விழிகள் 07

eiE0M4J5048-38458ce8

“இப்போதைக்கு மாமா இரண்டு பேருக்கும் எதையும் சொல்ல வேணாம். சரியான அவசர குடுக்கைங்க இரண்டும். ஏதாவது பண்ண போய் ஆத்விக்கு ஏதாச்சும் ஆகிற போகுது. அவள யாராச்சும் கடத்தியிருந்தா கண்டிப்பா நம்மள கான்டேக்ட் பண்ணுவாங்க. இப்போ மொதல்ல நாங்க ஆத்விய தேடுறோம். முடியலன்னா, மாமாக்கிட்ட சொல்லி அடுத்து என்ன செய்வோம்னு யோசிக்கலாம்.” அகி சொல்லியிருக்க, அவனின் சொல்லுக்கேற்ப தன்னவனிடம் சொல்லாது எல்லா கடவுள்களையும் வேண்டியவாறு தனதறையில் அழுதுக்கொண்டிருந்தார் கீர்த்தி.

ஆனால், அலைஸ்தான் விடயம் கேள்விப்பட்டு இத்தாலியில் இருக்கும் மாயா, ரோஹன் வரை விடயத்தை சொல்லவென அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்தி கீர்த்திக்கு துணையாக வைத்துவிட்டு வெளியேற படாத பாடுபட்டுவிட்டான் அகஸ்டின்.

மஹியோ அவசர அவசரமாக காரில் ஏறி அமர்ந்து அகஸ்டினைப் பார்க்க, அவனும் முன்சீட்டில் ஏறச் சென்றவன், ஏதோ தோன்றவும், சற்று எட்டி பின்னால் பார்த்தான். அங்கு மஹி ஏறியதைப் பார்த்ததுமே அவனின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த காவலர்களும் தங்களது வண்டியில் ஏறி பின்தொடர தயாராக நின்றிருந்தனர். அகஸ்டினுக்கோ அதைப் பார்த்ததுமே அத்தனை எரிச்சல்!

“இவனுங்களோட என்னால போக முடியாது. எப்போ பாரு வால் மாதிரி பின்னாடியே வர வேண்டியது!” கதவை சாத்திவிட்டு தன் புல்லட்டை நோக்கி அகஸ்டின் செல்ல, முதலில்  கேள்வியாக நோக்கியவன், பிறகு அகி பேசிய பேச்சில் கடுப்பாகி காரை வேகமாக கிளப்பிக்கொண்டுச் சென்றான்.

கீர்த்தியிடமிருந்து பெற்ற சில விலாசங்களுக்குச் சென்று, சில எண்களுக்கு அழைத்து அகஸ்டின் ஆத்வியைத் தேட, மஹியும் ஃபோட்டோ ஷூட்டிங்காக இன்று  அவள் செல்லவிருந்த இடத்திற்குச் சென்று தன்னவளை விழிகளில் நீரோடு தேட ஆரம்பித்தான். ஆனால், ஒருமணி நேரம் கடந்தும் ஆத்வியைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்திற்கு மேல் பாதையோரமாக வண்டியை நிறுத்திய மஹிக்கு அழுகையை அடக்கவே முடியவில்லை. “ஆதி… ஆதி, எங்க போனடி? ப்ளீஸ்டி என் முன்னால வாடி. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு மனசு ரொம்ப பதறுதுடி. அய்யோ! எங்கதான்டி போய் தொலைஞ்ச? என்னால முடியலடி, ரொம்ப பயமா இருக்கு.” தன்னவளை நினைத்து கைகளில் முகத்தைப் புதைத்து அழுதவாறு மஹி காரில் அமர்ந்திருந்தான் என்றால், அகஸ்டினும் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.

