வானம் காணா வானவில்-8

அத்தியாயம்-8

சென்னை, விடியலுக்கான சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. அரவிந்த் தனது வழக்கமான பயிற்சிகளுக்குப் பின் தாய், தந்தையரைக் காண காத்திருந்தான்.

இன்னும் அவர்கள் இலகுவாகவில்லை.  அதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அரவிந்தனிடம் சற்று மட்டுப்பட்டிருந்தது.

தன்னிடம் கூறக் கூடிய எதையும் இருவரும் இது வரை மறைத்ததில்லை என்ற உண்மை உரைத்திருந்தது. தனக்குள் இருந்த ஆர்வத்தை சற்றே மட்டுப்படுத்தி அமைதியாகி இருந்தான்.

வழமை போல அவனது பணிகளில் அரவிந்தன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.

வசந்தம் வந்து போன வாழ்வில், வசந்த தடத்தின் தடயம் பழையதை கிளறியது. தன்னவளின் பாரா முகத்தைவிட, கேளா வார்த்தைகளை எண்ணி உள்ளம் மறுகினான். உடம்பு அவளின் நினைவால் உருவான உஷ்ணத்தில் உருகியது.

மெலிவு உடம்பில் தெரிந்தது. தனது முயற்சிகளை கைவிடவில்லை. அலைபேசியில் அழைப்பதை நிறுத்தாமல், குறிப்பிட்ட நேரங்களில் அழைப்பு விடுப்பதை விடாமல் செய்து வந்தான்.

ஷாலினியின் மீது கோபம் வரவில்லை. அவளின் சூழல் அங்கு என்னவாக இருக்கும் எனத் தெரியாமல், அவளின் மீது கோபம் கொள்ளுமளவிற்கு உலக ஞானம் இல்லாதவன் இல்லை.

ஆகையால் பொறுமையை கையாண்டான்.  பொறுமை மீறினால் தன்னவளை நேரில் சென்று பார்க்கலாம் என்கிற தைரியம் இருந்தது, அரவிந்தனுக்கு.

அதற்கிடையே பணிகளும் இருக்க, அங்கிங்கு நகர முடியவில்லை.  தனது பெற்றோர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்ட அரவிந்தன், மனம் வருந்தக்கூடிய எதையும் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் கவனமாக இருந்தான். விசாலினி அனுப்பிய தகவலான… ‘தாத்தாவிற்கு உடல்நலக் குறைபாடு’ எனும் செய்தியைக் கூட வீட்டில் யாரிடமும் இன்று வரை பகிர்ந்து கொள்ளவில்லை.

‘கோவிலுக்கு சென்று வந்தால் குடும்பத்தில் நன்மை உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.  எங்க குடும்பத்தில் மட்டும் எல்லாம் உல்டா வா நடக்குதே ஆண்டவா’, என எண்ணியபடி கடந்து வந்த ஒரு வாரத்தை நினைவில் கொண்டு வந்திருந்தான், அரவிந்தன்.

ஒரு வாரத்தில் சாதாரணமாக  மாறியிருந்த குடும்ப சூழல் சற்று சந்தோசத்தைத் தந்திருந்தது. காலை உணவிற்காக டைனிங் டேபிளுக்கு அனைவரும் வந்திருக்க, அமைதியாக உண்டு முடித்து, பெரியவர்கள் உண்டு முடிக்கும் வரை அங்கிருந்த சோபாவில் காத்திருந்தான்.

மகனின் காத்திருப்பு சொன்ன செய்தி உணர்ந்த பெற்றோர் இருவரும், உண்டதாக பெயர் செய்து மகனிடம் வந்து அமர்ந்தார்கள்.

வியாபார சம்பந்தமான விடயங்களைப் பற்றி விவாதித்து விட்டு, இருவருக்கும் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல காத்திருப்பதாகக் கூறினான், அரவிந்தன்.

இருவரும் ‘இன்னொரு நாள் செல்லலாம்’ எனக் கூற, ‘நேத்தே டாக்டர் கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டேன். இன்னிக்கு காலைல கூட்டிட்டு வர சொன்னார்’, என வற்புறுத்தி பெற்றோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தான்.

