வானம் காணா வானவில்-7

அத்தியாயம்-7

மகளின் அருகில் வந்தமர்ந்த கிருபாகரன், தமது நினைவுகளில் பூட்டி வைத்திருந்ததை மகளிடம் கூற ஆரம்பித்திருந்தார்.

(1949-1970)

வடஆற்காடு மாவட்டம்.  அதாவது தற்போதைய வேலூர் மாவட்டம் தான் எங்க பூர்வீகம்.

எங்க பாட்டி பார்வதி அம்மா, அப்பவே மூணாங்கிளாஸ் படிச்சவங்க. தமிழ், ஆங்கிலம் எழுதப் படிக்க நல்லா தெரியும் அவங்களுக்கு.  அவங்களோட பூர்வீகம் தான் நாம இப்ப இருக்குற நாமக்கல்.

பாட்டிக்கு அப்பா ஒரு பிள்ளை தான்.  அப்பாவுக்கு படிக்கறதுனாலே ரொம்ப கஷ்டமா நினச்சதால அஞ்சாங்கிளாஸ்கு அப்புறம் ஸ்கூலுக்கு போகலயாம்.

அதுனால அப்பா ரொம்ப சின்ன வயசுலயே விவசாய வேலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம்.

அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிட்டதா சொல்லுவாங்க. அம்மாவோட பதினைஞ்சு வயசுலலாம் கருணா அண்ணன் பிறந்துட்டதா பாட்டி சொல்லிக் கேட்டுருக்கேன்.

வேணி அக்கா, கருணா அண்ணன், நான் எல்லாரும் வேலூர்ல இருக்கற பாகாயத்துல தான் ஆரம்பத்துல படிச்சோம். வீடும் அங்க பக்கத்துலதான். எங்களுக்கு விவரம் தெரிஞ்சு அங்கதான் குடியிருந்தோம்.

அப்பா விவசாயம் பாக்க,  அம்மாவும், பாட்டியும் வீட்ல மாடு, ஆடுன்னு வச்சு அத பாத்துக்கிட்டு அப்பாவுக்கும் விவசாயத்துல உதவியாவும் இருந்தாங்க.

விவசாயம் எப்பவும் அந்த ஊருல பொய்க்காது.  அதனால எந்த கஷ்டமும் தெரியாம தான் எங்கள வளத்தாங்க.

எங்க மூனு பேரயும் பள்ளிக்கு அஞ்சு வயசுல அனுப்புனாங்க.  நாங்களும் நல்லா படிச்சோம்.

எங்க வீட்டிலயே எங்க அக்கா மட்டும் தான் நல்ல கலரு.  பாட்டிக்கு அக்கான்னா ரொம்ப உயிரு.

அக்கா என்ன கேட்டாலும், அம்மா, அப்பா, பாட்டி மூனு பேரும் மறுப்பே சொல்லமாட்டாங்க.  நாங்களும் அக்காவுக்குன்னா எல்லாத்தையும் விட்டுக் கொடுப்போம்.

அக்காவும், பாட்டியும் ரொம்ப க்ளோஸ்.  எங்களல்லாம் எப்பவும் விரட்டிட்டே இருக்கறவங்க, அக்காவ மட்டும் எதுவுமே சொல்லமாட்டாங்க.

அக்கா பியூசி முடிச்சதும் மேல படிக்கணும்னு ஆசைப்பட்டாங்க.  அத யாரும் வீட்டுலயும் மறுக்கல. ஏன்னா அப்பதான் பக்கத்துலயே முத்துரங்கம்னு ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் ஆரம்பிச்சு இருந்தாங்க. அதுலயே அக்காவ படிக்க அனுப்பினாங்க. அந்த காலேஜ் வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல இருந்ததால, பாட்டியே அக்காவ காலேஜ் கூட்டிட்டி போயி விட்டுட்டு, விடற நேரத்துல போயி வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க.

அடுத்த வருசம், என் அண்ணன் பியூசி முடிச்சு காலேஜ் படிக்க சென்னை பிரசிடன்சி போயிட்டாரு.

அப்ப வேலூர்ல, CMC ஹாஸ்பிடல் வந்த ரொம்ப பிரபலம் ஆகலனாலும், கொஞ்சம் வசதியிருக்கறவங்கனு இல்லாம, இல்லாதவங்களும் அங்க பாக்க வந்துட்டே இருப்பாங்க.

தமிழ்நாட்டுல இருந்து வர பேஷண்ட்ஸ விட பக்கத்துல இருக்குற மாநிலங்கள்ல இருந்து வந்து மருத்துவம் பாக்கனு வரவங்க எண்ணிக்கை வருசத்துக்கு வருசம் கூடிட்டே இருந்தது.

