அத்தியாயம்-1
அடைமழை நாளிலும் ஐந்து மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, விசாலமான காற்றோட்டமாக அமைக்கப்பட்டிருந்த அறையின் தரைவிரிப்பில் நின்று ஆசனம் செய்வதற்கு ஏதுவான உடையுடன் தனது அன்றைய தினத்தை சூரிய நமஸ்காரத்தோடு துவங்கியிருந்தாள், இருபத்தைந்து வயது விசாலினி.
பாலிவுட்டின் நடிகை டயானா பென்டியை போன்ற ஒடிசலான தேகம், ஐந்தடி பத்து அங்குலம் உயரத்தில் தந்தையின் சாயலில் பிறந்த அழகு தேவதை.
விசாலினியின் தந்தை கிருபாகரன் ஓய்வு பெற்ற ஒரு விளையாட்டு ஆசிரியர். அவரின் வழிகாட்டுதலில் விடமுடியாத சில விடயங்களில் விசாவின் காலை நேரத்தினை பிடித்துக் கொள்ளும் சூரிய நமஸ்காரமும் ஒன்று.
‘ஓம் மித்ராய நமஹ’ எனும் மந்திரத்தை அனாகதச் சக்கரத்திலிருந்து கூறியவாறு மூச்சுக்காற்றை வெளியேற்றியபடி பிராணாமாசனத்தில் ஆரம்பித்தவள்,
விசுக்தியிலிருந்து மூச்சை உள்ளிழுத்து ‘ஓம் ரவயே நமஹ’ என்றபடி அஸ்த உட்டாசனம்,
சுவாதிஸ்டானத்திலிருந்து மூச்சை விட்டவாறு ‘ஓம் சூர்யாய நமஹ’ என்றவாறு அஸ்த பாதாசனம்,
ஆக்கினைச் சக்கரத்திலிருந்து மூச்சை உள்ளிழுத்தபடியே ‘ஓம் பானவே நமஹ’ என்றபடி அஸ்வ சஞ்சலாசனம்,
விசுக்தியிலிருந்து மூச்சை உள்ளிழுத்து ‘ஓம் ககாய நமஹ’ என்றபடி துவிபாதஅஸ்வ சஞ்சலாசனம்,
மணிப்பூரகத்திலிருந்து ‘ஓம் பூஷ்னே நமஹ’ என்றபடி அஸ்டாங்க நமஸ்காரம்,
சுவாதிஸ்டானத்திலிருந்து மூச்சை இழுத்தவாறு ‘ஓம் ஹிரண்யகர்பாய நமஹ’ என்றவாறு புஜங்காசனம்,
விசுக்தியிலிருந்து மூச்சை வெளிவிட்டவாறு ‘ஓம் மரீசயே நமஹ’ என்றபடி அதமுக்த ஸ்வானாசனம்,
ஆக்கினைச் சக்கரத்திலிருந்து மூச்சை வெளியே விட்டபடியே ‘ஓம் ஆதித்யாய நமஹ’ என்றபடி அஸ்வ சஞ்சலாசனம்,
சுவாதிஸ்டானத்திலிருந்து மூச்சை விட்டவாறு ‘ஓம் சவித்ரே நமஹ’ என்றபடி அஸ்த பாதாசனம்,
விசுக்தியிலிருந்து மூச்சை உள்ளிழுத்து ‘ஓம் அர்காய நமஹ’ என்றபடி அஸ்த உட்டாசனம்,
‘ஓம் பாஸ்கராய நமஹ’ எனும் மந்திரத்தை மூச்சுக்காற்றை வெளியேற்றியபடி அனாகதச் சக்கரத்திலிருந்து கூறியவாறு பிராணாமாசனத்தில் முடித்தாள்.
மாற்றாசனம் செய்தவள், முடித்து வெளிவரும் போது விசாலினியின் தந்தை கிருபாகரன், மகளை எதிர்கொண்டார்.
நேரம் சரியாக காலை ஆறு என்றது. இருவரும் சற்று நேரம் பாசப்பயிரை வளர்த்து, பிறகு மகளை கிளம்பச் செய்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு அமரும் போது மணி சரியாக எட்டு என்றது. கடந்த ஆறு மாதங்களாக மகளின் வேண்டுகோளுக்கிணங்க தனது வேலையை விட்டிருந்தார், கிருபாகரன்.
