வானம் காணா வானவில்-3

அத்தியாயம்-3

அதிகாலையில் வழமைபோல எழுந்து தனது பணிகளை முடித்துக் கிளம்பிய பேத்தியை கூர்ந்து கவனித்த அழகம்மாளுக்கு சற்று திருப்தி உண்டானது.

முந்தைய தினத்தைவிட தெளிவாக இருந்த பேத்தியின் வதனத்தில் நிம்மதியடைந்தவர், தரகரை அலைபேசியில் அழைத்து தற்போதைய நிலவரம் பற்றி விசாரித்தார்.

தரகரின் இழுபறியான பதிலில் அதிருப்தி உண்டாக, ‘இவளுக்குனு பிறந்தவன் எங்க இருக்கானு தெரியலயே ஆண்டவா, அந்த புள்ளைய சீக்கிரமா எங்க கண்ணுல காமி சாமி’ என்ற பிராத்தனையுடன் அவரது பணிகளை கவனிக்கத் துவங்கியிருந்தார், அழகம்மாள்.

——-

பள்ளிக்கு சென்றவள் அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு மாறியிருந்தாள், விசாலினி.

பள்ளியின் முதல்வரைச் சந்தித்து முந்தைய தின அழைப்பில் கூறிய விடயத்தை நேரில் கேட்டறிந்தவள், மாணாக்கர்களை அழைத்துக் கொண்டு பள்ளி வேனில் கிளம்பினாள்.

போட்டியில் கலந்து கொள்ளும், மாணவ, மாணவிகளுடன் பள்ளிக்கு வந்தவள், அதன்பின் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்விற்கும் அவர்களை தயார் செய்து அனுப்பினாள்.

போட்டிகள் நிறைவு பெற மதியம் இரண்டு மணிக்கு மேலாகியிருந்தது.

இவர்கள் பள்ளியின் சார்பாக ஆறு நிகழ்வுகளில் பங்கு கொண்டவர்களில், இரண்டு நிகழ்வுகளில் மட்டும் பரிசினை வென்றிருந்தனர்.

அதற்கான பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெறவேண்டி பள்ளியில் அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் மாணவர்களுடன் காத்திருந்தாள், விசாலினி.

வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த உணவினை மாணவர்களை உண்ணப் பணித்துவிட்டு, தானும் கொண்டு வந்ததை உண்டதாக பெயர் செய்து நேரத்தை  நெட்டித் தள்ளியபடி இருந்தாள். பிறகு பரிசு பெறாத மாணாக்கர்களிடம் அவர்களின் சிறு குறைகளை எவ்வாறு சரிசெய்யலாம் என கலந்து ஆலோசனை நடத்தினாள்.

அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பரிசு பெற்றவர்களுக்கு வழங்க எழுதி வைக்கப்பட்டிருந்த சான்றிதழ்களில் பெயர் மற்றும் இதர விபரங்களைச் சரிபார்க்க வருமாறு அழைக்க, அவர்களுடன் ஸ்டாஃப் ரூம் சென்றாள், விசாலினி.

தாளாளர், முதல்வர் அவர்களின் அறையைக் கடந்து சென்றபோது, “ஆண்ட்டி”, என்ற அழைப்புடன் விசாலினியின் புடவையைப் பிடித்த குரலுக்கு திரும்பியள், அங்கு நின்றிருந்த குழந்தையைக் கண்டவுடன்… நின்றாள். யோசிக்காமலேயே யாரின் பிள்ளை என்பது நினைவில் வர அதை மனதில் இருந்து ஒதுக்கியவள்,

“ஹாய் குட்டிமா”, எனச் சிரிப்புடன் குழந்தையை நோக்கி கை நீட்ட

வெட்கத்துடன் சிரித்தபடியே பள்ளி சீருடையில் இருந்த குழந்தை எட்டாத தன் சிறு கைகளை நீட்டியது.

“நீரு… இங்க தான் படிக்கிறீங்களா?”

“ஆமா ஆண்ட்டி, நீங்க இங்க தான் மிஸ்ஸா இருக்கீங்களா?”, என ஆச்சர்யமாக கேட்ட குழந்தையை தவிர்க்க இயலாமல் உடன் வந்த ஆசிரியர்களிடம்

“பக்கத்துல தான ஸ்டாஃப் ரூம், நீங்க வயிட் பண்ண வேண்டாம். போயிட்டு இருங்க… நான் வந்துறேன் மேம்”, என்றவள் குழந்தையின் அருகில் குனிந்தபடியே

“இல்லடா, ஆண்ட்டி வேற ஸ்கூல்ல வர்க் பண்றேன்.  இங்க ஒரு காம்படீசன்காக ஸ்டூடன்ஸ்ஸோட வந்திருக்கேன். இப்ப கிளம்பிருவேன்.

