லவ் ஆர் ஹேட் 25 (01)

eiEAMT568361-180ea683

லவ் ஆர் ஹேட் 25 (01)

இந்திரன் சொன்ன செய்தியில் அதிபனுக்கோ அத்தனை அதிர்ச்சி!

“என்னடா சொல்ற?” என்று அதிபன் அதிர்ந்துப்போய் கேட்க, “சோரிடா, உன்கிட்ட முன்னாடியே சொல்லலாம்னு தான் யோசிச்சோம். ஆனா, உன் சேவை நாட்டுக்குத் தேவை. அதான், நீ வேலையில இருப்ப, எதுக்கு உன்னை சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டுன்னு தான் சொல்லல்ல” என்ற இந்திரனின் வார்த்தைகளில் அதிபனுக்கோ தலையில் இடி விழுந்த உணர்வு!

சரியாக, அங்கு இந்திரனை தேடி ஓடி வந்த சந்திரன், “இந்து, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துக்கிட்டு இருக்காங்களாம். பொறுப்பில்லாம இந்த பயல் கூட வெட்டியா பேசிக்கிட்டு இருக்க? போ! போய் வேலைய பாரு” என்று அவசரப்படுத்த, அதிபனுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.

இதயத்தை குத்தி கிழிப்பது போன்ற வலி அவனுக்கு! ‘வேறு ஒருவனுடனான நிச்சயதார்த்தத்திற்கு  தன்னவள் சம்மதித்தாளா?’ என்ற கேள்வியின் விடையில் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கியவன், “மாப்பிள்ளை எந்த ஊரு?” என்று கேட்க, “அதெல்லாம் நம்ம ஊரு தான். ஒருமுறையில நமக்கு நெருங்கின சொந்தமும் கூட” என்றுவிட்டு அதிபனை உள்ளே அழைத்துச் சென்றான் சந்திரன்.

“வாடா உடன்பிறப்பே!” என்று வேகமாக வந்த யாதவ், அதிபனை அழைத்துச்சென்று அவன் கையில் புது வேஷ்டி சட்டையை திணித்து, “இதை போட்டுக்கோ! எல்லாருக்கும் புது ட்ரெஸ் வாங்கும் போது அப்பா உனக்காகவும் எடுத்தாரு. சீக்கிரம் ரெடியாகிட்டு வா! மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்போ வந்துருவாங்க” என்றுவிட்டு அங்கிருந்து நகர, கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவனுக்கு வாழ்வே சூனியமானது போல் இருந்தது.

‘அப்போ என் வைஷு எனக்கில்லையா? எல்லாம் அவ்ளோ தானா?’ என்று நினைத்தவனது கன்னத்தை வருடி கண்ணீர் தரையை தொட, அதை அழுந்தத் துடைத்தவன் குளித்து உடை மாற்றி ‘தான் அழுததற்கு அடையாளம் தெரிகிறதா?’ என்று கண்ணாடியில் பார்த்து உறுதி செய்துவிட்டு நேரே சென்று நின்றது என்னவோ வைஷ்ணவியின் அறை முன் தான்.

கதவு தட்டும் சத்தத்தில் கதவை திறந்த ரித்வி, “அதி, எப்போடா வந்த? சரி சரி, சீக்கிரம் போய் எல்லாம் ஏற்பாடும் பண்ணியாச்சான்னு பாரு, மசமசன்னு நிக்காம” என்றுவிட்டு கதவை சாத்த போக, கதவை மூடவிடாது பிடித்துக்கொண்ட அதிபன், “நான் வைஷு கூட பேசனும் ரித்வி” என்று சொல்ல, அலங்காரம் செய்துக்கொண்டிருந்த வைஷ்ணவியை பார்த்த ரித்வி, அவள் தலையசைத்ததும் கதவை முழுதாக திறந்தாள்.

உள்ளே வேகமாக வந்த அதிபனுக்கோ எந்த கலக்கமுமின்றி கண்ணாடியின் முன் தயாராகிக்கொண்டிருந்த தன்னவளை பார்த்ததும் அழுகையை அடக்கவே முடியவில்லை. கூடவே கோபமும்.

