அத்தியாயம்-16
விசாலினிக்கு, வனிதாவின் வீட்டு அலைபேசி எண் ஃபேன்சியாக இருந்ததால் மனனம் ஆகியிருந்தது. ஆகையால், வனிதா வேறு எண்ணில் பேசியதை எளிதாகக் கண்டு பிடித்திருந்தாள்.
இதுவரை பயன்படுத்திய எண்ணாக இல்லாமல், அன்று புதிய எண்ணிற்கு அழைத்து பேசியிருந்தாள், வனிதா.
வனிதா வழமை போல இல்லாமல் பதற்றத்தில் இருந்தாள். இயல்பைத் தொலைத்திருந்தவளிடம் மேற்கொண்டு எதுவும் கேட்க விசாலினிக்கும் தோன்றவில்லை.
அன்று வனிதா அழைத்துப் பேசிய, புதிய எண்ணையும் வனிதாவின் பெயரிலேயே சேமித்திருந்தாள், விசாலினி.
அடுத்து வந்த கல்லூரி செல்லும் நாளில், பேருந்து நிறுத்தத்தில் விசாலினி நின்றிருந்தாள். பேருந்து வரும் வேளையில், வனிதாவின் பெயரில் சேமிக்கப்பட்ட புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர
‘இன்னிக்கும் இந்த வனிதா லீவா’, என எண்ணியவள் பேருந்து வரும் நேரம் என்பதால் முதலில் விசாலினி, வனிதாவின் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை.
அடுத்தடுத்து மீண்டும் அழைக்கவே, என்ன அவசர விடயமாக இருக்கும் என எண்ணி எடுத்து ‘ஹலோ’ என்றிருந்தாள்.
“வனிதா, இன்னிக்கு ஈவினிங் டியூசனுக்கு அதே பார்க்குக்கு வந்திரு… கண்டிப்பா நான் அங்க வருவேன்”, என்று ஒரு ஆணின் குரல் கேட்க,
“நீங்க யாரு பேசுறது? நான் வனிதா இல்ல…!”, என்று விசாலினி இடையிட்டுக் கூற
அதற்குள் எதிர்முனை அலைபேசியின் அழைப்பை சட்டென்று துண்டித்திருந்தது.
——————–
அடுத்தநாள் காலையில் வனிதாவை பேருந்து நிறுத்தத்தில் வழமை போல விசாலினி சந்தித்தாள்.
“உங்க அம்மா, அப்பா வெளியூர் போயிருக்காங்களா வனிதா?”, விசாலினி
“இல்லக்கா. இங்க தான் இருக்காங்க. ஏன் கேக்கறீங்க?”, வனிதா
“என் மொபைல் நம்பர வேற யாருக்கும் குடுத்துருக்கியா?”, என வனிதாவை நேரடியாக வினவ
“யாருக்கிட்டயும் உங்க நம்பர் குடுக்கலயேக்கா…”, என்று அப்பாவித் தோற்றம் காண்பித்தாள், வனிதா.
“நேத்து, என் நம்பருக்கு கால் வந்துது… ‘ஈவினிங் அதே பார்க்குக்கு டியூசனுக்கு வந்திரு வனிதானு’!, நீ என் நம்பர… யாருக்கும் குடுக்கலங்கற! பேசினது யாரு? உன் டியூசன் மாஸ்டரா?”, என்றாள் சிரித்தபடியே
“…”, வனிதா திருதிருவென விழித்திருந்தாள்.
“படிக்க இடமே இல்லாம… பார்க்குல போயி படிக்கிறீங்க போல…! அதுவும் டியூசன்…!”, என நக்கலாக கேட்டிருந்தாள், விசாலினி.
“….”, பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள், வனிதா.
“நான் வனிதா இல்லைனு சொன்னவுடனே, டக்குனு போன கட் பண்ணிட்டாரு, உன் டியூசன் மாஸ்டரு!”
“…”, வனிதா.
“இனி என் நம்பருக்கு நீ கால் பண்றதோ… இல்ல உங்க வீட்ல இருந்து எனக்கு எதுவும் மெசேஜ் அனுப்புறதோ வேணாம் வனிதா.
நேத்திக்கு முந்தினநாள், உங்க அம்மாவுக்கு பேசணும்னு எங்க கேம்பஸ் வந்தியே… ஞாபகம் இருக்கா?
நீ அர்ஜெண்டா உங்க அம்மாகிட்ட முக்கியமான விசயம் பேசணும்னு எங்கிட்ட கேட்டதால, நான் என் போனை மேம்கிட்ட இருந்து வாங்கிக் குடுத்தனே…! அப்போ கூட நீ காரிடர்ல நின்னு பேசாம போனை வாங்கிட்டுப் போயி… நாவல் மரத்தடில போயி நின்னு பேசிணியே!
