லவ் ஆர் ஹேட் 17

eiG3RFS6526-49a108e7

இப்படியே சிலநாட்கள் நகர, வீட்டில் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காத யாதவ், அவளின் மேலிருக்கும் மொத்த கோபத்தையும் அலுவலகத்தில் வைத்து பழிவாங்க ஆரம்பித்தான் எனலாம்.

அதுவும் அவள் அவனுக்கு கீழ் அவனுடைய குழுவில் அல்லவா வேலை பார்க்கிறாள்! சும்மாவா விடுவான்?

“இந்த ரிபோர்ட்ல எல்லாமே எரர். இன்னும் பத்தே நிமிஷத்துல இதை சரி பண்ணி கொண்டு வர்ற.”

“மொத்தமா தப்பு தப்பா பண்ணியிருக்க. உனக்கு வேலை தெரியுமா? தெரியாதா?”  என்று பல திட்டுக்கள் அவனிடமிருந்து…

அதிலும், அவள் சரியாகவே செய்து கொடுத்தாலும் கூட அவளை குறை கூறும் அவனை அவளால் என்ன தான் செய்ய முடியும்? அலுவலகத்தில் வைத்து வேலை வாங்கியே ஒருவழிப்படுத்துபவன், வீட்டிற்கு வந்தால் ‘அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ எனும் பாவனையில் முகத்தை வைத்திருப்பான்.

இதில் அவர்களின் குழுவில் வேலை பார்க்கும் அனிதாவின் பார்வை வேறு யாதவ்வின் மேல் நட்பை தாண்டிய எண்ணத்தில் படிய,  ‘இவ என்ன நம்ம வீட்டுக்காரரயே விழுங்குற மாதிரி பார்க்குறா. இது சரியில்லையே…’ என்று மானசீகமாக யோசிக்கும்  ரித்விக்கு தான் தினமும் திக்திக் நிமிடங்கள்!

சிலநேரம் யாதவ் தனக்கு கல்யாணமானதையே மறக்கும் சம்பவங்கள் கூட உண்டு.

அன்றொரு நாள் ரித்விக்கு முன்னாலே யாதவ் வீட்டிற்கு வந்திருக்க, சில நிமிடங்கள் கழித்து வீட்டுக்கு வந்த ரித்வி அழைப்பு மணியை அழுத்தியதும் கதவை திறந்தவன், “எதுவா இருந்தாலும் ஆஃபீஸ்ல பேசிக்கலாம்.” என்றுவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டான்.

அவளோ ‘ஙே’ என கதவையே வெறித்தவாறு நிற்க, அடுத்த சில நொடிகளில் கதவை திறந்த யாதவ் அவளை ஏறெடுத்தும் பார்க்காது தனதறைக்குச் சென்று கதவடைத்துக்கொள்ள, ‘என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது.’ என்றிருந்தது அவள் மனதின்  புலம்பல்.

இவ்வாறு நாட்கள் சாதாரணமாக நகர, கடவுள் என்ன சும்மாவா? மீண்டும் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டார் அவர்.

அன்று அலுவலகத்தில்,

எல்லாரும் கேன்டீனில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்க, ‘இவர் சிரிக்கும் போது எம்புட்டு அழகு! ஆனா, என்னை பார்க்கும் போது மட்டும் எதிரிநாட்டு படைய பார்க்குற உள்நாட்டு சோல்ஜர் மாதிரி மூஞ்ச வச்சிக்குறாரு!’ என்று தன் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த யாதவ்வை ஓரக்கண்ணால் ரசித்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ரித்வி.

சரியாக அவளுக்கு அந்த பிரத்யேக பாடலுடன் அழைப்பு வர, அந்த பாடலின் ஒலியில் யாதவ் உட்பட மொத்த பேரின் பார்வையும் இவள்புறம் திரும்ப, இங்கு திரையை பார்த்தவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

“எக்ஸ்கியூஸ் மீ!” என்றுவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறியவள் அழைப்பை ஏற்று, “அத்தான், எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீங்க கோல் பண்ணாதீங்க, நேரம் கிடைக்கும் போது நானே பண்றேன்னு… என் வீட்டுக்காரர் பார்த்தா என்னாகுறது?” என்று படபடவென பொறிய, அதில் சலிப்பாக முகத்தை சுழித்த ஆரன், “அவன் பார்த்தா எனக்கென்ன?” என்று கேட்டு, “ஆரா…” என்ற அவளின் கோபமான கீச் குரலில் பக்கென சிரித்துவிட்டான்.