க்ளாஸ் போகாம ஏன் இங்க நிக்கிற குட்டிமா?”

“ஸ்கூல் முடிஞ்சிருச்சு எனக்கு”

“அப்டியா, அப்ப ஏன் இன்னும் வீட்டுக்கு கிளம்பாம இங்க நிக்கறீங்க?”

“ரவி டாடோட வீட்டுக்குப் போவேன். அதான் இங்க இருக்கேன்”, என்றபடி தாளாளரின் அறையைக் காட்டியது குழந்தை.

அதற்குள் அலுவலக உதவியாளர், “பாப்பா, டாடி கூப்பிடறாங்க”, என்று அழைக்க

“அய்யோ… அது டாடி இல்ல, ரவி டாட்” என்றபடி வாயைப் பொத்தி களுக்கிச் சிரித்தபடியே விசாலினியை நோக்கி, “பை ஆண்ட்டி”, என்றபடி அலுவலக உதவியாளருடன் சென்றது, குழந்தை.

குழந்தையிடம் விடைபெற்றவள், அவளின் வார்த்தைகளைக் கவனித்தாலும் அதில் இருந்த செய்திகளை உள்வாங்காமலேயே சான்றிதழ்களை சரிபார்க்க சென்றாள்.

அதன்பிறகு பள்ளி வளாகத்தினுள் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் மாணவர்களுடன் கலந்து கொண்டாள்.

முதல் இரு வரிசைகளில் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்கள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும், மேடையில் அமர்ந்திருந்தவனின் எதேச்சையான பார்வையில் விழ நேர்ந்தது.  எதிர்பாரா சந்திப்பில் தன் கவனத்தைக் கவர்ந்த உயரம் அரவிந்தனை காணத் தூண்டியது.

‘அவளா இவள்’ என்ற ஐயம் ஏற்பட, சமுதாயம் மற்றும் தனது பொருளாதாரம் கொடுத்திருக்கும் மரியாதைக்குரிய பதவியில் இருப்பதால் ஒரே திசையில் குறிப்பிட்ட நபரைக் கண்கொட்டாமல் பார்க்க இயலாத தனது நிலையை நொந்தபடி அமர்ந்திருந்தான், அப்பள்ளியின் புதிதாக தாளாளராக பொறுப்பேற்றிருந்த, அரவிந்த்.

அதற்குள் மேடையில் தாளாளர் பேசுவார் என்ற அறிவிப்பை கேட்டு பேச எழுந்தவன், வரவேற்பு உரையுடன், பரிசு பெற்றவர்களை வாழ்த்தி அமரும் வரை ‘பார்க்காமல் பார்த்து’ தனது ஐயத்தினை எழுபது சதவீதம் ஊர்ஜிதப்படுத்தியிருந்தான்.

‘அவளேதான் இவள்’ என்ற முடிவிற்கு வந்தவனின் கண்கள் ஒளிர, முகத்தில் சற்று அதிகமான புன்னகையுடன் சான்றிதழ் வழங்கியவனைக் கண்டவள், அமைதியாகப் பார்த்திருந்தாள்.

குதூகலிக்கும் வயதல்ல என்பதைவிட எட்டாக்கனிக்கு ஆசைப்பட வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக அமர்ந்திருந்தவளை, எங்கோ பார்ப்பது போன்று அவ்வப்போது ஆசையாக பார்வையால் வருடியிருந்தான், அரவிந்த்.

விழா முடிந்து அனைவரும் கிளம்ப ஆயத்தமாக, அலுவலக உதவியாளர் விசாலினியின் அருகே வந்து “மேடம், உங்கள சார் வர சொன்னாங்க”, என்க

“எந்த சார்?”, என புரியாமல் கேட்டவளை

“கரஸ்பாண்ட்டன்ட் உங்கள வர சொன்னாங்க”

“இதோ வர்றேன்”, என்றவள் உடன் அழைத்து வந்திருந்த மாணவர்களை சரிபார்த்து வேனில் அமர வைத்துவிட்டு, மாணவர்களிடம்,”சார பாத்துட்டு வந்திறேன், அது வரை இருங்க”, என்று கூறினாள்.

