லவ் ஆர் ஹேட் 31

ei6Q8M071635-d0d1e1c3

நாட்கள் அதன்போக்கில் நகர, ரித்வி யாதவ்விற்குமிடையில் தான் எந்த மாற்றமுமில்லை. நடாஷா பேசிச்சென்றதிலிருந்து மனதிலிருந்த பாரம் இறங்கிய உணர்வு அவளுக்கு. இருந்தாலும், தன்னவனை நெருங்குவதில் ஏதோ ஒரு தடை. பயம் என்று கூட சொல்லலாம்.

அவன் அவளுக்காக செய்யும் ஒவ்வொன்றையும் அவள் மனம் ஏற்க, மூளை பயந்து மறுக்க, சட்டென ‘நடிப்பு’ என காயப்படுத்திவிடுபவள் அவன் ஒதுங்கினாலும் வார்த்தைகளாலே அவனை கொலை செய்தாள். ஆனால், யாதவ்வோ தன்னவளின் வார்த்தைகளை சற்றும் கண்டுக்கொள்ள மாட்டான். தன்னுடைய காதலை அவள் மறுக்க மறுக்க திணிப்பவன் அவளின் காதலை எதிர்பார்க்கவேயில்லை.

‘எதிர்ப்பார்ப்பு இருந்தால் தானே காயம்’ என அவளின் சிறுகாதல் பார்வையை கூட எதிர்ப்பார்க்காது மனதை கட்டுப்படுத்தி அவன் வைத்திருந்தாலும், மனிதமனம் எதிர்ப்பார்க்காமல் இருக்குமா என்ன? அந்த ஏக்கத்தை தீர்க்க குழந்தையுடன் பேசும் சாக்கில் தன்னவளை சீண்டி விளையாடுவான் அவன்.

ஆரம்பத்தில் தன்னவன் தனக்காக செய்யும் ஒவ்வொன்றையும் மறுக்கும் ரித்வி, இப்போதெல்லாம் அவனிடம் வாக்குவாதம் புரியாது மறுக்காது ஏற்றுக்கொள்ள, அவள் மறுத்தாலும் அவளை ஏற்க வைத்திருப்பான் அவளவன் என்பது வேறுகதை.

தான் செய்த தவறுக்கு அவள் வார்த்தைகள் கொடுக்கும் காயங்களை தண்டனையாக யாதவ் நினைக்க, அவனை சுற்றியிருப்பவர்களுக்கு தான் வியப்பு!  ஆனாலும், அந்த பொறுமையும், தன்மையும் தன்னவளிடம் மட்டும் தான் அவனுக்கு! மற்றவர்களிடம் அதே ஹிட்லர் யாதவ் தான்.

இங்கு ரித்விக்கு நாட்கள் செல்ல செல்ல கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளும் அதிகரித்தன. தாய்மை என்ன சும்மாவா? பிள்ளையை சுமக்கும் தாய்மார்கள் தன் பிள்ளைக்காக அவ்வலியை சுகமான வலியாக தாங்கிக்கொண்டாலும், உடல்வலியை உணரத்தானே செய்வர்.

இரவில் தூங்க முடியாது தவிப்பவளை பாவமாக பார்ப்பவன் அவளின் மறுப்புக்களையும் மீறி அவளின் வயிற்றை மெதுவாக வருடிவிட்டு, காலை பிடித்துவிட்டு தன்னவள் நிம்மதியாக தூங்கும் வரை விடிய விடிய விழித்திருப்பான். அதுவும், அவன் அம்முவுடன் மெதுவாக பேசிக்கொண்டே…

இவ்வாறு ஐந்துமாதம் முடிந்து ரித்விக்கு ஆறாவது மாதம் ஆரம்பித்திருக்க, அன்று, அறைக்குள் வேகமாக நுழைந்த யாதவ், “ரிது, ரெடியாகிட்டியா, போகலாமா?” என்று இடது மணிக்கட்டில் கைகடிகாரத்தை கட்டியவாறு கேட்க, “நீங்க எதுக்கு வர்றீங்க?” என்று சலிப்பாக வந்தன ரித்வியின் வார்த்தைகள்.

“என்ன கேள்வி இது? நான் இல்லாம…” யாதவ் முடிக்கவில்லை, அவனை பேசவிடாது, “உங்க நடிப்ப மத்தவங்க நம்பலாம். நானும் என் குழந்தையும் நம்ப மாட்டோம். செக்அப்க்கு நான் தனியாவே போயிக்கிறேன்” ரித்வி வார்த்தைகளை கடித்துத் துப்ப, உள்ளுக்குள் மனமுடைந்தாலும் கண்களை அழுந்த மூடித்திறந்து தன்னை சமன்படுத்தியவன், வலியுடன் கூடிய புன்னகை புரிந்தான்.

மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு அவளை நெருங்கி நின்று, “வார்த்தையால ரொம்ப தான்டி கொல்லுற. ஆமாடி நான் நடிக்கிறேன்னு வச்சிக்கோ! ஆனா, உனக்கு பிடிக்குதோ, இல்லையோ? நான் பக்கத்துல தான் இருப்பேன். நீ சகிச்சிக்கிட்டுத் தான் ஆகனும். ஆனா ஊனா என் குழந்தை என் குழந்தைன்னு சொல்ற. நம்ம குழந்தைடி அது. தலைகீழா நின்னு நீ தண்ணி குடிச்சா கூட அதை மாத்த முடியாது” அழுத்தமாக சொன்ன யாதவ், “சீக்கிரம் வா! வெளியில வெயிட் பண்றேன்” என்றுவிட்டு வெளியேறியிருக்க,

போகும் அவனையே கலங்கிய விழிகளுடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி.

மருத்துவமனையில்,

“இவர வெளியில போக சொல்லு அதி” ரித்வி யாதவ்வை முறைத்தவாறு சொல்ல, “டேய் அண்ணா…” என்று பேச வந்த அதிபன் யாதவ்வின் முறைப்பில் கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டான்.

யாதவ்வோ தன்னவளை விட்டு சற்றும் நகராது பக்கத்திலே நின்றுக்கொள்ள, பெண் தாதி ஒருவர் ரித்வியின் வயிற்றில் ஜெல் போன்ற ஒரு திரவத்தை தடவி ஸ்கேனிங் உபகரணத்தை கொண்டு வயிற்றை அழுத்தி அழுத்தி ஸ்கேன் செய்ய, அதிபனோ திரையையே கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய இதழில் புன்னகை! தங்கள் வீட்டு வாரிசு அல்லவா!

“ரித்விமா, குழந்தை நல்ல ஆரோக்கியமா தான் இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல முழுசா வளர்ந்துரும்” அதிபன் புன்னகையுடன் சொல்ல, கணவன் மனைவி இருவருமே திரையில் தெரிந்த தம் குந்தையை தான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

கலங்கிய விழிகளுடன் “என் பட்டு…” என்று மெதுவாக அழைத்தவாறு குழந்தையை பார்த்துக்கொண்டிருந்த ரித்வி, “என் அம்மு…” என்ற தன்னவனை பட்டென்று திரும்பி முறைத்துப் பார்த்தாள். “குழந்தை பொண்ணா பையனான்னே இன்னும் தெரியல. அதுக்குள்ள அம்மு, பொம்முன்னு சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது!”  கேலியாக சொன்னவள் அடுத்து  அதிபன் சொன்ன, “ஆமா, யாதவ்வோட அம்முவே தான்” என்ற வார்த்தைகளில் தன்னவனை அதிர்ந்து நோக்கினாள்.

யாதவ்வோ ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி தன்னவளை கெத்தாக ஒரு பார்வை பார்க்க, அதை தன்னை மீறி ரசிக்கத்தான் செய்தாள் ரித்வி.

“ஆமா… குழந்தை உதைக்குமா ரித்வி?” அதிபன் கேட்க, ரித்வி பேசுவதற்குள், “இன்னும் இல்லைடா” என்று இடைவெட்டி சொல்லிவிட்டு வயிற்றிலிருந்த குழந்தையிடம், “அம்மு, அப்பா உன்னை தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் அப்பாக்கிட்ட வருவீங்களாம்… நாங்க உலகம் பூரா சுத்துவோமாம்… பட், உன் உம்முணா மூஞ்சி அம்மாவ மட்டும் விட்டுட்டு போயிரலாம்” யாதவ் பேசிக்கொண்டே போக, திரையையும் யாதவ்வையும் மாறி மாறி பார்த்தான் அதிபன்.

“யாதவ், நீ பேசும் போது குழந்தையோட அசைவுல வேகம் தெரியுதுடா. உன் டிரெக்ஷனுக்கு திரும்புறா. உன் குரல் அவளுக்கு ரொம்ப தெரிஞ்சிருக்கு. டூ யூ ஃபீல் ரித்வி?” அதிபனின் வார்த்தைகள் ஆச்சரியமாக வர, மேலும் கீழும் தலையசைத்தவாறு தன்னவனையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

யாதவ்வின் உணர்வுகளை விளக்கவா முடியும்? வானத்தில் பறப்பது போன்ற உணர்வு அவனுக்கு!

தன் குரலை தன் உயிர்நீரில் உருவான ஜீவன் செவிமடுக்குதா? என்ற அவனின் கேள்விக்கான விடையே ஒரு தந்தையாக அவனை அத்தனை சந்தோஷத்தில் ஆழ்த்த, “அம்மு…” என்று தன்னவளின் வயிற்றை நெருங்கி அவன் அழைத்ததும் தான் தாமதம், குழந்தை சட்டென்று உதைக்க, ரித்விக்கோ கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

“என் குழந்தை உதைக்குது” ரித்வி சந்தோஷம் கலந்த அழுகையுடன் சொல்ல, “நம்ம குழந்தை சோடாபுட்டி” என்று திரையில் தெரிந்த குழந்தையை கலங்கிய விழிகளுடன் பார்த்தவாறு சொன்னவன் யாரையும் கண்டுக்காது ரித்வியின் நெற்றியில் முத்தமிட்டு, “அம்மு அவளோட அப்பாவ ஃபீல் பண்றா ரிது. என் அம்மா என்கிட்ட திரும்பி வர போறாங்க” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவனையே பார்த்திருந்தவளுக்கு இத்தனைநாள் புதைந்திருந்த தன்னவனின் மீதான காதல் மீண்டும் உயிர்ப்பெற்ற உணர்வு!