சிலர் மருத்துவம் பாக்க வரும்போது, எடுத்துட்டு வந்த பணம் பற்றாக்குறை வந்தவுடனே, இங்கயே தனக்கு தெரிஞ்ச தொழில சின்னளவுல ஆரம்பிச்சு அவங்கவங்க ஜீவனத்தை பாத்துக்கிட்டாங்க.

சிலர் குணமான பின்னாடி அவங்க ஊருக்கு போயிருவாங்க. சிலர் இங்கயே செட்டில் ஆகிட்டாங்க.

அதனால் வெளி மாநிலத்தவங்களோட வருகை அதிகமாக ஆரம்பிச்சது.  அவங்க புள்ளைங்களும் இங்கயே படிக்க ஆரம்பிச்சாங்க.

பல வெளி மாநிலத்துக்காரவங்களும் வேலூர்ல செட்டில் ஆனதால இங்க தொழில் உள்ளவங்களுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தோட, ஹிந்தியும் எல்லாரும் பேசுவாங்க.

அந்த புள்ளைங்களோட படிச்சதாலயும், அக்காவோட ஆர்வத்துனாலயும் ஹிந்தி, தெலுகு, கன்னடமும் பேசறதுக்கும், எழுதப் படிக்க ஹிந்தியும் எங்க அக்காவுக்கு நல்லா தெரியும்.

அக்கா இங்க இருக்குற வர எப்பவும் சுறு சுறுப்பா பாட்டி, அம்மா, அப்பாவுக்கு உதவியா இருப்பாங்க.

கள்ளம் கபடம் தெரியாதவங்க. அனாவசியமா எங்கயும் வெளிய போக மாட்டாங்க.

பிரசிடன்சி போன எங்க அண்ணன், இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இங்க வந்துட்டு போவாரு.

முத வருசம் செமஸ்டர் முடிஞ்சு ஊருக்கு அண்ணன் லீவுல வரும்போது அவங்க ஃபிரண்ட்ஸ்ஸ வேலூர் கோட்டை, கோட்டையில் உள்ள திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி , தங்ககோயில், திருவண்ணாமலை எல்லா இடத்துக்கும் போகணும்னு சொன்னதால கூட்டிட்டு வந்திருந்தாரு.

வந்தவங்கள எல்லாம் நம்ம வீட்லதான் தங்க வச்சு, எல்லா இடத்தையும் அண்ணன் சுத்தி காமிச்சாரு.

அப்ப அண்ணங்கூட, அவருகூட காலேஜ்ல படிச்ச  சந்துரு அப்டிங்கறவரும் வந்திருந்தாரு. உண்மையில அவரு இங்க சுத்தி பாக்க வரல.  அது எங்க அண்ணனுக்கும் அப்ப தெரியாது.

ஏற்கனவே அவங்கப்பா சென்னைலயும் பிஸினஸ் பண்ணிட்டு இருந்தாங்க.  ஆனாலும் இங்க பிஸினஸ் ஆரம்பிக்கிற ஐடியா அவங்க அப்பாவுக்கு இருந்திருக்கும் போல.  அத மனசுல வச்சு, சந்துருவ இந்த ஊரு எப்டி இருக்குனு பாத்துட்டு வர சொல்லி அனுப்பினதால விசிட் வந்திருந்திருக்காரு.

அக்கா இங்க ஃபைனல் இயர் படிக்கும் போது, நானும் சென்னை, YMCA காலேஜ் ஆஃப் பிஸிக்கல் எஜூக்கேசன்ல B.P.Ed ஜாயின் பண்ணிருந்தேன். அப்ப அக்கா மட்டும் இங்க அம்மா, அப்பா, பாட்டி கூட இருந்தாங்க.

இதுக்கு இடையில இங்க வந்துட்டு போயி ஆறு மாசத்துல சந்துருவோட அப்பா இங்க புது பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காரு.  அதுக்கப்புறம் சந்துரு இங்க அடிக்கடி வந்து போயிருக்காரு.  ஆனா  எங்க வீட்டுக்கு வந்ததில்ல.

ஏன்னா நானும், அண்ணாவும் சென்னைல தான் அப்ப படிச்சிட்டு இருந்தோம்.

அடுத்த வருசம் அக்கா யுஜி முடிச்சு, பிஜிக்கு சென்னையில சேத்துவிட சொல்லி பாட்டிகிட்ட கேட்டாங்க.  முதல்ல மறுத்த பாட்டி, அப்புறம் சரின்னு சொல்லி, அவங்களயும் சென்னைல காலேஜ்ல சேத்துவிட்டாங்க.

