லவ் ஆர் ஹேட் 20 (01)

eiTOD9W56356-08a29d51

“உன் மனசை தொட்டு சொல்லு! இந்த பொண்ண உனக்கு பிடிக்கலையா?” என்று யாதவ் கேட்டதும், சந்திரனோ உத்ராவை திரும்பிப் பார்க்க, அவளோ விழிவிரித்து அவனைத் தான் ஆர்வமாக பார்த்திருந்தாள்.

ஒரு பெருமூச்சுவிட்டவன், “இங்க பாரு!  நம்மளையும் லவ் பண்ணி நமக்காக ஒரு பொண்ணு வந்திருக்குறதை பார்க்கும் போது நல்லா தான் இருக்கு. பிடிச்சிருக்கு. ஆனா, இப்படி ஓடி வர்றதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம் நிதானமா யோசிச்சிருக்கலாம். இத்தனைநாள் பாசமா பார்த்துக்கிட்ட அம்மா, அப்பாவ விட்டு வந்திருக்க தேவையில்லை.” என்று சொல்ல, ஆரம்பத்தில் அவன் சொன்னதில் உற்சாகமாகிப் போனவள், கடைசியாக அவன் சொன்னதில் கண்கலங்கித் தான் போனாள்.

ஆனால், இங்கு யாதவ்விற்கு இதழில் விஷம புன்னகை! எப்போதும் போல் தேவகியை அவமானப்படுத்தவே ஒரு திட்டத்தை தீட்டினான் அவன்.

“அய்யோ! இப்போ ஊருக்கு எப்படி போவீங்க? போச்சு! போச்சு! மாமா பொழக்க போறாரு.” என்று ரித்வி புலம்ப, இருவரையும் மறைக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்த யாதவ், “இதுக்கு ஒரே வழி தான். பேசாம இங்க வைச்சி உங்க கல்யாணத்த முடிச்சிட்டு ஊருக்கு போகலாம்.” என்று சொல்லவும், உத்ராவை தவிர மற்றவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“எனக்கு சம்மதம் தான்.” என்று உத்ரா பட்டென்று சொல்ல, அவளை முறைத்த சந்திரன், “எனக்கு இது சரியா தோணல. ஊருக்கு போயிட்டு இவள அவளோட வீட்டுக்கே அனுப்பிடலாம். பெரியப்பாக்கிட்ட நான் பேசுறேன். கண்டிப்பா சம்மதிப்பாரு.” என்று சொல்ல, “கரெக்ட் சந்து!” என்ற அதிபனும், “ஏம்மா பொண்ணு, சீக்கிரம் வா! உன்னை உன் வீட்டுல விட்டா தான் எனக்கு நிம்மதி. டேய் வாங்க! அடுத்த ட்ரெயின பிடிச்சி ஊருக்கு போயிரலாம்.” என்று அவசரப்படுத்தினான்.

தன் தம்பியை முறைத்துப் பார்த்த யாதவ், “சூப்பர்! இவள கொண்டு போய் வீட்டுல விட்டுருங்க. அப்றம் அந்த கிழவி இவங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கும்னு நினைக்கிற? வாய்ப்பேயில்லை. என்ன பேசினாலும் நம்ம சந்துக்கு கட்டி தர மாட்டாங்க. அவள அடிச்சி வற்புறுத்தி வேறொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து, சந்து நினைவுல இவ அவன் கூட சேர்ந்து வாழாம விலகி இருந்து, அது அவனால பொறுத்துக்க முடியாம போயி, இவள அடிச்சி வீட்டை விட்டு துரத்தி விட்டு, இந்த பொண்ணு வாழாவெட்டியாகி…

அப்றம் இந்த பக்கம் சந்து சித்திக்காக வேற பொண்ண கல்யாணம் பண்ணி, அவளோட சேர்ந்து வாழாம, கல்யாணமாகியும் கன்னி கழியாம வாழுற கஷ்டத்துக்கு இப்போவே இவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சி விட்டுருவோம்.” என்று சொல்லி முடித்து இடுப்பில் கைக்குற்றி மூச்சு வாங்கியவாறு, “என்ன ஓகேவா?” என்று கேட்க, ‘ஆஆ…’ என வாயைப் பிளந்த வண்ணம் அவனையே பார்த்திருந்தனர் மற்ற ஐவரும்.