வேன் ஓட்டுநரிடமும் விடயத்தைக் கூறிவிட்டு தாளாளர் என்ற பெயர் பலகை இருந்த அறையை நோக்கி நடந்தாள், விசாலினி.

மனம் சலனமில்லாமல் இருந்தாலும், சற்றே படபடப்பு கால்களை இலகுவாக நடக்கவிடாமல் முடக்க எத்தனிக்க, நிதானமாக நடந்து அறைவாசலுக்கு வந்தவளை அங்கு விளையாடியபடி இருந்த நீரஜா வரவேற்றாள்.

“ஹய்யா ஆண்ட்டி”,என்றபடி விசாலினியின் புடவையை பிடித்தபடியே உடன் வந்த குழந்தையை “குட்டிமாக்கு போரடிக்குதா?”, எனக் கேட்டபடியே “நான் சார பாத்துட்டு வந்திறேன், கொஞ்சம் இருங்க”,என்றபடி குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அறைவாசலில் நின்றபடி

“எக்ஸ்கியூஸ் மீ, மே ஐ கம் இன் சார்”, என தொண்டையிலிருந்து வெளிவர முரண்டிய வார்த்தைகளை நாக்கால் முட்டுக்கொடுத்து சிரமப்பட்டுக் கூற

“எஸ், கம் இன்”, என்ற வார்த்தையைக் கேட்டபின் உள்ளே சென்றவளை

“பிளீஸ்.. பீ சீட்டட்”, என அவனுக்கு எதிரில் இருந்த நாற்காலியை வதனத்தில் முறுவலுடன் காட்ட… அமர்ந்தவளிடம், “நீங்க நாமக்கல் பேஸ்கட்பால் ப்ளேயர் ஷாலினி தான”, என்ற கேள்வியில்

“ஆமா மாஸ்…. சார்”, என்றவளை நூறு சதவீதம் கண்டு கொண்டவன்,

“நீங்க பிஸிக்கல் டைரக்டராகிருப்பீங்கனு நினச்சேன், பட்… இங்கிலீஸ் டீச்சரா வந்திருக்கறதா சொன்னாங்க, எனிவே உன்.. உங்கள பாத்ததுல சந்தோசம்”, என்றபடி சிரித்தவன். இடைவெளி விட்டு

“உங்க ஃபாதர் இப்பவும் இங்க இல்லயா?”, என்று கேட்டவனை முறைக்க முயன்று தோற்றவளை

“சாரி… அப்போ இருந்த… அதே மாதிரி டல்லா இருந்தது பேஸ், அதான் கேட்டேன். பட் கொஞ்சமா வயிட் போட்டுருக்கு, நோ மோர் சேஞ்சஸ், அதான் ஈஸியா கண்டுபிடிக்க முடிஞ்சது”, நிதானமாக பேசினான்.  ஆனால் இலகுவாக அமர இயலவில்லை விசாலினியால்.

“என்ன விசயமா என்ன பாக்க வர சொன்னீங்க சார்?”, இடத்திலிருந்து அகலுவதே பிரதானம் எனும் எண்ணத்தில் கேட்டிருந்தாள்.

“ஷாலினியானு கன்ஃபார்ம் பண்ணதான் கூப்டேன், வந்ததுல மகிழ்ச்சி. எதிர்பாரா சந்திப்பு… ரொம்ப வருசங்களுக்குப்பின்ன…”

“அப்போ நான் கிளம்பவா சார்”, என விசாலினி கிளம்ப எத்தனிக்க,

“மாஸ்டர ஏன் சாராக்கிட்ட ஷாலு”, சார் என்ற அவளின் அழைப்பை விரும்பவில்லை என்பதை தனது விருப்பம் போல தெரிவித்திருந்தான்.

“அப்ப மாஸ்டர், இப்ப சார் தான சார்”,என சிரித்தபடியே கூறினாள்.

“பட் எனக்கு எப்பவுமே நீ ஷாலினி தான்”,என உணர்ந்து கூறியவனை

“விசாலினி தான் என் நேம், உங்களுக்கு எத்தன முறை சொன்னாலும் மாத்த மாட்டிங்கறீங்களே சார்”, அவனது அழைப்பில் உண்டான உள்ளத்தின் மகிழ்ச்சி உவகையைத் தராததால் முரண்டினாள்.