இளங்கலைக் கல்வியை ஓராண்டு விடுதியில் தங்கிப் பயின்றவள், அதன்பின் விடுதியில் தங்கிப் பயில சம்மதிக்கவில்லை. ஓய்வு பெற்றிருந்த கிருபாகரனும் சென்னையின் பிரபல பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக தனது பணியினை தொடங்கியபடி மகளுடன் சென்னையில் குடியேறியிருந்தார்.
முதுகலைக் கல்விக்குப் பின் தனது வீட்டுப் பெரியவர்களின் அவாவை நிறைவேற்றுவதாகவும், அதற்கு பதிலாக தற்போது தன்னை சென்னையில் தங்கி பயில அனுமதிக்குமாறு கேட்டதை வீட்டுப் பெரியவர்களாலும் தட்ட இயலாத நிலையில் மறுக்க முடியவில்லை.
அப்பாவும், மகளுமாக சமையல் செய்து ஒரு வழியாக அவரவர் பணிகளை கவனித்துக் கொண்டனர். முதுகலை முடித்தவள் அதன்பின் கல்வியியல் துறையில் இளநிலை முடிக்கவேண்டும் என்று கூற அதற்கும் மறுப்புத் தெரிவிக்காமல் சரியென்றுவிட்டார், கிருபாகரன்.
விசாலினி மேற்கல்வியை தொடர்ந்ததை அறிந்து, தனது கருத்து வேறுபாட்டை கூறிய அவரின் தாயை சமாதானம் செய்திருந்தார் கிருபாகரன்.
எம்.ஏ., பி.எட்., முடித்துவிட்டு கடந்த ஓராண்டாக தனியார் பள்ளியில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் விசாலினி எதற்கும் பிடி கொடுக்காமல் இருக்க, அழகம்மாள் வரும் வரன்களின் படங்களை மகனுக்கு அனுப்புவதும், அதை கிருபாகரன் மகளிடம் காட்டி மகள் மறுப்பதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தது.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, ஆனால் மத்தளத்திற்கு உண்டாகும் இருபக்க அடியைப் போல மகளுக்கும், தனது தாயாருக்கும் இடையே மாட்டிக் கொண்ட கிருபாகரன் எதற்கும் கலங்காமல் இருந்தார்.
அலைபேசி கிருபாகரனை அழைக்க, அலுங்காமல் நிதானமாக எடுத்து பார்த்தவர், தனது தாயின் அழைப்பைக் கண்டு முகத்தில் பரவியிருந்த சிரிப்பில் அவர் தனது தாயின் மீது கொண்ட அன்பு தெரிந்தது.
“அம்மா…. சொல்லுங்க…”
“உம்பொண்ணு என்ன சொல்றா?”
“இன்னும் பேசலம்மா, நேரம் பாத்து பேசறேன்”
“காலைலயே உம்பொண்ணரசிக்காக பொய்யெல்லாம் சொல்லாத… நாளும் பொழுதும் போகுது. நாளக் கடத்தாம சீக்கிரமா அவளுக்கும் கல்யாணம் முடிக்கணும்”
“சரிம்மா, இன்னிக்குள்ள பேசிட்டு சொல்றேன்”
“முடிஞ்சா பாரு, இல்லனா நான் வரவா?”
“இல்ல… நானே பேசிட்டு சொல்றேன்”
“நீ பொடிசிக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டே… அதான் அது பிடி கொடுக்க மாட்டிங்குது”
“அப்டியெல்லாம் இல்லம்மா”
“எப்டியெல்லாம் இல்ல… ம்… என்ன செய்வியோ ஏது செய்வியோ… இன்னிக்கு இராவுக்குள்ள நல்ல சேதியா வரணும், ஆமா சொல்லிப்புட்டேன்… ம்… உன் வீட்டுக்காரிக்கிட்ட பேசுறியா!?”
“இல்லம்மா இருக்கட்டும், அப்றமா பேசுறேன்”
“அதான, அவகிட்ட எதுக்குப் பேசணும்?, உன்ன பெத்த என்னத்தான் மனசுக்குள்ள காரித் துப்புவா, வையி போன…”, என கோபத்துடன் மறுபுறம் அலைபேசியை வைத்த அழகம்மாள், மகனை கோபமாக வைதபடி, மருமகள் கற்பகத்தையும் அழைத்து தனது மண்டகப்படியை வார்த்தைகளால் கொடுத்தார்.
——————-
நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பௌத்திரம் எனும் ஊரில் இன்றும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் குடும்பம் அவர்களது.
சதாசிவம், அழகம்மாள் தம்பதிகளின் மூத்த மகன் கருணாகரன். இளைய மகன் கிருபாகரன். கிருபாகரன், கற்பகம் தம்பதிகளுக்கு மூன்று மகள்கள்.
திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஜெயலினி மற்றும் விலாசினி இருவரும் பிறந்திருந்தனர்.
மூத்தவள், ஜெயலினி ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பார்ப்புகள் ஏதுமில்லா அவர்களின் நிறைவான வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளை (ஆண் குழந்தை) குடும்பத்தில் அனைவரிடமும் ஏற்படுத்தி அதனை பொய்யாக்கிய பெண் குழந்தை தான், விசாலினி.
கூட்டுக்குடும்பத்தில் இருப்பதோடு, அடுத்தடுத்து பருவமடைந்த பெண்களுக்கு தாயான கற்பகத்தால் கைக்குழந்தையுடன் அதிக நேரம் செலவிட இயலாமல் போக, முதலில் தனது மாமியாரின் பொறுப்பில் குழந்தை விசாலினியை ஒப்படைத்திருந்தார்.
முதல் இரு குழந்தைகளையும் தூக்கி வளர்க்காத கிருபாகரனை, தவழும் நிலையில் முழங்கால்களை மடக்கி அமர்ந்தவாறு இரு கைகளை உயர்த்தி தூக்கச் சொன்ன தனது கடைக்குட்டியை அலட்சியப்படுத்த இயலாமல் முதன் முதலில் தூக்கினார்.
கிருபாகரன் குழந்தையை தூக்கியது, அவ்வீட்டார் அனைவருக்கும் ஆச்சர்யமே. ஆனால் ஒரு முறை தூக்கியதோடு பச்சிளங்குழந்தை அவரைத் தேடத் துவங்கியது.
வேறு வழியின்றி குழந்தையின் ஒன்பது மாதங்களில் பொறுப்பை எடுத்துக் கொண்ட கிருபாகரனை இன்று வரை விடாமல் தனது மனம் போல ஆட்டி வைக்கும் அழகு ராட்சசி விசாலினி.
விசாலினிக்கு, எதற்கும் அப்பா வேண்டும். அம்மா, அக்கா, பாட்டி, பெரியம்மா, அண்ணி, அண்ணா என எல்லா உறவுகள் இருந்தாலும் விசாலினிக்கு தாயுமானவனாக, தோழமையாக, பாதுகாவலனாக, கதாநாயகனாக வரை கிருபாகரன் இருந்தார்.
இருமுறை தன்னுடன் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாகப் பேசினாலும் அவர்களின் பாவனைகளை கண்டு, மனங்களை உணர்ந்து கொண்டு, உடனே அதை தனது தந்தையிடம் கூறும் வழக்கம் விசாலினிக்கு உண்டு. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருப்பதால், வரும் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருந்ததை உணர்ந்த மாணவர்கள் அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்கள்.
எதையும் மறைக்காத வெள்ளந்தியான தனது மகளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கிருபாகரன். வெள்ளந்தியின் உள்ளத்திலும் ஒரு ஆடு வந்து போன சுவடு இருந்தும், அதன் தடம் யாருக்கும் தெரியாமல் மறைத்த மகளை நம்பியவாறு அப்பாவித் தந்தையாக கிருபாகரன் இருக்கிறார் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
மாலையில் வீடு திரும்பியிருந்தவள், அவளின் அறையில் சென்று உடைமாற்றி ஹாலுக்கு வந்தவள்,
“டாட் இன்னிக்கு கிளைமேட்கு லெமன் டீ ரெடி பண்றேன்”,என்றபடி கிச்சனுக்குள் சென்றவள், அடுத்த பத்து நிமிடத்தில்
சூடான லெமன் டீயுடன் வந்த விசாலினி தனது தந்தைக்கு ஒரு கோப்பையையும் கொடுத்து விட்டு, தனக்கு ஒரு கோப்பையையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தூறலுடன் இருந்த வானிலைக்கு ஏதுவாக இருந்த டீயை ரசனையுடன் உறிஞ்சினாள்.
மகளின் கைவண்ணத்தில் இருந்த லெமன் டீ கிருபாகரனுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்க, அவரும் அதை அனுபவித்து குடித்து முடித்து, மகளுக்காக காத்திருந்தார்.