மூன்று மாதங்களில் மாதந்தோறும் சென்று வந்த பரிசோதனைகளில் ‘கடந்த மாதத்திற்கும், இந்த மாதத்திற்கும் இடையில் எந்த முன்னேற்றமும் இல்லை’, எனக் கூறியிருந்தார் மருத்துவர்.  ஆனாலும் ‘பயப்பட வேண்டியதில்லை, இருந்தாலும் மருந்துகளை தொடர்ந்து உண்ணுமாறு’ கூறி அனுப்பி வைத்திருந்தார்.

பின்னேற்றத்திற்கான காரணத்தை யூகித்த அரவிந்தன், மருத்துவமனையில் எதுவும் பேசாமல், வீட்டில் பெற்றோரைக் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றான்.

மனம் கொள்ளா மகிழ்ச்சி மகனின் செயலில் இருவருக்கும் உண்டானது. அத்தகைய அருமை மிகுந்த புதல்வனுக்கு அவன் ஆசைப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வில் உண்டான தடை தங்களால் தான் என இருவருமே எண்ணி வருந்தினார்கள். இருவரது இயலாமையை நினைத்து மன வருத்தம் உண்டானது அவர்களுக்கு.

இவற்றைப் பற்றி அறியாதவன், அவனது அன்றாட பணிகளோடு ஐக்கியமாகியிருந்தான்.

சஞ்சய் தனது சகோதரனின் மெலிவை உணர்ந்திருந்தாலும், அவன் வீட்டில் இருக்கும் வரை பெற்றோரிடம் இது பற்றி எதுவும் பேசவுமில்லை, கேட்கவுமில்லை.

தனது தமையன் அலுவலகம் பணிகளுக்கு பின், பள்ளி சென்று வீட்டிற்கு வர, எப்படியும் மதியம் இரண்டு மணிக்கு மேலாகும் எனக் கணித்துருந்தான். அந்த தைரியத்தில் பெற்றோரிடம் பேச வேண்டி, தனது பணிகளை நிலுவையில் வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்திருந்தான், சஞ்சய்.

சுற்றி வளைத்து நேரத்தைக் கடத்தப் பிரியப்படாதவன், நேரடியாக விசயத்திற்கு வந்திருந்தான்.

“அப்பா, அம்மா, உங்க ரெண்டு பேருகிட்டயும் ப்ரோ எதுவும் கேக்க மாட்டான்னு எனக்கு தெரியும், ஆனா என்ன விசயம்னாலும் அதுக்கு ஒரு சொலுயூசன் இருக்கும்ல…

அண்ணிய பாத்து பேசப் போயிட்டு வந்து ஒரு வாரம் ஆச்சு.

இன்னிக்கு வர உங்களோட பாஸ்ட் என்னனு நாங்க கேட்டதில்ல.  இனியும் எங்களுக்கு அது வேணாம்.

ஆனா… அண்ணி வந்தாதான் ப்ரோவ பழையபடி பாக்கமுடியும்.  இப்பவே எதையோ இழந்த மாறி இருக்கான்.  ஆனா எதையும் நம்மகிட்ட காட்டிக்காம இருக்கான்.

அதனால பெரியவங்க நீங்க என்ன செய்யணுமோ அதை சீக்கிரம் செய்யுங்க…

என் வயசுக்கு நான் இதக்கூட உங்களிடம் பேசுனது தப்புதான், ஆனா ப்ரோவ இப்டி என்னால பாக்கமுடியல

ஒரு வருசம், ரெண்டு வருசமில்ல… அவங்க ரெண்டு பேருக்கும் எட்டு வருச மௌன பந்தம்…

அந்த பந்தத்த அவன மறக்க சொல்றது மாதிரி ஒரு மடத்தனம் ஒன்னு இல்ல. அண்ணிக்கு அல்டர்நேட் அவன் லைஃப்ல வேற எதுவுமே இல்ல.

இத பேசத்தான் ப்ரோ இல்லாத நேரமா பாத்து வீட்டுக்கு வந்தேன்… நான் கிளம்பறேன்”, என கிளம்ப எத்தனித்த மகனிடம் பேசத் துவங்கிய தாயின் வார்த்தைகளைக் கேட்டு,மீண்டும் அமர்ந்து விட்டான், சஞ்சய்.

