லவ் ஆர் ஹேட் 27
லவ் ஆர் ஹேட் 27
தேவகியின் வீட்டுக்கு வந்து அறைக் கதவை சாத்தியவள் தான் கதவை திறக்கவேயில்லை. அறை மூலையில் உட்கார்ந்து விடாது அழுதுக் கொண்டிருந்த ரித்விக்கு தன்னவன் செய்த செயலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அடிக்கடி தன் மணிவயிற்றை தொட்டு அவனுடன் ஒன்றாக இணைந்த தருணத்தை நினைத்துப் பார்ப்பவளுக்கு மனம் சொல்லொண்ணா வேதனை!
அப்போது தான் அழுது அழுதே சற்று கண்ணயர்ந்தவள், “ரித்விமா…” என்ற மஹாதேவனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அறைவாயிலில் மஹாதேவனோ ஒருவித தயக்கத்துடன் நின்றிருக்க, இத்தனைநேரம் கதவையே திறக்காதவள் இப்போது கதவை திறந்து, “மாமா…” என்று அழுகையுடன் அழைக்கவும், தேவகிக்கே சற்று ஆச்சரியம் தான்.
அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவர் நடந்ததை பற்றி எதுவும் கேட்காது முதலில் சொன்னதே, “வயித்துல பிள்ளைய வச்சிக்கிட்டு இப்படி சாப்பிடாம அழுது அழுது இருந்தா சரியாம்மா? மொதல்ல சாப்பிடு டா” என்று தான்.
அதில் விம்மி விம்மி அழுதவாறு அவர் நெஞ்சில் சாய்ந்துக்கொண்ட ரித்வி, “என்னை மன்னிச்சிடுங்க மாமா” என்று அழுதவாறு சொல்ல, “இல்லைடா, நீதான் என்னை மன்னிக்கனும். என் குற்றவுணர்ச்சிய போக்கிக்க உன்னை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சி தப்பு பண்ணிட்டேன். என் பையனே உன்னை இப்படி கஷ்டப்படுத்துவான்னு நினைச்சும் பார்க்கல. கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகும்னு நினைச்சேன். என்னை மன்னிச்சிடும்மா” என்று மஹாதேவன் கையெடுத்து கும்பிட்டு தழுதழுத்த குரலில் மன்னிப்பு கேட்கவும், அதிர்ந்துவிட்டாள் ரித்வி.
“அய்யோ மாமா! உங்க மேல தப்பு கிடையாது. நான்தான் முட்டாளா போயிட்டேன். எனக்கு எதுவுமே கொடுத்து வைக்கல. இதோ என் பாப்பா மட்டும் எனக்குன்னு இல்லைன்னா வீட்டிலிருந்து வெளியேறியதுமே எங்கேயாச்சும் போய் செத்திருப்பேன். முடியல மாமா, ரொம்ப கஷ்டமா இருக்கு” என்ற ரித்வியின் வார்த்தைகளில் தேவகியின் கண்கள் கலங்க, மஹாதேவனுக்கோ யாதவ் மீது தான் கோபம், ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே சென்றது.
“ரித்விமா, எல்லாம் சரியாகும் டா. நீ வா! நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று மஹாதேவன் அழைத்ததுமே ரித்வியின் முகத்தில் அத்தனை இறுக்கம்!
‘இல்லை’ எனும் விதமாக அழுத்தமாக தலையாட்டியவள், “இது தான் என்னோட வீடு. என்னை அங்க அழைக்காதீங்க மாமா. நான் வர மாட்டேன்” என்று சொல்லிமுடிக்கவில்லை, “ஏய் ரித்விகா, வெளில வாடி! ரிது, ஏன்டி இப்படி இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்ற யாதவ்வின் கத்தலில் அதிர்ந்து விழித்தாள் அவள்.
மஹாதேவனோ சங்கடமாக, “வெளில தான்ம்மா இருக்கான். ஏதோ புத்திகெட்டு போய் அப்படி பண்ணிட்டான். இப்போ நீ வேணும்னு வந்து நின்னுக்கிட்டு இருக்கான். ரித்விமா, நீ கொஞ்சம்…” என்று மேலும் பேச வர, காதுகளை மூடிக்கொண்டாள் அவள்.