‘ரைட்டர்னா சும்மாவா?’ என்று ரித்வி தன்னவனையே விழிவிரித்து நோக்க, எல்லோரினதும் அதிர்ந்த பார்வையை புரியாது நோக்கிய யாதவ், “என்ன டா?” என்று கேட்டு வைத்தான்.

“இது சரியா வருமா? எனக்கு பக்கு பக்குனு இருக்கு.” என்று அதிபன் சொல்ல, “கல்யாண பண்ணிக்க போறவங்களே பயப்படாம மசமசன்னு நிக்கிறாங்க. உனக்கெதுக்கு டா பக்கு பக்கு? நாளைக்கே கல்யாணம். இப்போவே மொத்த ஏற்பாட்டையும் பண்ணிடுறேன்.” என்றுவிட்டு யாதவ் யாரு யாருக்கோ அழைத்து அவன் பாட்டிற்கு ஏற்பாடுகளை செய்ய, இந்திரனோ, “வரே வா! சந்து உனக்கு கல்யாணம் டா.” என்று ஆரவாரமாக கத்தினான்.

ஆனால், மற்ற நால்வருக்கும் தான் திக்திக் நிமிடங்கள்.

அடுத்தநாள் காலை,

வீட்டிலிருந்து வந்த எந்த அழைப்புக்களையும் யாரும் ஏற்கவில்லை. யாதவ் பேசவும் விடவில்லை. அவனைப் பொறுத்தவரை இந்த திருமணத்தை நடத்தி தேவகி குடும்பத்தை கோபப்படுத்துவதே குறியாக இருந்தது.

ஐயர் மந்திரம் சொல்ல, சந்திரனோ, ‘கடவுளே! என் வாழ்க்கையில என்ன தான் நடக்குது? எதிர்ப்பார்க்காத ட்விஸ்ட் எல்லாம் என்னை மீறி நடக்குதே!’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அமர்ந்திருக்க, உத்ராவுக்கோ எந்தவித கலக்கமும் இல்லை போலும்! மணப்பெண்ணுக்கு இருக்கும் சந்தோஷம் கலந்த சிறு வெட்கத்துடனே அமர்ந்திருந்தாள் அவள்.

மற்றவர்களோ ஒருவித பதட்டத்துடனே நின்றிருக்க, சரியாக அதிபனுக்கு அழைத்தாள் வைஷ்ணவி. தன்னவளின் எண்ணை பார்த்தவனுக்கோ அதை துண்டிக்க மனம் வரவில்லை. அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “வைஷுமா…” என்றதும் தான் தாமதம், “இந்து கையில ஃபோன கொடுங்க!” என்ற அவளின் காட்டமான வார்த்தைகளில் ‘க்குக்!’ என்று நொடிந்துக் கொண்டவாறு இந்திரனிடம் அலைப்பேசியை நீட்டினான் அதிபன்.

“ஹெலோ ரோஸ்மில்க்…” என்று இந்திரன் உற்சாகமாக சொல்ல, அடுத்து அவள் திட்டிய திட்டுக்களை கேட்டு அலைப்பேசியை காதிலிருந்து எடுத்தவன், ‘பொண்ணா இது?’ என்ற கேள்வியோடு அதிபனை பாவமாக பார்த்தான்.

அவளும் விடாது திட்டிக்கொண்டே போக, “இரும்மா! இரு… நல்ல குடும்பத்து பொண்ணு பேசுற பேச்சா இது?” என்று ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் கத்திய இந்திரன், “என்ன தான் டா நடக்குது அங்க? ஏன் டா யாரு கோல் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறீங்க?” என்று வைஷ்ணவி கேட்டதும் காணொளி அழைப்பு எடுத்து நடப்பதை காட்டினான்.

