வானம் காணா வானவில்-17

வானம் காணா வானவில்-17

அத்தியாயம்-17

விசாலினியின் கவனச் சிதறலை, சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்ட கார் ஓட்டுனர், தனக்கிட்டிருந்த பணியை பிறர் சந்தேகிக்க முடியாத வண்ணம் கச்சிதமாக, செவ்வனே முடிக்க எண்ணி ஓட்டினான்.

அரவிந்த் சுதாரித்து விசாலினியை பிடித்து இழுக்க, எதிர்பாரா நிகழ்வால் தகுந்த பிடிமானம் இல்லாமல் அரவிந்த் பிடியில் இருந்து நழுவி, இழுத்த வேகத்திற்கு தரையை நோக்கி கீழே விழுந்திருந்தாள், விசாலினி.

வேகமாக கீழே விழுந்தவள் சுதாரிக்கும் முன்பு அவளது தலை தரையோடு வேகமாக மோதியிருந்தது.

அதன்பின் “அப்பா…” என்ற அழைப்புடன் தலையை தனது இருகைகளாலும் பிடித்தபடி துடித்தவளை அள்ளி எடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான், அரவிந்த்.
………….

விசாலினி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

அரவிந்த், உள்ளம் கொதிகலனாக கொதிக்க, புலன்கள் அனைத்தும் அடங்கி அமைதியாக, அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

கோவிலுக்குச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத புது மணமக்களை எதிர்பார்த்து காத்திருந்த நீலா மகனுக்கு அழைத்திருந்தார்.

அலைபேசியின் அழைப்பை நீண்ட நேரம் உணராமல் இருந்தான்.

மருத்துவமனையில் இடப்பட்டிருந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல் த்ரீ சீட்டர் வயிட்டிங் சேரில் அமர்ந்திருந்தவன், அருகில் இருந்தவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து, சுதாரித்து பின் அழைப்பை எடுத்தான்.

பேசிய தாயிடம், விடயத்தை உணர்வில்லாமல் பகிர்ந்தான்.

பதறிய தாயிடம், “பயப்படாதீங்கம்மா! அவளுக்கு ஒண்ணுமாகாது”, என்று வார்த்தை தைரியமாக வந்தாலும், மனம் சோர்ந்திருந்தது.
————-

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு பதறி வந்திருந்தனர்.

அலங்கோலமாக அழுக்கான இரத்தம் உறைந்த ஆடை நலுங்கிய நிலையில் அமர்ந்திருந்தவனின் தோற்றமே கூறியது, விடயம் எத்தகையது என்று!

ஓய்ந்து போகும் வயதா அரவிந்திற்கு!

பெரியவர்கள் அனைவருக்கும், அவனின் தோற்றமே மனதை வாட்டியது!

எதையும் பற்றி பேசும் நிலையில் அரவிந்த் இல்லை.

புதிய சட்டை ஒன்றை டிரைவரிடம் வாங்கி வரச் செய்து, பித்தனின் தோற்றத்தில் இருந்த அரவிந்தனை அழைத்துச் சென்று போடச் செய்து, முகம் கழுவி அழைத்து வந்தான், சஞ்சய்.

வயோதிகம் வாட்டினாலும், எதிர்பாரா நிகழ்வால் அழகம்மாள், கற்பகம், கயல்விழி, நீலா மூவரும் ஓரிடத்தில் அமர்ந்திருக்க, ஆண்கள் அனைவரும், பணிகளை பிரித்து பார்த்தபடி இருந்தனர்.
முகம் கழுவிய பின், சற்றே புத்துணர்வு பெற்றிருந்த அரவிந்த், தனது தாய் நீலாவின் அருகில் வந்தமர்ந்தான்.

