளது தங்கை இப்போது ஒரு வக்கீல். தங்கையை கண்டதும் அவள் முகம் மலர்ந்தவள் அவளை அணைத்துக் கொண்டாள்.

“அக்ஷி… எப்படி இருக்க? ரொம்ப பெரிய ஆளாக வளர்ந்துட்டியே?” சேலை அணிந்த தங்கையின் தோற்றத்தை வியந்து பார்த்தாள்.

அக்காவை மேலும் கீழுமாக  ஆராய்ந்தவள், “நீ தான் ரொம்ப மாறிட்ட அக்கா” என்றாள்.

“இன்னும் அப்பா சாகலைல. பாதி உயிரோட இருக்குறவரை ஒரே அடியா மேல அனுப்பிடலாம்னு வந்து இருக்கியா?”  தருணின் குற்றச்சாட்டு அவளை பலமாக தாக்கியது.

“தருண்…” பரிதாபமாக அவளை ஏறிட்டாள் தாமிரா.

“பேசாத” ஆள் காட்டி விரலை உயரத்தி அவளை தடுத்தான்.

சுமித்ராவாலும் அக்ஷராவாலும் அவனை மீறி எதுவும் பேச முடியவில்லை.

“தருண் ப்ளீஸ்…” என்ற ரகுவை பார்த்தவன்,

“நீங்களே இவ மேல எந்தளவு நம்பிக்கை வச்சிருந்தீங்க ரகு. ஆனா இப்பவும் இவளுக்கு தான் சப்போர்ட் பண்றீங்க”

தாமிராவின் தலை கவிழ்ந்து. அவளால் ஒரு வார்த்தை பேச முடியவில்லை. சொந்த வீடே அந்நியமாக பட்டது. கூடப் பிறந்தவனே குற்றவாளியை போல் நிறுத்தி வைத்திருந்தான். 

“எங்களோட முடிவு எதுன்னு உனக்கு தெரியும். உன் முடிவு உன் கையில் தான் இருக்கு”  தருண் சென்று விட்டான்.

அவளுக்கு அவளது குடும்பம் முக்கியம். குடும்பத்தினரது முடிவுக்கு செவி சாய்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள். ஒன்று அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அவளை சுற்றியிருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். 

அவளது சந்தோஷம் தொலைந்து போன ஒன்று. கிடைக்காத ஒன்றை தேடுவதில் அர்த்தமில்லை. அவளால் நேர்ந்த தவறை இப்போது சரி செய்ய நினைத்தாள். குடும்ப நிம்மதியே அவளுக்கு முக்கியமாக பட்டது. அதை நிறைவேற்றிட துணிந்து விட்டாள்.

தாமிராவின் தற்போதைய மனநிலையை சரியாக கணித்தவன் அவளது கையை ஆதரவாக பற்ற அவளது பார்வை ரகுவின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

எத்தனை அருமையான மனிதன் இவன். எந்த நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்காதவன். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவளுக்கு தோள் கொடுக்கும் தோழன். எந்த துன்பத்திலும் கண்ணுக்குள் மணியை போல காப்பவன். 

“உனக்கு என் மேல் கோவமே இல்லையா ரகு?” வரும் வழியில் கூட கேட்டாள்.

அவளை பார்த்து புன்னகைத்தான். ஆனால் முன்பு போல அவன் புன்னகையில் ஜீவனில்லை. கண்களை எட்டாத புன்னகை தான். அவளுக்குப் புரிந்தது.

“கோவம் இல்லை தாமிரா. வருத்தம் மட்டும் தான்‌. எதையுமே மறைக்காம செய்யுற என்னோட ஃபிரண்ட் பொய்யாய் போனதில் வருத்தம்.

இன்னும் ஒன்னு தெரிஞ்சிக்கோ தாமிரா. எந்த சிச்சுவேஷன்லயும் என்னால் உன்கிட்ட கோபப்படவும்  முடியாது. அதே மாதிரி உன்னை விட்டு விலகவும் முடியாது. உனக்காக நான் இருப்பேன்.” உறுதியான பதில் வந்தது.

உள்ளுக்குள் வலித்தது. எதையோ இழந்து விட்டது போல். இத்தகைய அன்பை தவற விட்டு விட்டோமா? என்று முதல் முறையாக குழப்பக்கடலில் சிக்கிக் கொண்டது அவளது மனம். 

***

ஆறு அடுக்குகளுடன் வட்டவடிவில் அமைந்த  பிரம்மாண்டமான கட்டிடம் அது. கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும். 

ஒவ்வொரு தளங்களிலும் ஃபுட்கோர்ட், ஆடைகள், ஆபரணங்கள், செருப்புக்கள், இலத்திரனியல் கருவிகள் என வித விதமான பல்தரப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் தியேட்டர், பப், பார் என சகல பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நவீன மால் அது.

