விழிகள் 08

ei5TXKL75302-d087adea

அலீஷாவுடைய பையிலிருந்து எடுத்த மதுபோத்தலை பார்த்த அகஸ்டினுக்கு தூக்கி வாரிப்போட்டது. 

‘அட குடிகாரி! எவனும் பேக்க செக் பண்ண மாட்டான்னு தைரியத்துல உள்ளேயே போத்தலை வச்சிருக்கா. பூனை மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கா.’ தனக்குள்ளே பேசியவாறு அவளுடைய பையிலிருந்த பொருட்களை அவன் அலசி ஆராய, சரியாக அவன் விழிகளுக்கு சிக்கியது அந்த காகிதங்கள்.

அதை கையிலெடுத்துப் பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் எதுவுமே புரியவில்லை. ‘இது… இந்த பேப்பர்ஸ் எப்படி இவ பேக்ல?’ நெற்றியை நீவி விட்டுக்கொண்டவனின் விழிகள், ‘யார் இவள்?’ என்ற கேள்வியோடு அவளை நோக்கின. மேலும் அவனுடைய விரல்கள் அவளுடைய பையை ஆராய, அடுத்து அவன் விரல்களுக்குச் சிக்கியது சில்வர் நிற பெட்டி போன்ற லோக்கெட் கோர்க்கப்பட்ட ஆண்கள் அணியும் செயின்.

அதைப் பார்த்த அடுத்தநொடி அவனுடைய புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டது. லோக்கெட்டை இவன் அழுத்தியதுமே அந்த பெட்டி போன்ற அமைப்பு திறக்கப்பட, அதில் பொறிக்கப்பட்டிருந்த பெயரைப் பார்த்தவனுக்கு விழிகள் சாரசர் போல் விரிந்தன. சட்டென திரும்பி அலீஷாவின் முகத்தை நோக்கியவனுக்கு கிட்டதட்ட தலையே சுற்றிவிட்டது. கொஞ்சமும் அவன் எதிர்ப்பார்க்காத ஒன்று.

தன்னை சுதாகரித்து மெல்ல அவளுடைய நாடியை உயர்த்தி அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவனுக்கு இதழோரத்தில் மெல்லிய புன்னகை! அது என்ன மாதிரியான புன்னகையென்று அவன் மட்டுமே அறிவான்!

அடுத்த சில நிமிடங்களில் அலீஷாவின் வீடு இருக்கும் பகுதியில் வண்டி நிறுத்தப்பட, பயணத்திற்கான பணத்தை கொடுத்துவிட்டு அலீஷாவை தாங்கியவாறு இறங்கி நின்றவனுக்கு ஏனோ இதுவரை பழக்கமில்லாத அந்த இடத்தில் இருப்பதே ஒரு மாதிரிதான் இருந்தது.

அதுவும் அங்கிருந்த மக்களின் பார்வை! அலீஷாவுடன் அவனைப் பார்த்ததுமே புகைப்படமெடுத்து பத்திரிகைக்கு கொடுக்காத குறையாக தங்களுக்குள்ளே கிசுகிசுத்து ஆவென அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க,

“டேய் சுருளி, ஏதோ வெள்ளைக்காரனோட அந்த வீட்டு அக்கா வந்திறங்கிருக்காங்கடா. செம மவுசுடா அவங்களுக்கு.” அங்கிருந்த பசங்களில் ஒருவன் வேறு காது பட கத்திக்கொண்டேச் செல்ல, அகஸ்டினுக்குதான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“ஓ கோட்! என்ன இடம்டா இது? ஏதோ ஏலியன பார்க்குற மாதிரி பார்க்குதுங்க. இவ வீடு எங்க இருக்குன்னு கூட தெரியல்லையே!” வாய்விட்டே முணங்கியவாறு அவளுடைய கன்னத்தை தட்டி, “ஏய் அலீஷா, கண்ணை திற!” என்று கத்திய அகஸ்டினுக்கு, “வாழ்க்கை நாடகமா… என் பொறப்பு பொய்கணக்கா…” என்று குளறியபடி அவள் பாடிய பாடல்தான் பரிசாக கிடைத்தது.

