வானம் காணா வானவில்-18

அத்தியாயம்-18

விடியல் வரை விழித்து தனது வீட்டு சூழலோடு, பிறவற்றையும் யோசித்து, டிடெக்டிவின் ரிப்போர்ட்டை எதிர்பார்த்து காத்திருந்தான், அரவிந்த்.

அதிகாலையில் விசாலினி கண்விழித்தாள் என்ற செய்தி கேட்டு, ICU வில் அனுமக்கப்பட்டிருந்த விசாலினியை நேரில் சென்று கண்டான்.

மருத்துவர் அதிகம் எதுவும் பேச வேண்டாம் என்றிருக்க, விசாலினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அமைதியாகவே அவளின் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

கண் மூடியிருந்தவள் தனதருகே வந்த அரவத்தில், விழித்தாள். பார்வையில் கணவனைக் கண்டதும், கதிரவனைக் கண்ட கமலத்தைப் போல புன்னகைத்தாள்.

கையைத் தூக்கி, தனது அருகில் அழைத்தவளின் அருகில் சென்றவன்,

“என்னடா…! எதுவும் வேணுமா?”, எனக் கேட்டான், அரவிந்த்.

“இ..ல்..ல…!”, என ஈனஸ்வரத்தில் கூறியவள், வேறு ஏதோ பேச வேண்டும் என்று தனது உடல்மொழி மூலம் கணவனிடம் கூறினாள், விசாலினி.

“பேசாம அமைதியா இரு!”, என சைகை மூலம் விசாவிடம் மெதுவாக கூறினான்.

“சா..ரி.. ம..ச்..சி…!”, என்று கூறியவள் சிரிக்க முயற்சித்தாள்.
சூழ்நிலையை கருத்தில் கொண்டவன், அவளின் அருகே சென்று, “எதுக்குடா..!”, என்றான்.

“நா..ன்.. க..வ..னி..க்..கா..ம வ..ந்..த..து..க்..கு!”, என கூறினாள் விசாலினி.

“முதல்ல சரியாகட்டும் உனக்கு! பின்ன அத பத்தி பேசிக்கலாம்!”, என இலகுவான குரலில் அரவிந்த் கூற, தலையை சிரமத்தோடு அசைத்து மறுத்தாள்.

“இப்பவே எங்கிட்ட எதுவும் சொல்லணுமா?”, எனக் கணவன் கேட்க

‘ஆமாம்’ என ஆமோதித்து தலையசைத்தவள், “ந..ம்..ம.. மி..ரு..ணா.. பி..ர..த..ர.. அ..த்..த..ம்..மா..ட்..ட.. பே..சு..ம்..போ..து.. ச..ன்..ன..ல்.. ப..க்..க..மா.. நி..ன்..ன..த.. பா..த்..தே..ன்..!”, சற்று இடைவெளி விட்டாள்.

அதற்குள் மனைவியின் வார்த்தையை உள்வாங்கியவன் முகம் சுருக்கி ஆச்சர்யமாக “என்ன சொல்ற!”, என மனைவியிட மெதுவாகவே வினவினான்.

“கோ..வி..லு..க்..கு.. போ..யி..ட்..டு வெ..ளி..வ..ந்..த..ப்..போ.. வெ..ளி..யி..ல்.. இ..ரு..க்..க..ற.. க..டை.. ப..க்..க..த்..தி..ல.. பா..த்..தே..ன்!”, சற்று கண்மூடி வலியை பொறுத்தவள் மீண்டும் பேசினாள்.

“இ..தை..யே… யோ..சி..ச்..சி..ட்..டே.. ரோ..ட்..ட.. பா..க்..கா..ம.. வ..ந்..து..ட்..டே..ன்.. சா..ரி…!”, என சீராக ஆனால் மிக மெல்லிய குரலில் கூறினாள்.

அவளின் கைபிடித்து ஆறுதலாக, “இனி எல்லாம் சரியாகிரும். இப்ப பெயின் பரவாயில்லையா?”, என்றபடி அவளின் தலையை மென்மையாக வருடினான்.

“எ..ப்..ப.. ந..ம்..ம.. வீ..ட்..டு..க்..கு.. போ..க..லா..ம்..?”, என மனைவி கேட்க

“தெரியலடா! டாக்டர் வந்து பாத்துட்டு சொல்லுவாங்க… அது வர இங்க தான் இருக்கணும்!”, என கூறியவன் , “ரொம்ப பேச வேணாம். நான் உன் பக்கத்துல தான் இருக்கேன். சோ நீ இப்ப கண்ணை மூடி ரெஸ்ட் எடுப்பியாம்!”, என்று குழந்தைக்கு கூறுவது போல மிகவும் பொறுமையாக எடுத்துக் கூறினான், அரவிந்த்.