“வேணாம் மாமா, அவர பார்க்க கூட நான் விரும்பல. என்னை மொத்தமா கொன்னுட்டாரு. இப்போ எதுக்கு இங்க வந்திருக்காரு? இன்னும் மிச்சம் மீதி ஏதாச்சும் பாக்கி இருக்கா என்ன? தயவு செஞ்சி அவர கூட்டிட்டு போயிருங்க! அம்மா அப்பாவ இழந்து, கற்பை இழந்து, காதல இழந்து போதும் மாமா… போதும்! இதுக்கு மேல தாங்கிக்க சக்தி இல்லை எனக்கு” என்றுவிட்டு ரித்வி அறைக்குள் அடைந்து கதவை அறைந்து சாத்தியிருக்க, இங்கு யாதவ்வோ வாசலில் நின்று விடாது கத்திக் கொண்டிருந்தான்.
அவனை முறைத்த ஆரன், “எதுக்கு டா இப்படி கத்திக்கிட்டு இருக்க? பாட்டி இருக்காங்கன்னு பார்க்குறேன். இல்லைன்னா அவ்வளவு தான். அதான், அவள துரத்தி விட்டுட்டியே… இனிமேலும் அவ உன் கூட வருவான்னு நினைக்கிற? அதுவும், இப்போ அவ ப்ரெக்னென்டா இருக்கா. இப்படி கத்தி அவள இன்னும் கஷ்டப்படுத்தாம மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” என்று கத்த, அவனை பதிலுக்கு முறைத்த யாதவ், “உனக்கென்னடா? நான் என் பொண்டாட்டிய கூப்பிடுறேன். ஒன்னு அவள என்கூட அனுப்பி வை! முடியலன்னா உன் வேலைய மட்டும் பாரு!” என்று கத்த, கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான் ஆரன்.
“தம்பி, இப்படி வாசல்ல நின்னு கத்திக்கிட்டு இருந்தா எப்படிப்பா? வீட்டுக்குள்ள வாங்க. ரித்விக்கிட்ட பேசிப் பார்க்கலாம்” ஆரனின் அம்மா தமிழரசி சொல்லவும், தன்னவளை பார்க்கும் ஆர்வத்தில் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கப் போனவன், பின் விறைப்பாக நின்றவாறு, “ரிது… ரிது உன்னை பார்க்கனும். உன் கூட பேசனும்” என்று மீண்டும் கத்த, வேகமாக வெளியே வந்தார் மஹாதேவன்.
“கார்த்தி, என்ன இது?” அவர் கண்டிக்க, “அவள வரச்சொல்லுங்க. எனக்கு அவ கூட பேசனும் ப்ளீஸ்ப்பா” என்று யாதவ் சொல்ல, எதுவும் பேசாது அவனையே அழுத்தமாக பார்த்திருந்தார் தேவகி.
“இதோ இந்த குடும்பத்தோட பேசனுமா? பேசட்டும், பழகட்டும். ஆனா, அவ என் கூட இருக்கனும். அவள என் கூட அனுப்பி வைக்க சொல்லுங்கப்பா” யாதவ் தேவகியை பார்க்காது வேறுபுறம் பார்வையை பதித்தவாறு சொல்ல, “தாராளமா அழைச்சிட்டு போ, அவளா இஷ்டப்பட்டு வந்தா… அதுவும், இருபத்தினாழு மணித்தியாலம் தான் உனக்கான நேரம். அதுக்குள்ள வந்தா அழைச்சிட்டு போ! வரலன்னா இங்கேயிருந்து நீ போயிரனும். அதுவரைக்கும் உனக்கு வீட்டுக்குள்ள வந்து இருக்கனும்னாலும் இருக்கலாம். வெளில நிக்கிறன்னாலும் உன் இஷ்டம்” என்ற தேவகி, “மஹாதேவன் நீங்க வீட்டுக்கு போங்க!” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“மருமகள வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது உன் சாமர்த்தியம்!” என்றுவிட்டு மஹாதேவனும் அங்கிருந்து சென்றுவிட, வாசலில் நடந்த பேச்சு வார்த்தையை அறையிலிருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தாள் ரித்வி. அவளுக்கோ அத்தனை ஆத்திரம்!
யாதவ்வோ கைகளை கட்டிக்கொண்டு வீட்டு வாசலிலே நின்றிருக்க, சற்று நேரம் அவனையே பார்த்திருந்தவர்கள் பின் தத்தமது வேலைகளை பார்க்க சென்றுவிட, சலிப்பாக தலையாட்டி ஏளனமாக சிரித்தவாறு அங்கிருந்து நகர்ந்தான் ஆரன்.
