அத்தியாயம்-5
பருவத்தில் தவறிய ஈர்ப்பு, பக்குவமாய் கையாளப்பட விசாலினியும், அரவிந்தனும் ஒருவரின் காதலை மற்றவர் உரைக்காமலே உணர்ந்து, பகிர்ந்து கொள்ளாமலேயே, பரிவோடும், பண்போடும், வளர்க்க ஆரம்பித்து இருந்தனர்.
சுகம்… அன்பும், கருணையும் கொண்ட மூலத்தின் பரிமாணம் அனைத்தும் சுகம்.
உலக இன்பங்களில் உச்சகட்ட இன்பம், பேரின்பம்.
பேரின்பம், அது ஆன்மாவை இறையுடன் இணைப்பது.
பேரின்பத்தை அடைவதற்கான வழி… சிற்றின்பம் தேடி, வேதனையில் துவண்டு, உழைப்பில் உழன்று, நோயால் வருந்தி, இன்ன பிற இன்னல்களையும், இன்பங்களையும் அனுபவித்து, இறுதியாக, உறுதியாக தெளிந்து, பக்குவம் பெற்று மூலத்தை சரணாகதி அடைவது.
சிற்றின்ப நாட்டத்தால் உலக இச்சைகளின்பால் வசப்பட்டு, சஞ்சீத, பிராரப்த, ஆகாம்ய கர்மாக்களை அழித்து, கழித்து, முக்தி பெறுவது என்பது அனைவருக்கும் வாய்ப்பது அரிது.
அன்பும், கருணையும் இருந்தால் உலகையும் நமது வசப்படுத்தலாம்.
விசாலினியும், அரவிந்தனும் சிற்றின்பத்தில் பால் வயப்பட்டு, ஒருவர் மற்றவர் மேல் கொண்ட அன்பினாலும், கருணையினாலும் மனம் ஒன்றுபட்டு இணைந்திருந்தனர்.
விசாலினி, தனது தந்தையின் வரவை எதிர்பார்த்திருந்தாள். பேத்தியின் மாற்றங்களை கண்ட அழகம்மாள், மகனை இந்தியா திரும்புமாறு அழைத்திருந்தார்.
கிருபாகரனுக்கும், கற்பகத்திற்கும் விசாலினியின் மனமாற்றம் காதல் சார்ந்ததாக இருந்ததாக கண்டறியப்பட்டதால் சற்றே அச்சத்தை தந்திருந்தது.
திருமணம் பற்றி பிடி கொடுக்காமல் அசட்டையாக எதிலும் பற்றில்லாது இருந்தவளின் முன்னேற்றத்தை எண்ணியதில் மகிழ்ச்சி உண்டாகி இருந்தது. மகளிடம் நேரில் பேச முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர்.
தந்தையைக் கண்டவுடன் உலகமே தன் வசப்பட்டது போல மகிழ்ந்து போயிருந்தாள், விசாலினி.
அலைபேசியில் அவ்வப்போது பேசியிருந்தாலும் மறு ஒளிபரப்பாக கடந்த மூன்று மாத விடயங்களும் திரும்ப பேசப்பட்டது, அலசப்பட்டது, தீர்மானிக்கப்பட்டது, தீர்ப்பு சொல்லப்பட்டது. சில சிந்திக்கப்பட்டது, சில சிரிக்கப்பட்டது-
அனைத்து பொதுவான விடயங்களும் முடிவுக்கு வந்திருக்க, அடுத்து… தனது காதலின் இறுதிக்கட்டமான திருமணத்திற்குரிய விடயத்தை எப்படி தந்தையிடம் ஆரம்பிப்பது என மகளும், எப்படி மகளிடம் இது பற்றிக் கேட்பது என தந்தையும் யோசித்து, தயங்கி திருமணம் சார்ந்த பேச்சை ஒத்தி வைத்திருந்தனர்.