“இப்ப தான் அவங்களுக்குள்ள பழக்கம்னு நினச்சேன்.  இது பத்தி உனக்கு முன்னமே தெரியுமா சஞ்சய்?”

“ஏதோ ஒன்னு இருக்குனு தெரியும், பட் தெளிவா எதுவும் தெரியாதும்மா.  அவனுக்கு அண்ணிய ஒரு ப்ளேயராதான் தெரியும். ரெண்டு பேருமே பேஸ்கட்பால் ப்ளேயர்ஸ்…

ஃபர்ஸ்ட் மீட் அப்பல்லாம் அவனுக்கு தெரியலயாம். நான் மிருவ கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி கேக்கும் வர ப்ளாங்கா தான் இருந்தானாம்.

எனக்கு கல்யாணம் பேசும்போது, அவங்கிட்ட நீங்க கேட்டிங்கல்ல… அப்பதான் அத அவன் ஃபீல் பண்ணணாம். அதுக்குப்புறமும் இவரு அவங்கள தேடி போகல…

‘அவளுக்கும் என்ன மாதிரி ஃபீல் இருந்து, என்னையத் தேடி வரணும்னு சொன்னான்.  அது வர, நான் வயிட் பண்ணுவேன்’னும் என் மேரேஜ் அப்ப எங்கிட்ட சொன்னான்.

அதே போல அவன் நினைச்ச மாதிரிதான் இது வர எல்லாம் அவன் லைஃப்ல நடந்திருக்கு.  இன்னிக்கு வர ரெண்டு பேரும் ப்ரபோஸ் கூட பண்ணதில்ல.  ஆனா செம அண்டர்ஸ்டாண்டிங்க்.

அண்ணிய நான் த்ரீ மன்ந்த்ஸ் முன்னதான் மீட் பண்ணேன்.

நீருவுக்கு தான் ஃபர்ஸ்ட் இன்ட்ரோ ஆனாங்க, நீருவால எனக்கு, அப்புறம் தான் ப்ரோவுக்கு நேருலயே வந்து தரிசனம்”, என்றபடி சிரித்த மகனை நோக்கி

“ம்… எல்லாம் கூட்டுக் களவாணிகளா இருந்திருக்கீங்க”

“இது வர ஒரு முறை மட்டும் தான் அவங்க ரெண்டு பேரும் வெளியில மீட் பண்ணியிருக்காங்க, இதுல நான் எங்க கூட்டுக் களவாணித்தனத்துல வந்தேன்? எதுலயும் ஒரு நியாயம் வேணும்…”

“என்னடா சொல்ற!”, நீலா ஆச்சர்யமாக வினவ

“ஆமாம்மா”

“இதுல எப்டி இவ்வளவு பாண்டிங் ரெண்டு பேருக்குள்ள… ஆச்சர்யமா இருக்கு.  நீ சொல்றத கேக்கும்போது…

சரி நீ ஆஃபீஸ் கிளம்பு, சீக்கிரமா ஒரு முடிவுக்கு வந்திருவோம்”, தனது மூத்த மகனின் காதல் கதையை கேட்ட மகிழ்வோடு, தனது இளைய மகன், சஞ்சயை அலுவலகம் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்,நீலா.

இதற்கு மேல் காலம் தாழ்த்தாமல் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய் என மனம் கட்டளையிட்டது.  அதே நேரம் அறிவு, பழைய விடயங்களை தன்னை வளர்த்தவர்களுக்கு தெளிவு பெறச் செய்யாமல் இதற்கு ஒரு தீர்வு காண இயலாது எனக்கூற வயோதிகத்தாலும், ஓய்ந்த மனதாலும், உடலும் ஓய்ந்திருந்தது.

————————–

 

கருணாகரன், கயல்விழி இருவரும் நாமக்கல் சென்றிருக்க, வீட்டின் பழங்கதையால் பங்சராகி இருந்த வீட்டின் மகிழ்வான தருணங்களை மீட்டெடுக்க முடியாமல் இருந்தது அவ்வீடு.

விசாலினியின் உணவு முறைகள் குறைந்திருக்க, ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க அதிகம் மெனக்கெட்டாள்.

