வானம் காணா வானவில்-6

அத்தியாயம்-6

 

விசாலினியின் வீட்டில் குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிலவியது.  அழகம்மாள் சதாசிவம் இருவரும் வீட்டிற்குள் வந்து அறைக்குள் சென்றவர்கள், அதன்பின் வெளியே வரவில்லை.

அதேபோல, கிருபாகரனும், கருணாகரனும் ஆளுக்கொரு அறையில் தங்களை முடக்கிக் கொண்டனர்.

கயல்விழி, கற்பகம் இருவருக்கும் எதுவும் புரியவில்லை.  எதனால், என்ன நடக்கிறது?, இருவரது குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? எதுவும் தெரியாமல் ஓரகத்திகள் இருவரும் ஹாலில் ஒரு ஓரத்தில் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.

விசாலினிக்கு எதுவோ சரியில்லை எனப் புரிந்தாலும், ஒன்றும் விளங்காமல் எதையும் யோசிக்க இயலாமல் தாய் மற்றும் பெரியம்மாவிடம் கேட்டாள்.

“பெரியம்மா, உங்களுக்கு எதுவும் தெரியுமா?”

“ஒன்னும் தெரியலயே கண்ணு”

“இந்த பாட்டி ஷாக் ஆனத இன்னிக்கு தான் நேருல பாத்தேன் பெரியம்மா… ஆனா அத அப்டியே மறச்சு…

அவங்கள… அதான் அரவிந்த் அம்மா அப்பா ரெண்டு பேரயும் பாத்து… ரொம்ப நிதானமா…

நீங்க வந்ததுல சந்தோசம்…

ரெண்டு குடும்பமும் நேருல பாத்தாச்சு,

மேற்கொண்டு பேசணும்னு பிரியப்பட்டா, என் பையங்கிட்ட சொல்லி அனுப்பறேன்.

இல்ல… உங்க நம்பர் கூட எங்கிட்ட இருக்கு, அதுல
கூட தகவல் சொல்றேன்.

இப்ப நாங்க கிளம்புறோம்.

அப்டினு சொல்லிட்டு… அவங்களோட பதில கூட எதிர்பாக்காம எழுந்து நின்னு… அவங்க பின்னாடி நின்ன அப்பாவ பாத்த பார்வையிலேயே, அப்பா, பெரியப்பா ரெண்டு பேரும்… பாட்டி பின்னாடியே கிளம்பிட்டாங்க…

தாத்தா சுத்தம்… அதுக்குமேல…”,என்றபடி கோவிலில் நடந்தவற்றை மறு ஒளிபரப்பு செய்து… ஒரு முடிவுக்கு வர முடியாமல் அமர்ந்திருந்தாள், விசாலினி.

“அது நான் வந்து ஐம்பது வருசத்துக்கும் மேல பாக்கறேனே… உங்க தாத்தா அப்ப இருந்தே அப்டிதான்டி”, இது கயல்விழி

“உங்களுக்கே தெரியலனா, எங்கம்மாவுக்கு தெரிய வாய்ப்பே இல்ல பெரியம்மா”

“ஆமா கண்ணு…. நமக்கு தெரியாம இந்த ஐம்பது வருசத்துல… இன்னும் என்னென்னத்த மறச்சாங்கனு தெரியலயேடி கற்பகம்”, கயல்விழி.

“தெரிஞ்சு இனி என்னக்கா பண்ணப் போறோம்.  சம்பந்தமெல்லாம் பண்ணியாச்சு, இவ ஒருத்திக்கும் கல்யாணம் முடிச்சா அவ்ளோதான்”, கற்பகம்

“ஆனாலும் கில்லாடிதாண்டி நம்ம மாமி”,கயல்விழி

“இல்லனா இவ்வளவு பெரிய குடும்பத்த கட்டு செட்டா கொண்டு போயிருக்க முடியாதுல்லக்கா”

“அதச் சொல்லு… அது என்னவோ உண்மைதான், உண்மையில இத பத்தியெல்லாம் எதுவும் உன்னவரும் வாயத் திறக்கலயா உங்கிட்ட?”, கயல்விழி.