அதிபன் நுழைந்ததுமே ரித்வியும், உத்ராவும் அறையிலிருந்து வெளியேற, அடுத்தநொடி கதவை மூடிவிட்டு தன்னவளை வேகமாக நெருங்கியவன், “வைஷு, என்ன நடக்குது இங்க? இதுக்கெல்லாம் உன்னால எப்படி சம்மதிக்க முடிஞ்சது? நிஜமாவே என்னை விட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்று பதட்டமாக கேட்க, “ஆமா”  நறுக்கென்று பதில் வந்தது வைஷ்ணவியிடமிருந்து.

“அப்போ நம்ம காதல்?” தழுதழுத்த குரலில் அதிபன் கேட்க, “அது நீங்க என்னை விட்டு போகனும்னு அன்னைக்கு முடிவு எடுத்தப்போவே செத்துப்போச்சு” என்று வைஷ்ணவி அழுத்தமாக சொல்ல, அதற்கு மேல் இருக்காது அங்கிருந்து வெளியேறியவனுக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை.

இதயத்தை ஏதோ ஒன்று அழுத்த, கத்தி அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால், அவனையும், அவனின் முகபாவனையையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்த அவனின் குடும்பத்தினருக்கோ அவனை பார்க்கவே பாவமாகத் தான் இருந்தது. 

யாரு வருகிறார்கள், போகிறார்கள்? என்பதை கவனிக்கும் நிலையில் அதிபன் இல்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் அவனவள் தான். தனதறையில் தரையை வெறித்தவாறு முகம் இறுகிப்போய் அவன் அமர்ந்திருக்க, “டேய் அதிபா! எல்லாரும் வந்துட்டாங்க. சீக்கிரம் வா” என்ற யாதவ்வின் குரலில் வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்று சபையில் அமர்ந்துக் கொண்டான் அவன்.

எவரையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை அதிபன். அவனவளுடனான இனிமையான தருணங்களே அவனுடைய சிந்தனையை ஆக்கிரமித்திருந்தன.

“மாப்பிள்ளை உம்முணா மூஞ்சா இருப்பாரு போல! சிரிக்கவே மாட்டேங்குறாரு” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் கலகலவென சிரிக்க, அவனோ எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

மஹாதேவன் சொன்னதும் ஐயர் நிச்சயதார்த்தப் பத்திரிகையை வாசிக்க ஆரம்பிக்க, யாரையும் நிமிர்ந்துக் கூட பார்க்காது தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்த அதிபன், ஐயர் சொன்ன மாப்பிள்ளையின் பெயரில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தான்.

அவனெதிரே வைஷ்ணவி! அவளோ தன்னவனையே குறும்புச் சிரிப்புடன் பார்த்தவாறு இருக்க, ‘நிஜமாவே நம்ம பேரை தான் சொன்னாங்களா? ஒருவேள, நம்ம பிரம்மையா இருக்குமோ?’ என்று அதிபன் திருதிருவென விழிக்க, இளசுகளுக்கோ சிரிப்பு தாளவில்லை.

“எதுக்குடா முட்டைய திருடின திருடனாட்டம் மூஞ்ச இப்படி வச்சியிருக்க?” என்று இந்திரன் அதிபனிடம் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, “இல்லைடா, அது… நிச்சயதார்த்தம்… என் பேரு… வேற மாப்பிள்ளை… நீங்க தானே…” என்று அவன் திக்கித்திணற, “ஸப்பாஹ்!” என்று சலிப்பாக தலையாட்டிய சந்திரன், “நீ நம்பலன்னாலும் அதான் நிசம்” என்று சொல்லி சிரிக்க, தன் அப்பாவை தான் சடாரென்று திரும்பிப் பார்த்தான் அதிபன்.

அவரோ சிரிப்புடன் கண்களை அழுந்த மூடித்திறக்க, அடுத்தநொடி நிதானமாக திரும்பி தன்னவளை முறைத்துப் பார்த்தான் அவன். வைஷ்ணவியோ ஒற்றை கண்ணை சிமிட்டி வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்க, அவனாலும் அதற்கு மேல் பொய்யாக முறைக்க முடியவில்லை.

