வானம் காணா வானவில்-19

வானம் காணா வானவில்-19

அத்தியாயம்-19

நலுங்கிய ஆடையுடன் பாதி உறக்கத்தில் இருந்து எழுந்த யுவதியைப் போல, அவசரகதியில் அறைகுறை வேலைகளுடன் வந்திருந்த திருமண வீடியோவை, காவல்துறையினரின் புலன்விசாரணைப் பார்வைக்கு உட்படுத்தியிருந்தனர்.

வந்திருந்த பரிசுப் பொருட்களை வீடியோவைக் கொண்டு ஒத்திசைவு செய்து பார்த்தனர்.
சந்தேகம் சுரேஷின் மேல் இலேசாக விழுந்திருந்தது.

வரவேற்பு ஆரம்பித்த சற்று நேரத்தில் பொக்கேவுடன் வந்து மணமக்களை வாழ்த்தி இறங்கியிருந்தான், சுரேஷ்.

பிறகு, ஒரு மணித் தியால இடைவெளிக்குப் பின், வேறு ஒருவனுடன் மண்டத்தில் நுழைந்த சுரேஷ் நீண்ட நேரம் அங்கு நின்று வந்திருந்த புதியவனுடன், கையில் இருந்த பரிசைக் காட்டி ஏதோ பேசினான். வந்திருந்தவனும் தலையை ஆட்டியும், மறுத்தும் சுரேஷிற்கு பதில் அளித்தான்.

மணமக்கள் நின்றிருந்த மேடை வரை வந்த சுரேஷ், பரிசுடன் வந்தவனுடன் மேடைக்கு வராமல், அவனை மட்டும் மேடைக்குச் செல்ல பணித்து விட்டு பின்தங்கியிருந்தான்.

உடன் வந்தவன் மேடைக்குச் சென்று, விசாலினியிடம் பரிசுப் பொருளை கொடுத்திருந்தான். அவள் பெற்றுக் கொள்வது போல புகைப்படம் எடுக்க நிற்குமாறு, வீடியோ எடுப்பவர்கள் கூறியதையும் மீறி, மறுத்து, பரிசளித்தவன் மேடையை விட்டு கீழே இறங்கியதையும் பார்த்திருந்தனர்.

அரவிந்த் வாயிலாக சந்தேகப்படும்படியாக சுரேஷ் நடந்து கொண்டதாக அறிந்திருந்ததாலும், காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் வந்திருந்தான், சுரேஷ்.

இரு நாட்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததால் தண்டனை பெற்று, புழலில் கைதியாக இருக்கும் வனிதாவின் வீட்டிற்கு விசாரிக்கும் நோக்கத்துடன் காவல்துறை நேரில் சென்றபோதும், அங்கு சுரேஷை சந்தித்ததை நினைவு கூர்ந்தது, காவல். சுரேஷை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விசாரிக்க முடிவு செய்தது.
——————

சுரேஷ் ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் பேசினான். எந்த திருமணம், எங்கு என்று காவலையே கேள்வி கேட்டு தள்ளி நிறுத்தினான்.

அரவிந்த், விசாலினி திருமணத்திற்கு வந்திருந்தாயா என காவல் நேரடியாக கேள்வியை முன்வைத்திருந்தது. நடிகை மதனதாராவின் சார்பாக திருமண விழாவில் பங்குகொண்டதையும், மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்ததையும் தர்க்கமின்றி அவனாகவே ஒப்புக் கொண்டான்.

‘நீ அந்தம்மாட்ட(மதன்தாரா) டிரைவராவா வேல பாக்குற?’, என்ற காவல்துறையின் கேள்விக்கு, அவர்களின் வீட்டு டிரைவர் விடுப்பு எடுக்கும் காலங்கள் மற்றும் ஏதேனும் அவசரகாலங்களில் மட்டும், தான் மதனதாராவின் காரை எடுப்பதாகக் கூறினான்.

‘உன்கிட்ட பூங்கொத்து கொடுத்து விட்டாங்க சரி, கிஃப்ட்ட வந்து குடுத்தபின்ன கிளம்பி போனவன், திரும்ப வேற ஒருத்தவனோட மகால் உள்ள வர வந்துட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கு கிஃப்ட் கொடுக்கும் போது அவன்கூட வராம ஏன் கீழயே நின்னுட்ட?’ என்ற காவலின் கேள்விக்கு

‘இது எப்டி… இந்தாளு என்னைய நேருல பாத்த மாதிரி கேள்வி கேக்குது’ என்று யோசித்தபடியே,

‘நான் முன்னமே பொக்கே குடுத்து பொண்ணு மாப்ளய பாத்தனால அங்க வரல சார்!’, என்றிருந்தான்.

