லவ் ஆர் ஹேட் 18

eiYAH8Z80747-2fb5e2b8

அன்று,

அலுவலகத்திற்குச் செல்ல தயாராகி வெளியே வந்த யாதவ், அங்கு பால்கெனிக்கு போவதும் அங்கிருந்து ஓடி வருவதுமாக தடுமாறிக் கொண்டிருந்த ரித்வியை புருவத்தை சுருக்கி, ‘இவ என்ன காலையிலேயே கோமாளித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கா?’ என்ற ரீதியில் புரியாது பார்த்தான்.

அங்கு ரித்வியோ பால்கெனி வாசலில் நின்றுக் கொண்டு பால்கெனி தடுப்புச் சுவருக்கருகில் விழுந்து கிடந்த தன் துப்பட்டாவை எடுக்க பயந்துப் போய் தடுமாறிக் கொண்டிருந்தாள். ‘அய்யோ கிருஷ்ணா! ஏன் எனக்கு இந்த சோதனை? இவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை. போயும் போயும் பத்தாவது மாடியில வீடு எடுத்து வச்சிருக்காரே…’ என்று புலம்பியவளின் மனசாட்சியோ, ‘இல்லைன்னா மட்டும் தைரியமா போய் கிழிச்சிருவ!’ என்று கேலி செய்தது.

அதையெல்லாம் தூசு போல் தட்டிவிட்டு துப்பட்டாவுக்கு அருகில் சென்றவள் மீண்டும் பயந்து ‘அய்யோ! வேணாம் வேணாம் தலையெல்லாம் சுத்துதே!’ என்று அங்கிருந்து ஓடி வந்துவிட, தனதறையின் கதவு நிலையில் சாய்ந்தவாறு இதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனுக்கோ இதழ்கடையோரம் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்கத் தான் செய்தது.

அப்போது தான் அன்று முதன்முறை வீட்டுக்கு வந்த போது மஹாதேவன் சொன்ன ‘ரித்விக்கு உயரம்னாலே பயம்.’ என்ற வசனம் கூட நியாபகத்திற்கு வந்தது அவனுக்கு.

அவளருகில் சென்றவன் “ஹ்ர்ம்… ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறும, அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள், “என்னங்க, என்ன இந்த பக்கம்? ஹிஹிஹி…” என்று இழித்து வைக்க, அவளை அழுத்தமாக பார்த்தவாறு பால்கெனிக்குச் சென்றவன் அந்த துப்பாட்டாவை எடுத்து வந்து அவளின் கைகளில் கொடுத்தான்.

அவளுக்கோ அத்தனை ஆச்சரியம்! கூடவே சந்தோஷமும்… ‘நம்ம வீட்டுக்காரர் நம்ம அவஸ்தைய புரிஞ்சிக்கிட்டு நமக்கு ஹெல்ப் பண்ணியிருக்காரே.’ என்று குதூகலமாக நினைத்துக் கொண்டது அவள் மனம்.

என்றும் இல்லாத அதிசயமாக யாதவ் நடந்துக்கொண்டதில் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்றவள், முப்பத்திரெண்டு பற்களையும் காட்டி இழித்து வைக்க, அவளை மேலிருந்து கீழ் நாடியை தடவியவாறு ஆராய்ச்சியாக பார்த்தவன், அடுத்தநொடி அவளே எதிர்ப்பார்க்காது அவளை பால்கெனிக்கு இழுத்துச் சென்று அவளின் தலையை அழுத்தி தடுப்புச்சுவரை தாண்டி தரையை பார்க்க வைக்க, இதயமே வெளியே வந்துவிட்டது ரித்விக்கு.

கிட்டதட்ட மூச்சே நின்றுவிட்டது போல் உறைந்துப்போய் விழிவிரித்து பத்தாவது மாடியிலிருந்து உயரத்தை பார்த்தவளுக்கோ மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது எனலாம். ஆனால், அடுத்த சில நொடிகளிலே தன்னை சுதாகரித்தவள் “அம்மா…” என்று அலறியவாறு தன்னை பிடித்திருந்த யாதவ்வின் கைகளை உதறிவிட்டு பயத்தில் அவனை அணைத்துக்கொள்ள, அவனோ சற்றும் இதை எதிர்ப்பார்க்கவில்லை.