‘ஏன் ரிது இப்படி பண்ற? தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்காக இப்படி தான் என்னை பார்க்க கூட பிடிக்காம உள்ள அடைஞ்சி கிடப்பியா? எனக்கு உன்னை பார்க்கனும்டி’ தன்னவளுடன் மானசீகமாக பேசியவன், “ரிது… ரிது… நம்ம வீட்டுக்கு போகலாம். வெளில வா!” என்று மீண்டும் கத்த ஆரம்பிக்க, அப்போது தான் குழந்தைக்காக சாப்பிடவென்று சமையலறைக்கு வந்தவள் அவனின் கத்தலை கேட்டு கோபமாக பற்களை கடித்தாள்.
கஷ்டப்பட்டு சில பழத்துண்டுகளை விழுங்கியவளுக்கு அதற்கு மேல் உண்ணவும் முடியவில்லை. சாப்பிட்ட கொஞ்சநஞ்சத்தையும் ரித்வி வாந்தி எடுத்துவிட, யாதவ்வோ பசி வயிற்றை கிள்ளியும் ஒருசொட்டு தண்ணீர் கூட அந்த வீட்டில் அருந்தக் கூடாதென விறைப்பாகவே வாசலில் நின்றிருந்தான்.
“வாந்தி வந்தாலும் பரவாயில்லை. சாப்பிட்டு வாந்தி எடுக்கச் சொல்!” என்று தேவகி இட்ட கட்டளையில் தமிழரசி அதட்டி, உருட்டி, கெஞ்சி ரித்வியை பழச்சாற்றை குடிக்க வைக்க, அதை அருந்தியவளுக்கு ‘தன்னவன் சாப்பிட்டானா?’ என்ற ஏக்கம் வேறு!
‘ச்சே! அவன் இவ்வளவு பண்ணியும் உன் மானங்கெட்ட மனசு இப்படி தான் யோசிக்குமா?’ தன்னைத் தானே கடிந்துக்கொண்டவள் தன்னவனின் நினைப்பை ஒதுக்கி வைக்க முயன்றாலும் சிந்தனை முழுவதும் அவனின் நினைப்பு தான்.
“உள்ள வந்து ஏதாச்சும் சாப்பிடுங்க தம்பி. எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பீங்க?” என்று கேட்ட பெரியவர்களை சற்றும் கண்டுக்கொள்ளாது ‘தன்னவள் தென்பட மாட்டாளா?’ என்ற ஏக்கத்தோடு யாதவ் உள்ளே எட்டி எட்டி பார்த்தவாறு நின்றிருக்க, நேரம் மதியத்தையும் கடந்துவிட்டது.
தனதறை ஜன்னல் வழியாக யாதவ்வை பார்த்துக்கொண்டிருந்த தாராவிற்கு ஏனோ அவனை பார்க்கவே பாவமாகத்தான் இருந்தது. மெதுவாக ரித்வியிடம் சென்று, “ரித்விக்கா, அவர் சாப்பிடாம வாசல்லையே நின்னுக்கிட்டு இருக்காரு. வீட்டுக்குள்ளேயும் வர மாட்டேங்குறாரு. பார்க்கவே பாவமா இருக்கு. நீங்க வந்து பேசினீங்கன்னா…” என்று இழுத்த தாரா, அடுத்து ரித்வி பார்த்த பார்வையில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாள்.
அடுத்த சில மணிநேரங்களில் வந்த அதிபனும் சந்திரனும் இந்திரனும், யாதவ் நின்றிருந்த கோலத்தை பார்த்து வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டனர்.
“டேய் அறிவுக்கெட்டவனே! ரித்வியோட கோபம் எல்லாம் கொஞ்சநாள் தான். சீக்கிரம் சரியாகிடும். அதுக்காக சாப்பிடாம, குடிக்காம வெயில்ல இப்படி தான் உண்ணாவிரதம் இருப்பியா? உன்னால பசி தாங்க முடியாது யாதவ்” அதிபன் கத்த, “புத்தியில உரைக்குற மாதிரி சொல்லி கூட்டிட்டு போங்க. வீட்டு வாசல்ல நின்னு கத்திக்கிட்டு எங்க வீட்டு மானத்தையே வாங்குறான்” என்று ஆரன் வந்து கடுப்பாக சொல்லவும்,
“மூடிட்டு போடா!” என்ற யாதவ்வின் பதிலில், “இவனெல்லாம் அடங்கவே மாட்டானா?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டான் ஆரன்.
“மருமகனே, அந்த தம்பிய உள்ள அழைச்சிட்டு வாங்க. காலையில வந்தவரு. இன்னும் பச்சதண்ணி கூட குடிக்கல. எடுத்து சொல்லி புரிய வைங்க” என்று கலையரசி சந்திரனிடம் சொல்ல, “ஏன் டா இப்படி பண்ற?” சலிப்பாக வந்தன சந்திரனின் வார்த்தைகள்.