‘சரி உங்கூட வந்து கிஃப்ட் கொடுத்தவனப் பத்தி சொல்லு!’, என காவல் கேட்க,

‘சார் அவன் யாருனே எனக்கு தெரியாது! நான் மகாலுக்கு வெளிய நிக்கும் போது பொண்ணு மாப்ள பேர சொல்லி இந்த மகாலானு கேட்டான். அதான் கூட்டிட்டு வந்தேன்!’, என்றான், சுரேஷ்.

சுரேஷின் வார்த்தைகளை நம்பாத காவல்துறை, “ஒழுங்கா உண்மைய சொன்னா உனக்கு குறைஞ்ச பட்ச தண்டனை கிடைக்கற மாதிரி பண்ணுவேன். இல்லை நாங்களே கண்டுபிடிச்சு நீதான் குற்றவாளின்னு சந்தேகத்துக்கு இடமில்லாம நிரூபணம் ஆனா உன்னைய காப்பாத்த யாருமில்ல… பாத்துக்க…!

அப்றம், அந்த போஸ் சார் வீட்ல அவங்க மருமக பொண்ணு, மிருணானு… உனக்கு அது என்ன உறவாகுது?”, காவல்

“தங்கச்சி சார்”

“கூடப் பொறந்ததா?”

“ஆமா சார்”

“சரி…. அந்த டாக்டர் கேஸூல உள்ள போன வனிதா வீட்ல வச்சு உன்ன பாத்தனே…! அவங்கல்லாம் உனக்கு உறவா?”

“அது எம் மாமா பொண்ணு தான்! மாமா வூட்டுக்கு எப்பாது போயி வருவேன் சார்”

“போஸ் அவரு வீட்டுக்கு, உன் தங்கச்சிய பாக்க போவியா?”, காவல்

“இல்ல சார். அங்க போனா அது வையும்!”

“யார சொல்லுற?”

“எந்தங்கச்சியதான் சார் சொன்னேன். அதங்காட்டி வெளிய எங்காது தான் வச்சு பாப்பேன்!”, என்று சுரேஷ் கூறி முடிக்க

“அப்ப அந்த வீட்டுப் பக்கமா நீ போனதே இல்லையா?”

“அவுங்க பெரிய இடம்னால… அங்க என்னை இட்டு பேச தங்கச்சிக்கு புடிக்காது சார்…! தங்கச்சி நம்ம ஏரியாவாண்ட வட்டிக்கு வுடுது சார். கலெக்சனுக்கு அதால அலைய முடியலன்னு எங்கைல சொல்லுச்சு.

நம்ம ஏரியால வட்டிக்கு கொடுக்கறதால, கலெக்சன் நாந்தான் வாங்கி வந்து அது கைல குடுப்பேன். எனக்கு கமிசன் குடுக்கும் சார். அதங்காட்டியும் நம்ம ஏரியாவாண்ட வந்து வாங்கிட்டு போகும். அப்ப பாத்துக்குவோம்!”, என்று கூற

அரவிந்த் சொன்ன விடயம் மனதில் முரண்ட, காவல் அதன்பின் ஆட்சி செய்ய துவங்கியது.

அடி உதவுவதது போல அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள் என்பது போல அடி வாங்கியிருந்தான், சுரேஷ்.

அடி, அதனால் உண்டான ஊமைக் காயத்தின் வேதனை அவனை உண்மை பேச வைத்திருந்தது.
மீண்டும் ஒரு முறை காவல்துறை எச்சரித்து இருந்தது.

“இதுல எதாவது மாத்தி சொல்லி என்னை ஏமாத்தனும்னு நினைச்சே, ஜென்மத்துக்கும் புழல் தான். பாத்துக்க!”, என பயமுறுத்தியது.

அதன்பின் தானாக முன்வந்து உண்மை சொல்ல துவங்கியிருந்தான், சுரேஷ்.
————-

தனது ஒன்றுவிட்ட தாய்மாமனின் மகளான வனிதாவின் மேல் கொண்ட காதலை, வனிதாவிடம் தெரிவித்து இருந்தான் சுரேஷ்.