அந்த நம்பர்ல இருந்து தான், நேத்து காலைல எனக்குப் போன் வந்துது.
அப்ப… உங்க அம்மாவுக்கு கால் பண்ணணும்னு எங்கிட்ட சொல்லிட்டு, வீட்டுக்கு பண்ணாம யாருக்கோ பேசியிருக்க… அந்தப் பையன் அது உன் நம்பர்னு நினைச்சுட்டு… நேத்து என் நம்பர்கு கால் பண்ணிருக்கான்.
இந்த மாதிரி பழக்கமெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது.
நீ டியூசன் படிச்சு, பெரிய்ய்ய்ய்ய ஆளாகு… நான் வேணாணு சொல்லல. அது உன் மொபைல வச்சு படி, அதவிட்டுட்டு… நீ பார்க்குல போயி டியூசன் படிக்க… நான் ஆளு இல்லம்மா”, என சற்று கறாராகவே கத்தரித்துக் கூறியிருந்தாள், விசாலினி.
“சாரிக்கா…”, என்றவள் அதன்பின் விசாலினியை கண்டு கொள்ளாமல் தனித்து வருவதும், போவதுமாக இருந்தாள் வனிதா.
வனிதாவை பேருந்து நிறுத்தத்தில் நேரில் பார்த்தாலும், அவளுடன் முன்பு போல இயல்பாக பேசுவதை விரும்பவில்லை விசாலினி.
அத்தோடு வனிதாவின் பெயரில் சேமித்திருந்த இரு அலைபேசி எண்களையும் தனது அலைபேசியில் இருந்து அழித்தும் விட்டிருந்தாள்.
இரு நாட்கள் கடந்த நிலையில், மாலை வேளைக்குப்பின் வீட்டில் இருக்கும் போது, வாட்சப்பில் புதிய எண்ணிலிருந்து வந்த செய்தியைக் கண்டு, எடுக்காமல் வைத்திருந்தாள்.
குறைந்த இடைவேளையில் அடுத்தடுத்து வாட்சப் மெசேஜ் நோட்டிஃபிகேசன் வரவே, எடுத்துப் பார்த்தாள், விசாலினி.
“எனக்கு டியூசன் எடுக்கணும்”, என முதலில் மெசேஜ் வந்தது. சற்று நேரத்தில் மீண்டும் அதே மெசேஜ் வந்திருந்தது.
“டியூசன் டைம் என்ன?”, என தங்லீஸ் மெசேஜ் வந்திருக்க, உடனே வனிதாவின் நினைவு வந்தாலும், அவளைப் பற்றி தந்தையிடம் எதுவும் கூறாமல், குறுஞ்செய்தியை காட்டி… தந்தை கிருபாகரனிடம் விடயத்தைப் பகிர்ந்திருந்தாள்.
“டாட்… இது புது நம்பர். என் காண்டாக்ட்லயே இல்லாத நம்பரா இருக்கு. ஆனா வாட்சப்ல மெசேஜ் அனுப்பி டியூசன் பத்தி கேக்கறாங்க, யாரு நீங்கனு கேக்கவா?”, என்றபடியே தந்தையிடம் தனது அலைபேசியைக் கொடுத்திருந்தாள், விசாலினி.
“இங்க தா, நான் மெசேஜ் பண்ணி பாக்கறேன். இல்லனா கால் பண்ணி என்னானு கேப்போம்”, என கிருபாகரன் அலைபேசியை வாங்கி பதில் மெசேஜ் செய்திருந்தார்.
எதிர்முனை எண், கிருபாகரன் வினவிய எந்த வினாவிற்கும் பதிலையோ, எண்ணுக்குரியவர்களைப் பற்றிய எந்த சுய விபரங்களையுமோ கொடுக்கவில்லை.
அடுத்து நாள் காலையில், விசாலினியின் அலைபேசிக்கு அடுத்தடுத்து டியூசன் பற்றிய விவரங்கள் கேட்டு, ஏற்கனவே வினாவிய வினாக்களையே கணைகளாகத் தொடுத்த வண்ணம் அந்த புதிய எண்ணுக்குரியவர் இருக்க, எந்தப் பதிலும் மேற்கொண்டு அனுப்பாமல் பிளாக் செய்திருந்தார், கிருபாகரன்.
அன்று மாலை வேளையில், வேறொரு எண்ணிலிருந்து மீண்டும் அதே நபரிடம் இருந்து விசாலினியின் எண்ணுக்கே குறுஞ்செய்தி வர, இரண்டு நாள் மட்டும் பொறுத்திருந்தவர், வரும் செய்தியின் தன்மையை புரிந்தும் புரியாமல் அந்த எண்ணுக்கு அழைத்திருந்தார்.
அழைப்பு எடுக்கப்படாமல் போகவே, சிக்கலை நீட்டிக்க விரும்பாமல் முறையாக காவல்துறையில் புகார் செய்திருந்தார், கிருபாகரன்.