காலை உணவை உண்டு கொண்டிருந்த கிருபாகரன், டிவியில் பார்வையும், நிஜத்தில் வேறு எண்ணங்களில் இருந்த மகளின் உணர்வுகளை உணர்ந்திருந்தாலும், அதைக் காட்டாமல் தட்டில் இருந்ததை எடுத்து மகளுக்கு ஊட்டி விட்டார்.

பசிக்கவில்லை என்றே தட்டிக் கழிப்பவள், தந்தை ஊட்டிவிடுவதை மட்டும் மறுக்காமல் உண்டு விடுவாள்.  ஆகையால் அழகம்மாளும் கண்டும் காணாமல் இருந்தார்.

வேறு நாட்களாக இருந்தாள் சத்தம் செய்பவர், இன்று எதுவும் கூறவில்லை.

பதினோரு மணியளவில் வெளிகேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த கற்பகம், விரைவாக வீட்டினுள் வர, அவர் பின்னால் வந்தவன்

“பாட்டீ… பாட்டீ…”,என்ற அழைப்புடன் வந்தவன், கற்பகத்தின் பின்னால் நிற்க, வந்தவனுக்கு வழிவிட்டு கற்பகம் ஒதுங்கி நிற்க,

ஹாலில் இருந்த அழகம்மாள்,

“யாரது?”,எனக்கேட்க

அதே நேரம் குரலில் யாரென உணர்ந்தவள் அமர்ந்த இடத்திலேயே இருந்தபடி பாட்டியைப் பார்க்க

“நான் அரவிந்தன் வந்திருக்கேன், உள்ள வரலாமா?”

ஒரு கனம் அமைதியாகி,“வாப்பா, உள்ள வா”, என்ற அழகம்மாளின் குரலுக்கு ஹாலுக்குள் பிரவேசித்திருந்தான்.

பார்த்தவுடன் பேத்தி, பாட்டி இருவருக்கும் அவளின் மெலிவு தெரிய,

ஆனால், அங்கிருந்த சோபாவில் அரவிந்தனை அமரச் செய்தார் அழகம்மாள்.

விசாலினிக்கு முதுகு காட்டி, பாட்டியைப் பார்த்தபடி

பாட்டியின் அருகிலேயே அமர்ந்தவன், அழகம்மாளின் இரு கைகளை பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்திருந்தான்.

அதற்குள், கிச்சனில் நின்றிருந்த மருமகளிடம் “முதல்ல பச்சத் தண்ணி கொண்டு வந்து பிள்ளைக்கு குடு கற்பகம்.  அப்புறம் பத்து நிமிசத்துல வேற சூடா எதாவது கொண்டு வா”, எனக் கட்டளையிட்டவர்… அதன் பின் அரவிந்தனை நோக்கி அவன் கூறுவதை உள்வாங்கியபடி இருந்தார், அழகம்மாள்.

“உங்களுக்கும், என் பேரன்ட்ஸ்கும் என்ன ரிலேசன், இல்ல பழக்கம் எதுவும் எனக்கு இது வரத் தெரியாது.  அதப் பத்தி நீங்களா சொன்னா கேட்டுக்குவேன்.  சொல்லலனா வருத்தமெல்லாம் எனக்கு இல்ல பாட்டி”

‘அப்ப கல்யாணம் நடக்காது. பேச்சு வார்த்த தான் வாய்தா மாறி வந்துட்டே இருக்கும்’, இது விசாவின் மைன்ட் வாய்ஸ்.

இடையில் வந்து கற்பகம் தண்ணீர் குடுத்ததை வாங்கியவன், ஒரு மிடறு குடித்தான். பிறகு நிதானமாக அருகில் இருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு பாட்டியிடம் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்தான்.

அரவம் உணர்ந்து ஹாலுக்கு வந்த கிருபாகரன், அரவிந்தன் தனது தாயுடன் பேசுவதைக் கண்டு அமைதி காத்து அறையின் வாசலிலேயே நின்றுவிட…

“ஆனா, எனக்கு நம்ம ஷாலுவ ரெண்டு வீட்டு பெரியவங்களும் பிரியப்பட்டா கல்யாணம் பண்ணி வைங்க.

இல்லனா இப்டியே இரண்டு பேரயும் விட்ருங்க…

வேற அலையன்ஸ்லாம் ரெண்டு பேருக்குமே பாக்கல்லாம் வேணாம்.

