அத்தியாயம்-13
அரவிந்தன், ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய பயண ஏற்பாட்டைக் கவனிக்க வெளியில் சென்றிருந்த வேளையில்,
“அரவிந்த காணல, எங்க போயிருக்கான்?”, என்றபடி வந்த கணவனின் கேள்விக்கு
மகன் ஆஸ்திரேலியா செல்லவேண்டிய பயண விடயமாக வேலையாய் இருப்பதைப் பகிர்ந்து கொண்டார், நீலா.
மனைவி கூறியதைக் கேட்டவர்,
“இப்போ அவன கிளம்ப வேணாம்னு சொல்லணும்…. நீலா!”,என கூறினார், போஸ்.
“ஏங்க?, எதுவும் முக்கியமான வேல… இங்க இருக்கா?”
“கோவில்ல வச்சு பிரச்சனையான குடும்பத்த விசாரிக்க சொன்னதுல… மனசுக்கு நெருடலா சில விசயம் தெரிய வந்துது!”
“இத்தன நாளா இதுபத்தி ஒண்ணும் சொல்லலயே நீங்க…!”, என பேச்சை முடிக்காமல் இழுத்தார் நீலா.
“சொல்ற மாதிரி இல்ல…! இன்னும் சரியா எல்லா விசயமும் நம்ம காதுக்கு வரல…! அதான் அதப் பத்தி எதுவும் பேசல…!
நல்ல வேளை… அன்னிக்கு அரவிந்த் அவன் போட்ட ஒரு முடிச்சோட விசாலிய தன்பக்கமா இழுத்து, தடுத்து நிறுத்திட்டான்.
இல்லனா அந்த பையன் கண்ணை மூடிட்டு… மூனு முடிச்சு போட்டுருப்பான். அப்டிமட்டும் நடந்திருந்தா… இன்னும் நிறைய பிரச்சனை வந்திட்டு இருக்கும்!
உங்க அம்மா அன்னிக்கு செய்ததையும்… லாயர் அப்ரிசியேட் பண்ணார்.
வயசானவங்க பலர், கடவுளோட சன்னிதியில நடந்தத… இறைவனோட நாட்டத்தை… நாமா மாத்தக் கூடாதுனு… ஏத்துக்க சொல்லி சொல்லிருவாங்க.
ஆனா உங்க அம்மா அன்னிக்கு அப்டி சொல்லாம…! உடனே விசாலி கழுத்தில இருந்த மாங்கல்யத்தை எடுத்து கோவில் உண்டியல்ல போட்டாங்க!
நம்ம லாயர்கிட்ட இந்த விசயத்தை எல்லாம் சொல்லி… அடுத்து என்ன செய்யணும்னு கேட்டுத்தான் போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுத்தோம்”
“எப்ப போயி கம்ப்ளைண்ட் பண்ணிங்க, எங்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலயே?”, என நீலா கேட்க
“கருணாவும், நானும் மேரேஜ் நடந்த அன்னிக்கே போயி, இந்த மாதிரி எதிர்பாரா அசம்பாவிதம் கல்யாணத்துல நடந்திருக்குனு கம்ப்ளையண்ட் எழுதிக் குடுத்திட்டு வந்திருந்தோம்.
மேற்கொண்டு அவங்க எதாவது பிரச்சனை பண்ணா, இனி போலீஸ் பாத்துப்பாங்க!”
“நம்மகிட்ட வந்து அவங்க எதுக்கு பிரச்சனை பண்ணணும்?”
“எதாவது ஆதாயம் கிடைக்கும்னா பண்ணலாம்ல….
நம்ம ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதால, அந்த குடும்பம் பத்தி விசாரணை நடத்தி… நம்மையும் அலார்ட் பண்ணியிருக்காங்க.
உங்க அம்மா சொல்ற மாதிரி மூனு மாசங்கழிச்சு தாலி கட்டறது ஓகே தான். ஆனா அதுக்கு முன்ன, போலீஸ், லாயர் ரெண்டு பேரோட அட்வைஸ்படி இவங்களுக்கு மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். அது தான் சேஃப்!”, என்றார் சந்திரபோஸ்.
“இப்ப அரவிந்த் வர நேரம் தான்! கொஞ்சம் வேல முடிக்க வேண்டி இருக்குனு வெளிய கிளம்பினான். அத முடிச்சிட்டு… அப்டியே அம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்னு சொன்னான். இங்க வந்த பின்ன சொல்லிக்குவோம்”, என்றவர், “அவங்க வீட்ல இருந்து என்ன மாதிரியான பிரச்சனை வரும்னு… நீங்க நினைக்கறீங்க?”, என தனது கணவரிடம் கேட்டார் நீலா.
