லவ் ஆர் ஹேட் 29

eiJ5NTJ41507-e8d82515

ரித்வியோ  யாரையும் கண்டுக்காது உடைகளை அடுக்கிக்கொண்டிருக்க, யாதவ்வோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளை முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் என்றால், தன் பேத்தியையே அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருந்தார் தேவகி.

“இப்போ எங்க கிளம்புற? உன் இஷ்டத்துக்கு உன்னை அங்க இங்கன்னு எங்களால விட முடியாது” தேவகி சற்று காரமாகவே சொல்ல, நிமிர்ந்து அவரை முறைத்துப் பார்த்தவள், “அதான், சொன்னீங்களே… உங்க வீட்டை விட்டா மாமா வீடு தான் எனக்குன்னு இருக்குன்னு… அப்போ வேற எங்க போக போறேன்? அங்க தான் போறேன்” என்றதும் யாதவ்விற்கோ ஒரே குஷி தான்.

“வாவ் ரிது! என்னை மன்னிச்சிட்டியா? அப்போ வீட்டுக்கு போறோமா? தேங்க்ஸ் பேபி… தேங்க்ஸ் அ லொட்” யாதவ் உற்சாகமாக சொல்ல, தேவகி தான் சந்தேகமாக புருவத்தை நெறித்தார்.

“பேராண்டி…” என்று யாதவ்வை சுரண்டியவர், “அவ அங்க போனா பிரச்சினை உனக்கு தான். இங்கேயாச்சும் அவள அதட்டி, உருட்டி, மிரட்டி அவ பக்கத்துல உன்னை இருக்க வச்சேன். ஆனா, உன் அப்பா அவ பேச்சுக்கு மறுபேச்சு பேசுவான்னு நினைக்கிற? உன்மேல ஏற்கனவே கோபத்துல இருக்கான். நீ புருஷனாவே இருந்தாலும் ரித்விக்கு பிடிக்கலன்னா அவ பக்கத்துல உன்னை விடவே மாட்டான்” என்று சொல்ல, இப்போது தான் யாதவ்விற்கு தூக்கி வாரிப்போட்டது.

“அய்யோ! என்ன பாட்டி சொல்றீங்க? இப்போ என்ன தான் பண்றது?” யாதவ் பதற, “நீ ரித்வி கூட கிளம்பு! நான் மஹாதேவன்கிட்ட பேசிக்கிறேன். வாழ்த்துக்கள்!” என்ற தேவகி ‘நான் இருக்க பயமேன்?’ என்ற ரீதியில் பேசிவிட்டு அவனை அனுப்பி வைக்க, “தேங்க்ஸ் பாட்டி, அடுத்த தடவை இந்த வீட்டுக்குள்ள நுழையும் போது உங்க பேத்தி கூட கை கோர்த்துக்கிட்டு தான் வருவேன். பாருங்க” என்றுவிட்டு தன்னவளின் பின்னாலே ஓடினான் யாதவ்.

ரித்வியோ தோட்டத்தில் நின்றிருந்த ஆரனிடம், “ஆரன் அத்தான், என்னை மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போங்க” என்று சொன்னவாறு வண்டியில் ஏறப்போக, அதற்குள் ஓடி வந்த யாதவ், “அவன் எதுக்கு இப்போ? அதான் நான் இருக்கேனே… கொஞ்சம் வெயிட் பண்ணு! ஃபோன எடுத்துட்டு வந்துடுறேன்” என்று ஆரனை முறைத்தவாறு சொல்லிவிட்டு உள்ளே ஓடினான்.

அவன் தன் அலைப்பேசியை எடுத்துவிட்டு வேகமாக “ரிது…” என்றழைத்தவாறு தோட்டத்திற்கு வர, அவள் அங்கு அவனுக்காக காத்திருந்தாள் தானே!

ஆரன் யாதவ்வை பழிப்பு காட்டியவாறு வண்டியை உயிர்ப்பித்துச் செலுத்த, அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ரித்வியை பார்த்தவனுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது. “டேய் ஆரா! வண்டிய நிறுத்துடா! என் பொண்டாட்டிய நான் தான் கூட்டி போவேன்” கத்தியவாறு வண்டிக்கு பின்னாலே ஓடிய யாதவ், ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல் மூச்சு வாங்கியவாறு முட்டியில் கை வைத்து நின்றுவிட்டான்.