“எனக்கு எல்லா இடத்துக் போக விசா இருக்கு, அதான் ஷாலினி போதும்”, என்ற அரவிந்தனின் கண்களில் கூடுதலாக வந்திருந்த ஒளியுடன் இதழில் தவழ்ந்த புன்னகையுடனான இரட்டை அர்த்த வார்த்தைகளைக் கேட்டவள் அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் இல்லையில்லை முடியாமல்…

“நேரமாச்சு கிளம்பணும் சார். பசங்க ரொம்ப நேரமா வயிட் பண்றாங்க”, என்றபடி எழ

மனதே இல்லாமல் “ம்… பாக்கலாம்… டேக் கேர்”, என்றான் அரவிந்த்.

“ம்…”, என்றபடி அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு அகன்றவள்,

பாக்கலாம் என்றவனை இனி பார்க்கவே கூடாது என நினைத்தபடியே அறையை விட்டு வெளிவந்தாள், விசாலினி.

அதற்குள் அறையிலிருந்து வீட்டிற்கு செல்ல கிளம்பியவன், விசாலினியின் பின்னே வர, அதைக் கவனிக்காதவள்

நீருவிடமும் விடைபெற்று கிளம்பினாள்,விசாலினி.  நீருவிடம் பேசிவிட்டு, பை கூறியவள், திரும்பிப் பார்க்காமல் செல்வதை யோசனையோடு பார்த்தபடியே நீரஜாவிடம் வந்தான் அரவிந்த்.

மகளின் முகத்தில் வந்திருந்த இணக்கமான புன்னகையை கண்டவன், “அந்த ஆண்ட்டிய உனக்கு அல்ரெடி தெரியுமா குட்டிமா”, என்றபடியே தனது தம்பியின் மகளை தூக்கிக் கொண்டவன்

“ம்… ஆமா…

அவங்க வேற ஸ்கூல் மிஸ்ஸாம்….,

அப்றம்… டாடியோட அன்னிக்கு பை போகும்போது பாத்தேனா….

பாப்பு கீழ விழுந்ததும் தூக்கிவிட்டாங்க”, என்று கேட்காத அனைத்தையும் யோசித்து யோசித்து வீடு வரும் வரை, தனது பெரிய தந்தையிடம் கூறியபடியே வந்தாள் குழந்தை.

குழந்தை என அலட்சியம் செய்யாமல் அனைத்தையும் கேட்டிருந்தான், அரவிந்தன்.

——

நீலா பள்ளிக்கு வரும்வரை அவருடன் வந்து செல்லும் குழந்தை தற்போது தனது பெரிய தந்தை பள்ளிக்கு வரும் நாட்களில் அவனுடன் செல்வது  என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.

இதர நாட்களில் வீட்டிலிருந்து வந்து மிருணாளியே அழைத்துச் செல்வாள்.  டிரைவர்களை நம்பி குழந்தையை தனித்து விடும் பழக்கத்தை நீலா அறவே ஒப்புக் கொள்ளவில்லை.

ஆகையால் அவர் விருப்பப்படி யாரேனும் வீட்டில் உள்ள ஒருவருடன் வருவது அல்லது அவர்கள் பள்ளிக்கு வராத நாட்களில் மருமகளே அதை பொறுப்பாக செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

***

‘இரண்டு நாட்களுக்கு முன் பார்க்காதவன் போல இருந்துவிட்டு, இன்னிக்கு கூப்டு வச்சு குசலம் விசாரிக்குது பய புள்ள.

என்ன டிசைனோ தெரியல…!

சரியான மல்டி பெர்சனாலிட்டி கிராக்கு போல’ என மனதில் அரவிந்தனை வைதவாறே வேனில் பள்ளி சென்றடைந்தாள், விசாலினி.

பரிசு பெற்றவர்களின் சான்றிதழ்களையும், மாணாக்கர்களையும் பள்ளியில் பொறுப்பாக ஒப்படைத்து விட்டு, வீடு வந்திருந்தாள்.

மனம் இன்று அவன் அழைத்துப் பேசியதில் சற்றே சமாதானமாகி இருந்தது.  அடுத்தவளின் கணவன் என்ற தனது எண்ணத்தால் இயன்றவரை அரவிந்தனைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்க துவங்கியிருந்தாள் பெண்.  அதற்காக கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதில் மனதைச் செலுத்த துவங்கியிருந்தாள்.

பிறகு இரவு உணவுக்காக பாட்டிக்கு வழமைபோல இயல்பாகப் பேசியபடி உதவினாள். இரவு உணவிற்குபின் சற்று நேரம் தாத்தா, பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, தந்தைக்கும் அழைத்துப் பேசினாள்.