“அம்மா, இன்னிக்கு காலைல விசாகிட்ட என்ன சொன்னீங்க?”, அரவிந்த்

“அவகிட்ட கல்யாணப் பரிசா உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்!
என்னைப் பற்றின… சிறு வயதில நடந்த பழைய விசயங்கள சந்தோசமா அவகூட பகிர்ந்துக்கிட்டேன்!”, ஜீவனில்லாமல் பேசினார் நீலா

“என்ன சொன்னா?”, ஆர்வமாகக் கேட்டான் அரவிந்த்.

“நீ மட்டும் போதும்னு சொன்னா…!”, மருமகளின் பேச்சை எண்ணியதில் சற்றே முகம் தெளிந்து, மீண்டும் பழையபடி மாறியது, நீலாவின் முகம்.

‘அவனதான் உங்கிட்ட ஒப்படைச்சிட்டேனே… வேற என்ன வேணும்னு… சொல்லுனு கேட்டேன்’, அதுக்கு அவ சிரிச்சிக்கிட்டே,

‘வேற எந்த கிஃப்டும் எனக்கு வேணாம், அத்த.
அவர விட எனக்கு… நீங்க பெரிய கிஃப்ட் எதுவும் வாங்கிலாம் கொடுக்க முடியாதுனு!’, சொல்லிட்டு… ‘இனி நாங்க தான் உங்களுக்கு பேரன் பேத்தினு வரிசையா கிஃப்டா… சிங்கிள், டபுள், ட்ரிபிள்னு எப்டினாலும் தருவோம்!
டயர்டாகாம எல்லாரையும் நீங்க வளத்து மட்டும் விட்ருங்கனு’, சந்தோசமா சிரிச்சிட்டே சொல்லிட்டு இருந்தா…!”, என பெருமூச்செறிந்தார், நீலா.

தாயின் வார்த்தையைக் கேட்டவன், மனைவி தன் மீது கொண்ட காதலை எண்ணி அகமகிழ்ந்தவன், அவளின் எதிர்பார்ப்புகளை எண்ணி தன்னிடம் கூட ஒரு வார்த்தை அதைப் பற்றிப் பேசாமல் தனது தாயிடம் பகிர்ந்ததை எண்ணி உவகை கொண்டவன், “உங்க ரூம்ல இருந்து வந்தவ ஏதோ யோசனையோடயே வந்தா… வீட்லயே டல்லா தான் இருந்தா. ஏதோ யோசிச்சிட்டே இருந்ததால ஈவினிங் கோவிலுக்கு போலாம்னு சொன்னேன். பிடிவாதமா என்னைக் கூட்டிட்டு வந்தா. ஆனாலும், அவ மனசுல எதையோ யோசிச்சிட்டே ரோட கவனிக்காம வந்தப்ப தான் இந்த ஆக்சிடெண்ட் நடந்தது. அது எதேச்சையா நடந்த மாதிரி எனக்கு தோணல. யாரோ பிளான் பண்ணி பண்ற மாதிரி தோணுது”, என தனக்குள் யோசித்தபடியே அரவிந்தன் கூற

“எங்கூட பேசிட்டு இருந்தவர நல்லாதான் இருந்தா. ரூமை விட்டு வெளிய போகும் வர அவ சிரிப்பு மாறல… ஆனா ரூமை விட்டு வாசல் வர போயிட்டு… கொஞ்ச நேரம் அங்கேயே நின்ன மாதிரி இருந்தது… நான் ரூமுக்குள்ள இருந்ததால என்ன நடந்ததுனு எனக்கு தெரியல. நான் அவ நிக்கறத பாத்துட்டு வாசலுக்கு வந்து, ‘என்ன விசானு’ கேட்டேன். ‘இல்ல… ஒண்ணுமில்லத்த…’ அப்டினு சொல்லிட்டு அங்கிருந்து நகர்ந்துட்டா…”, என்றார் நீலா.