அக்கா சென்னை வரும் போது, நான் செகண்ட் இயர்லயும், அண்ணான் ஃபைனல் இயரும் படிச்சிட்டு இருந்தோம்.

மூனு மாசத்துக்கு ஒரு தடவ மட்டும் வேலூருக்கு அக்கா வந்துட்டு போவாங்க.

ஆனா நானும், அண்ணனும் ஒரு வாரம் விட்டு அடுத்த வாரம் இங்க ஊருக்கு யாராவது வருவோம். அப்ப பாட்டி எதாவது அக்காவுக்கும் செஞ்சு, அவங்களுக்கு குடுக்கச் சொல்லி எங்ககிட்ட குடுத்து விடுவாங்க.

நானும் அண்ணனும், வேற, வேற வாரங்கள்ல வந்து போறதால ஒவ்வொரு முறையும் எதாவது அக்காவுக்கு எடுத்துட்டு போவோம்.  நான் வந்துட்டு போகும் போது கொடுத்து விடறத எல்லாம் நானே அக்காகிட்ட ஹாஸ்டல்ல போயி நேருல குடுத்துருவேன்.

ஆனா, ஒரு முறை போக முடியலனு அண்ணா, சந்துரு அவருகிட்ட கொடுத்து விட்ருக்காரு.

அதுக்குப் பிறகு, ‘ஏன் கருணா நீ வீணா அலையற எங்க வீட்டுக்கு போற வழியிலதான உங்க அக்காவோட ஹாஸ்டல் இருக்கு. அதனால் நீ எடுத்துட்டு வரத நானே குடுத்துடறேன்னு அதுக்கப்புறம் ஒரு வாரம் விட்டு மறுவாரம் சந்துருதான் ஹாஸ்டல் போயி குடுத்திருக்காரு’

இப்டியே நாளு போயிட்டு இருக்க, அக்காவுக்கும் எனக்கும் ஒரே சமயத்துல எக்ஸாம் முடிய இருந்தது. ஃபைனல் பிஜி எக்ஸாம் முடிஞ்சு அவங்க ஹாஸ்டல் திங்க்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி கூட்டிட்டு வரதுக்காக நான் அக்காவோட ஹாஸ்டல் போனேன்.

ஆனா, அங்க அதுக்கு முன்னாடியே அக்கா வகேட் பண்ணதா சொல்றாங்க. என்னனு கேட்டா பெரியவரு வந்து நேருல வகேட் பண்ணி கூட்டிட்டுப் போனதா அங்க வார்டன் சொல்றாங்க.  யாரு என்னனு கேட்டா ‘போஸ்’னு சைன் பண்ணியிருக்கு ரெக்கார்ட்ஸ்ல. நான் ரொம்ப பயந்து, அண்ணன நேருல பாத்து விசயம் சொன்னேன்.

அதோட ரெண்டு பேரும் சேந்து சந்துருவ சந்திக்க முயற்சி பண்ணோம்.  ஆனா அவங்க வீடு தெரிஞ்ச சிலரும் நாங்க ஏதும் பிரச்சனை பண்ணுவோம்னு சொல்லல. அப்போ போன் எல்லாம் போஸ்ட் ஆபிஸ்ல மட்டும் தான் இருந்தது.  எதுனா லெட்டர் தான் போடணும்.

விசயத்தை வீட்டுக்கு சொல்லணும்னு இருந்தாலும், எப்டி சொல்றதுனு ஒரே குழப்பம்.

எங்கண்ணன் ரொம்ப மனசு உடைஞ்சுட்டாரு.  ‘வயசுல சின்னவன்னு நினச்சுதான் அவங்கிட்ட வீட்டுல இருந்து எடுத்து வந்த திங்ஸ்ஸ அக்காகிட்ட குடுக்கச் சொல்லி குடுத்து விட்டேன்னு’, ஒரே புலம்பல்.

எப்டி இந்த விசயத்த வீட்ல சொல்றதுன்னு இரண்டு நாள் கழிச்சு தான் அங்க இருந்து கிளம்பி வந்தோம்.

வீடே ஒரே சோகமா இருந்தது. என்னனு கேக்குமுன்ன, பாட்டியே அவங்க கைல வச்சுருந்த லெட்டர எங்ககிட்ட குடுத்தாங்க.

அதுல,

‘பாட்டிக்கு பேத்தியின் கோடானு கோடி நமஸ்காரங்கள்.

அம்மா, அப்பாவிற்கு எனது அன்பான வணக்கம்.

பரீட்சை முடிந்துவிட்டது.  என்னை சந்திரபோஸ் மணக்கக் கேட்டதால் அவர் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் வீட்டிற்கு செல்கிறேன்.

யாரும் என்னை விடுதிக்கு அழைக்க வர வேண்டாம்.

