விழிகள் 05

ei5QNQQ31722-e7444abd

‘ஆதி…’ அவளுடைய பெயரை அவனிதழ்கள் உச்சரிக்க, விழிகளிலிருந்து விழிநீர் கன்னத்தினூடே தரையைத் தொட்டது.  அவனால் கொஞ்சமும் இந்த வலியை தாங்க முடியவில்லை.

‘ஏன் என் காதல் உனக்கு புரியல ஆதிம்மா? சின்னவயசுலயிருந்து உன்னை மட்டுமே நினைச்சிட்டு இருக்கேன். எப்படி என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியும்? இட்ஸ் ஹர்ட்டிங். என்கிட்ட திரும்பி வந்துடு ஆதிம்மா.’ விழிகளிலிருந்து வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டவாறு, அறை பால்கனியில் வானத்தை வெறித்துக்கொண்டு நின்றிருந்தான் மஹி.

சரியாக அவனுக்கொரு அழைப்பு!

திரையைப் பார்த்தவன், தொண்டையைச் செறுமி குரலை சரிசெய்தவாறு “மாம்…” என்றழைக்க, எதிர்முனையில் மாயாவிடமிருந்து ஒரே கேள்விதான்.

“ஆர் யூ ஓகே மஹி?”

தன் அம்மா இவ்வாறு கேட்டதுமே அவனுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை. தாய், பிள்ளை பாசமென்ன சும்மாவா?  அம்மாவால் மட்டுமே தன் பிள்ளையின் மனதை உணர முடியும்.

“அம்..மா…” சற்று திணறலோடு அதிர்ந்த குரலில் அவனுடைய வார்த்தைகள் வர, “நீ நல்லாதானே இருக்க மஹி? என் மனசு ஏதோ சொல்லிக்கிட்டே இருக்கு. அதுவும், உன் நினைப்புதான் அதிகமா இருக்கு. உன் பாட்டுக்கு அம்மாவ விட்டுட்டு போயிட்டல்ல?” மாயா பேசிக்கொண்டே போக, “லவ் யூ அம்மா.” சட்டென்று சொன்னான் மஹேந்திரன்.

அதில் மாயாவின் இதழ்கள் புன்னகைக்க, விழிகள் தன் மகன் நினைவில் சற்று கலங்கி போயிருந்தன.

“லவ் யூ டூ ஸ்வீட்ஹார்ட்.” அவள் அத்தனை பாசத்தோடுச் சொல்ல, “மாம், நான் நல்லா இருக்கேன். சீக்கிரம் இங்க வாங்க. உங்களுக்காக நிறைய பேர் காத்திருக்காங்க. தேய் ஆர் மிஸ்ஸிங் யூ. நவ் ஐ டூ மிஸ் யூ.” புன்னகையுடன் சொன்னான் மஹி. ஏனோ மாயாவுக்கும் தன் நண்பர்களின் நினைவுதான் சிந்தனை முழுவதும்.

“ஐ டூ மிஸ் யூ ஆல்.” என்று கலங்கிய குரலில் சொன்னவள், “அவங்க மிஸ் பண்ணியிருப்பாங்க ஒத்துக்குறேன். பட் யூ… அதுக்கு வாய்ப்பில்லையே!” ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பது போல் பொடி வைத்து அவர் பேச, “அப்படியெல்லாம் எதுவும் கிடையாதும்மா. நீங்களா ஏதாச்சும் நினைச்சிக்காதீங்க.” தேய்ந்த குரலில் மஹி சொன்னதும், துணுக்குற்றார் மாயா.

“மஹி, அங்க ஏதாச்சும் பிரச்சினையா? நீ நல்லா இல்லைன்னு என் மனசு சொல்லுது.” அவர் படபடப்புடன் கேட்க, “மாம், ஐ அம் ஆல்ரைட். நீங்க அப்பாவ பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு. முடிஞ்சதும் கூப்பிடுறேன். சீ யூ, லவ் யூ டார்லிங்.” ‘எங்கு இதற்கு மேல் பேசினால் குரலை வைத்து கண்டுபிடித்துவிடுவார்களோ?’ எனப் பயந்தவன், வேகவேகமாக பேசிவிட்டு அழைப்பை பட்டென்று துண்டித்தான்.