இருவரும் வீட்டுக்குள் நுழைய, “என்னம்மா, டோக்டெர் அதிபா என்ன சொன்னாரு? குழந்தை எப்படி இருக்கு?” சகுந்தலாக ஆர்வமாக கேட்க, ரித்வி பதில் சொல்வதற்கு முன்னே அவளை இடைவெட்டி, “ஆங்…  அதெல்லாம் என் அம்மு நல்லா தான் இருக்கா. ஆனா, உங்க பொண்டாட்டி முகத்துல சிரிப்பில்லை. இப்படியே இருந்தா குழந்தையும் இவள மாதிரி அழுகாச்சியா, முசுடா பிறக்கும்னு சொன்னாங்க” என்று கேலியாக சொன்னவாறு அறைக்குள் நுழைந்தான் யாதவ்.

சுற்றியிருந்தவர்களோ அவனுடைய கேலிப்பேச்சில் வாய்விட்டே சிரித்தார்கள் என்றால், வெளியில் ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்ட ரித்வி உள்ளுக்குள் சிரிக்கத்தான் செய்தாள்.

அன்றிரவு, உணவை முடித்துவிட்டு மாடிக்குச்சென்று வானத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்த ரித்வி, சட்டென கேட்ட “நான் பேசலாமா ரித்விமா?” என்ற மஹாதேவனின் குரலில் திடுக்கிட்டுத் திரும்ப, “இந்த நேரத்துல இப்படி எல்லாம் பதட்டப்படக் கூடாது. உன்னோட உணர்வுகள் குழந்தையையும் தாக்கும்” என்று சொன்னவாறு அவளருகில் அமர்ந்தார் மஹாதேவன்.

அவளோ புன்சிரிப்புடன், “சொல்லுங்க மாமா…” என்று சொல்ல, தயக்கமாக அவளை ஏறிட்டவர், “கார்த்தி…” என்று ஆரம்பிக்க, கை நீட்டி தடுத்தவள், “என்ன… எப்போவும் போல அவர் திருந்திட்டாரு, மாறிட்டாரு அதானே!” என்று சற்று கடுப்பாகவே கேட்டாள்.

அழுத்தமாக ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டிய மஹாதேவன், “உன் புருஷன் யாதவ பத்தி இல்லைடா, என் கார்த்திய பத்தி சொல்ல வந்திருக்கேன்” என்று சொல்ல, அவரை கேள்வியாக நோக்கினாள் ரித்வி.

“அவனுக்கு மூனு வயசா இருக்கும்போதே சாரு இறந்துட்டாம்மா. அதி குழந்தை. அவன் தாய் பாலுக்காக அழுவான். சகு எப்படியோ அவனை சமாளிச்சிருவா. ஆனா, கார்த்தி அப்படியில்லை. அம்மாவ பார்க்கனும், அம்மா வேணும்னு ரொம்ப அடம்பிடிப்பான். அவன் அழுகுறதை பார்க்கவே கஷ்டமா இருக்கும். அந்த அம்மாவோட பாசத்தை அவன் என்கிட்ட கூட உணரல்லை. ஆனால் உன்கிட்ட அதை உணர்ந்திருக்கான்.

உனக்கு ஒன்னு தெரியுமா ரித்விமா? தப்பே பண்ணாலும் அவனோட பிடிவாதம் அவன் தவறை உணர விடாது. ஆனா, தப்பை ஒத்துகிட்டு, நீ திட்டுற திட்டெல்லாம் பொறுமையா கேட்டுக்கிட்டு உன்கிட்ட காதல எதிர்ப்பார்க்காம அவன் உன்னை கவனிக்கிறத பார்க்கும்போது ஆச்சரியமா இருக்குடா. அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான். முக்கியமான விஷயம், எப்போவும் சிரிச்சிக்கிட்டே இரு! ஒருவேளை கார்த்தி சொன்ன மாதிரி குழந்தை அழுகாச்சியா பிறந்திருச்சின்னா?”

ஆரம்பத்தில் தன் மகனை பற்றி பேசி இறுதியில் கேலியாக முடித்துவிட்டு சிரித்தவாறு மஹாதேவன் நகர்ந்திருக்க, அவர் பேசியதையே கேட்டுக் கொண்டிருந்தவளின் விழிநீர் கண்களை குளம் கட்டி நின்றிருந்தது.

