வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 16

அன்று

அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வெள்ளை துணிகளுக்குச் சாயமிடும் மொத்த காண்ட்ராக்ட் ஏலம் நடந்து கொண்டிருந்த இடம்.

இந்த ஏலத்தில் விஷ்ணுவும் பங்கெடுத்திருந்தான். ‘என்னை யாராலும் ஜெயிக்க முடியாது’ என்ற கர்வத்தில், கால் மேல் கால்போட்டு அலட்சியமாக அமர்ந்திருந்தான்.

ஏலம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்பக் கட்ட மதிப்பு ஐம்பது லட்சத்தில் இருந்து ஆரம்பித்தது.

எடுத்த உடனே விஷ்ணு “ஒரு கோடி” என்றான்.

சிறிது நேரம் அங்குப் பெரும் அசாத்திய அமைதி நிலவியது, விஷ்ணு கர்வமாக, தன் முடியை கோதிக் கொண்டான்.

தீடிரென, “ஒன்றரை கோடி” எனப் பின்னால் இருந்து குரல் வந்தது.

‘யார்! யார்! எனக்கு எதிராக வருவது’ மனம் கொதித்துக் கொண்டிருந்தது.

ஆனாலும் பின்னால் எட்டி பார்க்கும் மனம் வரவில்லை.

‘என்னை எதிர்க்க தொழில் வட்டத்தில் யார் உண்டு’ என்ற கர்வத்தில்!

அங்கிருந்த மற்றொருவர், “இரண்டு கோடி” என,

 “இரண்டரை கோடி”

அதற்கு மேல் அவர் வாயை திறப்பாரா என்ன? அப்படியே அமைதியானார்.

ஆனால் அந்தக் குரலுக்குச் சொந்தகாரர் நான் இதை விடமாட்டேன் என்னும் விதமாக, “மூன்று கோடி” என்றார்.

இப்படியாக இருவரும் மாற்றி மாற்றி ஏலத்தின் மதிப்பை ஏற்றிவிட இறுதியாக விஷ்ணு, “எட்டு கோடி” என்றான்.

‘விடுவேனா’ என்பது போல், “பத்து கோடி” என்றபடி பின்னால் இருந்து புன்சிரிப்புடன் அவன் அருகில் வந்து அமர்ந்தார் மகேந்திரமூர்த்தி.

திடுமென அவரை அங்கு எதிர் பார்க்காத விஷ்ணு அவரைத் திகைப்புடன் நோக்கிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் எந்த மதிப்பு தொகையும் யாரும் கூறாததால், பொறுத்து பார்த்த ஏலம் விடுபவர்,

“பத்து கோடி ஒருதரம்… பத்து கோடி இரண்டு தரம். பத்து கோடி மூன்று தரம்” எனக் கூறி ஏலத்தை முடித்துவிட்டார்.

மூர்த்தியை உறுத்து விழித்த விஷ்ணு கோபத்தில் நாற்காலியில் இருந்து எழுந்தான்.

அவரை ஒரு பார்வை பார்த்தவன், நாற்காலியை கோபமாகப் பின்னால் தள்ளி அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

விஷ்ணுவின் கோபப்பார்வை, அவரை ஒன்றும் செய்யவில்லை. ‘உன்னை என்னிடம் இருந்து பிரித்தவளிடம் போய்ச் சொல்லு, அவளின் தொழிலை முடக்க நான் வந்துவிட்டேன்’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டார்.

பல வருடம் கழித்துத் தன் மகனை நேரில் பார்க்கிறார். பாசமாகக் கட்டியணைக்கும் ஆசை இருந்தும், அவர் மனைவி செய்த காரியத்தால் தன் மகனுக்கு எதிரியாக அவன் கண் முன்னால் வந்து நிற்கிறார்.

அதற்கு மேல் முடியாமல் போக, “இன்னும் ஆறு மாதத்தில் காண்ட்ராக்ட் முடித்துத் தருகிறேன்” எனக் கூறி கையெழுத்திட்டு வெளியேறினார் மூர்த்தி.

வெள்ளை நிற துணிகளுக்குச் செலவு என்பது, மிகவும் குறைவானது. ஆனால் அந்த வெள்ளை துணிகளை வண்ணமயமாக்க ஆரம்பக் கட்ட செலவே பல லட்சத்தில் ஆரம்பிக்கும்.

ஒரு லிட்டர் நீர் இரண்டு பைசாவில் இருந்து ஆறு பைசாவை எட்ட, பணத்தை, கழிவாக வெளியே செல்லும் நீருக்கு, தண்ணீராகச் செலவழிக்க, விரும்பாத பல நிறுவனம் தண்ணீர் செழிப்பாக இருக்கும் ஊரை தேர்வு செய்கிறது.