நான் எனது திருமண வாழ்வை சந்திரபோஸூடன் தொடங்கப் போகிறேன்.

தங்களின் வாழ்த்துகளை வேண்டி இக்கடிதத்தை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எனது செயல் தங்களனைவரையும் வருந்தச் செய்யும் என்பது தெரிந்தாலும், தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை.

இத்தனை ஆண்டுகளாக என்னை அரவணைத்த  பாட்டி, மற்றும் பெறாத மகளை பெற்ற மகளைப் போல வளர்த்தெடுத்து உரிய கல்வியையும் தந்த அன்பான உள்ளங் கொண்ட அப்பா, அம்மா உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.

நன்றி சொல்லி… எமை ஆளாக்கியவர்களை தூரத்தில் நிறுத்தும் துர்பாக்கியத்தை கொடுத்த ஆண்டவனை அறவே வெறுக்கிறேன்.

பண்பான தம்பிகளை விட்டுச் சென்றது மட்டுமே என் கண்களின் நீரை வற்றச் செய்தது.

பாசத்தில் விவாத மேடைகளே பதுங்கும், அத்தகைய எனது அருமையான தம்பிகளை வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இப்படிக்கு நீலவேணி’

 

அப்டினு அந்த தபால்ல இருந்தது.

என்னைப் பாத்தவுடனே பாட்டி திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சாங்க.

‘இத்தனை ஆண்டுகளாக என்னை அரவணைத்த  பாட்டி, மற்றும் பெறாத மகளை பெற்ற மகளைப் போல வளர்த்தெடுத்து உரிய கல்வியையும் தந்த அன்பான உள்ளங் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பலப்பல.

நன்றி சொல்லி… எமை ஆளாக்கியவர்களை தூரத்தில் நிறுத்தும் துர்பாக்கியத்தை கொடுத்த ஆண்டவனை அறவே வெறுக்கிறேன்.’

அப்டிங்கற வார்த்தைகளை திரும்பத் திரும்ப வாசிச்ச பாட்டி, ரொம்ப வருத்தப்பட்டாங்க.  அப்பவும் சபிக்கல…

இந்த விசயம் எங்களுக்குப் புதுசு.  ஆனா பாட்டி இதப் பத்தியே சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டாங்க.

அனைவருக்கும் நன்றினு எழுதியிருக்கான்னா, ஆதரவில்லாத அவள எடுத்து வளத்தோம்கிறது அவளுக்கு யார் மூலமா தெரிஞ்சிருக்கும்னு ஒரே புலம்பல்.

இந்த விசயம் எனக்கும், எங்கண்ணனுக்கு மட்டும் தெரியாது.

அப்பதான் எங்க பார்வதி பாட்டி அக்காவ பத்தி எங்ககிட்ட சொன்னாங்க.

——————

அப்ப, எங்கம்மா கருணா அண்ணன நிறைமாசமா இருந்தாங்களாம். ஃபர்ஸ்ட் டெலிவரினால அவங்கம்மா ஊரான திண்டிவனம் போயிருந்தாங்களாம்.

வேணி அக்கா, எங்க வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி, வேலூர் பக்கத்துல 12 கிமு தூரத்துல இருக்கிற கிராமத்துல தான் எங்க குடும்பம் அப்ப இருந்தாங்களாம்.

அவங்க கிட்ட இருந்த சொற்ப நிலங்கள்ல விளையற காயெல்லாம் வேலூர்ல கொண்டு போயி பாட்டி விக்கப் போவாங்களாம்.

அப்படி ஒரு நாள் விக்கறதுக்காக போயிருந்தப்போ, ஒன்னே கால் வயசு மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்னு அழுதிட்டே ஒரு இடத்துல நின்னு இருந்திருக்கு.

அப்ப ரொம்ப நேரமா யாரும் குழந்தைய கவனிக்காம, தூக்காம இருக்கறத… எங்க பாட்டி பாத்துட்டு…

பக்கத்துல எல்லார்கிட்டயும் விசாரிச்சு இருக்காங்க.

‘யாரும் குழந்தையோட வந்தவங்க இங்க தெரியாம விட்டுட்டாங்களா?’ அப்டீனு…

அங்க இருந்தவங்களுக்கு எதுவும் தெரியலனு சொல்லவும், அக்காவ தூக்கிட்டு வந்த பாட்டி, பசிக்காக அழுகுறாங்கனு சாப்ட குடுத்தவுடனே, அக்கா தூங்கிட்டாங்களாம்.

சாயந்தரம் வீடு வர வர்ற… யாரும் குழந்தைய தேடி அங்க வரவே இல்லையாம். அதோட அந்த குழந்தையோட வீட்டுக்கு வந்துருக்காங்க.