‘ச்சே!’ நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டு அவள் அலைப்பேசியை அகஸ்டின் தீவிரமாக நோண்டிக்கொண்டிருக்க, “அலீஷா…” என்றொரு குரல்.

அந்த போதையிலும் அரைக்கண்ணை திறந்து அலீஷா சத்தம் வந்த திசையை நோக்க முயற்சிக்க, அதற்குள் சட்டென திரும்பிப் பார்த்தவனுக்கு அலீஷாவின் சாயலில் சற்று வயதாகி மாநிறத்திலான ஒரு பெண்மணிதான் தெரிந்தார். அவரைப் பார்த்ததுமே அலீஷாவிற்கு அவர் என்ன உறவென்று அறிந்துக்கொண்டான் அகஸ்டின். அங்கு நின்றிருந்தது சாட்சாத் அலீஷாவின் அம்மா மாதவி.

“அய்யோ அலீஷா! உனக்கென்னாச்சும்மா? நல்லா தானே இருக்க?” பதறியபடி அவளை அகஸ்டினிடமிருந்து பிரித்து தன் தோளில் மாதவி சாய்த்துக்கொள்ள, “உங்க பொண்ணுக்கு என்ன? அதெல்லாம் சரக்கடிச்சி செம போதையில தெம்பாதான் இருக்கா.” ஏளனமாக வந்தன அகஸ்டினின் வார்த்தைகள். அவனைப் பொருத்தவரை ‘மகள் செய்வதை தாய் இதுவரை அறியாமலா இருப்பார்?’ என்ற கேள்விதான்.

அதில் திருதிருவென விழித்தவர், பின் விழிகள் கலங்க “அது… என் பொண்ணுக்கு மனசுல அம்புட்டு கவலைப்பா. மொத்த குடும்ப பொறுப்பை ஒத்த ஆளா சுமந்து உழைக்கிறா. கவலைய மறக்க அப்பப்போ குடிப்பா. நானும் எடுத்து சொன்னேன். அப்றம், கழுதை எதையாச்சும் பண்ணி தொலையட்டும்னு விட்டுட்டேன்.” சேலை முந்தானையால் வாயைப் பொத்தி குழுங்கி குழுங்கி அழுதவாறுச் சொல்ல,

அவரை கூர்ந்துப் பார்த்தவன், “நல்லா குடும்பம்!” என்றுவிட்டு அங்கிருந்து நகர, “வீட்டுக்கு வந்து ஏதாச்சுச் சாப்பிட்டு போப்பா.” மாதவி அழைத்ததில், “கூடிய சீக்கிரம் வருவேன்.” அர்த்தம் பொதிந்த பார்வையோடு சொல்லிவிட்டு அலீஷாவை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தான் அகஸ்டின்.

ஒரு ஆழ்ந்த பெருமூச்செடுத்து அங்கிருந்து அவன் சென்றிருக்க, தன் மகளை முறைத்துப் பார்த்து, “கண்ணை திறப்பல்ல, அப்போ இருக்குடி உனக்கு!” பொறுமியவாறு அவளை கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்துச் சென்றார் மாதவி.

அதேநேரம்,

மொட்டை மாடியிலுள்ள ஊஞ்சலில் அமைதியாக அமர்ந்திருந்த ஆத்வி, தன் பக்கத்தில் அரவம் உணர்ந்து பயந்தபடி திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய பயந்த முகத்தைப் பார்த்து, “ரிலாக்ஸ் ஆதி…” என்றவாறு அவள் கையை இறுகப்பற்றிய மஹி, “நான்தானே, எதுக்கு பயப்படுற?” வேதனை நிறைந்த குரலில் கேட்க, “இல்லை தீரா, இப்போ எல்லாம் என்ன நடந்தாலும் ரொம்ப பயமா இருக்கு. அதான்…” என்று தயக்கமாக இழுத்தாள்.

“ஆதி லிசன்! இதுக்கெல்லாம் பயந்தா நாம நம்ம அப்பா அம்மாவுக்கு பசங்களா இருக்க முடியாது. அவங்களோட பிஸ்னஸ்ல எத்தனையோ பிஸ்னஸ் எனிமீஸ். சின்னவயசுல என்னை வச்சி கூட அம்மாவ மிரட்டியிருக்காங்க. யூ க்னோ வெல், நீ இப்படி பயந்தேன்னா அம்மா, அப்பா ரொம்ப பயப்படுவாங்க. அவங்களோட பயம்தான் நம்ம எதிரிகளுக்கு பலமே!புரியுதா?” என்று கேட்டு அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு, அவளுடைய புருவ முடிச்சுகளே அவள் யோசிப்பதை உணர்த்தியது.

