வானம் காணா வானவில்-4

அத்தியாயம்-4

 

விடியல் வீணையாக மீட்ட எழுந்தவள், தனது பணிகளை எந்தத் தடங்களுமின்றி செய்து பள்ளிக்கு கிளம்பினாள்,விசாலினி.  பேத்தியின் படிப்படியான முகத்தெளிவு சற்றே தெம்பைத் தர, அழகம்மாள் நிம்மதியடைந்திருந்தார்.

பள்ளியில் வகுப்புகளும், முதல்வரின் எதிர்பாரா இடைஞ்சல்களும் நேரத்தை விரட்டிட, மாலை வீடு திரும்பியிருந்தாள் பெண்.

மனது அலைபாயாமல் ஓரிடத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்க தன்னால் இயன்றவரை முயற்சி செய்தாள். அறிவின் உந்துதலால் மனதிற்கு கடிவாளம் இட எண்ணி, ஒரு நொடிப்பொழுதையும் தனிமை, அமைதி, ஓய்வு என்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் மிகவும் விழிப்போடு செயல்பட்டாள், விசாலினி.

 

விதி அவளின் விழிப்பு நிலையுடன் விளையாட முடிவு செய்திருந்த நேரம் வந்திருந்தது.

விசாலினி முற்றிலும் எதிர்பாரா நபரிடமிருந்து முதன்முறையாக அவளுக்கு அழைப்பு வர, அவளின் அலைபேசி அவளை அழைத்தது.

‘இந்த நேரத்தில் யாராக இருக்கும்?, வேற யாரு…?

இந்த பிரின்ஸியாதான் இருக்கும்.

வீட்டுக்குப் போனாலும் ஸ்கூல மறக்காம…

என்ன ஒரு சின்சியருக்கு பேரு போனவைங்கடா…

இந்த மாதிரி நாலு மனுசங்க இருக்கறதால தான் ஊருக்குள்ள மழையே பெய்யுது போல’, என எண்ணியபடியே வந்து அலைபேசியை எடுத்தவளின் அலைபேசியில் புது எண் திரையில் இருக்க,

‘ச்சீய், அந்தம்மாவ போய் தப்பா நினச்சுட்டியே விசா… யாருக்கு வந்த சோதனைடா இது.

புது நம்பரா வேற இருக்கே…

இது யாரு?’ யோசனையோடு எடுத்தாள்.

“ஷாலுமா…”, தந்தையின் குரலை கேட்டவளுக்கு, அழைப்பு இந்திய எண்ணிலிருந்து எப்படி என யோசித்தபடியே

“டாட்… எங்க இருந்து பேசுறீங்க இப்ப…

சர்ப்ரைஸ் ரிட்டனா?

இந்த நம்பர் எப்ப வாங்குனீங்க, எங்கிட்ட சொல்லவே இல்ல”, ஒரு நிமிடத்தில் பதற்றம் மாறி மகிழ்ச்சி அவள் குரலில் அப்பட்டமாகத் தெரிய எதிர்முனையில் இருந்தவனை உணராமல் படபடவென பேசியிருந்தாள்.

“ரிலாக்ஸ் ரிலாக்ஸ்… உங்க டாட் இல்ல. நான் அரவிந்த் பேசறேன்”

“ம்… நீங்களா?”, அரவிந்தன் பதிலில் விழி இரண்டும் நட்டுக்கொள்ளும் அளவிற்கு அதிர்ச்சி வாங்கினாள்.

“நானே தான்… என்ன ஷாலு! உன் டாட் இப்ப ஊருல இல்லயா?”, மறுபுறம் அவன் புன்னகைத்ததை காணாமலேயே உணர்ந்தவள்,

“…”,பதில் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

‘இவனிடம் தனது அலைபேசி எண் எப்படி?’ என யோசித்தவாறே நின்றிருந்தவளை

“என்ன ஷாலு, யோசனையா?”

