வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 2

Screenshot_2020-09-30-16-03-02-1-52a679b1

நீண்ட இரண்டு நாள் உறக்கம்… பசிமறந்து உலகையே மறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து நித்திரை கொண்டிருக்கிறாள் பெண்ணிவள்.அதுவும் ஆழ்ந்த நித்திரை.பார்த்திருந்தவன் அதை அறியவில்லை எனினும் ஏதோ பெரும் ஆபத்திலிருந்து தப்பித்திருக்கிறாள் என்று நினைத்தவாறு பார்த்திருந்தான். 

துயில் கொண்டிருப்பவளை ஓர் ஆண் மகன் அருகிருந்து பார்த்திருப்பது தவறுதான். ஏனோ அவனுக்கு அது தோன்றவே இல்லை. 

பெண்ணவள் மெல்ல தூக்கம் கலைய கண்களை மெதுவாக பிரித்து தன்னை பார்க்கும் அழகனை,(ஆம் அழகன் தான்)கண்டவள் தான் எங்கிருக்கிறோம்,தான் துயில் கொண்டிருக்கும் பஞ்சு மெத்தையை கைக்கொண்டு துளாவியவள்,அவனை விடுத்து கண்களை சுழலவிட்டு  அறையை நோட்டம் விட்டாள்.அவளது மருண்ட பார்வையை பார்த்திருந்தவன் அறையை நோட்டம் விட்டவளது பார்வை தான் உடுத்தியிருந்த ஆடையை பார்த்ததும் மீண்டுமாய் தன் முன் அமர்த்திருந்தவனைப் பார்க்க கண்கள் இன்னுமாய் மிரண்டு விரிய ஆணிவனோ வாய் திறந்து பேச நினைத்த நொடி அறையில் நுழைந்தார் ஆணழகனின் தாயார் வாசுகி. 

“அடடே… எந்திரிச்சாச்சா? கிச்சா  இப்போவாச்சும் அந்த இடத்தை விட்டு  எந்திரிடா…”

“ஹ்ம்ம் ” என்றவன் தன் அலைபேசியில் அன்றுபோல இன்றும் அழைத்தவன் அவளை வீட்டுக்கு வருமாறு கூறிவிட்டு வைத்ததும் இவள் அருகே எழுந்து வரப்பார்க்க அவள் கைகள் தன்னை போர்த்தியிருந்த கம்பளியை இருகப்பற்ற அவ்விடத்திலேயே நின்று விட்டான். 

அவனைப்பார்த்த அன்னையிடம், கண்களால் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு அரைவிட்டு வெளியேறினான்.

அவளருகே வந்தமர்ந்த வாசுகி,

“அம்மாடி இப்போ எப்டி இருக்கு?” அவரையும் அதே பார்வையுடன் பார்த்திருந்தாள்.அவரோ அவள் தலைகோதியவாறு, 

“ரொம்ப பயந்துட்டியா? எந்திரிச்சு  உட்கார்ந்தன்னா தான் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்.நம்ம வீட்டுக்கே வந்து ரெண்டு நாளாச்சு டா.”

பட்டென எழுந்தவள் எழுந்த வேகத்துக்கு  தன் நெற்றிக்காயம் வலிக்க தன் நெற்றியை  பிடித்துபார்க்க அவ்விடம் மருத்திட்டிருந்ததை உணர்ந்தாள். அதோடு அந்த காயம் உண்டான நொடியும் நெஞ்சின் அடியாழத்தில் நினைவிருக்க அதுவும்  நிழலாய் தெரிந்தது.

“அச்சோ வலிக்கும் டா பார்த்து…” என அவளை சாய்த்து அமர வைக்க,

“எனக்கு வீட்டுக்கு போகணும்…”

அக்குரலோ மிகவும் கடினப்பட்டு, வரண்டு மெதுவாக வந்தது பெண்ணவளிடமிருந்து. 

