வானம் காணா வானவில்-10

வானம் காணா வானவில்-10

அத்தியாயம்-10

காலையில் எழுந்து தனது சிங்கப்பூர் கிளைப் பணியைத் துவங்கியவன், இரவு பத்து மணிவரை அலுவலகம் சார்ந்தவற்றை பார்த்து அசதியுடன் அறைக்கு திரும்பியிருந்தான், அரவிந்த்.

வந்தவன் அசதி தீர குளித்து, உணவுண்டதாக பெயர் செய்து படுக்கைக்கு வந்திருந்தான். அதுவரை சைலண்டாக இருந்த அலைபேசியை நார்மல் மோடுக்கு மாற்றி ஆன் செய்து பார்த்தான்.

பார்த்தவனுக்கு தன்னவளின் பத்து மிஸ்டு கால்கள் கண்டவுடன்… மனம் பதறி வைத்தது.  தவிர்க்க நினைக்காமல்… தவறிய தன்னவளின் அழைப்புகளை பற்றி எண்ணியவனுக்கு பாதாள உலகம் கண்ணில் வந்து, பயமுறுத்தியது. 

தன்னவளின் மேலுள்ள பயத்தாலல்ல.  அவளின் மேலுள்ள அளவற்ற காதலால்…!

தவிர்க்க முடியாத வேலைப் பளுவால், இப்படி சில நாட்கள்… கடந்து போகும். அது போன்ற அவனது நாட்கள் பற்றி அவன் குடும்பத்தார் அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால், தன்னவளுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாதே என்ற எண்ணம் ஒருபுறம் இருக்க, இந்திய நேரம் நள்ளிரவு என்பதை உணர்ந்தாலும், அதையும் கருதாது அவளுக்கு அந்நேரமே அழைத்திருந்தான், அரவிந்தன்.

சாலுவின் பத்து அழைப்பு பரவச அழைப்பு அல்ல. தன்னை பதம் பார்க்க விரும்பிய அழைப்பு என்பதை மூளையின் ஒரு ஓரத்தில் அவனது ஏழாம் அறிவு சொல்லியது.

உண்மையில் ஊரில் அவள் விரும்பாத… தன்னைப் பற்றிய அல்லது தன் குடும்பம் சார்ந்த நிகழ்வு தாக்கியதால் வந்த அழைப்பாக, தான் தவற விட்ட அழைப்புகளை கணித்திருந்தான், அரவிந்தன்

காதல் சொன்னது, தனக்காக உறங்காது இன்னும் அவள் காத்திருக்கிறாள் என்று.  காதலின் நம்பிக்கை தந்த உத்வேகத்தில் அழைத்து விட்டான்.

அந்த நடுநிசியிலும் உறக்கம் வந்து தழுவ வந்தபோதும் அதைவிட்டு தள்ளி நின்றாள். தன்னவன் இதுவரை தனது அழைப்பை ஏற்காமல் செய்த அலட்சியத்தை எண்ணி கோபம் மிகுதியானவளாய் படுக்கையில் அரை உறக்க நிலையில் இருந்தாள், பெண்.

தான் அவனது அழைப்பை ஏற்காத போது, அவனின் மனநிலையை சத்தமில்லாமல் சாதுர்யமாக மறந்திருந்தாள், பெண்.

நான்காவது அழைப்பில் எடுத்தவள், எதிர்முனை பேசக் காத்திருந்தாள்.

“ஷாலுமா…!”, என்ற அவளின் உயிர் தொட்ட அழைப்பில் நடந்ததை, அழைப்பு இது வரை ஏற்கப்படாததை, அதனால் வந்திருந்த வெறுப்பை சற்றே தள்ளி வைத்திருந்தாள்.

“இவ்வளவு நேரமா போன எடுக்க…!, உங்களுக்கு வேலையிருக்கும்னு மனசு சொன்னாலும்… என்னால அத ஏத்துக்கு முடியல… ஏன் இப்டி என்னைய ஊதாசீனப்படுத்துறீங்க…”, என அழுகைக் குரலில் விசாலினி கேட்க

தன்னவளின் அழுகை குரல் அரவிந்தனுக்கு புதிது.  இதுவரை எதற்காகவும், கீழிறங்கி வராதவள்… இன்று அவளின் அழும் குரலை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சாலினியின் அழுகை அவனை பதறச் செய்திருந்தது.