“கோயில விட்டு வெளிய வரும்போது அவ கவனம் ரோட்டுல இல்ல… எதோ தனக்குள்ள யோசிச்சிட்டே வரா. நான் மட்டும் கரெக்டா பாத்து அந்நேரம் இழுக்கலனா இன்னிக்கு அவ… இன்னும் என்ன ஆகிருப்பான்னே தெரியல!”, என வருத்தத்துடன் அரவிந்த் கூற

“என்ன அரவிந்த் சொல்ற?”, என நீலா காரணமறிய வினவினார்.

நடந்ததை அப்படியே தாயிடம் பகிர்ந்திருந்தான்.

அதை அருகில் அமர்ந்திருந்து கேட்ட அழகம்மாள், ‘இவ மேல யாருக்கு என்ன விரோதம். யாரு வம்பு, தும்புக்கும் போக மாட்டாளே. அவ உண்டு அவ வேல உண்டுனு தான் இருப்பா. கருமாரியம்மா… எம்புள்ளய எந்த இக்கட்டுலயும் சிக்காம, உயிரோட காப்பாத்தி குடுத்திரு தாயி… சின்னபுள்ள… அவ வாழவே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இவ்வளவு கஷ்டத்த குடுக்கிறியே… கண்ணத் திறந்து எம்புள்ளைய நல்லபடியா எழுந்து நடமாடச் செய்திரு’, என்று தனக்குள் புலம்பியபடியே, வேண்டுதலையும் விட்டு வைக்கவில்லை.

சந்திரபோஸ், நடந்த விடயத்தை அரவிந்த் வசம் விசாரிக்க நினைத்தாலும், சொல்லும் நிலையில் மகன் இல்லாததால், விசாலினிக்கு உடல்நலம் தேறியபின் கேட்டுக் கொள்ளலாம் என விட்டிருந்தார்.

தலையின் உண்டான மோதலால், CT, MRI என அனைத்தையும் எடுத்திருந்தனர்.

வலியால் துடித்தவளை, வலி நிவாரணியுடன் கூடிய தூக்கத்திற்கான மருந்து செலுத்தி தூங்க வைத்திருந்தனர்.

ரிசல்ட் வரும்வரை அனைவரும் பதற்றத்தில் இருக்க, அரவிந்த் உயிர் போன உடல்போல உணர்வற்று அமர்ந்திருந்தான்.
///////////////

காவல் அதன் பணியை ஆரம்பித்திருந்தது.

வனிதாவைப் பற்றிய வழக்கு, சரணின் மரணம் பற்றிய வழக்கு இரண்டையும் தீர விசாரிக்க, நேரம் ஒதுக்கியிருந்தனர்.

சரணின் உடன் பிறந்தவர்களையும் தங்களது தீவிர கண்காணிப்பிற்கு உள்ளாக்கியிருந்தனர்.
அத்தோடு, மதனதாராவின் வாழ்த்து சார்ந்த விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

சந்திரபோஸ், கிருபாகரன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய அலைபேசி எண்களும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், வனிதாவின் வீட்டு உறுப்பினர்கள், சரணின் வீட்டு உறுப்பினர்கள், மதன்தாரா மற்றும் அவரிடம் பணிபுரிபவர்கள் அனைவரது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்கள் அனைத்தும் காண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.
———–

வனிதாவின் வழக்கு : பெற்றோர் நிலை

பெற்றோருக்கு ஒற்றை மகளான வனிதா தற்போதும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறாள். மூன்று வருட தண்டனை நிறைவு பெறப் போகும் நிலையில் தனது கல்வியை சிறையில் இருந்தவாறே தொடர்கிறாள்.

வனிதாவின் பெற்றோர் மிகுந்த துயரத்தில் தங்களது வாழ்வை இலக்கின்றி வாழ்ந்து வருகின்றனர்.
வனிதாவின் கல்லூரிப் படிப்பிற்கு வேண்டிய ஒப்படைப்பு மற்றும் இதர கல்வி சார்ந்த விடயங்களுக்காக, தங்களது அலைபேசியை பயன்படுத்த அனுமதித்து இருந்தனர், அவளது பெற்றோர்.