“யது, என்னை உள்ள கூட்டிட்டு போங்க. பயமா இருக்கு. ஏன் இப்படி பண்ணீங்க? நான் என்ன பாவம் பண்ணேன். கிருஷ்ணா என்னை காப்பாத்து!” என்று அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக, அவள் அணைத்ததில் உண்டான அதிர்ச்சியில் நின்றிருந்த யாதவ், “ஏய்! உயரத்தை பார்க்குறதுல உனக்கென்னடி பயம்? இப்போ பார்த்தப்போ என்ன செத்தா போயிட்ட?” என்று கேட்டவாறு தன்னிடமிருந்து விலக்கி ஹோலுக்கு அழைத்து வந்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்தி அவனிடமிருந்து இரண்டடி தள்ளி நின்றவளுக்கும் அவன் செய்த காரியத்தில் கோபம் வர, உதட்டை சுழித்து அவள் அவனை பார்த்த விதத்தில் அவனுக்கோ சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

ஆனால், வாய்விட்டு சிரித்தால் அது யாதவ் அல்லவே!

விறைப்பாக ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன டி?” என்று கேட்டவன், “இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லேட்டா வந்த… அவ்வளவு தான். இன்னைக்கு ஒரு முக்கியமான ப்ரோஜெக்ட் இருக்கு. ஆட்டோவுக்கு காசு மிச்சம் பண்றேன்னு பஸ்ல வந்து இறங்காத!” என்றுவிட்டு கேலியாக கொடுப்புக்குள் சிரித்தவாறு நகர்ந்துச் செல்ல, அவளுக்கோ ‘ஆஆ…’ என்று கத்த வேண்டும் போலிருந்தது.

‘வீட்டுக்காரர்கிட்ட சொந்த வாகனம் இருந்தும் பஸ்ல வந்து இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து ஆஃபீஸ்க்கு வந்து சேருற முதல் பொண்டாட்டி நானா தான் இருப்பேன். அய்யோ கிருஷ்ணா! ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன்.’ என்று மானசீகமாக புலம்பித் தள்ளிவிட்டாள் ரித்வி.

அன்று அலுவலகத்தில் வேலை கொடுத்தே அவளை கசக்கி பிழிந்த யாதவ், இரவு நேரம் சென்று தான் அவளை வீட்டிற்கே விட்டான் எனலாம். எப்போதும் போல் அவன் அவனுடைய பைக்கில் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்க, கடைசி பஸ்ஸை பிடித்து  வீட்டிற்கு வந்து சேர்ந்த ரித்விக்கோ அத்தனை களைப்பு! இதில் வயிற்றை கிள்ளும் பசி வேறு…

யாதவ்வோ அவள் வரும் போது ஹோல் சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ தட்டச்சு செய்துக் கொண்டிருக்க, அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு மனதுக்குள் அவனை வறுக்க மட்டும் தான் முடிந்தது.

வாயுக்குள் அவனை திட்டி முணுமுணுத்தவாறு அறைக்குள் இவள் நுழைய, யாதவ்வோ எப்போதும் போல் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை. சில நிமிடங்கள் கழித்து வரும் போது வாங்கிக்கொண்டு வந்த சாக்லெட் கேக்கை தட்டில் எடுத்து வைத்தவன், கரண்டியால் ஒரு வாய் சாப்பிட எடுக்க, சரியாக அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு.

கேக் தட்டை டீபாயில் வைத்துவிட்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தவாறு பால்கெனிக்கு சென்ற யாதவ், அந்த அழைப்பிலே மூழ்கிவிட, குளித்து உடைமாற்றி வந்தவளுக்கோ தன் வீட்டின் நினைவு தான்.

‘யாராச்சும் நமக்கு சமைச்சி ஊட்டி விட்டா எப்படி இருக்கும்? ரொம்ப களைப்பா இருக்கே! பசிக்குது ஆனா, சமைக்க முடியல்லையே…’ என்று மானசீகமாக புலம்பியவாறு ஹோலுக்கு வந்தவளின் கண்களில் சரியாக சிக்கியது டீபாயின் மேலிருந்த கேக்.