தரகர் எடுத்து வந்த வரன்களைப் பற்றி இலகுவாக மகளிடம் பகிர்ந்து கொண்டவரால், தாயின் கணிப்பான மகளின் காதலைப் பற்றி பேசும் துணிவு வரவில்லை. ஏதோ ஒன்று அரணாக இருக்க, அரணைத் தாண்டிப் பேசும் மனதில்லாமல் அமைதியாக இருந்தார், கிருபாகரன்.
அரவிந்தனின் தந்தைக்கு, தரகரின் அனைத்து தரவுகளையும் பயனற்றதாக்கி, காலங்கடத்திய மகன் எதுவோ சொல்ல விரும்புவதும், ஆனால் தயக்கம் மேலிட அதைப் பேசாது போவதையும் கடந்த இரு மாதங்களாகவே கவனித்து, கணித்திருந்தார்.
அதை மனைவி நீலாவிடமும் பகிர்ந்திருக்க, இருவரும் அரவிந்தன் கூறட்டும் என எதிர்பார்ப்போடு இருக்க, அரவிந்தன் காதலின் ஆரம்பகட்ட மயக்கத்தில் பேசாது இருந்தாலும், ஏதோ தயக்கம் மேலிட நாட்களைக் கடத்தினான்.
இருவரும் நாட்களைக் கடத்தியதற்கு காரணமும் இருந்தது. இருவரும் ஆரம்பப் பள்ளி மாணவர்களைப் போல காதல் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர். இருவருக்கும் தனது கற்றல் பற்றிய ஐயங்கள் இருந்தபடியால் அதை ஒருவருக்கொருவர் சரி செய்து கொள்ளவும், புதியதாக கற்றுக் கொள்ளவுமே இரு மாதங்களின் அறுபது நாட்களும் ராக்கெட் வேகத்தில் சென்றிருந்தது.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல நாட்கள் மிகவும் இனிமையாகவும், எதிர்பார்ப்புடனும் அருமையாக சென்றது.
நிதானம் இருவரையும் அணு அணுவாக ரசிக்கச் செய்தது. ரசனைகளை ஆள்பவர்களாக இருவரும் இருக்க, காதலின் நாட்களே… திருமணம் கைகூடி வாழ்ந்த திருப்தியை இருவருக்கும் கொடுத்திருந்தது.
இருவரின் பருவுடல் மட்டுமே தூரத்தில் இருக்க, இருவரும் எப்போதும் ஒன்றான உள்ளத்தோடு உளமார குதூகலித்திருந்தனர்.
இடையிடையே அவர்களின் அன்றாட பணிகள் அவர்களுடைய இளைப்பாறல்களாக இருக்க, மற்ற நேரங்களில் காதல் வளர்த்திருந்தனர்.
உலகில் மிகவும் சந்தோசமான நபர்களாக இருவரும் தங்களை உணர்ந்திருந்தனர். உலகில் விலைமதிப்பற்ற நாட்களாக… காதலைச் சொல்லாமல் இருவரும் தங்களது காதலை வளர்த்திருந்த நாட்களை எண்ணிச் சிலாகித்து இருந்தனர்.
புரிதல், இருவரையும் புடம் போட்டு மின்னச் செய்திருந்தது.
அழகம்மாளும் பேத்தியிடம் காதல் குறித்து பேசப் பிரியம் காட்டாததால், முதல் முறையாக விசாலினியின் தாயாரான கற்பகத்தை களத்தில் இறக்க முடிவு செய்திருந்தது, அவர்களது குடும்பம்.
பள்ளி முடித்து வந்து வழமை போல அவளின் பணிகளில் ஈடுபட்டிருந்த மகளை அணுகிய கற்பகம்,
“விசாலி, உனக்கு பாட்டி பாத்த வரன் எதுவும் பிடிக்கலனா, உனக்குன்னு ஏதும் எதிர்பார்ப்பு உன் கல்யாணம் சம்பந்தமா இருந்தா சொல்லுடாம்மா”, நேராக விடயத்திற்கு வந்திருந்தார்.
இரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளை மேம்போக்காக தாயிடம் பகிர்ந்து கொண்டாள், விசாலினி.