“சரி… சரி…  உன் வீட்டுக்காரர் என்ன பண்றான்? உன்னை நல்லா பார்த்துக்குறானா?” என்று ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தி கேலியாக ஆரன் கேட்க, அவனின் கேலி புரிந்தாலும் தன்னவனை விட்டுக்கொடுப்பாளா அவள்!

“அவருக்கென்ன? என்னை நல்லா பார்த்துக்குறாரு. இப்போ கூட நான் அவரோட தான் லன்ச் சாப்பிட்டேன். எனக்கு அதிகமா வேலை கூட கொடுக்குறது இல்லை. நானே தப்பு பண்ணாலும் அவரே தப்பை திருத்தி எனக்கு கத்து தருவாரு. அப்படி ஓர் சபோர்ட்!” பொய்யென்று தெரிந்தாலும் தன்னவனை விட்டுக்கொடுக்காது பேசிய ரித்வி, அதைக் கேட்டுக்கொண்டிருந்தவனின், “உருட்டு நல்லாருக்கு.” என்ற பதிலில், ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டாள்.

“என் வாழ்க்கைய விடுங்க! பாட்டி எப்படி இருக்காங்க? உத்ராவுக்கும்  உங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா பேச்சு வார்த்தை நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்.” என்று ரித்வி சொல்ல, “ஆமா… ஆமா… வேலைவெட்டி இல்லாம வீட்டுல சும்மா இருந்தா பெருசுங்களுக்கு இப்படி தானே யோசிக்க தோணும்.” என்று கடுப்பாக வந்தன ஆரனின் வார்த்தைகள்.

“ஆரா, பாட்டி பக்கத்துல இருக்காங்களா? இப்போவாச்சும் அவங்க என் கூட பேசுவாங்களா?” என்று ரித்வி தயக்கமாக கேட்க, தன்னெதிரே அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த தேவகியை பார்த்தவன், “நாங்களும் சொல்ல தான் செய்றோம். ஆனா என்ன, எங்கள பேச விட்டு உன் குரல கேட்டுட்டு உட்கார்ந்திருக்கு. அவ்வளவு அதுப்பு இந்த கிழவிக்கு!” என்று சொல்லி கூடவே “ஆஆ…” என்று அவன் அலற, ரித்விக்கோ அங்கு ஆரனின் மேல் பாட்டியின் கைவண்ணம் புரிந்துவிட்டது.

“கூடிய சீக்கிரம் அவங்க என்கூட பேசுவாங்க ஆரா.” என்று லேசாக சிரித்தவாறு சொன்னவளுக்கு தன் முதுகில் ஏதோ ஊசி துளைக்கும் பார்வை உணர, பட்டென்று திரும்பி பார்த்தவளுக்கு இதயமே நின்றுவிட்டது. பின்னால் யாதவ்வோ இறுகிய முகமாக அவளையே பார்த்தவாறு நின்றிருக்க, எச்சிலை விழுங்கியவள், “என்னங்க, அது வந்து… நான்…” என்று தடுமாறினாள்.

ஆனால், அவனோ எதுவும் பேசாது அவளை தாண்டி அங்கிருந்து நகர, ‘ஹப்பாடா! தப்பிச்சிட்டோம்.’ என்று நெஞ்சில் கை வைத்து பெருமூச்சுவிட்டவளுக்கு தெரியவில்லை அவனுடைய அமைதியின் பின்னிருக்கும் பூகம்பம். 

வேலை முடித்து வீட்டுக்கு வந்த ரித்வி, எப்போதும் போல் வீட்டை சுத்தப்படுத்தி தனக்கான இரவுணவை சமைக்க தயாராக, அழைப்பு மணி சத்தத்தில் ஓடிச்சென்று கதவை திறந்தாள்.

எதிரே யாதவ் கையில் ஒரு பார்சலுடன் நுழைந்து தனதறைக்குச் செல்ல, அவனின் கையிலிருந்த பார்சலை பார்த்தவள், ‘இன்னைக்கும் வெளில இருந்து வாங்கிட்டு வந்திருக்காரு போல கிருஷ்ணா!’ என்று அது என்னவென்று தெரியாது சலித்துக் கொண்டாள்.

அறைக்குள் சென்றவனிடமிருந்து அடுத்த அரைமணி நேரம் எந்த சத்தமும் இல்லை. ரித்வியும் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.