இனிப்பு என்றால் தான் அவளுக்கு அலாதி பிரியமாச்சே! யாருடையது? என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை. மடிக்கணினியின் முன் ஓடிச் சென்றமர்ந்தவள், அந்த கேக்கை எடுத்து வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

‘ஆஹா! என்ன ருசி? என்ன ருசி?’ என்று புகழ்ந்துத் தள்ளியவாறு சாப்பிட்டு முடித்த ரித்வி, எதேர்ச்சையாக ஒளிர்ந்துக் கொண்டிருந்த மடிக்கணினியின் திரையை பார்க்க, அவளுடைய புருவங்களோ சுருங்கி கண்களோ அதிலிருந்ததை பார்த்து இடுங்கியது.

‘தான் பார்ப்பது கனவோ?’ என்று நினைத்து கண்களை கசக்கியவள், மீண்டும் மீண்டும் திரையை உற்றுப் பார்த்து அதிர்ந்து ‘ஆஆ…’ என்று வாயை பிளந்த வண்ணம் அதிர்ந்துப் போய் அமர்ந்திருக்க, அழைப்பை பேசிவிட்டு வந்த யாதவ், “நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்டு அவளை கோபமாக பார்த்தான்.

சட்டென நிமிர்ந்து திரையையும், தன்னையும் மாறி மாறி விரலால் சுட்டிக் காட்டியவாறு, “மீரா கிருஷ்ணன்?” என்ற அவளது அதிர்ச்சியுடனான கேள்வியை அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவேயில்லை.

“நீங்க தான் மீரா கிருஷ்ணனா? இது ஒன்னும் கனவு இல்லையே… என்னால இதை நம்பவே முடியலயே… மீரா கிருஷ்ணன் ஒரு பையனா?” என்று ரித்வி ஒவ்வொரு வார்த்தைகளாக அதிர்ந்து நீட்டி முழக்கி கேட்க, முதலில் திருதிருவென  விழித்தவன் பின் மடிக்கணினியின் முன் அமர்ந்து அந்த நாவல் தளத்திலிருந்த ‘மீரா கிருஷ்ணன்’ என்ற அவனுடைய பெயரை காட்டினான்.

ஆம், அதை பார்த்து தான் ரித்வியும் கண்டுக்கொண்டாள். சாதாரணமாக திரையை பார்த்தவள் அது தான் நாவல் வாசிக்கும் தளம் என்பதை உணர்ந்து, ‘இவர் நாவல் எல்லாம் வாசிப்பாரா?’ என்று யோசித்தவாறு அவனின் யூசர் ஐடியை உற்றுப் பார்த்தாள். அதிலிருந்த ‘மீரா கிருஷ்ணன்’ என்ற பெயரில் மயக்கமே வராத குறை தான் அவளுக்கு!

அவளோ அப்போதும் வாயை பிளந்த வண்ணம் அவனையே நோக்க, திறந்திருந்த அவளின் வாயை நாடியில் கைவைத்து மூடிவிட்டவன், “எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி? இது ஒன்னும் அவ்வளவு பெரிய மேட்டர் கிடையாது. அதுக்காக வெளிய யாருக்கிட்டேயும் சொல்லிக்கிட்டு திரியாத!” என்று சலிப்பாக சொன்னான்.

“என்னங்க, நீங்க… நீங்களா? நிஜமாவே எனக்கு கனவு மாதிரி இருக்கே! நான் உங்க எவ்வளவு பெரிய ஃபேன் தெரியுமா? உங்களோட  ஒவ்வொரு நாவல்களையும் ரசிச்சி வாசிப்பேன். அவ்வளவு பிடிக்கும். அதுவும் மீரா கிருஷ்ணனோட அதாவது உங்க கதை வரிகள் எல்லாமே அவ்வளவு சூப்பர். இப்போ என் வீட்டுக்காரரே…” என்று உற்சாகமாக சொல்ல வந்து அவன் புருவத்தை சுருக்கி முறைப்பாக பார்ப்பதை பார்த்து, “அது… அது எனக்கு தெரிஞ்ச, என் கூட இருக்குறவங்க ச்சே! ச்சே! இருக்குறவரு தான் மீரா கிருஷ்ணன். ஓ மை கிருஷ்ணா!” என்று ஆர்ப்பாட்டம் செய்தாள்.

அவள் பேசிய பேச்சில் அவனுடைய இதழ்கள் சந்தோஷத்தில் தானாக மலர்ந்தன. எந்தவொரு எழுத்தாளரும் தன் வாசகரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் வார்த்தைகள் தானே அவை! ஒரு வாசகரை தம் எழுத்துநடை கவர்கின்றதென்றால் அது தானே அந்த எழுத்தாளனுக்கு வெற்றி!