அவளுக்கோ தூக்கிவாரிப் போட, “டேய்! சந்துக்கு கல்யாணமா? அய்யோ கடவுளே! மயக்கமா வருதே… பக்கத்துல பிடிச்சிக்க கூட ஆளுங்க இல்லையே…” என்று தலையை பிடித்துக் கொண்டவளுக்கு ‘என்ன நடக்கப் போகிறதோ?’ என்ற பயம் தான்.

“நான் வேணாம்னு தான் சொன்னேன் ரோஸ்மில்க். அதிபனும், யாதவ்வும் தான் கேக்கல. கல்யாணம் பண்ணிட்டு போனா தான் வீட்டுல ஒத்துப்பாங்கன்னு பழைய சீரியல் ஹீரோங்க மாதிரி பேசி இப்படி கொண்டு வந்து நிறுத்திடானுங்க.” என்று இந்திரன் பாவமாக சொல்ல, ‘அடப்பாவத்த!’ என்று அவனை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினான் அதிபன்.

அடுத்த சில நொடிகளில் ஐயரும் தாலி எடுத்து கொடுத்து, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று சொல்ல, இதுவரை இருந்த யோசனையை விட்டு மனதில் சிறு சந்தோஷத்தோடே உத்ராவின் கழுத்தில் தாலியை கட்டினான் சந்திரன்.

ஒருநாள் முன்னாடி வரை அவள் யாரென்று அவனுக்கு தெரியாது தான். ஆனால், அவன் மேல் வைத்த காதலுக்காக அவள் வீட்டைவிட்டு வந்ததும் ‘தனக்காகவா?’ என்ற அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அவனுக்கு! கூடவே, கோபமும் தான்.

இந்திரனோ ஒருகையால் வைஷ்ணவிக்கு காணொளியில் நடப்பதை காட்டியவாறு மறுகையால் வராத கண்ணீரை துடைத்து ரித்வியிடம், “மனசெல்லாம் புண்ணா போச்சி ரித்விமா.” என்று பாவமாக சொல்ல, “அச்சோ இந்து! நீ வேணா பாரு, உனக்கு உள்ளூர்ல என்ன? வெளியூர்ல இருந்து பொண்ணு கிடைப்பா. ஆனா, எனக்கொரு சந்தேகம்.” என்று ரித்வி சட்டென்று நிறுத்தினாள்.

அவன் கேள்வியாக நோக்க, “அது… சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால் அப்படி என்ன தான் நடந்திச்சி?” என்று ரித்வி கேட்டதும், ‘இப்போ இது ரொம்ப முக்கியமா?’ என்ற ரீதியில் இந்திரன் முறைத்துப் பார்த்தான் என்றால், அதிபனோ அவனை விஷமமாக பார்த்தவாறு, “அதுவா ரித்வி? இப்போ சுமார் ஆறு மாதங்கள் கிடையாது. சுமார் பத்து மாதங்களுக்கு முன்னால்…” என்று ஆரம்பித்து இந்திரனின் இறைஞ்சும் பார்வையையும் மீறி சொல்ல ஆரம்பித்தான்.

“சுமார் பத்து மாதங்களுக்கு முன்னாடி இவன் இன்ஸ்டால ஒரு பொண்ணு கூட பேச ஆரம்பிச்சான். நம்ம ஊர் பொண்ணு தான். ஆரம்பத்துல சாதாரணமா தான் பேசினாங்க. கொஞ்சநாளா எங்ககிட்ட கூட வேலை வேலைன்னு பொய் சொல்லிட்டு போயிருவானே! அவளோட கோல் அ கடலை போட தான். அப்றம் இவனுக்கு அந்த பொண்ணு மேல ஒரே லவ்ஸ் ஆகிருச்சி. ஆனா, அவளோட முகத்தை மட்டும் இவன் பார்த்ததே இல்லை. ஒருநாள், கெஞ்சி கூத்தாடி நேர்ல மீட் பண்ணனும்னு செம்புவத்த குளத்துக்கு அவள இவன் வர சொல்ல, அவளும் வந்தா.” என்று அதிபன் நிறுத்தி சிரிக்க, இந்திரனோ “டேய் அதிபா, வேணாம்.” என்று பதறியபடி சொன்னான்.