“யாதவ், நீ பண்ண காரியத்துக்கு இவங்க வீட்டு வாசல்ல உன்ன நிக்க வச்சிருக்குறதே பெரிய விஷயம் தான். எதுவுமே உடனே சரியாகாது. ரித்விக்கு கொஞ்சம் டைம் கொடு! சூட்டோட சூடா எல்லாத்தையும் பண்ணிர முடியாது. இப்போ இங்கிருந்து போகலாம். ஒரு இரண்டுநாளைக்கு அப்றம்…” என்று இந்திரன் இழுக்க, யாதவ் கேட்டால் தானே!
“ஏய் ரித்விகா! இவன்கிட்ட எல்லாம் போய் என்னை அட்வைஸ் கேக்க வச்சிட்ட தானே! மொதல்ல என் முன்னாடி வா! அப்றம் இருக்குடி உனக்கு” என்று மீண்டும் அவன் கோபமாக கத்த, “அடக் கடவுளே…” என்று சலிப்பாக சொன்ன இந்திரன், “வா அதிபா! நாம போய் ரித்விக்கிட்ட பேசலாம்” என்று உள்ளே செல்ல போக, அதற்கும் இவன் விட்டபாடில்லை.
“எவனாவது அவ கூட பேசுறேன்னு வீட்டுக்குள்ள போனீங்க… அவ்வளவு தான்” யாதவ் ஒற்றை விரலை நீட்டி மிரட்டிய மிரட்டலில் அவனை முறைத்த அதிபன், “ச்சே!” என்று சலித்தவாறு விறுவிறுவென்று சென்று வண்டியில் அமர, மற்ற ஆடவர்களும் ஒருகட்டத்திற்கு மேல் யாதவ்வுடன் பேசி முடியாது அதிபனுடனே கிளம்பிவிட்டனர்.
யாதவ்விற்கோ ‘எப்படியாவது தன்னவளை பார்த்து பேசிவிட்டால், அவளை தன்னுடன் அழைத்துச் சென்றுவிடலாம்’ என்ற நம்பிக்கை! ஆனால், அவன் ஒன்றை உணரவில்லை, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று…
இரவையும் நேரம் நெருங்கிவிட, “ரித்விமா, வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு ரொம்ப நேரம் சாப்பிடாம இருக்கக்கூடாது. ஒருவாய் சாப்பிட்டுட்டு தூங்கும்மா!” என்று தமிழரசி அழைக்க, லேசாக திறந்திருந்த ஜன்னல் கதவு வழியே தன்னவனை பார்த்தவளுக்கு பரிதாபத்திற்கு பதில் கோபம் தான் வந்தது.
அவள் பார்வை சென்ற திசையை கவனித்து, “அந்த பையன் சாப்பிடவே இல்லை டா. ரொம்ப களைப்பா வேற தெரியுறான். சொல்றதையும் கேக்க மாட்டேங்குறான். உன் கூட பேசியே ஆகனும்னு ஒத்த கால்ல நிக்கிறான். நீ மனசு வச்சேன்னா…” என்று பேசிக்கொண்டே சென்றவரின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளாது, “சாப்பாடு கொண்டு வாங்க அத்தை!” என்று சொல்லி, கொண்டு வந்த உணவை விழுங்கியவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு தான் வந்தது.
எல்லோரும் உறங்க தத்தமது அறைக்குள் நுழைய, மாடியிலிருந்து யாதவ்வையே பார்த்தவாறு நின்றிருந்தார் தேவகி. அவனோ அங்கிருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்றவாறு உள்ளேயே ஏக்கமாக எட்டிப் பார்த்தவாறு நின்றிருக்க, அவனைப் பார்த்தவருக்கு ஏனோ பாவமாக இருந்திருக்க வேண்டும்.
வேலையாளிடம் ஒரு இருக்கையை அவன் பக்கத்தில் வைக்குமாறு அவர் சொல்லி அனுப்ப, அதில் உட்கார்ந்தால் அவன் யாதவ் அல்லவே!
இருக்கையை வேலையாள் வைத்துவிட்டு சென்றதும் அதை முறைத்துப் பார்த்தவன் மீண்டும், “ரிது… ரிது வெளில வாடி! ஏன்டி என்னை இப்படி தவிக்க விடுற?” என்று கத்த ஆரம்பிக்க, தேவகியோ ரித்வியை தான் பார்த்தார்.