“அவங்க நியாயம்னா… என்னனே தெரியாத குடும்பமா இருக்காங்க…!”, என வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார், போஸ்.
“அவங்க நியாயத்துக்கும், நமக்கும் என்ன சம்பந்தம்?”
“குறுக்கு வழியில இதுவர எல்லாம் செய்து வாழ்ந்தவங்ககிட்ட, நம்ம விசயத்துல மட்டும் எப்டி நல்ல ரிசல்ட் வரும்னு எதிர்பாக்க முடியும்?”
“என்னங்க சொல்றீங்க?”, என்றார் பதறியபடி
“உழைச்சு… முறையான சம்பாத்தியம்னு இதுவர அவங்க பண்ண மாதிரி தெரியல, ஆனா பணங்காசுனு நல்லா இப்ப வாழறாங்க…!
நாலு பசங்க. அவங்கள்லாம் சின்னவங்களா இருக்கும்போதே அவங்கப்பா ஏதோ ஆக்ஸிடென்ட்ல தவறிட்டார் போல. அவங்கம்மாவும், புள்ளைங்க கொண்டு வந்து தர பணம் எந்த வழியில வருதுனு எதுவும் கேக்காம… அப்டியே விட்டு… ஒரு மனிதநேயம் இல்லாத மனுசங்களா வளந்திருக்கானுங்க. பக்கத்துல அண்டவே அந்த ஏரியால இருக்குற மக்கள் பயப்படற மாதிரி மோசமா வளந்து இருக்காங்க…!
மூத்தவன் குட்டி குமார் அப்டிங்கற ரௌடிகிட்ட வேலயில இருக்கான். அவன் பேருல இல்லாத கேஸே இல்ல…!
அவனுக்கு கல்யாணம் அப்டிங்கற மாதிரி எதுவும் நடந்ததா பக்கத்துல இருக்கறவங்களுக்கே தெரியல. ஆனா தீடீர்னு ஒருநாள் ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கான். அவங்கம்மாவும் எதுவும் கேட்டுக்கலயாம். பக்கத்துல குடியிருக்கிறவங்க ‘யாரு அந்தப் பொண்ணு… உங்களுக்கு உறவானு’ கேட்டதுக்கே… அவன் அம்மா பக்கத்து வீட்டம்மாவோட சண்டைக்கு வந்துட்டாங்களாம்.
ஹார்பர் சைடுல அடுத்த ரெண்டு பேரு போயி வரானுங்க. திடீர்னு ரெண்டு நாள்… அவனுங்க எங்க போனாங்கன்னே தெரிய மாட்டிங்குது. அப்டி இருக்காங்க.
நிரந்தரமான ஒரு வேலைல அவனுங்க இருக்கற மாதிரி தெரியல.
இல்லாத கெட்ட பழக்கமே அவனுகளுக்கு கிடையாதாம். போனா போன இடம். வந்தா இருக்கிற இடம்னு இருக்காங்க.
மூத்தவனோட ஆதரவு இருக்கிறதால, எங்கயும் போயி இவனுகனால பிரச்சனை வந்தாலும், ஈஸியா தப்பிச்சிறானுங்கனு… அவங்க இருக்கிற ஏரியால பேசிக்கிறாங்க.
கடைசிப் பையன் மட்டும் இவனுக மாதிரி இல்லாம படிச்சிருக்கான். ஆனாலும், காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது திடீர்னு ஏதோ ஒரு பிரச்சனையில தற்கொலை பண்ணிட்டு செத்துட்டானாம்.
நம்மளோட பிரச்சனை ஆனவன் ரெண்டாவது பையன். அவனுக்கு பாத்த பொண்ணு வீட்லயும்… ஏதோ மிரட்டி தான் பேசி முடிச்சிருக்கானுங்க. பத்திரிக்கை கூட அடிக்கலயாம். விஏஓ கிட்ட சர்ட்டிபிகேட் வாங்க மட்டும் ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் கலர் பிரிண்ட்ல அடிச்சுருக்கானுங்க.
கல்யாணம்னு அந்த ஏரியால யாருக்கும் பத்திரிக்கை கொடுக்கலயாம்.
வளந்து கெட்டவனுக்கு கல்யாணம்கிறதே அந்த ஏரியால யாருக்கும் தெரியல.
அந்த பொண்ணு வீட்லயும் இல்லாதவங்க போல. இரண்டு பொண்ணு. அசிங்கப்படுத்திருவேன்னு மிரட்டுனவுடனே பயந்து… படிச்சிட்டு இருந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ண முன் வந்திருக்காங்க.
இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்க அவங்க எடுத்த எல்லா முயற்சிலயும், அந்த ரௌடியோட ஆளுங்களோட வந்து மூத்தவன் மிரட்டியிருக்கான்.