“தேங்க் யூ!” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் தன் வேலையில் மூழ்க, மீண்டும் அவனையும் திரையையும் மாறி மாறி பார்த்தவள், “ஏங்க, உங்களுக்கொன்னு தெரியுமா? உங்கள நேர்ல பார்க்க மாட்டேனான்னு அதாவது மீரா கிருஷ்ணன நேர்ல பார்க்க மாட்டேனான்னு ரொம்ப ஆசைப்பட்டிருக்கேன். இன்ஃபேக்ட், மீரா கிருஷ்ணன நேர்ல பார்க்குறதுக்காக  காத்திருந்த நானும் ஒரு மீரா தான்ங்க.” என்று சொல்லவும், சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்று அவனுக்கே தெரியவில்லை.

“ஏங்க, நான் ஒன்னு கேக்கவா? அது என்ன மீரா கிருஷ்ணன் னு பொண்ணுங்க பெயரை வச்சிருக்கீங்க?” என்று ரித்வி சந்தேகமாக கேட்கவும், திரையிலிருந்த தன் புனைப்பெயரை பார்த்த யாதவ்வின் இதழ்களோ, “கண்ணனுக்காக காத்திருந்த மீரா மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருக்குன்னு சொல்லலாம்.  அதான் அந்த மீராவோட பெயரையே என் பெயரா வச்சிட்டேன்.” என்று சொன்னவாறு புன்னகையை தத்தெடுத்தன.

அப்போது தான் யாதவ்விற்கு ஒரு விடயம் நியாபகத்திற்கு வந்தது. சுற்றி முற்றி அவன் தீவிரமாக எதையோ தேட, அவனை புரியாது பார்த்தவள், “என்ன தேடுறீங்க?” என்று தானும் சுற்றி முற்றி பார்த்தவாறு கேட்டாள்.

“அது… வரும் போது ஒரு கேக் சாப்பிட வாங்கிட்டு வந்தேன்.  ப்ளேட்ல வச்சி இங்க தான் வச்சேன். ஆனா, எங்கன்னு தான்…” என்று சொன்னவாறு நிமிர்ந்தவனின் வார்த்தைகள் தன்னை பார்த்து பெக்கபெக்கவென முழித்துக்கொண்டிருந்த ரித்வியின் முழியிலும், அவள் உதட்டோரம் ஒட்டியிருந்த க்ரீமையும் பார்த்து அப்படியே நின்றது.

பெருவிரலால் அவளின் உதட்டருகே ஒட்டியிருந்த க்ரீமை துடைத்துப் பார்த்த யாதவ், நிமிர்ந்து அவளை முறைத்துப் பார்க்க, “ஹிஹிஹி… ரொம்ப பசியா இருந்திச்சா! அதான்… டேங்க் யூ, கேக் ரொம்ப நல்லா இருந்திச்சி வீட்டுக்காரரே!” என்று அசடுவழிந்தவாறு சொல்லிவிட்டு அதற்கு மேலும் அங்கு இருக்காது ரித்வி ஓடிவிட, இங்கு யாதவ்வோ தன்னை மீறி சிரித்துவிட்டான்.

இப்படியே சிலநாட்கள் நகர, அன்றைய திகதியை பார்த்த ரித்வியின் மனம் கனத்துப் போனது. காரணம், அன்று தான் யாதவ்வின் அம்மா சாருமதி இறந்தநாள்.

உடனே அதிபனுக்கு அழைத்துப் பேசி அவனை சமாதானப்படுத்தி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தவள், அடுத்து தன் மாமாவின் மனநிலை உணர்ந்து அவருக்குத் தான் அழைத்தாள். ஊரிலிருக்கும் போது இந்த நாளில் அவரின் பக்கத்திலிருந்தே அவரின் மனநிலையை மாற்றி விடுபவளுக்கு இன்று அவரை தனியாக விட்டு இருப்பதை நினைத்து அத்தனை வேதனையாக இருந்தது.

சிலநொடிகளிலே அழைப்பை ஏற்ற மஹாதேவன் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, அவரின் மனநிலையை புரிந்துக் கொண்டவள், “மாமா, இன்னைக்கு உங்க சாரு உங்க பக்கத்துலயே இருப்பாங்க. நீங்க இப்படி இருந்தா அவங்களுக்கு பிடிக்குமா என்ன? புருஷன் அழுதா பொண்டாட்டி எப்படி தாங்கிப்பாங்க?” என்று பேசிக்கொண்டே போக, “ரித்விமா…” என்று தழுதழுத்த குரலில் வந்தது அவருடைய அழைப்பு.