காலை வேளை ஆகாரத்திற்கு பிறகு வந்த மருத்துவர்கள், அவளின் ஸ்கேன் ரிப்போர்ட்டின் தன்மையினால், இன்னும் இரண்டு நாட்களுக்கு மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கட்டும் என்று கூறிவிட, அங்கேயே அரவிந்தும் மனைவியுடன் தங்கிவிட்டான்.

விழித்தவுடன் பேசிய மனைவியின் வார்த்தைகளைக் கேட்டபின்பு, மிருணாவின் சகோதரனையும், தனது சந்தேக லிஸ்டில் கொண்டு வந்திருந்தான், அரவிந்த்.

அவர்களின் திருமணத்தன்று நடைபெற்ற வரவேற்பில், மிருணாவின் அண்ணன் சுரேஷ், நடிகை மதன்தாரா அனுப்பியதாக கொணர்ந்து தந்த பொக்கேவைக் காண எண்ணியவன், பொருட்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய, தந்தைக்கு அலைபேசியில் அழைத்தான்.

அலைபேசியில் பேசி, புரிந்து கொள்ள, அறிந்து கொள்ள நடப்பவை அனைத்தும், சிறு விடயமல்ல என்பதை உணர்ந்து, கிளம்பி நேரில் வந்து தந்தையை சந்திப்பதாகக் கூறி வைத்தான்.

அரவிந்தனின் கேள்விகளுக்கு உண்டான பதிலை அறிய, விரைந்து தந்தையைக் காண நேரில் சென்றான்.

அந்நேரம் மனைவிக்கு துணையிருக்க, தனது மாமனார் மற்றும் மாமியாரை உடன் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தான்.

சந்திரபோஸிடம், தன் மனைவி கூறியதைக் கூறி பரிசுப் பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ள வந்திருந்தவனுக்கு, கேட்காத பல தகவல்கள் தந்தையின் மூலம் கிடைக்கப்பெற்றது.

விசாலினியின் கல்வியியல் கல்வியின் போது உண்டான தகவல்களும் அர்விந்திற்கு பகிரப்பட்டது. வனிதாவின் விடயம் அனைத்தையும் மறையாது மகனிடம் தெரிவித்திருந்தார்.

சரணின் புகைப்படத்தை எதற்காக, யார் பரிசாகக் கொடுத்தார் என்பதை அறியவும், மதன்தாராவின் வாழ்த்தினை யார் மூலம் மணமக்களுக்கு தெரிவித்தார் என்பதை அறியவும், காவல்துறை விரைந்ததை பற்றி மகனிடம் விபரம் கூறியிருந்தார்.

மதன்தாரா தன்னுடன் பொறியியல் கல்வியில் பயின்றவள் என்ற செய்தியையும், சிங்கப்பூர் பயணத்தின் போது நடந்தவற்றையும், தனது தந்தையிடம் மறையாமல் கூறியிருந்தான், அரவிந்த்.
நேரில் சென்று மதன்தாராவை அழைக்கவில்லை என்பதோடு, போஸ்டல் மூலம் அழைப்பிதழ் அனுப்பியதை பற்றியும் மறையாது கூறியிருந்தான், அரவிந்த்.

அவளால் தனக்கு சிங்கப்பூர் பயணத்தின் போது ஏற்பட்ட பிரச்சனையை, தானே சரி செய்து ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தாலும், அதை முற்றிலும் சரிசெய்ய எண்ணியே மதன்தாராவிற்கு தனது வரவேற்பு நிகழ்விற்கு அழைப்பு விடுத்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினான்.

தந்தை மற்றும் மாமனார் இருவரும் காவல்துறையின் உதவியை நாடியதை அறிந்து, அவனும் அவர்களுக்கு ஒத்துழைக்க முடிவு செய்தான்.

காவல்துறை அதிகாரியை நேரில் சென்று சந்தித்தவன், தனது மனைவிக்கு உண்டான விபத்தைப் பற்றியும் பகிர்ந்திருந்தான். தனது மனைவியின் வாய்மொழியாக விசா தெரிவித்த விடயத்தையும் மறையாது பகிர்ந்து கொண்டான். அதன்பிறகு அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் மறையாது பதிலளித்தவன், மருத்துவமனைக்கு திரும்பியிருந்தான்.