அவள் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவரால். இரு கைகளையும் ஊன்றி தரையை வெறித்தவாறு இறுகிய முகமாக அவள் அமர்ந்திருக்க, வேகமாக சென்று வீட்டுக்கதவை சாத்தி தாழிட்டான் ஆரன்.
“ரித்வி, நீ ரூம்க்கு போ! இவன் கொஞ்சம் கூட மாறல்ல. அதே அழுத்தம், பிடிவாதம். அப்படியே நின்னுக்கிட்டு இருக்கட்டும்” என்றுவிட்டு அவன் நகர, ரித்வியும் அவள் பாட்டிற்கு அறையில் சென்று கதவடைத்துக் கொண்டாள். ஆனால் என்ன, தூக்கம் தான் அவளை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது. மனம் முழுக்க அவளவன் நினைவு தான்.
தன்னை சூரையாடியவர்களை கூட அவர்களின் கெஞ்சல்களை பார்த்து மன்னிக்க முடிந்தவளால் ஏனோ தன் காதலுடன் விளையாடிய தன்னவனை மட்டும் மன்னிக்கவே முடியவில்லை. சந்திரனோ அடிக்கடி ஆரனுக்கு அழைத்து விசாரிக்க, ஆரன் சொன்ன பதிலில் ஆடவர்களுக்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல் தான் இருந்தது.
இரவு வெகுநேரம் சென்றிருக்க, திடீரென கதவு தட்டப்படும் சத்தத்தில் கதவை திறந்த துரைவேல் வாசலில் நின்றிருந்த வேலையாளை புரியாது பார்க்க, அவனோ யாதவ் இருந்த இடத்தை தான் பதட்டத்தோடு காட்டினான்.
அங்கு யாதவ்வோ மயங்கி சரிந்திருக்க, பதறிவிட்டார் அவர்.
அடுத்த சில நிமிடங்களிலே வாயில் புகட்டிய நீரிலும், முகத்தில் விசிறியடித்த நீரிலும் மயக்கத்திலிருந்து தெளிந்த யாதவ், சுற்றிமுற்றி கண்களை சுழலவிட்டு நோட்டமிட, அவனை சுற்றி நின்றிருந்தனர் தேவகியின் குடும்பத்தினர்.
“ச்சே! என்னை எதுக்கு வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தீங்க?” என்று அப்போதும் செய்த உதவிக்கு ஒரு நன்றி கூட சொல்லாது யாதவ் பேசிய பேச்சில் உண்டான கோபத்தில் கைமுஷ்டியை இறுக்கி அவனை அடிக்க போன ஆரன், “எல்லாரும் வெளில போங்க!” என்ற ரித்வியின் குரலில் சட்டென்று நின்றான்.
யாதவ்வோ, “ரிது…” என்றழைத்தவாறு அவளிருந்த திசை நோக்கி வேகமாக திரும்பி, “ஏன்டி இப்படி பண்ற? என் முன்னாடி உன்னால வர முடியாதாடி? என்னை மொத்தமா விட்டுட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டவாறு ரித்வியை நெருங்கி அணைத்துக்கொள்ள, அவளிடமோ எந்த பதிலும் இல்லை. பதிலுக்கு அவனை அணைக்கவும் இல்லை.
யாதவ் ரித்வியை அணைத்ததுமே எல்லோரையும் வெளியேறும்படி சைகை செய்த தேவகி, மொத்தப் பேரும் வெளியேறியதும் கதவை சாத்திவிட்டு அங்கிருந்து நகர, யாதவ்வோ தன்னவளின் முகத்தை தாங்கி நெற்றி, கண், கன்னம், இதழ் என வேகமாக முத்தமிட ஆரம்பித்தான்.
“தப்பு பண்ணிட்டேன் தான் ஆனா, கண்டிப்பா என் அன்பு பொய்யில்லை ரிது. என்னை விட்டு போற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திருச்சாடி ம்ம்? முதல்ல நீ வா! நாம நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று யாதவ் பேசிக் கொண்டே செல்ல, விழிகளை உயர்த்தி அவனை அவள் ஒரு பார்வை பார்க்க, அந்த பார்வையை எதிர்க்கொள்ளவே முடியவில்லை அவனால்.
“இங்கயிருந்து போயிருங்க. என்னையும், என் குழந்தையையும் விட்டுருங்க யாதவ்” ரித்வி இறுகிய குரலில் சொல்ல, அதிர்ந்து அவளை நோக்கியவனின் விழிகள் அத்தகைய வார்த்தைகளை கேட்டதும் சட்டென கலங்கின.