அதன்பின் படுக்கைக்குச் சென்றவள், பிராணாயாமம் சிறிது நேரம் செய்துவிட்டு படுத்தவள், உடனே உறங்கியிருந்தாள்.

***

முந்தைய நாளின் விசாலினியின் உறக்கத்தை கெடுத்தவன், இன்று தனது அறையில் அவளை முதன் முதலில் சந்தித்த நாளையும், அவளை அவனுக்குள் உணர்ந்த தருணத்தையும் நினைத்தவாறு விழித்திருந்தான்.

 

இலண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தவன், விடுமுறை நாளில் வீட்டிற்கு வந்திருந்தான்.

பள்ளி நிர்வாகம் முழுமையும் நீலாவின் பொறுப்பில் இருக்க, தங்களது பள்ளியில் இதுவரை பணிபுரிந்தவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வில் சென்றிருந்தார்.

அப்போது புதிய ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. தங்களது பள்ளியின் சார்பில் கலந்து கொள்ளவிருக்கும் பேஸ்கட்பால் வீரர்களை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல, பேஸ்கட்பால் வீரனான தனது மகன் அரவிந்தனின் உதவியை நாடினார் நீலா. தனது தாயின் வேண்டுகோளை ஏற்று சரியென சம்மதித்து இருந்தான்.

ஸ்டேடியத்தில் நடந்த போட்டிகளில் பல மாவட்டங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர். இரு பிரிவாக நடைபெற்ற விளையாட்டில் முதல்கட்ட விளையாட்டின் போது தனது திறமையால் அனைவராலும் பாராட்டப்பட்ட விசாலினி எனும் மாணவியை பற்றிய பேச்சுகள் ஆங்காங்கு நடைபெற்ற வண்ணம் இருந்தது.

யாரந்த சூட்டிகை ராணி என எல்லாருக்கும் அவளைக் காணும் ஆவல் எழுந்தது போல, அரவிந்தனுக்கும் ஆவல் எழுந்ததில் ஆச்சர்யமில்லை.

நாமக்கல் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்ட விசாலினியை அன்றுதான் முதன் முதலில் சந்தித்தான்.

அவளின் சமயோசிமான, துறுதுறுப்பான விளையாட்டினைக் கண்டவனுக்கு விசாலியின் மீது தனிக் கவனம் உண்டாகியிருந்தது.

மேலும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் விசாலினி அதிக உயரத்துடனும், சதைப்பிடிப்பில்லாமலும், காண்பவரை மீண்டும் காணத் தூண்டும் வசிய வதனத்துடன் இருந்தாள்.

ஆனால் விளையாட்டு என்று வந்துவிட்டால் எங்கிருந்து அவளுக்கு அத்தகைய ஆற்றல் கிட்டுமோ எனுமளவிற்கு சூறாவளி போல விளையாடும் பெண்ணை மதித்து, ரசித்திருந்தான்.

விளையாடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் இதர மாணவிகள் பயிற்சியில் ஈடுபடும்போதும், அவள் மட்டும் அவளின் தந்தையின் ஆலோசனையின் படி பயிற்சிகளை மேற்கொண்டாள். பயிற்சி இல்லாத நேரங்களில் அவளின் தந்தையோடு நேரம் செலவழித்தாள்.

விசாலினியின் தந்தை ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர். அவரின் வழிகாட்டுதலால் தான் அவள் இவ்வளவு சிறப்பாக விளையாட முடிகிறது என்பதையும், அவள் பள்ளியின் சார்பில் மாணவியர்களை அழைத்து வந்திருந்த உடற்கல்வி ஆசிரியரின் வாயிலாக கேட்டறிந்திருந்தான், அரவிந்தன்.

அரையிறுதி மற்றும் காலிறுதி போட்டியில் வென்றிருந்த நாமக்கல் அணி, இறுதியாக இவர்களின் பள்ளியோடு மோதுவதாக இருந்தது.

ஒரு நாள் இடைவெளியில் நடைபெற இருந்த பயிற்சி நேரத்தில், ஒதுக்கமாக அவள் தந்தையுடனும் இல்லாமல், தனித்து அமர்ந்து இருந்த விசாலினியை எதேச்சையாக கண்டான், அரவிந்தன்.