ஆனால், வனிதாவின் பாதை மாறிய பயணத்தால் எதிர்கால வாழ்வை கேள்விக்குரியதாக்கி இருந்ததை எண்ணியும், தங்களின் அறியாமையினால் வந்த விபரீதத்தால் தலைக்கு மேல் போன வெள்ளத்தை ஒன்றும் செய்ய முடியாமல், மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
வனிதாவின் செயலுக்கு தங்களின் அறியாமையும் ஒரு காரணமாகிப் போனதை எண்ணி வருந்தாத நேரமில்லாமல் பிடிப்பின்றி வாழ்ந்திருந்தனர்.

சுற்றம், உறவுகள் அவர்களின் நிலையை எண்ணி, நேரில் பரிதாபப்படும் வார்த்தைகளை உதிர்ப்பதும், புறத்தில் கேலி பேசுவதையும் எண்ணி அயர்ந்திருந்தனர்.

வனிதாவின் பெற்றோரை நேரில் சந்திக்க அவர்களது வீட்டிற்கு வந்தது காவல்துறை. அதே நேரம் வீட்டிலிருந்தவர்களிடம் விடைபெற்று தங்கள் முன் கிளம்பியவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தபடியே வந்த காவல் அதிகாரி, தன்னை வனிதாவின் பெற்றோரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

கடந்து போன நாட்களில் இதுபோன்ற காவல்துறையின் அணுகுமுறையில் பழகிப் போயிருந்த இருவரும், அமைதியாக வரவேற்றிருந்தனர்.

விரக்தியோடு கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினர்.

“இப்போ உங்க வீட்டுக்கு வந்துட்டு போறது யாரு?”, காவல்

“அது என் ஒண்ணு விட்ட அக்கா பையன்”, வனிதாவின் தந்தை

“எந்த ஏரியால இருக்காப்ல? பேரு என்ன?”, காவல்

“பேரு சுரேஷ்ஷூ… அவனுக்குனு வீடு காசிமேடு பக்கமா இருக்கு சார், ஆனாலும் வீட்டுக்கெல்லாம் போற மாதிரி தெரில… டிரைவரு அவன். எங்கனா கிடைச்சா வண்டி ஓட்ட போவான். இல்லனா ஊரு சுத்துவான்.

எங்க அக்கா செத்துருச்சு… அதுக்கு பின்ன அவனுக்கு கல்யாணம் காச்சினு எடுத்து பண்ண… யாரும் எந்த முயற்சியும் செய்யல. அவனும் எதப் பத்தின யோசனையும் இல்லாம சோறு கண்ட இடமே சொர்க்கம்னு திரிவான்.

அவந் தங்கச்சி பெரிய இடத்துல… கல்யாணம் கட்டிட்டு போயிருச்சு… அதுகிட்ட அப்பப்போ காசு வாங்கி செலவு பண்ணிக்கிட்டு… ஊரச் சுத்திகிட்டே தெரிவான்.

அந்தப் புள்ளயும் இவன கூட்டுச் சேக்காது. இங்க அப்பப்போ வந்து சாப்டு போவான். கைல தொழிலிருந்தும் உருப்படியா இல்லாம ஊரச் சுத்திட்டு தெரியுது. ஏன் சார் எதுனா பிரச்சனையா?”, வனிதாவின் தந்தை

“இல்ல… உங்க வீட்டச் சேந்த ஆளானு தெரிஞ்சுக்க கேட்டேன். வேற ஒண்ணுமில்ல.
சரி உங்க பொண்ண பத்தி கேக்கத்தான் வந்தேன். நீங்க அத புழல்ல போயி பாக்குறீங்களா…?
நீங்க அப்பவே நல்லா எடுத்துச் சொல்லி அப்ரூவரா ஆக்கியிருந்தா… அது இப்படி ஜெயிலுக்கே போகாம குறச்ச தண்டனை வாங்கிருக்கும்”, காவல்.