“ரிது… ரிது என்ன சொல்ற? என்னால எப்படி உன்னை விட்டு போக முடியும்? நீ வா! என்னால நீ இல்லாம இருக்க முடியலடி” என்று திக்கித்திணறி பேசிக்கொண்டே சென்ற யாதவ்விற்கு, “உங்க நடிப்ப நிறுத்துறீங்களா!” என்ற ரித்வியின் கத்தலில் அப்படியே தூக்கிவாரிப் போட்டது.
“ச்சீ… எல்லாமே பொய்! பொய்! பொய் மட்டும் தான். இன்னும் என்கிட்டயிருந்து என்ன தான் வேணும் உங்களுக்கு? முதல்ல ஆரன் அத்தான வெறுப்பேத்த என்கிட்ட பழகினீங்க. இப்போ, பாட்டிய கஷ்டப்படுத்த என்னை பகடகாயா பயன்படுத்தியிருக்கீங்க. இதோ இந்த குழந்தை கூட…” என்று நிறுத்தி முகத்தை மூடி அழுதவள் பின் கண்ணீரை அழுந்தத் துடைத்து, “போதும்! உங்க நடிப்பு போதும்” என்று கத்த, யாதவ்விற்கோ அத்தனை வேதனை!
“நிஜமாவே நம்ம உறவு பொய்னு சொல்றியா ரிது? உன் காதல என் கோபத்துக்கு பயன்படுத்தனும்னு நினைச்சது உண்மை தான். நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா, நான் உன்கிட்ட வெளிப்படுத்தின அன்பு பொய்யில்லைடி. இது நம்ம குழந்தைடி. உன் குழந்தைன்னு சொல்ற. ப்ளீஸ்டி என்னை புரிஞ்சிக்க!” என்ற யாதவ்வின் குரலில் ‘தன்னவளை இழந்துவிடுவோமோ?’ என்ற பயம்!
“ஓஹோ! உங்கள மட்டும் புரிஞ்சிக்கனும். நீங்க சொல்றபடி நடக்கனும் நீங்க கூப்பிட்டதுமே வரனும். போன்னா போகனும். நான் என்ன ஜடமா? எனக்கு உணர்வில்லையா என்ன? என்னைக்கு நீங்க என்னை புரிஞ்சி நடந்திருக்கீங்க? உங்கள நேர்ல பார்க்குறதுக்கு முன்னால இருந்தே காலிக்கிறேன்னு உங்கள பார்த்த அன்னைக்கு புரிஞ்சிக்கிட்டேன். உங்களுக்காக காத்திருந்தேன். அந்த மீரா கிருஷ்ணனுக்காக காத்திருந்த மாதிரி. நீங்க என்கூட பழகுற விதத்தை காதல்னு முட்டாளா நினைச்சி என் காதல சொல்ல வந்தேன். ஆனா நீங்க…” என்று மேலும் சொல்ல முடியாது நிறுத்திய ரித்வி, முயன்று தன்னை ஆசுவாசப்படுத்தி மீண்டும் தொடர்ந்தாள்.
“மாமாவோட கட்டாயத்துல என்னை கல்யாணம் பண்ணீங்க. வார்த்தையால என்னை கொன்னீங்க. ஆரன் அத்தான் கூட என்னை சம்மந்தப்படுத்தி காயப்படுத்தினீங்க. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். மறுபடியும் என்னை முட்டாளாக்கிடீங்க. எதையும் உணராம என் மொத்த காதலையும் உங்ககிட்ட கொட்டினேன். ஆனா, என்னோட காதலுக்கு தகுதியே இல்லாதவரு நீங்க. என்னை மொத்தமா கொன்னுட்டு, என் நம்பிக்கைய கொன்னுட்டு இப்போ வந்து அன்பு, காதல்னு பேசினா ஏத்துப்பேன்னு எப்படிங்க நினைக்கிறீங்க? எல்லாமே நடிப்பா மட்டும் தான் தெரியுது. என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க. இங்கேயிருந்து போயிருங்க! எனக்கு என் குழந்தை மட்டும் போதும். ப்ளீஸ் போயிருங்க”
என்று கத்தியவாறு ரித்வி அப்படியே மயங்கி சரிய, அவள் பேசியதில் அதிர்ந்துப்போய் பார்த்தவாறு நின்றிருந்தான் யாதவ்.