அழைப்பை துண்டித்ததுமே மீண்டும் அவன் விழிகளில் கண்ணீர்.

‘ஐ அம் சோரிம்மா, நான் பொய் சொல்லிட்டேன். ஐ அம் நொட் ஓகே. ஆதிக்கு என் காதல் புரியலம்மா, அவளுக்கு அகி..அகியதான் பிடிச்சிருக்காம். என் காதலுக்கு வெல்யூ இல்லைம்மா.’ என்று கதறியழுதவனுக்கு மாயா தன் காதல் கதையை சொன்ன தருணம்தான் நியாபகத்திற்கு வந்தது.

‘உன் அப்பாவோட காதலை அடைய ஆறு வருஷம் நான் காத்திருந்தேன். அவருக்கு வேற பொண்ணோட நிச்சயம் வரைக்கும் போச்சு. ஆனா, நான் என்னோட காதலை விடல்லையே! நம்ம காதலை யாருக்காவும் விட்டுக்கொடுக்க கூடாது மஹி. உன் காதலுக்காக உன்னை தேடி கூடிய சீக்கிரம் ஒருத்தி வருவா.’

தன் அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தவனின் இதழில் விரக்திப்புன்னகை!

‘அப்பாவ நீங்க காதலிக்குற சமயம் அவர் வேணாம்னு சொல்லும் போது உங்களுக்கும் இப்படியாம்மா வலிச்சிருக்கும்? எப்படிம்மா அந்த வலிய தாங்கிக்கிட்டீங்க? நீங்க தாங்கினது போல என்னால இந்த வலிய தாங்க முடியலயேம்மா. என் காதலுக்காக அவக்கிட்ட பிடிவாதம் பிடிக்க கூட தெரியல. ச்சே!’ குழந்தைப் போல் விம்மி விம்மி அழுதான் அந்த ஆறடி ஆண்மகன்.

அதேநேரம், கதவு தட்டப்பட, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தவன், அவசர அவசரமாக கண்களை அழுந்தத் துடைத்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்து சரி செய்துக்கொண்டான். ஆனால், ஏனோ சிவந்த வீங்கிய முகம் அவன் அழுததை அப்பட்டமாகவே காட்டிக் கொடுத்தது.

மஹி கதவைத் திறக்க, “தீரா…” என்று ஏதோ பேச வந்த ஆத்வி சட்டென்று பேச்சை நிறுத்தி, “அழுதியா என்ன?” அவன் முகத்தை கூர்ந்துப் பார்த்தவாறுக் கேட்க, “அது… அது வந்து… கோல்ட் ஆதி, அதான்…” திக்கித்திணறி சமாளித்தான் அவன்.

“அவ்வளவுதானா?” மஹியை தள்ளி விட்டுக்கொண்டு உள்ளே வந்தவள் அறைக் கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள். “தீரா, சத்தியமா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. சும்மாவே அவன் திமிரு பிடிச்சவன், அவன்கிட்ட போய் என் காதலை சொல்றதை நினைச்சாலே பயமா இருக்கு. கண்டிப்பா நோஸ்கட் பண்ணுவான். வாட் டு டூ? ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுடா.” விழிகளை உருட்டி புலம்பித் தள்ளினாள்.

‘என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக் கூடாது. நாங்க உயிரா காதலிக்குறவங்களுக்கு அவங்க காதலுக்காக ஹெல்ப் பண்றது உயிரோட சாகுறதுக்கு சமம்.’ என்றுதான் உள்ளுக்குள் நினைக்க முடிந்தது மஹியால்.

முயன்று சிரிப்பை வரவழைத்து, “அவனுக்கு என்ன பிடிக்குமோ, அதை பண்ணு ஆதிம்மா. கண்டிப்பா நீ அவனுக்காக பண்ணும் போது உன் காதலை புரிஞ்சிக்க வாய்ப்பிருக்கு.” மஹி எங்கோ வெறித்துக்கொண்டுச் சொல்ல, “கரெக்ட்! பட், அவனுக்கு என்ன பிடிக்கும். சின்னவயசுலயிருந்து நீதான் அவன் கூட இருக்க. நீயே சொல்லு தீரா!” உதட்டை  பிதுக்கி பாவமாக கேட்டவளைப் பார்க்கப் பார்க்க, ‘ஏன்டி என் காதல் மட்டும் உனக்கு புரியல?’ அவனுக்கு கத்திக் கேட்க வேண்டும் போலிருந்தது. முயன்று அடக்கிக்கொண்டான்.