தனது எண்ணிற்கு இது போல காலை, மாலை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கடந்த மூன்று நாட்களாக குறுஞ்செய்திகள் டியூசன் பற்றிய விபரங்கள் கேட்டு வருவதாகவும், தனது கேள்விகளுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், அலைபேசி எண்ணை பிளாக் செய்த பின்பும், வேறொரு எண்ணிலிருந்து தொடர்ந்து குறுஞ்செய்தி வருவதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
வந்த செய்திகளை ஸ்கீரின் ஷாட் எடுத்துக் காட்டியிருந்தார்.
சற்று நேரத்தில் அந்த செய்திகள் அனுப்பியவராலேயே அழிக்கப்பட்டதால், கிருபாகரன் யோசித்து அவ்வாறு செய்திருந்தார்.
டியூசன் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த செய்தியும் குறிப்பிடாமல் வந்திருந்த செய்தியாதலால், விசாலினியின் அலைபேசிக்கு வந்த இரு புதிய எண்களையும் குறிப்பிட்டு புகார் செய்திருந்தார், கிருபாகரன்.
அந்த குறிப்பிட்ட இரு எண்களையும் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, கண்காணித்து வந்தனர்.
முதலில் வாட்சப் செய்தி வந்த எண்ணிலிருந்து, அழைக்கப்பட்ட அழைப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள், வாட்சப் செய்திகள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டு இருந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் வாட்சப் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட அலைபேசி எண்ணுக்குரிய முகவரியில், சரண் என்பவனை அணுகி, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
மற்றொரு புதிய அலைபேசி எண்ணுக்குரிய நபரின் முகவரிக்கு நேரில் சென்று விசாரித்த போது, அலைபேசி களவாடப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்திருந்தது.
அலைபேசி களவாடப்பட்டால் உரிய அலைபேசி எண்ணுக்குரிய சேவை அலுவலகத்தில் சேவையை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்க வேண்டும் என்பதைக் கூட அறியாத பாமர மக்களிடம் இது போன்ற தவறான நிகழ்வுகளுக்காகவே, அலைபேசிகள் களவாடப்படுவது சர்வ சாதாரணமாகியிருப்பது
புரிந்தாலும், இதுபோல அறியாமையில் இருப்பவர்களை காவல்துறையால் என்ன செய்ய இயலும்.
காவல்துறை, அலைபேசி தொலைந்தால்… உடனே அந்த அலைபேசி எண்ணுக்குரிய நிறுவனத்தை அணுகி சேவையை நிறுத்திவைக்க கடிதம் கொடுக்குமாறு கூறினாலும் அதை எடுத்து துரிதமாகச் செய்ய அலைபேசிக்குரியவன் முனையவில்லை.
அப்படி புகார் எதுவும் கொடுக்காத நிலையில், போலீஸ் தங்களை கைது செய்யும் என்று காவல்துறை கூறியபின்பே, சேவையை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கச் சென்றான், அந்த அலைபேசிக்கு உரியவன்.
சரண் என்பவன் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தான்.
“இந்த நம்பர்கு நீ தான மெசேஜ் பண்ணியிருக்க?”, காவல்
தாளில் இருந்த எண்ணைப் பார்த்தவன், “என்னோட போன பாத்தா நான் யாருக்கு, எதுக்கு மெசேஜ் பண்ணேணு கரெக்டா சொல்லிருவேன் சார்”, சரண்.
தனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்த சரணின் அலைபேசியை அவன் கையிலேயே கொடுக்க, ஐந்து நிமிடங்கள் முழுதாக கரைந்தும், யோசனையில் நின்றிருந்தான் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவன்.
“யாரு இந்த மெசேஜ் பண்ணிருப்பாங்கனு பாத்து சொல்லிருவேன்னு சொல்லிட்டு… என்ன யோசனை பண்ணிட்டு நிக்குற?”, காவல்
“இந்த நம்பர்க்கு நான் எந்த மெசேஜூம் டெக்ஸ்ட் பண்ணல சார்”
விசாலினியின் அலைபேசிக்கு முதலில் அனுப்பப்பட்டிருந்த குறுஞ்செய்திகள் சரணின் அலைபேசியிலிருந்து வந்ததாகக் காண்பித்தது.
அதை எடுத்து சரணிடம் காட்டினார் காவல்.
வெளிறிய முகத்துடன், “இது என் நம்பர்தான் சார். ஆனா இந்த மெசேஜ் நான் யாருக்கும் போடல… ”, என்று தயங்கியவாறு கூறினான் சரண்.