‘பேசாம அத்தை மாமாக்கிட்ட சொல்லுவோமா? கண்டிப்பா அவங்களோட இன்ஃப்லூவென்ஸ்ஸ வச்சி ஆத்விய கண்டுபிடிச்சிறலாம். ஆனா, இவங்க லீகல்லா ஏக்ஷன் எடுத்து ஏதாவது பண்ண போய், அது ஆத்விக்கு ஆபத்தா முடிஞ்சிருச்சின்னா…? அப்படி நடக்க விடக் கூடாது. என்ட்… நிஜமாவே இவள கடத்திதான் இருக்காங்களா? ஏன்னா, இவ மதியம் ஷூட்டிங்க்கு போகல. கடத்தினவங்களும் இம்புட்டு நேரமா நம்மள கான்டேக்ட் பண்ணவும் இல்லை. எங்க போயிருப்பான்னு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது.’

நெற்றியை எரிச்சலாக நீவி விட்டவாறு திரும்பியவனின் விழிகளுக்கு ஒரு உருவம் சிக்கியது. ‘இது…’ என்று விழிகளை சுருக்கி அகஸ்டின் முகத்தை சுழித்தவாறு அந்த உருவத்தை நோக்க, சரியாக அவனுக்கு அலைஸிடமிருந்து அழைப்பு வந்தது.

அதை ஏற்று பேசியவன், அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டின் முன்தான் வண்டியை நிறுத்தியிருந்தான். அகஸ்டின் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைய, மஹியும் தனது காரை நிறுத்திவிட்டு வேகமாக வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்த மஹியின் விழிகள் சோஃபாவில் அமர்ந்திருந்தவளைப் பார்த்ததும் கலங்கியது என்றால், அகஸ்டினின் விழிகளோ கோபத்தை கக்கின.

தன்னெதிரே அமர்ந்திருந்த ஆத்விகாவை பற்களைக் கடித்துக்கொண்டு சட்டையை மடித்துவிட்டவாறு, “கொஞ்சம் கூட அறிவில்லை? எங்கடிப் போய் ஊர் மேய்ஞ்சிட்டு வர்ற? உன்னை…” திட்டிக்கொண்டு அகஸ்டின் அடிக்கச் செல்ல, அதற்குள் “ஸ்டாப் அகி!” என்று விறைப்பாக முன்னால் வந்து நின்றான் மஹி.

அகஸ்டினோ அவனை முறைக்க, மஹியோ தன்னவளைதான் விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தான். “என்னாச்சு ஆத்விம்மா, பதில் சொல்லு! வந்ததுலயிருந்து அமைதியாதான் இருக்க.” கீர்த்தி மகளின் தலையை தடவி விட்டவாறுக் கேட்க, “எங்கேயாச்சும் சுத்திட்டு வந்திருப்பா. அதான் மேடம் என்ன சொல்லி சமாளிக்குறதுன்னு தெரியாம அமைதியா இருக்காங்களா இருக்கும். ஏய் வாய திறந்து சொல்லுடி!” அவளின் அமைதியில் கடுப்பாகி கத்தினான் அகஸ்டின்.

விழிகளை மட்டும் உயர்த்தி அவனை முறைத்த ஆத்வி, “மதியம் ஷூட்டிங்குதான் போயிக்கிட்டு இருந்தேன். போற வழியில ஒருமாதிரி மயக்கமா வந்திச்சு. என்னன்னு தெரியல. எப்படியோ மைன்ட்ட தூங்க விடாம வண்டிய ஓரமா நிறுத்தினேன். அப்றம் கண் முழிச்சி பார்க்குறப்போ சிலபேர் என்னை சுத்தி இருந்தாங்க. அதுக்கப்றம் என்னாச்சுன்னு நியாபகம் இல்லை. மறுபடியும் கண் விழிக்குறப்போ எந்த இடத்துல ஷூட்டிங்கு வர சொல்லியிருந்தாங்களோ அங்க இருந்தேன்.” என்று சொல்லி முடிக்க, சுற்றியிருந்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

நரம்புகள் புடைத்து, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவாறு மஹி நின்றிருக்க, அகஸ்டினோ நெற்றியை ஒரு விரலால் தட்டியவாறு யோசித்துக்கொண்டிருந்தான்.

