லவ் ஆர் ஹேட் 23

eiB3MJD85734-b195a8b5

லவ் ஆர் ஹேட் 23

அன்று காலை அலுலவகத்தில் யாதவ் ரித்வியை வாட்டி எடுக்க, மாலை வீட்டிற்கு வந்தவளோ அவனை  முறைத்துக்கொண்டும், வாயுக்குள் திட்டி முணுமுணுத்துக் கொண்டும் திரிந்துக் கொண்டிருந்தாள். இரவுணவை அவள் சமைத்துக் கொண்டிருக்க, அவளை சுற்றியே குட்டி போட்ட பூனை போல் நடந்துக் கொண்டிருந்தான் யாதவ்.

‘என்ன சமாதானமாகவே மாட்டேங்குறா. ஒருவேளை, நமக்கு பயிற்சி பத்தவில்லையோ? முன்ன பின்ன யாரையாச்சும் சமாதானப்படுத்தியிருந்தா தானே தெரியும்? ச்சே!’ என்று தீவிரமாக யோசித்தவாறு அவளை கடந்து பத்தாயிரம் தடவைகள் அங்குமிங்கும் நடந்தவன், பின் ஒரு திட்டத்தை தீட்டி சமையலறைக்குள் நுழைந்தான்.

அவன் வந்ததை உணர்ந்த ரித்வியும் தன் கோபத்தை வெளிப்படுத்த இருக்கும் பாத்திரங்களை பெரிய சத்தத்தோடு அங்குமிங்கும் உருட்ட, அவனுக்கோ சிரிப்புத் தான் வந்தது.

தன்னவளை வேண்டுமென்று ஒட்டி உரசிக்கொண்டு அங்கிருந்த குவளை ஒன்றை அவன் எடுக்க, அவளோ சட்டென திரும்பி அவனை முறைத்துப் பார்த்தாள். அதை சாக்காக வைத்து பதிலுக்கு அவளை முறைத்த யாதவ், “என்னடி முறைப்பு? வர வர உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு. இதுல திமிரா வேற பார்க்குற. என்ன பயம் விட்டு போச்சா?” என்று கேட்க, அதில் ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டவாறு உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.

அடுத்த சில நொடிகளில் அவள் முன் கைகளை மட்டும் நீட்டி யாதவ் ஒரு புத்தகத்தை காட்ட, அதைப் பார்த்ததும் அவள் விழிகள் சாரசர் போல் விரிய, இதழ்களோ, “வாவ்! இது உங்க புது நாவல் புத்தகம் தானே? கொடுங்க யது” என்று கெஞ்சலாக கேட்டு புன்னகைத்தது.

அவனோ ரித்வியை வெறுப்பேற்றவென அதை தன் உயரத்திற்கு மேல் தூக்கிப்பிடித்து, “முடிஞ்சா எடுத்துக்கோ!” என்று கேலியாக சொல்ல, அவளுக்கோ எப்போதும் போல் அன்று நடந்தது நியாபகத்திற்கு வந்து கன்னங்கள் குப்பென்று சிவந்தது.

அதை எடுக்க வந்து வெட்கப்பட்டவாறு குனிந்துக்கொண்டவள் கைகளை மட்டும் நீட்டி, “யது ப்ளீஸ்…” என்று சொல்ல, அதை ரசித்தவாறு அவள் கைகளில் அவன் தன் புத்தகத்தை வைத்ததும் தான் தாமதம் துள்ளி குதித்துவிட்டாள் அவள்.

“அப்போ, இப்போ சகஜமா பேசலாமே ரிது?” என்று யாதவ் பாவம் போல் கேட்க, அவனை பொய்யாக முறைத்தவள், “தப்பு பண்ணதுக்கு பத்து தோப்புக்கரணம் போடுங்க!” என்று கேலியாக சொல்ல, அவனோ அடுத்த நொடியே வேகவேகமாக அவள் சொன்னதை செய்து முடித்தான்.