விளையாட்டாக பேச எண்ணியவன், அதை ஓரங்கட்டி அவளின் மனநிலையை உள்வாங்க உன்னிப்பாக அவளின் வார்த்தைகளைக் கவனித்திருந்தான்.

“ஏண்டா அழற மாதிரி பேசற, அங்க எல்லாரும் நல்லா இருக்காங்கள்ல, உனக்கு உடம்புக்கு முடியலயா! என்ன விசயமா கூப்பிட்டுருந்த…”, என குழந்தையிடம் பேசுவதுபோல மெதுவாகவே வினவினான்.

“எல்லாரும் நல்லாதான் இருக்காங்க… உங்கட்ட பேசத்தான் கூப்டேன்”, என முன்பிருந்த மனஅழுத்தம் அவனது அழைப்பில் சற்று குறைய… இலகுவாக பதிலளித்திருந்தாள், சாலினி.

“என்ன பேசக் கூப்ட, இப்ப சொல்லு…”, என அசதியில் உடல் அயர்வு தூக்கத்தைத் தேடியதைத் தள்ளிவிட்டு, கேட்டான்.

“உங்களுக்கு வாட்சப்ல ஸ்டில்ஸ், வீடியோஸ் போட்ருக்கேன் பாருங்க… அதப்பத்தி கேக்கத்தான் கூப்பிட்டேன்”, என்றவள் ‘அதைப் பார்த்தபிறகு மேற்கொண்டு பேசலாம். இனி உங்கிட்ட எனக்கென்ன பேச்சு’ என்ற தொனியில் ஷாலினியின் பேச்சு இருப்பதை உணர்ந்தவன், “தர்ட்டி செகண்ட்ஸ் அப்டியே லைன்ல இரு… பாத்துட்டு வரேன்”, என்றபடி வாட்சப்பில் விசாலினி அனுப்பியதைப் பார்க்க துவங்கினான்.

தர்ட்டி செகண்ட்ஸ் சொன்னவன், அதைப் போல ஆறு மடங்கு நேரங்களை அதற்காக விரயம் செய்தவனின், உடல் விரைத்து சமூகத்தை எண்ணிய கோபம் கனலாக வளர, ஷாலினியிடம் என்ன பேச… என ஒன்றும் புரியாமல்…

உணவை முடித்த அரை மணித்தியாலத்தில்… பத்து நாட்கள் பட்டினியாக இருந்தவன் போல குரல் தணிந்திருக்க, வெளிவரத் தயங்கிய தனது குரலைச் சீராக்கியவன்… “…. சொல்லுடா ஷாலு… நான் இப்பதான் பாத்தேன்…”, என ஷாலினியிடம் பொறுப்பைக் கொடுத்திருந்தான்.

“நான் இதுல என்ன சொல்ல முடியும்.  நீங்க தான் உங்களப் பத்தின இந்த விசயத்த எனக்கு கிளியர் பண்ணணும்”, என தன்னிடம் வந்த பந்தை அவனது கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தாள்.

“கிளியர் பண்ற அளவுக்கு என்மேல உனக்கு டவுட் இருக்கா…”, சுற்றி வளைத்து பேசாமல், சாக்கு போக்கு சொல்லாமல் நேரடியாகக் கேட்டிருந்தான் அரவிந்தன்.

“எனக்கு டவுட் வரதுக்காக இத உங்ககிட்ட நான் கொண்டு வரல… உங்களுக்கு இந்த விசயம் தெரிஞ்சு தான் நடந்திருக்கா… இல்ல இன்னும் உங்க நாலெட்ஜ்க்கு வரலயானு நான் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். 