‘உம்மூஞ்சிக்கு நான் கேக்குதா… கண்ணாடில போயி உன்னய பாரு முதல்ல…!
என் ரேஞ்சுக்கு எனக்கு ஹீரோ மாதிரி மாப்பிள்ளை வருவான். உன்னையெல்லாம் கட்டிட்டு என்னால கஷ்டப்பட முடியாது.
திரும்ப, காதல், கஸ்மாலம்னு பேசிக்கிட்டு எம்முன்ன வந்த… எங்க அம்மாகிட்ட சொல்லிருவேன்”, என்று வனிதா மிரட்டலோடு கூற, என்றுமே தங்களை அண்ட விடாத அத்தையை எண்ணி சற்றே பின்வாங்கினான், சுரேஷ்.

வனிதாவின் பேச்சில் மனமுடைந்த சுரேஷ், தனது சகாக்களின் உதவியோடு, வனிதாவை எப்படியாவது தன்னவளாக்க எண்ணிணான். அதற்கு ஐடியா வேண்டி பிறரை நாட, பலரும் பல ஐடியாக்களைத் தந்திருந்தனர். கஜினி போல படையெடுக்க எண்ணித் துணிந்தவனை, வனிதா தரக்குறைவான வார்த்தைகளால் பேசி, அவள் தாயிடமும் முறையிட்டிருந்தாள்.
வனிதாவின் தாயும், அவரின் பங்குக்கு வார்த்தைகளால் விளாசி, விரட்டியிருந்தார்.
தன்னை இகழ்ந்த வனிதாவின் பேச்சுக்களால், அவள்மீது அளவற்ற வன்மம் வளர்ந்திருந்தது. தன்னை மீறி வேறு யாரையும் அவள் எப்படி திருமணம் செய்து கொள்கிறாள்? என்பதை சவாலாகவே ஏற்றிருந்தான், சுரேஷ்.

அப்படி தனக்கு கிடைக்காத நிலை வந்தால், யாருக்கும் வனிதா கிடையாது என்ற எண்ணத்தை தனக்குள் வலுவாக்கியிருந்தான், சுரேஷ்.
——

அதே காலகட்டத்தில், தனது பால்யகால சிநேகிதனின் தம்பி சரண் என்பவனை காவல்நிலையத்தில் இருந்து வெளிவரும்போது எதேச்சையாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது, சுரேஷிற்கு.

“டேய் நீ சரணில்ல! இங்க எங்கடா?”, சுரேஷ்

“ஒரு என்கொயரிக்காக வரச் சொன்னாங்க அண்ணே! அதான் வந்துட்டு போறேன்!”, என்றுவிட்டு விடைபெற்றிருந்தான், சரண்.
அப்போது என்ன ஏது என்று விசாரிக்காமல் அவனை அழைத்துச் சென்று அவன் கூறிய இடத்தில் விட்டுவிட்டு கிளம்பியிருந்தான், சுரேஷ்.

ஓரிரு நாட்கள் கடந்த பிறகு, வட்டி கலெக்சனுக்காக சரணின் பகுதிக்கு சென்றிருந்த போது, அவசர அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பிய சரணைக் கண்டு வழிமறித்த சுரேஷ், “எங்க நடந்து போற? என் வண்டில வா… போற வழியில இறக்கி விடறேன்”, என்று சரணை வற்புறுத்தி அழைத்தான். சரணும் மறுக்காமல் சுரேஷின் வண்டியில் ஏறியிருந்தான்.

பேச்சுவாக்கில் வண்டியில் வரும்போது விசாரித்த சுரேஷின் கேள்விகளுக்கு விகற்பமில்லாமல் விடயத்தை பகிர்ந்திருந்தான், சரண்.

என்ன? ஏது? என சுரேஷ் விசாரிக்க, “ஒரு பொண்ணுக்கு நான் டியூசன் எடுக்கிறியானு மெசேஜ் போட்டதா அன்னிக்கு ஸ்டேசன்ல கூப்டு போயி என்கொயரி பண்ணாங்கண்ணே!”, சரண்.

“டேய்…! பாட பொஸ்தவம் படிக்ககுள்ள நம்ம டவுசரு கிழிஞ்சிரும். அதுல… நீ போயி டூசன் எடுத்து, ஒரு புள்ள படிக்கவாடா?”, என நக்கலடித்தான் சுரேஷ்.