ரித்விக்கோ சிரிப்பை அடக்கவே முடியவில்லை. தன்னை மீறி அவனை அணைத்துக்கொண்டவள், “தேங்க்ஸ் யது…” என்று அத்தனை சந்தோஷத்தோடு சொல்ல, அவள் அணைத்ததில் முதலில் அதிர்ந்தவன் பின் ஒருவித தயக்கத்துடன் பதிலுக்கு அவளை இறுக அணைத்துக்கொள்ள, அவளும் அவனின் மார்பிலே ஒன்றிக்கொண்டாள்.

இப்படியே சிலநாட்கள் இனிமையாகவே நகர்ந்தன. அவனுக்குள் காதல் இருக்கின்றதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால், அவனுடைய நடவடிக்கைகள் கணவன் என்ற உரிமையிலேயே இருந்தன. இப்போதெல்லாம் அவள் சமைத்த உணவை அவளுடனே சாப்பிடுவது, தன்னவளுடன் சேர்ந்து சமைப்பது, அலுவலகத்தில் அடிக்கடி அவளை தன் அறைக்கு அழைத்து சீண்டுவது என அவனிருக்க, ரித்விக்கு தான் வாழ்வே வசந்தமான உணர்வு!

அன்று ரித்வியின் கண்ணை பொத்திக்கொண்டு பால்கெனிக்கு அழைத்து வந்தவன், அங்கிருந்த ரோஜாசெடிகளை காட்ட, அவளோ முதலில் அதிர்ந்து பின் சந்தோஷத்தில் துள்ளி குதித்துவிட்டாள்.

“யது, ரொம்ப அழகா இருக்கு” என்று சந்தோஷத்தில் தன் பயத்தை மீறி பால்கெனி தடுப்புச்சுவருக்கு அருகில் சென்றவள், பூக்களை தொட்டுத் தொட்டு பார்த்தவாறு குதூகலிக்க, அவளருகில் சென்று நின்றவனோ குறும்பாக, “இப்போ பயம் போயிருச்சா டி?” என்று கேட்கவும் தான் அவளுக்கு தான் நிற்கும் இடமே மண்டைக்கு உரைத்தது.

தடுப்புச்சுவரை தாண்டி எட்டிப்பார்த்தவள், “அய்யோ கிருஷ்ணா!” என்று பதறியவாறு ஓட முற்பட, அவளை இழுத்து அணைத்துக் கொண்ட யாதவ் தனக்குள் அவளை புதைத்து, “அதான், நான் இருக்கேனே ரிது?” என்று சொல்ல, அவன் விழிகளை ஏறிட்டு பார்த்தவளுக்கு நிஜமாகவே ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பது போலான உணர்வு!

அவள் அவனையே பார்த்தவாறு இருக்க, தன்னவளின் மூக்கோடு மூக்கை உரசியவன், “ரொம்ப அழகா இருக்க சோடாபுட்டி” என்று சொல்லி சிரிக்க, அதில் முகம் சிவந்தவள் பின் தன்னவன் தன்னை அழைத்த விதத்தில் உதட்டை சுழித்து பொய்யாக அவனை முறைத்தாள்.

இவ்வாறு நாட்கள் அழகாக நகர, இடைப்பட்ட நாட்களுக்குள் அலுவலகத்தில் வைத்து அனிதா வேறு யாதவ்விடம் காதலை சொல்லி அவன் அதை மறுத்திருக்க, அந்த கோபம் அவளுக்குள் எரிந்துக் கொண்டிருந்ததென்றால், அதற்கு எண்ணெய் ஊற்றுவது போலிருந்தது யாதவ், ரித்வியின் நடவடிக்கை.

ரித்வி திருமணமானவள் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்ததால் யாதவ்வும் ரித்வியும் பழகும் விதத்தை பார்த்து சில பேர் ‘ஒருவேள, இவ புருஷன் இவனா தான் இருக்குமோ?’ என்று தங்களுக்குள் சந்தேமாக கிசுகிசுக்க, ஒரு சிலரோ, ‘என்ன இவ புருஷன வச்சிக்கிட்டு இவன் கூட சுத்திக்கிட்டு இருக்கா?’ என்று வேறுமாதிரி யோசிக்க, அனிதா மட்டும் ‘இவ எப்படி யாதவ் கூட பழகலாம்?’ என்று உள்ளுக்குள் ரித்வியை கருவிக்கொண்டாள்.