கை விட்டு போய்விட்டதாக நினைத்த ஒன்று திரும்ப கைக்கு வந்து சேரும் போது மனமடையும் சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் விளக்க முடியுமா என்ன? மனமே உல்லாசமாக இருந்தது அவனுக்கு!

மொத்த இளசுகளும் சற்று நேரத்திற்கு முன் அதிபனின் முகம் போன போக்கை வைத்து கேலி செய்து சிரிக்க, சிறப்பாக முடிந்தது அதிபன், வைஷ்ணவியின் நிச்சயதார்த்தம். ஆனால், வைஷ்ணவியின் தந்தை சரவணனுக்கோ சில வர முடியாத சூழ்நிலை காரணமாக கல்யாணத்தை மூன்று மாதத்திற்கு பிறகு முடிவு செய்ததில் ‘யோவ் மாமா! உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று பொங்கிவிட்டான் அதிபன்.

அன்றிரவே மீண்டும் கொழும்பிற்குச் செல்ல யாதவ்வும் ரித்வியும் தயாராக, ரித்வியை தனதறைக்கு அழைத்திருந்தார் மஹாதேவன்.

“மாமா…” என்று வந்த ரித்வியின் முகத்திலிருந்த பூரிப்பும், பொலிவுமே இப்போது அவள் வாழ்விலிருக்கும் சந்தோஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட, அவருக்கோ அத்தனை நிம்மதி!

“நிச்சயதார்த்த வேலையில உன்கூட பேசவே முடியல ரித்விமா. வேலையெல்லாம் எப்படி போகுது? யாதவ் உன்னை நல்லா பார்த்துக்குறானா என்ன? வெளில எல்லாம் அடிக்கடி கூட்டிட்டு போறான் தானே?” என்று மஹாதேவன் கேட்க, “அதெல்லாம் நல்லா போகுது மாமா. அவரும் என்னை நல்லா பார்த்துக்குறாரு. அவரே வெளில கூட்டிட்டு போக இருந்தாலும் இரண்டு பேருக்கும் வேலை. எங்க நேரம் கிடைக்குது?” என்று ரித்வி பேசியதில், அவருக்கு சிரிப்புத் தான் வந்தது.

“பெரிய மனுஷி மாதிரி பேசுறா என் ரித்விமா” என்று சொல்லி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியவர், “இப்போ தான்டா நிம்மதியா இருக்கு. இன்னும் கொஞ்சநாள் இருந்துட்டு போகலாமே…” என்று கேட்க, “அதான் இன்னும் மூனு மாசத்துல அதியோட கல்யாண வேலை இருக்கே… அப்போ பொட்டி படுக்கையை கட்டிட்டு இங்க வந்து இருக்க வேண்டியது தான்” சிரிப்புடன் சொன்னாள் ரித்வி.

மஹாதேவனுடன் பேசிவிட்டு அறைக்கு வந்தவளை பின்னாலிருந்து இறுக அணைத்துக்கொண்டான் யாதவ். அவள் கழுத்தில் முகத்தை புதைத்து அவன் இதழால் வருட, மீசை முடியால் உண்டான கூச்சத்தில், “என்னங்க, என்ன பண்றீங்க? ரெடியாக வேணாமா?” என்று சிணுங்கலாக வந்தன ரித்வியின் வார்த்தைகள்.

அவளின் பின் கழுத்தில் அழுந்த முத்தம் பதித்து, “ஆமாடி, சீக்கிரம் இங்கிருந்து போயிரலாம். அப்போ தான்…” என்று யாதவ் கிறக்கமாக அவள் காதில் சில ரகசியங்கள் பேச, வெட்கத்தில் செவ்வானமாக சிவந்து போனாள் ரித்வி.

அடுத்தநாள் காலை, ரித்வியும் யாதவ்வும் கொழும்புக்கு வந்து சேர்ந்திருக்க, வீட்டுக்கு வந்ததுமே தன் காதல் விளையாட்டை தன்னவளிடத்தில் ஆரம்பித்துவிட்டான் அவன். அவளும் விரும்பியே அவனுக்கு இசைந்துக்கொடுக்க, அதில் மூழ்கி தொலைந்துத் தான் போனான் யாதவ்.