அன்றிரவு ரித்விக்கு தூக்கமே இல்லை. இடுப்பிலிருந்து முள்ளந்தண்டு வரை அத்தனை வலி! இதில் கால்கள் வேறு வலியில் கடுகடுக்க, திரும்பி தூங்க கூட முடியாமல் இருந்தவளுக்கு ஏனோ வலியில் கண்கள் கலங்கத்தான் செய்தன.

சட்டென்று கால்களில் உணர்ந்த தொடுகையில் கண்களை பட்டென்று திறந்து ரித்வி நிமிர்ந்து பார்க்க, அவள் கால்களை இதமாக பிடித்து விட்டுக் கொண்டிருந்தான் யாதவ்.

“விடு… விடுங்க” அவள் அவனின் கையை தட்டிவிட, அதை கேட்பானா அந்த பிடிவாதக்காரன்! “அம்மு, அம்மாவ அமைதியா இருக்க சொல்லு! வலிக்குதுன்னா வாய திறந்து சொல்ல வேண்டியது தானே! நான் எதுக்கு இருக்கேன்?” செல்லமாக திட்டியவாறு  அவளின் பாதங்களை அவன் பிடித்துவிட, அது அவளுக்கு அப்போது தேவைப்பட்டது போலும்!

முதலில் மறுத்தவள் பின் அமைதியாக அவனையே பார்த்திருக்க, அவளின் நினைவுகளோ அவனுடன் வாழ்ந்த இனிமையான நாட்களை தான் மீட்ட ஆரம்பித்தன.

தன்னை மீறி, “ஏன் இப்படி பண்ணீங்க யது?” என்று அவள் இதழ்கள் அவனிடத்தில் முறையிட்டு விட, சட்டென நிமிர்ந்தவனின் கண்களில் தவறு செய்ததற்கான குற்றவுணர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

தன்னவளின் அருகில் வந்து அவளை லேசாக அணைத்து அவளின் கன்னத்தோடு கன்னத்தை வைத்து படுத்த யாதவ், எதுவும் பேசவில்லை. ஆனால் லேசாக கசிந்த அவனுடைய விழிநீர் அவளின் கன்னத்தில் பட்டு ஈரமாக, அதை உணர்ந்தவளுக்கு ஏனோ அவனை கட்டி அணைத்து அவன் மார்பில் ஒன்று விடலாம் என்றுதான் தோன்றியது.

ஆனால், ஏதோ ஒரு திரை இருவருக்குமிடையில்…

இவ்வாறு நாட்கள் நகர அவளின் வயிற்றில் இருந்த அவர்களின் அம்முவும் நன்றாகவே வளர்ந்திருந்தது. அதுவும், பிரசவம் நெருங்க நெருங்க ரித்வி சிரமப்பட்டதை விட அவளை கவனிப்பதில் யாதவ் தான் படாதபாடுபட்டுப் போனான்.

முன்புபோல் வார்த்தைகளால் காயப்படுத்தாவிடினும் சிலநேரம் அவன் மேல் உருவாகும் கோபத்தில் குழந்தையை சாக்காக வைத்து அவனை உட்கார விடாது வேலை வாங்கியே தன்னவனை ஒருவழிப்படுத்தி விடுவாள் ரித்வி.

அன்று கூட வேண்டுமென்று அவனைப் பழிவாங்கவே ‘தனக்கு அது வேண்டும். இது வேண்டும்’ என்று அவள் கேட்டுக்கொண்டே செல்ல, அவனும் கொஞ்சமும் சலிக்காது அவள் கேட்பதையெல்லாம் செய்துகொண்டே போனான். அதுவும் சுகப்பிரசவமாக அமைவதற்காக சகுந்தலா சில வேலைகளை ரித்வியிடம் செய்யச் சொல்ல, பாதி வேலையை செய்பவள் பின் அந்த வேலையை யாதவ்விடமே ஒப்படைத்து விடுவாள்.

வேண்டுமென்று தரையில் எதையாவது கொட்டி அவனை துடைக்க சொல்வது, சாப்பிட்டதை அவன் மேலேயே வாந்தி எடுப்பது என்று அவள் செய்யும் சேட்டைகளை யாதவ்வும் அறியாமலில்லை.

அவள் கோபத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்துகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவள் சொல்வதை எந்தவித முகச்சுழிப்புமின்றி சிறப்பாக செய்து முடிப்பவன், சில நேரங்களில் அவள் உதட்டை சுளித்து முறைக்கும் அழகை வெளிப்படையாக ரசிக்க கூட செய்வான்.

இவ்வாறு ரித்விக்கு ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதமும் ஆரம்பித்தது.

தூரத்தில் நடந்து வரும் தன் மனைவியை யாதவ் ரசித்து கொண்டு நிற்க, அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்து, “சொந்த பொண்டாட்டிய தூரத்திலிருந்து சைட் அடிக்கிற புருஷன் வடிவேலுக்கு அப்புறம் நீயாதான் இருப்படா” என்று இந்திரன் சொல்லி சிரிக்க, அவனின் புறம் பார்வையை திருப்பாது தன் மனைவியை பார்த்தவாறே, “உனக்கென்னடா தெரியும் இதைப்பத்தி சிங்கிள் பயலே? மூடிட்டு போடா!” என்று திட்டினான் யாதவ்.