“போகலாம் டா.உன்னால முடிஞ்சதும் போகலாம்,இப்போ வேணும்னா வீட்டுக்கு பேசுறியா? நம்பர் சொல்லேன் நானே எடுத்தறேன்.” அறையிலிருந்த அலைபேசியை வாசுகி கைக்கு எடுக்க,

“நம்பர் தெரியாது.” என்றிருந்தாள். “

சரி அப்போ டாக்டர் வந்ததும்  பயணிக்கலாமான்னு கேட்டுட்டு வீட்டுக்கு போகலாம் என்ன.”

இவர் பேசிக்கொண்டிருக்கவுமே அறைக்குள் நுழைந்தாள் அன்று அவளுக்காக இரவில் வந்து வைத்தியம் செய்த மகிழ்.அவள் பின்னே அவளுக்கு அழைப்பு விடுத்தவனும்.

“ஹலோ பியூட்டி.இப்போ எப்டி இருக்கு?” கேட்டவாறே அவளருகே அமர்ந்தவள்  அவளை பரிசோதித்து கையில் போட்டிருந்த துளைக்கருவியை (கென்னுலா)அகற்ற, 

“ஸ்ஸ்… ஆ… ” பெண்ணவள் வழியில்  சொல்லவுமே,  

“ஹேய் அவளுக்கு வழிக்கப்போகுது மெதுவா கலட்டி விடு.”

அவனோ கத்த அவனை திரும்பி பார்த்த மகிழ்,மீண்டும் அவள் பக்கம் திரும்பிக்கொள்ள அவள் பார்வையைக் கண்டவன் வாயை மூடிக்கொண்டான்.

“ரொம்ப வீக்கா இருக்கா,இந்த டோனிக்க ஒரு ரெண்டு வாரம் கொடுங்க.அதோட நல்லா சாப்பிட்டான்னா ஓகே.கெட் வெல் சூன் பியூட்டி. “

எழுந்தவள் தன் பையை கையில்  எடுத்துக்கொண்டு அறையின் வாசலருகே வந்து ஆணவனை ஏறிட்டவள் வாசுகியிடம், 

“இதுக்காகவாவது என்னை வீட்டுக்குள்ள விட்டீங்களே, தேங்க்ஸ் அத்த.” கூறியவள்   வாயிலை நோக்கி நடந்தாள்.

தன் மகனை முறைத்தவர் அவள் பின்னே செல்ல,அவளோ வாயிலில் நின்றிருந்த  ஆணழகனின் தந்தையோடு பேசிக்கொண்டிருந்தாள்.  

“மகிழ் உன்னை எப்பவுமே நாம வரவேணாம் சொல்லல்லடா.”

“அச்சோ சாரி அத்த.அது உங்களுக்கு சொல்லல.நீங்க பீல் பண்ணிக்காதிங்க.அந்த பொண்ணு யாரு என்னனு விபரம் தெரிஞ்சதா? “

அவள் கை பற்றிகொண்டவர், 

“தெரிலடா.எழுந்ததுமே மளச்சு போய் இருக்கா.வீட்டுக்கு போனும்னு சொல்றா, வீட்டு நம்பர் கேட்டா தெரியாதுங்குறா. “

“ஓஹ்! சரி பார்த்துக்கலாம் அத்த.”

அவன் அறை விட்டு வெளி வருவதைக்  கண்ட மகிழோ, 

“சரி அத்த நா கிளம்புறேன், வரேன் ஹாண்ட்சம்.” மாமனிடம் விடைப்பெற்று சென்றாள். 

மூவரும் மீண்டுமாக அவலறைக்குச்சென்று 

அவளைப் பார்க்க யன்னலின் வழியே வரும் வெளிச்சத்தை வெறித்து பார்த்திருந்தாள். 

“அம்மாடி இதை சாப்பிடறியா? ” அவளருகே சென்றமர்ந்த வாசுகி உணவைக் காட்டி கேட்க, அவரைப்பார்த்து அவர் பின்னே இருந்த இருவரையும் பார்க்க,

“உங்க வீட்ல இருக்கதா நினைச்சுக்கோ டா.இது என் பையன் கிருஷ்ணா.இது அவனோட அப்பா ராஜ்.என் பையனோட பெஸ்ட் பிரென்ட் ரெண்டு நாளா என்ன ஆனான்னே தெரில. அவனைத்தேடி போறப்ப தான் உன்னைப்பார்த்திருக்கான். அதான் உன்னை கையோட கூட்டி வந்துட்டான்.நல்ல வேளை அவன் கண்ணுக்கு பட்டிருக்க.நீ நல்லானதும் உங்க வீட்ல விட்ரலாம்னு தான் வெய்ட் பண்றோம்.பயப்படாம என்ன பண்ணனும் சொல்லு.அது படி பண்ணலாம்டா.ஒன்னும் பயப்படாதடா.”