அப்புறம்… இந்த மாதிரி ஒரு இஸ்யூ வர்ற அளவுக்கு ஏன் நீங்க நடந்துகிட்டிங்க… அப்டினு சொல்லுங்க… சொல்லப்பட்ட விசயத்துல எத்தனை பர்செண்ட் உண்மைனும் எனக்கு சொல்லுங்க…”, என தனக்கு வேண்டியவற்றை மறையாது கேட்டிருந்தாள், அவனின் ஷாலினி.

பெருமூச்சு ஒன்றை விட்டவன், மெதுவாக கூற ஆரம்பித்து இருந்தான்.

தன்னுடன் இளம் பொறியியல் படிப்பின் போது படித்த ஸ்ருதியை, தான் சிங்கப்பூர் கிளம்பிய நாளன்று சந்தித்ததைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் கூறியிருந்தான், அரவிந்தன்.  ஒரே ஃபிளைட்டில், அருகருகே பயணித்ததை மட்டும் கூறாமல் பொதுவான விடயங்கள் பற்றி பகிர்ந்திருந்தான்.

“சும்மா ஒரு ஹக் பண்ணத வச்சு ரெண்டு பேருக்கும் சீக்கிரமா கல்யாணம்னு உங்க பர்மிஷன் இல்லாம எப்டி போடுவாங்க!”, அரவிந்தனிடம் கேட்டாள்.

“ஸ்ருதி அப்டி சொல்லியிருந்தா… அதை அப்டியே போட வாய்ப்பு இருக்கு….  ஆனா இந்த நியூஸ் எப்டி வந்திருக்குனு நான் காலைல விசாரிக்கிறேன்.

இன்னும் ஸ்ருதிக்கு இதுபத்தி தெரியாம இருந்திருந்தா… அவ இந்த நியூஸ் மறுக்கலனு… இது தான் கன்ஃபார்ம்னு சொல்லும்… மீடியாஸ்…

சினி ஃபீல்டுல இருக்கிறவங்கள பத்தி சின்னதா ஒன்னு கிடைச்சாலும்… நியூஸ் கிடைச்சவன் என்ன ஃபீல் பண்றானோ உடனே அதை போட்ருவான். எதப் பத்தியும் யோசிக்கவே மாட்டானுங்க…

இன்னிக்கு இத மறுத்தோ, இல்ல வேற எது நான் பேசினாலும் ஒன்னு நாளா திரிச்சு எழுதுவாங்க… டிஆர்பிக்காக, வேற இப்ப போயிட்டிருக்கிற விசயத்தில இருந்து மக்கள டைவர்ட் பண்ண இப்டியெல்லாம் செய்யறதுதான்”, என தனது கருத்தை கூறினான்.

“எனக்கு அது பாத்ததுல இருந்து மனசே சரியில்ல… வீட்ல பாத்தா இன்னும் பிரச்சனையாகும்.  இருக்கிற பிரச்சனையில இது வேறயானு மண்டை காஞ்சிருச்சு”, என தனது வீட்டின் நிலவரத்தை எண்ணி, உணர்ந்து பேசினாள் விசாலினி.

“வர்ரி பண்ணாத… அன் எக்ஸ்பக்கடடா அவள நான் ரொம்ப வருசத்திக்கு பின்ன அன்னிக்கு தான் மீட் பண்ணேன். ஒரு சாதா மீட் இவ்வளவு டென்சனக் குடுக்கும்னு அப்ப தெரியல எனக்கு… காலைல ஸ்கூல் போகணுமில்ல… போய்த் தூங்கு”, இதமாகவே கூறினான்.

“எப்ப வருவீங்க!”, குரலில் டன் கணக்காய் ஏக்கத்தை உணர்ந்தவன்,

“அங்க இருக்கிற வர மனுசன கண்டுக்க கூட இல்ல… அங்க வந்தா என்ன பண்ண போற… அப்பவும் என்ன டீலுல விட்ருவ…”, என அவள் நடந்து கொண்டிருந்த விதத்தை குறித்து மறையாது பேசியிருந்தான்.