‘எவ்வளவோ சொன்னாரு அப்ப விசாரிச்ச போலீஸ் ஆஃபிசரு. இவ புத்திய கடன் குடுத்துட்டா. நாங்களும் எம்புட்டோ சொல்லிப் பாத்தோம். அவ அப்பா அடிச்சுக்கூட பாத்தாரு… அசையலயே… அப்ரூவராகுன்னு எம்புட்டோ எடுத்துச் சொல்லியும் கேக்கலயே…

தலைக்கு மேல வளந்த புள்ளைய அதுக்கு மேல என்ன செய்ய? அவ தலையெழுத்த அவளே தீர்மானிச்சிட்டா.

இப்ப நோகுது. பாக்கும் போதெல்லாம் ஈரக்குலையே நடுங்கிருது. எப்படி வளத்த பொண்ண இப்டி
ஒரு நிலையில வச்சுப் பாக்கற மாதிரி ஆகிருச்சேன்னு…

என் வளப்புதான் தப்பா போச்சு”, என்று வறுந்திக் கூறியிருந்தார் வனிதாவின் தாய்.
மேலும் தேவையான விடயங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட காவல்துறை அங்கிருந்து கிளம்பியிருந்தது.
///////////////

வனிதாவின் வழக்கு : வனிதாவின் நிலை

பெற்றோருக்கு ஒற்றை மகளான வனிதா தற்போதும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறாள். மூன்று வருட தண்டனை நிறைவு பெறப் போகும் நிலையில் தனது கல்லூரிக் கல்வியை சிறையில் இருந்தவாறே நிறைவு செய்து விட்டு, முதுநிலைக் கல்வியைத் தொடர்கிறாள்.

வாழ்வின் நிதர்சனங்களை, தண்டனையில் தனித்து இருப்பதால் நிதானமாக இருக்கும் காலங்களில் யூகித்து உணர்ந்து கொண்டிருக்கிறாள்.

ஆனாலும் ஒரு ஓரத்தில், தன்னிலைக்குக் காரணமானவனை எண்ணி ஏங்குகிறாள். அவனைப் பாராமலேயே வாழ்க்கை போய்விடுமோ என எண்ணி கவலையும் கொள்கிறாள். சில வேளைகளில் முகமறியாவதன் மீது வன்மம் வந்து மனதில் வசைபாடுகிறாள்.

அவன் கூறிய வார்த்தைகளை அசைபோட்டு, நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் தன் மனதோடு அவ்வப்போது போராடுகிறாள்.

வனிதாவுடன் காவல் சந்திப்பு :

“நான்… வேறோரு கேஸ் பாக்கும் போது உன்னப் பத்தி தெரிய வந்துது. உங் கேஸ் பத்தி இப்பதான் படிச்சிட்டு வரேன்மா. உன் கேஸப் பாத்த ஏசிய, இன்னிக்கு காலைல நேருல பாத்து பேசினேன்.
உக்காருமா….”, என எதிரில் நின்றிருந்தவளை அமரச் சொன்னது காவல். வனிதா அமர்ந்தவுடன்,

“உன்னோட… இன்னிக்கு நிலையை எல்லாம் அவருகிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்மா. நீ இந்த கேஸ்ல ஏன் அப்ரூவர் ஆகலன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? சொல்லணும்னு பிரியப்பட்டா சொல்லும்மா…”, காவல்

“அந்த சார் (காவல் அதிகாரி) எங்கிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னாங்க… அப்ப அவரு மேல எனக்கு அவ்வளவு கோவந்தான் வந்துது. காவியக் காதல்னு நானா நினச்சிட்டு இருந்துருக்கேன். இப்ப அத நினைச்சா… அட கண்றாவியேனு இருக்கு.

நான் ஏன் அப்ப அப்டி இருந்தேனு, இப்ப யோசிச்சா… அது ஏன்னு எனக்கு சுத்தமா தெரில!”, சிரித்துக் கொண்டாள்.