“அப்போ யாரு போட்டா இந்த மெசேஜ் எல்லாம். உன்னோட போனுல இருந்து வேற யாரு போட்டா”, என விடாமல் கேட்க
“தெரியல சார், நான் பெரும்பாலும் வாட்சப்லாம் யூஸ் பண்ணமாட்டேன்”, என வெளிறிய முகத்துடன் கூறியவன்
“காலையில, இல்லனா நைட் நேரத்தில தான் இந்த மெசேஜ் உன் போனுல இருந்து போயிருக்கு. நீ யாரையும் சந்தேகப்பட்டாலும் சொல்லு. ஆனா பொய் சொல்றேனு தெரிஞ்சது… தொலைச்சுப்புருவோம். உங்க வீட்ல, இல்ல வெளியில யாரும் உன் போன வாங்கி யூஸ் பண்ணாங்களானு யோசிச்சு சொல்லு. அதாவது, இந்த மெசேஜை ஒட்டி எதுவும் உனக்கு தகவல் பாத்த
ஞாபகம் எதுவும் வந்தா மறைக்காம சொல்லு”, என காவல் மிரட்டியது.
நீண்ட நேரம் யோசித்தவன், “ஒரே ஒரு முறை இந்த நம்பர்ல இருந்து எனக்கு மதியம் போல… ஒரு பொண்ணுட்ட இருந்து போன் வந்துது சார்…!
எனக்கு போன் பண்ணி… ‘இன்னிக்கு சாயந்திரம் நீ சொன்ன இடத்துக்கு டியூசன் வந்திரவானு’ கேட்டது.
நான், ‘உங்களுக்கு யாரு வேணும்னு’ கேட்டேன்.
‘நேத்து இந்த நம்பர்ல இருந்து தான எனக்கு மெசேஜ் வந்துது’ அப்டினு அந்தப் பொண்ணு தனக்குத்தானே மெதுவா பேசிக்கிட்டது, சார்.
அதோட அந்தப் பொண்ணு… “ம்… பேரா… அது…”, னு கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, ‘நீ தான (ஒரு நம்பர் சொல்லி…) என்னோட அம்மா நம்பருக்கு சாயந்திரத்துக்கு மேல தினம் மெசேஜ் பண்ணி எங்கிட்ட பேசுவ’னு கேட்டுது.
நான், ‘நீ நம்பர செக் பண்ணு, இல்லை… உன்னை பேசச் சொன்னது யாருனு சொல்லு… அப்டிணு நான் அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டு இருக்கும்போதே… அந்தப் பொண்ணு போனை வச்சிருச்சு.
அதுக்குப் பின்ன… நான் போனோ, மெசேஜோ அந்த நம்பருக்கு எதுவும் பண்ணல”, என சரண் யோசித்து ஆணித்தரமாகக் கூறினான்.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், காவல்துறை… சரணை தனது அலைபேசியில் ஒரு க்ளிக் செய்து கொண்டு, வேறு எந்த வெளியூருக்கும் தற்போது தங்கள் அனுமதியில்லாமல் செல்லக்கூடாது எனும் நிபந்தனையுடன் அவனை வீட்டிற்கு செல்ல அனுமதித்து இருந்தது.
மேலும் புகாரில் குறிப்பிட்டிருந்த, மற்றொரு அலைபேசி எண் பெரும்பாலும், ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தது.
மெசேஜ் வரும் நேரங்களில் மட்டும் வேறு வேறு இடங்களில் ஆன் செய்யப்பட்டு, மெசேஜ் தற்போது வேறொரு புதிய எண்ணுக்கு அனுப்பியது தெரிய வந்தது. பிறகு அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
சந்தேகம் தரக்கூடிய வகையில், அன்று அனுப்பியிருந்த செய்தியில் எதுவும் விடயம் இல்லாததால், சற்றே கவனக்குறைவும் காவலுக்கு வந்திருந்தது.
————————————–
அதே நேரம் கிருபாகரனை அழைத்த காவல்துறை, மதியவேளையின் போது, ஒரு முறை தங்களது எண்ணிலிருந்து, மெசேஜ் வந்த எண்ணிற்கு அழைப்பு குறிப்பிட்ட தேதியில் போயிருப்பதாகவும், அதே தேதியில் தங்கள் வீட்டிலிருந்து அழைத்துப் பேசியது யாரென விசாரித்தது.
யோசித்தவர், விசாலினி கூறியது நினைவில் இருந்தாலும், அதைப் பற்றிக் கூறாமல்,
காவல்துறை அதிகாரியிடம், தனது மகளின் அவசரத் தேவைக்காக மட்டுமே இந்த அலைபேசி பயன்படுத்த கொடுத்திருப்பதாகவும், வீட்டிற்கு வந்து மகளை நேரடியாக விசாரிக்க அனுமதி கோரினார், கிருபாகரன்.