சஞ்சயை அழைத்து விடயத்தை நேரில் பகிர்ந்தவன், மேற்கொண்டு காவல்துறைக்கு ஒத்துழைக்கப் போவதாகவும், இதனால் உண்டாகும் மனவருத்தங்கள்… குடும்ப உறுப்பினர்களிடையே வராதவாறு, சஞ்சய் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான், அரவிந்த்.

அரவிந்த் திருமணப் பேச்சிற்குப் பிறகு, தனது தாயின் மேற்பார்வையில் இருந்து வந்த பள்ளியை, அரவிந்தனுக்குப் பிறகு, விசாலினியின் வசம் ஒப்படைக்கும் விடயங்களை… தன் தமையன் வீட்டில் அனைவரிடமும் பகிர்ந்தது முதல், மிருணாவின் முரண்பாடுகளை நேரில் கண்டவன்.

தமையனின் செயலால் உண்டாகும் விளைவுகள் எத்தகையதாக இருந்தாலும்… ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எண்ணி சற்றே மனம் வருந்தினாலும், பிரச்சனையின் ஆணி வேரை கண்டறிய தன்னாலான ஒத்துழைப்பைத் தருவதாக தனது சகோதரனுக்கு உறுதியளித்திருந்தான், சஞ்சய்.

நிகழ்வுகளின் தாக்கம் தன்னை மட்டுமல்லாது, தனது ஒட்டு மொத்த குடும்பத்தையே ஒரு ஆட்டம் ஆடச் செய்யும் என்பதால், எந்த மாதிரியான நிகழ்வானாலும், அதனை ஏற்றுக் கொள்ள தன்னைத் தயார் செய்ய ஆயத்தமானான் சஞ்சய்.
—————-

மருத்துவனை திரும்பியவன், மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, மனையாளின் முகத்தை பார்த்தபடியே உடன் அமர்ந்திருந்தான்.

எட்டு ஆண்டுகள் நேரில் காணாத காலம் கொடுத்த ஏக்கத்தை விட, கடந்த இரண்டு நாட்கள் தந்த ஏக்கத்தின் அளவு பலகோடி மடங்காக அதிகரித்திருந்ததை உணர்ந்து விசாவின் கையை தனது இருகைகளுக்குள் பொத்தி வைத்தபடியே அமர்ந்திருந்தான், அரவிந்த்.

எட்ட இருந்தபோது இல்லாத ஏக்கம், கிட்டே இருக்கும் போதும் அவளின் உடல்நலக்குறைவின் காரணமாக கடலளவாக உயர்ந்திருப்பதை எண்ணி மனம் கணத்தது. அறிவு உணர்ந்தாலும், மனம் எதையும் இலகுவாக ஏற்றுக் கொள்ள சண்டித்தனம் செய்தது.

மோகமில்லா நிச்சலன மனம் அங்கு அவனுக்கு சாத்தியமாகியிருந்தது. அன்பும், கருணையும் மனைவியின் மீது ஆறாக ஊற்றெடுத்திருக்க, அதில் திளைக்க அவளின் உடல்நிலை தடையாக இருந்தது.

தன்னவளை இந்நிலைக்கு கொண்டு வந்தவர்களை கொன்று புதைக்கும் வெறியே வந்தது. மிருகத்தனத்தை மறைத்து, தனக்குள்ளான மனிதனை கொண்டு வர பிராணாயாமப் பயிற்சி அவ்வப்போது மேற்கொண்டான், அரவிந்த்.

மருத்துவர்களின் வாய்மொழியாக, “அவங்களுக்கு ரொம்ப ஃபோர்ஷா தலை கீழ அடிச்சதுல கபால எழும்புகள்ள உண்டான அதீத அதிர்வின் காரணமாக இன்னும் பெயின் இருக்கு. அது சரியாகற வர அதிக மகிழ்ச்சி, துன்பம் தரக்கூடிய விசயங்கள அவங்ககிட்ட பகிராதிங்க.

மேலும், அதிகமாக பேசவோ, வாய்விட்டு சிரிக்கவோ, கடினமான உணவை கடித்து உண்ணவோ கூடாது. அதனால அவங்கள அதிகமா தொந்திரவு யாரும் செய்ய வேண்டாம்!”, என்று கூறியதை அறிந்து, விசாலினியின் அருகே யாரையும் விடாமல், அரவிந்தனே அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.