“எனக்கு எல்லாரும் நல்லது சொன்னதையே நான் கேக்காம, முகம் தெரியாதவன் சொன்னத நம்பி அப்ப இருந்திருக்கேன்!

எதுக்கும் காலேஜூக்கு லீவு போடாத நான், அம்மாகிட்ட உடம்புக்கு முடியலனு பொய் சொல்லிட்டு… அந்த டாக்டர பத்தி அவங்கேட்ட டீடெயில் கலெக்ட் பண்ண லீவெல்லாம் போடற அளவு என் மண்டைய நல்லா கழுவி வச்சிருந்தான்.

ஏதோ ஒரு தினுசா மனசு அப்ப இருந்துது! இப்ப இங்க வந்த பின்ன நான் செஞ்சத நினைச்சா என் மேலயே எனக்கு கோவந்தான் வருது”, என தனது பழைய நாட்களை அசைபோட்டவாறு பேசினாள், வனிதா.

“முகம் தெரியாதவன நம்பின அளவு, எங்க அம்மா, அப்பாவ கூட நான் அப்ப நம்பல! அத நினச்சாலே, இப்ப… எனக்கு ரொம்ப… எம்மேலயே… வெறுப்பா வருது.

போலீஸ்காரங்கள அப்ப ஏனோ நம்பத் தோணல. ஆனா இப்ப தனியா இருக்கும் போது, எல்லாத்தையும் யோசிச்சுப் பாத்தா… என்னோட முட்டாத் தனம் புரியுது”, தெளிந்த நிலையில் பேச்சு இருந்தது.

“இனி யோசிச்சு எனக்கு எந்த பிரயோசனமும் இல்லை. ஆனாலும், எனக்கு மேற்கொண்டு படிக்கணும்னு கேட்டவுடனே அதுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாங்க.

யார நம்பணும்னு தெரியாம தான்… என்னை மாதிரி சில பொண்ணுங்க சில பொறம்போக்குக விரிச்ச வலையில மாட்டிக்கறாங்க.

இந்த மாதிரி பிரச்சனைகள்ல மாட்டிக்காம பொண்ணுங்க வளர… என்னால என்ன செய்ய முடியும்னு இப்ப யோசிச்சு பாக்கறேன்.

தண்டனை முடிஞ்சு வெளிய வந்தபின்ன… என்னால முடிஞ்ச அவார்னஸ் ஸ்கூல், காலேஜ் பொண்ணுங்களுக்கு கொடுக்கணும்”, என தனது எண்ணைத்தை மறையாது பகிர்ந்து கொண்டாள், வனிதா.

சற்று நேரம் அவளுடன் பேசிவிட்டு காவல் கிளம்பியிருந்தது.
/////////////////

விசாலினியின் தலையில் எதிர்பாரா விதமான வேகமான அடியால் இரத்தக் கசிவு ஏதும் உண்டாகிறதா என்பதை காண அப்சர்வேசனில் வைத்திருந்தனர்.

காது பகுதிகளில் ஆராயப்பட்டது.

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தவளை எண்ணி, உள்ளம் நொறுங்கி அமர்ந்திருந்தான், அரவிந்த்.
பெற்றோரின் அன்பில் வளர்ந்தவனை, கடந்த எட்டு ஆண்டுகளாக தனது நினைவுகளாலேயே தத்தெடுத்திருந்தவளை எண்ணி தற்போது ஏங்கினான்.

மருந்தின் வீரியத்தில் உறங்குபவளை, விழித்தால் பார்க்க அனுமதிப்பது பற்றி யோசிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

அவள் பழையபடி தன்னிடம் வரவேண்டும் என்ற மன்றாடல் மனம் முழுவதும் இருக்க, அதற்கு மேல் அவனால் அங்கு அமர்ந்திருக்க இயலவில்லை. அனைவரிடமும் கூறிக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தான், அரவிந்த்.

அவனது அறை முழுமைக்கும் விசாலினியின் பேச்சும், சிரிப்பும், காதலும், கருணையும், அன்பும் கலந்த வாசம் வீசியது.