“என்ன மா… சார், எனக்கு எதுக்கு இப்ப கால் பண்ணியிருக்கீங்க?”

“கால் எதுக்கு பண்ணுவாங்க… ஷாலு… பேசணும்னு தோணுச்சு”

“என் நம்பர் எப்டி…”

“கண்டு பிடியேன்”

“சொல்லுங்க சார். என்ன விசயமா கால் பண்ணீங்க”,விடயத்தை வாங்கும் தொனி அவள் குரலில் ஒலிக்க

“விசயத்த சொல்லலனா எங்கூட பேசமாட்டியா ஷாலு”,ஏக்கமாக ஒலித்த குரலில், மனம் என நாம் நினைக்கும் ஏதோ ஒன்று விசாலினிக்குள் வருந்த…

‘விவகாரம் புடிச்சவனாடா நீ?

உசுரோட கொல்லுறியே…

என்னால மிடில… அழுதுருவேன்’, என மனம் ஓலமிட

“விசயம் எதுவுமில்லனா நான் வைக்கறேன்”, தன்னை திடமாகக் காட்டியிருந்தாள், அரவிந்தனிடம்.

அவனுள் எழுந்த பதற்றம் அவளின் உண்மை நிலையை அறியாததால், “அவசரப்படாதே…”, என அவன் அவசரப்பட்டிருந்தான்.

“அப்ப என்னனு சீக்கிரம் சொல்லுங்க”, சாரை ஏற்கனவே டீலில் விட்டிருந்தாள்.

“நேத்து உன்னோட முகத்துல இருந்த சின்ன சோகத்துக்கான காரணத்த தெரிஞ்சுக்கனும்னு தோணுச்சு…

அதான்…

ஆனா அது மட்டும் காரணமானு எனக்கு சொல்லத் தெரியல”, உண்மையை மறையாது சொல்லியிருந்தான்.

“தெரிஞ்சுக்கிட்டீங்கள்ல இப்ப?”,குரலில் நையாண்டி ஒலித்தது.

“ம்…”, அங்கு அவனின் இதழை எத்தனை இஞ்ச்சிற்கு விரித்தான் என்பதை உணர்ந்தாள்.

“அப்ப வைக்கவா?”,’பூச்சாண்டி காட்ட நான் என்ன சின்னப் புள்ளையா… அதான் வைடா போனைனு சொல்ல முடியாததால்’ என எண்ணியவாறு நயமாகக் கேட்டாள்.

“வேணாம்”,வைத்து விடுவாளோ எனும் பதற்றம் பேசியது.

“இப்ப வேல எதுவும் இல்லயா உங்களுக்கு”,’எங்களுக்கும் கேள்வியெல்லாம் கேக்கத் தெரியும்னு நீங்க தெரிஞ்சுக்கணுமில்ல’

“அது இருக்கு எக்கச்சக்கமா….”

“அப்ப அத பாக்க வேண்டியதுதான”

“அதுல ஒரு வேலயதான் இப்ப பாத்துட்டு இருக்கேன்”, மறுமுனையில் மெலிதாக அவன் சிரித்த சத்தம் கேட்டது.

“எது… இப்ப எங்கூட பேசறதா?”

“ம்…”

“நீரு அம்மா என்ன பண்றாங்க?”

“மிருவ கேக்குறியா… அவளுக்கென்ன… நல்லா தான் இருப்பா, இப்ப எதுக்கு அவள பத்தி எங்கிட்ட கேக்கற?”, புரியாததால் கேட்டான்.

“அவங்களுக்கு நீங்க எங்கூட பேசறது தெரியுமா?”

“அவளுக்கு எதுக்குத் தெரியணும்?”

“உங்க ஆட்டிட்டியூட் எதுவும் சரியா தெரியல எனக்கு, நான் வைக்கறேன் போன”

“ஏய் வச்சுறாத… என் ஆட்டிட்டியூட்கு இப்ப என்ன? நாளைக்கு எங்காவது வெளியில போகலாமா?”