இங்கு வீட்டுக்குள் நுழைந்த ரித்வியை பார்த்த மொத்தப்பேருக்குமே ஆச்சரியம் கலந்த சந்தோஷம்!

ஓடிவந்து ரித்வியை அணைத்த வைஷ்ணவி, “ஏன்டி என்னையெல்லாம் மறந்துட்டியா என்ன? உன் கூட நான் பேசவே மாட்டேன்” என்று செல்லக் கோபம் புரிய, கலங்கிய கண்களுடன் ரித்வியை நெட்டி முறைத்த ஆண்டாள், “ஏன் ரித்விமா, நாங்க உன்னை நல்லா பார்த்துக்க மாட்டோமா என்ன? இனி நீ எங்கேயும் போக கூடாது” என்று அழுதவாறு சொன்னார்.

ரித்வியோ குற்றம் செய்த குழந்தை போல் பாவமாக நிற்க, அவள் கன்னத்தை தடவியவர், “இரும்மா, நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வர்றேன்” என்று ஆரத்தி கரைக்கச் செல்ல, “குட்டிப்பாப்பா வர போகுது. இனி வீடே கலை கட்ட போகுது” என்று இந்திரன் சொல்லி சிரித்தான் என்றால், மஹாதேவனோ ரித்வியை தான் புருவத்தை நெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

அவள் மறுபடியும் வீட்டுக்கு வந்தது ஒருபுறம் சந்தோஷம் என்றாலும் அவளுடைய திருமணவாழ்வை நினைத்து அத்தனை வேதனை அவருக்கு!

சில நிமிடங்களில் வேகமாக வந்த ஆண்டாள் ரித்விக்கு ஆரத்தி எடுக்கப்போக, “வெயிட் அத்தை, நானும் வர்றேன்” என்று மூச்சு வாங்கியவாறு ஓடி வந்து ரித்வியின் பக்கத்தில் நின்றவனை அதிர்ந்து நோக்கினர் மொத்தப்பேரும். ‘திமிரு பிடிச்சவ!’ என்ற ரீதியில் ஓரக்கண்ணால் யாதவ் தன்னவளை முறைக்க, அவளோ உதட்டை சுழித்து முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஆரத்தி எடுத்து முடித்ததுமே விறுவிறுவென்று தன் மாமாவின் முன் சென்று நின்ற ரித்வி, “மாமா, நான் தனியாவே இருந்துக்குறேன். தயவு செஞ்சி கண்டகண்டவங்கள என் பக்கத்துல விட்டு என் நிம்மதிய கெடுத்துராதீங்க” ஓரக்கண்ணால் யாதவ்வை பார்த்தவாறே சொல்ல, அவனுக்கோ அவள் பேசிய வார்த்தைகளில் முகம் வாடியது என்றால், மஹாதேவனுக்கோ ரித்வி வருவதற்கு முன் தேவகி அழைத்துப் பேசியது தான் நியாபகத்திற்கு வந்தது.

“அது ரித்விமா… அது நான்…” எப்படியாவது தேவகி சொன்னபடி ரித்வியை பேசி சமாளிக்க தான் மனப்பாடம் செய்ததை ஒப்பிக்க அவர் தயாராக, அதற்குள் “ரித்வி, இனி நீ என் அறையில படுத்துக்கோ! நான் உன்னை பார்த்துக்குறேன். முக்கியமா நீ இவ பக்கத்துலயே வர கூடாது” என்று சகுந்தலா ரித்வியிடம் ஆரம்பித்து யாதவ்விடம் காட்டமாக முடிக்க, “அம்மா…” என்று கலங்கிய விழிகளுடன் அவரை நோக்கினாள் ரித்வி.

“குழந்தை பெத்துக்குற வரைக்கும் பாரமானது எதுவும் தூக்க கூடாது. ஆனா, அதுக்காக வேலை பார்க்காம இருக்கவும் கூடாது” அறிவுரை சொன்னவாறு ரித்வியை சகுந்தலா அழைத்துச் செல்ல, மஹாதேவன் உட்பட சுற்றியிருந்தவர்கள்  சகுந்தலாவை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றால், “இந்த நேரத்துல தான் இவ மேல இந்த அத்தைக்கு பாசம் வந்து தொலைக்கனுமா? அடக் கடவுளே!” என்று வாய்விட்டே புலம்பிவிட்டான் யாதவ்.