“வீட்டுக்கு போகணும்… “

“சரிடா போலாம்.முதல்ல சாப்பிடு.நீ ஒன்னுமே சாப்பிடல இன்னும். “

“எனக்கு வேணாம்.எனக்கு வீட்டுக்கு போகணும். “

இப்போது அடம் பிடிக்கிறாள். மூன்று மாதங்களின் முன்னர், தன் அக்காளுடன் பேசிய அதே தோரணை வந்திருந்தது. யேனோ அதே தன் அக்காவை  வைத்திருக்கும் இடத்தில் வைத்து இவரை பார்க்கத் தோன்றுகிறது பெண்ணிவளுக்கு.  

“சரி,உங்க வீடு எங்க இருக்கு? “

“பொள்ளாச்சி” என்றவள்,அவள் வீடமைந்த இடம் கூற,

“ஓஹ்!’ வாசுகி தன் மகனையும் கணவரையும் திரும்பி பார்த்தவர், 

‘ஆனா இப்போ நீ கோவைல  இருக்கடா.இங்க யார் கூட வந்த? “

அவளிடம் பதிலில்லை. வாசுகியையே பார்த்திருக்க,

“சரிடா,வீட்ல இருந்து எப்போ வந்த? “

‘இன்னைக்கு என்ன திகதி?’ எனக் கேட்டவள் அவர் கூறவும் கண்கள் மிரண்டு நீர் திரண்டு வழிய, 

“மூன்று மாதம் கிட்ட ஆகுதே!” எனக்கூறினாள்.அவள் கண்களோ பயத்தில்  விரிந்து இன்னுமாய் நீரை வடிக்க அவளை அணைத்துக் கொண்டவர், 

“சரிடா ஒன்னில்லை.”அவளை ஆறுதலாக முதுகைத் தடவிக்கொடுத்தார்.கொடுத்தவர்  உள்ளமோ ‘தன்னைப்போலவே கஷ்டப்பட்டிருக்காளே,கடவுளே என்ன நடந்ததோ பெண்ணிவளுக்கு,’நினைக்காமல் இருக்கமுடியவில்லை.அவர் முகம் கண்ட அவர் மகனோ அவரை முறைப்பதைக்கண்டு தன்னை சமன் படுத்திக் கொண்டார். 

பார்த்திருந்த இரு ஆண்களுக்கும் பெண்ணவளைப் பார்க்க பாவமாய் இருந்தது.

“சரிடா இவ்வளவு நாள் எங்கிருந்த? வீட்ல இருந்து யார்கூட இங்க வந்த?அவர் கேள்விகள் கேட்க பெண்ணவளுக்கோ பதில் சொல்லத்தெரியவில்லையா, பிடிக்கவில்லையா அதற்கு பதிலே இல்லையா ஒன்றுமே அறிய முடியவில்லை. அவளிடம் ஒருவார்த்தையும் பதிலாய்  வெளிவரவில்லை.பார்த்திருந்தவன் தன் அன்னையை பார்த்து, 

“ம்மா,உணவு சாப்பிட்டான்னா ஈவினிங் அவ சொன்ன அட்ரெஸ்ல இருக்க வீட்டுக்கு கூட்டி போய் விடுறேன். இல்லன்னா இங்க விட்டு எங்கயும் போக முடியாது.” சொல்லியவன்  அறைவிட்டு வெளியேறினான்.

“சரிடா நீ சாப்பிடு.ஈவினிங் போகலாம் உங்க  வீட்டுக்கு. “

அவளை உணவு உண்ண வைத்து உடை மாற்ற உதவியவர், அவள் தலைகோதி விட அவரையே ஏக்கமாக பார்த்திருந்தாள்  பெண்ணவள். 