“நான் எங்கயும் வரல”

“இந்த ஒரு தடவ மட்டும் ஷாலு… ப்ளீஸ்டா… என் பேச்ச கேட்டு வந்தா, அடுத்து உன்ன நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”, யாரிடமும் இதுவரை எதற்காகவும் கெஞ்சியிறாதவன், இன்று காலில் விழாத குறையாக கெஞ்சியிருந்தான்.

“பிராமிஸ்”, குழந்தையாகியிருந்தாள்.

“சின்ன புள்ளையாவே இரு, ஆளு வளந்தா மட்டும் போதுமா?”,என்றபடி அரவிந்த் சிரித்ததைக் கேட்டவளுக்கு

“ரொம்ப கிண்டல் பேசுனா, நான் அழுவேன்”

“இன்னும் நீ மாறலயா? அப்ப நான் சொன்னது சரிதான்”

“வைக்குறேன்”, என்றபடியே காதின் அருகில் அலைபேசியை வைத்திருந்தவளின் காதில்

“எத்தன தடவ வப்ப… முடில… வையி”,என்று வார்த்தைகளில் பொய் சலிப்புடன் வைத்திருந்தான்.

 

மலர்ந்த முகம் அவளின் மகிழ்ச்சியைக் கூற, மனம் அறிவு இரண்டும் சண்டையிட்டுக் கொண்டது.

 

மனம், ‘அவன் இன்னும் சற்று நேரம் பேசியிருக்கலாம்’ எனக்கூற

அறிவு, ‘அவன எங்க நீ பேச விட்ட?’ எனக் கேட்க

 

முரண்டுவது (மனம்),’பேசிட்டே இருந்திருக்கலாம் அவங்கூட’

அரட்டுவது (அறிவு), ‘இவ்வளவு நேரம் அவங்கூட பேசுனதே தப்பு’ என்றது

 

முன்னது,’பேசத்தான செஞ்சேன்’

பின்னது,’அவங்கூட உனக்கென்ன பேச்சு’

என மாறி மாறி ஒன்று மற்றொன்றுடன் மன்றாட முடியாமல், புத்தகத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள், விசாலினி.

 

புத்தகம் முன்னே இருக்க, புத்தக வார்த்தைகள் மனதிற்குள் வராமல், அவன் பேசி வைத்த வார்த்தைகளே வந்து போயின.

 

வாட்ஸ்அப்பில் நோட்டிஃபிகேசன் வர

அதை எடுத்துப் பார்க்க அதிலும் அவன் தான், ஏதோ மெசேஜ் செய்திருந்தான். ‘எடுத்துப் பார்’ என்றது மனம். ‘பார்க்காதே’ என்றது அறிவு.

 

‘எப்டினாலும் பாக்கத்தானே போற’ என்றது மனம்.

‘பாக்காமலே இருந்தா யாரு வந்து என்ன செய்ய முடியும்’ என்றது அறிவு.

 

‘அம்மாடி என்னால மிடில’ என்றபடி, பாட்டியுடன் இரவு நேர சமையலுக்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்தினாள், விசாலினி.

 

ஒரு வழியாக உறங்கச் செல்லும்முன் எடுத்துப் பார்க்க,

அடுத்த நாள் எங்கு, எப்போது சந்திக்கலாம் என்பதை அவளே முடிவு செய்து, தெரிவிக்கும்படி செய்தி அனுப்பியிருந்தான்.

அந்த தனக்குரிய சாய்சிற்கான செய்தியில் மனம் அவனை நோக்கி சாய்ந்திருக்க, உருகிப் போனவள், யோசித்து தனது வீட்டிற்கு அருகாமையில் ஃபோரம் மால் இருப்பதால், பள்ளியில் இருந்து வந்து கிளம்ப ஏதுவாக இருக்கும் என யோசித்து,

“ஃபோரம் மால், நேரம் 7.15 மணி என அனுப்பி வைத்தாள்”

 

வைத்த அடுத்த நொடியே அரவிந்தனிடமிருந்து பதில் வந்திருந்தது.