மாலை நேரம் அது. மஞ்சள் நிற நியான் விளக்குகள் சீலிங்கில் தாங்கிய காரிடர் அது. கால்களை கவ்வியிருந்த ஷு டைல்ஸ் தளத்தில் அழுந்தி ‘டக் டக்’ என சப்தம் எழுப்ப மெல்ல நடந்தான் ருத்ரன். 

சிறிது தூரம் நடந்து திரும்பியதுமே அந்த காஃபி ஷாப்பின் விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது. தூரத்தில் ஓரமாக இருந்த டேபிளில் தாமிரா தெரிந்தாள்.

கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவளை நோக்கி நடந்து வருகிற ருத்ரனையே இமைக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது தோற்றம் பெரிதும் மாறியிருந்தது.

எப்போதும் அணியும் கருப்பு டீசர்ட் ஜாக்கெட் இல்லை. தொழில்துறை சந்திப்புக்கு வெளியே செல்வது போல் வந்திருந்தான். வழித்து வெட்டப்பட்டிருந்த அவன் தலை முடி நன்கு வளர்ந்திருந்தது‌. ஹேர் ஜெல்லில் படிந்திருந்த சிலும்பலற்ற கேசம் முதல் லெதர் ஷு வரை அவளது கண்கள் முழுமையாக ஆராய்ந்துவிட்டன.

‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ என்றே தோன்றியது. ஆனாலும் அவன் ராட்சசன். அதோ அவனது பார்வை இருக்கிறதே அது ராட்சசப் பார்வை.

‘ராட்சசன்… ராட்சசன்’ என்றே உள் மனம் முணுமுணுத்தது. பார்வையை திருப்பிக் கொண்டாள்.

பல வருடங்கள் கழித்து இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். இருவரது தோற்றத்திலும் பெரும் மாற்றத்தை இருவரும் உணர்ந்து கொண்டார்கள். 

அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஆடை. முழங்காலின் பாதி தான் மறைந்திருந்தது. நடு வகிடெடுத்து இருபக்கமும் படிய வாரி விரித்து விடப்பட்டிருந்த அவளது  கூந்தல். அடர் மை தீட்டப்பட்ட அவள் விழிகள். இரத்தச் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கில் உதடுகள் பளபளத்தது. காது, கழுத்து மற்றும் கைகளில் எந்த ஆபரணங்களும் இல்லை. ஆனால் அழகாக இருந்தாள்.

அவனது ஆராயும் பார்வையை அவள் கண்டு கொள்ளவில்லை. 

“என்ன விஷயம்?” அவனது கம்பீரக் குரலில் எந்தவித  மாற்றமில்லை.

பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்பவர்கள் மரியாதைக்கு கூட நலம் விசாரித்துக் கொள்ளவில்லை. 

அவள் அலட்சிய பாவத்துடன் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் திமிரின் சாயல் தெரிந்தது. அவன் கண்களில் சுவாரஸ்யம் தெரிந்தது.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த ராட்சசன் மாறப் போவதில்லை. அவளுக்கு அவன் முகம் பார்த்து பேசவும் பிடிக்கவில்லை. அவள் வந்த காரியம் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அமைதி காத்தாள்.

மீண்டும் “நிறைய சேஞ்சஸ் தெரியுது” என்றான்.

அவள் இலங்கை வந்தது முதல் எத்தனை பேர் தான் ‘நீ ரொம்ப மாறிட்ட, முன்ன போல் இல்லை’ என்றெல்லாம் சொல்வது. ஒரு மனிதன் மாடர்னாக மாறியதற்கு இத்தனை ஆராய்ச்சியா? கடுப்பானது அவளுக்கு.

“சில மாற்றங்கள் ரொம்ப அவசியம்” என்றால் வெடுக்கென்று.

“துணிச்சலான மாற்றம் ” என்றான் அவ்வளவு தான்.

அதற்கு மேல் அவனுடன் பேச்சை வளர்க்க விருப்பமில்லை அவளுக்கு. வந்த காரியத்தை முடித்து விட்டு கிளம்பிட எண்ணினாள்.

“ஆல்ரைட். நவ் டெல் மீ. என்ன விஷயம்?” மீண்டும் கேட்டான். 

பார்வையை மெல்ல உயர்த்தி அவனை பார்த்தாள். அவன் முகத்தை வைத்து அவளால் எதையுமே கணிக்க முடியவில்லை.  

அப்படி கணிக்க முடிந்திருந்தால் இன்று  அவளுக்கு இந்த நிலை நேர்ந்திருக்க வாய்ப்பில்லை. உள்ளுக்குள் பொங்குகிற உணர்வை அடக்குபவளை போல காட்சியளித்தால் தாமிரா. தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

“ஐ நீட் டிவோர்ஸ் ” தீர்மானமான முடிவு. அவள் மடி மீதிருந்த பைலை எடுத்து  டேபிளின் மறு பக்கம் வீசினாள். 

**********