தீவிரமாக சாம்பார் செய்துக் கொண்டிருந்தவள், அவனுடைய அறையில் கேட்ட கண்ணாடி உடையும் சத்தத்தில் கையிலிருந்த கரண்டியை பயத்தில் கீழே போட்டுவிட்டாள். ‘அய்யோ! என்ன சத்தம்?’ என்று பதறியவாறு அவனுடைய அறைக்கு ஓடியவள், “என்னங்க… என்னாச்சுங்க? ஹெலோ…” என்று மெதுவாக அழைத்தவாறு கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைய, அங்கோ தரையில் மது போத்தல் உடைந்து கண்ணாடித்துண்டுகள் சிதறிக் கிடந்திருந்தன.

அதைப் பார்த்துவிட்டு அதிர்ந்துப் போய் தன்னவனை அவள் நோக்க, அவன் நின்றிருந்த தோற்றமே அவனின் கோபத்தின் அளவை பறைசாட்டியது.

ஷர்ட் பட்டன்கள் திறந்து, கலைந்த தலைமுடியுடன் இறுகிய முகமாக அவன் அவளையே அழுத்தமாக பார்த்தவாறு இருக்க, அவளுக்கு தான் அத்தனை படபடப்பு!

ஆனாலும், ‘உள்ளே வந்தாச்சு. வேறு வழியில்லை.’ என்று நினைத்த ரித்வி, தரையில் கிடந்திருந்த கண்ணாடித்துண்டுகளை பார்த்து, “என்னாச்சுங்க? கீழ விழுந்திருச்சா? இந்தப் பக்கம் வராதீங்க. நான் இதை க்ளீன் பண்ணிடுறேன்.” என்று திக்கித்திணறி சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியே செல்ல எத்தனிக்க, “ஏய்…” என்ற அவனுடைய கர்ஜனையில் அப்படியே நின்றாள்.

அவனை மிரட்சியாக அவள் நோக்க, “உன் ஃபோன எடுத்துட்டு வா!” என்ற அவனது கட்டளையில் அவளுக்கு பயத்தில் வியர்த்தேவிட்டது. அசையாது அவள் அப்படியே நிற்க, “உன் ஃபோன எடுத்துட்டு வர சொன்னதா எனக்கு நியாபகம்.” என்ற அவளின் அழுத்தமான வார்த்தைகளில் அடுத்த சில நொடிகளிலே அவளுடைய அலைப்பேசி அவனுடைய கையில் இருந்தது.

அவன் அலைப்பேசியை நோண்ட, இவளுக்குத் தான் பயத்தில் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவனின் புருவங்கள் சட்டென சுருங்கி பின் பற்கள் நரநரவென கடித்த வண்ணம் முகம் இறுக, அவளுக்கு தான் ‘நான் மாயமாகி விடக்கூடாதா?’ என்றிருந்தது.

அலைப்பேசியை கட்டிலில் தூக்கிப் போட்டவன், நெற்றியை தடவியவாறு ஏதோ யோசித்து சட்டென நிமிர்ந்து ரித்வியை நோக்க, அவளுக்கோ திக்கென்றானது. பதட்டத்தில் அவளுக்கோ முகத்தில் முத்து முத்தான வியர்வைத்துளிகள்!

தன் நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளை முந்தானையால் துடைத்த ரித்வி பதட்டமாக மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு, “என்னங்க? எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று பயந்தபடி கேட்க, மதுபோத்தலை டீபாயில் வைத்தவன், “ஊத்தி கொடு!” என்று கட்டளையாக சொல்ல, அவளுக்கோ அத்தனை அருவருப்பு!

இதுவரை வீட்டில் எந்த ஆண்களிடமும் இல்லாத பழக்கமல்லவா இவனிடம் இருக்கிறது! ‘ஏன் தான் மாமா இவரை வெளியூருக்கு அனுப்பினாரோ?’ என்று பத்தாயிரம் தடவையாக தன் மாமாவை மனதிற்குள் வறுத்தெடுத்தவாறு கைகளில் துப்பட்டாவை சுத்திக் கொண்டவள், முகத்தை சுழித்தவாறு அவனுக்கு ஊற்றிக்கொடுக்க, அதை வாங்கியவன் அடுத்தகணம் அந்த மதுவை அவள் முகத்திலே விசிறியடித்தான்.