ஆனால், யாதவ்வோ இதையெல்லாம் கண்டுக்கொள்ளவே இல்லை. காலையில் அலுவலகத்திற்கு அவளை அழைத்துச் செல்பவன், வேலை முடிந்ததும் ரித்வி பஸ் தரிப்பிடத்திற்கு ஓடிச்சென்று நின்றாலும் அவள் முன் வந்து பைக்கை நிறுத்தி அடம்பிடித்து, அலுச்சாட்டியம் செய்து தன்னுடன் அழைத்துச் செல்வான்.

இதில் ரித்விக்கு தான் சுற்றியிருப்பவர்களின் பார்வை உணர்ந்து வெட்கமாகிப்போகும். அதுவும், யாதவ் திருமணமான விடயத்தை யாரிடமும் இப்போது  சொல்லக்கூடாது என்று வேறு சொல்லியிருக்க, அவளுக்கு தான் சுற்றியிருந்தவர்களின் பார்வையில் ஒருவித சங்கட நிலை!

அன்று, அலுவலகத்தில் கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்க, யாதவ் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக் கொண்ட ரித்வி, கருப்பு சட்டை, ஜீன்ஸ் சகிதம் டிப்டாப்பாக தயாராகி தனக்காக ஹோலில் காத்திருந்தவனின் முன் வந்து நின்றதும், அவனோ ஒருநொடி அவளின் அழகில் சொக்கித்தான் போனான்.

அவளையே இமைசிமிட்டாது பார்த்திருந்த யாதவ், பின் அவள் முகத்தை உற்றுப்பார்த்து யோசனையில் புருவத்தை நெறிக்க, அவனின் முகபாவனையை புரியாது பார்த்தாள் அவள்.

அவளருகில் வந்தவன் அவள் முகத்தை உதட்டை சுழித்து உற்றுப்பார்த்து, “ரிது, உன் ஸ்பெக்ஸ் எங்க?” என்று கேட்க, “அது வந்து… இந்த ட்ரெஸ்க்கு அது செட் ஆகல. போட்டா நல்லா இருக்காதுன்னு லென்ஸ் போட்டிருக்கேன். இப்போ அழகா இருக்கேனா?” என்று ஒருவித ஆர்வத்துடன் கேட்டாள் ரித்வி.

இருபக்கமும் தலையாட்டி சிரித்த யாதவ், அவளுடைய அறைக்கு ஓடிச்சென்று மூக்குக்கண்ணாடியை கையோடு எடுத்து வந்து “இது என்னோட ரிது கிடையாது. இந்த இன்னசன்ட் ஃபேஸ் ஓட புட்டிக்கண்ணாடி சேர்ந்தா தான் ரித்விகா. இது தான் உனக்கு அழகே சோடாபுட்டி” என்று சொன்னவாறு அவளின் மூக்குக்கண்ணாடியை அவளுக்கு போட்டுவிட, கண்ணாடியில் தன் விம்பத்தை பார்த்தவளுக்கு ஏனோ ‘இன்று தான் கூடுதலாக அழகாக இருக்கிறோமோ?’ என்று தோன்றியது.

தன் தோளில் கைவைத்து தன் பின்னால் நின்றிருந்த தன்னவனை ரித்வி காதலோடு நோக்க, அவனோ புன்னகையுடன், “இன்னைக்கு ஆஃபீஸ்ல சொல்ல போறேன்” என்று சொன்னதும், அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்துக்கொண்டவள், இருபுருவங்களையும் ஆச்சரியமாக உயர்த்தினாள்.

“நிஜமாவா யது?” சட்டென்று திரும்பி தன்னவனை நேருக்கு நேர் பார்த்தவாறு அவள் கேட்க, செல்லமாக அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், “ஆமா, இதுக்கு மேல மறைக்க வேணாம். ஐ திங் நிறைய பேருக்கு ஏற்கனவே சந்தேகம் இருக்கு. சில பேர் கன்ஃபோர்மே பண்ணியிருப்பாங்க. இருந்தாலும் நாம வாய்வார்த்தையா இன்னைக்கு எல்லார்கிட்டயும் சொல்லிரலாம்” என்று சொல்ல, வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டாள் அவள்.