சாதாரண உடையில் கிருபாகரனுடன் வந்த போலீஸ், விசாலினியை விசாரிக்க,
சற்று நேரம் யோசித்தவள், குறிப்பிட்ட தேதியில் மதியவேளையில் தன்னைத் தேடி வந்து அலைபேசியை வாங்கி, வனிதா பேசியது நினைவில் வர, “ஆமாம் சார், ஒரு நாள் எங்க காலேஜ் கேம்பஸ்குள்ள இருக்கிற ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணு வனிதானு, அவங்கம்மாவுக்கு பேசணும்னு போனு கேட்டா”, என கூற முதலில் தயங்கியவள், காவல்துறையின் ஊக்கத்தால் கூறத் துவங்கியவள் எதையும் மறைக்காமல் அடுத்த நாள் காலையில் ஒருவன் டியூசனுக்கு பார்க்கிற்கு வரச் சொன்னது வரை கூறியிருந்தாள்.
விசாலினி கூறிய அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கேட்ட காவல்துறை சிந்தனையுடன் பேசியது.
“டியூசன் அப்டிங்கற வார்த்தை ஏதோ சங்கேத வார்த்தை மாதிரி யூஸ் பண்ணுறாங்க போல… அந்தப் பொண்ணோட அம்மா நம்பர் உங்ககிட்ட இப்ப இருக்காம்மா?”, எனக் கேட்டது, காவல்.
“அந்தப் பொண்ண வார்ன் பண்ண உடனேயே அவ அம்மா நம்பர டெலிட் பண்ணிட்டேன். ஆனா எனக்கு அவங்கம்மா நம்பர் நினைவில இருக்கு. ஆனா இன்னொரு நம்பர் நினைவில இல்ல சார்”, என்றபடி அந்த எண்ணை மட்டும் காவல்துறையிடம் பகிர்ந்திருந்தாள் விசாலினி.
அடுத்த கட்ட விசாரணைக்கு விசாலினியிடம் விசாரிக்கும் நிலை வந்தால், நேரில் வந்து சந்திப்பதாகக் கூறி விடைபெற்றிருந்தார், காவல் அதிகாரி.
****
இரவின் தொடக்கத்தில் வனிதாவுடைய அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட காவல்துறை, காவல்நிலையம் வந்தது.
வனிதாவின் தாயாருடைய எண்ணை கண்காணிக்க உரிய நபர்களிடம் பணிக்க ஆணையிட்டார், அதிகாரி. அதன்பின், காவல்நிலையத்தில் அவருக்காக காத்திருந்த அடுத்த கேஸ், நேரத்தை காவு வாங்கிக் கொண்டது. அதில் அன்றைய நாளின் மிச்ச நேரம் மீதம் இன்றி போயிருந்தது.
—————
விடியல்… விபரீதமான கொலையுடன் துவங்கியிருந்தது.
அடுத்த நாள் அதிகாலையில், வனிதா வீட்டிற்கு செல்லும் வழியில் கிளினிக் நடத்தி வரும், மருத்துவர் ஒருவர் வாக்கிங் செல்லும் போது எதிர்பாரா விதமாக, ஒரு ரவுடி கும்பலால் இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
விசாரணைகள் முடுக்கி விடப்பட்டது.
அதே நேரம், வனிதாவின் தாயாரின் எண்ணையும், கடந்த பதினைந்து நாட்களாக பெறப்பட்ட, அனுப்பப்பட்ட வாட்சப் செய்திகளை சேகரித்த போது, வனிதாவின் தாயாரின் எண்ணிலிருந்து… அவ்வப்போது புதிய எண்ணுக்கு சென்றிருந்த குறுஞ்செய்தியில், இறந்த மருத்துவரைப் பற்றிய விபரங்கள் அனுப்பியது தெரிய வந்திருந்தது.
விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு இருந்தது.
அதீத விசாரணைக்குப் பின், அன்று காவல்துறை வனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.
இறுதியாக, வனிதாவின் தாயாருடைய அலைபேசியின் செய்தியை கொண்டு மருத்துவரின் கொலை நிகழ்ந்திருப்பதை உறுதி செய்தனர்.
வனிதாவின் தாயை விசாரித்தது காவல்துறை. பிறகு வனிதாவை தனியே அழைத்து விசாரித்தது. விசாரணையின் முடிவில் வனிதாவின் கவனக்குறைவான செய்தி பரிமாற்றத்தால் விபரீதம் நிகழ்ந்தது தெரிய வந்தது.
விடயம் அறிந்த வனிதாவின் தாய், தனது மகள் அப்படி செய்திருக்கவே மாட்டாள். அப்படி அவள் அறியாமையில் செய்திருந்தாலும் வாழ வேண்டிய தனது மகளை விட்டுவிட்டு தனக்கு அதற்கான தண்டனையைத் தருமாறு கூறி அழுதார்.
தாயின் அறியாமையைப் பயன்படுத்தி மகள் செய்த விடயங்கள் அன்று அம்பலமாகியிருந்தது. வனிதாவின் தந்தை, வனிதாவை நையப்புடைத்து விட்டார். தனது மகளின் செயலால் வந்த பழியை எண்ணி மனமுடைந்திருந்தனர்.
