ரௌத்திரமாய் ரகசியமாய் 20

ரௌத்திரமாய் ரகசியமாய்-20

 

இரவு

 

நைட் பேன்ட் அணிந்திருந்தவள், அந்த அறையின் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தாள்.

 

நெற்றியில் அவன் வைத்த குங்குமம் இருக்க, அவன் கட்டிய தாலியோ வெளியே பாய்ந்து அவளது கண் பார்வையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

 

அந்தத் தாலியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் வழிந்த கண்ணீர், அவளது காதோடு‌ வழிந்து கூந்தலையும் நனைத்தது.

 

அவள் இந்த வீட்டிற்கு வரவே மாட்டேன் பிடிவாதம் பிடித்து மறுக்க, அவனா அவள் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுப்பான்? அவனது வீட்டிற்கே அழைத்து வந்து விட்டானே.

 

அவளது ஒப்பந்தத்தையும் மீறி அவன் நடந்து கொண்ட இந்த செயலே, இனி அவன் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்வானோ என்ற பயத்தையும் ஏற்படுத்த, இந்த அறைவேறு அவள் மறக்க நினைக்கும் பொல்லாத நினைவுகளையும் மீண்டும் தட்டியெழுப்பவே செய்தது.

 

ஆனாலும் அவள் மனமோ ரொம்பவும் குழம்பிப் போயிருந்தது. அது ருத்ரனது அசாத்திய அமைதி. 

 

சிறு சிறு செயல்களில் அவன் நினைத்ததை நடத்தினாலும், அவனிடம் நிலவும் அசாத்திய அமைதி அவளை குழப்பத்தில் ஆழ்த்தவே செய்தது.

 

முன்பும் பதிலுக்கு பதில் பேசி வாதிட மாட்டான் தான். ஆனால் அவன் செயல்களின் அதிரடியில் சர்வமும் கலங்கிப் போவாள் இவள். 

 

முரடன்‌ அவன். ராட்சசன் அவன். அப்படியிருக்க இன்று அவன் மனமேடையில் நடந்து கொண்ட முறை வேறு அவள் மனதை சற்று உலுக்கவே செய்தது.

 

இன்று அவளை‌ அவன் வீட்டிற்கு பிடிவாதமாக அழைத்து வந்தச் செயல் அதிரடியாக தோன்றினாலும், அதிலும் ஒரு மென்மை இருந்ததை அவளால் உணர முடிந்தது.

 

ஏற்கனவே அவளது கணவன் அவன். அவனையே மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை வேறு அவளுக்கு ஒரு வித மனக் கலக்கத்தை கொடுத்தது.

 

அதேநேரம் அவளது செல் சிணுங்கியது. அது ரகு.

 

செல்ஃபோன் திரையை பார்த்ததுமே அவளுக்குப் புரிந்தது. ரகுவுக்கு தன் மேல் எத்தனை அன்பு? அவள் நலன் கருதி செய்த செயல்கள் தான் எத்தனை?

 

மீண்டும் ருத்ரனுடன் இணைவதை தடுக்க எவ்வளவோ முயன்றான். அவளது திருமணத்தின் போது கூட அவனது கலக்கம் அவளுக்கு புரியாமலில்லை.

 

ஒவ்வொரு விடயத்திலும் அவளது மகிழ்ச்சியை முன்னிருத்தி அவன் செய்த காரியங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவில் வரலாயின.

 

இதோ இப்போது கூட அவள் எப்படியிருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? என்ற கவலையில் தானே அவளை அழைத்திருப்பது. 

 

அவனது பதற்றம் நிரம்பிய குரலே அவனது மனதை துல்லியமாக எடுத்துக்காட்ட, அவனது தன்னலமற்ற அன்பை வியக்காமலிருக்க முடியாது.

 

அந்த வியப்புடனே, உதட்டில் சிறுநகை தோன்ற,

 

“நான் நல்லா தான் இருக்கேன்டா. நீ எதுக்காகவும் வீணா மனச போட்டுக் குழப்பிக்காதே.” என்றாள்.

 

“அவன் உன்னை ஏதாவது…” தயங்கித் தயங்கி ஒரு வித அலைக்கழிப்புடன் ஒலித்தது அவன் குரல்.