“எங்க வீட்டு ஆளு சும்மா வந்து எங்கூட பேசுனால மழ வரும், இதுல நாங் கேட்டு அவரு சொல்லிட்டாலும்… அதனால நானே கேக்க மாட்டேன். அவரா இது வர எதுவும் சொன்னதுமில்ல”, கற்பகம்.

“இரண்டும் ஒரே மாதிரி தான்”, கயல்விழி.

ஓரகத்திகள் தங்களின் ஆதங்கங்களைப் பகிர்ந்து கொள்ள, ஒன்றும் புரியாமல் அங்கு அமர்ந்திருந்தாள், விசாலினி.

இரவு உணவிற்கு கூட யாரும் வெளியில் வரவில்லை.

பெண்களுக்கும் பசி தெரியாததால், அவர்களுக்கான அறைகளில் ஓய்வினை எடுக்க அவரவர் இடங்களில் சுருண்டிருந்தனர்.

 

விசாலினிக்கு இரவு படுக்கைக்கு வந்தவுடன் தான் பாட்டி நடந்து கொண்டது மனக்கண்ணில் வந்து பயமுறுத்தியது.  அரவிந்தன் வீட்டாரை பொருட்படுத்தாது பாட்டியின் பின்னே அனைவரும் வந்தது உறைக்க… அப்பொழுது தோன்றாத ஒரு அசௌகரியமான நிலைக்கு தள்ளப்பட்டாள்.

தனது நடவடிக்கை அரவிந்தனை எந்தளவு பாதித்திருக்கும்.  அவன் வீட்டாரை அவமதித்ததாக எண்ணியிருப்பானோ?

பொருளாதார நிலையில் மேல்தட்டு வர்க்கமாக இருப்பவர்களை கால்தூசியாக நடத்திய பாட்டியின் செயலில் வருத்தம் வந்தது.

ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களில் அனைவருக்கும் இன்னும் பொடிசியாகவே (சிறுகுழந்தையாக) இருப்பவளை யார் மதிப்பார்?

யாரிடமும் எதுவும் கேட்கும் நிலையில் தானில்லை என்ற உண்மை சுட அமைதியாக படுக்கையில் வந்து படுத்திருந்தாள்.

இத்தகைய மரியாதைக்குறைவான செயலுக்குப் பின்னும் தன்னை அழைத்துப் பேசுவானா?

அழைக்காவிட்டால் அன்றைய தினம் தனக்கு நிறைவைத் தராதே எனும் உண்மை உலுக்க உயிர் வலி வந்தது.

அழைப்பானா? இல்லை தான் அழைத்தால் அழைப்பை ஏற்பானா? என்ற எண்ணமே மனதைக் குழப்ப…

படுக்கையில் படுத்து இருபது நிமிடங்களில் அழைத்திருந்தான், அரவிந்தன்.

அலைபேசியில் அரவிந்த் என ஒளிற, கண்ணில் மின்னல் மின்ன

அழைப்பை எடுத்தவள்,

“சாரி… மச்சி”, என்றாள். விசாவின், வார்த்தைகளை உள்வாங்கியவனுக்கு… சற்று முன்பு வரை அவர்கள் வீட்டின் ரணகளமில்லா அமைதியில் கோவிலில் நடந்ததை மறந்திருந்தவன் இவளின் சாரி எதற்கு என்று சட்டென புரியாது பதில் பேசவில்லை.

“…”

“சாரி… மச்சி”, மீண்டும் அதையே கூறிய விசாலினியின் பேச்சின் நுனி உணர்ந்தான். கோவில் விடயம் நினைவில் வர…

“எதுக்கு?”, தெரியாதது போல கேட்டிருந்தான்.

“எல்லாத்துக்கும்”

“ஷாலு, அங்க என்ன நடக்குது?”