அறைக்கதவை திறந்துவிட்டு பிரம்மை பிடித்தவன் போல் யாதவ் வீட்டிலிருந்து வெளியேற, ஹோலிலிருந்த ஆரனோ யாதவ்வை பார்த்துவிட்டு வேகமாக அறைக்குள் நுழைந்து தரையில் மயங்கி சரிந்திருந்த ரித்வியை பார்த்து பதறியேவிட்டான்.
“முட்டாள்! முட்டாள்! மயங்கி விழுந்திருக்கா. பார்த்தும் பார்க்காத மாதிரி போறான். இவனா திருந்திட்டான்னு நினைச்சீங்க? இவனெல்லாம் திருந்த வாய்ப்பேயில்லை” என்று ஆரன் கோபத்தில் கத்த, “போதும் ஆரா!” என்று கத்திய தேவகி வேகமாக தன் குடும்ப வைத்தியரை தான் அழைத்தார்.
இங்கு யாதவ் வீட்டிற்குள் நுழைய, தன் மகன், மருமகள் பற்றிய யோசனையில் சோஃபாவில் அமர்ந்திருந்த மஹாதேவன் அவன் பின்னால் தான் ஆர்வமாக பார்த்தார். ஆனால், அவன் வந்ததோ தனியாக அல்லவா! அதை உணர்ந்ததுமே அவர் முகம் வாடிவிட்டது.
“யாதவ், என்னாச்சுப்பா? ரித்வி உன் கூட வரல்லையா என்ன?” என்று சகாதேவன் பேசுவதை கூட காதில் வாங்கிக்கொள்ளாது அறைக்குள் நுழைந்தான் அவன்.
மற்றவர்களோ புரியாது நோக்க, “கார்த்தி…” என்றழைத்தவாறு அறைக்குள் நுழைந்த மஹாதேவனுக்கு அங்கு கைகளை கோர்த்து முட்டியில் ஊன்றி தரையை வெறித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்த தன் மகனை பார்க்கவே பாவமாகத் தான் இருந்தது.
அவனருகில் சென்று, “ரித்வி கூட பேசினியா?” என்று மஹாதேவன் கேட்டதும் தான் தாமதம், தன் இடையை கட்டிக்கொண்டு வயிற்றில் முகத்தை புதைத்து அழும் மகனை பார்த்து அதிர்ந்துவிட்டார் அவர்.
“நான் ஒரு முட்டாள் அப்பா. அவள புரிஞ்சிக்காம எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். நான் அவளை இழந்துட்டேன்ப்பா. என் ரிது என்கிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அம்மா போனாங்க, இப்போ இவளும் என்னை விட்டு போயிட்டா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலப்பா. என் அன்பே பொய்னு நினைக்கிறா. மறுபடியும் அவள என்கிட்ட எப்படி கொண்டு வர்றதுன்னு தெரியல. அவக்கிட்ட போய் பேசுங்கப்பா. என்கிட்ட வர சொல்லுங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று யாதவ் சிறுபிள்ளை போல் அழுது அழுது பேச, மஹாதேவனுக்கே கண்கள் கலங்கிவிட்டது.
தன் தந்தையின் வயிற்றில் முகத்தை புதைத்து அழுதவாறே யாதவ் தூங்கிவிட, அவனை சரியாக படுக்கவைத்து அவன் தலையை வருடியவருக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அடுத்து ஒருவாரம் யாதவ் அறையை விட்டு வெளியவே வரவில்லை. தன்னவளுடன் வாழ்ந்த இனிமையான நினைவுகளை நினைத்தவாறு அவள் நினைவில் எங்கேயாவது வெறித்துக்கொண்டு அவன் தன் நேரத்தை கழிக்க, அதிபன் தான் அறைக்கு உணவை எடுத்துச்சென்று தன் அண்ணனை வற்புறுத்தி உணவை உண்ண வைத்தான்.
இங்கு ரித்வியும் சாதாரணமாக இல்லை. முழுநேரமும் அவளவன் நினைவு தான். எப்போதும் மௌனமாக கண்ணீர் வடிக்கும் தன் பேத்தியை பார்க்கும் தேவகிக்கு மனம் நிலைக்கொள்ளவே முடியவில்லை.