“இரு! இரு!” என்று இந்திரனை அடக்கி, “விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு மாதிரி டிப்டாப்பா ரெடியாகி இவன் அங்க போய் நிற்க, இவன் முன்னால வந்து நின்னு இந்திரானு கூப்பிட்டா அந்த பொண்ணு ச்சே! ச்சே! அந்த ஆன்ட்டி.”  என்று சொல்லிவிட்டு அதிபன் வெடித்து சிரிக்க, ரித்வியோ ‘அய்ய…’ என்று முகத்தை சுழித்தவள், ‘ஆன்ட்டி வெறியனா நீனு?’ என்ற ரீதியில் இந்திரனை ஒரு மார்கமாக பார்த்தாள்.

‘உன்கிட்ட அன்னைக்கு என் கவலைய சொல்லி அழுது புலம்பினதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை சிறப்பா பண்ணிட்ட.’ என்ற ரீதியில் அதிபனை இந்திரன் முறைக்க,  “பேசினது போதும். கல்யாணம் முடிஞ்சி மாப்பிள்ளையும், பொண்ணும் கோவிலையே சுத்திட்டு வந்துட்டாங்க. வாங்க! வாங்க! இதுக்கு அப்றம் தான் சம்பவமே இருக்கு.” என்றவாறு யாதவ் முன்னே செல்ல, போன பயம் திரும்ப வந்து ஒட்டிக்கொண்டது எல்லோருக்கும்.

“இப்போவே ஊருக்கு கிளம்பலாம். என்னென்ன நடக்க போகுதோ? நினைக்கும் போதே மனசு பதறுதே… டாக்டருக்கே ஹார்ட் அட்டேக் வர வச்சிருவானுங்க போல!” என்று அதிபன் புலம்ப,

“நீ படிச்சி டாக்டெர் ஆகினியா? இல்லை, காசு கொடுத்து டாக்டெர் ஆகினியா? தாலி கட்டிட்டா கல்யாணம் முடிஞ்சிடுமா? பழைய சீரியலா பார்த்து கெட்டு போயிருக்க. ரிஜிஸ்டர் பண்ணா தான் டா கல்யாணம் சட்டரீதியா செல்லுபடியாகும். வாங்க, ரிஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு போகலாம்.” என்றுவிட்டு யாதவ் காரில் ஏற, “மூச்சு விடவாச்சும் டைம் கொடு டா!” என்று புலம்பியவாறு மற்றவர்களும் வண்டியில் ஏற, வண்டி நேராக சென்று நின்றது பதிவு அலுலவகம் முன் தான்.

அங்கு யாதவ் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்க, இவர்கள் சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் சந்திரன், உத்ராவின் திருமணம் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டது.

அதுவும், கையெழுத்து இடும் போதே அங்கிருந்த ஒருவர், “என்னப்பா காதல் கல்யாணமா? குடும்பத்துக்கு தெரியாம இப்படி கல்யாணம் பண்ணனுமா?” என்று அறிவுரை போல் கேட்க, “திருட்டுக் கல்யாணத்தை பண்ணி வைக்கிறதே குடும்பத்தாளுங்க தான்.” என்று வாய்விட்டே சொன்னான் இந்திரன்.

‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட யாதவ்விற்கோ தேவகி குடும்பத்தின் முகபாவனைகளை காணும் ஆர்வம் தான்.

அலுவலகத்திற்கு அழைத்து பேசிவிட்டு வந்த யாதவ், “எல்லாமே ஓகே, இப்போ கிளம்பலாம். உனக்கும் எனக்கும் ஆஃபீஸ்ல இரண்டு நாள் லீவ் சொல்லியிருக்கேன். சோ, நோ ப்ரோப்ளம்.” என்று ரித்வியிடம் சொல்லிவிட்டு, “சீக்கிரம் ஊருக்கு கிளம்பலாம்.” என்று ஆர்வமாக முன்னே செல்ல, ‘இவனுக்கு எதற்கு இத்தனை ஆர்வம்?’ என்று தான் இருந்தது மற்றவர்களுக்கு.