வீட்டுக்கு வந்தவுடனே, அப்பாகிட்ட விசயத்த சொல்லியிருக்காங்க.

அப்பா நான் இப்ப என்ன செய்யணும்னு பாட்டிகிட்டயே கேக்க,

பெண் குழந்த ஒன்னு ரோட்டுல ஆதரவில்லாம அழுதுட்டு இருந்தது. இது வர யாரும் குழந்தைய தேடி வரலனு சொல்லி குழந்தைய போலீஸ்கிட்ட ஒப்படைக்க சொல்லி அக்காவயும் அப்பா கைல குடுத்து விட்ருக்காங்க…

உடனே அப்பாவும் கிளம்பிப் போக,

விசயத்தைக் கேட்ட போலீஸ், ‘அப்டி யாரும் குழந்தைய தேடி வந்தா உங்கட்ட இருக்கற குழந்தைய வாங்கி நானே குடுத்தறேன்.  அது வர நீங்களே குழந்தைய வச்சிருங்கனு சொல்லிட்டு, அப்பாகிட்ட வீட்டு அட்ரஸ் மட்டும் வாங்கிட்டு அனுப்பிட்டாராம்’

போலீஸ் சொன்னத கேட்ட அப்பா, குழந்தையோட வீட்டுக்கு திரும்பி வந்துட்டாராம்.

நாளு… வாரமாகி… வாரமும்… மாசமாகி போச்சாம்.

ஆனா யாரும் தேடி வரவே இல்ல.  போலீஸூம் வந்து குழந்தைய வாங்கிக்கல.

அப்றம் இரண்டரை மாசம் கழிச்சு வந்த போலீஸ், ‘குழந்தையோட அப்பா வடமாநிலத்தைச் சேர்ந்தவர்.  அவருக்கு முடியலனு வேலூர்கு ட்ரீட்மெண்ட் வந்த இடத்துல அந்தக் குழந்தையோட அம்மா எப்டி மிஸ்ஸானாங்கனு இங்க யாருக்கும் தெரியல.

ட்ரீட்மெண்ட்ல இருந்த குழந்தையோட அப்பா தற்போதைக்கு டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டாருன்னு ஹாஸ்பிடல்ல சொல்றாங்க.

அப்டீனு சொல்லிட்டு உங்களுக்கு சிரமம்னா ஏதாவது சர்ச் கூட இணைஞ்சு இருக்குற ட்ரஸ்ட்ல குழந்தைய சேத்துரலாம்னு கேட்டாராம்.

பாட்டி தான் ‘இல்ல நாங்களே வளக்குறோம்னு சொல்லி’ போலீஸ அனுப்பி வைச்சுட்டாங்களாம்.

 

டெலிவரிக்கு போன அம்மா, அண்ணனோட இங்க வந்து பாத்தா அக்கா இருந்தாங்களாம் வீட்ல.

ரொம்ப குழந்தையா இருக்கும்போதே சொல்றத கேட்டு அமைதியா இருப்பாங்களாம்.

அக்கா இங்க வீட்டுக்கு வந்த பின்ன நிறய நிலபுலன்லாம் வாங்கனாங்களாம். அவங்க வீட்டுக்கு வந்த ராசிதான் நல்லா பெருகுதுனு எல்லாருக்கும் அவங்கள தலையில தூக்கி வைக்காத குறையா வச்சிருந்ததா சொல்லுவாங்க.

அதுவர அங்க கிராமத்துல இருந்தவங்க, எங்கள படிக்க வைக்கணும்னு ‘பாகாயம்’ வந்துட்டாங்களாம்.  அதுக்கப்புறம் அப்பா, அம்மா, பாட்டி மட்டும் தான் அங்க அடிக்கடி கிராமத்துக்கு போயிட்டு வருவாங்க. நாங்க அங்க போனதில்ல.

அண்ணன் பிறந்த அடுத்த வருசமே நான் பிறந்தாலும் அப்பா, அம்மா, பாட்டி மூனு பேரும் வித்தியாசம் பாக்காமதான் எங்க மூனு பேரயும் வளத்தாங்க.

—–

அக்கா போயி ஒரு மாசம் போன அப்புறம், ஒரு நாள் அப்பாவ எதேச்சயா பாத்த அந்த போலீஸ் ‘என்னயா அந்த பொண்ண நல்லா வளத்து, காலேஜ் எல்லாம் படிக்க வைக்குறீரு போலன்னு’ கேட்க,

‘அது எப்டீங்கய்யா உங்களுக்கு தெரியும்.  யாரு சொன்னாங்கனு’ அப்பா கேட்டாராம்.