விசாலினியின் முகவாட்டம் கண்டு, உடம்பிற்கு எதுவும் பிரச்சனையோ என எண்ணி, என்னவென்று அவளின் உடற்கல்வி ஆசிரியரை வினவினான்.

விசாலினியின் தந்தை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது போல் தனது மனைவியுடன் அவரின் மூத்த மகளின் பிரசவத்திற்காக யுஎஸ் செல்ல இருந்ததால்… முதல் நாள் இரவே சென்று விட்டதாகவும், தந்தையை பிரிந்ததால் மனவருத்தத்தில் விசாலினி இருப்பதாகவும் கூறினார்.

மதியம் வரை யாருடனும் பேசாமல், பயிற்சியிலும் கலந்து கொள்ளாமல் விட்டேத்தியாக இருந்தவளைக் கவனித்தபடியே இருந்தவன், மதிய உணவை விசாலினி தவிர்த்ததைக் கண்டு அவளிடம் சென்று முதன் முறையாக

“ஷாலுமா…”, என்ற அரவிந்தனின் ஒற்றை அழைப்பைக் கேட்டவள், பருந்தின் வாயிக்கு பயந்து தனது தாய் கோழியினை அண்டி ஓடி வரும் குஞ்சினைப் போல, வேகமாக எழுந்து… குரல் வந்த திசையை நோக்கி வந்தவள்

அங்கு தனது தந்தையைக் காணாமல், ஆனால் அதே தொனியில் அழைத்து அமைதியாக நின்றிருந்தவனை கண்களால் அளவெடுத்தாள்.

“நீங்களா கூப்டீங்க மாஸ்டர்”, அரவிந்தனின் பள்ளி மாணவியர்கள் அவனை மாஸ்டர் என அழைத்ததை கண்டதால் விசாலினியும் அதே போன்று வினவினாள்.

“ம்…, ஏன் இப்டி தனியாவே உக்காந்து இருக்க ஷாலினி, சாப்பிடவும் வரல”

“பசிக்கல மாஸ்டர்”, இத்தனை ஆண்டுகளில் எங்கும் விட்டுச் சென்றிறாத தந்தையின் பிரிவு அவளை பசியிலிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது.

“அது எப்படி பசிக்காம இருக்கும்?”, என்றவன் அங்கிருந்தவளை வற்புறுத்தி அழைத்துச் சென்று உணவு உண்ண வைத்தான்.

அதன்பின் அவளை விட்டு எங்கும் நகராமல், அவளின் தந்தையைப் பற்றி எதுவும் கேட்காமல் பேஸ்கட்பால் பற்றிய பொதுவான விடயங்களைப் பேசினான்.

மைதானத்தில் இருந்தவாறு அவளையும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தான்.  இரவு உணவிற்குப் பின் அவளை விட்டுச்செல்லும் வரை உடன் இருந்து அவளை பயிற்சி எடுக்கவும், அவளின் மன ஓட்டத்தை மாற்றவும் காரணமாக இருந்தான்.

பயிற்சியினால் உண்டான அசதியில் அறைக்குச் சென்றவுடன் உறங்கிவிட்டாள் விசாலினி.  அடுத்தநாள் காலையில் அரவிந்தனின் பள்ளி மற்றும் நாமக்கல் பள்ளிக்கு இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாமக்கல் பள்ளி ஒரு பாயிண்ட்டில் வெற்றி வாகை சூடியிருந்தது.

பாரபட்சமின்றி அவர்களின் பள்ளியை பாராட்டிய மாஸ்டர் அரவிந்தனை. ஒரே நாளில் தனது தந்தையின் இடத்தை தந்து இணக்கமாகியிருந்தாள் விசாலினி.

“மாஸ்டர், என் பேரு சாலினி இல்ல, நீங்க ஏன் எங்க அப்பா மாதிரி அப்டி கூப்டுறீங்க, என்ன நீங்க விசாலினினே கூப்பிடுங்க”, என அவனிடம் நேரம் கிட்டும்போது எல்லாம் கூறினாலும், அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை அரவிந்தன்.

அரவிந்தனும் அதன்பின் அவளைப் பார்க்கவோ, இல்லை வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  அதற்கு அவர்களுக்கிடையே இருந்த தூர இடைவெளி மட்டும் ஒரு காரணம் அல்ல.

தன்னை உணராமலே அவனின் பணிகளில் மூழ்கியிருந்தான்.  மேலும் வயது வித்தியாசமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என பின்னொரு நாளில் யோசித்திருந்தான்.