“கே… டேக் கேர்… ஸ்லீப் டைட்”, என்ற செய்தியுடன் உறங்கும் இமோஜியை அனுப்பியிருந்தான்.

செய்தியைக் கண்டவுடன் வதனம் ஒளி பெற,‘டேய் அடங்குடா… டேக் கேராம்… வந்துட்டான்…

உன் வீட்டம்மாவுக்கு தெரிஞ்சா… கேர் எடுக்க சொன்னதுக்கு… கேரட் அல்வாதான்டி…”,என்று நினைத்தபடியே மனக் குதூகலிப்பில் களைத்து, உறங்கிப் போனாள், விசாலினி.

 

காலையில் எழுந்தவுடனேயே பாட்டியிடம் பிட்டைப் போட்டு வெளிக்கிளம்ப அனுமதி பெறுவதற்குள் களைத்துப் போயிருந்தாள், விசாலினி.

 

“மூனு நாளுக்கு முன்ன தான எதோ வாங்கணும்னு போன… அதுக்குள்ள என்ன வாங்கப் போற?”, இது அழகம்மாள்.

“எதுவும் வாங்கப் போகல பாட்டி. ஃபிரண்ட் இன்வைட் பண்ணியிருக்காங்க, அதான்”

“இது என்னடி நல்ல பழக்கமா? அடிக்கடி பொம்பள புள்ள ராவுல வெளியே போயி வரது… கஷ்டமில்லயா?”

“இந்த ஒரு முறை மட்டும் தான் பாட்டி”

“உங்கப்பன் கிட்ட பேசணும், பொம்பள புள்ளய அது இஸ்டத்துக்கு விட்டு வளத்துருக்கான்”

‘அவரு எங்க வளத்தாரு, நானா தான் வளந்தேன்’, என விசாலினியின் மனம் நினைத்தாலும், அதை பாட்டியிடம் சொல்ல முடியாமல்

“டாடிட்ட பேசிட்டேன் பாட்டி”

“என்ன சொன்னான்?”

“போயிட்டு வாடான்னு சொன்னாங்க”

“சொல்லுவான் சொல்லுவான்…”, என பேசியபடியே அழகம்மாள் அவரது பணிகளைக் கவனித்தார்.

 

மாலையில் வீட்டிற்கு வந்தவள், மீண்டும் பாட்டியுடன் போராடி கிளம்பியிருந்தாள்.

டூ வீலரில் ஃபோரம் மால் நோக்கி கிளம்பியவள், ட்ராஃபிக்கால் நாற்பது நிமிடங்களில் சென்றடைந்தாள். டூ வீலரை உரிய இடத்தில் பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்தாள், விசாலினி.

 

அன்று காலை அனுப்பியிருந்த அரவிந்தனின் செய்தியின் படி, அவன் குறிப்பிட்டிருந்தபடி, அவர்களுக்கு என ரிசர்வ் செய்திருந்த டேபிளின் அருகே செல்லவும், அருகே வந்திருந்த அரவத்தில் நிமிர்ந்தவளின் முகம் எதிர்பாரா அதிர்ச்சியை காட்டியிருந்தது.

அமராமல் நின்றவளின் முன் நின்ற இருவரையும் பார்த்திருந்தவள்,

“நீங்க ட்வின்ஸா?”, என சரியாக அரவிந்தனை நோக்கி சந்தோசமாக, வாயெல்லாம் பல்லாகக் கேட்டிருந்தாள்.