வாடகை காரில் எல்லோரும் மாத்தளைக்குச் செல்ல, ஊரை நெருங்க நெருங்கத் தான் பயத்தில் இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு எம்பி குதித்தது மற்றவர்களுக்கு. வைஷ்ணவியும் அடிக்கடி அழைத்து வீட்டு நிலவரத்தை பற்றிச் சொல்ல, சந்திரனுக்கோ சங்கடம் கலந்த பயம்! ஆனால், தன் தோளில் சாய்ந்து வரும் தன் மனைவியை பார்க்கும் போது இருக்கும் கவலை மறந்து ஒரு புத்துணர்ச்சி அவனுக்கு!

சில மணிநேரங்கள் கழித்து, கார் மஹாதேவனின் பெரிய வீட்டின் முன் நிற்க, வாசற்கதவிற்கு அருகில் நின்றிருந்த வேலைக்காரனோ வண்டியிலிருந்து இறங்கியவர்களை பார்த்து அதிர்ந்து, “ஐயா…” என்று கத்தியவாறு வீட்டுக்குள் ஓடினான்.

அடுத்தநொடி வெளியே வந்த மஹாதேவனும், சகாதேவனும் மாலையும் கழுத்துமாக நின்றிருந்த ஜோடிகளை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள் என்றால், பக்கத்தில் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்த தங்களின் மற்ற வாரிசுகளை பார்த்து பொங்கிவிட்டனர்.

ஆண்டாளோ தன் மகன்களை பார்த்து, “சந்திரா… இந்திரா…” என்று அவர்களை நோக்கிச் செல்ல போக, தன் கணவன் முறைத்த முறைப்பில்  வாயைப் பொத்தி அழுதவாறு அப்படியே நின்றுவிட்டார் அவர்.

சகுந்தலாவோ ‘யாருக்கு வந்த விருந்தோ?’ என்ற ரீதியில் நின்றிருக்க, வைஷ்ணவி தான் பதட்டமாக நின்றிருந்தாள். இதில் மொத்த ஊர்மக்களும் தத்தமது வீட்டு வாசலில் நின்று எட்டிப்பார்த்தவாறு நாளைய கிசுகிசுக்காக குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.

“ஓஹோ! அப்போ எல்லாரும் சேர்ந்து தான் இப்படி ஒரு காரியத்தை பண்ணியிருக்கீங்க. அப்படி என்ன டா அவசரம் உனக்கு? எங்ககிட்ட ஒருவார்த்தை சொன்னா நாங்க பார்த்துக்க மாட்டோமா? இல்லை, நாங்கெல்லாம் ஒருத்தங்க இருக்குறதையே இந்த காதல் மறக்கடிச்சிட்டா?” என்று சகாதேவன் காட்டமாக கேட்க,

“அப்பா அவனுக்கு…” என்று உண்மையை சொல்ல வந்த இந்திரனை இடைவெட்டிய சந்திரன், “என்னை மன்னிச்சிடுங்கப்பா! இரண்டு குடும்பத்துக்குள்ளேயும் சண்டை. அதான் எப்படி சொல்றதுன்னு தெரியாம…” என்று அதற்கு மேல் பேச முடியாது திணறினான்.

“எவளயாச்சும் இழுத்துட்டு ஓடிருவானோன்னு இந்துவ நினைச்சி நான் பயந்தா இப்படி ஒரு காரியத்தை நீ பண்ணிட்டு வந்து நிக்கிற.” என்று சகாதேவன் ஆதங்கமாக கேட்க, “ரித்விமா, என்ன இது?” என்று அழுத்தமாக கேட்டார் மஹாதேவன்.

“அது வந்து மாமா…” என்று ரித்வி திணற, அனைத்திற்கும் காரணமானவனோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘தனக்கும் இந்த கல்யாணத்துக்கும் சம்மந்தமே இல்லை’ என்ற ரீதியில் நின்றிருந்தான் யாதவ்.