 

“அவனால் என்னை எதுவும் செய்ய முடியாது ரகு. அவன் இன்னும் வரவே இல்லை. நீ டென்ஷன் ஆகாம போய் தூங்குடா. ஓகே குட் நைட்” அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

 

அவள் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றனவே. எப்படி அவற்றையெல்லாம் செய்து முடிப்பது? 

அடுத்து என்ன செய்யலாம்? 

 

அவள் இங்கு வந்த வேலையை கனக்கச்சிதமாக செய்து முடிக்க வேண்டும். அது ஒன்று மாத்திரமே அவள் மனதில் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது.

 

ஆனால்… ஆனால் அந்த ருத்ரன். அவனை ஏமாற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அவனை பற்றி அறிந்தவளாயிற்றே.

 

ஏனோ அவளும் அவனுமாக கண்டியில் இருந்த அந்த நாட்கள் அவள் மனக்கண் முன் வந்து நின்றது. 

 

அவன் அப்போதும் இதே ராட்சசன் தான். அவர்களது முதல் சந்திப்பே பயங்கரமானது. ஆனால் அவளிடம் எத்தனை மென்மையாக நடந்து கொண்டான். சிரித்துப் பேசினான். அந்தக் காட்டில் கூட அவளை எப்படியெல்லாம் பாதுகாத்தான்.

 

அவளிடம் மென்மையை கனிவை பாதுகாப்பை உணர்ந்திருக்கிறாள். அப்படியிருந்தவன் ஏன் அவளை திருமணம் செய்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டான்?

 

அவள் மனம் அந்தப் பொல்லாத நினைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.

 

அவள் மனதிற்கு அவனை அப்போதே பிடித்து விட்டதே. உண்மையை சொல்லப் போனால் அவள் அவனை காதலித்தாள். இப்படியொரு நிகழ்வு மட்டும் அவளது வாழ்வை புரட்டிப் போடாமல் இருந்திருந்தால் இன்று அவனுடன் அழகான வாழ்வை வாழ்ந்திருப்பாளே.

 

ஆனால் அவன் அவளை காதலித்தானா? இல்லை நிச்சயமாக இல்லை. அப்படி காதலித்திருப்பானேயானால் அவளை அன்று கஷ்டப்படுத்தியிருக்க மாட்டானே.

 

அந்த நினைவுகளின் உஷ்ணத்தில் அவளது அழகிய விழிகளிலிருந்து சத்தமேயின்றி நில்லாமல் வழிந்தது கண்ணீர்.

 

நினையாதே மனமே… நினையாதே… உன் வாழ்வை விட்டும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவன் அவன் என்று அவள் மனம் இடித்துரைக்க, பிடிவாதமாக அந்நினைவுகளை புறந்தள்ளினாள்.

 

இரவு தாண்டி நடுச்சாமம் ஆகிவிட்டது. அவளையறியாமலே மெல்ல உறக்கம் தழுவிக்கொள்ள உறங்கிப் போனாள்.

 

ஐந்து நிமிடம் கூட உறங்கியிருக்க மாட்டாள். அறைக்கதவு மூடப்படும் அரவத்தில் பட்டென விழித்துக் கொண்டாள்.

 

அவன் தான். ருத்ரன் உள்ளே வந்தான். தலையுயர்த்தி அவனை பார்த்தாள். அவன் கண்கள் சிவந்திருந்தன. அவன் நடையில் தெரிந்த தள்ளாட்டத்தில் இவள் புருவ மத்தியில் முடிச்சு விழ, வித்தியாசமாக நோக்கினாள்.

 

அவள் எழ வில்லை. அமைதியாக படுத்திருந்தாள். அவள் அருகில் மெல்ல மெல்ல நடந்து வர, சட்டென விழிகளை இறுக மூடினாள்.

 

மதுவாடை அவள் நாசியை நிரப்ப, முகச் சுழிப்புடன் எழுந்தமர்ந்தாள். அவள் திடீரென்று விழித்ததை கண்டவன், சற்றே அதிர்ச்சிக்குள்ளாகி, பிறகு நிதானித்து நின்றான்.

 

“குடிச்சிருக்கீங்களா?” ஒரு வித அறுவெறுப்புடன் கேட்டாள்.