 

நின்றிருந்தவர்களில் இருவரும் ஒரே மாதிரியாக தோற்றமளித்து இருந்தாலும், சரியாகக் கணித்த ஷாலுவின் கணிப்பைக் கண்டு ஒருவன் தனது கைகளால் லைக் என கையை உயர்த்திக் காட்ட, மற்றொருவன் அதற்கு எதிராக தனது கைகளைக் காட்டி தலையை குனிந்திருந்தான்.

இருவரின் செயல் புரிந்தாலும், தனது கணிப்பு தவறாகிப் போனதால் இருவரும் மௌனமாக இருக்கிறார்களோ என எண்ணியபடி

ஆனால் பேசாது இருவரையும் பார்த்திருந்தாள்.

 

லைக்ஸ் என கைகளால் காட்டியவன் விசாலினியை நோக்கி, “இது சஞ்சய் போஸ், நான் பிறந்த பின்ன பதினோரு நிமிசங்கழிச்சுப் பிறந்த என் ஒரே ப்ரோ”, என தனது தம்பியை கைகளால் தோளோடு அணைத்து விசாலினிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

‘அப்பாடி, நான் கரெக்ட்டா சொல்லிட்டேன், ஒரு நிமிசம் பயந்துட்டேன். பயபுள்ளைக பண்ணுன அலம்பல்ல”, என மனதில் நினைத்தவள்

சஞ்சயைப் பார்த்து கைகளைக் குவித்து வணக்கம் கூறினாள்.

“சரி, அப்ப நான் கிளம்பறேன் ப்ரோ…”, என்றபடி தனது தமையனின் மனதறிந்தவன் கிளம்ப எத்தனிக்க

“டேய் கூட இவ்ளோ தூரம் வந்ததுக்கு ஒரு காஃபியாது குடிச்சுட்டு போடா”,என்ற தனது தமையனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவனுக்கு அருகிலேயே அமர்ந்தான்.

மறுபுறம் விசாலினியை அமரச் சொன்னவர்கள், காஃபி வரும்வரை மூவரும் பொதுவான விடயங்கள் பேசினார்கள்.

வந்தபின் நெருப்புக் கோழிக்கு உறவாகியவன் போல உடனே காஃபியை அருந்திவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியிருந்தான், இங்கிதம் தெரிந்த சஞ்சய்.

சஞ்சய் கிளம்பும் வரை இலகுவான மனநிலையில் இருந்தாள் விசாலினி. அவன் கிளம்பிய பின்பு உண்டான தயக்கம் சரியாக பேசவிடாமல் தடை செய்ய, மனம் மாத்தாப்பூ போன்று மாறியதை முகம் காட்ட, மறைக்கும் வழி தெரியாமல் வசமாக அரவிந்திடம் மாட்டியிருந்தாள்.

அதற்கு மேல் எதிரே அமர்ந்து பேச பிரியப்படாதவன், விசாலினியின் அருகே இருந்த சேரில் வந்து அமர்ந்தான்.

எதிரில் இருக்கும் போதே நாவு கபடி ஆட, அருகில் வந்தமர்ந்ததும் அனைத்து அவயங்களும் ஆஃப் ஆனது போல இருந்தது, விசாலினிக்கு.

ஆனால் இதயத்துடிப்பு மட்டும் எகிறியது. அருகில் இருப்பவனுக்கு கேட்குமோ எனுமளவிற்கு இதயம் துடிக்க, ‘என்னடா இது புதுசா இருக்கு’ எனுமளவிற்கு விசாலிக்கு எண்ணத் தோன்றி இருந்தது.

 

“என்ன ஷாலு, என் அட்டிட்டியூட் பத்தி இப்ப என்ன நினைக்கற?”, அரவிந்த்

“ம்… ஒன்னுமே நினைக்கல”

“நான் எதுவும் நினைச்சுக்க மாட்டேன், சும்மா சொல்லு”, ஊக்கப்படுத்தினான்.