போலீஸ் விசாரிச்சப்பதான் இதல்லாம் வெளியே தெரிய வந்திருக்கு.
அன்னிக்கு நாம கிளம்பி வந்த பின்ன… கல்யாணம் எதுவும் அவனுக்கு நடக்கல. அந்த பொண்ண… வேணாணு சொல்லிட்டு கிளம்பி போயிருக்காங்க…!
அவனுங்கனால பிரச்சனை எதுவும் வராம இருக்க வேண்டிய ஏற்பாட நாம செய்திருந்தாலும், நம்ம ஏரியா ஏசிபி சொல்ற மாதிரி மேரேஜ் ரெஜிஸ்டர் செய்துக்குவோம்.
நம்மனால ஒரு பொண்ணு வாழ்க்கை காப்பாத்தப்பட்டிருக்கு இப்போ!”
“ரெஜிஸ்டர் மேரேஜ் பத்தி அம்மாட்ட பேசியாச்சா?”, நீலா
“இல்ல… கருணா இன்னிக்கு ஆபீஸ்ல வந்து நேருல பேசிட்டு, வீட்டுக்கு கிளம்பினாப்ல. அவரே அம்மாட்ட சொல்றேன்னு சொல்லிட்டாப்ல”, போஸ்
“அரவிந்துக்கு கல்யாணம்னு ஆரம்பச்சதிலிருந்து ஒரே பிரச்சனையா இருக்கு?”, என கவலையுடன் கூறினார், நீலா.
“ம்… என்னனு தெரியல… இனிமேலாது எல்லாம் நல்லா நடக்கணும்”, என்றபடியே மகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர், இருவரும்.
——————————-
முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், திருமணத்தை தங்களது வசதிக்கேற்ற நாளில் ரெஜிஸ்டர் செய்ய முடிவு செய்திருந்தனர்.
நமச்சிவாயம் அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அழகம்மாள் வீட்டிலேயே தங்கிவிட்டார்.
நீலவேணி, சந்திரபோஸ், கருணாகரன், கயல்விழி, கிருபாகரன், கற்பகம், சஞ்சய், மிருணா, அரவிந்த், விசாலினி மட்டும் ரெஜிஸ்ட்ரேசன் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்து திரும்பியிருந்தனர்.
திருமணம் முடிந்து, அழகம்மாள், நமச்சிவாயத்திடம் ஆசிர்வாதம் பெற வீட்டிற்கு வந்தனர், மணமக்கள்.
“தீர்க்க சுமங்கலியா இரு, நீ சிரஞ்சீவியா இருயா ராசா…!”, என இருவரும் இணைந்து மனம் நெகிழ மணமக்களை வாழ்த்தினர்.
———————
மணமக்கள் இருவரும் விசாலினியின் அறையில் இருக்க, மற்றவர்கள் ஹாலில் அமர்ந்து சற்று இதமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.
விசாலினி, அரவிந்த் ஆஸ்திரேலியா சென்று விட்டால், தான் தனித்து இருப்பதை எண்ணி பயந்திருந்தவளுக்கு, எதிர்பாராமல் நடந்த பதிவுத் திருமணம், பரவசத்தைத் தந்திருந்தது.
அரவிந்தனும் மறுப்பு எதுவும் சொல்லாமல், பயணத்தை தள்ளி வைத்திருந்தான்.
திருமணம் முடிந்து உடனே வெளிநாட்டு பயணம் வேண்டாம், என அழகம்மாள் தடுத்திருக்க, சென்னையில் உள்ள பணிகளை தொடர எண்ணியிருந்தான், அரவிந்தன்.
ஆனால், முறையாக தாலி கட்டிய பிறகே மற்ற சடங்குகள் என திட்டவட்டமாகக் கூறியிருந்தார், அழகம்மாள்.
மணமக்கள் இருவரும் அதை ஆமோதித்து இருந்தனர்.
நீலவேணியின் ஆசைக்கிணங்க, மருமகளை தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல தாயை அணுகி கேட்டிருந்தார்.
அழகம்மாளும் மறுக்காமல் உடன் அனுப்பி வைத்தார்.
———————————————–
வெளிநாடு செல்ல அழகம்மாள் தடை விதித்திருக்க, தனது பயணத்தை தள்ளி போட்டிருந்தவன்,
பாட்டியிடம், “இனி எம் பொண்டாட்டிய விட்டு எங்கயும் நான் தனியா போறதா இல்ல பாட்டி”, என தனது எண்ணத்தை தெளிவாகக் கூறியிருந்தான், அரவிந்தன்.
“உன்னை யாரு ராச… அவள விட்டுட்டு எங்கயும் தனியா போகச் சொன்னது?”, என தனது இணக்கத்தை மறைமுகமாக தெரிவித்திருந்தார், அழகம்மாள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஜாகை மாறியது. ஆனாலும், விதித்திருந்த தடைகள் சீனப் பெருஞ்சுவராக நீண்டிருந்தது.