“என்னடா? “

“எங்கம்மா போலயே இருக்கீங்க.”

“அப்படியா டா? வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க? “

“அப்பா,பாட்டி,அக்கா அப்றம் தம்பி.”

“ஓஹ் அம்மா? “கேள்வியாக அவளைப் பார்த்தவர் உள்ளமும் தாளம் தப்பி தடுமாற, 

உதட்டைப் பிதுக்கியவள் தலையை இடவலமாய் ஆட்ட, 

“உன் பேர் என்ன?” அவள் ஊர் பற்றி சொல்லிருந்தவள் இப்போது வீட்டினர் பற்றியும் கூற இன்னும் அவளைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் எழ அவளை பற்றி கேட்க ஆரம்பிக்கவுமே, 

“ம்மா கிளம்பலாம்” என வந்து நின்றான்  ஆணழகன். 

(இவனை ஆணழகன் எனக் குறிப்பிட்டு கூற காரணம் கதைப் போக்கில் தெரிந்துகொள்வீரகள் தோழமைகளே.)

அவசரமாக கட்டிலை விட்டிறங்க பெண்ணவளோ தடுமாற,

“பார்த்துடா மெதுவா அவளை எழுப்பி விட்டவர் அவளை உச்சி முகர்ந்து பத்திரமா போய்ட்டு வாடா.எப்போ வேணா எங்க வீட்டுக்கு வரலாம்.’

‘என்னை அம்மாவா நினைச்சுக்கோ”

அதைக் கூறும் போதே அவருக்கு போலவே  அவளுக்கும் ஏதோ சொல்லமுடியா ஓர் உணர்வு மனதை சூழ்ந்துக்கொள்ள, சரியென தலையாட்டியவள் விடைப்பெற்றாள்.

“ம்மா,நைட் வர லேட்டாகிரும் எனக்காக வெய்ட் பண்ண வேணாம்,ப்பா நீங்களும் தான்.” கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.வாயிலை விட்டு வெளிச் சென்றவள் அவரை மீண்டுமாய் திரும்பி பார்த்துவிட்டு செல்ல வாசுகியும் அவளையேதான் பார்த்திருந்தார். 

“என்ன வாசு?”

“ப்ச்.ஒன்னில்லை,என் பொண்ணும் இப்படித்தான் இருப்பா போல.”

“பீல் பண்றியா?”

“தெரில. “

கூறியவர் அவர் அறைக்குள்  நுழைந்துகொள்ள,ராஜோ முன் வாயில் இருக்கையில் அமர்ந்தவாறு  சிந்தனைவயப்பட்டார். 

ஜீப் வண்டி நெடுஞ்சாலையில் அதீத வாகன நெரிசல்களைக் கடந்து கோவை நகரை விட்டு பொள்ளாச்சி நோக்கி  சீறிப்பாய்ந்துக்கொண்டிருந்தது.கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக ஆமை வேகத்தில் ஊர்ந்துக்கொண்டிருந்த வண்டி படு  வேகமெடுத்து செல்ல பெண்ணவளோ கால்களை மடித்துக்கொண்டு இருக்கையில் கண்ணாடி ஓரமாக ஒடுங்கி அமர்ந்திருந்தாள்.

சற்று தூரம் சென்றே உணர்ந்தவன்  வண்டியை மிதமான வேகத்தில் செலுத்த, பொள்ளாச்சியை நெருங்க இரு மருங்கிலும் இயற்கை அழகை உள்வாங்கி பச்சை  எங்கும் படர்ந்து கண்களுக்கு குளிர்மையை தர யேனோ பயணிக்கும் இருவருக்குமே அதை ரசிக்கும் எண்ணம் இல்லை.  

கிருஷ்ணா,பெயருக்கேற்றார் போல ஆணழகன் அனைவரையும் தன் முக  வசீகரத்தால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்பவன்.பாச மிகுதியால் அதிக கோபக்காரன்.தன்னுயிர் தோழனுடன் இணைந்து திறம்பட பிரபல அடையகம் ஒன்றை நடத்தி வருகிறான்.மூன்று கிளைகளைக் கொண்டது.கடந்த ஐந்து வருடங்களாக அபார வெற்றியை தந்து இரு நண்பர்களுமே சிறப்பாக இருக்கின்றனர். 