தங்களது நிறுவனத்தைக் கட்ட ஆரம்பிக்கும் முன்பே ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீரை கொண்டு வருவர். இந்த ஆழ் குழாய் கிணறு பூமியில் உள்ள நெபுலா தீக்கோளம் வரைக்கும் ஊடுருவி செல்லும் சக்தி வாய்ந்தது.

இதனால் பல விவசாய மக்களின் வயல்களில் உள்ள, ஆழ்துளாய் கிணறு தன் தண்ணீரை இழந்து விவசாயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது.

இப்பொழுது மூர்த்தி எடுத்திருக்கும் ஆர்டர் மிகப் பெரியது, அவர் இப்பொழுது வைத்திருக்கும் சிறிய சாயப்பட்டறை இந்த ஆர்டருக்கு போதுமானது தான், பத்து கிலோ துணி முதல் ஐநூறு கிலோ கொள்ளளவு வரை எட்டு மணிநேரத்தில் விரும்பிய நிறமாக மாற்றிக் கொள்ளும் ராட்சச இயந்திரங்களை வைத்திருக்கிறார் தான், ஆனால் இதை விடப் பெரியளவில் ஆர்டர் கைக்கு வந்தால் ஒரு பட்டறையை வைத்து அவரால் சமாளிக்க முடியாது, மேலும் ஒன்றை கட்ட எண்ணினார்.

எட்டு மணி நேரத்தில் பத்து கிலோ முதல் ஆயிரம் கிலோ கொள்ளளவுள்ள இயந்திரம் அவருக்கு வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அவரால் இந்தத் தொழிலில் நிலைத்திருக்க முடியும்.

காரிகையை விட்டு, தொழிலை விட்டு பிரிந்து வெளியில் சென்றவர். கையில் வைத்திருந்த பணத்தையும், நண்பர்கள் உதவுடன் பாங்கில் லோன் எடுத்தார்.

அவர் மேல், அவர் வைத்த நம்பிக்கையும், அயராத உழைப்பும் அவருக்குக் கைகொடுக்க, சரிந்து கொண்டிருந்த ஒரு சாயபட்டறையை விலைக்கு வாங்கினார்.

அதில் சின்னச் சின்ன ஆர்டர் எடுத்து வளர்ந்தவர், இப்பொழுது பெரிய தொகை ஆர்டர் எடுக்கும் நிலைக்கு உயர்ந்த பிறகு தான் மீண்டும் இங்கு அவர் சொந்த மண்ணில் மகனுக்கு எதிராகக் கால் ஊன்ற வந்திருக்கிறார்.

காரிகையை விட மிகப் பெரிய சாயப்பட்டறை ஆரம்பிக்க வேண்டும் அது தான் அவரது எண்ணம். ‘ஸ்வேதா பின்னால் சென்று அவளின் தொழிலை அழித்து விடுவேன் என்று எண்ணி தானே என்னை அவளை விட்டு விலக வைத்தாள், அதற்காகவே நான் அவளை விட உயர்ந்து நிற்க வேண்டும்’ என்ற எண்ணம் வலுவாக மனதில் எழுந்தது.

ஆடை உற்பத்தியில் வெள்ளை நிற ஆடைகளை விட, வண்ண ஆடைகளுக்குத் தான் அதிகக் கிராக்கி. தொழில் என்று வந்துவிட்டால் லாபத்தைப் பார்க்கும் நாம் அதில் உருவாகும் தீமைகளைப் பார்ப்பதில்லை.

நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, விவசாயமும், அதற்கு அடிப்படை காரணமாக இருக்கும் நீரின் வாழ்வாதாரம் வகைத் தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது.

காரணம் நாம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தியை பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

நாளடைவில் பணம் படைத்தவர்களின் மனத்தைப் போலவே, நம்மை வாழவைக்கும் பூமியும் கல் பாறையாய் மாறிப் போனது தான் மிகவும் பரிதாபத்துக்குரியது.

பூமியில் இருக்கும் அடிமட்ட ஈர பதம் வரை அவர்களால் உறிஞ்சப்படுவதால், அதன் தாக்கம் தாளாமல் கற்பாறையாக இறுகி விடுகிறது.

சில இடங்களில் நூறு அடிகளில் ஆழ் குழாய்ச் சாதரணமாக இறங்கும். ஆனால் பாறை போல் மாறிய பூமியில் இறக்க உதவும் எந்திரங்கள் கண்ணீர் விடாமலே கதறி அழும்.