“அவமானப்பட்டான் ஆட்டோகாரன்!”  என்று தன்னைத் தானே கடிந்து கொண்டு, ‘எலிம்மா, எங்கமா இருக்க? வாணரம் ஆயிரம் சூர்யா மாதிரி சீக்கிரம் கிட்டாரோட உன்னை தேடி வர்றேன். இந்த மாதிரியான பேச்சையெல்லாம் காது கொடுத்து கேக்க முடியல’ என்று ஹெலனை நினைத்து புலம்பியவாறு நகர்ந்தான் இந்திரன்.

ஆனால், சுற்றியிருந்தவர்களின் பார்வையை எல்லாம் யாதவ் கண்டுகொள்ளவே இல்லை. மூக்குக் கண்ணாடியை சரி செய்தவாறு தன் ஏழுமாத வயிற்றை தள்ளிக்கொண்டு வரும் ரித்வியை பார்ப்பவனுக்கு சிலநேரம் சிரிப்பு கூட வரும்.  

அதுவும் அன்று முதல் தடவை உதைத்ததிலிருந்து அவனுடைய அம்மு இப்போது அடிக்கடி உதைப்பது மட்டுமின்றி, அசைவும் முன்னர் இருந்ததை விட அதிகமாகவே தெரிய, யாதவ்வோ தன் மகளுடனே தான்.

சிலநேரம் உடல்வலியின் போது ஒரு தாயாக ரித்வி அதை சுகமான வலியாக நினைத்துக்கொண்டாலும், அவள் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பவன் தான், ‘ஒரு குழந்தையே போதும். ரிது ரொம்ப கஷ்டப்படுறா’ என்று தனக்குள்ளே தன் மனைவியை பாவமாக நினைத்துக் கொள்வான். ஆனால், தாயிற்கு தன் குழந்தை சுமையா என்ன?

ரித்வியின் பிரசவம், அதி வைஷு திருமணம் என சந்தோஷத்திலிருந்த குடும்பத்திற்கு அடுத்த சந்தோஷமாக உத்ரா கருத்தரித்திருக்க, இரண்டு வீடுகளிலும் கொண்டாட்டம் தான். 

 

இதில் இந்திரனோ, “டேய்! நீ சித்தப்பா ஆக போற” என்று சந்திரன் சொன்னதை கேட்ட அடுத்தநாளே பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு யாதவ்விடம் காலில் விழாத குறையாக கேட்டு எடுத்த நடாஷாவின் கொழும்பு வீட்டு விசாலத்தை வைத்து வீட்டிலிருந்து புறப்பட்டிருந்தான். 

“ஏதாச்சும் ஒரு வெள்ளைக்காரிய கூட்டிட்டு வந்து வீட்டு வாசல மிதிச்ச… நான் உன்னை மிதிப்பேன்டா” என்று சகாதேவன் கத்திய கத்தலையெல்லாம் காதிலே வாங்கிக்கொள்ளவில்லை அவன்.

இவ்வாறு நாட்கள் ஓட, அன்று வேகமாக வீட்டுக்குள் நுழைந்த யாதவ் வீட்டுப் பெரியவர்களிடம், “வளைக்காப்புன்னா என்ன?” என பட்டென்று கேட்க, அவர்களோ ஒருவரையொருவர் புரியாது பார்த்துக் கொண்டனர்.

சற்று

நேரத்திற்கு முன் தோப்பிலிருந்த யாதவ்விடம் வந்த பெரியவரொருவர், “உன் பொண்டாட்டிக்கு ஏழாவது மாசம் ஆரம்பிச்சிருச்சே… இன்னுமா வளைக்காப்பு பண்ணல்ல?” என்று கேட்டதன் விளைவு தான் யாதவ்வின் இந்த கேள்வி.

ஆண்டாளோ பொறுமையாக வளைக்காப்பு பற்றி சொல்ல, யாதவ்விற்கோ அத்தனை சந்தோஷம்!

“அப்போ இன்னும் ஒருவாரத்துல என் பொண்டாட்டிக்கு வளைக்காப்பு. சீக்கிரம் எல்லா ஏற்பாட்டையும் பண்ணுங்க!” யாதவ் பட்டென்று சொல்ல, ஏற்கனவே இதைப்பற்றி தான் யோசனையிலிருந்த பெரியவர்களும் யாதவ் சொன்னதுமே வேலையை ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், இதையெல்லாம் உடனே ஒத்துக்கொண்டால் அது ரித்வி அல்லவே! கூடவே, அவள் மறுப்பை சாதாரணமாக ஏற்றுக்கொண்டால் அது யாதவ்வும் அல்லவே!

“உனக்கு பிடிக்குதோ, இல்லையோ? என் அம்மு உன் கையில போடுற வளையல் சத்தத்தை கேட்டே ஆகனும்” அழுத்தமான யாதவ்வின் வார்த்தைகளை மீறி செல்லுபடியாகுமா ரித்வியின் மறுப்பு!