அப்ப தான்.. அக்கா இங்க முத்துரெங்கன் காலேஜ்ல படிக்கும் போது சந்திச்சுப் பேசுனது எங்களுக்கும் தெரிஞ்சது.

காலேஜ்ல பசங்களுக்கிடையே நடந்த சண்டைய தீத்து விட போயிருந்தவர் அக்காவ பாத்து ‘நீ இங்க யாரு வீட்டுப் புள்ளனு’ கேட்டதாகவும், அக்கா சதாசிவம் பொண்ணுன்னு சொன்னதுக்கு, அந்த போலீஸ் ‘யாரு அந்த பார்வதியம்மா மகன் சதாசிவமா’ன்னு கேட்க, அக்காவும் ‘ஆமா’னு சொல்ல…

‘ஓஹ் அது நீதானா… இவ்வளவு பெரிசா அதுக்குள்ள வளந்துட்டியே…

நேத்துதான் உன்ன ஸ்டேசன்ல வச்சு குழந்தையா பாத்த மாதிரி இருக்கு

அதுக்குள்ள இத்தன வருசம் ஓடி போயிருச்சே…

அவங்க குடும்பம் மட்டும் இல்லனா இன்னிக்கு நீ இங்க இல்லமா, அவங்க தான் ஆதரவில்லாம ஒரு வயசுக் குழந்தையா தெருவில நீ நின்னப்ப எடுத்து வளத்து உன்ன இந்தளவுக்கு ஆளாக்கியிருக்காங்கனு சொன்னாராம்’

இத கேட்ட அப்பா,  ‘சென்னைல, அதுக்குப் புடிச்ச பையன கல்யாணம் பண்ணிக்கிச்சு’னு போலீஸ்கிட்ட சொல்லிட்டாராம்.

அதுக்கு அந்த போலீஸூம், ‘அவங்கம்மாவ காணோம்னு விசாரிச்சப்பவும், இப்டி தான் சொல்லிக்கிட்டாங்க, சதாசிவம்.  ஆனா ஃப்ரூவ் இல்லாததால அப்ப நான் அதப்பத்தி உங்ககிட்ட சொல்லாம மறச்சிட்டேன், மன்னிச்சிருங்கனு’ சொல்லிட்டு போயிட்டாராம்.

அதக் கேட்டு பாட்டிக்கு விசயம் தெரிஞ்சாலும், ‘வளத்த கடா மாறுல பாஞ்சது’னு சொல்றமாதிரி ‘இப்டி பண்ணிட்டாளே… எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டுமுன்னு’ பாட்டி ரொம்ப புலம்புனாங்க. இப்டி ஒரு காரியத்த அவங்க செஞ்சத எங்க பாட்டியால மட்டுமில்ல எங்க யாராலும் ஏத்துக்க முடியல.

பக்கத்துல இருந்தவங்களும் இரண்டு மாசத்துல ‘எங்க… வேணிய ரொம்ப நாளா ஆளக் காணாம்னு?’ கேக்க ஆரம்பிக்க, என்ன சொல்றதுன்னே தெரியல… எங்களுக்கு…

அவங்கவங்க விருப்பம் போல வெளியில பேச…

‘வேணி போனதுல இருந்த வருத்தம் ஒரு புறம் இருக்க, அதைவிட இவங்க பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு. இங்க இருக்கற வர அவள பத்தின நினைவு எனக்கு குறையாது.  அதனால் எங்க அம்மா ஊரான நாமக்கல் பக்கமா இருக்கற கிராமத்துக்கு போறேன்’னு  எங்க பாட்டீ கிளம்பினாங்க.

அதோட எல்லாரும் அவங்களோட அங்கயே ஷிப்ட் ஆகிட்டோம். அங்க போனவுடனே அண்ணனுக்கு அங்க ஸ்கூல்ல வேல கிடைக்க அப்டியே அங்கயே இருந்தாச்சு… பாட்டியும் நாள் போகப் போக எல்லாத்தையும் மறந்துட்டு நார்மலா ஆகிட்டாங்க. அதுக்கும் பிறகு அண்ணனுக்கு வரன் பாத்து ஆறு மாசத்துல கல்யாணம் பண்ணாங்க. அடுத்த வருசத்துலயே எனக்கும் உங்கம்மாவுக்கும் கல்யாணம் பண்ணிட்டாங்க.