அவன் கூறியதில் சற்றே மனவருத்தம் வந்திருந்தபோதும், “இப்போ எனக்கு பாக்கணும்னு இருக்கு… அதான் கேட்டேன்”, என உள்ளத்தை உள்ளதுபடி உரைத்தவளை… உணர்ந்தவன்…

“த்ரீ மன்த்ஸ் இந்த பக்கமே வரல… எல்லா பிராஞ் ஆபிஸ் பாத்து முடிக்க எப்டியும் இன்னும் இரண்டு மாசம் ஆகும்.  அதுக்கப்புறம்தான் இண்டியா வரதா பிளான்… இப்ப என் டாலி கேட்டதால கன்சிடர் பண்ண வேண்டிய நிலைக்கு வந்திருக்கேன்.  இங்க சிங்கப்பூர், மலேசியா வேல முடிச்சிட்டு… முடிஞ்சா இண்டியா வந்துட்டுப் போறேன்”, தனது நிலையை பகிர்ந்தான்.

தன்னைத் தேடவும், தன்னையே நினைக்கவும்… ஒரு ஜீவனை தனது ஜீவிதத்தில்… தனக்காக தன் காதல் சாம்பாத்தியம் செய்து கொடுத்ததை எண்ணி மகிழ்ந்திருந்தான்.

‘இவளுக்குன்னு நான் என்ன செய்தேன்… எதுவும் செய்யல… ஆனா என்னை யாரோ ஒருத்தி.. தன் வருங்காலக் கணவன்னு சொல்ல… அதக்கேட்டு மனசொடிஞ்சு என்னைத் தேடற ஷாலு என்கிற ஜீவனுக்கு என்ன செய்யப் போறேன்…’ என நினைத்தபடியே தன்னவளிடம் பேசினான்.

“ம்… வர முடிஞ்சா கண்டிப்பா வந்துட்டு போங்க…”, என கட்டளையிட்டவள்

“ம்… சரிங்க மகாராணி”, என சிரித்தான் அரவிந்தன்.

“உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்கு”, மனக்குற்றம் குதர்க்கத்திற்கு வழி செய்து கொடுத்திருந்தது.

“ஏய் உண்மைய சொல்லு, இப்ப உன்ன நான் என்ன கிண்டல் பண்ணேன்”, சீரியஸ் மோடில் கேட்டிருந்தான், அரவிந்தன்.  களைப்பு அவனையறியாமல் பேசச் செய்திருந்தது.

“மகாராணின்னு சொன்னீங்க… அதத்தான் அப்டி சொன்னேன்”, விளக்கத்தை விளங்காமல் கூறியிருந்தாள்.

“சரி… இப்ப மனசுல இருந்தது எல்லாம் இறக்கி… கூலாயிட்டல்ல…”, எதேச்சை போல கேட்டான்.

“கூலாவும் ஆகல, பாலேவும் ஆடல… இன்னும் உங்க மேல எனக்கு கோவமா தான் இருக்கு… ரொம்ப தூரத்தில இருக்கிறவற இன்னும் விரட்டுனா… பயத்துல இந்த பக்கமே வராம இருந்துட்டா என்ன செய்யுறது நானு, அதான் சாஃப்டா ஹேண்டில் பண்ணிருக்கேன்”, என சாதாரணமாக பேசினாள்.

“அப்ப என்ன அங்க வரச் சொன்னது எம்மேல இருக்கிற லவ்ஸுல இல்ல… எம்மேல இருக்கிற கோபத்தை காட்ட அங்க வர சொல்லியிருக்க”, என தனது பாயிண்டைப் பிடித்திருந்தான்.

“…” , இதை எதிர்பாராமல் உறக்க கலக்கத்தில் இதுவரை ஏதோ பேசியவள், தற்போது நன்கு விழித்திருந்தாள்.

“கண்டுபிடிச்சிட்டானேனு யோசிக்கிறியா?”, அரவிந்தன்.

“நான் இப்டியெல்லாம் உங்கள மாதிரி குதர்க்கமா யோசிக்கல… உண்மைய சொன்னா இப்டி தான் சொல்லுவீங்க… இனி உங்ககிட்ட எதுவுமே சொல்லமாட்டேன்… போங்க… போயி தூங்குங்க”, என அரவிந்தனை விரட்டினாள், பெண்.