 

அவள் அறிந்து ஒரு நாள் கூட அவனை இந்த கோலத்தில் பார்த்ததில்லை. அவன் குடிப்பான் என்பதே இன்று தான் தெரிந்தது அவளுக்கு. 

 

ஒரு கனம் நின்று அவளை பார்த்து விட்டு, “ம்ம்…” என்றான்.

 

“எனக்கு இந்த ஸ்மெல் பிடிக்காது” முறைப்புடனே.

 

“ஐம் சாரி.. தூ… தூங்கு” என உளறியவன், கட்டிலின் மறு ஓரத்தை நோக்கி நடக்க, அவன் காலின் கீழே வந்து விழுந்தது தலையனை ஒன்று.

 

“மரியாதையா கீழே படு. குடிச்சது மட்டுமில்லாம என் பக்கத்துல வேற வந்து தூங்கனுமா?  கொன்னுடுவேன்.” கண்களை உருட்டி மிரட்ட, போதையில் இருந்தவன் தலையுயர்த்தி அவளை வெறித்துப் பார்த்தான்.

 

அவளை நோக்கி அவன் நெருங்கி வந்து வேறு அமர, குப்பென்ற மதுவின் வாடை வேறு அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.

 

அச்சத்தில் கைகள் ஊன்றிய வண்ணமே பின்நோக்கி நகர, அவள் நகர்ந்ததும் தானும் ஓரெட்டு முன்னேறியவன், அவள் நகர முடியாதவாறு, இரு கைகளால் அணைக்கட்டி, தனக்குள் சிறை செய்தான். 

 

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துட்டோமோ?’ உள்ளே திக் திக்கென்றது அவளுக்கு.

 

அவளது அழகிய விழிகள், போதையில் சிவந்த அவனது கண்களை சந்தித்தன.

 

“நான் இதே பெட்ல… உன் பக்கத்துல…  உன்னை  கட்டி அணைச்சு…தான் தூங்குவேன் என்ன பண்ணுவ ம்ம்?” திமிராய் அவளையே பார்த்து நின்றான்.

 

அவளுக்குத் தான் அவனது அருகாமை அவஸ்தையாய் போயிற்று. அதில் அந்த மதுவாடை வேறு. மூச்சை கட்டுப்படுத்தி, பார்வையை வேறுபுறம் திருப்பி நின்றிருக்க, அவன் பிடி தளர்ந்தது.

 

அவன் இதழ்கள் ஒரு பக்கம் வளைய, தரையில் வீசிய தலையணையை குனிந்து எடுத்தவன், அவளை புருவமுயர்த்தி பார்த்தான். நான் இங்கே தான் உறங்குவேன். உன்னால் முடிந்ததை செய்து கொள் என்ற செய்தி தாங்கியிருக்க, கட்டிலின் மறுமுனையிலேயே சென்று மல்லாக்க விழுந்து கண்ணை மூடினான்.

 

திமிர்… திமிர்… 

 

குடிகார ராட்சசன்… 

 

இவனாவது மாறுவதாவது. அகம்பாவம் பிடித்தவன். இவன் பக்கத்தில் நான் உறங்க வேண்டுமா? முடியவே முடியாது. 

 

தலையணையொன்றையும் விரிப்பொன்றையும் எடுத்துக் கொண்டு நகர,

 

“மரியாதையா இங்கேயே தூங்கு. இல்லைனா நானும் கீழே வந்து உன்னை இறுக்கி அணைச்சு தூங்க வேண்டி வரும்” என்ற அவனது குரலில், இதயம் தூக்கிவாரிப் போட அவனை பார்த்தாள்.

 

மேலே சீலிங்கில் பார்வையை பதித்தபடி, உதட்டில் சிரிப்புடன், கால்களை ஆட்டிக்கொண்டிருந்தவனை கண்டதும் அவளுக்கு கோபம் முளைக்க,

 

“முடியாது…” மறுத்தாள்.

 

அவனது சிரிப்பு வேறு அச்சமயம் அவளை கொஞ்சமே கொஞ்சம் கடுப்பாக்கினாலும் கூட அவனது இதழ்க்கடையோரம் முளைத்த சிரிப்பை அவளது உள்மனம் ரசிக்கவே செய்தது.

 

“ம் முடியாதா?” 