அவளின் ஆர்வமான பார்வையை உணர்ந்து, “சின்னவயசுலயிருந்து அவனுக்கு டான்ஸ்ல ஆர்வம் இருக்கு, என்னை விட.” இறுகிய குரலில் சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, “அட ஆமால்ல! இன்னைக்கு அகி வீட்டுலதான். அவன எப்படி என் கூட ஸ்டூடியோவுக்கு வர வைக்கணும்னு எனக்கு தெரியும். தேங்க்ஸ்டா.” என்று மஹியின் தலைமுடியைக் கலைத்துவிட்டு  சிட்டாய் அவள் பறந்துச் செல்ல, கோபத்தில் தரையை காலால் உதைத்தான் அவன்.

அன்று மாலை,

“மம்மி…” என்று கத்திக்கொண்டே ஹோலுக்கு வந்தவளின் பார்வையோ அங்கு ஹோல் சோஃபாவில் அமர்ந்து, “டேய்! அவன சுடுறா. அவன விடாத! ஷீட்…” என்று அலைப்பேசியில்  விளையாடி கத்திக்கொண்டிருந்த அகஸ்டினின் மீதுதான் பதிந்தது.

அவன் கத்தலில் கீர்த்திக்குதான் தலைவலியே வந்துவிட்டது. ‘மாயா, உன்னை மாதிரி நம்ம வீட்டு பசங்கள வளர்த்து வச்சிருக்கியே, பாவி!’ தன் நண்பியை உள்ளுக்குள் வசைப்பாடியவாறு அவர் அமர்ந்திருக்க, தன் மகளின் அழைப்பில் நெற்றியை நீவி விட்டுக்கொண்டு நிமிர்ந்துப் பார்த்தார்.

“மம்மி, நான் டான்ஸ் ப்ரேக்டீஸ் போறேன். கொஞ்ச நாளா ஷூட்டிங், வேலைன்னு போகவே முடியல. ஆனா யாராச்சும் கூட வந்தா… ரொம்ப நல்லாயிருக்கும்.” நீட்டி முழக்கி பேசியவாறு ஓரக்கண்ணால் அகஸ்டினை அவள் நோக்க, அவள் எதிர்ப்பார்த்தது போல் அவனுடைய விரல்கள் சற்று நின்று யோசிப்பது போல் தாளம் போட்டன.

சட்டென அகஸ்டின் ஏதோ யோசித்து நிமிர்ந்துப் பார்க்க, தன் தாயின் புறம் பார்வையை திருப்பிக்கொண்டவள், “நான் போயிட்டு வர்றேன்ம்மா.” என்றுவிட்டு எதேர்ச்சையாக அகஸ்டினைப் பார்ப்பது போலான பாவனையில் புன்னகைத்து வைத்தாள். சரியாக, மஹியும் மாடியிலிருந்து ஹோலுக்கு வர, அடுத்தகணம் அவனுக்கு ‘ஏன்தான் வந்தோம்?’ என்றிருந்தது.

“ஏய் சூப்பர் மொடல், கொஞ்சம் இரு! நம்ம மாமாவோட டான்ஸ் ஸ்டூடியோவுக்கா கிளம்புற? ஓஹோ! மேடம் அதெல்லாம் பண்ணுவீங்களா? வெயிட், நானும் வர்றேன்.” என்றுவிட்டு சட்டையை சரிசெய்து, அங்கிருந்த கண்ணாடியில் தலைமுடியை கலைத்து கையாலேயே வாரியவாறு திரும்பியவனின் பார்வையில் சரியாகச் சிக்கினான் மஹி.

“டேய் இடியட், நான்தான் வேலைக்கு போறேன். வீட்டுலதானே இருக்க! ஆனாலும் என்னை விட சார்தான் ரொம்ப பிஸியா இருக்கீங்க. சரி அதை விடு, சீக்கிரம் கிளம்பு! நம்ம ஸ்டூடியோவுக்கு போயிட்டு வரலாம்.” அகஸ்டின் அழைக்க, ஏனோ முன்னிருந்தது போல் மஹியால் தன் தோழனுடன் சகஜமாக பேச முடியவில்லை.