கூறி முடித்தவுடன், முடிந்தது எனும்படியாக அங்கிருந்து எழ…

தனது தந்தை கூறியதை இதுவரை அமைதியாகக் கேட்டிருந்த விசாலினி, “இன்னும் உங்க யாருக்கும் அவங்க மேல இருக்குற கோபம் போகலை.  அப்டிதானேப்பா…“, மகளின் கேள்வியில் நின்றவர்

இது என்ன கேள்வி என கற்பகமும், கயல்விழியும் மகளைப் பார்த்திருக்க

அறைக்குள்ளிருந்து மெதுவாக வந்த அழகம்மாள்

“அவமேல கோபப்பட நாங்கள்லாம் யாரு?”, என்ற தாயின் பதிலில் கிருபாகரன் அங்கிருந்து அகன்றிருந்தார்.

“அப்ப அன்னிக்கு அவங்ககிட்ட முகம் குடுத்துப் பேசாம கிளம்பி வந்தீங்க”,விசாலினி

“ஆமா, முகம் குடுத்து பேசலதான்.  அதுக்கு கோவம் காரணம்னு யாரு சொன்னது. நெஞ்சுல கத்தியால குத்துனவங்ககிட்ட பேசலாம்.  ஆனா முதுகுல குத்தினவங்ககிட்ட என்ன பேச சொல்ற?”

“…”

“பொடிசி… பாட்டி கேக்கறதுக்கு மறைக்காம ஒரு பதில் சொல்லணும்.  சொல்லுவியா?”

“ம்… சொல்றேன் பாட்டீ”

“அவ, அதுதான் வேணி… அவ வளந்த கால சூழல்ல பொண்ணுங்க வெளிய போறதே அபூர்வம்… அப்டியிருந்த காலத்துல அவள படிக்க வச்சோம்.  எதுக்கு?

பொண்ணுங்களுக்கு படிப்பு தந்தா, அவளுக்கு தன்னம்பிக்கை வரும்னுதானே தவிர, இப்டி தரங்கெட்ட ஒரு முடிவு எடுக்க இல்ல… அவளோட வளந்த பசங்க ரெண்டு பேரும் எப்டி வளந்தாங்க? அவங்க ரெண்டு பேரும் பொண்ணுங்கள பாக்கவே இல்லையா? இல்ல… பொண்ணுங்க பாக்கற மாதிரி அவனுங்க இல்லையா?”

கூடவே ஒரே ஊருல தம்பிங்க ரெண்டுபேரும் இருக்க, யாருக்கும் தெரியாம ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லாம அவங்க வீட்டு ஆளுங்கள நம்பி போயிருக்கான்னா என்ன அர்த்தம்?

இப்ப உன்னயே எடுத்துக்கோ, இப்ப இருக்கற காலத்துல எல்லா பொண்ணும் வேலைக்கு போறாங்க… கை நிறைய சம்பாதிக்கிறீங்க. வீட்ல இருக்கற நேரத்தவிட வெளியில் இருக்கற நேரம் அதிகம். யாரு என்ன பண்ணுறாங்கனு பெத்தவங்களுக்கும் தெரியாது? மத்தவங்களுக்கும் தெரியாது.

அப்டிதான் இன்னிக்கு காலம் போகுது. இப்டி மீடியாவேட ஆதிக்க காலத்துல வளந்த பொண்ணான நீ ஏன் அவள மாதிரி கிளம்பிப் போகல? இல்ல அவன் உன்ன கூப்டலயா? அப்டி கூப்டிருந்தா அவள மாதிரி தபால போட்டுட்டு இல்லனா ஒரு மெசேஜ போட்டுட்டு கிளம்பி போயிருவியா?  இதுக்கு பதில் சொல்லு எனக்கு?”

“…”, ‘என்ன சொல்ல? ஒன்றும் புரியல… இந்த பாட்டி கேட்டதுக்கு பதில் சொல்றதுக்குள்ள எனக்கு எம்பது வயசாகிரும் போல’ என அன்னேரத்திலும் மனதிற்குள் சிரித்தவள், எதுவும் பேசாமலேயே பாட்டியை பார்த்திருந்தாள்.

“சொல்லு…”,விடாமல் கேட்டார் அழகம்மாள்.

“எனக்கு எங்க அப்பா மேல இருக்குற நம்பிக்கைல, அவங்ககிட்ட சொன்னா அவங்க எனக்கு கல்யாணம் சம்பந்தமான எல்லாத்தையும் பாத்துக்குவாங்கனு நினச்சேன் பாட்டி”,விசாலினி.

“அப்ப உங்கப்பன நீ நம்பின மாதிரி, யாரயும் அவ ஏன் நம்பல? அவ நம்பிக்கைக்கு பாத்திரமா நாங்க யாரும் நடந்துக்கலயா?

அந்த வயசான காலத்துலயும் நான் பெறலங்கற ஒரே காரணத்துக்காக எங்க மாமியாரு என்னைய நம்பாம பாத்து, பாத்து அவளுக்கு செய்வாங்க… அப்படிப்பட்ட தங்கமான அந்த அம்மாவ ஏன் அவ நம்பல?”