அவளுடைய இதழ்கள் மெல்ல விரிய, அதைப் பார்த்ததும்தான் அவனுக்கு அத்தனை நிம்மதி. “யூ க்னோ வாட் ஆதி, தட் ஃபேமஸ் சூப்பர் மொடெல் ஆத்விகாவ மங்ளூர் சிட்டியே தேடுதாமே! மெய்யாலுமா?” கேலியாக கேட்டு அவன் சிரிக்க, “யூ…” என்று அவன் கையை கிள்ளியெடுத்த ஆத்வி அடுத்து கேட்ட கேள்வியில் அவளுடைய புன்னகையை வரவழைத்த அவனின் புன்னகை மொத்தமும் மறைந்துப் போனது.

“என்னை காணாம அகி ரொம்ப பயந்தானா தீரா? எனக்காக தவிச்சானா?” ஆத்வி விழிகளில் ஆர்வத்துடன் கேட்க, மஹியின் முகமோ அந்த கேள்வியில் இறுகிப் போனது.

பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டவன், “ஆ…ஆமா ஆதி.” இறுகிய குரலில் சொல்ல, “ரியலி? ஐ க்னோ மஹி, அவனுக்கும் என் மேல க்ரஷ் இருக்கு. எப்படி அதை காதல்னு அவனுக்கு புரிய வைக்குறதுன்னுதான் தெரியல.” நாடியை ஒரு விரலால் தட்டி அவள் யோசிக்க, மஹியின் இதழோ வலி நிறைந்த புன்னகை சிந்தியது.

‘என் தவிப்பு உனக்கு புரியல்லையா ஆதி?’ அவன் மனம் தன்னவளிடம் முறையிட, பெருமூச்செடுத்து விழிகளிலிருந்து விழ தயாரான கண்ணீரை அடக்கிக்கொண்டான்.

அடுத்தநாள்,

தன் அம்மாவிடமிருந்து இரவு நடந்ததை தெரிந்துக்கொண்டு, கூடவே சில பல அர்ச்சனைகளை பரிசாக வாங்கி அலுவலக வாசலில் வந்திறங்கினாள் அலீஷா.

அவளுக்கு நடந்ததை கேள்விப்பட்டதிலிருந்து அத்தனை படபடப்பு!

‘அறிவுகெட்ட சைக்கோ! இப்படியாடி சொதப்பி வைப்ப? போச்சு போச்சு! அவன் உன்னை மொடக்குடிகாரின்னு நினைச்சிருக்க மாட்டான்? கடவுளே!’ உள்ளுக்குள் புலம்பியவாறு கைகளை பிசைந்துக்கொண்டு அலுவலக வாசலில் நின்று தடுமாறிக்கொண்டிருந்தாள் அலீஷா.

‘வேணா அலீ, அவன் ரொம்ப குசும்பு புடிச்சவன்! எல்லார் முன்னாடியும் நம்மள அசிங்கப்படுத்திருவான். இதுக்கு இந்த அலீஷா பயந்து ஓடி ஒளிஞ்சிட்டான்னு பேர் வாங்குறது எவ்வளவோ மேல்!’ தனக்குத்தானே பேசி ஏதேதோ கற்பனை செய்து அங்கிருந்து ஓட எத்தனித்து அலீஷா திரும்பும் சமயம், சட்டென ஒரு வலிய கரம் அவள் கரத்தை இறுகப் பற்றியது.

திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க, எதுவுமே நடக்காத பாவனையில் அலைப்பேசியை நோண்டியவாறு அலுவலகத்திற்குள் அவளை இழுத்துச் சென்றான் அகஸ்டின்.