“ஏண்டா அத்தான் மேல கோபப்படற?”, என இறங்கிப் பேசினான்.

“நான் பேசமாட்டேன் இனி…”, பயம் அவளை இவ்வாறு பேசச் செய்தது.

“ஏண்டி பதினைஞ்சு நாளுக்கு பின்ன இன்னிக்கு தான்… என் கால அட்டெண்ட் பண்ணிருக்க… உன் பத்து மிஸ்டு கால் பாத்து பதறி கூப்டா என்ன பேச்சு பேசுற… டிட் ஃபார் டட் னு நான் பேசாம இருந்திருந்தா என்ன செஞ்சிருப்ப”, அவளின் இனி பேசமாட்டேன் என்ற வார்த்தையில் பழையதை நினைத்து இதுவரை கேட்காததை கேட்டிருந்தான்.

“இருந்து பாத்திருக்க வேண்டியதுதான… உங்கள யாரு எனக்கு கால் பண்ணச் சொன்னா”, வீரியம் அறியா வார்த்தைகளை ஷாலினியும் பேசியிருந்தாள்.

“தெரியாம பண்ணிட்டேன்… இனி கால் பண்ணல…. போயி தூங்கு”, தனது கட்டுப்பாட்டை மீறியவனாகப் பேசியிருந்தான்.

“என்னைய தூங்க அனுப்பிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க”, அவனின் மாடுலேசன் சற்று பயத்தைக் கிளற, பணிந்து பேசினாள் பெண்.

“என்னய பத்தி இப்ப என்ன பேச்சு… எப்டியோ எக்கேடோ கெட்டுப் போறேன்”, என வருத்தம் மேலிட பேசினான்.

“ஏன் இப்டியெல்லாம் பேசுறீங்க”, அவன் வார்த்தைகளை உணர்ந்தவள் வருந்திப் பேசினாள்.

“வேற என்ன செய்ய சொல்லுற… பக்கத்துல இருக்கும்போது கண்டுக்க மாட்டாளாம்.  ஊரு விட்டு வந்தவுடனே புடலங்கா விசயத்துக்கு பத்து கால் பண்ணுவாளாம்”, தன்னை அன்பின் நிமித்தமாக அழைக்கவில்லை… சந்தேகத்தில் அழைத்திருக்கிறாள் என்ற எண்ணத்தால் பேசியிருந்தான்.

“எது புடலங்கா”, விடயத்தின் வீரியம் அறிந்தவள் சண்டைக்கு தயாராகி இருந்தாள்.

“நீ வாட்சப்ல அனுப்புனதுதான்”, அரவிந்தன்.

“அதெப்படி அப்டி சொல்றீங்க”, விடாமல் கேட்டாள்.

“வேற எப்டி சொல்லுவாங்க… போற வர இடத்தில லட்சக்கணக்குல பொண்ணுகள பாக்குறோம்.  பேசறோம்.  ஆனா இத்தன வயசு வர உனக்காகனு வயிட் பண்றேனு தெரிஞ்சும்… உனக்கு ஸ்ருதியோட என்னைப் பாத்தவுடனே ஏன் கோபம் வருது… அப்ப என்மேல உனக்கு நம்பிக்கை இல்லயா?”, ஆண் தனக்கான கேள்வியை ஒளிவு மறைவில்லாமல் கேட்டிருந்தான்.

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.  ஆனா பதினைஞ்சு நாளா உங்கள பாக்கமா, பேசாம இருந்ததால நீங்க இப்டி பண்றீங்களோனு தான் நினைச்சேன்”, பெண்களின் பின்புத்தி அப்டி யோசிக்கச் செய்யும் என்பதை மறைமுகமாகக் கூறியிருந்தாள்.

“அது எப்டி மீடியால போயி இப்டி வெளையாடுவாங்களா? இல்ல தெரியாமதான் கேக்குறேன்.  எதெதெல விளையாடணும்னு விவஸ்தை தெரியாதவன்னு நினைச்சியா என்னை?  நீ கால் பண்ணத பாத்து வீட்டுல ஏதும் பிரச்சனையோன்னு தான் பேசினேன்.  அப்பவே வாட்சப் ஓபன் பண்ணிருந்தன்னா உனக்கு கால் பண்ணிருக்கவே மாட்டேன்”, உண்மை பேசினான்.