இதற்கு நடுவில் துரைவேல் வேறு தேவகியிடம், “நம்ம வீட்டு பொண்ண இப்படி கஷ்டப்படுத்தியிருக்கான். இதுக்கப்றம் ரித்வியே சம்மதிச்சாலும் எப்படி அந்த பையன நம்பி அனுப்ப முடியும்? அத்தை, நாம வேணா அந்த பையன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டு ஆரனுக்கு ரித்விய கட்டி வைக்கலாம். அந்த பையனோட குழந்தை நம்ம குடும்பத்துக்கு தேவையும் இல்லை. அந்த குழந்தைய மட்டும்…” என்று பேசிக்கொண்டே சென்ற அவரின் வார்த்தைகள் தேவகியின் பொசுக்கும் தீப்பார்வையில் அப்படியே நின்றுவிட்டது.
தேவகிக்கு தெரியாதா என்ன? சொத்தாசை பிடித்த கருப்பு ஆடுகள் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் என்று… ஆனால், அறை வாசலில் நின்று இதையெல்லாம் அரைகுறையாக கேட்ட தாராவிற்கோ தூக்கிவாரிப் போட்டது.
‘அய்யோ! அத்தான அக்காவுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்குறதா சொல்றாங்க. அப்போ நம்ம காதல்? ஏன் கடவுளே எனக்கு மட்டும் இந்த சோதனை? ஏற்கனவே உத்ராவுக்கு அத்தானை கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்கன்னு நாம ஒட்டு கேட்டதுமே உத்ராவ ப்ரைன் வோஷ் பண்ணி வீட்டை விட்டே ஓட வச்சோம். இப்போ…. நோ, இதை விடவே கூடாது. ரித்வி அக்காகிட்ட போய் நம்ம மேட்டர சொல்லிரலாம்’ என்று யோசித்தவாறு ரித்வியின் அறைக்கு சென்ற தாரா, அங்கு தரையை வெறித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்த ரித்வியின் அருகில் அமர, அரவம் உணர்ந்து நிமிர்ந்தவள் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் தாராவை நோக்கினாள்.
“அது ரித்விக்கா, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். எனக்கு சுத்தி வளைச்சி எல்லாம் பேச தெரியாது. எதுவா இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்” என்று தாரா பேச்சை ஆரம்பிக்க, ‘என்ன சொல்றா இவ?’ என்ற ரீதியில் அவளை புரியாது பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவள், “அக்கா, நான் ஆரன் அத்தான இரண்டு வருஷம், நாலு மாசம், பதிமூனு நாளா லவ் பண்றேன். டிஸைன் டிஸைனா என் காதல அவர்கிட்ட வெளிப்படுத்திட்டேன். அவருக்கு தான் புரியவே மாட்டேங்குது. என்னை தவிர எல்லா பொண்ணுங்களையும் சைட் அடிப்பாரு. இப்போ உங்களுக்கு அவரை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு பேசுறாங்க” என்று சொல்லி முடிக்கவும், அதிர்ந்துவிட்டாள் ரித்வி.
“நீங்க தான் எப்படியாச்சும்…” என்று தாரா தயக்கமாக இழுக்க, தன் முகபாவனையை மாற்றி அவளிள் கன்னத்தை செல்லமாக கிள்ளியவள், “உனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் பண்ணி வைக்குறது என் பொறுப்பு. ஆனா, அத்தான் சம்மதிச்சா மட்டும் தான்” என்று சொல்ல, “க்கும்!” என்று நொடிந்துக் கொண்டாள் அவள்.
“அதுக்கு தான் வாய்ப்பேயில்லையே… நான் அவர் கண்ணுக்கு மட்டும் பொண்ணா தெரிய மாட்டேங்குறனோ என்னவோ?” என்று தாரா சலித்துக்கொள்ள, “அதை உன் அத்தான்கிட்டயே கேளு!” என்றுவிட்டு ரித்வி பின்னால் பார்க்கும்படி கண்களால் சைகை செய்ய, தாராவுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
“ஹிஹிஹி… அத்தான்” என்று அசடுவழிந்தவாறு அவள் திரும்ப, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு தன் மாமன் மகளையே முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஆரன்.
அவனின் பார்வையில் ஜெர்க்கான தாரா, “சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் அத்தான். எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. யூ கேர்ரி ஆன்” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியேவிட, “சரியான லூசு!” என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ஆரனும் அங்கிருந்து நகர, இத்தனை நேரம் வரவழைக்கப்பட்ட புன்னகையில் விரிந்திருந்த ரித்வியின் இதழ்கள் சட்டென சுருங்கின.
தன் வயிற்றை வருடி தன்னவனின் நினைவில் ரித்வி கண்ணீர் வடிக்க, தன்னவளின் புகைப்படத்தை பார்த்து அவளின் நினைவில் மௌனமாக அழுதுக்கொண்டிருந்தான் யாதவ்.
–ஷேஹா ஸகி