லவ் ஆர் ஹேட் 21

eiKE1SV60145-43bae3a5

இரவு அனைவரும் இரவுணவை முடித்துவிட்டு ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அதிபனோ ரித்வியின் அருகே அமர்ந்திருந்த வைஷ்ணவியை தான் உதட்டை பிதுக்கி பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவளோ சற்றும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால், வந்ததிலிருந்து இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த ரித்விக்கோ ஒரு சந்தேகம்!

இருவரையும் மாறி மாறி பார்த்தவள் அதிபனிடம் சைகையாலேயே, “இன்னுமா உங்களுக்குள்ள பிரச்சினை சரியாகல்ல?” என்று கேட்க, ‘ஆம்’ என்று தலையாட்டிய அதிபன், “என் மேல ரொம்ப கோபத்துல இருக்கா. எப்படியாச்சும் அவள சமாதானப்படுத்தி என்கூட பேச சொல்லு ரித்வி” என்று சைகையில் பாவமாக சொன்னான்.

‘நான் இருக்க பயமேன்!’ என்ற ரீதியில் கண்களை அழுந்த மூடித்திறந்தவள், வைஷ்ணவியிடம் திரும்பி, “அதி மேல இன்னும் கோபமா இருக்கியா வைஷு? அவன் பாவம் இல்லையா?” என்று அவனுக்கு பரிந்துப் பேச, சட்டென நிமிர்ந்து அதிபனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

அவனோ அவள் பார்த்ததும் எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்ய, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய வைஷ்ணவி, “கோபம் எல்லாம் இல்லை ரித்வி. ஆதங்கம் தான், என்னை பத்தி யோசிக்காம அன்னைக்கு அப்படி ஒரு முடிவு எடுத்தாருன்னு… அந்த ஆதங்கம் எனக்குள்ள இருக்கத்தான் செய்யுது. அவர காதலிச்ச என்னால அவ்வளவு சுலபமா அவர் அப்படி சொன்னதை ஏத்துக்க முடியல” என்று சொல்ல,

ரித்விக்கோ தன்னால்தானோ? என்ற குற்றவுணர்ச்சி! அதை வாய்விட்டும் கேட்டுவிட்டாள் அவள்.

“இதுக்கு முன்னாடி ஒரு பிரச்சினையில அதி உன் கூட பேசாம இருந்தான். அதுக்கு நான் தான் காரணமா இருந்தேன். இப்போ நீ அவன் கூட பேசாம இருக்குறதுக்கும் நான் தான் காரணமா இருக்கேன். என்னால தான் எல்லாமேன்னு…” என்று பேசிக்கொண்டே சென்ற ரித்வி, “அய்யோ ரித்வி! நிறுத்து” என்ற வைஷ்ணவியின் சலிப்பான குரலில் பேச்சை நிறுத்தி அவளை கேள்வியாக நோக்கினாள்.

“எங்களுக்குள்ள வர்ற பிரச்சினைக்கு நாங்க இரண்டு பேர் மட்டும் தான் காரணம் ரித்வி.  ஒரு உறவுக்குள்ள வர்ற பிரச்சினைக்கு அடுத்தவங்கள பழி சொல்லக் கூடாது. எங்களுக்குள்ள சரியான புரிதல் இல்லை. அதுக்கு எப்படி நீ பொறுப்பாக முடியும்? என்ட், உனக்கொரு சீக்ரெட் சொல்லவா?” என்று ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி உற்சாக குரலில் வைஷ்ணவி முடிக்க, “என்ன வைஷு?” என்று அவளை நெருங்கி ஆர்வமாக கேட்டாள் ரித்வி.

“அது… அது வந்து… மாமா அம்மாகிட்ட எனக்கும் அதி மாமாவுக்குமான கல்யாணத்தை பத்தி பேசியிருக்காரு. இன்னும் இரண்டு நாள்ல அதி மாமா மெடிகல் கேம்ப் போறாரு. அங்கிருந்து வர எப்படியும் டூ மன்த்ஸ் ஆகும். வந்ததுமே நிச்சயதார்த்தம் வைச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, இது என் ஆளுக்கு தெரியாது” என்று வைஷ்ணவி வெட்கம் கலந்த சந்தோஷத்துடன் சொல்ல, “நிஜமாவா? வாவ்!” என்று உற்சாகமாகிவிட்டாள் அவள்.