எட்டு வருசமா இப்டி தான இருந்தோம்.  எங்க காலத்துக்கும் எங்க ரெண்டு பேராலயும் இப்டியே இருக்க முடியும்!”,இதைக் கேட்டபடி இருந்த அழகம்மாளின் மனதில்

‘என்னடா நடக்குது இங்க!, அப்ப எங்க கண்ண மறச்சு இவ்வளவும் நடந்துருக்கா!, பால்குடி மறக்காத எங்க வீட்டுப் பொடிசினு நாங்க நினைக்க, எட்டு வருசமா இவன நினச்சுதா! இது என்னடா புதுக்கதையா இருக்கே!’ என்ற ஆச்சர்யம் பேத்தியின் மீது மேலிட…

“ஆமா, நான் வந்த விசயத்த விட்டுட்டு வேற எதுவோ பேசிட்டு இருக்கேன்.  இப்ப பதினைஞ்சு நாளா ஷாலு எங்கூடபேச மாட்டிங்கறா பாட்டி, அதான் நேருல வந்தேன்!”,

‘இருக்கும், அதுக்கு புறப்பட்டு வந்திட்டியாபா?’ என்ற எண்ணம் பாட்டியின் மனதில் ஓட, அரவிந்தன் தொடர்ந்தான்.

“கால் பண்ணா எடுக்கறது கூட இல்லை…

ஒரே ஒரு மெசேஜ் போட்டா… ‘தாத்தாவுக்கு முடியலனு…’ அவ்ளோதான், அதுக்கப்புறம் இன்னிக்கு வர ஒரு மெசேஜ் இல்ல. நான் போடற மெசேஜ்கும் ஒரு ரிப்ளை இல்ல…”

‘அதுதான் பயபுள்ள இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்காளா!’, என பேத்தியை பற்றி எண்ணினார், அழகம்மாள்

“இப்டி இருக்க வேணாம்னு அவகிட்ட நீங்க சொல்லி வைங்க பாட்டீ.  நீங்க சொன்னா அவ கண்டிப்பா கேப்பா! பாருங்க, ஒழுங்கா சாப்டாம எப்டி இருக்கானு!  எதயும் போட்டு குழப்பாம ஒழுங்கா சாப்ட சொல்லுங்க!”

’எழுவது வருசமாகுது! இதுவர எம்புருசன்லாம் என்னய சாப்டியானு கூட கேட்டதில்ல! நேத்து பொறந்த பய, எம் பொடிசி மேல வச்சிருக்கற அன்ப பாக்கும் போது நெஞ்சு நிறையுது!, ஏன் ராசா! நீ எங்க வேணி மகன்னு நினச்சுதான் வீட்டுக்குள்ள விட்டேன்.  ஆனா எங்களோட இருக்கற வர அந்தப்புள்ளயும் இப்டி பாசமாத்தான் இருந்தது. அதெல்லாம் நினச்சா மனசே ஆறல. ஆனா ஏன் இப்டி ஆனான்னு தெரியலயே?’, என அழகம்மாளின் மனம் மீண்டும் பழையதை நினைத்து அழ

“நான் இன்னிக்கு ஈவினிங் பிஸினெஸ் விசயமா அப்ராட் போறேன் பாட்டீ. சீக்கிரமா வந்திருவேன்”, அரவிந்தனின் வார்த்தையில் சற்றே கழிவிரக்கம் உண்டாக

“போயிட்டு வாப்பா”, மனதார கூறினார் அழகம்மாள்.

“அங்கிள் இங்க இருக்காரு தான பாட்டி!”,என மெதுவாகக் கேட்டவனிடம்

“ம்…”,என்றபடி ‘அவனை எதுக்குடா நீ கேக்கற’ என்ற பார்வை பார்த்த அழகம்மாளிடம்

“அப்ப அவரு ஷாலுவ நல்லா பாத்துப்பாரு, நான் நிம்மதியா என் வேலயெல்லாம் முடிச்சிட்டு நிதானமா வருவேன்”,என்றவனிடம் கற்பகம் ஒரு டம்ளரை நீட்ட அதில் மிதமான சூட்டில் ஏலம் தூக்கலாக அளவான இனிப்போடு இருந்த பாதாம் பாலை மிச்சம் வைக்காமல் குடித்தவன்

‘இதல்லாம் பய கணிச்சு வச்சுருக்கானே!’,என அழகம்மாள் மற்றும் கிருபாகரன் எண்ண

“ஷாலுகிட்ட, ஒழுங்கா என்னோட பேச சொல்லுங்க. நான் கிளம்பறேன் பாட்டி”, என்றபடி கிளம்பியவன் தனது அலைபேசியை எடுத்து, “பாட்டி உங்க நம்பர் சொல்லுங்க” எனக்கேட்க, அழகம்மாளும் அவரது அலைபேசி எண்ணைக் கூறியிருந்தார்.