இருவருக்கும் உண்டான மன ஒற்றுமையை கருத்தில் கொண்டு, அரவிந்தனையே தனக்கான வாழ்க்கைத் துணையாக முடிவு செய்தால் தனது எதிர்காலம் நலமாகும் எனத் தாயிடம் ஒளிவு மறைவின்றி தெரிவித்திருந்தாள், விசாலினி.
“அப்ப, பையனோட வீட்டில இருந்து வந்து பேசச் சொல்லலாமா”, என மகளிடமே கேட்டவர்
“அதுக்கு முன்ன… பையன நம்ம வீட்டுக்கு வர சொல்றது முறை இல்ல”, எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டவர்,
“பேசாம எதாவது ஒரு கோவில்ல இரண்டு குடும்பமும் சந்திக்கற மாதிரி செய்யலாம்னு தோணுது, பையன்கிட்ட கேட்டு சொல்லு”, என்றவர் அத்தோடு தனது பணி முடிந்ததாக எழுந்து சென்றிருந்தார்.
காதல் பற்றிய களம் கற்பகத்திற்கு புதிது என்பதால் கையாளத் தெரியாமல் திணறினார். ஆனால் மாமியாரும், கணவனும் தன்னை பகடையாக்கிச் சென்றதன் நோக்கம் அறியாத அப்பாவியாக இருந்தார், கற்பகம்.
மகளிடம் விவாதித்ததை, திரைக்கதையாக்கி தனது மாமியாரிடம் அப்படியே திரையிட்டுக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார், கற்பகம்.
வழமைபோல அன்று இரவு அழைத்தவனிடம், திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளாக தனது வீட்டில் இன்று தன்னிடம் பேசப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டாள், விசாலினி.
“உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா? இல்லை இன்னும் கொஞ்சம் நாளாகட்டுமா? ஷாலுமா?”
“எதுனாலும் எனக்கு ஓகே தான். ஆனா, அதுக்குமுன்ன ரெண்டு வீட்டு பெரியவங்களும், பாத்து, பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்”
“ம்… அம்மாகிட்ட நாளைக்கு பேசிட்டு… எப்ப, எந்த கோவில்ல வச்சுப் சந்திக்கலாம்னு அடுத்து டிசைட் பண்ணலாம்”
“சரி”, என்றவள் அடுத்து வந்த நேரத்தை அவர்களின் காதலின் நேரமாக அறிவித்து அதில் அவர்கள் இருவருமே பேசிக் களித்து, சிரித்து, மகிழ்ந்து, களைத்து உறங்கியிருந்தனர்.
அதுவரை தயக்கம் காட்டியவன், அடுத்த நாள் தனது தாயைத் தேடிச் சென்று விடயத்தை குறுவினாவுக்குரிய விடையளவில் விளக்கிக் கூறினான், அரவிந்த்.
அரவிந்தனின் விடயத்தைக் கேட்ட நீலா “இப்பவும் அந்த பொண்ணு தான் முதலடி எடுத்து வச்சிருக்கு போல. உன்ன நினச்சா எனக்கு வருத்தமா இருக்கு அரவிந்த், ஆனாலும் இப்பவாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தேனு நினச்சு சந்தோசமாவும் இருக்கு”, என மகன் செயலுக்கு வாத்தியம் வாசித்திருந்தார்.
நாள், கிழமை பார்க்கப்பட்டு, ஒரு வளர்பிறை நாளின் மாலை நேரம் குறிக்கப்பட்டு, இடம், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சிவா விஷ்ணு ஆலயம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது.
கிருபாகரனின் தமையனின் குடும்பத்திலிருந்தும், கருணாகரன் மற்றும் கயல்விழி தம்பதியினரும் நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தனர்.
முதல் சந்திப்பு என்பதால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நபர்களைச் சேர்த்து யாரையெல்லாம் கோவிலுக்கு அழைத்துச் செல்லலாம் என பட்டிமன்றமே வீட்டில் நடத்தப்பட்டிருந்தது. அழகம்மாள், சதாசிவம், கருணாகரன், கயல்விழி, கிருபாகரன், கற்பகம் உடன் மணப்பெண் விசாலினியையும் அழைத்துச் செல்வதாக இறுதியில் முடிவு செய்யப்பட்டது.