ஒரே வாரத்தில் அவசர அவசரமாக ஏற்பாடுகளை முடித்து, அன்று ரித்விக்கு வளைக்காப்பு. மஹாதேவனின் வீடே விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு சொந்தபந்தங்களால் நிறைந்து இருந்தது.

இங்கு அறையிலிருந்த ரித்விக்கோ பாதங்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு மேடிட்ட வயிறு மறைக்க, புடவையை ஒரு சுற்று சுற்றுவதற்குள்ளேயே அவளுக்கு மூச்சு வாங்கிவிட்டது. மடிப்புக்களை எடுக்க முடியாது கட்டிலில் பாவாடை சட்டையுடன் அப்படியே அமர்ந்தவள், “ச்சே! ஒரு புடவை கூட கட்ட முடியல. படபடன்னு இருக்கு. அம்மு, என்னை ரொம்ப தான் படுத்துற” வாய்விட்டே புலம்பியவாறு இருக்க, அறைக்குள் வேகமாக நுழைந்தான் யாதவ்.

தன்னவனை கண்டதுமே திடுக்கிட்டு புடவையால் தன்னை மறைத்துக்கொண்டவாறு, “கதவை தட்டிட்டு வரனும் என்கிற மேன்னர்ஸ் கூட தெரியாதா உங்களுக்கு?” கோபமாக ரித்வி கத்த, ‘க்கும்! ரொம்ப தான்’ என்று நொடிந்துக்கொண்டவன், “என் ரூமுக்குள்ள நுழைய எதுக்குடி நான் மேன்னர்ஸ் பார்க்கனும்?” என்று அதட்டலாகவே கேட்டான்.

அவளோ அவனை முறைத்து, “அத்தை இல்லைன்னா சகு அம்மாவ வர சொல்லுங்க. சீக்கிரம்” என்று அவசரப்படுத்த, நாடியை நீவிவிட்டவாறு அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன், “எதுக்கு?” என்றொரு கேள்வியை கேட்டு வைத்தான்.

“ச்சே! நம்ம நிலைமை புரியாம இவர் வேற…” எரிச்சலாக நெற்றியை நீவிவிட்டவாறு வாய்விட்டே முணங்கியவள், “உங்ககிட்ட டேசினாலே எனக்கு மூச்சு வாங்குது. ப்ளீஸ் புடவை கட்டனும். என்னால முடியல” என்று கடுப்பாக சொல்ல, “அதான் கேக்குறேன் எதுக்குன்னு. நான் தான் இருக்கேனே…” யாதவ் பட்டென்று சொன்னவாறு புடவையில் கைவைக்க போக, புடவையை இறுகப்பற்றியவாறு அவனை அதிர்ந்து நோக்கினாள் ரித்வி.

“ஒன்னும் வேணாம். நீங்க இங்கயிருந்து கிளம்புங்க. நானே…” என்று அவள் மேலும் பேச வர, அவனோ பேச அனுமதித்தால் தானே!

“ஷ்…” என்று உதட்டில் விரல் வைத்து அவளை அமைதிப்படுத்தியவன், “என் பொண்டாட்டிய எனக்கு பார்த்துக்க தெரியும்” என்றவாறு அவளை தோளோடு அணைத்துப்பிடித்து எழுந்து நிற்க வைக்க, ‘இதற்குமேல் இவனின் பிடிவாதத்தை வெல்ல முடியாது’ என்று புரிந்துக் கொண்ட ரித்வியும் அமைதியாகவே இருந்தாள்.

அவளின் முன் முட்டி போட்டு அமர்ந்து புடவையின் மடிப்புக்களை அவன் அழகாக எடுக்க, “நல்லாவே பண்றீங்க? ஒருவேள, பழைய காதலிக்கு பண்ண அனுபவமோ?” என்ற ரித்வியின் ஏளனமான கேள்வியில் உள்ளுக்குள் காயப்பட்டாலும் புன்னகையில் அதை மறைத்த யாதவ் அவள் பேசியதை கண்டுக்காது, “அம்மு, நீ அப்பாவோட செல்லம் தானே?” என்று எப்போதும் கேட்கும் அதே கேள்வியை கேட்டான்.

இதற்கு முன்னர் பல தடவை குழந்தையிடம் இதே கேள்வியை யாதவ் கேட்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் ரித்வி இதேபோல் கேட்டால் அமைதியாக இருக்கும் குழந்தை, தந்தை கேட்கும் போது மட்டும் ‘தான் அப்பா செல்லம்’ என்பதை உதைத்து உணர்த்திவிடும்.