“அது உனக்கு தெரியுதுண்ணே. ஆனா அந்த பொண்ணு வூட்ல கம்ப்ளைண்ட் குடுத்து… என்னைய அன்னிக்கே கூப்டு விசாரிச்சாங்கண்ணே!”, சரண்.

“அப்டி என்ன பெரிய ரதியவா பெத்து வுட்ருக்கான், அவ அப்பன்!”, சுரேஷ்.

“இந்தா…! நீயே பாத்து சொல்லு, அது ரதியா, இல்ல சொரியானு!”, என்று வாட்சப் டிபியில் இருந்த விசாலினியின் புகைப்படத்தை எஸ்டி கார்டில் முன்பே சேமித்து வைத்திருந்ததை எடுத்து சுரேஷிடம் காட்டினான், சரண்.

சரணின் மொபைலில் இருந்த படத்தை வாங்கி பல கோணத்தில் அலைபேசியை திருப்பி திருப்பி பார்த்தவன், “பொண்ணு அம்சமா இருக்கேடா! ஆக்டரு கணக்கா இருக்கு. அதான் அவ அப்பன் துள்ளுறான். ஆமா அந்தப் புள்ள போட்டோவ எதுக்கு நீ பத்திரமா வச்சிருக்க?”, சுரேஷ்.
“அழகா இருக்குதுல்லண்ணே… அது போட்டோ நம்மகிட்ட இருந்தா கெத்தா இருக்குதுல்ல… அதான் எடுத்து வச்சேன். ஆனா… எவனுக்கு அந்தப்புள்ளைய குடுத்து வச்சிருக்கோ!”, என்று சரண் ஏக்கமாகக் கூற,

“என்னடா? லவ்ஸா….!”, என்று கேட்டு சுரேஷ் சிரிக்க.

“இது எதுக்குன்னே நமக்கு. குடுத்து வச்சவன் வந்து குடும்பம் நடத்துவான். நமக்கு ஏத்தமாதிரி, மயிலாஞ்சி இல்லனா குயிலா போதுண்ணே!”, என்று சரணும் சிரித்தபடியே பதில் கூறினான்.

“சரி அது இருக்கட்டும். இப்ப இன்னா விசயமா வெளிய கிளம்பிக்கினேனு இன்னும் எங்கைல சொல்லலயே?”, என்று சுரேஷ் கேட்க

“இன்னிக்கு அரைமணி நேரம் முன்ன… வேற ஒரு புது நம்பர்ல இருந்து எனக்கு வாட்சப்ல மெசேஜ் வந்துது. ஆனா அது புது நம்பரு. இப்ப காமிச்ச பொண்ணு இல்ல, வேற ஒரு ஆளு தான் இருந்தது. எதுவும் சந்தேகப்படும்படியா வந்தா போலீஸ்ல வந்து சொல்ல சொல்லி அனுப்புனாங்க. அதான் ஸ்டேசனுக்கு கிளம்பினேன்!’, என்று சரண் கூறினான்.

எங்க அந்த புது நம்பர காமி. அது யாரு பேருல இருக்குனு கேட்டு சொல்ல ஆளப் பாப்போம்னு வாட்சப் செய்தி வந்திருந்த எண்ணை சுரேஷ் கேட்டான்.
சரண், வாட்சப் செய்தியை பார்த்ததோடு, தொடுதிரையை மூடாமல் இருக்க, அதை சுரேஷிடம் அப்படியே எடுத்துக் காட்டினான்.

எண்ணை தெரியாமல் இருந்தவனுக்கு, டிபியில் இருந்த தனது ஒன்றுவிட்ட மாமாவின் புகைப்படத்தைப் பார்த்து குழம்பியிருந்தான்.

மாமாவின் எண்ணிலிருந்து யார் இதை அனுப்பியிருக்கக் கூடும்? என்று யோசித்தான், சுரேஷ்.

“தமிழ்லயா வந்திட்டுருக்கு உனக்கு”, சுரேஷ்

“இங்கிலீஸூல்ல தான் வந்துருக்கு”, சரண்

‘மாமா இங்கிலீஸ்ல பேசும். ஆனா அதுக்கு படிக்க, எழுவ தெரியாது. அத்தையும் ஆறாங்கிளாசு பெயிலு…! அப்ப அத்தையும் இல்ல. காலேசுக்கு போற நம்ம வனிதாவாத்தான் இருக்கும் போல, சிறுக்கி மவ! அப்டி என்னத்த இவனுக்கு அனுப்புச்சானு தெரியலயே!’, என்று மனம் புழுங்கினாலும், நிதானமாக யோசித்தான், சுரேஷ்.