விசாலினி டீ கோப்பையை டீப்பாயின் மீது வைத்தவுடன்,
“ஷாலுமா, பாட்டி இன்னிக்கு ஒரு பையன் போட்டோ அனுப்பியிருக்காங்க”
“ஓஹ்… டாட், எனக்கு என்ன சொல்லன்னு தெரியல, பட் எனக்கு யாரு மேலயும் இன்ரஸ்ட் இல்ல, என்ன இப்டியே விட்ருங்களேன்”
“அது எப்டிடா விடமுடியும், உன் அக்காங்க ரெண்டு பேரும், நிறைவா அவங்க மேரேஜ் லைஃப்ல செட்டில் ஆனமாதிரி நீயும் ஆனாதான எங்களுக்கு கடமை முடியும்”
“அதுக்கு நானென்ன பண்ண முடியும் டாட், எனக்கு உங்கள மாதிரி ஒரு பையன பாருங்கனு சொல்லிட்டேன், ஆனாலும் பாட்டி எதையாது அனுப்பி வச்சு என்ன காண்டாக்குறாங்க, இந்த பாட்டிய முதல்ல நாடு கடத்தறேன் பாருங்க”, என சிணுங்கியபடி பேசியவளை
“அப்டியெல்லாம் சொல்லக்கூடாது, உன் நல்லதுக்காகதான எல்லாம் பண்றாங்க பெரியவங்க”
“மேரேஜ் பண்ணிட்டு, அக்காஸ் மாதிரி வாண்டூஸ் எல்லாம் வளத்து பெரிசாக்கி… இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வரும்னு தோணல, இப்டியே விட்ருங்களேன்”, கெஞ்சினாள் மகள்.
“உனக்கு யாரையும் பிடிச்சிருந்தா கூட சொல்லுடா, அப்பா பேசுறேன்”
“போங்க டாட், யாருமில்லைங்கற தைரியத்திலதான இப்டி பேசுறீங்க”, கேலி பேசினாள்.
“அப்டியில்ல தங்கம், உண்மையா தான் சொல்றேன். இன்னொரு விசயம்… வயசும் போகுதுல்ல”,பொறுப்பினால் வந்த வருத்தம் வார்த்தைகளில் தெரிந்தது.
“பாட்டிக்கா? அப்ப அவங்களுக்கே பண்ணுங்க”, என்றபடி சிரித்தவளை
“ஸ்… அப்டியெல்லாம் பேசக்கூடாது, ஷாலி”,சற்று கோபமாக கூறினார்.
“ஜஸ்ட் ஃபன் டாட், டேக் இட் ஈஸி”, அதையும் சிரித்தே மழுப்பினாள் பெண்.
“எந்த குட்டிச்சுவத்துல உக்காந்து சைட் அடிக்கிறானோ, இல்ல எந்த பாருல அக்கவுண்ட் வச்சு சரக்கடிக்கிறானோ, அவன பாட்டி இங்க ஊருக்குள்ள வலை வீசீ கடந்த நாளு வருஷமா தான் பாக்குறாங்க, வலையில சிக்கமாட்டிங்கிறானே”,என்றபடி சிரித்தவளை
“உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான், அப்டி எப்படி ஒருத்தவன நாங்க உனக்குப் பாப்போம்டா”, மகளின் பேச்சில் வந்த நிலையை மறுத்து தனது மனநிலையை கூறினார்.
“நீங்க ஒரு ப்பீட்டி, பட் விளையாட்டையே மறந்துட்டீங்களே, அதான் நான் விளையாடுறேன் டாட்…”
“சரி அப்ப பாட்டிகிட்ட என்ன சொல்ல?, பையன பாரு முதல்ல அப்புறம் நான் பேசுறேன்”
“என்னோட இன்டியூசன்ல இவனில்லைனு சொல்லிருச்சு, சோ டோன்ட் ஃபோர்ஸ் மீ, டாட்”
“பாட்டிக்கு இன்னைக்கு பேசினா எல்லாம் மாறும், அப்புறம் என்னால எதுவும் செய்ய முடியாது, யோசிச்சு சொல்லு”
“சாரி டாட், தேரீஸ் நத்திங் ட்டு திங்க்”, என்றவள் அதன்பின் இரவு நேர சமையலை முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டாள்.
படுக்கையில் படுத்தவளின் இரவு உறக்கத்தை உடல் அசதி வேண்டினாலும், கடந்த இரு மணித்தியால மன அலைக்கழிப்பால் உறக்கம் எட்ட நின்றது. கொட்டக் கொட்ட கும்மிருட்டில் விழிக்கப் பிடிக்காதவளாய், கண்மூடியிருந்தவளின் நினைவடுக்கில் வந்தான். அவன் பெயரைத் தவிர, அவனைப் பற்றி எதுவும் அறியாதவளாய் சிந்தனையை எட்டு ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு போனாள்.