“நீயும் உன் அதிக்கிட்ட சொல்லி தொலைச்சிராத! அவருக்கு எங்க நிச்சயதார்த்தம் சப்ரைஸ் ஆ இருக்கட்டும். அன்னைக்கு அவர் பின்னாடி என்னை எவ்வளவு அலைய விட்டிருப்பாரு! இப்போ அவர் கொஞ்சம் அலையட்டும்” என்று வைஷ்ணவி செல்ல கோபத்துடன் சொல்லி அங்கு இருவரையும் மாறி மாறி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அதிபனை பார்த்துவிட்டு உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக்கொள்ள, அவனோ ரித்வியை தான் சோகமாக பார்த்தான்.

அவளோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு, “என்னால எதுவும் பண்ண முடியல. அந்த கடவுள் தான் உங்களை சேர்த்து வைக்கனும்” என்ற ரீதியில் சைகை செய்து பாவமாக முகத்தை வைக்க, சலிப்பாக தலையாட்டிய அதிபன் மீண்டும் தன்னவளை தான் கன்னத்தில் கைவைத்து சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“கார்த்தி, இரண்டு பேரும் எப்போ ஊருக்கு கிளம்புறீங்க?” என்று மஹாதேவன் கேட்க, “நாளைக்கு காலையில” என்று யாதவ் சொன்னதும் அவருக்கு முகமே வாடிவிட்டது.

“இன்னும் ஒரு இரண்டுநாள் இருக்கலாமேப்பா…” என்று அவர் ஏக்கமாக கேட்க, “அவ்வளவு ஈஸியா லீவ் கிடைக்காதுப்பா. இந்த டூ டேய்ஸ் விட்டதே பெரிய விஷயம். இரண்டு நாள் போகாததுக்கே அங்க ஏகப்பட்ட வேலை குவிஞ்சிருக்கும்” என்று யாதவ் சலிப்பாக சொல்லவும், ரித்வியை புருவத்தை நெறித்துப் பார்த்த சகாதேவன், “ஆமா ரித்விமா, எதுக்கு நீ வேலைக்கு போற? ஏன் இவன் சம்பாதிக்கிறது வீட்டுக்கு பத்தலையா என்ன?” என்று கேட்டார்.

‘என்னை எப்படியும் போட்டு கொடுக்க போறா’ என்ற ரீதியில் யாதவ் அவளை ஒரு பார்வை பார்க்க, “சின்ன மாமா, காலையில இவர் ஆஃபீஸ்க்கு கிளம்பி போயிருவாரு. எவ்வளவு நேரம் தான் நான் வீட்டுலயே தனியா இருக்குறது? அதுவும், அவர் வேணாம்னு தான் சொன்னாரு. நான் தான் அடம்பிடிச்சி…” என்று ரித்வி தன்னவனை விட்டுக்கொடுக்காது பேசிய பேச்சில் யாதவ்வோ அவளையே இமைசிமிட்டாது பார்த்திருந்தான். பின் என்ன நினைத்தானோ? அலைப்பேசியை நோண்டுவது போல் தலைகுனிந்துக் கொண்டான் அவன்.

இங்கு ரித்விக்கு எதிரே அமர்ந்திருந்த சகுந்தலா அவளை ஆழ்ந்து நோக்கியவாறு, “ஏதாச்சும் விசேஷம் உண்டா?” என்று பட்டென்று கேட்க, மஹாதேவன் கூட ஒருவித ஆர்வத்துடன் ரித்வியின் பதிலை எதிர்ப்பார்க்க, அவளுக்கு தான் பக்கென்றானது. ஆனால், யாதவ்வோ அந்த கேள்விக்கும் தனக்கும் சம்மதமே இல்லை என்பது போலல்லவா அமர்ந்திருந்தான்!

“அது அத்தை… அப்படி எல்லாம் இல்லை” என்று ரித்வி திக்கித்திணறி சொல்ல, “இப்போ தானே கல்யாணம் ஆகியிருக்கு. அதுவும் இந்த காலத்து பசங்களுக்கு சீக்கிரம் குழந்தை பெத்துக்குறதுக்கு கூட ஆர்வம் இல்லை. ஆனா ரித்விமா, நீ சீக்கிரம் நல்ல செய்தி சொல்லனும்” என்று ஆண்டாள் சொல்ல, அவளோ இப்போது தன்னவனை தான் பாவமாக திரும்பிப் பார்த்தாள்.