அத்தோடு சிறுது நேரம் யோசித்தபடியே வண்டியை ஓட்டி வந்தவன், “ஒரு தடவ மெசேஜ் வந்தா… அதப் போயி எதுக்கு போலீஸ்ல சொல்ற சரணு? நீ பதிலுக்கு மெசேசு போட்டு விட்ருக்கலாமுல்ல”, சுரேஷ்.

“நீ வேற, இந்த டியூசன் மேட்டரு பாத்தாலே எனக்கு அலர்ஜி ஆவுது”, சரண்.

“சரி… சரி… உண்மையிலேயே தெரியாம வந்த மெசேசா இருந்து, நீ போயி போலீஸூல்ல சொன்னா அவங்களுக்கும் பிரச்சனை தான…! அவங்க போலீஸாண்ட கஷ்டப்படுவாங்க…! அதங்காட்டி நீ வயிட் பண்ணிப் பாரு…! திரும்ப திரும்ப அதே கணக்கா மெசேஜ் வந்தா நீ போலீஸாண்ட போ. அப்டி என்ன மெசேஜ் வந்திருக்கு? காட்டு பாப்போம்!”, என்று அறிவுரை பகிர்ந்ததோடு அலைபேசியில் இருந்த குறுஞ்செய்தியை காணும் ஆவலுடன் சரணின் அலைபேசியை வாங்கிப் பார்த்தான்.

“என் டியூசன் நேரம் உங்களுக்கு தெரிவிக்க, நீங்கள் வந்தவுடன் எனக்கு மெசேஜ் செய்யவும்”, என்று குறுஞ்செய்தி தங்கிலீஸில் வந்திருந்தது.

அதைப் படித்து நிதானமாக, பெருமூச்சு ஒன்றை சரண் அறியாமல் விட்டவன், இடையில் எங்கும் இறக்கி விடாமல், அவர்களது வீட்டிற்கே வந்து வண்டியில் விட்டுவிட்டு சென்றிருந்தான், சுரேஷ்.

அதன்பின் வந்த சில நாட்களில், வனிதா மருத்துவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தமைக்கு காவல்துறையிடம் மாட்டிக் கொண்டதாகவும், அதன்பின் சரண் எப்படி இறந்தான் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தான், சுரேஷ்.

‘சரண உனக்கு எப்டி தெரியும்?’, என்று காவல்துறை கேட்க, ‘அவங்கண்ணணும், நானும் சின்ன வயசுல இருந்து சோக்காளிங்க!’, என்று கூறினான், சுரேஷ்.

‘அவனுங்கெல்லாம் எப்டி?’, என்ற காவல்துறையின் கேள்விக்கு சரணின் குடும்பத்தைப் பற்றி தனக்கு தெரிந்த அனைத்தையும் பகிர்ந்திருந்தான், சுரேஷ்.

“சரி இப்ப எதுக்கு அந்த விசா பொண்ண வேவு பாத்த?”

“வேவுலாம் பாக்கல…!”, என சுரேஷ் கூற, மீண்டும் கன்னத்தில் பளார் என்று ஒன்றை வைத்திருந்தது, காவல்.

எதிர்பாரா காவலின் அரையில் பொறி கலங்க, சற்று நேரத்தில் சுதாரித்தவன், தனது நிலையை எண்ணி… மறையாது பேச ஆரம்பித்தான், சுரேஷ்.

“ஒழுங்கா உண்மைய சொல்லு. இல்லனா உன் தங்கச்சி தான் இது எல்லாத்துக்கும் காரணம்னு… அதையும் இங்க கொண்டு வர மாதிரி பண்ணிறாத!”, என்று மிரட்ட

தனது தங்கை சமூக சேவை செய்வதாகக் கூறி, தனது மாமியிடமும், கணவனிடம் அவ்வப்போது பணம் வாங்கி, வட்டிக்கு விட்டதை காவலிடம் பகிர்ந்திருந்தான், சுரேஷ்.