உயிர் இல்லாத இயந்திரங்களுக்கே அந்த நிலை என்றால், ஊணும், உயிருமாக இருக்கும் மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்? ஆனால் பெரும் பணம் படைத்தவர்கள் அதைப் பார்ப்பதில்லையே.

அதே போல் தான் மூர்த்தியும், சாயப்பட்டறை கட்டுவதில் ஏற்படும் தீமைகளை அறிந்தும் அவர் தொழிலை, அவர் பெயரை வளர்க்க, செழிப்பான ஊரை தேர்வு செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது அவர் கண்ணுக்கு விருந்தாக அமைந்ததுதான் சோளக்காடு கிராமம்.

ஏல இடத்தை விட்டு கோபத்துடன் வெளியில் சென்ற விஷ்ணுவிற்கு ஆத்திரமாக வந்தது, வாழ் நாளில் யாரை பார்க்க கூடாது என்று எண்ணினானோ, அவரே அவனின் எதிரியாக முன் வந்து நிற்கிறார்.

இங்கு இருந்தால், ‘அந்தத் துரோகியின் நினைவு வரும் என்ற எண்ணத்தில் தான், லண்டன் சென்றான். அங்குச் சென்று பல பாசமான தந்தையைக் கண்டால் எழும் மூர்த்தியின் நினைப்பை விரட்டவே, மதுவை தவிர மற்ற தீய பழக்கத்தைத் தானே ஏற்படுத்திக்கொண்டான்.

ஆனால், எதுவும் அவனின் தந்தை பாசத்தை மறக்கடிக்கவில்லை. தொழிலை கையில் எடுத்தாலாவது அவர் நினைவு வராமல் இருக்கும் என்று தான், ‘இரவு பகல் பார்க்காமல் பேயாக உழைத்தான்’ ஆனால் எல்லாம் ஒரே நொடியில் அழிந்தது போல் இருந்தது மூர்த்தியின் திடீர் வருகை.

‘ஏதாவது செய்ய வேண்டும்’ ஆத்திரமாக! கோபமாக! வன்மமாக! எண்ணிக்கொண்டான் விஷ்ணு காரிகை.

@@@@@@@@

தோட்டத்தில் உள்ள மாமரத்தின் கீழே கட்டிலை போட்டு வானத்தில் தெரிந்த நிலவை பார்த்திருந்தான் தேவ். அந்த நிலவில் அவனின் அத்தையின் முகம் தெரிந்தது.

கீர்த்தி இங்க இருந்தா நல்லா இருக்கும், ‘அத்தை அவளை இங்கு வர வைப்பாய் தானே’ மனதோடு அவனின் அத்தையிடம் கேட்டுக் கொண்டிருந்தான் தேவ்.

அவன் எண்ணியதைப் போல் தூரத்தில் சிறு டார்ச்லைட்டை கையில் ஏந்தி அவனைத் தேடி வந்தாள் அவனின் பொம்மு.

“என்ன மச்சான், பனிவிழும் இந்த இரவில் பாரதி மாதிரி வானத்தையே பார்த்திருக்க”

“என்ன மேடம், இன்னைக்குப் பாரதி எல்லாம் இழுக்கிறீங்களே என்ன விஷயம்”

“இல்ல, பாரதி மாதிரி தலையில் முண்டாசு எல்லாம் கட்டிருக்கியே, ஒருவேளை நிலவை பார்த்து கவிதை சொல்ல போற போலன்னு நினைச்சிட்டேன்”

“நிலவை ரசிக்காதவர் உண்டோ?”

“உங்களுக்கு நிலாவை ரொம்பப் பிடிக்குமா?”

“நிலா ஒரு பெண், அதை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டாங்க, அதில் நானும் விதிவிலக்கில்லை. இந்த நிலாவை பார்க்கும் நேரம் எனக்குத் துரைச்சி அத்தை தான் நியாபகத்துக்கு வருவாங்க”

“அம்மாவை ரொம்பப் பிடிக்குமா?”

“ஆமா ரொம்பப் பிடிக்கும், என்னை வளர்ந்ததே அத்தை தான், தினமும் கதை சொல்லி, நிலா சோறு சாப்பிடுவோம், அப்படி அங்கேயே அவங்க மடியிலேயே படுத்து தூங்குவேன் அந்தச் சுகம் என்னை விட்டு போய் ரொம்ப வருஷம் ஆகிட்டு பொம்மு” என்றபடி அவளைப் பார்க்க, அவளின் கண்களில் கண்ணீர் பளிச்சிட, தேவ் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவளைச் சமாளிக்கும் பொருட்டு,

“சரி. சரி. என்ன ஆச்சரியமா இருக்கு ரொம்ப நாளுக்கு அப்புறம் என்னைத் தேடி வந்திருக்க”

“அம்மா ரொம்ப அழகா இருப்பாங்களா?”