அது வரை விளையாட்டுகளில் பங்கு கொண்டிருந்தவள், அந்த சம்பவத்திற்குப் பிறகு விளையாட்டைத் துறந்திருந்தாள். அப்பொழுதும் கிருபாகரன் எதுவும் மகளிடம் குறுக்கு விசாரணை செய்யாமல் விட்டிருந்தார்.
விசாலினியின் பெரிய தமக்கை ஜெயலினிக்கு பிரசவ நேரம் என்பதால் அப்போது கற்பகத்தை அழைத்துக் கொண்டு யுஎஸ் சென்றிருந்தார், கிருபாகரன்.
எல்லா நேரங்களிலும் உடனிருந்து வழிநடத்தும் தனது தந்தையில்லாமல் திக்குமுக்காடியிருந்தவளை தேற்றி விளையாட வைத்த பெருமை அவனையே சாரும். கிருபாகரனைப் போல அவளை ஊக்குவித்து விளையாடச் செய்ததோடு, அந்த மேட்சில் வெற்றி பெற்று வீடு திரும்ப அவனே முழுக்காரணமாக இருந்தான்.
அன்பு, அனுசரனை அதனுடன் கூடிய கண்ணியம் அவளைக் கவர்ந்தது. தன் தந்தையின் அருகில் இருக்கும் போது உணரும் பாதுகாப்பு மற்றும் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத மனோபாவம் இரண்டையும் தந்தவன்.
ஏனோ கடந்த இரு ஆண்டுகளில் அவனைப் பற்றிய அவளின் சிந்தனை அதிகரித்திருந்தது. ஆனாலும் அவனுக்கு திருமணம் ஆகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மனதில் வெறுமை தோன்ற, அதையும் மீறி அவளின் இரவை முழுமையாக ஆக்ரமித்திருந்தான் ஒருவன்.
………………………………………………………
ஆறடி இரண்டங்குல உயர, மாநிற.. திடகாத்திரமான உடல்வாகுடன், உல்லாச உலகில் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், சிந்தனையை சிதறவிடாமல் குட்டிச்சுவரில் அமராமல், பாரின் சுவடு அறியாதவனாய் வாழ தன்னைப் பழக்கியிருந்தான்.
கோடிக்கணக்கில் பணம் இருந்தும், தனக்கென முகவரியைத் தேடி உலகநாடுகளில் வியாபாரங்களைப் பெருக்கி தனக்கென ஒரு முத்திரையை பதித்து வரும் முப்பதைத் தாண்டிய இளைஞன்.
அவனுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் வியாபாரங்களை பெருக்குவதிலும், கோடிகளை கூட்டுவதிலும் இருக்க, அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எல்லாம் அவனது தொழில்முறை சார்ந்த விடயமாகி இருந்தது.
தன்னைப் பற்றிய சிந்தையில் உறக்கத்தைத் தொலைத்தவளைப் பற்றி அறியாத ஜீவனாக உலகை வலம் வந்து கொண்டிருந்தான், அரவிந்த்.
வியாபார விடயமாக சிங்கப்பூர் சென்றவனை அலைபேசியில் அழைத்தார், திருமதி.நீலா போஸ். அவனின் தாய்.
அவசர விடயம் எதுவும் இருந்தால் மட்டுமே தன்னை அழைக்கும் தாயின் அழைப்பைக் கண்டவன், முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்திருந்தான்.