ஆனால், அவனிடத்திலோ எந்த மாற்றமும் இல்லை. எதுவும் காதிலே விழாத பாவனையில் சாதாரணமாக அமர்ந்திருந்தான் அவன்.

“ஏய் சோடாபுட்டி, உன் பாட்டை கேட்டு ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு எல்லாரும் ஒன்னா இருக்கோம். சோ…” என்று இந்திரன் ஆர்வமாக இழுக்க, ரித்வியோ, “அய்யோ! முடியாது. நான் மாட்டேன்” என்று சிணுங்கலோடு மறுத்தாள்.

ஆனால், அவளுடைய குடும்பம் அவ்வளவு சுலபமாக அவளை விட்டுவிடுவார்களா என்ன?

யாதவ்வை தவிர சுற்றியிருந்தவர்கள் அவளை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி ஒத்துக்கொள்ள வைக்க, தன்னவனை ஒரு பார்வை பார்த்த ரித்வி கண்களை மூடி பாட ஆரம்பித்தாள்.

கண்ணாம்பூச்சி ஏனடா…” என்று அவள் தன் காந்தக்குரலில் பாட ஆரம்பித்ததும் தான் தாமதம் சட்டென்று நிமிர்ந்து தன் மனைவியை பார்த்தவனுக்கு உச்சகட்ட ஆச்சரியம்! கூடவே, அந்தக் குரலில் ஒரு மயக்கமும்.

அவனுடைய கரங்கள் தானாக நகர்ந்து கையிலிருந்த அலைப்பேசியை ஓரமாக வைக்க, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்ட யாதவ், இருக்கையில் சாய்ந்தமர்ந்தவாறு அவளையும், அவள் குரலையும் ரசிக்க ஆரம்பித்தான்.

“என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா… எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா….
நெஞ்சின் அலை உறங்காது”

அவள் பாடும் வரிகள் ஏனோ அவனையே கேள்வி கேட்பது போல் ஒரு பிரம்மை அவனுக்கு! அதுவும், ரித்வியின் பார்வை தன்னவனை நோக்கியே இருக்க, யாதவ்வும் தன்னை மீறி அவளுடன் அந்த பாடல் வரிகளில் மூழ்க ஆரம்பித்தான். கூடவே, ‘என்ன வொய்ஸ் டா இது?’ என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி அவனுக்குள்.

பாடி முடித்தவளின் பார்வை தன்னவனின் மீதே நிலைத்திருக்க, அவனும் அவளையே இமைசிமிட்டாது பார்த்திருக்க, சுற்றியிருந்தவர்கள் தான் இருவரையும் மாறி மாறி பார்த்தனர். பெரியவர்களோ இருவரின் பார்வையில் வெட்கப்பட்டு தலைகுனிந்துக் கொண்டார்கள் என்றால், இளசுகள் தான் ‘பார்ராஹ்!’ என்று ‘எப்போது தான் நடப்புக்கு வருவார்கள்?’ என விடாது பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், ரித்வியும், யாதவ்வும் தான் பார்வையை விலக்கியபாடே இல்லை.

ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் இந்திரனோ, ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று தொண்டையை செறும, திடுக்கிட்டு நடப்புக்கு வந்த யாதவ்வோ சுற்றியிருந்தவர்களின் பார்வையை உணர்ந்து சங்கடமாக அங்கிருந்து விறுவிறுவென தனதறைக்குச் சென்றுவிட, ரித்வியோ தன் நண்பர்களின் நமட்டுச் சிரிப்புடனான பார்வையில் குங்குமப்பூவாய் சிவந்து போனாள்.

இதைப் பார்த்த மஹாதேவனுக்கோ மனமே பூரித்து போன உணர்வு!

அடுத்தநாள்,

ரித்வி, யாதவ் இருவரும் கொழும்புக்குச் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருக்க, “ரித்வி…” என்று அறைவாசலில் கேட்ட அதிபனின் அழைப்பில் கையிலிருந்த பொருட்களை அப்படியே கீழே போட்டுவிட்டு அவள் ஓடியதை பார்த்து “இவள…” என்று கடுப்பாக பல்லைக்கடித்தான் யாதவ்.

அவள் வந்ததும் அவளை சற்று தள்ளி அழைத்துச்சென்ற அதிபன், “ரித்வி, நான் ஒன்னு கேக்கவா? என்னை தப்பா எடுத்துக்க மாட்டியே…” என்று கேட்க, அவளோ அவனை கேள்வியாக நோக்கினாள்.