அரவிந்தனின் குடும்பத்தில், சந்திரபோஸ், நீலா, சஞ்சய் போஸ், மிருணாளினி, மணமகன் அரவிந்தன் சந்திப்பில் பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது.
குழந்தை நீரஜாவை வீட்டிலேயே விட்டிருந்தனர். அதற்கும் காரணம் இருந்தது. குழந்தைக்கு வீட்டிலேயே பரத வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி வகுப்பு நடைபெற்று வருவதால், அவரிடம் நீரஜாவை விட்டுவிட்டு கிளம்பியிருந்தனர்.
சந்திரபோஸ் தம்பதியரைப் பொருத்தவரை அந்தஸ்துபேதம் எதுவுமின்றி மகனுக்கு திருமண வைபோகம் கைகூடினால் போதும் எனும் எண்ணத்தில் இருந்தனர்.
அழகம்மாள் பாட்டியைப் பொருத்தவரை, ஏழு சம்பத்துகளான, உடல் அமைப்பு, குணம், அறிவில் உயர்வு, செல்வம், கீர்த்தி, உடல்வலிவு மற்றும் சுகம் இவற்றில் ஒன்று குறைந்தாலும் அந்த சம்பந்தத்தை தொடரும் எண்ணத்தை விரும்பமாட்டார்.
ஏழு சம்பத்துகளில் குறைவற்ற ஒருவரால் மட்டுமே வம்சவிருத்தி விருட்சம் போல அமையும் என்பதில் மாறாத எண்ணம் உடையவர், அழகம்மாள்.
கிருபாகரன் மற்றும் கருணாகரனுக்கு அழகம்மாளின் மாமியார் பார்வதி அம்மாள் முன்னின்று செய்ததை அருகிலிருந்து பார்த்திருந்தார். அந்த அனுபவம் அழகம்மாளுக்கு கைகொடுக்க, கிருபாகரனின் மகள்கள் இருவருக்கும், கருணாகரனின் இரு மக்களுக்கும் அதே போன்ற குடும்பங்களில் இருந்து, மணமகனை , மணமகளை சம்பந்தம் செய்திருந்தார்.
அதே போன்று விசாலினிக்கும் அமைய வேண்டி இறைவனை பிரார்த்தித்துபடியே இருந்தார். பேத்தி பொடிசியின் (விசாலினி) எண்ணம் ஈடேறுவது ஒருபுறம் இருக்க, தனது எதிர்பார்ப்புகள் பொய்த்து விடாமல் இருக்க இறைவனை நாடினார்.
கிளம்பும் முன்பே விசாலியை அழைத்துப் பேசியிருந்தார், அழகம்மாள்.
பருவ வயதினருக்கு புலப்படாத பல விடயங்களை, கூறுகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் எந்த இடர்பாடுகளும் தம்பதிகளுக்கு இடையே வராத சம்பந்தங்களையே தனது அனுபவத்தில் இதுவரை தனது பேரன், பேத்திகளின் வாழ்வில் முன்னின்று நடத்தி வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.
மேலும்,விசாலியினின் தேர்வால் ஏதேனும் மனக்குறை, தன்மானப் பிரச்சனை எதுவும் குடும்பத்திற்கு உண்டாகும் சூழல் இருக்குமாயின் பாட்டியின் சொல்கேட்டு நடக்குமாறும் பணித்திருந்தார், அழகம்மாள்.
இதுபோன்ற ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திராத விசாலினி சற்றே குழப்பமடைந்திருந்தாலும், அரவிந்தனைத் தவிர வேறு யாரையும் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க இயலாத தனது நிலையை தனக்குள் உறுதி செய்தே பெரியவர்களுடன் கிளம்பினாள்.
சம்பந்த விபரம் பேச இருப்பதால், குடும்பத்தின் உபயோகத்திற்கு பயன்படுத்திய இனோவாவை நாமக்கல்லின் இருந்து வரும்போது கருணாகரனை எடுத்து வரப் பணித்திருந்தார், அழகம்மாள்.