அவள் தன்னை சுதாகரித்துக்கொள்ள அவகாசம் கூட கொடுக்காது அவளின் தலைமுடியை கொத்தாக பற்றிய யாதவ், “என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? அந்த ஆரனோட அவ்வளவு பழக்கம் இல்லை. அப்படி இப்படின்னு அன்னைக்கு கதை விட்டுட்டு இன்னைக்கு அவன் கூட கோல் அ கொஞ்சி குலாவுற. அவனுக்கும் உனக்கும் என்ன டி சம்மந்தம்? அதுவும், அந்த தேவகி குடும்பத்துக்கும் எங்களுக்கும் ஆகாதுன்னு நல்லாவே தெரிஞ்சும் அவன் கூட பழகுறன்னா உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்?” என்று கேட்டவாறு அவளை உதறித்தள்ள,

அவள் விழுந்தது என்னவோ உடைந்துக் கிடந்த கண்ணாடித் துண்டுகளின் மேல் தான்.  அவள் விழுந்த வேகத்தில் நெற்றியில் கண்ணாடித் துண்டுகள் குத்தி கிழித்துவிட, கூடவே, கைகளிலும் கிழித்து இரத்தம்!

“ஆஆ… அம்மா…” என்று ரித்வி வலியில் அலற, அவனோ அப்போதும் விட்டபாடில்லை.

கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவள் காயத்தை தொட்டுப்பார்த்து, “என்னங்க, வலிக்குதுங்க.” என்று அழுதவாறு சொல்ல, அவனுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லையோ என்னவோ!

அவளையே கனல் கக்கும் விழிகளால் அவன் நோக்க, அவன் பார்வையும், நின்றிருந்த தோற்றமுமே அவளுக்குள் கிளியை உண்டாக்கியது.

அவளுக்கு காயம் உண்டானதை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாத யாதவ் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு, “ஒருவேள… ஒருவேள… அதுவா இருக்குமோ? ஓஹோ! இப்போ தான் புரியுது. அன்னைக்கு கூட தியேட்டர் வாசல்ல அவன் கூட பேசிக்கிட்டு இருந்த. அவன் உன்னை பார்த்து சிரிக்கிறதும்! நீ அவனை பார்த்து இழிக்கிறதும்! இதுல அவனுக்கு சபோர்ட் வேற… என்ட், அவன் நம்ம கல்யாணத்துக்கு கூட வந்தான் தானே?” என்று கேட்டு நிறுத்தி,

“ச்சீ… ச்சீ… உன் கல்யாணம். அப்போ அவன் முகத்தை பார்க்கனுமே! ஒருவேள, அவன் கூட இப்படி நெருங்கி பேசுறேன்னா ஏதோ இருக்கு. உன்னை மாதிரி பொண்ணுங்களுக்கு சாப்பாடு கொடுத்து வீட்டுல இடம் கொடுத்து வச்சிருந்தா இன்னும் அதை விட பெருசா தான் எதிர்ப்பார்ப்பீங்களோ? ச்சே! என்ன பொண்ணுடி நீ? அதுவும் அந்த ஆரன் எப்படி உன் கூட பேசலாம்? இப்போ எல்லாமே புரியுது. அத்தை சொன்ன மாதிரி எங்க வீட்டுச் சொத்து கேக்குதோ? இதுக்கு தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா டி?”

போதையில் அவன் பேசிய பேச்சில் உயிருடன் மரித்துவிட்டாள் ரித்வி.

கஷ்டப்பட்டு எழுந்து நின்றவளுக்கு கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடியது. ‘என்னை பற்றி இவ்வளவு தரக்குறைவான பேச்சா? அதுவும் தன் கணவனிடமிருந்து…’ என்று உள்ளுக்குள் மருகியவளுக்கு அவனை எதிர்த்து பேசக் கூட வார்த்தை வரவில்லை.

உதடுகள் துடிக்க, நெற்றியில் இரத்தம் வடிய தன்னவனை உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் வெறித்தவள், “இந்த மாதிரி வார்த்தைகள சொல்லி காயப்படுத்துறதுக்கு நீங்க என்னை மொத்தமா கொன்னிருக்கலாம்.” என்றுவிட்டு அப்படியே மயங்கி சரிந்திருந்தாள்.

சிலமணி நேரங்கள் கழித்து,

நெற்றியில் உணர்ந்த எரிச்சலில் மயக்கத்திலிருந்து மெதுவாக கண்களை திறந்தவளுக்கு யாதவ்வின் முகம் தான் அருகில் தெரிய, பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள் ரித்வி. அவளோ கட்டிலில் படுத்திருக்க, அவளின் நெற்றியில் உண்டான காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவன் அவள் எழுந்ததை பார்த்ததும் சட்டென பின்னால் நகர்ந்தாள்.