தன் நண்பன் தன்னோடு மூன்று வருடங்களாத்தான் இத் தொழிலில் இணைத்திருக்கிறான்.அதற்கு முன் அவன்…

அவனைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இவன் தேடித்தான் பெற வேண்டும். எவனுக்கும் கிடைத்திருக்க மாட்டான் அவ்வகை நண்பன் அவன்.கோபம் என்பதே என்ன என்றுதான் கேட்பான்.ஆனால்  இன்று அவன் மாறியிருக்கும் விதம் நினைக்கவே பிடிக்கவில்லை இவனுக்கு. தன்னோடு அல்ல எவரோடும் பேசாது தன் வேலையை மட்டுமே பார்த்திருக்கட்டும்,தன் கண்முன்னே தானே இருக்கிறான்,அதுவே போதும் என விட்டுவைத்தது தவறோ என இன்றுதான் சிந்திக்கிறான்.

கடந்த மூன்று மாதங்களாக அவனிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் அதோடு இரு நாட்களாக அவனைக் காணாது படும் துயர், நண்பன் அவனின் வீட்டினர் கடந்த மூன்று வருடங்களாய் படும் துயர் என அனைத்தும் இவனே சிந்திக்க வேண்டிய நிலை.தன் தந்தையின் தொழிலில் நுழையாது தன்னொடு இணைந்துகொண்ட நண்பனை தான் தானே பார்த்துக்கொள்ள வேண்டும், அதுவும் அவன் பட்ட துயர், அவனே தன்னை தண்டித்துக் கொள்ளும் போது நண்பனாக அவனை நெருங்கவும் முடியாமல் படும் அவஸ்தை,அதோடு நண்பனுக்காக தன்னவளை பிரிந்திருக்கும் துயர் என அனைத்தும் சேர்த்து இன்னுமாய் கோபம் கொள்கிறான். 

இவற்றோடு சேர்த்து புதிதாய் தானே இழுத்துக்கொண்டு வந்த புது பிரச்சினையாக பெண்ணிவள்… 

இவனது வண்டி பொள்ளாச்சி  நெடுஞ்சாலையில் பிரபல உணவகம் ஒன்றிற்கு இருநூறு மீட்டர் இடைவெளி இருக்க நிறுத்தினான்.முன்பொருமுறை பல வருடங்கள் இருக்கும்,இதோ இதே இடம் வந்து சென்ற நினைவு வர அதை கடினப்பட்டு மறந்தவன்,பெண்ணவள் இருக்கையில் துயில் கொண்டிருக்க அவளைப் பார்த்தான்.அதே நேரம் தன் அன்னையின் முகம் தன் கண்முன்னே வந்து நின்றது. அவரையுமே அவ்வாறான ஒரு கருமை பூசிக்கொண்ட இரவில் தானே தன் தந்தையோடு கண்டெடுத்தான். இன்றளவும் வீட்டை விட்டு வெளியேற நடுங்கும் உள்ளதோடு தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவளைக் கண்ட நொடி முதல் அவர் படும் அவஸ்தையை பார்த்து கொண்டு தானே இருக்கிறான்.

பெண்ணவளை மெதுவாக தட்டியெழுப்பினான்.கண்விழித்தவள்  அவனைப்பார்க்க,

“வீட்டுக்கு வந்தாச்சுடா.எந்திரி. “

என அவள் பக்க கதவை திறந்து வெளியில் நின்றிருந்தவனைப் பார்த்தவள் சுற்றத்தை  கண்களால் பார்த்தாள்.ஆம் அவள் தந்தையின் உணவகம் தன் கண் முன்னே இருக்க அவனை திரும்பி பார்த்தாள். 