“சோரி, ஐ ஹேவ் சம் வர்க். நீங்க போயிட்டு வாங்க.” இறுகிய குரலில் சொல்லிவிட்டு மீண்டும் அவன் தனதறைக்கேச் செல்ல, அவனைப் புரியாதுப் பார்த்தவன், பின் தோளை குலுக்கிவிட்டு முன்னோக்கி நடந்தான். இங்கு ஆத்விக்குதான் சந்தோஷம் தாளவில்லை. ‘தேங்க்ஸ் கடவுளே!’ உள்ளுக்குள் துள்ளிக் குதித்தவாறு அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓடினாள் ஆத்விகா.

இங்கு, மஹிக்கு கொஞ்சமும் பொறுக்கவில்லை. மனம் ஏனோ பிசைய, அதன் விளைவாக ஆத்வியும் அகஸ்டினும் ஸ்டூடியோவுக்கு வந்து சேரும் போது ஸ்டூடியோ வாசலில் தன் காரில் காத்திருந்தான் அவன். அந்த தருணம், மஹிக்கு ஏனோ தான் பார்த்த காட்சியில் சிறு சந்தோஷம். காரணம், ஆத்வி காரில் வந்திருக்க, அகஸ்டினோ தன் புல்லட்டில் அல்லவா வந்திருந்தான்!

வண்டியை நிறுத்திவிட்டு விறுவிறுவென உள்ளே செல்லப் போனவன், சற்று நின்று பின்னால் சரிந்து அங்கு நிறுத்தியிருந்த மஹியின் காரைப் பார்த்தான். காரையும் பின்னால் உர்ரென்று முகத்தை வைத்து காரில் அமர்ந்திருந்த ஆத்வியையும் மாறி மாறிப் பார்த்து, ‘இந்த காதலர்கள் தொல்லை தாங்க முடியல.’ விழிகளை உருட்டியவாறு உள்ளே ஓடிவிட்டான்.

இங்கு மஹியோ தம் குடும்பத்தினருக்கென அமைக்கப்பட்டிருந்த விஷேட கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்க, அதே இடத்தில் தன் வண்டியையும் நிறுத்திவிட்டு, “தீரா…” என்று மஹியிடம் ஓடி வந்தாள் ஆத்வி.

“நிஜமாவே அவன் உன் ஃப்ரென்ட்தானா? கார்ல வரும் போது ப்ரொபோஸ் பண்ணலாம்னு என்னென்னவோ ப்ளான் போட்டேன். மொத்தமா போச்சு! என்னை கண்டுக்கவே மாட்டேங்குறான்.” ஆத்வி புலம்ப, மஹியோ எதுவும் பேசவில்லை. சரியாக, மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் ரோஹனின் பழைய மாணவன் கௌத்தம் தன் வண்டியை நிறுத்தவென அந்த இடத்திற்குள் நுழைய, அவன் கண்களில் சிக்கினான் ஆத்வியுடன் நின்றிருந்த மஹி.

“இது…” நெற்றியை தட்டி யோசித்தவனுக்கு மூளையில் உரைக்க, வண்டியை நிறுத்திவிட்டு அவர்களிடம் ஓடி வந்தான். “வாவ்! நீங்க மஹேந்திரன் சைத்தன்யா ரைட்? சார் நீங்க வர்றதை பத்தி எதுவுமே சொல்லல்ல. இல்லைன்னா, நான் முன்னாடியே அர்ரேன்ஜ்மென்ட்ஸ் பண்ணியிருப்பேன். ஐ அம் கௌத்தம், டான்ஸ் கிரியோக்ராஃபர். ரோஹன் சாரோட ஓல்ட் ஸ்டூடனட்.” பரவசத்தோடு ஆரம்பித்து, தன் அறிமுகத்தோடு நிறுத்தினான் கௌத்தம்.

“நைஸ் டு மீட் யூ கௌத்தம், பட் என்னை எப்படி…” அவனை ஆழ்ந்து நோக்கியவாறு மஹி கேட்க, “இதுவரைக்கும் சாரும் மேடமும் உங்கள வெளியுலகத்துக்கு அவங்களோட மகனா அறிமுகப்படுத்தல. அது கூட உங்க பாதுகாப்பு கருதிதான்னு சார் சொன்னாரு. சாரோட நான் ரொம்ப க்ளோஸ். உங்க ஃபேமிலி ஃபோட்டோ பார்த்திருக்கேன். அதான், பார்த்ததும் கண்டுபிடிச்சிட்டேன்.” என்றான் அவன் புன்னகையுடன்.