வரைமுறை இல்லாமல் சமூக சேவை செய்ய வேண்டாம் என்றும், இனி அப்படி கொடுக்கும் நன்கொடைகளுக்கு உரிய ரசீது பணம் பெற்றுக் கொள்பவர்களிடம் இருந்து வாங்கி தன்னிடம் ஒப்படைக்கும்படி தனது மாமி அழைத்து பேசியதையும் தனது தமையனிடம் கூறியிருந்தாள், மிருணா.

இது வரை சல்லிக்காசு நன்கொடையாக பிறருக்கு வழங்கியது கிடையாது என்பதையும், தான் செய்யும் வட்டி தொழில் பற்றி வீட்டில் உள்ள யாருக்கும் இது வரைத் தெரியாது என்பதையும், இனி மேற்கொண்டு தனது வட்டித் தொழிலை முன்பு போல இலகுவாக நடத்துதற்கு இயலாது என்றும், மிருணா தன்னிடம் கூறி வருந்தியதாக கூறினான், சுரேஷ்.

மிருணாவின் மாமியின் மேற்பார்வையில் இருந்து வந்த பள்ளி, அரவிந்த் திருமணத்திற்கு பிறகு அவனது மனைவிக்கு கொடுக்கப் போவதை அறிந்து கொண்டாள், மிருணா.

இச்செய்தி அறிந்தபின், விசாலினியின் மேல் தனது தங்கை மிருணாவிற்கு பொறாமை ஏற்பட்டதாகவும், பாரபட்சம் திருமணத்திற்கு முன்பே பார்க்கும் குடும்பத்தில் இனி தனக்குரிய மரியாதையை பெறுவது கஷ்டம் என்பதால் விசாலினியை இயன்றவரை அக்குடும்பத்திற்குள் கொண்டு வராமல் இருக்க ஏதாவது செய்ய எண்ணிணாள் மிருணா என்பதையும் கூறினான்.

தனது கணவன் சஞ்சய், அவர்களது குடும்ப ரகசியங்களை, தன்னோடு பகிர்ந்து கொள்வது கிடையாது என்பதையும், முதல் முறை விசாலினியின் வீட்டார் திருமணத்தை ஏற்று நடத்த தயங்கியது ஏன் என்று தன்னை விசாரித்துக் கூற தனது தங்கை தன்னை கேட்டுக் கொண்டதாகவும் கூறினான், சுரேஷ்.

அரவிந்த், விசாலினியை திருமணம் செய்தால், இதுவரை இருந்ததுபோல இலகு வாழ்க்கை வாழ்வது கடினம் என்று மிருணா எண்ணி, தன்னிடம் புலம்பியதை மறையாது தெரிவித்திருந்தான், சுரேஷ்.

விசாலினி வருமுன்னே தன்னை அழைத்து பேசிய குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாடுகளை எண்ணி மனமுடைந்த மிருணா, தனது தமையன் சுரேஷின் உதவியை நாடியதாக தெரிவித்தான், சுரேஷ்.

விசாலினியை தங்களது குடும்பத்திற்குள் மருமகளாகக் கொண்டு வராமல் இருக்க என்ன செய்தாவது தடுத்து நிறுத்தும்படி தனது தங்கை கேட்டுக் கொண்டதாகவும், அதனால்… தான் சில குளறுபடிகளை அரவிந்த் விசாலினி திருமணத்தன்று செய்ததாகவும் காவல்துறையிடம் தெரிவித்து இருந்தான், சுரேஷ்.

‘கோவில்ல வச்சு எடுத்த விசாலினிப் பொண்ணு போட்டோவ எங்கிட்ட வந்து காமிச்சுது மிருணா. இத எங்கயோ பாத்திருக்கோம்னு யோசிச்சு… யோசிச்சு மண்டை காஞ்சு போச்சு…!’, சுரேஷ்.

‘அப்போ எந்தங்கச்சிட்ட கேட்டேன். பொண்ணு உங்களுக்கு சொந்தமானு. அது என்னனு எனக்கு தெரியலனு சொல்லிருச்சு.
நானும் அந்த பொண்ணு வீட்டாண்ட போயி விசாரிச்சேன். அவனுக வெளியூருகாரனுகனு அங்க தெரிஞ்சுகிட்டேன்.
கிட்டக் கூட போக முடியல…!
அப்பத்தான்… வடபழனி கோவில்ல சரணோட ரெண்டாவது அண்ணன் கல்யாணத்துக்கு அவனுக VAO சர்ட்பிகேட் வாங்க அலைஞ்சப்போ எதேச்சையா பாத்தேன்.