பெரும்பாலும் அணைத்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எண்ணுக்கு, வனிதா தாயாரின் அலைபேசியில் இருந்து மருத்துவர் காலையில் வாக்கிங் கிளம்பும் நேரம், திரும்பும் நேரம், மருத்துவமனைக்கு கிளம்பும் நேரம், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பும் நேரம் மற்றும் அவரின் கார் எண், நிறம் ஆகியவை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக பகிரப்பட்டு இருந்தது.
வனிதாவின் தாய் பயன்படுத்திய அலைபேசிக்கு அழைப்புகள் பெரும்பாலும் குடும்ப நண்பர்களிடம் இருந்து மட்டுமே வந்திருந்தது.
வனிதாவின் எதிர்காலம் கருதி, காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், அப்ரூவராக மாறிவிடுமாறு வனிதாவிடம் கூறினர்.
இறுதிவரை காவல்துறையினரின் அறிவுரையை ஏற்க மறுத்திருந்தாள் வனிதா. பெற்றோர் எடுத்துக் கூறியும் தன்னிலையில் இறுந்து மாறவில்லை.
இறுதியில் கொலைக்கு உடந்தையானதற்காக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வனிதா பெற்றதாக காவல்துறை மூலம் செய்தி அறிந்திருந்தார், கிருபாகரன்.
டியூசன் என்ற சங்கேதக் குறிப்பு கொண்டு துவங்கும் வாட்சப் செய்தி பரிமாற்றம், அடுத்த கட்டமாக, வனிதாவின் அழகினை புகழ்ந்தும், பாராட்டியும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி, அவளின் பருவத் தீனிக்கு உணவிட்டான். முகமறியா மனிதன்.
காதல் எனும் வார்த்தையில் அவளின் சுயமுடிவுகளை அபகரித்து, தனது விருப்பம் போல ஆட்டிவைத்தான், அவள் காணாத காதலன்.
காதல் மயக்கம், ஏன் எதற்கு என யோசிக்க விடாமல் வனிதாவை நிலைதடுமாற வைத்திருந்தது. பதினைந்து நாட்களில் வனிதாவின் மனதை வசப்படுத்தியவன், வனிதாவை நேரில் சந்திக்க போட்ட நிபந்தனை “நீ உன் லவ்வ புரூஃப் பண்ண… எனக்கு ஒரு டேட்டா கலெக்ட் பண்ணிக்குடு. அப்புறமா நாம நேருல சந்திக்கலாம்”, என்பதே
உலக ஞானம் பெறாத பேதை!
முகம் பார்க்காத ஒருவனின் நயவஞ்சக வார்த்தைகளில் மயங்கி, அவனை நம்பி தனது எதிர்கால வாழ்வை இழந்திருந்தாள், வனிதா.
கடைசி வரை யார் அவன் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி, வனிதாவை தவறான செயலுக்குத் தூண்டியவன் கிடைக்காமலே போயிருந்தான்.
அலைபேசி மட்டும் பொது இடத்தில் இருந்து இறுதியாக அனாமத்தாக கைப்பற்றப்பட்டிருந்தது.
வனிதாவின் அறியாமையினை பயன்படுத்தி, ஒரு கொலைக்கு உடந்தையாக இருந்ததை காரணமாக்கி அவளை குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்தியிருந்தது, சட்டம்.
————————————
கிருபாகரனின் புகாரில் கொடுக்கப்பட்டிருந்த, சரணிற்கு அழைத்துப் பார்த்து அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வரவே, காவல்துறை அவனிடம் எழுதி வாங்கியிருந்த முகவரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தது.
‘சரண் எங்கு சென்றிருக்கிறான் என்று தெரியவில்லை’ என்பதைத் தவிர, வேறு எந்த பதிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வராமல் போகவே, காணவில்லை எனும் புகாரினை காவல்நிலையம் வந்து எழுதிக் கொடுத்துவிட்டுப் போகுமாறு கூறிவிட்டு வந்திருந்தனர், காவல்துறையைச் சார்ந்தவர்கள்.
—————–
கிருபாகரனை ஓரிரு நாட்கள் கழித்து, அழைத்துப் பேசிய காவல்துறை, காவல்நிலையம் வந்து நேரில் சந்திக்குமாறு கூறியிருந்தது.
“உங்க பொண்ணு போனுக்கு மெசேஜ் போட்டவன்னு நாம சந்தேகப்பட்ட ஒருத்தவன் விசாரணைக்கு வந்திருந்தான். ஆனா அதுக்குப் பின்ன ஆளு காணல. மஃப்டியில அவங்க வீட்டுப் பக்கம் ஆளு போட்டிருந்தோம். அதுக்குப் பின்ன எங்கயும் அவன பாக்கல.