இவர்கள் வந்த செய்தி எப்படி சென்றதோ? யாரு சொன்னதோ? சரியாக, ரித்வி என்ன சொல்வது என்று தெரியாது திணறிக்கொண்டிருக்கும் போதே வந்து நின்றது தேவகியின் கார்.

இப்போது உத்ராவுக்கோ கைகால்கள் உதற ஆரம்பிக்க, சந்திரனின் முழங்கையை இறுகப்பற்றிக் கொண்டாள் அவள். வண்டியிலிருந்து இறங்கிய தேவகியோ உத்ராவை தான் உக்கிரமாக முறைக்க, ‘அய்யோ! நான் இல்லை.’ என்று பயந்து சந்திரனின் பின்னால் ஒளிந்துக்கொண்ட தன் மகளை பார்த்த மணிமாறனுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

ஆரனோ ரித்யிடம் கண்களாலே ‘என்ன இதெல்லாம்?’ என்று கோபமாக கேட்க, அவளோ ‘சோரி’ என்று இதழசைத்து சங்கடமாக தலை குனிந்துக்கொண்டாள்.

“பார்த்தீங்களாம்மா இந்த ஓடுகாலி நாய! குடும்ப மானத்தையே வாங்கிட்டா. அதுவும், போயும் போயும் இந்த வீட்டு பையன கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கிறா. ச்சே! உன்னையெல்லாம்…” என்று மணிமாறன் கத்தியவாறு உத்ராவை அடிக்க வர, அவருக்கு முன்னால் வந்து நின்றனர் அதிபனும், இந்திரனும்.

“இப்போ அவ உங்க பொண்ணு கிடையாது. சந்திரனோட பொண்டாட்டி.” என்று அதிபன் விறைப்பாக சொல்ல, ‘நான் நல்லா பண்றேனோ இல்லையோ? நீங்க நல்லா பண்றீங்கடா!’ என்ற ரீதியில் இருவரையும் பார்த்தான் சந்திரன்.

“அத்தை, அதான் நான் அப்போவே சொன்னேனே… இந்த மொத்த குடும்பமும் சேர்ந்து தான் திட்டம் போட்டு அவங்க பையனுக்கு நம்ம பொண்ண மயக்கி கட்டி வைச்சிருக்காங்க.” என்று ஆரனுடைய அப்பா துரைவேல் கத்த, “நிறுத்துங்க! உங்க வீட்டு பொண்ணு தான் எங்க பையன இழுத்துட்டு ஓடியிருக்கா.” என்று சகாதேவன் முடிக்கவில்லை, “ஆமா, நாங்க தான் கல்யாணம் பண்ணி வைச்சோம். அதுக்கென்ன இப்போ?” என்று வந்தான் யாதவ்.

ரித்வியோ அதிர்ந்து நோக்க, “உங்க வீட்டு பொண்ண என்ன பாப்பாவா? நீங்க ஒழுக்கமா வளர்த்திருந்தா அவ ஏன் ஒரு பையன் கூட ஓடி வர போறா? கண்ட கழுதைக்கு பிடிச்சி கட்டி வைக்கனும்னு பேச்சு எடுத்தா, இப்படி தான் நடக்கும்.” என்ற யாதவ்வின் பார்வை கழுதை என்று சொல்லும் போது ஆரனின் மேல் படிய, அவனோ கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான்.

“பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல. எங்க குடும்பத்து மேல பழிய போடுறீங்களா?” என்று இத்தனை நேரம் எதுவும் பேசாது நின்றிருந்த யாதவ் தேவகியை அவமானப்படுத்தவென்றே இவ்வாறு பேச ஆரம்பிக்க, “நிறுத்து யாதவ்!” என்று சந்திரன் கத்தினான் என்றால், தேவகியோ முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டவில்லை.

பல வருடங்களாக மனதிலிருக்கும் குற்றவுணர்ச்சியே யாதவ்வை எதிர்த்து அவரை பேசவிடவில்லை. ஆனால், மஹாதேவன் உட்பட மற்றவர்களுக்கோ தேவகி முன்னால் யாதவ் பேசும் விதம் கோபத்தை தான் தூண்டியது.