அதன்பின், தனக்கென முகவரி வேண்டி, உலகநாடுகளில் பயணம் பல மேற்கொண்டாலும், ஷாலினியிடம் இறங்கிச் சென்று பேசியது போல, வேறெந்த பெண்களிடமும் இன்று வரை அரவிந்தனால் பேச இயலவில்லை.

தன்முனைப்பு தலைக்காட்டாது, அத்துணையையும் ஒருத்திக்கு என இறைக்க, இழைக்க மனம் அவளையன்றி யாரிடமும் ஆசைகொள்ளவில்லை.

 

சஞ்சய் தனது காதலை வீட்டுக்கு தெரியப்படுத்தியவுடன், அரவிந்தனுக்கு அழைத்திருந்தார் நீலா.

“அரவிந்த், உனக்கு உன் கல்யாணம் சம்பந்தமா ஏதேனும் ஆசைகள் இருக்கா?”

“என்னம்மா தீடீர்னு இப்டி கேட்டா… நான் என்ன சொல்ல?”

“உன் தம்பி ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, கட்டுனா அவளத்தான் கட்டுவேனு ஒத்தக்காலுல நிக்கறான்.   அதான் உனக்கும் அந்தமாதிரி ஏதும் கமிட்மெண்ட் இருக்கானு கேட்டேன்”

“என்னம்மா சொல்றீங்க, சஞ்சயா… என்னால நம்பவே முடியல”

“யார நம்பறது, யார நம்பக்கூடாதுனு எனக்கும் குழப்பமா இருக்கு அரவிந்த், சரி உன் எதிர்பார்ப்பு என்னனு சொன்னா அதுக்கேற்றமாதிரி பாக்கறேன்”

“யோசிச்சு சொல்றேனேம்மா…”

“எப்ப சொல்லுவ?”

“சொல்றேன்… பட் எப்பனு எனக்கு தெரியல”,நிஜம் சொல்லியிருந்தான்.

“சரிப்பா”, என்றவர் அழைப்பைத் துண்டிக்க, அடுத்து வந்த நாட்களில் மேற்கொண்டிருந்த சுயஆய்வின் பயனாக தனது எதிர்காலத் துணை பற்றிய முடிவுக்கு வர ஒரு மாதம் எடுத்துக் கொண்டான், அரவிந்தன்.

முடிவாக, தென்னிந்திய பெண் குறிப்பாக தமிழ்நாட்டு பெண், உயரம் சற்று கூடுதலாக அவனுக்கு இணையாக இருக்க வேண்டும் என இன்ன பிற எதிர்பார்ப்புகளை தாயிடம் தெரிவித்திருந்தான்.

அவனின் பெரும்பான்மையான குறிப்புகள், பெரும்பாலும் விசாலினிக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருந்தது.

அவளை அவனால் இலகுவாக தேட முடிந்தாலும், அவளுக்கும் தன் அருகாமை, தன்னுடனான வாழ்க்கை என்ற எதிர்பார்ப்புகள் இருக்குமா? என்பது சந்தேகம் வர, அவனின் தேடலுக்கு, மூடும்விழா வைத்துவிட்டான், அரவிந்தன்.

மனதிலும், உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஊறியிருந்த அவளின் நினைவுகளோடு ஆனால் அதை தம்பட்டம் அடிக்காமல், உறங்கச் செய்து, நிதானமாக பயணம் செய்து வந்தவனை, எதிரில் வந்து, செல்களில் உறங்கிய நினைவுகளை விழிக்கச் செய்த தோடு, இன்று உறங்கவிடாமல் செய்திருந்தாள்,  பெண்.

——-

அவளின் கண்களில் இன்று கண்ட தூக்கமின்மை, வாடிய முகம் இரண்டும் தனக்கானது அல்ல, என்று எண்ணியவன் எதனால் என்பதையும் அறிய ஆவலுடன் முற்பட்டான்.

பள்ளியின் மெயின் வாயிலில் பராமரிக்கும் லாக் இன் ரெஜிஸ்டரை, பள்ளியில் இருந்து வீட்டிற்கு கிளம்பும்போது காரினுள் அமர்ந்தவாறே செக்யூரிட்டியிடம் இருந்து வாங்கினான், அரவிந்தன்.

அதில் குறிப்பிடப்பட்டு இருந்த விசாலினியின் விபரங்களான, பள்ளியின் பெயர், தொலைபேசி எண், மற்றும் விசிட்டிங்கிற்கான காரணத்துடன், லாக் இன், லாக் அவுட் என இருந்த அவளின் விபரத்தை மட்டும் தனது அலைபேசியில் ஷாட் எடுத்து வந்திருந்தான்.