வீட்ல நேருல போயி விசாரிச்சோம். எங்க போயிருக்கான்னு தெரியலனு அவங்கம்மா சொன்னாங்க…
அதோட சென்னைல உள்ள ஸ்டேசன்கு எல்லாம் அவன் போட்டோ அனுப்பி அவன எங்க பாத்தாலும் அவங்க கஸ்டடிக்கு கொண்டு வந்து, உடனே மெசேஜ் கன்வே பண்ண சொல்லியிருந்தோம்.
நேத்து திருப்பதி போற வழியில… ஒரு பாலத்துக்கு கீழ இருந்து ஒரு பாடி கிடைச்சதாகவும், அது போட்டோல அனுப்பினவன மாதிரி இருக்குதுனு மெசேஜ் வந்தது. அங்க போயி பாத்தா அது அவந்தான்னு அவங்க வீட்டில அடையாளம் சொல்லி ஜிஹச் ல் வந்து பாடிய வாங்கிட்டுப் போயிட்டாங்க.
யாரு மேலயும் உங்களுக்கு டவுட் இருக்காணு கேட்டதுக்கு… அப்படி எதுவும் இல்ல. கொஞ்ச நாளா மன உலைச்சலா இருந்தவன் வீட்டிலேயே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செஞ்சான்னு… சொன்னாங்க.
எங்களுக்கும், அவங்க வீட்டு ஆளுங்க மேல சந்தேகம் இருக்கு… பாப்போம்… இப்ப ரிப்போர்ட் வந்த பின்னதான் மேற்கொண்டு என்னனு விசாரிக்கணும்.
உங்க பொண்ணு மாதிரி ஆரம்பத்திலயே பேரண்ட்ஸ்கிட்ட இந்த மாதிரியான சல்லித்தனமான விசயத்தைக் கொண்டு வந்திட்டா பெரிய பிரச்சணைகள்ள இருந்து பொண்ணுங்க தப்பிச்சரலாம்.
எல்லா புள்ளைங்களும் ஒரே மாதிரியா வளர மாட்டிங்கறாங்க. உங்க பொண்ண உண்மையிலேயே பாராட்டுறேன் சார்”, என கிருபாகரனை அழைத்து விடயத்தைப் பகிர்ந்திருந்தது காவல்துறை.
அப்போது கிருபாகரன், “அந்தப் பையன் போட்டோ எதுவும் இருக்கா சார்”, எனக் கேட்க
“அன்னிக்கு விசாரணைக்கு இங்க வந்தப்ப என் மொபைல்ல சும்மா ஒரு ஸ்டில் எடுத்துட்டு அனுப்பினேன் சார், ஆனா அவன் போட்டோ எதுக்கு உங்களுக்கு?”, எனக் கேள்வியாக நோக்கியது காவல்.
“இல்ல… யாரு, என்னனு தெரியாம இருக்கக் கூடாதுல்ல சார். என் பொண்ணு அவன நேருல பாத்ததில்ல. ஆனா இவ்வளவு பெரிய விசயம் நடந்திருக்கு. நாளப்பின்ன எதாவது இதுனால சங்கடம்னு வந்திரக் கூடாதுல்ல சார். அதுக்குத்தான் கேட்டேன்”, கிருபா.
காவல்துறை அதிகாரியின் அலைபேசியில் இருந்த சரணின் புகைப்படத்தைப் பார்த்த கிருபாகரன், மனம் சற்று தெளிந்திருந்தாலும், சரணின் மரணத்திற்கு உண்டான காரணம் என்னவாக இருக்கும் என யோசித்தபடியே வீட்டிற்கு வந்திருந்தார்.
அதன்பின் விசாலினியின் மேல் கொண்ட பாசத்தோடு, பெண் பிள்ளை எனும் காரணத்தினால், முன்னைக் காட்டிலும் அவளின் மேல் அக்கறை கொண்டு, கல்வியியல் கல்லூரி அருகிலேயே வீட்டை மாற்றியிருந்தார், கிருபாகரன்.
விசாலினி பணிக்குச் செல்ல ஆரம்பித்த போதும், அவளின் பள்ளி அருகிலேயே வீடு பார்த்து இடம் மாறியிருந்தனர்.
இத்துணை விடயங்களையும் காவல்துறையின் வசம் பகிர்ந்து கொண்ட கிருபாகரன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரணித்த ஒருவனின் படத்தை எதற்காக விசாலினியின் திருமணத்திற்கு, லேமினேட் செய்து அனுப்பி வைக்க வேண்டும் எனும் கேள்வி ஒருபுறம் இருக்க, இச்செயலைச் செய்தது யாராக இருக்கும் என்ற எண்ணமும், காவல்துறைக்கும், கருணாகரன் மற்றும் சந்திரபோஸ் அனைவருக்கும் வந்திருந்தது.