 

“ஆமா முடியாது”

 

“அப்படின்னா இரு… நானும்…” என்று எழ, அவளுக்குத் தான் பக்கென்றானது. 

 

“ஐயோ… வேணாம். வந்து தொலையுறேன் இருங்க.” கடுப்புடன் மொழிந்து விட்டு கட்டிலின் மறு முனைக்கு வந்தாள்.

 

இவன் இப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டானே? என்னவாயிற்று இவனுக்கு? ஏன் குடித்து விட்டு வந்து அலப்பறை செய்கிறான்? சிரிக்கிறான் வேறு. குடித்ததில் மறை கழன்று விட்டதோ?

 

முறைத்துக் கொண்டே கட்டிலின் மறுமுனையில் அமர்ந்தவள்,  நான்கைந்து தலையணைகளை எடுத்து வைத்து அவனுக்கும் இவளுக்கும் நடுவில் சுவரெழுப்பி,

 

“இதை தாண்டி வந்தீங்க உதைச்சு தள்ளிடுவேன். தள்ளிப் படுங்க.” என்ற மிரட்டலுடனே அவனைப் பார்க்க, குறட்டையொலி தான் கேட்டது.

 

அதற்குள் உறங்கி விட்டானா? அவளும் படுக்கையில் சரிந்தாள். 

 

உறங்கும் அவனையே பார்த்திருந்தாள் அவள். முன்பு முழுதாக வழித்து விட்டது போல் இருந்த அவன் தலைமுடி இப்போது வளர்ந்து அழகாக வெட்டப்பட்டிருந்தது. தாடி கூட அளவாக ட்ரிம் செய்யப்பட்டு அழகாகத் தான் தெரிந்தான் அந்த முரடன். 

 

 ஊரறிய திருமணமும் செய்தாயிற்று. திருமணம் முடிந்த முதல் இரவிலேயே குடித்து விட்டு வந்து மட்டையாகி விட்டான். இவன் குடித்திருப்பதே பேரதிர்ச்சி.

 

‘இந்த லட்சணத்துல இவன் பக்கத்துல வேற தூங்கனுமாம். இப்படி தூங்குறதுக்கு தான் என்னை படுத்தி எடுத்தானா?  எப்படி தூங்குறான் பாரு. அழகான ராட்சசன்.’

 

அவள்‌‌ மனம் போன போக்கில் ஒரு கணம் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

 

இவனிடம் தான் என்ன தான் எதிர்பார்க்கிறோம்? அவளுக்கே தெளிவாக புரியவில்லை.

 

இவனுடன் காதலில் சுகித்து காதலில் திளைத்து இன்பம் பெறவா மீண்டும் இவனுடன் இணைந்தாள்? நிச்சயமாக இல்லை.

 

அப்படியிருக்க ஏன் இந்த மனம் தறிகெட்டு தவிக்கிறது? தந்தைக்காக எற்றுக் கொண்ட வாழ்க்கை இது. அவள் செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கிறது.

 

அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவும் கூடாது மனதை அலையவிடவும் கூடாது என்ற உறுதியான முடிவுடன் கடினப்பட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

 

***

 

அவள் அணைத்திருந்த தலையணையை தன்னுடன் மேலும் இறுக்கி அணைத்து உறங்க முயல, அவளது நாசி நுகர்ந்த வித்தியாசமான மணத்தில் மெல்ல மெல்ல இமைகளை பிரித்தவள், அதிர்ந்தாள்.

 

அவன் மார் மீது தன் தலை சாய்த்திருப்பதை உணர்ந்தவள் திடுக்கிடலுடன் விலகி எழுந்து கொள்ள, அவனும் விழித்துக் கொண்டான்.

 

இருவருக்கும் நடுவில் தலையணை கொண்டு சுவரெழுப்பி உறங்கச் சென்றது நினைவில் வந்தது. 

 

“ஏய்… நீங்க எப்படி என் பக்கத்துல வந்தீங்க?. பில்லோவ நடுவுல வச்சிட்டு நான் அந்தப்பக்கம் தானே படுத்திருந்தேன்…  கண்ணு மண்ணு தெரியாம குடிச்சா இப்படி தான் நடந்துப்பீங்களா?” விழிகளை பெரிதாக்கி அவனை மிரட்டும் தோரணையில் கேட்டாள் அவள்.