பின் கௌத்தமே தொடர்ந்து, “உள்ள போகலாமா சார்?” என்றுவிட்டு அவர்களை விஷேட மின்தூக்கி வழியே மேல்தளத்துக்கு அழைத்துச் செல்ல, அங்கு உள்ளே வந்த அகஸ்டினோ, அங்குமிங்கும் விழிகளை சுழலவிட்டு நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். சரியாக, அவன் தோளை ஒரு கரம் பிடிக்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி!

“வெங்கி…” அகஸ்டின் உற்சாகமாக அழைக்க, “நீ இங்க என்னடா பண்ற?” புரியாதுக் கேட்டான் வெங்கட்.

“அதுவா…” என்றிழுத்தவாறு அவன் காதருகே குனிந்தவன், “இது என் மாமாவோட ஸ்டூடியோதான். சின்ன வயசுல வந்தது, அதான் இப்போ ஒரு விசிட் போடலாம்னு…” ஹஸ்கி குரலில் தீவிரமாகச் சொல்ல, ‘இன்னும் திருந்தல்லையா இவன்?’ என்ற ரீதியில் அகஸ்டினை பார்த்தான் அவன்.

“மிஸ்டர்.ரோஹன் உன் மாமா… அதை நான் நம்பணும்? அடிங்க! சரிதான் போடா!” கொஞ்சமும் நம்பாது அலட்சியப்படுத்திவிட்டு வெங்கட் நகர, ‘ஙே’ என அவனை அகஸ்டின் ஒரு பார்வைப் பார்க்க, சரியாக ஒரு திசையில் சலசலப்பு!

“ஃப்ரென்ட்ஸ், ரோஹன் சாரோட சன் வந்திருக்காரு. செம்ம ஹேன்ட்ஸமா இருக்காரு.” என்ற சில பெண்களின் குரல் வேறு! அதேநேரம் மஹியும் சில பேரோடு உள்ளே நுழைய, ஆத்வியோ உள்ளே நுழைந்ததுமே அகஸ்டினைதான் வலை வீசித் தேடினாள்.

‘அட ச்சே! இவனுக்கு போய்தான் இம்புட்டு பரபரப்பா? நம்ம கண்ணுக்கு இவன் அப்படி ஒன்னும் ஹேன்ட்ஸமா தெரியல்லையே! நம்ம கண்ணுல கோளாறா? இல்லை, சொன்னதுங்களுக்கு கண்ணு தெரியல்லையா?’ தீவிரமாக யோசித்தவாறு அகஸ்டின் ஓரமாக நின்றிருக்க, அவனைப் புன்னகையுடன் பார்த்தவாறு தன் தோழிகளுடன் சேர்ந்துக்கொண்டாள் ஆத்வி.

சரியாக, மஹிக்கு தேவையான வசதிகளை கௌத்தம் செய்துக் கொடுத்து அமர வைக்க, ‘இதெல்லாம் டூ மச்! எனக்கு உட்கார ஒரு பிளாஸ்டிக் செயார் கூட தரல்லடா நீங்க.’ பொறுமியவாறு அகஸ்டின் நிற்க, அங்கிருந்த மாணவர்களுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.

எல்லோரும் அதில் கவனமாக, ‘டெப் டான்ஸ்’ எனப்படும் நடனத்திற்கேற்ற இசை ஒலிக்க, அணிந்திருந்த சப்பாத்து தரையில் ஒலிக்கேற்ப தட்ட, ஒரு பெண்ணுடன் இணைந்து ஆடினான் கௌத்தம்.

அகியோ அதை கூர்ந்துப் பார்க்க, ஆத்வியின் முழுக் கவனமும் அகஸ்டினின் மேல் படிந்திருந்தது என்றால், மஹியின் விழிகளோ ஆத்வியின் மேல்தான் படிந்திருந்தது.