“உன்னால நடக்க முடியுமா? நானும் துணைக்கு வந்து விட்டுட்டு வரட்டுமா? ” 

மிகவும் கனிவாக பேசினான். கேட்டிருந்த பெண்ணின் கண்களில் நீர் நிறைந்தது. அவளோடு அவளின் அக்காவை தவிர்த்து வீட்டில் யாருமே இத்தனை அன்பாக பேசியதில்லை.பலமுறை இவ்வாறான வார்த்தைகள் கேட்க ஆசைக்கொண்டிருக்கிறாள்.அவன் மீண்டுமாய் அவளை அழைக்க,அவனை ஏறிட்டவள் தானே செல்வதாகக் கூறி  வண்டியை உணவகத்தின் பக்க வாட்டில் இருந்த பாதையில் நிறுத்துமாறு கூறினாள். 

உணவகத்தை முன்பக்கமாக அமைத்து  அதன் இரண்டாவது மாடியில் வீடை அமைத்து அதற்கு பக்கவாட்டிலேயே வாயில் அமைத்திருந்தார் பெண்ணவளின் தந்தை சுந்தர். அப்பாதையில் வண்டியை செலுத்தியவன் வயல் பக்கமாக வண்டியை  நிறுத்தி இவள் இறங்க பின் பக்க கதவையும் திறந்தான்.வண்டியை விட்டிறங்கியவளுக்கோ உடலில் ஏற்பட்ட நடுக்கம் வெளியில் பார்த்திருந்த அவனுக்குமே தெரிந்தது. 

“நான் உன்னை வீட்ல சொல்லி விட்டுட்டு வரேன் டா.இல்லன்னா தப்பா எடுத்துப்பாங்க. “

‘வேணாம் ‘என தலையசைத்தவள், 

“நானே போய்க்கிறேன்.நீங்க போங்க. ரொம்ப தேங்க்ஸ்’ என இரு கையையும் கூப்பி அவனுக்கு நன்றி கூறியவள், ‘அன்னைக்கு நீங்க வரலைன்னா உயிர விட்டுருப்பேன். “கண் கலங்கி கூறினாள். 

“ஹேய் என்ன பேச்சிது… அப்படியெல்லாம்  ஒன்னில்ல.நீ போ” என அவள் கைகளை இறக்கிவிட்டு அவள் உச்சந்தலையில் தன் கை வைத்து அழுத்தியவன், ‘போ ‘எனும் விதமாய் தலையசைக்க அவளும் வீட்டை நோக்கி நடந்தாள்.வீட்டின் கதவு திறந்தே இருக்க உள் நுழைந்தாள் பெண்ணிவள். 

வண்டியில் ஏறியவன் மனம் ஏனோ தவிக்க வண்டியை கிளப்பாது அப்படியே இருந்தான். 

ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும் உள்நுழைந்த பெண்ணை வாயிலை விட்டு சற்று வெளியே பாதைக்கு தள்ளிவிட்டார்  ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர்.

“எங்கடி மூணுமாசமா சேலைய விரிச்சிட்டு வந்திருக்க,அம்மாக்கு தப்பாம பிறந்திருக்கியே… நீ பிறந்தப்பவே  சொன்னேன். உங்க அப்பன்காரன்கிட்ட அவளைப் போலத்தான் வளரப்போறான்னு.பார்த்தியா இப்போ நான் சொன்னதுதான் நடந்திருக்கு.போனவ அப்படியே போகவேண்டியது தானே.திரும்ப எதுக்கிங்க வந்திருக்க?’ 

‘என் மகராசிக்கு கஷ்டப்பட்டு ஒரு வரனை பார்த்து முடிச்சா அடுத்த நாளே  ரெண்டாவது பொண்ணு ஓடிப்போய்ட்டான்னு அவங்களும் கை கழுவி விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் பார்க்குற வரனெல்லாம் வாசலோடையே நின்னு போகுது.நீ நல்லா இருப்பியா? உங்கம்மா வந்து என் பையனோட வாழ்க்கையை  நாசம் பண்ணா,நீயும் அவ வயித்துல பொறந்துட்டு உங்க அக்கா வாழ்க்கையையே இல்லாம பண்ணிட்ட.ச்சே இன்னும் ஒரு நிமிஷமாச்சும் இங்க நின்ன உன்னை என் கையாலேயே கொன்னுருவேன்.”