“அத நீங்க அவங்ககிட்டதான பாட்டி கேக்கணும்”

“இது கேக்கற விசயம் இல்லடீ பொடிசி…

ஏழு சம்பத்துகள் இயல்பா இருக்கும் சிலருக்கு.

சிலருக்கு வெளிய பாக்க பகட்டா, பதவிசா இருந்தாலும் குணம் இருக்காது.

அதுல குணம் இல்லாதவங்க அவள மாதிரியும், குணம் இருக்கறவங்க உன்ன மாதிரியும் நடந்துக்குவாங்க.  அவ்ளோ தான்.

இத மூணாங்கிளாஸ் படிச்ச எம்மாமியா எனக்கு சொன்னது.

இன்னும் சொல்லப் போனா அவள தாங்கன மாதிரி அதுக்கப்புறம் எங்க வீட்டுக்கு வந்த மருமகளுகளையோ, இல்ல பிறந்த பொண்ணுகளையோ, பசங்களக்கூட யாரும் நாங்க தாங்கல.  அதுக்காக எங்க வீட்டுல வளந்த புள்ளைங்க எல்லாம் எங்கள நம்பலயா? இல்ல நாங்க அமைச்சு குடுத்த வாழ்க்கைல அவங்க யாரும் நல்லாயில்லயா?”

அவ போனதுக்கு அப்புறம் எங்க மாமியாரு நிறைய சொல்லுவாங்க,”நாயக் குளிப்பாட்டி நடு மனைல வச்சாலும் அது எப்பவும் என்ன செய்யுமோ அத தான் செய்யும்னு”

“அதுக்கப்புறம் நீங்க அவங்கள சந்திக்கவே இல்லல பாட்டீ… அவங்க பக்க நியாயம்னு ஏதும் இருந்தா?”

“என்னடீ… என்ன நியாயம் இருக்க முடியும்னு சொல்லேன்”

“அது அவங்ககிட்ட கேட்டா அவங்களே சொல்லுவாங்க, எனக்கு எப்டி தெரியும்?”

“ஒன்னுமில்ல… அவ பக்க நியாயம் இருக்கறதாவே வச்சுக்க, அவள அத்தன வருசம் சீராட்டி, பாராட்டி வளத்தோம்.  அன்னிக்கு கோவில்ல பாத்துட்டு கிளம்பி வந்துட்டோம்.

அவ இன்னி வர எங்கள வந்து நேருல பாத்து அவளப் பத்தின நியாத்தை சொல்லியிருந்தா, நாங்க கேக்கமாட்டோம்னு வாசல்லயே விரட்டியிருப்போமா? சொல்லு… அப்டி ஆளுங்களாடி நாங்க?”

“நாமளே ஹாஸ்பிடல்ல மூனு நாள் இருந்துட்டு இன்னிக்கு தான பாட்டி வந்திருக்கோம்”

“அத நீ இது வர அந்த பயக்கிட்ட சொல்லவே இல்லனு என்னைய நம்பச் சொல்றியா பொடிசி?”

“…”

“ஹாஸ்பிடல்ல கூட அவங்கப்பாவ வந்து அவ பாக்கலல்ல”

“…”, ‘இந்தப் பாட்டி அநியாயத்துக்கு அறிவா… இருக்கும் போலயே… எங்குட்டு அடிச்சாலும் கோல் போடுது… என்ன செய்யறது… இது லேசுப்பட்ட ஆளுல்ல… நாம அடக்கி வாசிப்போம்’ என மனதில் நினைத்தவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

 

அனைவரது மனங்களும் கிருபா கூறிய நிகழ்வுகளைச் சுற்றியே இருக்க, யாருடனும் பேசாமல் அவரவர் சிந்தனைகளுடன் அவர்களுக்கு தோன்றிய முடிவுகளை

எடுத்தவாறு அமைதியாக இருந்தனர்.

வீடு மீண்டும், அமைதியாகி இருந்தது.

கேட்டதால் அயர்ந்திருந்தவள், அத்தையின் செயலில் ஆயிரம் வினாக்களை தனக்குள் எழுப்பி, விடை தெரியாமல் விடியல் வரை விழித்திருந்தாள்.

சைலண்டில் இருந்த விசாலினியின அலைபேசிக்கு அழைப்பை விடுத்து விடுத்து, அத்துணை அழைப்புகளும் அவளால் எடுக்கப்படாமல் வீணாக, என்னவோ, ஏதோ எனும் மனப் புழுக்கத்தில் விடியலுக்காக காத்திருந்தான் அரவிந்தன்.

­————————-

error: Content is protected !!