“இப்ப என்ன சொல்ல வர்றீங்க, நான் உங்கள சந்தேகப்படறேன்னா நினைக்கறீங்க”, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வந்திருந்தாள்.

“உன் மனச பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது… அது உன் சார்ந்த விசயம்…

ஆனா என்ன பத்தி தவறா நினைக்காத… எங்கம்மா என்னை அப்டி வளக்கல… பொண்ணுங்கன்னா அவங்க எப்டி இருந்தாலும், கல்யாணம் கட்டின பொண்ணைத் தவிர… வேற எந்தப் பொண்ணுப் பாத்தாலும்… வேற எண்ணம் மனசுல வரக்கூடாதுனு என்னோட டீன் எஜ்லயே எங்கம்மா எங்கிட்ட சொல்லியிருக்காங்க…

உங்கூட பேசியிருக்கேன்.  நேருல பாத்திருக்கேன்.  என் பார்வைல என்னைக்காவது விகற்பமா நான் பாத்தத பாத்திருக்கியா…

ஆனா உன்னை என் வயிஃபா தான் நினைச்சுருக்கேன்.  அப்டி நினைக்கிற உங்கிட்டயே கண்ணியமா வெளியில நடக்கிற நான் ஒரு நாளும் தப்பு செய்யமாட்டேன்.

இன்னிக்கு வர எங்கம்மா சொல்லி வளத்தபடிதான் இருக்கேன்.  இனியும் அப்டிதான் இருப்பேன்”, சத்தியம் பேசினான்.

“சாரி… உங்கள தப்பா நினைக்கல… பக்கத்துல நீங்க இல்லாத கஷ்டம்… அதோட இதப் பாத்தவுடனே என்னையறியாம கோபம் தான் வந்துது.  ஆனா உங்கள ஒரு நிமிசம் கூட சந்தேகப்படல…”, தன் மனம் நினைத்ததைக் கூறி மன்றாடினாள்.

“வையி போன”, என்றவன் அலைபேசியை வைத்ததோடு, அணைத்திருந்தான்.

அடுத்து இரு முறை அழைத்தவள், ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியில், உறங்காது விடியல் வரை விழித்திருந்தாள்.

பார்க்காத வரை பக்குவமாகச் சென்ற காதல், பலநிலைகளைக் கடக்கும் போது எட்டுத்திசைகளிலும் அடி வாங்கி, தன்னை இம்சை செய்வதை எண்ணி வருந்தினாள், விசாலினி.

அலைபேசியை அணைத்தவனை அசதி அழைத்தாலும், உறக்கம் கண்ணை விட்டு வெகுதூரம் அகன்றிருந்து.

சுயஇரக்கம் ஒரு புறம்.  தன்னவளின் நினைவு ஒரு புறம்.  இரண்டுக்குமிடையே அல்லாடிய மனதை என்ன செய்வதென அறியாமல் அந்த இரவிலும், தியானத்தில் அமர்ந்தான்.

தியானம் கைகூடவில்லை.  அவளின் எண்ணம் மட்டுமே மனத்திரையில் திரையிடப்பட்டு ஓடியது.  இருந்தாலும் பின்வாங்காமல் அரை மணித்தியாலம் தியான நிலையில் அமர்ந்திருந்தான்.

‘சில்வியா மைண்ட் கண்ட்ரோல்’ முறையில் குபேர முத்திரையுடன் பதினைந்து நிமிடங்கள் தன்னவளை நினைத்தபடியே இருந்தான்.

பேச்சில் சமரசம் செய்ய விழையாமல் தனது செயலால் சமரசம் செய்தான் தன்னவளுடன்.  மனம் இலேசாகியது.

மனது பாரம் சற்று குறைய, படுக்கையில் வந்து கண்களை மூடி படுத்தபடியே விடியலுக்காக காத்திருந்தான்.

விடியல் நல்செய்தி தருமா?

error: Content is protected !!