அலுவலகத்தில் கூட எல்லோருக்கும் யாதவ், ரித்வி பற்றி தெரிந்திருக்க, இதற்குமுன் யாதவ் அழைத்தாலே ரித்வியை பார்த்து பரிதாபப்பட்டவர்கள் இன்று யாதவ் சாதாரணமாக அழைத்தால் கூட அவளை கேலி செய்தே சிவக்க வைத்துவிடுவர்.

அதுவும் அனிதா வேறு குழுவிற்கு இடமாற்றம் கேட்டு சென்றிருக்க, ரித்விக்கோ அத்தனை நிம்மதி!

அலுவலகத்தில் வைத்து அடிக்கடி அறைக்கு அழைத்து தன்னவளை சீண்டுபவன், வீட்டுக்கு வந்ததுமே அவளுடன் மஞ்சத்தில் சரிந்துவிடுவான். யாதவ்வின் வேகத்தில் திணறிப்போவது என்னவோ ரித்வி தான்.

ஆனால், கூடலின் போது உணர்ச்சிகளின் பிடியில் ரித்வி தன் காதலை வாய்வார்த்தைகளால் அடிக்கடி சொன்னாலும் யாதவ் ஒருதடவை கூட வார்த்தைகளால் தன் காதலை உணர்த்தியதில்லை. ரித்வியும் அதை எதிர்ப்பார்க்கவில்லை.

இப்படியே நாட்டள் நகர, யாதவ்வின் உயிர்நீர் கடவுளின் வரமாக அவள் வயிற்றில் ஜீவனாக வளர்ந்துக் கொண்டிருந்தது.

வைஷ்ணவி, அதிபன் நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, காலையில் எழுந்த ரித்விக்கோ உடல் அத்தனை சோர்வு! சிலநாட்களாகவே இப்படி தான்.

‘ச்சே! என்னாச்சு எனக்கு? கொஞ்சநாளாவே இப்படி இருக்கு. தலை வேற சுத்துது. இதுல அடிக்கடி வாமிட் வேற. வேலை டென்ஷன்ல உடம்ப சரியா பார்த்துக்கவும் முடியல. பத்து பேரு சேர்ந்து அடிச்சி போட்ட மாதிரி உடம்பு ஒரு மாதிரி வலிக்குதே…’ என்று நினைத்தவாறு குளிக்கச் சென்றவளுக்கு பல் துலக்கும் போதே வாந்தி வருவது போலிருக்க, அவளால் சமாளிக்கவே முடியவில்லை.

‘அய்யோ கிருஷ்ணா! என்ன தான் ஆச்சு? மயக்கமா வருதே. ஒருவேள…’ என்று யோசித்தவளுக்கு அப்போது தான் பொறி தட்டியது. உடனே ஓடிச்சென்று திகதியை பார்த்தவளுக்கு மனதிலோ அத்தனை பூரிப்பு!

‘கிருஷ்ணா! இது நிஜம் தானா?  எனக்குள்ள நடந்த மாற்றத்தை கூட கவனிக்காத முட்டாளா இருந்திருக்கேன். ம்மீ, அப்பா என்கிட்டயே திரும்ப வர போறாங்க’ என்று உள்ளுக்குள் இதயம் படபடக்க நினைத்துக் கொண்டவள் உடைமாற்றி தன்னவனை காண ஹோலுக்கு வர, அலுவலகத்திற்கு தயாராகி சட்டையை கையை மடித்து ஏற்றி விட்டவாறு அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்தான் யாதவ்.

அவன் முதுகில் கன்னத்தை வைத்து பின்னாலிருந்தவாறு அணைத்துக் கொண்ட ரித்வி, “என்னங்க…” என்று மெதுவாக அழைக்க, “ஏய் சோடாபுட்டி, எழுந்துட்டியா? கொஞ்சநாளாவே ஒருமாதிரி தான் இருக்க. டாக்டர்கிட்ட போகலாமா?” என்று யாதவ் கேட்டதும் அதிர்ந்து விழித்தாள் அவள்.