காலை வேளையில் அவளின் வழக்கமான உடற்பயிற்சி செய்யும் இடம் நோக்கி அந்நேரம் சென்றவன், பதிவு திருமணத்திற்குப் பிறகான விசாலினியின் அவனுடனான, ஊடல், ஓடல், பாடல், தேடல், ஆடல், காதல் என ஒவ்வொன்றையும் அசைபோட்டு அங்கேயே ஆணியாலாடித்தது போல நின்றிருந்தான்.

இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்த தருணங்கள் அவனின் மன முகட்டை உரசி, அரவிந்தை சிலிர்க்கச் செய்தது.

அவளை விட்டு அந்நிய தேசம் சென்று பொருளீட்ட முடிந்தவனால், இன்று அவளின் நிலையை எண்ணி செல்லாக்காசு போல மாறிப் போன தன் மனதை, உத்வேகத்தை, தன்னம்பிக்கையை இழந்த தன்னிலையை எண்ணி தன்னையே வெறுத்திருந்தான்.

தன்னைச் சேரும் வரை பாதுகாப்பாக அவள் தந்தையின் அரவணைப்பில் இருந்தவள், தன்னைச் சேர எடுத்துக் கொண்ட திருமண முயற்சிக்குப் பின் எதிர்கொண்ட எதிர்பாரா நிகழ்வுகள் அவனை சந்தேகம் கொள்ளச் செய்தது.

விசாலினி தன்னை எந்தளவு பாதிக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கியிருந்தவன், தன்னை மீட்டுக் கொள்ள குளித்து வந்தான்.

குளியல் தந்த புத்துணர்வில் அமைதியாக பத்து நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்து எழுந்தவன், தன்னை சீர் செய்திருந்தான். திட்டமிட்டு எவரோ செய்த சதியின் ஆழம் அறிய விழைந்தான்.
அவனின் சந்தேகம் முதலில், மதன்தாரா மீது வந்தது. பிறகு திருமணத்தன்று கோவிலில் வந்து தாலி கட்ட முயன்றவனின் மீது விழுந்தது. இருவரையும் தனது மனதில் குறித்துக் கொண்டவன், சற்று நேரம் அமைதியாக அமர்ந்து யோசித்தான்.

தனக்கு தெரிந்த ஹை டிடெக்டிவை நாடியவன், கோவிலில் நடந்த திருமண நிகழ்வில் இருந்து இன்றைய நாள் வரை தனக்கு வேண்டிய விபரங்களை எவ்வளவு விரைவில் தர இயலுமோ, தந்திட வேண்டி, தனது அலைபேசியில் அழைத்துப் பேசினான்.

தனது அறை வாயிலில் நிழலாடுவதை உணர்ந்தவன், எழுந்து வெளியில் வந்து பார்த்தான்.
யாரும் அங்கில்லாமல் போகவே, அங்கிருந்து மருத்துமனைக்கு கிளம்பினான்.

தான் மருத்துவமனையில் தங்கிக் கொள்வதாகக் கூறி, அங்கிருந்த அனைவரையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தான். சஞ்சய் எவ்வளவோ கூறியும் அவனையும் அங்கிருந்து அகற்றியிருந்தான்.
விசாலினியின் தற்போதைய நிலையை கேட்டறிந்து கொண்டவன், அவள் விழித்தாள்

எந்நேரமானாலும் தன்னை அழைக்குமாறு கூறி, அங்கேயே அறை எடுத்து தங்கி கொண்டான்.

தனதறையில் வந்து படுத்தவன், உறங்காமல் தன்னவளுடன் நினைவுகளில் ஒன்றாகியிருந்தான்.

கொள்ளை கொண்டவள் விழிக்காமல், தனது விழிகள் உறங்காது என்பதை உணர்ந்தவன்… காத்திருந்தான்…!

//////////////////

error: Content is protected !!