அப்பதான்… சரணு நினவு வந்திருச்சு. அவன் சாகும் முன்ன அவனோட போனுல போட்டோ காட்டுன பொண்ணு தான்… இப்ப அரவிந்துக்கு பாத்திருக்காங்கனு எனக்கு நினைவுல வந்துருச்சு.
அதயே மனசுல வச்சு சரணோட பெரியண்ணன்கிட்ட போயி பேசுனேன்’, சுரேஷ்.

‘என்ன சொல்லி அவனுகள ஏத்திவிட்ட?’, காவல்

‘சரணை போலீஸ்கிட்ட மாட்டிவிட்ட பொண்ணு, விசாலினி தான் என்றும், ஒருவேளை சரண் போலீசாரின் விசாரணைக்கு பயந்து, தலைமறைவாகி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், சரணின் மூத்த சகோதரனிடம் புரளியாக தான் தெரிவித்ததையும், ஒப்புக் கொண்டான், சுரேஷ்.

அதைக் கேட்ட சரணின் குடும்பத்தார், விசாலினியை பழிவாங்க எண்ணியது. அதே நேரம் இரு திருமணங்களும் ஒரே கோவிலில் நடக்க இருந்ததை பயன்படுத்தி என்ன செய்யலாம் என யோசித்தது.
அரவிந்த் குடும்பத்தைப் பற்றித் தெரிந்த கொள்ள உரிய கால அவகாசம் இல்லாததால், தெரியாமல் தாலி கட்டிவிட்டால், விசாலினியை தங்களோடு அவர்களது குடும்பம் அனுப்பிவிடும் என தப்புக் கணக்கு போட்டு, மூத்தவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சரணின் இரண்டாவது சகோதரனைக் கொண்டு அன்று வடபழனி கோவிலில் வைத்து தாலி கட்டியதாகவும் கூறினான், சுரேஷ்.

ஆனாலும் அழகம்மாள் பாட்டியின் நடவடிக்கையால், சரணின் குடும்பத்தாரின் பழிவாங்கும் படலுமும், சுரேஷின் முதல் கட்ட எதிர்பார்ப்பும் பொய்யாகி இருந்தது.

மேலும் அதன்பின், சரணின் சகோதரர்களை உதவிக்கு அழைக்க எண்ணி, அவர்களைத் தேடிப் போன சுரேஷிற்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

வடபழனியின் நிகழ்வுக்குப் பின், சரணின் சாவுக்கு நியாயம் வேண்டி அவனது மூத்த சகோதரன் தனது ரௌடி முதலாளியிடம் உதவி கேட்டுப் போயிருக்க, ரௌடி முதலாளி, “அவங்க யாருனு தெரியாம நீ பாட்டுக்கு எதாவது செய்திட்டு வந்திருக்க…! அவங்க பெரிய ஆளுங்க… அவங்க கைல ஆட்டம் வேண்டாம். அப்புறம் (வேர்)தூறுகூட இல்லாம போயிருவடா!”, என சரணின் மூத்த சகோதரனை எச்சரித்திருந்தான்.

தலையின் பேச்சை மீறி எதையும் செய்யும் துணிவு வராததால், அதை விட்டு அவர்கள் அத்தோடு ஒதுங்கி அமைதியாகிவிட்டனர்.
………………………………………………
மருத்துவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று திரும்பியவன் இரண்டு மணித் தியாலத்திற்குப் பின் விசாலினியின் அறைக்குத் திரும்பியிருந்தான், அரவிந்தன்.

உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு, எப்படி இருந்தவள், இப்படி ஆகிவிட்டாள் என்று எண்ணும் போதே நினைவே கசந்தது.
அதீத வேக மோதலால் உண்டான மெல்லிய நரம்புகளின் இயக்க பாதிப்புகள், முன்பு போல் இல்லாது ஏதாவது மாற்றங்களை, அவளது, செயல், எண்ணம் இவற்றில் உண்டு செய்யும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

விசாலினியின் செயல்களைக் கண்கூடாகக் காண்பவன் மனம், இரும்புத் தொழிற்சாலையில் இருக்கும் வெப்பமூட்டும் இயந்திரத்தைப் போல இருந்தது.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பிற்கு இலக்கணமாக இருந்தவள், அதீத மன அழுத்தம் காரணமாக இயல்புக்கு மாறாக நடப்பது எதனால்? என்று யோசித்தவனுக்கு, விசாலினியின் பயம் புரிந்தாற் போலிருந்தது.