“எனக்கு ஒன்னுமே புரியல”

“எல்லாரும் எப்டி இருக்காங்க?”, இயல்பான அவன் பேச்சின் தன்மை புரிய

“அமைதியோ அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதி”, இலகுவாக பேச ஆரம்பித்திருந்தாள் பெண்.

“இங்கதான் அப்டினா…”,அரவிந்தன் சொல்லி முடிக்கும் முன்

“அங்கயுமா?”,என ஆச்சர்யமாக வினவினாள்.

“அதையேன் கேக்குற… உங்க பாட்டி நடந்துகிட்டதுல எனக்கு கோவமே வந்திருச்சு, அத நான் என்ன மரியாத தெரியாதவங்களா இருக்காங்கனு சொல்லப் போக…

எங்கப்பா என்னைப் பாத்து…

உனக்கு நடந்தது எதுவும் தெரியாம குதிக்காத… இது கோவில்… அமைதியா வீட்டுக்கு கிளம்பு… அங்க போயி எதுனாலும் பேசிக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்தாரு…

ஆனா எங்க அம்மா வீடு வர்ற வற வாயே திறக்கல… கோவில்ல இருந்து வந்து ரெண்டுபேரும் அவங்க ரூமுக்குள்ள போனவங்க தான், நைட் டின்னர் கூட ஸ்கிப் பண்ணிட்டு வெளிய வரவேயில்ல…

நீ வீட்ல கேட்டியா?”, வீட்டின் நிகழ்வுகளை அவளிடம் மறையாது கூறியிருந்தான்.

“சாரி… பாட்டி பெரியவங்க… அந்த இடத்துல அவங்க அப்டி நடந்துகிட்டதுக்கு எதாவது சரியான காரணம் இருக்கும். அந்த மாதிரி நடந்ததுக்கு நான் வருத்தப்படறேன்.  ஆனா பாட்டி எப்பவும் அப்டி நடக்கமாட்டாங்க”, உண்மையான வருத்தம் அவளின் வார்த்தைகளில் புரிய

“யாருக்கிட்டயும் இது பத்தி கேக்கலயா?”

“அம்மா, பெரியம்மாவுக்கு எதுவும் தெரியல”

“என்ன சொல்ற?”, ஆச்சர்யமாகக் கேட்டான்.

“ஆமா, அப்பா ரூம்ல போயி அப்பானு கூப்டா கூட ரெஸ்பான்ஸ் இல்ல, வீடே ஒரே அமைதியா இருக்கு”

“பாட்டிகிட்டயே கேக்க வேண்டியதுதான”

“எங்க… வந்தவுடனே ரூமுக்குள்ள போனவங்கதான், பாட்டி ஒரு வேல வந்து உண்மைய சொல்லுவாங்களா இல்ல… அவங்களும் எதுவும் சொல்லலனா… எனக்கு என்னனு தெரிஞ்சுக்காம தலையே வெடிச்சிரும் போல இருக்கு”

“என்னதான் இவங்களுக்குள்ள அப்டி நடந்திருக்கும்?”

“தெரியலயே?”

“எனக்கு நீ மாமன் மகளா இருத்திருக்கலாம்”

“இருந்தா என்ன செய்யப் போறீங்க?”, இடக்காகக் கேட்டிருந்தாள்.

“எதுவும் செய்ய மாட்டேன், அப்பனா எதுவும் பேசாம கல்யாணம் பண்ணி வச்சிருவாங்கல்ல”

“சோகமா சொல்ற மாதிரி இருக்கு? எப்டினாலும் மாமான்னு தான எங்கப்பாவ கூப்டுவீங்க”, லாஜிக் லா பேசினாள்.

“ஆமா… ஆனா அப்டி ரிலேடிவ்வா இருக்க வாய்ப்பு கம்மிதான் ஷாலு”

“எத வச்சு சொல்றீங்க?”

“ரொம்ப வருசம் முன்ன ஒரு முறை எங்கம்மாவுக்கு நேடிவ் வேலூர்னு சொல்லிருக்காங்க, வேற எதுவும் எனக்கு தெரியாது, ஆனா உங்க நேடிவ் நாமக்கல் தானா?”