ஆடி முடித்த கௌத்தம், “தட்ஸ் ஆல், என்ன மாதிரி ஸ்டெப்ஸ் இருக்குன்னு நல்லா கவனிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனி டவுட்ஸ்?” மாணவர்களைப் பார்த்துக் கேட்க, “ஆப்ஜெக்ஷன் மாஸ்டர்!” என்றொரு குரல். மொத்தப் பேரும் குரல் வந்த திசையை நோக்க, “நீங்க ஆடினதுல கொஞ்சம் ஸ்டெப்ஸ்ஸ சேன்ஜ் பண்ணா நல்லா இருக்கும்னு தோனுது.” என்றான் அகி பட்டென்று.

அவனை கூர்ந்து நோக்கிய கௌத்தம், “யூ…” என்று கேள்வியாக இழுக்க, “மை ஃப்ரென்ட்.” என்று வெங்கட் வேகமாக சொன்னதும், “ஓஹோ! என்னை தப்பு சொல்ற அளவுக்கு சாருக்கு ரொம்ப நல்லா தெரியுமோ?” கேலித்தொனி ஒலித்தது கௌத்தமின் குரலில்.

‘அவன பத்தி தெரியாம வாய விடுறானே!’ நடப்பதைப் பார்த்து மஹிக்கு அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.

“ஐ திங் சோ.” அலட்சியமாக அகி தோளைக் குலுக்க, அந்த இடத்திலிருந்து சற்று ஒதுங்கி நின்ற கௌத்தம், “அப்போ சாரோட திறமைய காட்டலாமே!” மேடையை கை நீட்டிக் காட்டி, கேலியாக சொல்லிச் சிரிக்க, கொஞ்சமும் அசரவில்லை அகஸ்டின். சட்டை கையை மடித்துவிட்டவாறு அந்த மேடைக்கு வந்தவன், சுற்றியிருந்த ஆளுயர கண்ணாடியில் தலை முடியை கலைத்து, சரி செய்துக்கொண்டான்.

சுற்றியிருந்தவர்களோ அவனையே கொஞ்சம் ஆர்வம், கொஞ்சம் கேலியோடு நோக்க, ஆத்வியை ஒரு விரலால் அழைத்தவன், அவள் தன்னருகில் வந்து நின்றதுமே தான் அணிந்திருந்த சப்பாத்தை தரையில் அடித்து நடனத்தை ஆரம்பித்தான்.

ஒலிக்கேற்ப ஆத்வியையும் சுழற்றி அவன் நடனமாடும் அசைவுகளில் கௌத்தமே கேலி மறைந்து ஆச்சரியம் கலந்த ஆர்வத்தோடு நோக்கினான்.

இதில் ஆத்வியின் மனநிலையை சொல்லவா வேண்டும்? தான் காதலிப்பவனுடன் நெருங்கி ஆடுவதில் அவளுக்கென்ன கசக்கவா போகிறது? ஆனால், மஹிக்குதான் கொஞ்சமும் ஜீரணிக்க முடியவில்லை. கை முஷ்டியை இறுக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு  அமர்ந்திருந்தான் அவன்.

இசை நின்றதும் நடனத்தை அகஸ்டின் நிறுத்த, மொத்தப் பேருமே கை தட்ட ஆரம்பித்துவிட்டனர். கூடவே “வாவ்!” “சூப்பர்.” என்ற பாராட்டு வார்த்தைகளும். ஆத்வியோ வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க திண்டாட, அகஸ்டினோ தன்னை சுற்றி நடப்பவைகளை கொஞ்சமும் உணரவில்லை.

கைகளை நீட்டி கெத்தாக, “வெல்கம் வெல்கம்.” என்றவாறு குனிந்து நிமிர்ந்தவன், கௌத்தமைப் பார்த்து கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, “நொட் பேட்!” சிரிப்புடன் சொல்லி பாராட்டும் விதமாக அவனை அணைத்துக்கொண்டான் கௌத்தம்.

அவனின் அணைப்பிலிருந்து விலகி அகஸ்டினின் விழிகள் முதலில் தேடியது என்னவோ மஹியைதான். ஆனால், அவன் அங்கு இருந்தால்தானே!

தன் காரில் அமர்ந்திருந்தவனுக்கு கொஞ்சமும் ஆத்திரம் அடங்கவில்லை. அத்தனை வலி அவனுள்! “ஆதி…” என்று கத்தியவாறு விழிகளில் விழிநீருடன் கோபமாக ஸ்டீயரிங்கை குத்தினான் மஹி.