தன் கேள்விக்கு தன் அம்மு பதிலளிக்கும் சந்தோஷத்தில் மகளை தூக்கி சுற்றுகிறேன் பேர்வழியென அதை சாக்காக வைத்து ரித்வியை தூக்கி யாதவ் தட்டமாலை சுற்றுவான் என்றால், ரித்வியோ “அவர் கேட்கும் போது மட்டும் உதைக்குற.  நான் கேட்டா ஒரு பதிலும் இல்லை. வெளியில வருவல்ல, அப்போ உன்னை கவனிச்சிக்கிறேன்” என்று குழந்தையை திட்டி, யாதவ்வின் முறைப்பையும் பரிசாக பெற்றுக் கொள்வாள்.

இன்றும் யாதவ் புடவைக்கு மடிப்பு எடுத்தவாறு கேட்க, கேட்ட சில நொடிகளிலே குழந்தை அசைந்து அவள் வயிற்றை உதைத்ததும் “அம்முகுட்டி… என் பொம்முகுட்டி…”  என்று கொஞ்சியவாறு அவன் அவளின் மேடிட்ட வயிற்றில் அழுந்த முத்தமிட, இடுப்பில் கைக்குற்றி தன்னவனை ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்துப்பார்த்தாள் ரித்வி.

திருதிருவென விழித்தபடி தன்னவளை ஓரக்கண்ணால் பார்த்தவன், “அம்மு, இந்த முத்தம் உனக்கு மட்டும் இல்லை. உன் அம்மாவுக்கும் தான். சொல்லிக்கோடா!”  என்று சொல்லி இதழுக்குள் சிரிப்பை அடக்க, அவனின் முகபாவனைகளை ரசிக்கத் தூண்டிய மனதை கடிவாளமிட்டு அடக்க படாதபாடு பட்டுத்தான் போனாள் அவள்.

எப்படியோ தட்டுத்தடுமாறி அவளுக்கு புடவையை கட்டிவிட்டு அவளின் முன் நின்றவனுக்கு ஏனோ இத்தனை நாள் தோன்றாத உணர்வுகள் மீண்டும் தோன்றின. புதுப்பொலிவுடன் இருக்கும் தன் மனைவியை பார்த்தவனுக்கு ஹார்மோன்கள் தாறுமாறாக வேலை செய்ய, அவளை நெருங்கி தன் வலிய கரத்தால் அவன் அவளின் இடையை வளைக்க, ரித்வியோ அதிர்ந்து விழித்தாள்.

“என்ன… என்ன பண்றீங்க?” அவன் நெருங்கியதுமே இவளின் வார்த்தைகள் திக்கித்திணறி வெளிவர, அவளின் கரங்களோ தானாக எழுந்து அவனின் மார்பில் கைவைத்து தள்ள முயன்றன.

ஆனால், அந்த விடாக்கண்டன் நகர்ந்தால் தானே!

அவளின் கன்னத்தில் தன்னிதழால் உரசியவன், “ப்ளீஸ் ரிது…” என்று சொன்னவாறு கன்னத்திலிருந்து இறங்கி அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்து அழுந்த முத்தமிட, இப்போது மறுக்க தோணுமா அவளுக்கு?

அவளுக்கும் உணர்வுகள் பெருக, அதன் தாக்கத்தில் அவனின் சட்டைக் கோலரை அவள் இறுகப்பற்றிக்கொள்ளவும், கழுத்திலிருந்து அளிதழுக்கு இடம் பெயர்ந்த யாதவ் அவளிதழை தன்னிதழால் சிறைப்பிடித்திருந்தான்.

முதலில் மறுத்தவள் பின் எப்போதும் போல் கணவனின் ஸ்பரிசத்தில் அவனுக்கு இசைந்து கொடுக்க, அவளுக்குள் மூழ்கியவனுக்கு அவளை விட்டு விலகவே மனமில்லை.

சரியாக, “ரித்வி… யாதவ்… இவ்வளவு நேரம் என்ன பண்றீங்க? எல்லாரும் வந்துட்டாங்க. சீக்கிரம்” என்ற ஆண்டாளின் கத்தலில் முதலில் சுதாகரித்தது என்னவோ ரித்விதான். நடப்புக்கு வந்தவள் அடுத்தநொடி அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு தன்னிதழை தொட்டுப்பார்த்து அவனை முறைக்க, “அது ரிது… ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவன், வேகமாக சென்று கதவை திறந்தான்.

“புடவை கட்டியாச்சி சித்தி. அலங்காரம் பண்ணி அழைச்சிட்டு வாங்க” என்றுவிட்டு அங்கிருந்து அவன் ஓடியிருக்க, யாதவ்வின் பதட்டத்தையும் ரித்வியின் சிவந்த முகத்தையும் பார்த்த அந்த அனுபவசாலிக்கு நடந்தது புரியாமல் இருக்குமா என்ன?

ரித்விக்கான அலங்காரங்களை செய்ய வைஷ்ணவியும் உத்ராவும் வர, அவர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு அவர் வந்த அடுத்த பத்து நிமிடத்தில் மேடிட்ட வயிற்றைத் தள்ளியவாறு தாய்மைக்குரிய பொலிவுடன் வந்த தன் மனைவியை பார்த்தவனுக்கு அவளிடமிருந்து பார்வையை திருப்புவதே கடினமாகத்தான் இருந்தது.