“மா… என்ன காலைலயே கால் பண்ணீருக்கீங்க, வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்க தானா… உங்களுக்கு ஹெல்த் நல்லாருக்கில்ல”
“ரிலாக்ஸ் அரவிந்த், ரெகுலர் செக்கப் நானும், அப்பாவும் வந்தோம். அப்பாவுக்கு தான் கொஞ்சம் பீப்பி கூடியிருக்கு, டாக்டர் உங்கிட்ட பேசணும்னு சொன்னார், அதான்… அவர்கிட்ட பேசு”
“ஹாய் அர்விந்த், எப்டி இருக்கு உன் பிஸினெஸ் எல்லாம்”
“நல்லாருக்கு அங்கிள், எதுவும் முக்கியமான விசயமா, எங்கிட்ட பேசணும்னு சொன்னதா அம்மா சொன்னாங்க”
“அவங்க ரெண்டு பேருக்கும் உன்ன பத்தின கவலை மட்டும் தான், வேறொன்னும் இல்ல, அதான் டிப்ரஷன், அதனால சரியான தூக்கம் இல்லாம, பிரஷரும் நார்மலா இல்ல, சீக்கிரம் நல்ல டெசிஷன் எடு, அப்றம் சொல்லலணு வருத்தப்படாத, முடிஞ்சா நேருல ஒரு முறை வந்துட்டு போ”
“ஓகே அங்கிள், ஃபோர் டேஸ்ல சென்னை வந்துட்டு உங்கள நேருல வந்து பாக்கறேன்”
“ம்… கண்டிப்பா”, என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு அடுத்து தனது தம்பி சஞ்சயை அழைத்தவன்,
“ஹாய் சஞ்சு, அங்க பிஸினெஸ் எல்லாம் எப்டி இருக்கு”
“ஆச்சர்யமா இருக்கு, நாந்தான் உன்ன அப்பப்ப கூப்டுவேன், இன்னிக்கு நீயே கூப்டு பேசுற, இப்ப எங்க இருக்க ப்ரோ?”
“நான் எங்க இருந்தா என்ன? நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு”
“பிஸினெஸ் எல்லாம் அஸ் யூஸ்வலா.. ஸ்மூத்தா போகுது, ஏன் கேக்குற அரவிந்த்?”
“டாக்டர் பேசினார், அம்மா அப்பா ரெகுலர் செக்கப் வந்த இடத்துல எங்கூட பேசணும்னு சொல்லி இப்பதான் பேசிட்டு வச்சேன்”
“ஏதும் ப்ராப்ளமா?”
“நேரில வர சொல்றார், அதான் உனக்கு கால் பண்ணேன்”
“நான் கிளம்பி போயிட்டு வரட்டா?”
“போயிட்டு வா, நான் இன்னும் ஃபோர் டேஸ்ல வந்துட்டு போயிப் பாக்கறேன்”
“என்ன சென்னை வரீயா?”
“என்னடா இதுல ஆச்சரியம்?”
“ஆச்சர்யம் இல்லாம…, போயி ஃபிஃடீன் டேஸ்ல நீ இண்டியா வந்தா அது ஆச்சர்யம் தான”
“சரி, உன் வைஃப் மிருணா, பிரின்சஸ் நீரஜா எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“ம்… அவங்களுக்கென்ன… நல்லாயிருக்காங்க”
“சரி, போயி டாக்டர பாத்துட்டு கூப்பிடு”, என்றவன் அதற்குமேல் தனது வியாபார சம்பந்தமான வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.
——————–
அடுத்து வந்த இரண்டரை மணித்தியாலத்திற்குப் பின் சஞ்சய் அழைத்திருந்தான்.
“என்ன சொன்னார், டாக்டர்?”, அரவிந்த்
“நீ எவ்வளவு சீக்கிரம் ஊருக்கு வரீயோ வா, நேரில பேசிக்கலாம்”, சஞ்சய்
“என்னடா சொல்லுற?, அப்டி போனுல சொல்ல முடியாத விசயமா?”
“ஆமா… இப்ப ஹாஸ்பிடல்லதான் இருக்கேன், அப்பாவ இங்கதான் அட்மிட் பண்ணிருக்காங்க”
“ஏய் என்ன சொல்ற, அப்பாவுக்கு என்ன பண்ணுது?”
“நீ வர வர்ற நான் பாத்துக்கறேன்… பதட்டமில்லாம உன் வேலய முடிச்சிட்டு எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பி வா, வைக்குறேன்”
அதற்குமேல் இருப்பு கொள்ளவில்லை. வியாபாரங்களில் கவனம் செலுத்த இயலாத நிலையில் சென்னைக்கு திரும்ப முடிவெடுத்தான், அரவிந்த்.
அன்று கிளம்ப இயலாத நிலையில் அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனித்தான். அதிகாலையில் கிளம்பிய இண்டியன் ஏர்லைன்சில் பயணத்தை துவங்கி, எட்டு மணிக்கு சென்னையில் வந்திறங்கினான், அரவிந்த்.
வந்திறங்கியவன் நேராக மருத்துவமனைக்கு சென்று ரிஷப்சனில் சந்திரபோஸ் எனக்கேட்க, ஐசியூவில் இருப்பதாகவும், தற்போது அவரை காண அனுமதிக்க இயலாது எனக்கூறி, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையின் எண்ணைக் கூற, அவசர அவசரமாக அறை நோக்கி நடக்க ஆரம்பித்தான், அரவிந்த்.
—————————–