இரண்டு நாட்களில் ICU வில் இருந்து, நார்மல் வார்டிற்கு மாற்றியிருந்தார்கள். தன் மனைவியின் உடல்நலன் கருதி, தனி அறையை ஏற்பாடு செய்திருந்தான், அரவிந்த்.

பெரும்பாலும், மாத்திரைகளின் வீரியத்தில் உறக்கத்தில் பொழுதைக் கழித்தாள், விசாலினி.
விழித்திருந்த நேரம் முழுமையும், தனது கணவனுடன் தன் மனம் போன போக்கில், தனது எண்ணம் கூறுவதை செயலாக்கினாள், விசாலினி.

அரவிந்த் விசாலினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அடக்கி வாசித்தாலும், அவனின் பருவ வீணையை மீட்டி, அரவிந்த் உணர்வுகளை உரசிப் பார்த்து, உயிர்வதை செய்தாள், விசாலினி.
நோயாளி எனும் நிலையில் இருந்தவளுக்கு, கணவனின் உணர்ச்சி துடைக்கப்பட்ட பார்வை, தன்னிடம் பற்றற்ற தன்மை கொடுத்த பயம், அவளாகவே இறங்கிச் சென்று அவனிடம் பேச சொன்னது.

மருத்துவர்கள் வரும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் அரவிந்தனின் மடியே, விசாலினி அமரும் சிம்மாசனமாக மாறியிருந்தது.

எந்நிலையிலும், விஸ்வமித்திரனையே மிஞ்சும் முனிவன் போல நடந்து கொண்ட தன்னவனை அறவே வெறுத்தாள், விசாலினி.

அரவிந்த் கழுத்தைக் கட்டியபடியே, கதை சொல்லு என நச்சரிப்பதும், அரவிந்தனின் அடர்ந்து கருத்து வளர்ந்திருந்த மீசையை சங்ககால அரசர்களின் படங்களில் காட்டியிருப்பது போல கம்பீரமாக்கப் போவதாகக் கூறி, அவள் செய்த அட்டகாசங்கள் அனைத்தையும், அமைதியாக, பொறுமையோடு விசாலினியின் உடல்நலம் கருதி, கடந்திருந்தான், அரவிந்த்.

முன்பை விட தலையில் உண்டான வலி குறைந்திருக்க, அதிகம் பேசத் துவங்கியிருந்தாள், விசாலினி.

அரவிந்தனை சீண்டுவதும், சீட்டி அடித்து கிண்டல் செய்வதும், “என்ன மச்சி! புள்ளப் பூச்சி கணக்கா இருக்க!”, விசாலினி

‘நான் உனக்கு புள்ளப் பூச்சியா…! எல்லாம் என் நேரம்! இப்ப வந்து கேக்குற? இதயே உடம்பு சரியான பின்ன எங்கிட்ட வந்து கேட்டுப்பாரு…! உனக்கு புள்ளை கொடுக்கப் போற பூச்சி நாந்தானு நிரூபிச்சுக் காட்டறேன்!’, என அரவிந்த் மனம் முழக்கமிட்டாலும், ஷாலுவின் உடல்நிலையை எண்ணி மனம் முரண்டினாலும், அவளிடம் எதையும் கூறாமல், தன் மனம் எண்ணியதை முகத்தில் காட்டாமல், புன்னகையை ஒட்டவைத்த முகமாகவே தன்னவளைக் கடந்துவிடுவான்.

விசா உறங்கும் வேளையில், அவளின் பேச்சை, செயலை எண்ணியபடியே, இனிய நினைவுகள் தரும் இதமான தனிமையை முகம் கொள்ளா புன்னகையோடு, தன்னவளின் துயில் எழும் நேரத்தை எதிர்நோக்கி காத்திருப்பான்.

“அத்தான்னு கூப்பிடச் சொல்லிட்டு, அதுக்கு அர்த்தம் கல்யாணம் முடிஞ்சபின்ன கேளுன்னு சொன்னிங்க! நேத்துல இருந்து கேக்குறேன். அமைதியாவே இருக்கீங்க…! இப்ப சொல்லுங்க!”, என்று அரவிந்தை மற்றொரு முறை சீண்ட,

“இப்ப வேணாம். இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றேன்!”, என்றவனை விடாமல் நச்சரித்தாள்.
அதற்குமேல் விசாலினியை சமாளிக்க முடியாமல், “எல்லை மீறியவன்னு அர்த்தம்!”, என்று அத்தானுக்கு விளக்கம் கூறியவனை,

“எந்த எல்லை மச்சி! பாகிஸ்தான் எல்லையா? இல்லனா பங்களாதேஷ் எல்லையா?”, என்று அரவிந்தனை ஒரு வழியாக்கியிருந்தாள், விசாலினி.