சரியாக, அகஸ்டினின் அலைப்பேசி ஒலிக்க, திரையைப் பார்த்தவனோ, “அப்போ நீங்க உளறிட்டீங்க அப்படிதானே?” என்று கேட்டு தன் அம்மாவை முறைத்தான். அதில் புன்னகைத்த அலைஸ், “உன் அத்தைக்கிட்ட உன்னால எதையும் மறைக்க முடியாது அகி.” என்று சொல்ல, பற்களைக் கடித்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தான் அவன்.

மறுமுனையில், “நீ சொல்லலன்னா எனக்கு தெரியாதா அகஸ்டின்? எங்ககிட்ட மறைக்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா என்ன? நம்ம வீட்டுப்பொண்ணை கடத்தியிருக்காங்கன்னா எவ்வளவு தைரியம்? கூடிய சீக்கிரம் நானும் அவரும் இந்தியாவுக்கு வர்றோம்.” அழுத்தமாக வந்தன மாயாவின் வார்த்தைகள்.

ஆனால், அதோடு முடியவில்லை. மாயாவிடமிருந்து தருண், சஞ்சய்யிற்கும் விடயம் போயிருக்க, அடுத்தநாளே வீட்டுக்கு வந்து இறங்கியவர்கள், தங்களிடம் மறைத்ததற்கு கீர்த்தி, அலைஸ் மற்றும் அகஸ்டினை ஒரு பிடி பிடித்துவிட்டனர்.

அடுத்து வந்த நாட்கள் ஏனோ ஆத்விகா வெளியவே செல்லவில்லை. ஏதோ ஒரு பயம்! ஆனால் இங்கு, ‘நீயும் என்னை காதலிச்சிருந்தன்னா இந்நேரம் உன்னை அணைச்சி உரிமையா ஆறுதல் சொல்லியிருப்பேன். வேற ஒருத்தனை நினைக்குற உன்னை தொட கூட மனசு தயங்குது.’ உள்ளுக்குள் நினைத்து மஹி குமுறினாலும், தன்னையும் மீறி அவளை தன் கண் வளைவுக்குள்ளே வைத்திருந்தான்.

இவ்வாறு சில நாட்கள் நகர்ந்து அன்று அலுவலகத்தில்,

“அகி…” என்றழைத்த ஒரு பெண்ணின் குரலில் திரையிலிருந்து பார்வையை எடுத்து வேகமாக நிமிர்ந்தவன், “இன்னைக்கு நைட் எனக்கு ஓகே.” என்று பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு சென்ற அந்த பெண்ணிற்கு பதிலுக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பி கோலரை தூக்கி விட்டுக்கொண்டான்.

அவனுடைய தோளை சுரண்டிய வெங்கட், “இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல. உன் வீட்டுல உன்னை என்ன தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்களா என்ன?” என்று கேட்டு முறைக்க, “இதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும் அய்யாச்சாமி. நீ சின்னப்பையன், இதெல்லாம் உனக்கு புரியாது.” அகி ஏளனமாகச் சொல்லவும், அவனோ கடுப்பாகிவிட்டான்.

“ரொம்பதான் ஆடுற. இந்த சிங்களோட சாபம் உன்னை சும்மா விடாது.” வெங்கட் பொறுமிக்கொள்ள, அந்த சாபம் கடவுளிடம் சென்றுவிட்டது போலும்!

அலுவலக தேவைகளுக்கென கொடுக்கப்பட்ட எண்ணிற்கு அழைப்பு வர, அதை ஏற்று பேசியவன், “ஸப்பாஹ்…” என்று சலித்தவாறு எழுந்து கோப்புகளை அச்சு செய்யும் ப்ரிண்டர் அறையை நோக்கிச் சென்றான். வேகமாக சென்றவன், ‘படார்’ என கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைய, எதையோ வேகவேகமாக அச்சு செய்துக்கொண்டிருந்த அலீஷா திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

அங்கு அகஸ்டினை அவள் எதிர்ப்பார்க்கவில்லையென அவளுடைய அதிர்ந்த முகமே அப்பட்டமாகக் காட்டியது.