அவளுக்கு தான் அவனின் செய்கை எதுவுமே புரியவில்லை. இதில் காயங்கள் வேறு வலியை கொடுக்க, ‘ஆஆ…’ என்று முணங்கியவாறு ரித்வி அவனை மிரட்சியாக நோக்க, அடுத்தநொடி அவளை பிடித்து இழுத்த யாதவ் மீண்டும் கட்டிலில் அவளை படுக்க வைத்து கிட்டதட்ட அவளின் மேல் சரிந்த நிலையில் அவள் நெற்றிக் காயத்திற்கு மருந்திட, ரித்விக்கு தான் பயத்தில் மீண்டும் மயக்கம் வருவது போலிருந்தது.

அவளின் நிலையை சற்று உணர்ந்தவன், அவளுக்காக வைத்திருந்த தண்ணீர் க்ளாசை அவளிடம் நீட்ட, அது அப்போது ரித்விக்கு தேவைப்பட்டதோ என்னவோ! அதை வாங்கி மடமடவென குடித்தாள் அவள்.

சரியாக யாதவ்விற்கு அழைப்பு வர, அலைப்பேசியை எடுத்து திரையில் தெரிந்த எண்ணை பார்த்துவிட்டு, “அப்பா…” என்றவாறு அலைப்பேசியை அவளிடம் நீட்டி முகத்தை திருப்பிக்கொண்டான்.

வேகமாக வாங்கி அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “மாமா…” என்றழைத்து அழ, இங்கு யாதவ்வோ தான் செய்ததை பற்றி தான் புகார் வாசிக்க போகிறாள் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான். ஆனால், அவள் பேசியதோ வேறு!

ரித்வி அழுததும் பதறிய மஹாதேவன், “ரித்விமா என்னாச்சு டா? ஏன் அழுகுற? கார்த்தி உன்னை ஏதாச்சும் திட்டினானா என்ன? அவன் உன்னை நல்லா பார்த்துக்குறான் தானே?” என்று பதறியபடி கேட்க, “அச்சோ! இல்லை மாமா. நீங்க கோல் பண்ணதும் வீட்டு நியாபகத்துல அழுதுட்டேன். என் வீட்டுக்காரர் ஏன் என்னை திட்ட போறாரு? என்னை நல்லாவே பார்த்துக்குறாரு. சொல்லப்போனால், நேத்து ராத்திரி கூட நாங்க ஒன்னா வெளில போயிட்டு தான் வந்தோம்.” என்று நிற்காது வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை துடைத்தவாறு அவள் பேச, அவளவனுக்கு தான் அதிர்ச்சி!

அவளின் இந்த குணத்தை அவன் சற்றும் அவளிடம் எதிர்ப்பார்க்கவில்லை. காட்டுமிராண்டித் தனமாக நடந்துக்கொண்டும் அவனை விட்டுக்கொடுக்காது அவள் பேசியதில் அவனுக்கு தான் ஏதோ மனதை பிசைவது போலிருந்தது.

மஹாதேவனும் சில பல நலவிசாரிப்புகளுக்கு பிறகு அழைப்பைத் துண்டிக்க, அலைப்பேசியை ஓரமாக வைத்தவளுக்கு போன பயம் மீண்டும் வந்து தொற்றிக்கொண்டது. அமர்ந்திருந்த நிலையிலே ரித்வி மெல்ல பின்னால் நகர, அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவன் மீண்டும் அவளை தனக்கருகே இழுத்தெடுத்தான்.

‘கிருஷ்ணா!’ என்று உள்ளுக்குள் பதறியவாறு ரித்வி அவனை நோக்க, அவளின் முகபாவனை எதையும் கண்டுக்காது அவள் நெற்றி, கையிலிருந்த காயத்திற்கு மருந்திட்ட யாதவ், “சோரி…” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

சில நொடிகள் போகும் அவனையே பார்த்தவளுக்கு நேற்று அவன் தன்னிடம் நடந்துக்கொண்டது கூட மறந்து இப்போது அவனின் செய்கையில் இதழ்கள் தானாக விரிந்தன.

இப்படியே சில நாட்கள் நகர, அன்று அவளை காயப்படுத்திய பின் மீண்டும் அவளை காயப்படுத்த தோணவில்லை அவனுக்கு. வீட்டிலிருக்கும் போது அவள் முன்னே வராது அறையிலேயே அடைந்துக் கிடப்பவன், அலுவலகத்திலும் அவளை விட்டு ஒதுங்கியே இருக்க, தன்னவனின் நடத்தையில் குழம்பித் தான் போனாள் அவள்.

அடிக்கடி தன் வீட்டாற்களுடன் பேசுபவள், ஆரனே அழைத்தாலும் யாதவ்விற்கு பயந்து அவனுடன் பேசுவதை தவிர்த்துக்கொண்டாள் எனலாம்.

அன்று….

-ஷேஹா ஸகி