இனோவாவில் கிளம்பியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் கோவிலை அடைந்து இருகோவிலிலும் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்து கோவிலின் பிரகாரத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.
கோவிலுக்கு வந்த செய்தியை விசாலினி தனது அலைபேசியில் வாட்சப் மூலம் அரவிந்தனுக்குப் பகிர்ந்திருந்தாள்.
பிரகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், வெளியில் இரு ஆடிக் கார்களில் வந்திறங்கும், சம்பந்தம் செய்யவிருக்கும் குடும்பத்தாரைப் பற்றி அறியாமல் பேசியபடி இருந்தனர்.
நீலா, இரு கோவில்களிலும் வழிபாட்டை சிம்பிளாக முடித்துக் கொண்டு அரவிந்தனுக்கு வந்திருந்த செய்தியின் படி குறிப்பிட்ட பிரகாரத்தை நோக்கி குடும்பத்துடன் வந்தனர். அதனைக் கவனியாது பேசியபடி இருந்தனர் அழகம்மாள் குடும்பம்.
பார்வைக்கு படும் வகையில் எதிரில் அமர்ந்திருந்த விசாலினி, அரவிந்தன் தனது தாய்,தகப்பன் மற்றும் குடும்பத்துடன் வருவதைப் பார்த்து தனது தந்தையிடம் பகிர,
வருபவர்களை வரவேற்க அழகம்மாள், சதாசிவம் தம்பதியினரைத் தவிர மற்றவர்கள் எழுந்து வரவேற்க ஆயத்தமாக
எதிரில் வருபவர்களை பார்த்த கருணாகரன், தனது தம்பியின் காதில் ஏதோ ஒரு விடயத்தைப் பகிர, இருவரின் உடலும் விரைத்து, ஆனால் வரவேற்க எழுப்பிய கைகளை கீழே போட்டவாறு, வாங்க என ஒற்றை வார்த்தையில் அழைத்து முதுகு காட்டி அமர்ந்திருந்த அழகம்மாள் சதாசிவம் முன்பு இருந்த இடத்தில் அமர பணித்தனர்.
பெண்களும் எந்த பேதமும் காட்டாமல் அனைவரையும் வரவேற்று அமரச் செய்திருக்க,
அதற்குள் தனக்கு எதிரே சம்பந்திகளாக வந்து அமர்ந்தவர்களைப் பார்த்த, அழகம்மாள், சதாசிவம் தம்பதியினர் இருவரும் முகத்திலும் அதிர்ச்சி காட்டியிருந்தனர்.
அமர்ந்தவர்களும் அதற்குக் குறையாத அதிர்ச்சியுடன் எதிரில் அமர்ந்திருந்த அழகம்மாள், சதாசிவத்தைப் பார்த்து கைகூப்பியிருந்தனர்.
சந்திரபோஸ், நீலாவின் முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியில் சற்றே குழம்பிய அரவிந்தன் எதனால் இந்த அதிர்ச்சி என எண்ணியபடி
எதிரே இருந்த விசாலினியின் பாட்டி, தாத்தா இருவரையும் பார்க்க, இருவரின் முகமும் சாந்தமாக வசியத்துடன் இருந்தாலும், சுருங்கிய தோல்களுக்கு இடையேயும் அவர்களின் வதனத்தில் வருத்தத்தின் சாயல் இருக்க, எதுவும் புரியாமல் இரு குடும்பத்தாரையும் மாறி மாறி பார்த்திருந்தான். அரவிந்தன்.
விசாலினியும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்திருந்தாள்.
கிருபாகரன், கருணாகரன் இருவரும் அதன்பின் அங்கு அமராமல் தாய், தந்தையின் பின்னே சென்று நின்றிருக்க, கயல்விழியும், கற்பகமும் இருவரது செயலில் ஒன்றும் புரியாமல் அனைவரையும் பார்த்திருந்தனர்.
புதிருக்கான விடை தெரிந்தவர்கள் சொன்னால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வரை தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
———————-