அங்கிருந்து இருவருமே கேளிக்கை விருந்து நடைபெறும் மண்டபத்திற்குச் செல்ல, வண்டியை நிறுத்திய யாதவ், “ரிது, நீ உள்ள போ! நான் வர்றேன்” என்றுவிட்டு வண்டியை நிறுத்தும் இடத்திற்குச் செல்ல, உள்ளே சென்றவள் அங்கிருந்த தன் அலுலவக நண்பர்களுடன் ஐக்கியமானாள்.

அவனும் வண்டியை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்து தன் நண்பர்களுடன் இணைந்து பேசியவாறு அங்கு தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்த தன்னவளை ஓரக்கண்ணால் ரசிக்க, அவள் மட்டும் என்ன சும்மாவா? தன் தோழிகளுடன் பேசியவாறு தன்னவனை தான் அப்பட்டமாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.

சட்டென ரித்வியின் கரத்தை ஒரு கரம் இழுக்க, திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்கவும் எதிரே நின்றிருந்தது என்னவோ ரேகா தான்.

அவளை தரதரவென மண்டபத்தின் ஒரு மூலைக்கு இழுத்துச்சென்ற ரேகா, “ரித்வி, என்கிட்ட உண்மைய மட்டும் சொல்லு! உனக்கு கல்யாணம் ஆகிருச்சி. அப்படி இருக்குறப்போ யாதவ் கூட நெருங்கி பழகிகிட்டு இருக்க. இது எனக்கு சரியா தோணல” என்று முறைத்தவாறு சொல்ல, “நீ என்னை தப்பா நினைக்கிறியா ரேகா?” என்று பாவம் போல் கேட்டாள் ரித்வி.

“ச்சே! அப்படி இல்லை டி. ஆஃபீஸ்ல எல்லாருக்கும் உனக்கு கல்யாணம் ஆகிருச்சின்னு தெரியும். அப்படி இருக்குறப்போ நீ இன்னொரு பையன் கூட நெருங்கி பழகினா ரொம்ப தப்பா பேசுவாங்க. ஆரம்பத்துல நான் கூட இதை பெருசா கண்டுக்கல. பட், இப்போ நீ பைக்ல வந்து இறங்கினதை பார்த்ததும் இதுக்கு மேல சொல்லாம இருக்குறது தப்புன்னு தோணிச்சி. அதான்…” என்று ரேகா சொல்லவும்,  அவளை தயக்கமாக ஏறிட்டாள் அவள்.

“ரேகா, அது… அது வந்து… நான் ஒன்னு சொல்லவா?” என்று ரித்வி கேட்க, அவளை கேள்வியாக நோக்கிய ரேகா, அடுத்து ரித்வி சொன்னதில் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டாள்.

“அவரு தான் டி என் புருஷன்” ரித்வி பட்டென்று தலைகுனிந்து சொல்லவும், ‘ஆஆ…’ என வாயைப் பிளந்தவள், “என்ன டி சொல்ற?” என்று அதிர்ந்துப் போய் கேட்க, தன் திருமண புகைப்படத்தை காட்டி ரித்வி நடந்ததை சொன்னதும் தலையே சுற்றிவிட்டது ரேகாவிற்கு.

“ஓஹோ! அப்போ அவர் சொல்லி தான் நீ யார்கிட்டேயும் சொல்லல்லையா?” என்று ரேகா அதிர்ச்சி மாறா குரலுடனே கேட்க, தலையை மேலும் கீழும் ஆட்டியவள், “இன்னைக்கு எல்லார்கிட்டேயும் சொல்றேன்னு சொன்னாரு. பட், அதுக்குள்ள நீயே என்கிட்ட கேக்கவும் தான் நான் சொல்ல  வேண்டியதா போச்சு” என்று சொல்லி உதட்டை பிதுக்க, ரேகாவோ அங்கு தூரத்தில் நின்றிருந்தவனையும் தன்னெதிரே நின்றிருந்தவளையும் தான் மாறி மாறி பார்த்தாள்.