“ரொம்ப விளையாண்டா…! உனக்குத்தான் சிரமம். பாத்து… பத்திரமா இருந்துக்கோ!”, என்று சிரித்தபடியே கூறியவனை,

“என்ன சிங்கம்…! ரொம்ப பயமுறுத்தற….! நீ ஆண் சிங்கம்னா…! நான் பெண் சிங்கம்…! இதுல என்ன சிரமம் வந்துரும்! புதுசா ஒரு குட்டி சிங்கம் தான வரும்!”, என அரவிந்தனையே கேள்வி கேட்டு தவிடு பொடியாக்கியிருந்தாள், விசாலினி.

“அக்கடானு இருக்கேன். உசுப்பேத்தி விடாத!”, என்றவனை

“அக்கா டானு கணக்கா தான் இருக்கேன்…! ரொம்ப மரியாதை எல்லாம் எனக்கு வேணாம் மச்சி!”, என்று சிரித்தவளை

தன்னோடு இழுத்து, அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “ரொம்ப பேசாதடீ…! ரெஸ்ட் எடுக்கற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் ரொம்ப வாயடற…! உன்னைய அதிகம் பேசக்கூடாதுனு டாக்டர் சொன்னதையெல்லாம் கேக்காம என்ன விளையாட்டு ஷாலுமா!”, என்று கேட்டவனிடம்

அரவிந்தனை அணைத்தபடியே, “எனக்கு ஒரு காஃபீ வேணும்!”, என வெட்கம் மறந்து தன்னவனிடம் வாய் திறந்து கேட்டிருந்தாள், பெண்.

விசாலினியின் உடல்நலனைக் கருத்தில் கொண்டவன், “உடம்பு கியூர் ஆகற வர டீ, காஃபீ வேணான்டா!”, என்று எடுத்துக் கூறியவனிடம்

“போடா…! வர வர நீ ரொம்ப பண்ற…! என்னைய கண்டுக்கவே மாட்டுற. நாந்தான் உம்மேல ரொம்ப லவ்வாங்கியா இருக்கேன். என்னைய உனக்கு புடிக்கலயா?”, என்று அழ ஆரம்பித்து இருந்தாள்.

மனைவியின் இந்த பரிமாணத்தைக் கண்டு பதறியவன், “உனக்கு ட்ரீட்மெண்ட் முடியற வர கொஞ்சம் பொறுமையா இருடா ஷாலுமா!”, என்று அரவிந்த் கூற

“ஏன்…! ஒரு உம்மா கொடுத்தா கூட அந்த சந்தோசத்துல நான் செத்து போயிருவேன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்களா?”, என்று கேள்வியை அவன்புறம் திருப்பி விட்டு, அரவிந்தை திணறடித்தாள்.

“ஏய்… எதுக்குடி தேவையில்லாம எதாவது பேசுற?”, என்றவன், தன்னவளை இழுத்து வாய் ‘டீ’ மட்டும் கொடுத்து விடுவித்தவன், “இப்போ இது போதும். எனக்கு கொஞ்சம் வெளிவேலை இருக்கு. அதனால இப்போ தூங்குவியாம்!”, என்று அவளை உறங்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.

படுத்தபடியே, “எஸ்கேப்பா ஆகுற, வேலை இருக்குனு…! போயிட்டு வந்தவுடனே எனக்கு என்ன தருவ?”, என்று கணவனின் மடியை தலையணையாக்கி இருந்தவள் கேட்க,

“என்ன வேணும்? என் ஷாலுவுக்கு!”, என்று எதையும் யோசிக்காமல் அரவிந்த் கூற

“இங்க ஒரு டீக்கே பஞ்சமா இருக்கு! பெரிசா என்னத்த எனக்கு நீ தரப் போற?”, என்றபடியே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளை இன்னும் எத்துணை நாட்களுக்கு தன்னால் சமாளிக்க இயலும் என்று தெரியாமல் திணறியிருந்தான், அரவிந்த்.

திணறல் நீடிக்கும்….