“நீ இங்க பண்ற?” அகஸ்டின் விழிகளைச் சுருக்கி சந்தேகமாகக் கேட்க, “அது… அது வந்து…” என திணறியவளுக்கு, என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“மிஸ்டர்.சுந்…சுந்தர்தான் இந்த பேப்பர்ஸ்ஸ ப்ரிண்ட் பண்ணி கொண்டு வர சொன்னாரு. ரொம்ப அர்ஜன்ட்னு சொன்னாரு.” என்றுவிட்டு அவள் ஓடப் போக, அவள் கரத்தை பற்றியிழுத்தவன், “அன்னைக்கு வைன் ஷோப் வாசல்ல என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” என்று கேட்டு அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கினான்.

அன்று ஆத்வியைத் தேடி அலையும் போது அவன் பார்த்த காட்சியே மதுபானக் கடை வாசலில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று அலீஷா மது வாங்கும் காட்சிதான்.

அகஸ்டின் கேட்டதுமே அலீஷாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. “எப்..எப்போ?” திக்கித்திணறி அவள் கேட்க, “எப்போன்னு தெரியாது உனக்கு?” ஒரு மாதிரிக் குரலில் அகஸ்டின் கேட்டதும் பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு வாயில் வார்த்தைகள் வந்தால் தானே!

அவனும் அவளையே கழுகுப்பார்வை பார்க்க, சட்டென அவளுடைய முகவபாவனை மாறியது. “தினு, நிஜமாவே உங்களுக்கு நான் தெரிஞ்சேனா?” மெல்லிய குரலில் அவள் கேட்க, இப்போது புரியாது புருவத்தை நெறிப்பது அகஸ்டினின் முறையானது.

“அப்போ நான் உங்க கண்ணுக்கு தெரியுறேன். ஒருவேள, என்னையே நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா தினு? அதான், நான் உங்க கண்ணுக்கு தெரியுறேனா? ஐ க்னோ, நம்ம உறவு பல ஜென்மங்களா தொடருது. இப்போதான் அதோட எஃபெக்ட் ஆரம்பிச்சிருக்கு. கூடிய சீக்கிரம் எல்லாமே நியாபகம் வந்துரும்.” அவள் உருகிய குரலில் பேசிக்கொண்டே போக, ‘ஆத்தீ! பூர்வீக பைத்தியம் போல இது?’ உள்ளுக்குள் பதறியவாறு அங்கிருந்து ஓடியேவிட்டான் அகஸ்டின்.

ஆனால் வெளியில் வந்து ‘அப்பாடா!’ என்று நின்றவனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ‘மிஸ்டர்.சுந்தர் என்கிட்டதானே அந்த பேப்பர்ஸ்ஸ கேட்டாரு. ஆனா, இவ…’ தனக்குத்தானே பேசி யோசித்தவாறு நெற்றியை ஒரு விரலால் தட்டிக்கொண்டான் அகஸ்டின்.

அன்று மாலை, எல்லோரும் வேலை முடித்து சென்றுவிட்டனர். இருவரைத் தவிர.

ஈ ஓட்டி நேரத்தை கடத்தி, கொடுத்த வேலையை சரியான நேரத்திற்கு முடிக்காததால் அகஸ்டினை போக விடாது அலைஸ் நிறுத்தி வைத்திருந்தார் என்றால், வேலை செய்ய தெரியாது கொடுத்த வேலையை நேரத்திற்குள் செய்யாததால் அலீஷாவை போக விடாது வேலை பார்க்க கட்டளையிட்டிருந்தார் சுந்தர்.

“டேய் வெங்கி, உன் வயித்தெறிச்சலாலதான்டா எனக்கு இந்த நிலைமை! இப்போ சொல்றேன்டா, என் சாபம் உன்னை சும்மா விடாது. காலம் முழுக்க கன்னி கழியாம சாக போற.” வாய்விட்டே முணங்கியவாறு அமர்ந்திருந்த அகஸ்டின், தன் முன் அரவம் உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தான்.