“ஆமா, ஆனா நாமளா எதுக்கு மண்டைய உடைச்சுக்கணும். இந்த விசயத்த இன்னும் எத்தன நாளுக்கு மறைக்க முடியும்? எப்டினாலும் வெளிய வந்துதான ஆகணும், அன்னிக்கு அவங்ககிட்டயே கேட்டுக்குவோம்”

“அப்ப அதுவர வயிட் பண்ணப் போற?”

“ஆமா”

“அப்ப உனக்கு கல்யாணம் வேணாமா?”

“வாய வச்சிக்கிட்டு சும்மா இருங்க”

“வலின்னு சொன்னா வார்த்தைக்கு வலிக்குமா?”

“தெரியாம சொல்லிட்டேன், வாபஸ்”

“எஸ்கேப் ஆகறதுல கில்லாடியா இருக்க”

“பேஸ்கட் பால் பிளேயர் அப்டிதான் இருப்பாங்களாம்”

“நான் அப்டியில்லயே?”

“அது ஏதோ மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட்டாம்”

“எங்கம்மாவ இப்பவே குறை சொல்ற”

“எதுக்கு இப்ப ஆண்ட்டிய லிங்க் பண்ணி விடறீங்க”

“நான் எங்க லிங்க் பண்ணேன், கல்யாணம் ஆகிட்டா நீதான் மறு மகள்னு ஸ்ட்ராங்கா கனெக்ட் ஆகப்போற”

“டபுள் மீனிங்க்ல ஏதோ சொல்ற மாதிரி தெரியுதே”

“கண்டுபிடியேன் யாரு வேண்டாங்குறா… அப்டி எங்க வீட்டுக்கு வந்துட்டா ஒரேடியா மாமின்னு உருகாம… என்னைய கொஞ்சம் கவனிச்சுக்க ஷாலு, புதுசா அத்தைய கண்டுட்டேன்னு அங்கயே டேரா போட்ற கூடாது.  ஆமா சொல்லிட்டேன்… அத்தைனு பாசப்பயிரு வளக்கப் போன… அவ்ளோதான்”

“உங்க கற்பனைக்கு அளவேயில்லாம போகுது”

“கேக்கும் போது சிரிக்கிற தான, என்னமோ நாரகாசமா பேசற மாதிரி பேசற, கற்பனைய கழிசடை ரேஞ்சுக்கு பேசாத”

“முடியல சாமி, என்னை விடுங்க”

“உன்ன புடிச்சா வச்சிருக்கேன்”

“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கலயா?”

“ஏன்டி, ஏன்? நல்லாதான இருந்த இவ்ளோ நேரம்… எல்லாம் என் நேரம்…

ஒரு நாள் இரண்டு நாள் இல்ல… ஏழு வருசம்…

ரெண்டாயிரத்தி எண்ணூறு நாளுக்கு மேல…

என்னோட ஒவ்வொரு செல்லுலயும் பதிஞ்சு இருக்குற உன்னய பிடிக்கலனா…

இந்த உலகத்துல எனக்குன்னு எதுவுமே பிடிக்காம போயிருக்கும்”

“கூல் மச்சி”

“எல்லாம் பேசிட்டு, அப்டியே மச்சினு ஆஃப் பண்ணு”

“ஸ்விட்ச் எங்க இருக்கு, ஆன் பண்ணணுமே?”

“அல்ரெடி ஆன்ல தான் இருக்கேன். ஸ்விட்ச் எங்கனு தெரியணும்னா நேருல என் ரூமுக்கு வா… காட்டறேன்”

“நான் வரும்போது கேட்டுக்குவேன்”

“எவ்ளோ நாளு தான் தெளிவா இருக்கேனு நானும் பாக்கறேன்”

“பாருங்க மாஸ்டர்”

“மாஸ்டர் வேணாம், அத்தான்னு சொல்லு”

“ஏன்?”