“எப்படிங்க எனக்கு உடம்புக்கு முடியலன்னு கண்டுபிடிச்சீங்க?” என்று ரித்வியின் கேள்வி ஆச்சரியமாக வர, “எனக்கு தெரியாதா என் பொண்டாட்டிய பத்தி? அதான், நானே சமைக்கலாம்னு வந்தேன்” என்று சொல்லி சிரித்தேன் அவன்.

அவளோ, “யது…” என்று செல்லமாக சிணுங்க, திரும்பி தன்னவளை அணைத்து நெற்றியோடு நெற்றி முட்டி, “என்னம்மா? உடம்புக்கு ரொம்ப முடியல்லையா?” என்று அவன் கேட்க, அவனை அணைத்து அவன் மார்போடு ஒன்றிப்போனாள் ரித்வி.

“யது, இன்னைக்கு நான் ஆஃபீஸ் வரல. ப்ளீஸ்” என்று சிறுகுழந்தை போல் ரித்வி சொன்னதில், லேசாக சிரித்து அவள் மூக்கில் முத்தமிட்டவன், “சரி, நானும் உன் கூடவே இருக்கேன்” என்று சொல்ல, தன்னவனை இடுப்பில் கைகுற்றி முறைத்துப்பார்த்தாள் அவள்.

“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் வரலன்னாலும் பிரச்சினை இல்லை. பட், நீங்க போயே ஆகனும். டாப்லெட் போட்டு கொஞ்சநேரம் தூங்கி எழுந்தா எனக்கு சரியாகிடும். என்ட், முக்கியமான விஷயம், உங்க வேலைய முடிச்சிட்டு பென்டிங்ல இருக்குற என்னோட வேலையையும் கரெக்ட்  ஆ முடிச்சிருங்க” என்ற தன்னவளின் மிரட்டலில் வாயில் கைவைத்து அதிர்ந்தவன், “அடிப்பாவி! முன்ன எல்லாம் இந்த வாயிலிருந்து டைப் அடிக்கிற மாதிரி தான் பேச்சே வரும். இப்போ என்னடான்னா இப்படி மிரட்டுற” என்று சொன்னான்.

அவளோ தன்னவனை பொய்யாக முறைக்க, “உத்தரவு மகாராணி!” என்று கேலியாக சொன்ன யாதவ், தன்னவளை இழுத்து அவளே போதுமென்று தள்ளி விடும் வரை அவளிதழ் தேனை அருந்திவிட்டே அலுவலகத்திற்குச் சென்றான்.

அவன் சென்றதுமே அவசரஅவசரமாக தயராகி வெளியேறியவள், வீட்டுக்கு வரும்போது வாங்கிக்கொண்டு வந்தது என்னவோ கருத்தரித்திருப்பதை கணிக்கும் கருவி தான். குளியலறைக்குள் புகுந்து தன்னை பரிசோதித்தவளுக்கு அது முடிவை காட்டும் வரை பொறுமையே இல்லை.

‘கிருஷ்ணா! நான் நினைச்ச மாதிரி இருக்கனும்’ என்று கண்களை மூடி கைக்கூப்பி வேண்டியவாறு இருந்தவளுக்கோ ஒவ்வொருநொடியும் திக்திக் நிமிடங்கள் தான்.

அடுத்த மூன்று நிமிடங்களில் கடவுளின் வரமும் இரண்டு சிவப்பு கோடுகளில்  தெரிய, சந்தோஷத்தில் கண்களே கலங்கிவிட்டது அவளுக்கு. தன் மணிவயிற்றை தொட்டுப்பார்த்தவளுக்கு தனக்குள் ஒரு ஜீவன் வளர்கின்றது என்ற நினைப்பிலே உடலில் ஒரு சிலிர்ப்பு!

உடனே தயாராகி வைத்தியசாலைக்கு தனியாகவே சென்று வைத்தியர் மூலமும் உறுதி செய்தவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு தான். வயிற்றில் ஒன்றரைமாத கரு வளர்வது கூட தெரியாது இருந்திருக்கிறாள்! 

பரிசோதித்துவிட்டு ஸ்கேன் செய்து பார்த்த ரித்விக்கு ரிபோர்ட்டில் தெரிந்த அந்த சிறு கருவை பார்க்கும் போதே இறக்கையில்லாது பறப்பது போன்ற உணர்வு!