அறையில் ரித்வியோ ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு நின்றிருக்க, அவளுடைய நினைவுகளோ இங்கு வந்த முதல் நாளிலிருந்து யாதவ்வை திருமணம் செய்து இங்கிருந்து சென்றது வரை ஒவ்வொரு சம்பவங்களாக மீட்டிக் கொண்டிருந்தது.

சுற்றியிருந்தவர்கள் அவன் தவறை உணர்ந்ததாக புரிந்து அவனுக்காக அவளிடம் பரிந்து பேசினாலும், அவளால் அவன் செய்த செயலை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. ‘எங்கு மறுபடியும் முட்டாளாகி விடுவோமோ?’ என்ற பயம் அவளுக்குள்.

சரியாக, “பாப்பாவுக்குள்ள ஒரு பாப்பா” என்ற அதிபனின் குரலில் சட்டென திரும்பிய ரித்வி, எதிரே நின்றிருந்தவனை பார்த்து சங்கடமாக தலைகுனிந்துக் கொள்ள, “என்கிட்டயே உன்னை பத்தி மறைச்சிட்ட தானே சோடாபுட்டி?” சற்று முறைப்புடனே கேட்டான் அதிபன்.

ரித்விக்கோ தன் தோழனிடம் மறைத்துவிட்ட குற்றவுணர்ச்சி!

“நானும் உன்கிட்ட பேச ட்ரை பண்ணேன். பட், நீ கோல் அ அட்டென்ட் பண்ணா தானே! நீயும் ஒரு கோல் கூட பண்ணல்ல. சரி, நேர்ல வந்து பேசுவோம்னு பார்த்தா உன் புருஷன் உன்னை பார்க்க கூட விடாம துரத்தி விட்டுட்டான்” அதிபன் சொல்லவும், “என்னை மன்னிச்சிடு! நான் உன்கிட்ட மறைச்சிருக்க கூடாது” என்று அழும் குரலில் ரித்வி சொல்ல, லேசாக புன்னகைத்துக் கொண்டான் அவன்.

“சரி விடு, உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் சொல்லியிருக்க மாட்டேன் தான். வெளியிலிருந்து பார்க்குறவங்க சுலபமா நீ மறைச்சிட்டேன்னு மதிப்பிடலாம். ஆனா, அந்த நிலையில உன்னோட உணர்வுகள் உனக்கு மட்டும் தான் தெரியும். எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை ரித்விமா. சரி அதைவிடு! நேரத்துக்கு டேப்லட்ஸ் எடுத்துக்குறியா?” என்று கேட்டு ஒரு மருத்துவனாக சில அறிவுரைகளை அவன் வழங்க, தயக்கம் விடுத்து குழந்தையை பற்றி புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்த ரித்வி அடுத்து அதிபன் பேசிய விடயத்தில் முகம் இறுகித்தான் போனாள்.

“யாதவ் மேல ரொம்ப கோபத்துல இருப்பேன்னு தெரியும். ஆனா, இந்த நேரத்துல தேவையில்லாத கவலை, யோசனை இல்லாம இருக்குறது பெட்டர். ஃபிஸிகல்லா மட்டுமில்ல மென்ட்டல்லியும் நீ ஹெல்தியா இருக்கனும். அப்போ தான் குழந்தை ஆரோக்கியமா இருக்கும்” அதிபன் பேசிக்கொண்டே போக, “அப்போ உன் அண்ணனை என் முன்னாடி வர வேணாம்னு சொல்லு அதி” பட்டென்று சொன்னாள் ரித்வி.

அதேநேரம் சரியாக, “என் பொண்டாட்டி பக்கத்துல நான் இல்லாம எவன்டி இருப்பான்?” என்று கேட்டவாறு யாதவ் வர, நெற்றியை எரிச்சலாக நீவிவிட்டுக் கொண்டாள் அவள்.