அவன் பார்த்ததுமே தன் கையிலிருந்த கோஃபியை அவன் மேசை மீது வைத்த அலீஷா, “உங்களுக்குதான்.” என்றுவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல, “ஹிஹிஹி… தேங்க்ஸ்ஸு.” என்று இழித்து வைத்த அகஸ்டின் கோஃபியை குடிக்க வாயருகே கொண்டுச் செல்ல, “தினு, அப்போ எல்லாம் ஏதாச்சும் குடிக்க கொடுத்தா என்னை குடிக்க வச்சிட்டுதான் நீங்க குடிப்பீங்க. கேட்டா, என் உதடு பட்டா விஷம் கூட இனிக்கும்னு சொல்லுவீங்க. இப்போவும் அப்படிதானா?” என்றாள் அவள் வெட்கப்பட்டவாறு.

அதில், ‘அய்யோ! படுத்துறாளே…’ என உள்ளுக்குள் புலம்பியவன், ஒரு மிடறு கூட அருந்தாது கப்பை மேசை மீது வைத்துவிட்டு வேலையில் கவனமாக, அலீஷாவும் தோளை குலுக்கிவிட்டு திரையில் பார்வையை பதித்தாள். ஆனால், அவளால் வேலை செய்ய முடிந்தால் தானே!

கைகால்கள் உதற ஆரம்பிக்க, இதயம் வேகமாக படபடவென அடித்துக்கொண்டது. ‘என்னாச்சு எனக்கு?’ உள்ளுக்குள் நினைத்தவாறு விழிகளை அழுந்த மூடி தன்னை நிதானப்படுத்த முயற்சித்தவளுக்கு, ஏனோ அதுவும் பயனளிக்கவில்லை.

உடல் முழுக்க வியர்க்க ஆரம்பிக்க, ஒருவித பதட்டத்தோடு அலீஷா அமர்ந்திருந்தாள் என்றால், அகஸ்டினோ அவளை கண்டுக்கொள்ளவேயில்லை.

‘அய்யோ! அந்த பொண்ணு நமக்காக காத்திருக்குமே… சீக்கிரம் போகணுமே.’ உள்ளுக்குள் நினைத்தவாறு படு தீவிரமாக வேலையை முடித்தவன், அதை அச்சுப்பதிக்க, ப்ரிண்டர் அறைக்கு ஓடாத குறையாக வேகவேகமாகச் செல்ல, இங்கு அலீஷாவுக்குதான் வேறு வழி தெரியவில்லை.

அந்த அறைக்குள் அவன் நுழையும் நேரம் சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட, பக்கென்றானது அவனுக்கு.

‘இன்னைக்கு அந்த மஹி மூஞ்சில முழிச்சதுதான், நாளே சரியில்லை. அவன் மூஞ்சி மாதிரி கேவலமா போகுது.’ இருக்கும் ஆத்திரத்திற்கு மஹியை வாயிற்கு வந்தபடி திட்டியவனுக்கு அப்போதுதான் அலீஷாவின் நியாபகமே வந்தது.

‘அச்சோ! அந்த மென்டல் பொண்ணு தனியா இருக்கே… இருட்டுக்கு பயந்த பொண்ணா இருந்தா இந்நேரம் கண்டிப்பா கத்தியே ஊரை கூட்டி இருப்பா. எதுக்கும் போய் பார்க்கலாம்.’ உள்ளுக்குள் நினைத்து அலைப்பேசியின் விளக்கை ஒளிரவிட்டு ,அலீஷாவை தேடி அகஸ்டின் வர, இருக்கையில் அவள் இருந்தால் தானே!

‘இந்த இருட்டுல எங்க போனா? ஒருவேளை மேசைக்கு கீழ ஒளிஞ்சிருக்காளோ என்னவோ?’ என்று நினைத்தவாறு, “அலீ…” என்று அவன் அழைத்து முடிக்கவில்லை, இரு கரங்கள் அவனை பின்னாலிருந்து வளைத்து அணைத்திருக்க, அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

அவனுடைய அதிர்ச்சியும் கொஞ்ச நேரம்தான். தன்னை அணைத்திருந்த கரத்தை இறுகப்பிடித்து முன்னால் இழுத்து கரத்திற்கு சொந்தமானவளின் முகத்தை அகஸ்டின் நோக்க, அரை கண் திறந்து மயக்க நிலையில் நின்றிருந்தாள் அலீஷா. “தினு…” என்றவாறு அவன் மேலேயே அவள் சாய்ந்துக்கொள்ள, அவளிடமிருந்து வந்த நெடியில் முகத்தை அஷ்டகோணலாக மாற்றியவன், “ஏய் பொண்ணு… அலீஷா, எழுந்திரு!” அவள் தோளைப் பற்றி அவள் கன்னத்தை தட்டினான்.