“இல்லை ரித்விமா, யாதவ் என் அண்ணாவாவே இருந்தாலும் அவன் நல்லவன், வல்லவன்னு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. அவன் கட்டாயத்துல விருப்பமில்லாம தான் உன்னை கல்யாணம் பண்ணான். உன்னை ஏதாச்சும் கஷ்டப்படுத்துற மாதிரி அவன்…” என்று அதிபன் தயக்கமாக இழுக்க, “அப்படி எல்லாம் இல்லை அதி” என்று அவசரமாக மறுத்தாள் ரித்வி.

அவளை சந்தேகமாக பார்த்தவன், “அப்போ, இது என்ன காயம் ரித்வி?” என்று அன்றொருநாள் யாதவ் தள்ளிவிட்டதில் அவள் நெற்றியில் உண்டான காயத்தின் வடுவை காட்டி கேட்க, தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு.

“அது… அதி, இது சாதாரண காயம் தான். அங்க இருக்கும் போது எதிர்ப்பார்க்காம விழுந்துட்டேன். அதான்…” என்று ரித்வி சமாளிக்க, “ஓ…”  என்று மட்டும் நம்பாத குரலில் இழுத்தவன், “ஏதாச்சும் பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லனும். சரியா?” என்று எப்போதும் போல் அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்துவிட்டு நகர,

‘ஸப்பாஹ்…’ என்று அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டு முடிக்கவில்லை, சரியாக ஆரனிடமிருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.

அழைப்பை ஏற்றவள், ‘தன்னவன் வந்துவிடுவானோ?’ என்று பயந்து அறையை எட்டி எட்டி பார்த்தவாறே பேசி, இன்று கொழுபுக்குச் செல்லும் விடயத்தையும் சொல்லிவிட்டு, “பாட்டி, இப்போவாச்சும் என்கிட்ட பேவாங்களா?” என்று ஏக்கமாக கேட்டாள்.

ஆரனோ ரித்வி பேசுவதையே புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த தேவகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அது ரித்வி…” என்று தடுமாற, “சரி விடுங்க அத்தான்! அன்னைக்கு என்னை பார்த்து சிரிச்சாங்க. கூடிய சீக்கிரமே பேசிருவாங்க” என்று உற்சாகமாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் ரித்வி.

தேவகியை முறைத்துப் பார்த்தவன்,  “ஏன் இப்படி பண்ற பாட்டி? பாவம் ரி…” என்று அவள் பெயரை சொல்ல வந்து சந்திரன் வருவதை உணர்ந்து பேச்சை மாற்ற, மற்றவர்கள் கூட சந்திரன் இருந்ததில் ரித்வியை பற்றி மூச்சே விடவில்லை, உத்ரா கூட…

இங்கு மீண்டும் அறைக்கு வந்த ரித்வி, அலைப்பேசியில் ஏதோ ஒன்றை இறுகிய முகமாக பார்த்துக்கொண்டிருந்த யாதவ்வை தான் புரியாது பார்த்தாள். அவனுடைய முகமோ பாறை போன்று இறுகிப்போயிருந்தது. இதுவரை அவனிடத்தில் அவள் பார்த்திராத இறுக்கம்!

“என்னங்க…” என்று அவள் அழைத்ததும் ஒரேநொடியில் தன் முகபாவனையை மாற்றிய யாதவ் நிமிர்ந்து புன்னகையுடன், “சீக்கிரம் ரெடி ஆகு! கிளம்பலாம்” என்றுவிட்டு வெளியேற, சந்தேகமாக அவனை ஒரு பார்வை பார்த்தவள் அதன்பிறகு இருந்த வேலைகளில் அதை மறந்தும் போனாள்.

அன்று எதிர்சீட்டு பயணிகளாக பயணம் செய்தவர்கள், இன்று ரயிலில் நெருக்கமாக! ரித்வியோ ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வர, யாதவ்வோ அவளை தான் இமை சிமிட்டாது பார்த்துக்கொண்டு வந்தான். ஆனால், அவளோ அவன் பார்வையை சற்றும் உணரவில்லை.

சிறிதுநேரம் ஜன்னல்வழியே தெரியும் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வந்தவள், சட்டென தன் மடியில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்ப, அவளின் மடியில் யாதவ் தலைவைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ந்து விழித்தாள். அவளால் சிலநொடிகள் நடப்பதை உணரவே முடியவில்லை.