ரித்வியை ஒருவித சங்கடத்துடன் ஏறிட்ட ரேகா, “அது ரித்வி… உன் புருஷன்னு தெரியாம உன்கிட்டயே அவர பத்தி…” என்று தயக்கமாக இழுத்து அசடுவழிய, வாய்விட்டு சிரித்தவள் அவளை அழைத்துக்கொண்டு மண்டபத்திற்கு நடுவே வந்தாள்.

யாதவ்வோ ரித்வியை பார்த்து கண்களாலே ‘என்ன?’ என்று கேட்க, அவளோ கண்களை மூடி ‘இல்லை’ என்று தலையாட்டிய விதத்தில் மெய் மறந்தவன் ஒற்றை கண்ணை சிமிட்ட, முகத்தை திருப்பி வெட்கப்பட்டு சிரித்தாள் அவள்.

அடுத்த சில நொடிகளில் மண்டபத்திற்கு நடுவே போடப்பட்டிருந்த மேடையில் எல்லாரும் ஜோடி ஜோடியாக மெல்லிய இசைக்கேற்ப உடலை வளைத்து நடனமாட ஆரம்பிக்க, யாதவ்வோ ரித்வியை தான் கண்களால் அழைத்தான். மிரண்டு போய் அவனைப் பார்த்தவள் ‘முடியாது’ எனும் விதமாக தலையாட்ட, இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.

‘உன்னை இப்படியே விட்டா சரி வராது. இரு வர்றேன்’ என்று சைகையால் சொன்னவாறு யாதவ் தன்னவளை நோக்கிச் செல்ல போக, சரியாக அவன் முன் வந்து நின்றாள் அனிதா.

“ஷெல் வீ டான்ஸ் யாதவ்?” என்று அனிதா குழைவாக கேட்க, “அது அனிதா… நான்…” என்றவாறு ரித்வியின் முகத்தை பார்த்தவனுக்கு அவளின் முகம் போன போக்கை பார்த்து ஒரு யோசனை தோன்றியது.

அனிதா வந்து பேசும் போதே ரித்வி உதட்டை சுழித்து இருவரையும் மாறி மாறி பார்க்க, அதை கவனித்தவனுக்கோ ஒரே குதூகலம் தான்! தன்னவளை வெறுப்பேற்றவென்றே “ஷுவர் அனிதா” என்றவாறு யாதவ் அனிதாவுடன் மேடைக்கு நடுவே சென்று நடனமாட ஆரம்பிக்க, ரித்விக்கு தான் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

இசைக்கேற்றவாறு அனிதாவும் ஒரு கையால் யாதவ்வின் தோளை பற்றி, மறுகரத்தை யாதவ்வின் கரத்துடன் கோர்த்து நடனமாட, அவனும் ஓரக்கண்ணால் ரித்வியை குறும்பாக பார்த்தவாறு அனிதாவை நெருங்கி நடனமாடிக் கொண்டிருந்தான்.

கோபமூச்சுக்களை விட்டவாறு மூக்குக்கண்ணாடியை சரி செய்து ரித்வி யாதவ்வை முறைத்துப் பார்த்த விதத்தில் அவனுக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அதேநேரம், ரித்விக்கு ஆரனிடமிருந்து அழைப்பு வர, திரையை பார்த்தவள் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்த தன்னவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவசரமாக அழைப்பை ஏற்று மண்டபத்திற்கு வெளியே வந்தாள்.

“என்ன மிஸஸ்.யாதவ் கார்த்திக், இப்போ எல்லாம் நீங்களா எங்களை கூப்பிட மாட்டீங்க? மேடம் அவ்வளவு பிஸி ஆகிடீங்களோ?” என்று ஆரன் கேலியாக கேட்க, “அப்படி எல்லாம் இல்லை அத்தான். கொஞ்சம் வேலை…” என்று தன் கணவனுக்காக தான் அவனுடன் பேச மறுப்பதை சொல்லாது தயக்கமாக ரித்வி  இழுக்க, அவளின் நிலை புரிந்ததால் அதைப்பற்றி மேலும் கேட்டு அவளை சங்கடப்படுத்தவில்லை அவன்.