“நீ இப்படி பண்ணிக்கிட்டு இருந்தா அது ரித்விக்கு தான் மென்ட்டல்லி ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகும். அவள கொஞ்சம் ஃப்ரீ ஆ விடு யாதவ்!” அதிபனின் வார்த்தைகள் சலிப்பாகவே வர, இருவரையும் மாறி மாறி முறைத்துப் பார்த்தவன், “சும்மாவே விட்டுத்தொலைன்னு சொல்றா. நானும் அவ சொல்ற மாதிரி விட்டுட்டுப் போயிட்டேன்னா சனியன் தொலைஞ்சிட்டேன்னு அப்படியே இருந்துருவா. என் பொண்டாட்டிய பார்த்துக்க எனக்கு தெரியும். நீ மொதல்ல வெளில போ! ஆங்… ஒரு முக்கியமான விஷயம். சாப்பிட ஏதாச்சும் கொடுத்து அனுப்பு” என்று அவன் பாட்டிற்கு பேச,

ரித்வியை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு இருபுறம் சலிப்பாக தலையாட்டியவாறு அங்கிருந்து வெளியேறினான் அதிபன்.

யாதவ்வோ, “மை பேபி…” என்று அழைத்தவாறு தன்னவளை நெருங்கி அவள் வயிற்றை வருட வர, அவன் கையை கோபமாக தட்டிவிட்டவள், “என்கிட்ட வாங்கினது பத்தல்லையா என்ன?” என்று நேற்று அறைந்ததை நினைவுப்படுத்தி முறைப்பாக கேட்டாள்.

அவளை இழுத்து தன்னுடன் நெருக்கியவன், “ஏன்டி உன்கிட்ட அடி வாங்கினதும் உன் புருஷன் திருந்திட்டான்னு உன்னை எவன்டி தப்பா நினைக்க சொன்னா? இந்த அழுத்தம், பிடிவாதம் என்கிட்ட இருக்கப்போய் தான் இதோ இப்போ என் கைக்குள்ள நின்னுக்கிட்டு இருக்க. அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போயிர மாட்டேன் சோடாபுட்டி” என்று அவளிதழில் அழுந்த முத்தம் பதிக்க, கோபமாக அவனை தள்ளிவிட்டு புறங்கையால் இதழை அழுந்த துடைத்தவள் “ச்சே!” என்று சலித்தவாறு கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

அதேநேரம் “ரித்வி…” என்றழைத்தவாறு வந்த வைஷ்ணவி உணவுத்தட்டை யாதவ்விடம் கொடுத்துவிட்டுச் செல்ல, உணவுத்தட்டுடன் தன்னவளருகில் அமர்ந்த யாதவ், “நேரத்துக்கு சாப்பிட மாட்டியாடி?” என்று அதட்டலாக கேட்டவாறு உணவை பிசைந்து அவளுக்கு ஊட்ட போக, முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.

“எனக்கு சாப்பாடு வேணாம். தயவு செஞ்சி என் முன்னாடி இருக்காம எங்கயாச்சும் போயிருங்க. எப்படி தான் உங்களால இப்படி நடிக்க முடியுதோ? அப்பப்பா! ரொம்ப தான்” ரித்வி ஏளனமாக சொல்ல, அதை சற்றும் கண்டுக்கொள்ளவில்லை அவன்.

“நீ சாப்பிட்டா என்ன? சாப்பிடலன்னா எனக்கென்ன? என் அம்மு பசியில இருக்கும். குழந்தைக்காக சாப்பிடு!” அவளை சாப்பிட வைக்கவே யாதவ் இவ்வாறு சொல்ல, சட்டென அவனை திரும்பிப் பார்த்து ‘அப்போ குழந்தைக்காக தான் எல்லாமா?’ என்று தன்னையும் மீறி மனதில் எழும் கேள்வியுடன் அவனை நோக்கினாள் ரித்வி.

அவளவனுக்கா அவள் மனதை படிக்கத் தெரியாது?

அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளைப் பார்த்தவன், “நீயும் என் குழந்தை தான்டி. ஆனா என்ன, கொஞ்சம் பெரிய சைஸ் குழந்தை” என்று சொல்லி அவளின் முறைப்பையும் பரிசாக வாங்கிக்கொண்டு, “இப்போ நீ இருக்குற மனநிலையில நம்ம அம்மு தான் உன்னை பார்த்துக்கனும் போல. ஆனா, அதுக்கு நம்ம குழந்தைக்கு தெம்பு வேணும்ல! அதான்…” என்று சொல்ல, முகத்தை கோபமாக திருப்பிக்கொண்டாள் அவள்.