அவளை அழைக்க மனம் பறபறத்தாலும், இன்று வேண்டாம் என முடிவு செய்தவன் விடியல் வரை அவளின் நினைவுகளோடு விழித்தபடியே படுக்கையில் இருந்தான்.

பேஸ்கட்பாலில் மிகவும் தீவிரமாக இருந்தவளை, உடற்கல்வி சார்ந்த ஆசிரியராக வந்திருப்பாள் என எண்ணியிருந்தவனுக்கு முதல் ஏமாற்றத்தைத் தந்திருந்தாள்.

‘இன்னும் என்ன செய்வாளோ?’ என்று எதிர்பாரா வருங்காலத்தை எண்ணியபடியே ஆதவனை ஆகார்சனம் செய்திருந்தான், அரவிந்தன்.

——————–

 

பரிவுடன் கூடிய கண்ணியமான பழக்கத்தில் அரவிந்தனுடன் இணக்கமாக பேச தயக்கம் இல்லாமல் போயிருந்தாலும்,

பருவ வயதின் ரசனைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அவளுக்குள் உறங்கியதால் சலனமின்றி அங்கிருக்கும் வரை எதையும் உணராமல் இலகுவாக அவனுடன் உரையாடினாள்.

 

பரிசுடன் நாமக்கல் திரும்பிய விசாலினியின், தந்தை தன்னுடன் இல்லாத பாலைவன நாட்களை எண்ணங்களால், நினைவுகளில் மூலம் பசுமையாக்கியிருந்தான், அரவிந்தன்.

பேஸ்கட்பாலைக் கண்டாலே வரும் அவனின் சிரித்தமுகம், அவளைச் சிந்திக்கவிடாமல் மூச்சடைக்க வைத்தது.

மனதைக் கட்டுப்படுத்த விசாலினி மேற்கொண்ட முதல் விடயம் பேஸ்கட்பால் விளையாட்டையே தியாகம் செய்தது.

தந்தையைப் போல தன்மையானவனாக நடந்து கொண்டிருந்தவனை நினைவில் வராமல் செய்ய எண்ணியவள், அதன்பிறகு விளையாட்டுதிடலுக்கு செல்வதைக் கூட விட்டிருந்தாள்.

மூன்று மாதங்கள் கழித்து திரும்பியிருந்த கிருபாகரன், மகளின் மாற்றங்களை கண்கூடாகக் கண்டாலும், ஏன்? எதற்கு? என்று எந்த கேள்வியும் விசாலினியிடம் எழுப்பவில்லை.

ஆனால், அதன்பின் தொடர்ச்சியாக காலையில் எழுந்ததும், மகளை ஆசனங்கள் செய்ய வலியுறுத்தியிருந்தார்.

தந்தையின் வரவிற்குப் பின் அவருடன் நேரத்தை செலவிட்டு தனது தனிமையை விரட்டினாள்.  தன்னை படிப்பிலும், ஓய்வு நேரத்தில் தந்தையுடனும் தனக்கான நேரத்தை முதலீடு செய்ததில், அரவிந்தனின் ஆக்ரமிப்பை மனதிலிருந்து சிறிது சிறிதாக குறைத்திருந்தாள். வருடங்கள் செல்லச் செல்ல அரவிந்தனை மறந்து போனதாக மனதை தேற்றியிருந்தாள்.

 

பாட்டி விசாலினியின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போது, மீண்டும் தன் நினைவடுக்கில் பாதுகாப்பாக சிறை செய்து இருந்தவனை வெளிக் கொண்டு வந்திருந்தாள்.

தனக்கு கணவனாக வரத் தகுதியானவன் என விசாலினி தன்னை நிர்ணயித்திருந்ததை அறியாமலேயே அப்ராடில் நாட்களை தொழிலுக்காக அர்ப்பணித்திருந்தான் அரவிந்தன்.

 

சரியான தகவலை விசாலினி வசம் சேர்க்க… காலம் சற்றே நேரம் தாழ்த்தி அவளுடன் விளையாட, அதை அறியாதவள் தனக்கென விலங்கிட்டு சூழ்நிலைக் கைதியாகியிருந்தாள்.

இனி… விடியலில்… விதி செய்யும் விளையாட்டைக் காண்போம்.

———-