“கேள்வி கேக்காம என்னிக்காது சரினு சொல்றியா?

“ம் சரி சொல்றேன், ஆனா எதுக்குனு சொல்லுங்க”

“ஒரு கிக்கு குதான்”

“இதுல என்ன கிக்?”

“அது உனக்கு புரியாது”

“வேற ஏதும் உள்குத்து இருக்கா?”

“மீனிங்ஃபுல் வர்ட் அது, அதனால சொல்லச் சொன்னேன்”

“அப்ப என்ன மீனிங்னு சொல்லுங்க”

“ஆஃப்டர் மேரேஜ் சொல்றேன்”

“அய்யோடா, அதுவே இப்ப அந்தரத்துல நிக்குது?”

“அது நடக்கும் போது நடக்கட்டும்.  ஆனா நாம தரைல தான நிக்கிறோம்”

“சரியா சொல்லுங்க மச்சி… இப்ப நிக்கறோமா… இல்ல…”

“சொல்ல வந்தத முழுசா சொல்லு ஷாலு, பாதில விட்டா அதுல நான் எதையாது ஃபில் பண்ணி, அப்புறம் ஃபீல் பண்ணி… இதெல்லாம் எதுக்கு?”

“முடில மச்சி”

“என்ன செய்யுதுடீ?… வரவா…”

“என்னது டீயா?”

“ட்டீயா இல்ல காஃபியானு பட்டிமன்றம் வைக்கலாம். வா கிளம்பி…”

“…”

“ஏய், லைன்ல இருக்கியா இல்லயா?”

“இருக்கேன்…”

“ட்டீயா நீ, இல்ல காஃபியா, சொல்லு”

“என்ன கேக்கறீங்க… எனக்கு குடிக்கப் பிடிக்கறத கேக்கறீங்களா?”

“அறிவின் சிகரமே, ஒன்னுமே தெரியாம உன்ன வச்சிக்கிட்டு நான் படற பாடு இருக்கே… கடவுளே என்னக் காப்பாத்துப்பா”

“என்ன ரொம்ப டீஸ் பண்றீங்க”

“சரி தூங்குவோமா?”

“ம்…”

“ஷாலு ஏன் ஆஃப் மோட் போயிட்டா?”

“தெரியல”

“சரி போயி தூங்கு, எதப் பத்தியும் வொரி வேணாம், உன் அத்தான் அத்தனையையும் பாத்துக்குவேன், குட் நைட், டைட் ஸ்லீப்”, என அன்றைய செட்யூலை முடித்து இருவரும் ஓய்விற்காக படுக்கையை நாட, இருவராலும் உறங்க இயலாமல் அன்றைய நிகழ்வே அவர்களின் சிந்தனையை நிறைத்திருந்தது. அவர்களின் இரவை… வானமும் வேடிக்கை பார்த்திருந்தது.

 

அடுத்த நாளும் அதே போன்று இருக்க, விசாலினிக்கு என்னங்கடா இது ஆகக் கொடுமையா இருக்கு என எண்ணியபடி பள்ளிக்கு கிளம்பிவிட்டாள்.

பள்ளியில் இருக்கும்போது இடையில் விசாவின் பெரியம்மா கயல்விழி அழைத்திருந்தார்.  தாத்தாவின் உடம்பிற்கு முடியாததால் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பயப்படும்படியாக ஏதும் இல்லாததால் பள்ளி முடிந்து நேராக அங்கு வந்து விடுமாறும் கூறிவிட்டு வைத்தார்.

அன்று இரவு அரவிந்தனின் அழைப்பு வருமுன்னே, அவனின் அலைபேசிக்கு ‘தாத்தாவிற்கு உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதி’ என டெக்ஸ்ட் செய்திருந்தாள்.

 

தாத்தா ஒரே நாளில் மிகவும் ஓய்ந்து தெரிந்தார்.  அழகம்மாள் அமைதியாக கணவரின் அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.