“சாப்பிடு சோடாபுட்டி” என்று யாதவ் உணவை அவள் வாயருகே கொண்டு செல்ல, “அதான் வேணாம்னு சொல்றேன் தானே!” என்று ரித்வி மறுக்க, அவனோ விடுவதாக இல்லை.

“நோ, நீ சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடனும். குழந்தைக்காகவாச்சும் சாப்பிடும்மா” யாதவ் கெஞ்சியவாறு உணவை அவள் வாயில் திணிக்க போக, உணவுத்தட்டை தரையில் விசிறியடித்த ரித்வி, “குழந்தை! குழந்தை! குழந்தை! ஒருவேள, இந்த குழந்தை இல்லைன்னா என்னை தேடி வந்திருப்பீங்களா? அதான் சொல்றேன் தானே! எனக்கு வேணாம்னு… ஏன் என்னை டோர்ச்சர் பண்றீங்க. எல்லாமே நடிப்பு ச்சீ…” என்று ஆவேசமாக கத்த, கலங்கிய விழிகளுடன் தரையில் சிதறியிருந்த உணவையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தான் யாதவ்.

பதிலெதுவும் பேசாது தரையில் அமர்ந்து கீழே சிதறியிருந்த உணவை அவன் கைகளால் அள்ள, அப்போது தான் செய்த காரியம் உணர்ந்தவளுக்கு மனதில் பாரம் ஏறிய உணர்வு! கூடவே, தன்னவனின் வேதனை நிறைந்த முகத்தை பார்க்கும் போது அவளுக்குள் அத்தனை வலி!

“அன்னைக்கு நான் சாப்பாட்டை தரையில கொட்டும் போது உன் முகத்துல கோபத்தை பார்த்தேன். இப்போ அதே தப்பை தான் நீ பண்ணியிருக்க. பட், அதுக்காக எல்லாம் உன்னை விட மாட்டேன். இப்போவே போய் சாப்பாடு கொடுத்து விடுறேன். வேற யாராச்சும் ஊட்டிவிட்டா சாப்பிடுவ தானே! இது குழந்தைக்காக இல்லை உனக்காக” என்றுவிட்டு தன்னவளை நெருங்கி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவன் வெளியேற, கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கியவளின் கட்டுப்பாட்டையும் மீறி கண்களிலிருந்து விழிநீர் வழிந்தது.

அன்றிரவு,

ரித்வியின் அறைக்குள் நுழைய போன சகுந்தலாவை வழிமறித்தவாறு வந்து நின்றான் யாதவ்.

அவரோ அவனை புரியாது பார்க்க, “நீங்க எங்க வர்றீங்க? போங்க போய் உங்க மகள் கூட தூங்குங்க” யாதவ் வைஷ்ணவியின் அறையை காட்டிச் சொல்ல, “நான் என் மகள் கூட தான் தூங்க போறேன்” என்று ரித்வியை காட்டி அழுத்தமாக சொன்னார் சகுந்தலா.

“ஆஹான்! மகள்… உங்க வாயில இருந்து இதை கேக்க நல்லா தான் இருக்கு. ஆனா, அதுக்காக எல்லாம் விட முடியாது. நான் தான் என் பொண்டாட்டி கூட படுத்துப்பேன். நீங்க போய் முதல்ல உங்க புருஷன கவனிங்க!” யாதவ் கேலியாக சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவர், “அவரு வெளியூர்ல இருக்காரு. இதுல நான் எங்க டா கவனிக்க?” என்று சற்று எரிச்சலாகவே கேட்டார்.

“ஆமா… நீங்க உங்க புருஷன தண்ணி தெளிச்சி விட்ட மாதிரி அவர் போக்குக்கு விட்டுடீங்க. அங்க அவரு க்ளப்பிங், டேட்டிங் னு வாழுறாரு” கண்களை உருட்டி யாதவ் சொன்ன விதத்தில் புரியாது விழித்த சகுந்தலா, “டாட்டிங்னா என்ன மருமகனே?” என்று தெரியாது கேட்டார்.