கீழே பாதையில் விழுந்துக் கிடந்தவளோ தன் அப்பத்தா கூறும் பேச்சுக்களை தாங்க முடியாது அவர் கால்களை பிடித்துக்கொண்டு கெஞ்ச, அவரோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.அவருக்கு பின்னே ஓடி வந்த தன் அக்காவை பார்க்க அவளோ கண்களில் நீர் வடிய இவளை எழுப்ப அருகே வர அவளை தடுத்த அப்பத்தவோ,

“அவ பக்கத்துல போன,அப்படியே அவ கூடவே நீயும் போயிரு.போ பின்னால.’

கத்தியவர் விடாது, 

‘நானெல்லாம் எத்தனையோ வாட்டி சொல்லிருக்கேன் அவகூட  தள்ளியே நில்லுன்னு பார்த்தியா இப்போ அவ ராசியே உன் வாழ்க்கையும் சேர்த்து காவு வாங்கியிருக்கு.”

எழுந்துக்கொள்ள முயற்சித்தவாறே பெண்ணிவளோ, 

“அக்கா நான் தப்பா எதுவுமே பண்ணல.நான் தப்பு பண்ணலைக்கா.நான் உன் பட்டு இல்ல.நான் அப்படியெல்லாம் பண்ணாலைக்கா. “மன்றாடினாள். 

தன் தங்கையின் அழுகையை பார்க்க தாங்காது, பெண்ணவளின் அக்கா தாமரை தன் அப்பத்தாவை தாண்டி ஓடிச்சென்றவள் அவளருகே மண்டியிட்டமர்ந்து அவள்  முகத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு, 

“என் பட்டு அழாதேடா.நீ அப்படியெல்லாம்  பண்ண மாட்ட.எனக்கு தெரியாதா அழாத.”

அவள் கண்ணீரை துடைத்து விட்டவள்,

“அவங்க சொல்லற மாதிரி ஒன்னில்லை.எந்திரி.” என அவளை எழுப்பப் பார்க்க பெண்ணவளோ,ஏற்கனவே உடல் பலம் இழந்திருந்தவள் எழுந்து நிற்க தடுமாறினாள்.தாமரை அவளை எழுப்பி நிறுத்தவும் அவர்களது தந்தை வரவும் சரியாக இருந்தது.தன் தந்தையின் பின்னே தன் தமயனும் வர,சிறுவயது முதலே பெண்ணவளோடு முறைத்து கொண்டு நிட்பவன்,இப்போது தந்தையை உணவகத்தில் இருந்து அழைத்து வந்திருந்தான்.பெண்ணவளை பார்த்த பார்வை அவனுமே தன் அப்பத்தா போல் தான் நினைக்கிறான் என புரிந்து கொள்ள முடிந்தது. 

“தாமர,உள்ளே போ.” தன் தந்தையின் குரல் கேட்டு அவர் பக்கம் திரும்பிய பெண்ணிவளோ ” ப்பா ” எனக் கூறி முடிக்க முன்னமே,  யா

“யாருடி அப்பா? உங்கம்மா புத்திதானே உனக்கிருக்கும், பிறந்தப்பவே சந்தேகப்பட்டேன் என்னடா இவ என் ஜாடை இல்லையே,என் பெண்ணில்லையோன்னு.சரிதான் போல.அம்மா புத்தி தானே உனக்கும்,இப்போவே உன் அழக விற்க தயாராகிட்ட.”

தன் அன்னையை மிஞ்சி பெண்ணவளின் தந்தை சுந்தரம் நஞ்சு வார்த்தைகளை மொழிய,

‘தன் காதுக்கு கேட்டது உண்மை தானா? கோபக்காரர் என்று தானே நினைத்திருந்தேன். வன்மம் நிறைந்தவர் என்று இன்றுதானே தெரிந்து கொண்டேன்.ஏன் என் மேல் இத்தனை பழி.

பெண்ணவளின் உள்ளம் வெடித்து சிதற நெஞ்சு அடைப்பது போல இருக்க கழுத்தோடு கையிட்டு நெஞ்சை அழுத்திக்கொண்டாள். 