“எனக்கு தெரியும் டா. என் சாரு என்  பக்கத்துல தான் இருக்கான்னு.. அவளால என்னை விட்டு எப்போவும் போக முடியாது.” என்று மஹாதேவன் சொல்லவும், அந்த வார்த்தைகளுக்கு பின்னிருந்த வலியை உணராமலில்லை ரித்வி.

“இன்னைக்கு அத்தையோட நினைவு நாள். ஊருல இருக்குறவங்களுக்கு தானம் கொடுங்க. அந்த புண்ணியம் எல்லாம் என் அத்தைய போய் சேரும்.” என்ற ரித்வி தயக்கமாக, “என் தாத்தா பண்ண பாவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் மாமா.” என்று கடைசி வார்த்தைகளை அழுகையில் முடிக்க,

“அய்யோ ரித்விமா! நான் உன்கிட்ட நடந்ததை எல்லாம் சொன்னதுலயிருந்தே ஒவ்வொரு வருஷமும் இப்படி தான் மன்னிப்பு கேக்குற. ஆனா ஒன்னும்மா, எந்த சந்தர்ப்பத்துலயும் நீ தேவகியோட பேத்தின்னு கார்த்திக்கு தெரியவே கூடாது.” என்று மஹாதேவன் உறுதியாக சொல்ல, ரித்விக்கோ ஒருவித குற்றவுணர்ச்சி!

எத்தனை நாள் தான் சொல்லாது மறைப்பது? அதுவும், தன் கணவனிடம். ஒருவேளை தெரிந்தால்? அதன் விபரீதம்… அதை நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை ரித்வியால்.

“ரித்விமா, கார்த்தி என்ன பண்றான்? அவனும் ரொம்ப உடைஞ்சி போயிருப்பான் டா. அவன் கூடவே ஆறுதலா இரு!” என்று அவர் சொன்னதும் தான் அழைப்பை துண்டித்தவள், தன்னவனை தேடிச் செல்ல, அவன் அறையில் இருந்தால் தானே!

வீட்டை சுற்றி தேடிய ரித்வி, அவன் இல்லாது அவனுடைய எண்ணிற்கு அழைக்க, அவனிடமோ பதிலே இல்லை. தன்னவனை காணாது பதறியவளுக்கு இப்போது என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.

கண்களில் விழிநீர் ஓட சோஃபாவில் அமர்ந்தவளின் இதழ்களோ, ‘எங்க போனீங்க யது?’ என்று திரும்ப திரும்ப உச்சரித்தவாறு இருக்க, கதவு திறக்கும் சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.

அங்கு கலைந்த தலைமுடி, சிவந்த கண்களுமாக வந்தவன் அழுதிருப்பதை அவனுடைய முகம் அப்பட்டமாக எடுத்துக் காட்ட, அவனுடைய சப்பாத்தில் ஒட்டியிருந்த கடல் மணல் அவன் கடற்கரைக்குச் சென்று வந்திருப்பதை சொல்லாமல் உணர்த்தியது.

“என்னங்க…” என்று அழைத்தவாறு தன்னை மீறி ஓடிச்சென்று அவள் அவனை இறுக அணைத்துக்கொள்ள, இறுகிய முகமாக அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்திய யாதவ், தனதறைக்குச் சென்று கதவை அறைந்துச் சாத்தினான். அவளோ கதவையே வெறித்தவாறு நின்றிருக்க, அடுத்த சில நிமிடங்களில் பொருட்கள் உடையும் சத்தத்தில் அதிர்ந்து விழித்தாள் ரித்வி.

எதுவும் யோசிக்காது அறையை திறந்துக்கொண்டு உள்ளே ஓடியவள், அங்கு ஆக்ரோஷமாக அறையிலிருந்த பொருட்களை  தரையில் சுக்கு நூறாக சிதைத்துக் கொண்டிருப்பவனை பார்த்து பயந்து இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.

ஆனாலும், முயன்று தைரியத்தை வரவழைத்து அவனருகில் ஓடியவள், “என்னங்க, ப்ளீஸ் நிறுத்துங்க! என்ன பண்றீங்க?” என்று சொல்லி முடிக்கவில்லை, “வெளிய போ!” என்ற அவனின் கர்ஜனையில் திக்கென்றானது ரித்விக்கு.