மஹாதேவனும் தான் வளர்த்த தன் மருமகளை கண்கள் கலங்க பார்க்க, தேவகியோ இதை காண கொடுத்து வைக்காத தன் மகனை நினைத்துப் பார்த்து தான் கண்ணீர் சிந்தினார்.

வளைக்காப்புக்கான சடங்குகள் ஆரம்பிக்க,

ஒவ்வொரு பெரியவர்களும்  ரித்விக்கு வளையல் போட்டு கன்னத்தில் மஞ்சள் பூசி அவளை ஆசீர்வதிக்க, இளசுகளும் ஒவ்வொருவராக முன்வந்து அவளுக்கு வளையல் போட்டு பரிசுகள் கொடுக்க, யாதவ்வோ தன்னவளையே பார்த்தவாறு நின்றிருந்தானே தவிர அவளருகில் செல்லவே இல்லை.

தன் அண்ணனின் பக்கத்தில் வந்த அதிபன், “டேய் என்னடா, எவன் வீட்டுக்கோ வந்த விருந்து மாதிரி இப்படி ஓரமா நின்னுக்கிட்டு இருக்க? போய், உன் பொண்டாட்டிக்கு வளையல் போடு!” என்று அவனைப் பிடித்துத் தள்ள, அவன் கையை தட்டி விட்ட யாதவ்,  “இல்லைடா, இன்னைக்கு அவ சந்தோஷமா இருக்கனும். நான் பக்கத்துல போனா அவளுக்கு பிடிக்காது. எல்லார் முன்னாடியும் வேணாம்னு சொல்லிட்டா ரொம்ப கஷ்டமாக போயிரும்டா எனக்கு. அதான்…” என்று தயக்கமாக இழுக்க, ஏனோ அதிபனுக்கே அவனைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.

“பேராண்டி, என் பேத்திய பத்தி எனக்கு தெரியும். அவளும் அதுக்காக தான் ஏங்குறா. போய் அவளுக்கு வளையல் போடு!”  பக்கத்திலிருந்த தேவகி அவனை அனுப்பி வைக்க, வளையல்களை எடுத்துக்கொண்டு தன்னவளின் அருகில் வந்தவன், “அது… ரிது நான்…” என்று தடுமாற, அவனே எதிர்ப்பார்க்காது தன் கரத்தை அவனை நோக்கி நீட்டினாள் ரித்வி.

எப்போதும் போல் தன்னவளை ஒருவிதத்தில் மதிப்பிட்டு அவன் ஒன்று நினைத்திருக்க, அதற்கு மாறாக தன் கையை நீட்டி அவளோ அவனையே ஆர்வமாக பார்த்திருக்க, தனக்குள் என்ன உணர்வென்றே தெரியவில்லை யாதவ்விற்கு.

என்னதான் பல பேர் ஆசீர்வதித்து வாழ்த்தி கொடுக்கும் பரிசுகளை சிரிப்புடன் அவள் வாங்கினாலும், அவளின் மனம் ஏங்கியது என்னவோ யாதவின் அருகாமைக்காக மட்டுமே…  அவன் மேல் கோபம் இருந்தாலும் கணவனிடத்தில் பெண்களுக்கு தோன்றும் எதிர்பார்ப்புக்கள் அவளுக்கு தோன்றாமல் போய்விடுமா என்ன?

அவனும் அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அவளுக்கு வளையல்கள் அணிவித்து, கன்னத்தில் மஞ்சள் பூசி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட, கண்ணீர் வழிய கண்களை அழுந்த மூடி திறந்த ரித்வியின் முன் ஒரு புத்தகத்தை நீட்டினான் யாதவ்.

“இன்னைக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும்னு சொன்னாங்க. காஸ்ட்லியான கிஃப்ட் அ கொடுக்குறதை விட பிடிச்ச கிஃப்ட் ஆ கொடுக்குறது தான் சரின்னு தோணிச்சு. அதான்…” ஒருவித தயக்கத்துடனே அவன் நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவளுக்கோ விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

அது யாதவ் நேரடி புத்தகமாக எழுதிய நாவல் ஒன்று. அவளிதழ்கள் அவனின் பரிசை பார்த்து பெரிதாக விரிய, அதுவும் அந்தப் புத்தகத்தின் அட்டையிலிருந்த ‘ஆருயிரே மன்னிப்பாயா?’ என்ற கதை தலைப்பிலிருந்த யாசகம் அவனின் விழிகளில் தெரிவது போலிருந்தது அவளுக்கு.

விரிந்த இதழ்களை கஷ்டப்பட்டு சுருக்கி சிரிப்பை இதழுக்குள் மறைத்து, “நன்றி…” என்றுவிட்டு ரித்வி முகத்தை திருப்பிக்கொள்ள, சற்று நேரத்திற்கு முன் விரிந்த அவளிதழ்களை விழிகளால் சிறைபிடித்தவனுக்கு அதுவே போதுமாகத்தான் இருந்தது.

ஷேஹா ஸகி