“அதுவா அத்தை… ” என்று நீட்டி முழக்கி சொன்னவாறு அவரை நெருங்கி, “இங்க பசங்க பொண்ணுங்க கூட பார்க், பீச்னு சுத்துவாங்க தானே! அதே தான்” என்று ஹஸ்கி குரலில் யாதவ் சொல்ல,  “என்னப்பா சொல்ற?” என்று அதிர்ந்து நெஞ்சில் கைவைத்துக் கொண்டவர், “இதை தானா அங்க பண்ணிக்கிட்டு இருக்காரு அந்த மனுஷன்? இரு! இரு! இப்போவே கூப்பிட்டு அவர உண்டு இல்லைன்னு பண்றேன்” என்று வைஷ்ணவியை தேடிச்செல்ல, ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டான் அவன்.

அறைக்கட்டிலில் ரித்வி கண்களை மூடி படுத்திருக்க, சேலையினூடாக தெரிந்த வெற்றிடையில் பதிந்த கையில் உணர்ந்த சூட்டில் பட்டென்று கண்களை திறந்தவள், தன் பக்கத்தில் படுத்திருந்தவனை பார்த்து, “அத்தை… அத்தை எங்க?” என்று கேட்டவாறு பதறியபடி எழ போனாள்.

அவளை எழ விடாது தன்னுடன் அணைத்துக்கொண்டவன், “ஏன்டி எப்போ பாரு பதட்டத்துலயே இருக்க? அவங்க அவங்களோட புருஷன கவனிக்க போயிட்டாங்க. நான் என் பொண்டாட்டிய கவனிக்க வந்துட்டேன்” என்று சிரிப்புடன் சொல்ல, அவனை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் அவள்.

அவன் கையை தட்டிவிட்டு அவள் நகர எத்தனிக்க, அவ்வளவு சுலபமாக அவளை விட்டால் அது யாதவ் அல்லவே!

விடாக்கண்டனவன் தன்னவளை தன் கைக்குள் வைத்து, “கொஞ்சம் அமைதியா இருடி, நான் என் பாப்பா கூட பேச போறேன்” என்று சொல்ல, “பாப்பாவுக்கு இப்போ பேசுறது…” என்று அவள் சொல்ல வந்ததையெல்லாம் கண்டுக்கொள்ளவேயில்லை அவன்.

தன்னவளின் மணிவயிற்றை தடவியவாறு, “என் அம்மு, நான் சொல்றதை உன் அம்மாக்கிட்ட சொல்லி புரிய வை டா! நான் அவள ரொம்ப காதலிக்கிறேன். அப்பா தப்பு பண்ணிட்டேன் தான். ஆனா, அம்மா மேல அப்பா வச்ச பாசம் பொய் கிடையாது. அதை அம்மாக்கிட்ட சொல்லு! இப்போ நான் சாப்பிட்டேனான்னு கூட யாரும் கேக்கல. எப்போவும் உன் அம்மா தான் கேப்பா. ஆனா, கோபத்துல இப்போ எல்லாம் கண்டுக்கவே மாட்டேங்குறா. ப்ளீஸ் பாப்பா, அம்மாகிட்ட சொல்லு. ஐ மிஸ் ஹெர் லொட்” என்று பேசிக்கொண்டே சென்ற யாதவ் ரித்வியின் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து தூங்கிப்போக, விழியிலிருந்து வழிந்த கண்ணீரை துடைக்க கூட மனமின்றி தன்னவனையே பார்த்தவாறு தூங்கிப் போனாள் ரித்வி.

இப்படியே நாட்கள் நகரந்து ரித்வி நான்குமாத கருவை சுமந்திருக்க, இப்போது அவளுக்கு ஆரம்பித்தது தலைவலிப் பிரச்சினை. அடிக்கடி நெற்றியை நீவிவிட்டவாறு படுத்திருப்பவளின் மறுப்பையும் மீறி அவள் நெற்றியை மெதுவாக பிடித்து விடுவான் யாதவ்.

தன்னவளுடன் இருப்பதற்காகவே கொழும்பில் பார்த்த வேலையை விட்டவன், ரித்வி தூங்கும் சமயத்தில் மட்டும் மஹாதேவனின் ரைஸ்மில் மற்றும் தோப்பிற்கு மேற்பார்வை பார்க்கச் செல்வான். ஆனாலும் அரைமணி நேரம் வேலைப் பார்த்துவிட்டு தன்னவளை தேடி ஓடியே வந்துவிடுவான் அவன்.