முதல் அதிகாலையின் போதும், அதற்கு முன்பும் தன்னிடம் நடந்து கொண்ட விசாலினிக்கும், தற்போது இருக்கும் விசாலினிக்கும் ஆயிரம் மடங்கு வித்தியாசம் உணர்ந்தான், அரவிந்தன்.

இது எதனால் என்பதையும், மறைமுகமாக விளக்கி அனுப்பிய மருத்துவர்களின் வார்த்தைகளையும் அமர்ந்தவாறே அசைபோட்டான்.

‘மன உணர்வுகளை சீராக வைத்திருக்கும் பீனியல் சுரப்பியின் இயக்கம் எதிர்பாரா மோதல் மாதிரி நிகழ்வுகளினால் தடைபடும் வேளைகளில், சிலர் மயக்க நிலைக்கோ, சிலர் அதிக சங்கோஜத்திற்கோ, சிலர் அதிக கோபத்திற்கோ, சிலர் அதிகமான பயத்திற்கோ, சிலர் அதிக கவலைக்கோ, சிலர் எதையும் இலகுவாக… இப்டி பலவாறாக வேறு வேறு பண்புகள்ல, குணங்கள்ல மாறிப் போவாங்க…

அவங்களோட கூடவே இருந்தவங்களுக்கு மட்டுமே இந்த வித்தியாசம் பிடிபடும். இது குணமாக மூன்று மாதங்கள் வரை குறைந்த பட்சம் ஆகும்.

அது பேஷண்டை சுற்றியிருக்கறவங்க நடந்து கொள்றத பொறுத்து முன்னேற்றத்தில் காலஅளவு மாறுபடும். அவங்களோட செயல்கள்ல இருக்கற மாற்றங்கள எடுத்துச் சொன்னா இயல்பா எடுத்துக் கொள்ள எல்லாராலும் முடியாது. இதனால் இன்னும் மனஅழுத்தம் அதிகமாகவும் வாய்ப்பிருக்கு.

உண்மை புரிஞ்சாலும், ஏதோ ஒரு தயக்கம், இல்லைனா பயம், கவலை அவங்கள அப்டி சில செயல்களை அவங்களை செய்யத் தூண்டும். நாம அவங்க ஏன் அப்டி செய்றாங்கனு யூகிச்சு… அதை முறையா… அவங்க ஏத்துக்கும் படி சொல்லி புரிய வைக்க முயற்சி செய்யலாம்.

ஆனா, எல்லாருக்கும் அந்த முயற்சில சக்சஸ்தான்னு கன்ஃபார்மா சொல்ல முடியாது.

இப்போதான் உங்களுக்கு மேரேஜ் நடந்திருக்கு. அதனால கொஞ்ச நாள் அவங்க பேரண்ட்ஸோட சப்போர்ட்டோட அவங்கள பத்தி புரிஞ்சுக்க ட்ரை பண்ணி, அவங்கள சாஃப்டா ஹேண்டில் பண்ணுங்க.

ஃபேமிலி லைஃப் லீட் பண்ண ஒன்னும் பிராப்ளம் இல்ல. ஆனா அவங்க ஃபுல்லா கியூர் ஆனபின்ன, கன்சீவ் ஆனாதான் அவங்க ஹெல்த்துக்கும், பேபிக்கும் நல்லது.

டேபிளட்ஸ் இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் அவங்க கன்டினியூ பண்ணட்டும். ஃபிஃப்டீன் டேஸ் ஒன்ஸ் வந்து காமிங்க.

பெயின் எதுவும் சிவியரா இருந்தா உடனே கூட்டிட்டு வந்திருங்க’, என பல விளக்கங்கள் கூறி, இன்று டிஸ்சார்ஜ் ஆக வேண்டிய பணிகளைக் கவனிக்குமாறு கூறியிருந்தார்.

போனில் கூறி அனைத்து பணிகளையும் துரிதமாக முடித்தவன், வீட்டிற்கு செல்வதானால், தனது வீட்டிற்கு செல்வதா? இல்லை கிருபா மாமா வீட்டிற்கு செல்லலாமா என ஒரு கணம் யோசித்தவன், தாயிக்கு அழைத்து விபரம் பகிர்ந்தான்.
/////////////

error: Content is protected !!