அவனோ கண்களை மூடி படுத்திருக்க, “என்னங்க… என்னங்க…”  என்று மெதுவாக அவனின் தோளை சுரண்டிய ரித்வி, “எல்லாரும் பார்க்… பார்க்குறாங்க” என்று தயங்கியபடி சொல்ல, “சோ வாட்?” என்று சாதாரணமாக கேட்ட யாதவ், அவள் மடியை விட்டு எழுந்துக் கொள்ளவேயில்லை.

அவளுக்குத்தான் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்க, கூடவே சங்கடம் வேறு!

வெட்கப்புன்னகை பூத்தவள் அவனின் தலையை கோத கையை எடுத்துச் செல்வதும், பயந்து கையை இழுத்துக் கொள்வதுமாக தடுமாற, அவளே எதிர்ப்பார்க்காது அவளின் கையை இழுத்து யாதவ் தன் தலையில் வைத்ததும், முதலில் விழிவிரித்தவள் பின் புன்னகையுடன் அவன் தலையை வருடிவிட்டாள்.

இத்தனைநாள் இல்லாத உணர்வுகள் இன்று அவள் மனதில்!  அவளவன் அவள் மடியில்! ஜன்னலோர ரயில் பயணம்! இந்த நொடி உறைந்து நின்றுவிடாதா? என்றிருந்தது ரித்விக்கு.

அடுத்த இரண்டு நாட்கள் ரித்விக்கும், யாதவ்விற்கும் இடையில் ஒரு மெல்லிய உறவு. எப்போதும் சிடுசிடுவென இருப்பவன் இப்போதெல்லாம் அவளைப் பார்த்து புன்னகைக்க, அவளுக்கும் இத்தனைநாள் அவன் மேல் இருந்த பயம் சற்று விலகிய உணர்வு!

அடிக்கடி இரு விழிகளின் எதேர்ச்சையான சந்திப்பு, ஒருவித வெட்கம் கலந்த தயக்கத்துடனான பேச்சு என அழகாகவே நாட்கள் நகர, அன்று,

எப்போதும் போல் அலுவலகத்திலிருந்து வந்ததும் தனக்கான உணவை வேகவேகமாக சமைத்து ரித்வி சாப்பிட ஆரம்பிக்க, சட்டென அவளருகில் வந்தமர்ந்து யாதவ் செய்த செயலில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் அவள்.

அவள் பக்கத்தில் வந்தமர்ந்த யாதவ் சாதாரணமாக அவள் தட்டிலிருந்து உணவை எடுத்து ஒருவாய் சாப்பிட்டு, “உப்பு தான் கம்மியா இருக்கு. பட், பரவாயில்லை. நல்லா தான் பண்ணியிருக்க” என்று சொல்ல, அவளோ சாப்பிட வாய்வரை கொண்டு சென்று அவன் செய்த செயலில் அதிர்ந்து, அப்படியே வாயைப்பிளந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் முன் சொடக்கிட்டவன், “ஊட்டி விடு!” என்று சொல்ல, அவளுக்குத் தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

‘ஒரு டிவிஸ்ட்னா பரவாயில்லை. டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட்டா இருந்தா எப்படி கிருஷ்ணா?’ என்ற ரித்வியின் மனதின் புலம்பல் அவனுக்கும் கேட்டது போலும்! மெல்லியதாக சிரித்துக் கொண்டான் யாதவ்.

மீண்டும் சொடக்கிட்டு உணவை அவன் கண்களால் காட்ட, படபடவென இமையை சிமிட்டிக் கொண்டவள், உணவை பிசைந்து தன்னவனின் வாயருகே கொண்டு சென்றாள். யாதவ்வும் அவளை பார்த்தவாறே உணவை விழுங்கிக்கொள்ள, ரித்வியின் உணர்வுகள் தான் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்தது.

‘ரித்வி, கன்ட்ரோல் யுவர் செல்ஃப்!’ என்று அவள் மனம் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், அவனுடைய நெருக்கம் மற்றும் அவனுடைய பார்வையை விரும்பியே ஏற்றது. அவனும் தன் பார்வையை விலக்கவே இல்லை.