சற்று யோசித்தவன்,

“பாட்டி, அம்மா,அப்பா ரெண்டு பேரும் உங்களோட சமாதானம் ஆகறாங்களோ இல்லையோ, எனக்கு சரியா சொல்லத் தெரியல.

ஆனா என்னை ஒரு தெரிஞ்சவனா, ஒரு மனுசனா நினச்சு, எந்த தயக்கமும் இல்லாம வீட்டுக்குள்ள கூப்டு வச்சு பேசண, உங்க பண்பாடு, பழக்கவழக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சது, ஐ மிஸ்டு யூ பாட்டீ”

கற்பகத்தைப் பார்த்து, “அத்தமா, நீங்க குடுத்த பாதாம் மில்க் கூட செம டேஸ்ட்”, மீண்டும் பாட்டியிடம் திரும்பியவன்,

“அடிக்கடி வந்து தொந்திரவு பண்ணுவனோனு நீங்க பயப்பட வேண்டாம். எனக்கும் இங்கிதம் தெரியும்.  பாய் பாட்டி”, என்றவன்

அதற்கு மேல் அங்கு நின்றிருந்த கற்பகம், கிருபாகரன் இருவரிடமும் சொல்லிக் கொண்டு, ஷாலுவை திரும்பிப் பார்க்காமலேயே சென்று விட்டான்.

புயல் வந்து போன அமைதியில் இருந்த வீட்டில், வசந்தம் அரவிந்தன் உருவில் வந்து போயிருந்தது. அரவிந்தனை நினைத்து அழகம்மாள் அழ ஆரம்பித்து இருந்தார்.

“இப்டி ஒரு பேரனை எங்கையால வளக்க குடுத்து வைக்கலயே எனக்கு?”,என கண்களைக் கசக்க

‘என்னங்கடா குடும்பமே ஒன்னா சேந்து, நம்மல டீலுல விட்ருவாய்ங்க போலயே’, என எண்ணியவாறு அங்கிருந்து அகன்ற விசாலினி, மனச்சுமை குறைந்ததால் போதிய ஆற்றல் உடலில் மீண்டு வந்திருக்க, இயல்பாக அவளது பணிகளைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

அதுவரை சோம்பலாக இருந்தவள், அரவிந்தனைக் கண்ட சிறிது நேரத்தில், சுறுசுறுப்பான மாயத்தை நேரில் கண்டு, வீடே மலைத்திருந்தது.

‘வந்த பய எங்கூடத்தான் பேசுனான். அவ பக்கம் கூட பார்வ போகல… ஆனா அவ மெலிஞ்சிட்டத கண்டு பிடிக்கறான். பாவம் பயலும் பத்து நாள்ல மெலிஞ்சுட்டான். இந்த வேணி புள்ள, புள்ளய பாக்காம என்ன செய்யுது?

ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் தான். இந்தப் புள்ளை வேணி மட்டும் இப்டி பண்ணாம இருந்திருந்தா இன்னேரம் நாள் குறிச்சு கல்யாண வேல போயிட்டு இருக்கும்’, என தன் அறிவறியாது, தனது பேரனாக ஏற்றுக்கொண்ட அரவிந்தனை நினைத்து, மனதில் புழங்காகிதம் அடைந்திருந்தார், அழகம்மாள்.

அழகம்மாளை தனது அழகான நடவடிக்கையால் மாற்றிய அரவிந்தனை எண்ணி மனதில் சிலாகித்தபடி இருந்தாள், விசாலினி.  பேத்தினு இல்ல சிலரு பாட்டியையும் கரெக்ட் பண்றாங்கப்பா…!!!

———————–