 

அவளது பேச்சில் கண்களை சுருக்கி எழுந்து அமர்ந்து விட்டு கூர்மையாக அவளை நோக்கியவாறே எழுந்து அமர்ந்தான்‌ ருத்ரன்.

 

“என்ன நான் உன் பக்கத்துல வந்தேனா? நல்லா கண்ணை திறந்து பாரு நீ தான் என் பக்கத்துல இருக்க…” கேலியாக அவளை பார்த்து சிரிக்க, அப்போது தான் உணர்ந்தாள் அதை.

 

அவன் இடத்தை விட்டு இம்மியளவும் அசைந்திருக்கவில்லையே. அவள் தானே அவன் பக்கத்தில் இருக்கிறாள். அப்படியென்றால் உறக்கத்தில் அவள் தான் உருண்டு வந்து அவனை அணைத்து இருக்கிறாளா?

 

ஐயோ என்றானது அவளுக்கு. நாக்கை கடித்துக் கொண்டாள்.

 

அடுத்த நொடி‌ அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க முடியாமல், கட்டிலை விட்டும் குதித்து இறங்கியவள், குளியலறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டாள்.

 

ஓடும் அவளையே இமைக்காமல் பார்த்தவனது இதழ்களில் சிறு புன்னகை அரும்ப, மீண்டும் படுக்கையில் தொப்பென விழுந்தான்.

 

***

 

அந்த வீட்டின் பிரம்மாண்ட சாப்பாட்டு அறை மேசையில் அன்று போல இன்றும் அமர்ந்திருந்தாள் தாமிரா. அன்று வெறுப்புடனும் பயத்துடனும் அமர்ந்திருந்தவளுக்கோ, இன்று அந்த பயம் சிறிதும் இல்லை. 

 

ஷோபாவும்‌ ருத்ரனும் மாத்திரமே அங்கிருக்க, ரோஷினியும் அனன்யாவும் இல்லாததை அவள் உணர்ந்தாலும் அதை வாய் திறந்து கேட்கவில்லை.

 

மூவருமாக அமைதியாகவே உண்டு முடிக்க, ருத்ரனுக்கு ஓர் அழைப்பு வர அந்த இடத்தை விட்டு அகன்றான்.

 

தாமிராவும் அங்கிருந்து நகர, 

“நீ மறுபடியும் இங்க வந்தது ரொம்ப சந்தோஷம் தாமிரா” என்று பேச்சை ஆரம்பித்தார் ஷோபா.

 

ஷோபாவின் கூற்றில் அவரை அமைதியாக பார்த்தாள் அவள். 

 

“ம்.. எனக்கும் ரொம்ப சந்தோஷம்…” என்று அவள் அந்த ‘ரொம்பவை’ அழுத்திச் சொன்ன விதம் அவருக்கு புரியாமலில்லை.

 

“அன்னைக்கு நீ ஏன் இங்கிருந்து போனனு எனக்கு தெரியாது. அதை நான் கேட்க போறதுமில்லை. ஆனா திரும்பவும் ஒரு முறை அந்தத் தப்பை செய்ய துணியாத. ருத்ரனை பத்தி புரிஞ்சு நடந்துக்க” அவரது குரலில் எச்சரிக்கையுடன் கூடிய கடுமையிருக்க, அவளுக்கோ எரிச்சலாக இருந்தது.

 

ஷோபாவை நிமிர்ந்து நோக்கினாள். இதழ்கள் கோணலாக வளைய,

 

“உங்க‌ மகன் செய்ததெல்லாம் கரெக்ட்னு நீங்க நெனைக்கிறீங்களா?” கேட்டாள்.

 

“அப்சலூட்லி…” சிறிதும் யோசிக்காமல் உடனடியாக வந்தது அவரது பதில்.

 

“என் மகன் எது செய்தாலும் காரணம் இருக்கும் அன்ட் கரெக்ட்டா தான் இருக்கும்” என்றவரை ஒருகணம் வெறித்தாள்.

 

“ஓ இஸ் இட்? இனி அப்படியிருக்க வாய்ப்பே இல்லை” ஒரு வித தீவிரத்துடன் உரைத்து விட்டு அங்கிருந்து நகன்றவளையே, குழப்பத்தின் ரேகைகள் நெற்றியை நோக்கி இடம்பெயர, யோசனையாக பார்த்திருந்தார் ஷோபா.