“பாட்டி முன்னாடி மரியாதையா பேசு யாதவ்!” என்று அழுத்தமாக சொன்ன ஆரன் தேவகியிடம், “இதுக்கு மேல எதுவும் வேணாம். வாங்க போகலாம்.” என்றுவிட்டு காரில் ஏற போனான். அவன் யாதவ்விடம் கோபத்தை அடக்கிய நிலையில் பேசியது கூட ரித்வியின் இறைஞ்சும் பார்வையை பார்த்து தான்.

அவனை கைநீட்டி தடுத்த தேவகி, “ஒருதடவை இழந்த இழப்பு போதும். இந்த வயசுல என் பேத்திய ஒதுக்கி நான் எதை சாதிக்க போறேன்? பொண்ணையும், மாப்பிள்ளையும் நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறோம்.” என்று சொல்ல, யாதவ்விற்கோ அதிர்ச்சி!

இதை சாக்காக வைத்து தேவகியை அவமானப்படுத்த அவன் ஒரு திட்டம் தீட்டியிருக்க, தேவகியோ நிதானமாக பேசியதில் அதிர்ந்து விழித்தான் அவன்.

இத்தனை நேரம் அமைதியாக இருந்த மஹாதேவனும் தேவகி பேசியதில் உள்ளுக்குள் புன்னகைத்து, “முறைப்படி பையன் வீட்டுல தானே இருக்கனும்! இன்னைக்கு இங்க இருக்கட்டும். நாளைக்கு முறையா வந்து மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போங்க.” என்று சொல்லி அதை மறுத்து பேச வந்த தன் தம்பியையும் அமைதிப்படுத்தினார்.

‘என்ன டா பொசுக்குன்னு ஒத்துக்கிட்டாங்க.’ என்று ஆச்சரியமாக இந்திரன் நோக்க, அதிபனுக்கும் வைஷ்ணவிக்கும் அப்போது தான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது. இதில் புது மணத்தம்பதிகளின் மனநிலையை சொல்லவா வேண்டும்?

மஹாதேவன் சொன்னதும் ஒரு தலையசைப்புடன் நகர்ந்த தேவகி காரில் ஏறும் முன் ரித்வியை பார்த்து புன்னகைக்க, ரித்விக்கோ அத்தனை ஆச்சரியம்!

இதுவரை தேவகி ரித்வியுடன் பேசியதே இல்லை. அவர் ரித்வியை பார்க்கும் பார்வையில் எப்போதும் ஒரு ஏக்கம் குடியிருக்கும். அன்று தன் கணவன் செய்த தவறால் உண்டான இழப்பில் இப்போதுவரை குற்றவுணர்ச்சியில் தவிப்பது அவரல்லவா!

வலிகளிலே கொடுமையான வலி தான் இந்த குற்றவுணர்ச்சியால் உண்டாகும் வலி! இத்தனை வருடங்களாக அதை சுமந்துக் கொண்டிருக்கிறார் தேவகி. அதனால் தான் ரித்வி தன் பேத்தி என்ற தெரிந்த போது அவளை உரிமைக் கொள்ள அத்தனை உரிமைகளும் இருந்தும் மஹாதேவனின் பொறுப்பிலே விட்டிருந்தார் அவர்.

தேவகி சென்றதும் தன் மகனையும், மருமகளையும் ஆர்த்தி எடுத்து சந்தோஷமாகவே ஆண்டாள் உள்ளே அழைத்துச் செல்ல, யாதவ்வை வழிமறைத்த சகாதேவனோ, “இது மொத்தமும் உன் வேலை தானா? என்று முறைப்புடன் கேட்க, அலட்சியமாக தோளை குலுக்கிவிட்டு அவன் பாட்டிற்கு சென்றான் யாதவ்.

ஆனால், அவரிடம் மாட்டிக்கொண்டு வாங்கிக்கட்டிக் கொண்டது என்னவோ இந்திரன் தான்.

ஷேஹா ஸகி