சாப்பிட்டவாறே அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்த யாதவ், “உனக்கு என்னோட நாவல்கள் ரொம்ப பிடிக்குமா?” என்று கேட்க, அதில் உற்சாகத்துடன் இதழ்விரித்தவள், “ஆமாங்க, ரொம்ப பிடிக்கும். அதுவும் கதையில இடையிடையில நீங்க எழுதுற கவிதைகள் வேற லெவல். ஒவ்வொரு வரிகளையும் வாசிக்கும் போது கதைக்குள்ளேயே மூழ்கிருவேன். எப்படிங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க? சூப்பரோ சூப்பர்” என்று பேசிக்கொண்டே செல்ல, அவனுக்கோ அத்தனை சந்தோஷம்!

ஒரு வாசகரிடமிருந்து ஒரு எழுத்தாளர் எதிர்ப்பார்க்கும் வார்த்தைகள் அல்லவா! மனதில் உண்டான சந்தோஷத்தில் அவனிதழ் விரிந்தே இருக்க, தன்னவனை யோசனையுடன் பார்த்த ரித்வி, “இப்போ ஏன் கதைய நிறுத்தி வச்சிருக்கீங்க? அடுத்து என்ன நடக்கும்னு அவ்வளவு எதிர்ப்பார்ப்புல காத்திருக்கேன். எப்போங்க அடுத்த அத்தியாயத்தை போடுவீங்க?” என்று கேட்டாள் அத்தனை ஆர்வத்துடன்.

“நாளைக்கே… அதுவும் உனக்காக” என்று யாதவ் சொல்ல, “நிஜமாவா?” என்று ரித்வி விழிவிரித்து கேட்க, ‘ஆம்’ எனும் விதமாக அவன் தலையசைத்ததும் அவளால் நம்பவே முடியவில்லை.

“வாவ்! மிஸ்டர்.மீரா கிருஷ்ணன் நான் சொன்னதுக்காக அடுத்த அத்தியாயம் போடுறேன்னு சொல்லியிருக்காரு. என்னால நம்பவே முடியல்லை. அவ்வளவு ஹேப்பியா இருக்கு” என்று ரித்வி துள்ளிக்குதிக்காத குறையாக சந்தோஷத்தில் கத்த, அவளையே சிரிப்புடன் பார்த்திருந்த யாதவ் செல்லமாக அவளின் தலைமுடியை கலைத்துவிட்டுச் செல்ல, நடப்பதெல்லாம் கனவாகத் தான் தோணியது ரித்விக்கு.

அடுத்தநாள்,

கண்ணாடியில் தன்னைப் பார்த்து தன் மூக்குக்கண்ணாடியை அணிவதும், கழற்றுவதுமாக மாறி மாறி செய்துக்கொண்டிருந்த ரித்வி, ‘அவரு எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு! நாம வேணா இந்த சோடாபுட்டிய விட்டு லென்ஸ் போட்டுக்கலாமா? அவருக்கு கொஞ்சமாச்சும் பொருத்தமா இருக்கனும். மேக்கப் போட்டுக்கிட்டா கூட நல்லா தான் இருக்கும்’ என்று தன்னையே குறைவாக மதிப்பிட்டு தனக்குள்ளே பேசியவாறு இருந்தாள்.

சட்டென கேட்ட ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற செறுமல் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவள், கதவு நிலையில் கைகளை கட்டி சாய்ந்து நின்றிருந்த தன்னவனை பார்த்து அதிர்ந்து விழிக்க, அவனோ அவளைப் பார்த்தபடி கையில் வைத்திருந்த சாக்லெட்டை சாப்பிட்டான்.

அதைப் பார்க்கும் போது அன்று சாக்லெட்டை அவனிடமிருந்து பிடுங்குவதற்காக அவள் அவனுடன் விளையாடியதும், இருவருக்குமிடையில் நடந்த முத்தச்சம்பவமுமே நியாபகத்திற்கு வந்தது அவளுக்கு.

அந்த நினைவில் அவளின் முகம் வெட்கத்தில் குப்பென்று சிவக்க, அதை ரசித்தவன், “சீக்கிரம் வா! சேர்ந்தே ஆஃபீஸ்க்கு போகலாம்” என்றுவிட்டுச் செல்ல, அவளுக்கோ அடுத்த அதிர்ச்சி!

‘இது ஒன்னும் கனவில்லையே…’ என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டவளுக்கு நடப்பவற்றை நிஜம் என நம்பவே சிறிது நேரம் தேவைப்பட்டது.

ஷேஹா ஸகி