 

***

 

பூமியே அதிர இடியுடனும் வானத்தைப் பிளந்து மின்னிய மின்னலுடனும் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது பெரு மழை.

 

கல்லறையின் முன்பாக நின்றிருந்தான் உயர்ந்த ஒருவன். அந்த மழையின் தொப்பலாக‌ நனைந்திருந்தவன் உடல் கூட குளிரவில்லை. மாறாக கொழுந்து விட்டெரியும் நெருப்பென தகித்துக் கொண்டிருந்து அவன் மனம்.

 

அவன்‌ அமர்தீப்.

 

அந்தக் கல்லறையின் முன்பு பொறிக்கப்பட்டிருந்த அந்தப் பெயரையே வெறித்துக் கொண்டிருந்தான். ‘ஃபெமிலா அமர்தீப்’ அவனது அன்பு மனைவியின் கல்லறை அது.

 

அந்தக் கல்லறையின் மீது வைக்கப்படிந்த வெள்ளை நிற மலர்கொத்து கூட நனைந்து கொண்டேயிருந்தது அவனை போல.

 

அடுத்தடுத்து அவனது பெற்றோரின் கல்லறைகள். அவன் கண்களில் இருந்து ஒரு துளி‌ கண்ணீர் கூட விழவில்லை. அவனது வெறித்த கண்களில் பழிவெறியே ஊறிப் போயிருந்தது.

 

ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் இழந்தவனாயிற்றே. எப்படி மறப்பான் இந்த நாளை?

 

அவனது தாய், தந்தை, மனைவி என அனைவரையும் இழந்தவனால் அவனது ஒரே உறவான தம்பியை மாத்திரமே காப்பாற்ற முடிந்தது.

 

ருத்ரன் மட்டும் இல்லையெனில் அன்றே அவனும் இறந்திருப்பான்.

 

இந்த நிழலுலக வாழ்வில் எவர் உயிர் எந்த நேரத்தில் பறிக்கப்படும் என யாரும் அறியார்.

 

அவன் மனம் உணர்ந்த ஒரே உண்மை இந்நிழலுக வாழ்வு குடும்ப உறவுகள் கொண்ட யாருக்கும் உகந்ததல்ல.

 

இதிலிருந்து மொத்தமாக விலகிட எண்ணினாலும் பழிவெறி சுமந்து நிற்கும் அவன் இதயம் அதை இறக்கி வைக்காமல் ஓயப் போவதில்லை. 

 

அவன் வாழ்வில் எந்நொடியும் அவனுடனே பயணித்துக் கொண்டிருக்கும் அந்த கொடிய நினைவுகள்.

 

அந்த நினைவுகள்.. அந்த நினைவுகள் தந்த வலி இதயத்தை குத்திக் குடைவது போல வலியை தர, கை முஷ்டி மடக்கி அடக்கிட முயன்றான் அவன்.

 

அவனது ஆசை மனைவியின் குழந்தை முகம் அவன் முன் வந்து புன்னகைத்து மறைய, அத்தனை வலியிலும் ஓர் மென்னகை எட்டிப்பார்த்தது.

 

உயிர்பிரியும் கடைசி நொடியில் கூட,  இறுதியாக அவனை அழைத்தாளே அவள். 

 

‘அமர்…’ உயிர்க்கரையும் குரல் அது. 

 

அவன் செவி வழி, இதயம் நுழைந்து, அவன் உடல் முழுவதும் உரையச் செய்யும் அவளது குரல்.

 

இப்போது அவன் உள்ளுக்குள் கிடந்த வலி அதிகமாக அதிகமாக, அவன் பழிவெறியும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க, இதயமும் தறிகெட்டு துடிக்க, கொதித்தது அவன் இரத்தம்.

 

மனதுக்குள் எழுந்த வன்மம் நொடிக்கு நொடி அதிகமாக, ‘இதற்கு காரணமான ஒருத்தனையும் விட மாட்டேன். துடிக்கத் துடிக்க கொல்லுவேன்’ அதே நாளில் மீண்டும் ஒரு முறை அவனது சபதத்தை நினைவுபடுத்திக் கொண்டான்.

 

****