‘உன் உரியவனிடம் ஓடிச்சென்று சொல்!’ என்று உரைத்த மனதை கடிவாளமிட்டு அடக்கியவளுக்கோ தன்னவனிடத்தில் இதை சொல்வதற்கான சரியான நேரம் இன்னும் மூன்றே நாட்களில் வர இருக்கும் தன் பிறந்தநாளாக தான் தோன்றியது.

அன்று அலுவலகத்திலிருந்து வந்த யாதவ் எப்போதும் போல் அவளை அணைத்து, “இப்போ என் சோடாபுட்டிக்கு எப்படி இருக்கு?” என்று காதோரம் முடிக்கற்றைகளை ஒதுக்கிவிட்டவாறு கேட்க, அவன் விழிகளை பார்த்தவளின் மனம் ‘இப்போதே சொல்லிவிடு!’ என்று படபடவென்று அடித்துக் கொண்டது.

ஆனால், தன்னை கட்டுப்படுத்தி அவன் மார்பில் தலைவைத்து சாய்ந்தவள், “எனக்கும் ஒன்னும் இல்லைங்க. இன்னைக்கு இப்படியே உங்க நெஞ்சுல படுத்து தூங்கனும் போல இருக்கு” என்று சொல்ல, அவளை தனக்குள் புதைக்குமளவிற்கு இறுக அணைத்தவன், “இது உனக்கான இடம் ரிது. நல்லா தூங்குடா” என்று  தன்னவளின் நெற்றியில் முத்தமிட்டு அவள் தலையில் தன் கன்னத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டான்.

இப்படியே இரண்டுநாட்கள் கழிந்து அன்றிரவு, இன்னும் சில மணித்தியாலங்களில் ரித்வியின் பிறந்தநாள்!

‘என்ன இன்னைக்குன்னு பார்த்து நேரம் இம்புட்டு ஸ்லோவா போகுது?’ என்று அடிக்கடி நேரத்தை பார்த்தவாறு இருந்த ரித்விக்கு உணவு வாசனை ஒத்துக்கொள்ளாது குமட்டிக்கொண்டு வர, அதை பொறுத்துக்கொண்டு சமைத்துக் கொண்டிருந்தாள் என்றால், பால்கெனியில் முகம் இறுகிப்போய் வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தான் யாதவ்.

அவனுக்குள் வேதனை கலந்த குழப்பம்! தான் செய்யப்போவது தவறென்று அறிவான். ஆனால், வேறு வழியில்லை என்ற நிலை அவனுக்கு.

“என்னங்க, சாப்பாடு ரெடி…” என்று தன்னவனை அழைத்தவள், யாதவ் வந்து அமர்ந்ததுமே உணவை பரிமாறிவிட்டு அங்கிருந்து நகர போக, அவள் கையை பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்தவன் உணவை பிசைந்து அவளுக்கு ஊட்டி விட போகவும், அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

‘தான் சொல்வதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்க, அதற்குள் இவரே கண்டுபிடித்துவிடுவார் போல… கிருஷ்ணா!’ என்று மனம் பதறியவள், “என்னங்க, நான் அப்றம் சாப்பிடுறேன்” என்று சொல்லி முடிக்கவில்லை, உணவை அவள் வாயிலே திணித்துவிட்டான் அவன்.

வாந்தி வந்தாலும் முயன்று அதை அடக்கி தன்னவன் ஊட்டிவிட்டதை கஷ்டப்பட்டு மென்று இவள் விழுங்க, அவனோ அவள் விழிகளை நேருக்கு நேர் சந்திக்காது தானும் சாப்பிட்டு அவளுக்கும் ஊட்டி விட்டான்.

சாப்பிட்டு முடித்து யாதவ் அறைக்குள் நுழைந்திருக்க, சமையலறையை சுத்தம் செய்து அறைக்குள் வந்தவளோ அங்கு ஜன்னல் வழியே வெளியே வெறித்துக்கொண்டிருந்த தன்னவனை தான் புரியாது நோக்கினாள்.