அதுவும், நான்கு மாதம் கடந்தும் அவள் சாப்பிட்டதை வாந்தியெடுக்க, யாதவ் தான், “ரிது மூனு மாசம் தான் வாமிட் பண்ணுவாங்கன்னு சொல்வாங்க. நாலு மாசத்துக்கு மேல ஆகிருச்சி. நீ மட்டும் ஏன்டி வாந்தி எடுத்துக்கிட்டே இருக்க?” என்று கேட்க, அவனை முறைத்துப் பார்த்தவள், “உங்கள யாரும் என் பக்கத்துல இருக்க சொல்லி கெஞ்சல்ல. நீங்களா தான் ஒட்டிக்கிட்டு இருக்கீங்க. அருவருப்பா இருந்தா என் முன்னாடி நிற்காம தொலைஞ்சி போயிருங்க” என்று முகத்திற்கு அடித்தாற் போல் கத்திவிட்டாள் .

அதில் முகம் வாடியவன், “நீயும், அம்முவும் எப்படி எனக்கு அருவருப்பாகுவீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டவாறு அவள் வாந்தியை எந்தவித முகச்சுழிப்புமின்றி சுத்தம் செய்வான். இங்கு, கோபத்தில் திட்டுவிடுபவளோ பின் தன்னவனை காயப்படுத்தியதில் தன்னைத் தானே கடிந்துக்கொண்டு உள்ளுக்குள் மருகிக்கொள்வாள்.

அன்று,

“நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு குறிச்ச நாள் ரொம்ப தள்ளி போயிருச்சி. இதுக்கு மேலயும் கல்யாணத்தை தள்ளி போடுறது எனக்கு சரியா படல” சகுந்தலா தயக்கமாக சொல்ல, யோசனையில் புருவத்தை நெறித்தார் மஹாதேவன்.

“யாதவ் ரித்விக்கு இடையில இப்படி பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்குறப்போ எப்படி வீட்ல விசேஷத்தை நடத்தலாம்னு தான் குழப்பமே… அதிபன் கூட பிரச்சினை சரியானதும் கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சொல்றான். ஆனா, எனக்கும் இப்போ நீ சொல்லும் போது தான் புரியுது” என்று மஹாதேவன் சொல்ல, “எனக்கும் அவங்களோட வாழ்க்கைய நினைச்சி கவலை இருக்கு தான். ஆனா, கல்யாணம் ஆகாம ஒரே வீட்டுல நிச்சயம் பண்ணிட்டு இருக்குறது எப்படி அண்ணா? அதுமட்டுமில்லாம, அவரும் இன்னும் ஒரு வாரத்துல வர போறாராம். வந்ததுமே கல்யாணத்தை நடத்திரலாம்னு சொல்றாரு” என்றார் சகுந்தலா.

“ஆனா சகு, ரித்வியோட வாழ்க்கை இப்படி இருக்குறப்போ…” மஹாதேவன் சொல்லி முடிக்கவில்லை, “என் வாழ்க்கைக்கு என்ன மாமா?” என்ற ரித்வியின் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கு இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.

“மாமா, நான் நல்லா தான் இருக்கேன். நானே உங்ககிட்ட அதி, வைஷு கல்யாணத்தை பத்தி பேசலாம்னு தான் வந்தேன். ஆனா, என்னால தான் நீங்க கல்யாணத்தை இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்குறதா சொல்லும் போது ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு” ரித்வியின் குரல் தழுதழுக்க, “அப்படி இல்லை ரித்விமா, பிரச்சினை எல்லாம் சரியானதும் கல்யாணத்தை வைக்கலாம்னு தான்…” என்று சற்று திணறினார் மஹாதேவன்.

“மாமா, அவர் மேல எனக்கு கோபம் இருக்கு தான். ஆனா, அது புருஷன் பொண்டாட்டிக்கு இடையில நடக்குற சண்டை. இதுக்காக போய் வீட்டு விசேஷத்தை நடத்தாம இருக்கீங்க. அதுமட்டுமில்லாம, இப்போ இருக்குற பிரச்சினைக்கு வீட்டுல ஏதாச்சும் ஃபங்ஷன் நடந்தா மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” ரித்வி சொல்ல, அதற்கு மேல் மஹாதேவன் மறுப்பாரா என்ன?

“கல்யாணத்துக்கான ஏற்பாட்டை இன்னைக்கே ஆரம்பிக்க சொல்றேன்” என்று அவர் சொல்லவும், ரித்விக்கோ அத்தனை சந்தோஷம்!