அவளை கையைப் பிடித்து அந்த நிலவொளியில் வயலை நோக்கி அழைத்துச் சென்றான் தேவ். துரைச்சி போட்டோ வீட்டில் எங்குமே கிடையாது.

“அத்தை இன்னும் சாகல, உயிருடன் தான் இருக்கிறார்கள்” என்று அவன் வீட்டில் போட்டோவை வைக்க விடவில்லை, காரணம் துரைச்சியும், கீர்த்தியும் ஒரே போல் இருந்தனர்.

கீர்த்தி குசந்தையாக இருக்கும் பொழுது அம்மா என்றழைக்க அவளிடம் துரைச்சி போட்டோ காட்டினர் அவ்வளவுதான்.

 நாளடைவில் அவளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் தேவ் இருக்க, அவள் யாரையும் தேடவில்லை. தேடும் அளவுக்கும் தேவ் வைக்கவில்லை,

நாற்று நட, பாத்தி முழுவதும் தண்ணீரில் நிறைத்து வைத்திருந்தான் தேவ். அதன் அருகில் கீர்த்தியை அழைத்துச் சென்றவன், “இதுல உன் முகத்தைப் பார் இப்படித் தான் அத்தை இருப்பாங்க” என்றான்.

அந்த இரவு நிலா ஒளியில் தேவதையாகத் தெரிந்தாள் கீர்த்தி. அதில் ஒரு நிமிடம் தேவ்வுடன் இருக்கும் அவளின் தாயைக் கண்டவள், தாவி அவனை அணைத்துக் கொண்டாள் கீர்த்தி.

“நீ மட்டும் என் வாழ்க்கையில் இல்லன்னா, எனக்கு இப்படி ஒரு பாசமான கூடு கிடைச்சிருக்குமான்னு தெரியாது மச்சான். தாய், தந்தை இல்லாத எந்தப் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைச்சிருக்கு? ஆனா எனக்கு எல்லாமே கிடைச்சிருக்கே, எல்லாத்துக்கும் நீ தான் காரணம் மச்சான். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன்னைச் சுற்றி சுற்றி வரணும்”

“அட! என்ன பேசுற பொம்மு, நீ தான் எனக்குக் கிடைச்ச தேவதை, நீ என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் நான் இந்த மரம், செடி கூட வாழ்ந்து முடிச்சிருப்பேன், இந்த அன்பான தேவதையோட பாசம் கிடைக்காமலே போயிருக்கும்”

அவளைத் தன்னில் இருந்து பிரித்தவன், அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உன்னையே சுற்றி சுற்றி வருவேன், ஆனா, நீ என்னை ரொம்பச் சுத்த விடக்கூடாது” அன்று அவள் கூறியதற்குக் கேலியாகக் கூற,

“நான் உன்னைச் சுத்த விடுறனா, நீ தான் என்னைச் சுத்த விடுற, இத்தனை நாள் என் கண்ணுலையே மாட்டாம இருந்துட்டு இன்னைக்குப் பெருசா பேசுற” அவனை விரட்ட,

அவளிடம் இருந்து தப்பி ஓடினான் தேவ். வரப்பில் தாவணியைப் பிடித்துத் தத்தி, தத்தி, அவள் ஓடி வர, மாமரத்தின் அருகில் நின்று அவளையே ரசித்திருந்தான், ‘எப்பொழுதும் இவளை கஷ்டப்படுத்தவே கூடாது, என் பொம்மு சந்தோசமா இருக்கவேன்டும்’ மனதில் எண்ணிக் கொண்டான் தேவ்.

அவன் அருகில் வந்தவள் அவனை அடிக்கப் பாய, அவளைத் தடுத்தவனாய் அப்படியே கட்டிலில் விழ, அவன் மேல் ஏறி அமர்ந்தவள் “என்னை இனி மேல் இப்படிச் சுத்த விடுவியா” அவனின் முடியை பிடித்து ஆட்ட,

“ஹா… ஹா… விடு பொம்மு” அவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன், அவளைத் தள்ளி அந்தப் பக்கமாய் அவள் மேலேயே சரிந்தான்.