அவன் முழங்கையை பிடித்து அவன் தோளில் சாய்ந்தவாறு, “என்ன யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க?” என்று ரித்வி கேட்க, அப்போதும் திரும்பாது வெளியே வெறித்தவாறு, “ஒன்னுஇல்லை ரிது” என்றான் யாதவ் இறுகிய குரலில்.

“என்னங்க, ஏதாச்சும் பிரச்சினையா? ஆஃபீஸ்ல இருந்து வந்ததிலிருந்து இப்படி தான் இருக்கீங்க” என்ற ரித்வியின் பதட்டமான குரலில் அவள்புறம் திரும்பி அவள் கன்னத்தை தாங்கியவன், “அதெல்லாம் ஒன்னுஇல்லை சோடாபுட்டி” என்றுவிட்டு தன்னவளை கைகளில் ஏந்திக்கொண்டான்.

கட்டிலில் படுக்க வைத்து தன்னவளை தன் மார்போடு அணைத்தவாறு அவன் தூங்க, அவன் மார்பில் அழுந்த முத்தம் பதித்தவள் ‘இன்னும் கொஞ்சநேரத்துல பேபிய பத்தி சொல்லி அவரை சப்ரைஸ் பண்ணனும். சோ, தூங்க கூடாது’ என்று நினைத்துக் கொண்டாலும்  அவனின் வருடலில் அவன் மார்பிலே கண்ணயர்ந்துத் தான் போனாள்.

பன்னிரெண்டு மணிக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன், “சோடாபுட்டி… ஏய் சோடாபுட்டி எழுந்திருடி!” என்ற யாதவ்வின் தட்டலில் மெதுவாக கண்விழித்தவளுக்கோ தன் அறையை பார்த்து அத்தனை ஆச்சரியம்!

காகித அலங்காரங்கள், பலூன்களாலே அறை நிறைந்திருக்க, சுற்றிமுற்றி விழிவிரித்து ‘எந்த கேப்புல இதெல்லாம் பண்ணாரு?’ என்று அலங்காரங்களையே அவள் வியந்து பார்த்துக் கொண்டிருக்க, தன்னவளிடம் ஒரு கவரை நீட்டியவன், “ரிது, சீக்கிரம் இதை கட்டிட்டு வா! டென் மினிட்ஸ் மோர்” என்றுவிட்டு இதழில் அழுந்த முத்தமிட, அவளுக்கோ விழிகள் கலங்கிவிட்டது.

அவளின் கலங்கிய விழிகளை புன்னகையுடன் நோக்கியவன், “ஏம்மா, நீ ரெடியாகிட்டு உன் டியர்ஸ் டேப் அ ஓபன் பண்ணு. இப்போ நேரமாச்சு. சீக்கிரம்” என்று குறும்பாக சொல்லிவிட்டு அவளின் முறைப்பை கண்டுக்காது வெளியேற, ரித்விக்கோ  மனதில் ஒருவித படபடப்பு!

‘இன்னும் பத்து நிமிஷத்துல அவரோட குழந்தை என் வயித்துல வளருதுன்னு அவருக்கு தெரிய போகுது. எப்படி ஃபீல் பண்ணுவாரு? என்னை தூக்கி சுத்துவாரா? இல்லை, கிஸ் பண்ணியே என்னை ஒருவழிப்படுத்த போறாரு’ என்று உள்ளுக்குள் ஏதேதோ கற்பனை செய்தவாறு தன்னவன் வாங்கி கொடுத்த டிஸைனர் சேலையில் தயாரானவள், “யது…” என்றழைத்தவாறு அறையிலிருந்து வெளியேறினாள்.

சுற்றி மெழுகுவர்த்தி அலங்காரம்! தன்னவளை பார்த்ததுமே அவளருகில் ஓடிச் சென்ற யாதவ் அவளிடையை வளைத்து அவளிதழில் அழுந்த முத்தமிட்டு அதிலே மூழ்கிப்போக, இந்த அன்னியொன்னியத்திற்கும், சந்தோஷத்திற்கும் பத்து நிமிடமே ஆயுட்காலம் என்பதை அறியாது அவனுக்கு காதலோடு இசைந்துக் கொடுத்தாள் ரித்வி.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!