“நீரு டாடின்னு சொன்னத வச்சு, நீங்க தான் அவளோட அப்பானு… நினச்சேன்… அன்னிக்கு பீனிக்ஸ்ல நீருவோட உங்க பிரதர் இருந்தப்போ அது நீங்கதான்னு நினச்சேன்… ஆனா அவங்க.. என்னைய தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கல, ஆனா அடுத்த நாளே ஸ்கூல்ல என்னைய நீங்க கூப்டு பேசுறீங்க…

நான் என்னனு நினைக்கறது… அதான் அன்னிக்கு அட்டிட்டியூட் பத்தி எல்லாம் பேசற மாதிரி ஆகிருச்சு…

உங்களுக்கு மேரேஜ் பண்ணாம எப்டி… உங்க எங்கர் பிரதர்கு உங்க வீட்ல… அதுக்குள்ள மேரேஜ் பண்ணிட்டாங்க?”, எனத் தயங்கித் தயங்கி கேட்டவளைப் பார்த்து சிரித்தவன்…

“சும்மா சொல்லுனு சொன்னதுக்கு…”, மீண்டும் சிரித்தபடியே, “இவ்வளவு தானா, இல்ல இன்னும் இருக்கா?”

“…”, எதுவும் பேசாமல் இருந்தவளைப் பார்த்து, அவனே அவள் கேட்டதற்கு பதில் ஜொல்லினான்.

“நீரு, சஞ்சய டாட்னு சொல்லுவா, என்னய ரவி டாட்னு சொல்லுவா…

அப்புறம் என்ன கேட்ட? அவனுக்கு ஏன் அதுக்குள்ள மேரேஜ்னு கேட்டல்ல…

அது பெரிய கதை… சுருக்கமா சொல்லணும்னா…

மேரேஜ் செய்து வைங்கணு எங்கம்மாகிட்ட ஒத்தக்கால்ல வந்து நின்னான். அதனால எதுக்கு வம்புன்னு எங்கம்மா அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க…

நா பிடியே குடுக்கல, அதனால ஆஞ்சநேயருக்கு நேந்து விடலாமா இல்ல, பிள்ளையாருக்கு நேந்து விடலாமான்னு ஒரு ஆராய்ச்சி போயிட்டு இருந்தது…

இப்ப தான்… யாருக்கும் நேந்து விட வேணாம்… பயலுக்கு கல்யாணத்தையே பண்ணி வச்சிரலாம்னு முடிவாகியிருக்கு…

ம்… அப்ப ஐயாவ (அரவிந்த்) பாக்கறதுக்கு முன்னாடியே நிறய என்ன பத்தி தப்பு தப்பா யோசிச்சிருக்க!”

“…”, அரவிந்தனின் வார்த்தைகளைக் கேட்டவாறு இருந்தவளுக்கு எல்லாம் புரிய… அவனைத் தப்பு தப்பாக யோசித்ததை எண்ணி பதிலே பேசாமல் இருந்தாள்.

“சரி… இப்ப எங்கள பாத்தவுடனே அதுல என்ன எப்டி கண்டுபிடிச்ச?”

“ம்… யோசிச்சு சொல்லவா?”

“பாத்தவுடனே சொல்றதுக்கு கூட இவ்வளவு நேரம் யோசிக்கலயே, எப்டி சொன்னேனு கேட்டதுக்கு எவ்வளவு யோசிக்கிற?”

“அவங்க ரிலாக்ஸா, எந்த ரியாக்சனும் இல்லாம, இயல்பா, யாரோ ஒருத்தவங்கள பாத்தா எப்டி இருப்போமோ அப்டி இருந்தாங்க.  ஆனா நீங்க உதட்டுல சிரிப்போட, கண்ணுல ஒரு எதிர்பார்ப்போட என்னையே பாத்துட்டு இருந்தீங்க…”

“வளந்துருக்கு…”,என்று சிரித்தவனிடம்

“ம்…”, என முறைத்தவள், “ஆனா நல்லவேல உங்கள பாத்து பேசினேன். உங்க தம்பிய பாத்து பேசியிருந்தா என்ன ஆகியிருக்கும்?”