“இப்போவாச்சும் உன் வீட்டுக்காரர் சிரிச்சி பேசுறானா? இல்லை, இன்னும் அதே முசுடு முகம் தானா?” என்று அவன் கேட்ட விதத்தில் சிணுங்கியவள், “அதெல்லாம் அவர் மாறிட்டாரு. உங்களுக்கொன்னு தெரியுமா? இப்போ எல்லாம் என்கூட சிரிச்சி சிரிச்சி பேசுறாரு. அவ்வளவு பாசமா இருக்காரு” என்று சொல்லிக்கொண்டே போக, அவனுக்கோ ஆச்சரியம் கலந்த சந்தோஷம் தான்!

ஆனாலும், “ஒருவேள, உன் வீட்டுக்காரர் ஏதாச்சும் போதி மரத்துக்கு அடியில ஒரு முக்கால் மணி நேரம் உட்கார்ந்துட்டு வந்தானா என்ன? அவ்வளவு சீக்கிரம் திருந்துற ஆள் இல்லையே அவன்…” என்று கேலி செய்து, “அதான் நல்லா இருக்கானே, உன்னை பத்தின உண்மைய சொல்ல வேண்டியது தானே!” என்று ஆரன் சொன்னதும் பக்கென்றானது ரித்விக்கு.

“என்ன சொல்றீங்க அத்தான்? வேணாம்! வேணாம்! அது எப்போவும் தெரிய வேணாம். அது தெரிஞ்சி அவர் என்னை வெறுத்துட்டா?” என்று ரித்வி பயந்த குரலில் கேட்க, “ஒருவேள, நீ சொல்றதை அவன் ஏத்துக்கவும் வாய்ப்பிருக்கு தானே?” என்று பதில் கேள்வி கேட்டான் ஆரன்.

“இல்லை அத்தான், அவரு…” என்று பேச வந்தவளை இடைவெட்டியவன், “ரித்வி, யாதவ்கிட்ட எத்தனை நாளைக்கு தான் மறைக்க போற? எப்போவோ ஒருநாள் தெரிய தான் போகுது. கண்டிப்பா தெரிய வரும். ஏதோ ஒரு வழியில தெரிய வந்து பிரச்சினையாகுறதுக்கு பதிலா நீயே சொல்றது பெட்டர்” என்று சொன்னது கூட அவளுக்கு சரியாகத்தான் தோன்றியது.

“சத்தியமா உண்மைய சொல்றதுக்கான தைரியம் எனக்கில்ல. ஆனா, கூடிய சீக்கிரம் சொல்றேன்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவள் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு சமன்படுத்தியவாறு மண்டபத்திற்குள் நுழைய, அங்கோ ஒரே சலசலப்பு!

‘நாம ஃபோன் பேச போன கேப்புல இங்க என்ன நடந்திச்சி?’ என்று யோசித்தவாறு உள்ளே வந்த ரித்வியை தேடி ஓடி வந்த ரேகா, “எங்கடி போய் தொலைஞ்ச? அங்க உன் புருஷன் மேல தேவையில்லாத பழிய போட்டு அவமானப்படுத்திக்கிட்டு இருக்கா அந்த அனிதா” என்று பதட்டமாக சொல்ல, ரித்விக்கோ எதுவுமே புரியவில்லை.

எல்லோரையும் தாண்டி வேகமாக ரித்வி தன்னவனை தேடிச் செல்ல, அங்கு அனிதாவோ முதலைக்கண்ணீருடன், “என்கிட்டயே தப்பா நடந்துக்கிட்டான் இடியட்! பார்க்க நல்லவன் வேஷம் போட்டுட்டு இப்படி தான் பல ஆம்பிளைங்க இருக்காங்க. ச்சீ…” என்று தப்புத்தப்பாக பேச,

யாதவ்வோ எதுவும் பேசவில்லை. இறுகிய முகமாக பற்களை கடித்துக்கொண்டு தலைகுனிந்து நின்றிருந்தான்.

இங்கு, ரித்விக்கு தான் நடப்பதைப் பார்த்து அத்தனை அதிர்ச்சி!

 

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!