சரண் வசித்து வந்த பகுதிக்கு உட்பட்ட கோட்டமேடு சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையம், மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரணின் கேஸை எடுத்து நடத்திய காவல் அதிகாரியின் பெயர் போன்றவற்றை கிருபாகரனிடம் தற்போதைய காவல் ஆய்வு அதிகாரி பெற்றுக் கொண்டார்.
மேற்கொண்டு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள ஏதுவாக கிருபாகரன் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்திருந்தார், காவல்துறை அதிகாரி.
அனைவரும் வீட்டை நோக்கி கிளம்பியிருந்தனர்.
/////////
வெகு நேரத்திற்கு பிறகு தாயின் அறையிலிருந்து வெளிவந்த மனைவியை அழைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஆலயம் செல்ல கிளம்பியவன், மனைவியின் குழப்பமான முகத்தைக் கண்டு கொண்டான், அரவிந்தன்.
“ஷாலுமா…”, அரவிந்தன்
“…”, வேறு சிந்தனையில் இருந்தவள் கணவனின் அழைப்பை ஏற்காமல் தவற விட்டிருந்தாள்.
உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து, நடந்து வரும் மனைவியை எதிர்கொண்டவன், “ஏய்… என்ன ஆச்சு..”, என தன்னவளை நடப்பிற்கு அழைத்து வந்தான்.
ஹாலில் நின்றபடி பேச யோசித்தவன் மனைவியை தங்களது அறை நோக்கி அழைத்துச் சென்றான்.
அறைக்குள் சென்றவுடன், மனைவியின் முகம் நிமிர்த்தி கண்களைப் பார்க்க, அலைப்புறுதலை மனதை அடக்க அரும்பாடுபடும் மனைவியின் மனதைப் படித்திருந்தான்.
“என்னடா… அம்மா என்ன சொன்னாங்க?”
“ம்… ஒண்ணும் சொல்லலயே…”, என சிரிக்க முயன்று தோற்றவளை
சிந்தனையோடு, “உனக்கு சொல்லணும்னு தோணிணா சொல்லு, இல்லனா நோ பிராப்ளம். ஆனா இதே மைண்ட் செட்டோட வெளிய இப்ப போகணுமா?”, எனக் கேட்டான் அரவிந்தன்.
“கோவிலுக்கு தான… போயிட்டு வந்திருவோம்”, விசாலினி தன்னை இயல்பாக்க தன் மனதை இழைத்திருந்தாள்.
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு, அப்புறம் கிளம்பலாம்”, அரவிந்தன்.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்தவள், “கோவில்ல நடை சாத்திருவாங்க”,விசாலினி.
“ஸ்… சாத்தட்டும். ஈவினிங் போயிக்கலாம்”, அரவிந்தன்.
“கோவிலுக்குனு கிளம்பிட்டு தள்ளிப் போடக்கூடாது. போயிட்டே வந்திரலாம்”, என ஒருவாறாக தன்னைத் தேற்றி கணவனுடன் கிளம்பியிருந்தாள் விசாலினி.
நிதானமாக தரிசனம் செய்து, கோயில் பிரகாரத்தில் சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு இருவரும் கிளம்பினர்.
மனைவியை ஓரளவு படித்திருந்தவனுக்கு, தாயாரின் ஏதோ பகிர்தல், மனைவியின் மனதை பஞ்சராக்கி இருப்பது புரிந்தது.
எதையும் யூகம் செய்ய எண்ணாமல், மனைவியை கருத்தாக கவனித்தபடியே கிளம்பினான்.
***
விசாலினி, கோயிலிலிருந்து வெளிவந்து அங்கு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வண்டியை நோக்கி நடக்கும் அரவிந்தனின் பின்னே வந்து கொண்டிருந்தாள்.
முழுக்க முழுக்க தனது மாமியாரின் பேச்சுகளை மனதில் ரீவைண்ட் செய்தபடியே, சாலையை கவனிக்க மறந்து நடந்தபடி இருந்தாள்.
எதிரில் வரும் காரை எதேச்சையாக பார்த்த அரவிந்த், அது வரும் வேகத்தை விட, அதை ஓட்டுபவனின் நோக்கத்தை, அவனின் இயல்பற்ற முகத்தைக் கண்டு, சட்டென அவன் பார்வை போகும் திசையைத் திரும்பிப் பார்த்தான் அரவிந்தன்.
நினைவுகளில் தன்னைத் தொலைத்து, நடந்து வரும் மனைவி, சாலையை கவனிக்காமல், மனதை, கூறிய, கேட்ட வார்த்தைகளுக்குள் அடகு வைத்து, நடப்பை மறந்து நடந்து வருவதை உணர்ந்தவன் என்ன செய்தான் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.
விசாலினியின் நிலை என்ன?