“ஒன்னும் ஆகியிருக்காது.  உன் மனச நான் தெரிஞ்சுக்க உண்டான ஒரு சந்தர்ப்பம் அது”

“என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க?”

“அத நான் சொல்லணும்னா, நான் சொல்றத கேக்கணும்”

“நீங்க சொல்லவும் வேணாம், நான் கேக்கவும் வேணாம்”

“சரி போகட்டும், வேற என்ன சாப்பிடற”

“வீட்டுல போயி சாப்பிடலனா பாட்டி சத்தம் போடுவாங்க, உங்களுக்கு வேணும்னா சாப்பிடுங்க”

“நான் சாப்ட வரல”

“அப்போ கிளம்புவமா?”

“கிளம்புறதுலயே இரு”

“நேரமாகுதுல்ல”

“நானே உங்க வீட்ல ட்ராப் பண்றேன்”

“வேற வினையே வேணாம்”

“என்ன தான் செய்யணும்?”

“வீட்டுக்குப் போகணும்”

“சரி வா கிளம்புவோம்”, மனதே இல்லாமல் எழுந்தவனின் முகத்தைப் பார்த்தவளுக்கு மனதில் வலி எழ

“ஒரு பத்து நிமிசம் இருந்துட்டுப் போவோம்”, என விசாலினி கூற, காதலன் வென்றிருந்தான்.

ஷாலினியின் பதிலில் சரியென்றவனிடம்

“பாட்டி நான் வெளிய வரதுக்கு ரொம்ப பயந்து தான் அனுப்பறாங்க, லேட் ஆனா பயந்து டாடிக்கு பேசுவாங்க, அதான்”

“ம்…”

என அதன்பின் பொதுவான விடயங்கள் பேசியபடியே பதினைந்து நிமிடங்களைக் கடந்திருந்தனர்.  நேரம் போனதே தெரியலயே என இருவரின் மனமும் ஓலமிட, அதற்குமேல் அவளை சங்கடத்திற்குள் ஆக்காமல், அரவிந்தனே முடிவுக்கு வந்திருந்தான்.

“கிளம்புவோமா?”, எனக் அவளைக் கேட்க, மணி பார்த்தவள் பதறியிருந்தாள்.

“ரிலாக்ஸ் ஷாலு, அவசரப்படாம நிதானமா போ”,என்றவனுடன்

ஃபோரம் மாலை விட்டு வெளிவந்திருந்தாள்.  அவளின் டூவீலரின் பார்க்கிங்கில் இருந்து வண்டியை எடுத்து அவளிடம் தந்து, அவள் கிளம்பிச் செல்லும்வரை நின்றிருந்தவன்,

“போயிட்டு மெசேஜ் பண்ணு, மறந்துறாத”

“ம்..” என்றவளை அனுப்பிவிட்டு, அதன் பிறகு அவனுடைய ஆடியை எடுத்து கிளம்பினான், அரவிந்தன்.

 

விசாலினி தன்னைக் கண்டு கொண்டதே தனது எதிர்பார்ப்பிற்கான முதல் பரிசாக எண்ணியவனுக்கு உடனே அவள் கிளம்பியது வருத்தத்தை தரவில்லை.  இருப்பினும் தன் தாயிடம் இது பற்றி விரைவில் பேச முடிவெடுத்திருந்தான், அரவிந்தன்.

 

ஒன்பது மணியளவில் வீடு வந்தவள், ‘அரைவ்டு’ என்ற மெசேஜை மட்டும் அரவிந்தனுக்கு அனுப்பிவிட்டு பாட்டியுடன் கிச்சனில் ஐக்கியமாகிவிட்டாள். அரை மணித் தியாலத்தில் அவசரமாக தனது பணிகளை முடித்தவள், விரைவிலேயே உறங்கச் சென்றுவிட்டாள், விசாலினி.