எதிர்பாரா அதிர்ச்சி காரணமாகவும், குளிர்காலம் என்பதாலும் சற்றே மூச்சுத் திணறலுடன், பீப்பீயும் கூடியிருந்தது.  ஆகையால் வயதைக் காரணம் காட்டி மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க பணித்து, மூன்றாவது நாள் மாலையில் டிஸ்சார்ஜ் செய்திருந்தனர்.

பள்ளியில் இருந்து வந்தவளை ஹாலில் அமர்ந்திருந்த அழகம்மாள் அழைத்து பேசினார்.

“பொடிசி இங்க வா”

“என்ன பாட்டி”

“உனக்கு இந்தப் பாட்டி எது செஞ்சாலும் அது உன் நல்லதுக்குதான்னு எம்மேல நம்பிக்கை இருக்கா?”

“இருக்கு பாட்டி”

“அப்போ உனக்கு வேற மாப்பிள்ளை பாப்போம்மா”, என்றவர் அதற்குமேல் பேத்தியிடம் எதுவும் பேசாமல் தாத்தா படுத்திருந்த அறைக்குள் சென்றுவிட்டார்.

உலகமே தட்டாமாலை சுற்ற ஹாலிலேயே அமர்ந்துவிட்டாள், விசாலினி.

விசாலினியிடம் அழகம்மாள் பேசியதைக் கேட்ட அனைத்து பெரியவர்களும், அவளை தனியே விட்டு விட்டு அங்கிருந்து அகன்றிருந்தனர்.

ஏன்? எதனால் என்று, எதைப்பற்றியும் பாட்டியிடமும் கேட்க இயலாத நிலை.  அரவிந்தனின் அழைப்பை ஏற்று பதில் பேசக் கூட முடியாத சூழல்.

என்னவென்று பேசமுடியும்? என் பாட்டி எனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அதனால் இனி உன்னுடன் பேசமுடியாது என்றா?

ஆனால் விடயம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் தனது தந்தையை அணுகினாள், விசாலினி.

“டாட், வெளியே போயிட்டு வருவமா?”

மகளின் மனநிலை உணர்ந்தவர், அவளின் மனம் தெளிவாக வேண்டி சரியென்று கிளம்பியிருந்தார், கிருபாகரன்.

 

இருவரும் வழமை போல சென்று வரும் இடங்களுக்கு நடந்தே  சென்றனர்.  பொதுவான விடயங்கள் பேசியபடியே வந்தவள், வீட்டை நெருங்கும் முன் “டாட், அரவிந்த வேணானு சொல்றதுக்கு எனக்கு ரீசன் தெரியணும். எங்கிட்ட சொல்லலாமா…? பாட்டீ எதனால அவர வேணானு சொல்றாங்கனு”

சற்று நேரம் மௌனமாக யோசித்தவர்,“சொல்றேன்டா”

“எப்போ டாட்?”

“…”

“வீட்டுக்கு போனவுடனே சொல்லுவீங்களா?”

“ம்…”, சத்தியம் வாங்காத குறையாக தந்தையிடம் பேசி சம்மதம் சொல்ல வைத்திருந்தாள்.

தந்தை கூறப்போகும் செய்திக்காக எதிர்பார்ப்போடு காத்திருந்தாள், விசாலினி.

வீட்டிற்கு வந்தவுடன் தாயின் அறைக்குள் தட்டிவிட்டுச் சென்ற கிருபாகரன், பத்து நிமிடங்களில் வெளிவந்திருந்தார்.

ஹாலின் சோபாவில் அமர்ந்திருந்த மகளின் அருகில் வந்தமர்ந்தவர், மகளிடம் காரணத்திற்கான நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்திருந்தார்.

அவரவர் பணிகளில் இது வரை ஈடுபட்டிருந்த, கற்பகம் மற்றும் கயல்விழியும், கிருபாகரன் கூறுவதைக் கேட்டபடியே ஆளுக்கொரு வாயிலின் தூணில் சாய்ந்து நின்றபடி கேட்டிருந்தனர்.

——————-

error: Content is protected !!