எச்சிலை விழுங்கியவாறு அவள் அவனை மிரட்சியாக நோக்க, “என்ன டி என்ன? என்னை பார்த்தா பாவமா இருக்கா? உனக்கெல்லாம் என் வலி புரியாது. என் அம்மாவ கொன்னுட்டாங்க. அந்த வீட்டாளுங்க என் அம்மாவ வெட்டி கொன்னுட்டானுங்க டி. அம்மா பாசத்துக்காக என்னை ஏங்க வச்சிட்டானுங்க. விட மாட்டேன். அந்த மொத்த குடும்பத்தையும் கொன்னுடுவேன். என் அம்மாவ என்கிட்டயிருந்து பிரிச்சிட்டானுங்க. எனக்கு என் அம்மா வேணும். அம்மா வேணும்.” என்று ஆக்ரோஷமாக ஆரம்பித்து அழுகையில் முடித்த யாதவ், அப்படியே மண்டியிட்டு அமர்ந்து கதறியழுக, ரித்வியும் அவனின் அழுகையை பார்க்க முடியாது அழுதே விட்டாள்.

அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ‘தன்னவனுடைய இந்நிலைக்கு தன் குடும்பம் தானே காரணம்’ என்று நினைத்தவளை குற்றவுணர்ச்சி கொல்லாமல் கொன்றது. வேகமாக அவனை நெருங்கி அவனின் தலையை தன் மார்பில் சாய்க்க, அவனோ “விடு டி என்னை!” என்று திமிறினான்.

ஆனால், அவனின் மறுப்பை எல்லாம் கண்டுக்காது அவனை அணைத்துக் கொண்ட ரித்வி அவனின் தலையை கோதியவாறு, “எப்போவும் அம்மா நம்ம கூட தான் இருக்காங்க யது.  உங்க கூடவே… உங்க பக்கத்துல… நீங்க அழுதா அவங்களால தாங்கிக்க முடியாது. அழாதீங்க ப்ளீஸ்! அம்மா ரொம்ப கஷ்டப்படுவாங்க!” என்று  அழ, அவனுக்கும் அந்த நேரம் அந்த அணைப்பு தேவைப்பட்டது போலும்!

எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அவளின் மார்பில் சாய்ந்து தன்னவளை இறுக அணைத்திருந்தவன், “சாமிக்கிட்ட என் அம்மாவ திருப்பி கொடுக்க சொல்லு ரிது. என் அம்மாவ தர சொல்லு! எனக்கு அவங்களோட மடியில
படுத்துக்கனும். அவங்க கூட பேசனும். அவங்க கூட இருக்கனும்.” என்று சிறுபிள்ளை போல் அழ, அவளுக்கோ சொல்ல முடியாத வேதனை! இதயத்தை கசக்கி பிழிவது போலிருந்தது அந்த வலி!

அவனின் தலையை கோதியவாறு அவனை அவள் ஆறுதல்படுத்த, அவளின் வருடலில் அவனின் அழுகை மட்டுப்படவும், கண்களை மூடி அவளின் மார்பில் சாய்ந்து சற்று நேரம் ஆறுதலை தேடினான் யாதவ்.

சில நிமிடங்கள் கழித்து அலைப்பேசி ஒலியில் சட்டென்று கண்களை திறந்தவன், அப்போதே தான் செய்யும் காரியம் உணர்ந்து அவளை தள்ளிவிட, இதை சற்றும் எதிர்ப்பார்க்காத ரித்வியோ தரையிலே விழுந்திருந்தாள்.

‘ஆஆ…’ என்று முணங்கியவாறு அவள் அவனை புரியாது பார்க்க, அவளின் முழங்கையை பற்றி தரதரவென இழுத்துச் சென்ற யாதவ், அறையிலிருந்து அவளை தள்ளிவிட்டு கதவை அறைந்து சாத்தியிருக்க, விம்மி விம்மி அழுதவாறு பூட்டிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி.

அதேநேரம், ஆரனின் முன் தன் கணவன் செய்த காரியத்தை நினைத்து, அவரால் உண்டான இழப்பை நினைத்து குற்றவுணர்ச்சியுடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் தேவகி.

ஷேஹா ஸகி