தனக்குரியதாக தன்னை அறியாமல் எண்ணி இருந்தது, தன்னை விட்டுப்போனதாக எண்ணி மனதை வருத்திக் கொண்ட கடந்த நாட்களையும், தனது மடத்தனத்தை எண்ணிச் சிரித்தவள், படுக்கையில் படுத்தபடியே அலைபேசியை எடுத்திருந்தாள்.

மனம் முழுவதும் சந்தோசத்தால் புதுமழைக்கு நிரம்பிய குளம் போல இருந்தது.  அதற்கான காரணம் புரிந்தாலும், இது சாத்தியமா என்கிற கேள்வி பூதகரமாக நிக்க, தந்தையின்

“உனக்கு யாரையும் பிடிச்சிருந்தா கூட சொல்லுடா, அப்பா பேசுறேன்”

என்ற வார்த்தையை நினைவு கூர்ந்தாள்.

தந்தை வந்தபின் பேசலாம் என எண்ணி அமைதியாகியிருந்தாள். இதுவரை அரவிந்தன் எதையும் வெளிப்படையாகப் பேசவில்லை எனும் உண்மை சுட, தானாக எதாவது நினைத்துக் கொள்ளக்கூடாது என தனக்குத் தானே கடிவாளம் போட்டாள்.

அந்தஸ்து பேதம் அதிகமாக இருப்பதை உணர்ந்தவளுக்கு, அரவிந்தன் தன்னை ஏற்றுக்கொள்ள பிரியப்பட்டாலும், அரவிந்தனின் வீட்டுப் பெரியவர்கள் ஆமோதிப்பார்களா எனும் சந்தேகம் வர, நத்தையைப் போல மனதைச் சுருக்கிக் கொண்டாள்.

தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக் கொண்டு, எதற்காக சிரமப்பட வேண்டும் என்று எண்ணியவள், சாவகாசமாக அவனின் வாட்சப் செய்தியைப் பார்க்க,

“மிஸ் யூ லாட்”, என்ற அவனின் செய்தி இதயத்தை ஒட்டிய பகுதிக்குக்குள் ஏதோ புதுவிதமான சந்தோச அவஸ்தையான உணர்வைக் கொடுக்க, அதை அனுபவித்தவாறு

“குட் நைட்” என்ற செய்தியை அடித்து அனுப்பினாள்.

உடனே பதில் வந்திருந்தது.  “இன்னும் தூங்கலயா”

“இனிமே தான்”, என அனுப்பினாள்.

“கால் பண்ணவா?”

“இல்ல வேணாம்”

“எதுவும் வேணாம்னா… என் நிலம கஷ்டம்தான் ஷாலு, கொஞ்சம் கன்சிடர் பண்ணேன்”

“முடியாது”,சற்று முன்பு தனக்குள் அறிவு சொன்னதை செயல்படுத்தினாள்.

“அப்ப கிளம்பி உங்க வீட்டுக்கு வரேன் நேருல”

“அம்மாடி, ஏன் இப்டி”, மனது அலற செய்தியை அனுப்பியிருந்தாள்.

“வேற என்ன செய்ய… இப்ப நான்?”

“போயி தூங்குங்க”

“இங்க இன்னும் நீருவே தூங்கலே, அதுக்குள்ள பெட்டுக்கு நீ போனதுமில்லாம என்னையும் துரத்து, இப்ப அங்க வரவா?”

“காலே பண்ணுங்க”, கதறியிருந்தாள் பயந்து.

“அப்டி வா வழிக்கு” என்றவன்,

அடுத்து இருபது நொடிகளில் அவளது அலைபேசிக்கு அழைத்திருந்தான்.

 

அழைப்பில் அவர்கள் பேசியதை சொல்லாமலே கணியுங்கள், தோழமைகளே…