ஆனால், அவளிடம் அசைவே இல்லை.

வாயிற்குள் ஏதேதோ முணுமுணுத்தவாறு ‘விட்டால் விழுந்துவிடுவேன்’ என்ற ரீதியில் அவன் மேல் சாய்ந்து அவள் நின்றிருக்க, “சரக்கு ஸ்மெல் வருது. இந்த பொண்ணு சரக்கடிச்சிருக்கா என்ன? என்னன்னு தெரியல்லையே… ஏம்மா அலீஷா, எழுந்திரும்மா!” தனக்குத்தானே பேசி அவளை எழுப்ப அவன் எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.

“மொதல்ல இவள இங்கயிருந்து வெளில கூட்டிட்டு போவோம்.  பார்க்கதான் ஒல்லியா இருக்கா, மேல சாஞ்சிருக்கும் போதே இவ வெயிட்ட தாங்க முடியல. தூக்கினா செத்தான் சேகரு!” தன்னுடையபொருட்கள் மற்றும் அவளுடைய பையையும் எடுத்து, அவளை கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்த அகஸ்டின், சுற்றுமுற்றும் ஆட்களைத் தேட, வெளியே நின்றிருந்த காவலாளி கூட அவனுடைய நேரத்திற்கு அங்கு இல்லாமல் போய்விட்டார்.

அவளையும் பொருட்களையும் ஒரு கையால் பிடித்தவாறு மற்ற கையால் அலைப்பேசி மூலம் கேப் வண்டியை வர சொன்னவன், வண்டி வந்ததுமே அவளை பின்சீட்டில் அமர வைத்து, பக்கத்தில் பொருட்களோடு அமர்ந்துக்கொண்டான். அவளும் ஏதேதோ முணங்கியவாறு அவன் தோளில் சாய்ந்திருக்க, தன் முகத்தருகே தெரிந்த அவள் முகத்தையே ஆராய்ச்சியாகப் பார்த்திருந்தான் அகஸ்டின்.

சரியாக அவளுக்கு ஒரு அழைப்பு வர, அந்த மயக்கத்திலும் “போடாங்கு! தர்ற காசுல ஒரு பொங்கல் கூட வாங்க முடியல. பிச்சைக்கார செத்த பயலுவலா!” அலீஷா புலம்பலை ஆரம்பிக்க, அவளை ஒரு மாதிரியாக பார்த்தவாறே அவளுடைய பையிலிருந்து அவளின் அலைப்பேசியை எடுத்து, அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

மறுமுனையில் அமைதி! “ஹெலோ…” என்று அகஸ்டின் சொன்னதுமே அழைப்புத் துண்டிக்கப்பட்டிருக்க, அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அலைப்பேசித் திரையை புரியாதுப் பார்த்துவிட்டு மீண்டும் அலைப்பேசியை வைக்கவென அவளுடைய பையை அவன் திறக்க, உள்ளுக்குள் இருந்த பொருட்களை பார்த்ததுமே தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

“அடிப்பாவி!” வாயில் கை வைத்தவன், ஏற்கனே அவளுக்கு என்னாச்சோ, ஏதாச்சோ? என மருத்துவமனைக்கு செல்ல சொல்லியிருந்த வண்டியை அவள் வீட்டை நோக்கிச் செல்லச் சொன்னான். ஆனால், அவளின் பையில் அவனின் தேடுதலை நிறுத்தவில்லை. அதன் விளைவு, பார்த்த பொருட்களில் விழி விரித்து அமர்ந்திருந்தான் அகஸ்டின்.