பகலில் அலுவலகம், பள்ளி என வெளியில் செல்லும் போது, உடன் மனைவியையும் அழைத்துச் சென்றான், அரவிந்தன்.
விசாலினியை தவிர வேறு எதுவும் அவனுக்கு தெரியவில்லை. அறிந்து கொள்ள அவன் எண்ணவில்லை.
நாட்கள் அதன் போக்கில், இருவரின் திட்டமிடலோடு இன்பமாக சென்றது.
மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில், மிக எளிமையாக திருமணம் செய்திருந்தனர். திருமணம் கைகூட, ஏங்கிய இரு உள்ளங்களும், நிறைவாக அந்த தருணத்தை ரசித்திருந்தனர்.
பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு, காவல் துறையின் மறைமுக ஆதரவுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊரெங்கும் அழைப்பு விடப்பட்டிருக்க, நேரில் அழைப்பு வராத பலரும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
பதிவு திருமணத்திற்கு பிறகே ஒருவரையொருவர் விட்டு இருக்க மனமில்லாமல், ஒரே இடத்தில் தங்கியிருந்தனர்.
ஆனாலும், கட்டுப்பாடுகள் கடலளவு இருக்க, கரை தொட பயந்த அலை போல, இருவரும் பழகியிருந்தனர்.
முறையான திருமணத்தால்… முடிவுக்கு வந்த தங்களின் அவாவை ரசித்திருந்தனர்.
வானவில்லைக் காணா வானம்!
அவன்(ள்) இல்லா வாழ்வு…!
வானம் காணா வானவில்!!!
மழை பொழிய வழியில்லாமல்
கார்முகிலை களவு கொடுக்க…!
வறட்சியால் பிளவுபட்ட நிலம் போல…!
வானநீரை நோக்கிக் காத்திருக்க…!
கார்முகில்
கரைய, களைய
காரணமான காரணிகள்…!
வாழ்வின் வசந்தத்தை
தடை செய்திருக்க…!
தடைகள் உடைத்து
தரணியை ஆளும்
உத்வேகம்!
உளி கொண்டு…
வாழ்வின் ஒளியை
செதுக்க விழைய…!
உள்ளம்
ஒன்றுபட்டு!
உயிர் ஒன்றுபட!
மணவாளன் தந்திட்ட
மாங்கல்யம்!!!
உள்ளத்தில்
உயிர்ப்பு
தோன்றியிருக்க…!
ஏழேழு பிறவியிலும்
இணைந்து
வாழ்ந்ததைப் போன்ற
நிறைவுடன்
மணமக்கள்
மகிழ்ச்சியினால்
மனம் நிறைந்திருந்தனர்!!!
மனதின் மகிழ்ச்சி இருவரையும் வசியமாக்கியது.
வசியத்தால் மனம் மயங்கியிருந்தது.
வந்தவர்கள், வாழ்த்தியவர்கள், உற்றார், உறவினர்கள், சுற்றம், நட்பு மறந்து தங்களை மட்டுமே உணர்ந்திருந்தனர்.
இருவரின் அருகாமை ஒருவரையொருவர் ஆகர்ஷித்திருந்தது.
——————
இருவரின் திருமண வரவேற்பு நிகழ்விற்கு பின் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள், தங்களின் வரவேற்பு அலுப்பினால், அரவிந்தனின் அணைப்பில் விசாலியுடன்… நீண்ட நெடிய தினங்களுக்குப் பின் அயர்ந்து உறக்கத்தில் இருந்தனர்.
கனவில் களித்திருந்தனர்.
உறவு, நிறைவானதால் தயக்கமில்லா உறக்கத்தை தழுவியிருந்தனர்.
—————————————
அதே நேரம், வரவேற்பு நிகழ்விற்கு வந்திருந்த பரிசுப் பொருட்களை காவல் துறையின் வழிகாட்டுதலின் பேரில் முறையாக சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டு இருந்தது.
பரிசுப் பொருட்கள் அனைத்தையும், உரிய நபர்களைக் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தி, நம்பகத்தன்மையற்ற நிலையில் இருந்த பொருட்களை ஒதுக்கி வைத்திருந்தனர்.
ஒதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் வாங்கப்பட்டிருந்த, இடங்களின் பெயர்களைக் கொண்டு மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்தியிருந்தனர், காவல்துறையினர்.
சந்தேகத்திற்குரிய விடயங்களை ஆய்வு செய்த காவல்துறை, முடிவாக இரு நபர்களை சந்தேகப்படுவதாக கூறி, விடயத்தை சந்திரபோஸிற்கு தெரியப்படுத்தினர்.
————————