முகம் வெளிறி மருண்ட விழிகளால், அவனை வைத்த கண் வாங்காமல், ‘இவன் இப்பொழுது என்ன செய்யப்போகிறான்’ என்ற விதத்தில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த பொம்முவின் நிலையைக் கண்டவன் தன்னிலையை மறந்தான்.

அவளின் வலது கையை, இடது கையால் அழுந்த பிடித்தவன், வலதுகை ஆள்காட்டி விரலால் அவள் முகத்தில் கோடிழுத்தவனின் கைகள் அவளின் இதழ் கீழே இருக்கும் மச்சத்தில் ஒரு நொடி தயங்கி நிற்க, அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.

அவளின் நிலையோ சொல்லில் விவரிக்க முடியாத பதட்டத்தில் இருக்க, கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.

அப்பொழுது மரத்தில் இருந்து ஒரு மாபிஞ்சு அவர்களின் கையில் விழ, இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் விட்டு விலகினர்.

‘சின்னப் பிள்ளையிடம் இப்படியா நடந்து கொள்வாய், இப்பொழுது தான் அவளைக் கஷ்டபடுத்த கூடாதுன்னு பெருசா நினைச்ச’ அவனின் மனது சாட, அவனுக்கு அவனை நினைத்தே ஒரு மாதிரியாக இருக்க, கட்டிலின் அந்தப் பக்கம் நகர்ந்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டான்.

தன்னை ஒருவாறாகச் சமாளித்தவள், அவனின் முகத்தைக் கண்டு பதறியவள், அவனிடம் கொடுத்துவிட்ட சாப்பாட்டு கூடையைக் கையில் எடுத்து, அதில் சாப்பாட்டை எடுத்து அவன் முன்னே சென்று கீழே அவனைப் பார்த்து அமர்ந்தாள்.

சிறு கண்ணீர் துளி கன்னத்தில் இறக்க, அவளைப் பார்த்தவனது, கண்ணீரை துடைத்து, சாதத்தை எடுத்து அவனுக்கு ஊட்ட “சாரி பொம்மு” முணுமுணுப்புடன் வாங்கிக் கொண்டான்.

“அய்ய. இதுக்குப் போய் அழுவங்களா? இருந்தாலும் நீ இப்படிப் பச்ச பிள்ளையா இருக்கக் கூடாது மச்சானு, இதுக்குத் தான் அப்பத்தா உன்னை எப்பொழுதும் சோட்டுன்னு சொல்லுது” கிண்டலடிக்க,

அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தவன் “வாலு” என்றபடி அவளுக்கும் ஊட்டி விட்டான் அவளின் சோட்டுமச்சான்.

@@@@@@@@

விஷ்ணு அருகிலேயே, அகிலால் நெருங்க முடியவில்லை, தொழில் விஷயம் போக எதுவும் அவனிடம் பேச முடியாது.

ஆபிஸ் விஷயம் பேச ஆரம்பித்தாலே, எதிரில் நிற்பவரின் கண்களைத் தவிர எங்கும் விஷ்ணு பார்வை அசையாது. எதிரில் இருப்பவர் கண்ணை வைத்தே உண்மை எது? பொய் எது? என உடனே அடையாளம் கண்டு கொள்வான்.

அதனால் தான் அகிலால் இங்கு வந்த விஷயத்தையே அவனிடம் பேச முடியவில்லை, முடியவில்லை என்பதை விட, அவன் அதற்கு அனுமதி தரவில்லை.

அடுத்து வந்த நாளின் மிகப் பெரிய வேலையை அகில் கையில் கொடுக்க, அதை வெற்றிகரமாக அகில் முடிக்க, முதல் முறையாக அகிலை முழுமையாக நம்பினான் விஷ்ணுகாரிகை.

குறிப்பிட்ட நாளுக்கு முன்னே ஆர்டர் முடித்துக் கொடுத்த சந்தோசத்தில் மூர்த்தி இருக்க, அவரின் பத்து கோடி ஆர்டரைக் சுமந்து சென்ற கண்டைனரோ நடு ரோட்டில் நின்று எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்தது.

விஷ்ணு அவன் வேலையை ஆரம்பித்திருந்தான்.

கொ(வெ)ல்வாள்.

எதிரி யாரும் நொறுங்கி போக
அடித்து நொறுக்கும் நொடியில் 
கதறி
பதறி 
சிதறி ஓடும் 
சிறு நரிகளை 
ஓட விடு இனி

வா…
உன்னையும் மண்ணையும் வென்று வா.. தீராத 
ஓர் தேவையை கொண்டுவா 
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே 
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!