அன்றே மஹாதேவன் சொன்னது போல் கல்யாண வேலைகள் ஆரம்பிக்க, “இப்போ ஏன்ப்பா கல்யாணம்? அதான் ரித்வியோட பிரச்சினை முடிஞ்சதும்…” என்று ஆரம்பித்த அதிபனை சமாளித்த ரித்வி யாதவ்வை சமாளிக்கத் தான் படாத பாடுபட்டுப் போனாள்.

“யாரைக் கேட்டு கல்யாணத்தை வச்சீங்க? கல்யாண வேலையெல்லாம் என் பொண்டாட்டி தலையில இறக்கினீங்கன்னா அவ்வளவு தான். பேசாம குழந்தை பொறந்ததும் கல்யாணத்தை வைக்க வேண்டியது தானே! என் அம்முவும் அவங்களோட சித்தப்பா கல்யாணத்துல இருந்திருப்பாங்க” என்று வீட்டுக்கு நடுவில் வைத்து கத்திக் கொண்டிருந்தவனை ‘என்ன செய்தால் தகும்’ என்று தான் இருந்தது ரித்விக்கு.

கல்யாண வேலைகள் வேகவேகமாக நடக்க, யாதவ்வோ கொடுத்த கொஞ்சநஞ்ச வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு ரித்வியின் பின்னால் தான் அலைந்துக் கொண்டிருந்தான். இதில் ரித்வியை விட சுற்றியிருந்தவர்களுக்கு தான் ‘அய்யோ’ என்றிருந்தது.

ஆனால், ரித்வியோ யாதவ்வின் செயல்கள் எதையும் கண்டுக்கொள்ளவே இல்லை. அவனும் அவளிடம் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. இதில், நிச்சயதார்த்தத்திற்கே வராத தேவகியின் மொத்த குடும்பமும் திருமணத்திற்காக மஹாதேவனின் வீட்டிற்கு வந்திருக்க, ஊருக்கே ஆச்சரியம் தான்!

ரித்வியின் பக்கத்திலமர்ந்த ஆரன், “குட்டி பாப்பா எப்படி இருக்கு?” என்று சிரிப்புடன் கேட்க, ரித்வி பதில் சொல்வதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்து ரித்வியின் மறுபுறம் அமர்ந்த யாதவ் அலைப்பேசியை நோண்டுவது போல் பாவனை செய்தவாறு, “அதெல்லாம் என் அம்மு நல்லா தான் இருக்காங்க” என்று சொல்ல, ஆரனோ அவனை புரியாது பார்த்தான்.

மீண்டும் ஆரன், “மாத்திரை எல்லாம் கரெக்ட் ஆ போடுறியா ரித்வி? நேரத்துக்கு சாப்பிடுறியா?” என்று அக்கறையாக கேட்க, “பின்ன நாங்க என்ன உங்கள மாதிரியா? உங்க வீட்டுல பண்ற கஞ்சி மாதிரியில்லாம ஹெல்தி ஃபுட் ஆ நேரத்துக்கு சாப்பிட வச்சி என் பொண்டாட்டிய கவனிச்சிப்பேன் நான்” யாதவ் இப்போதும் இடையிட்டு சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள் ரித்வி.

நெற்றியை நீவிவிட்டுக்கொண்ட ஆரன், “கொஞ்சநாளைக்கு வீட்டுல வந்து தங்கலாமே…” என்று சொல்ல, “அத்தான் அது…” என்று பேச வந்த ரித்வியை பேசவிடாது சடாரென திரும்பி ஆரனை முறைத்தவன், “ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன். அப்படியே அவ வந்தா நானும் கூட வருவேன்” என்று சிறுகுழந்தை போல் நடந்துக்கொள்ள, ரித்வியோ இப்போது வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டாள்.

“இவரெல்லாம் திருத்தவே முடியாது. ச்சே!” என்று சலித்தவாறு அவள் எழுந்துச்செல்ல, ஆரனை ஒற்றை புருவத்தை உயர்த்தி கோலரை தூக்கிவிட்டுக்கொண்டு கேலியாக ஒரு பார்வை பார்த்த யாதவ், “ரிது…” என்றழைத்தவாறு தன்னவளின் பின்னாலே செல்ல, இருபக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான் ஆரன்.

ஷேஹா ஸகி