“தாமர,உள்ளே போன்னு சொன்னேன்.உனக்கிருக்கது தம்பி ஒருத்தன் தான்.இவ உன் தங்கை இல்ல.என் பொண்ணே இல்லேங்குறேன்.இதுக்கப்றம் இந்த வாசலை தேடி வந்தேன்னு வை? “அவர் முகத்தில்  குடியிருந்த வன்மத்தோடு இவளை கை நீட்டி எச்சரிக்க பெண்ணவளோ,கை கூப்பி இடவலமாய் தலையாட்டியவள் அப்படியே திரும்பாது கண்கள் அதன் பாட்டில் நீர் வடிக்க இவர்களை பார்த்தவாறே  பின்னோக்கி நடந்தாள். இரண்டாவது அடி வைக்கவும் தடுக்கி விழப்பார்க்க, 

“பட்டு… ” என தாமரையின் குரல் ஓங்க அவளை பின்னிருந்து தாங்கிப்பிடித்திருந்தான் கிருஷ்ணா.

“அடடே அம்சமான ஆளைத்தான் பிடிச்சிருக்கா.எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்.இனி இந்தப்பக்கம்  வந்த அப்றம் இந்த சுந்தர் யாருன்னு புரிஞ்சிப்ப.”கூறியவர் சுற்றியிருந்த ஆட்களை தாண்டி தன் உணவகத்துக்கு சென்றுவிட்டார். 

அப்பத்தவோ தாமரையை விடாப்பிடியாக கையோடு இழுத்துக்கொண்டு சென்றவர் உள்ளே தள்ளி வாயில் கதவுக்கு தாளிட்டு சாவியை தன் கையோடு எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல தாமரையோ தன்  தங்கையை யன்னலூடாக பார்க்க அவளை அணைவாய் பிடித்திருந்த கிருஷ்ணா அவளை தன் வண்டியில் ஏற்றியவன் வண்டியை கிளப்ப,அவன் கொண்டிருந்த கோபத்துக்கு ஏற்ப புழுதியை கிளப்பிக்கொண்டு சீறிப்பாய்ந்தது அந்த கருப்பு நிற ஜீப் வண்டி. 

தாமைரைக்கு முன்பொரு நாள் தன் தங்கை தன்னிடம் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. 

மொட்டை மாடியிலிருந்து நெடுஞ்சாலையில்  சென்றுக்கொண்டிருந்த வாகனங்களை பார்த்திருந்த பெண்ணோ,  

“க்கா அதோ பாரேன் அந்த வண்டிய,செமையா வருதில்ல. 

“ஹ்ம்ம் நல்லா இருக்கு பட்டு.ஜீப் தானே? “

“ஆமா.நல்லா பார்த்துக்கோ.ஒரு நாள் என் வில்லன் அது போல ஒரு வண்டில வந்து என்னை அந்த வண்டில அள்ளி போட்டுட்டு போகப்போறன்.அப்படியே யாருமில்லாத காட்டுக்கு கூட்டிபோய் மொத்தமா எனக்கு மட்டும் காதலை திகட்டத் திகட்ட தரப்போறான்.”

“சரிதான்”சிரித்துக்கொண்டாள் அன்று. 

இன்றோ தன் தங்கை கூறியது நடந்து விட்டதா? ‘கடவுளே அப்படியே இருக்கட்டும். இனியாவது அவள் நிம்மதியாக சந்தோஷமாக வாழட்டும்.’தன் தங்கைக்காக கடவுளிடம் அவசரமாய் கோரிக்கை வைத்தாள்.  

அவள் இன்றல்ல மூன்று மாதங்களுக்கு முன்னமே அவளது வில்லனின் வண்டியில் அள்ளிச்செல்லப்பட்டுவிட்டாள்.அது அவளே கூறாது யாரும் அறிய முடியாது. 

அள்ளிச்சென்ற வில்லனே அதை அறியாதபோது,எங்கனம் பிறர் அறிய? 

காத்திருங்கள்… வில்லன் வருவான்.