எச்சிலை விழுங்கியவாறு அவனை அலீஷா நோக்க, மின்தூக்கியில் ஏறி தளத்திற்கான எண்ணை அழுத்திவிட்டு அவளை திரும்பிப் பார்த்தவனின் ஒற்றை புருவம் ‘என்ன?’ என்ற ரீதியில் ஏறி இறங்கியது. அதில் வாயைப் பிளந்தவளின் தலை தானாக ‘இல்லை’ என அசைய, ‘சிரிக்கிறானோ?’ என்று நினைக்குமளவிற்கு இதழுக்குள் புன்னகையை அடக்கினான் அகஸ்டின்.

ஏனோ இதற்கு முன்னிருந்த அவளை நோக்கிய அவன் பார்வையிலிருந்து இப்போது வித்தியாசத்தை உணர்கிறாள் அலீஷா. கைப்பிடித்து அவளுடைய இருக்கைக்கு இவன் அழைத்துச் செல்ல, மற்ற பெண்களின் பொறாமைப் பார்வையை கவனித்த அலீஷாவுக்கு உள்ளுக்குள் இனம் புரியாத சந்தோஷம்!

ஆனாலும், அகஸ்டின் நடந்துக்கொள்ளும் முறையில் ‘ஏதாவது ஊமைக்குத்து இருக்குமோ?’ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது.

அவளின் தோள்களைப் பற்றி அவளிருக்கையில் அமர்த்தியவன், மெல்ல காதருகில் குனிந்து, “முன்ஜென்ம நியாபகம் வந்திருச்சு மை ஸ்வீட்ஹார்ட்.” ஹஸ்கி குரலில் சொல்லிவிட்டு தன்னிருக்கைக்குச் செல்ல, அவளுடைய விழிகளோ அவனின் வார்த்தைகளில் சாராசர் போல் விரிந்தன.

அவளுக்கெதிரே இருந்த தன்னிருக்கையில் அமர்ந்த அகஸ்டின், குறும்பாகச் சிரித்து கண் சிமிட்ட, “ஹிஹிஹி…” என்று அசடு வழிந்தவளுக்கு, ‘என்னடா நடக்குது இங்க?’ என்றுதான் இருந்தது.

அதன் பிறகு அவனைப் பார்ப்பதில் அவளுக்கு அத்தனை பதட்டம். நிமிர்ந்து கூட பார்க்காது திரையிலேயே பார்வையை பதித்திருந்தாலும், கூடவே ஒரு ஆர்வம். மெல்ல விழிகளை உயர்த்தி அவனை அவள் நோக்க, அகஸ்டினோ வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தான்.

சட்டென குனிந்து, ‘என்ன இவன் நம்மளையே பார்த்துக்கிட்டு இருக்கான்? ஒருவேள, லவ் பண்றானோ? ராத்திரி பண்ண காரியத்துக்கு செருப்ப கழட்டி அடிப்பான்னு பார்த்தா, விழுங்குற மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கான்.’ தனக்குள்ளே புலம்பியவாறு மீண்டும் அவனை நோக்கினாள் அவள்.

அலீஷாவின் பார்வை படிந்த அடுத்தகணம், ஒற்றை கண்ணை அகஸ்டின் குறும்பாகச் சிமிட்ட, ‘ஆத்தீ! என்ன கண்ணடிக்கிறான்!’ பயந்தபடி விழிகளை தாழ்த்திக்கொண்டாள். ஆனால், அவனை பார்க்கும் ஆர்வம்தான் அவளிடத்தில் குறையவில்லை.

ஓரக்கண்ணால் மீண்டும் அவனை அவள் நோக்க, சுழலும் நாற்காலியில் ஆடி அசைந்தவாறு இருந்தவன், மறுபடியும் அவள் பார்த்த அடுத்தநொடி கண்சிமிட்டலோடுச் சேர்த்து பறக்கும் முத்தத்தையும் வழங்கியிருக்க, அலீஷாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.

‘ஆத்தாடி ஆத்தா! என்ன முத்தமெல்லாம் கொடுக்குறான்!’ பயந்தபடி விழிகளை சுழலவிட்டு சுற்றும் முற்றும் அலீஷா நோக்க, அகஸ்டின் பக்கத்திலிருந்த வெங்கட்தான் இருவரையும் விழி விரித்து மாறி மாறிப் பார்த்திருந்தான். 

வெங்கட்டை பார்த்ததும் அலீஷா வேலை செய்வது போல் பாவனை செய்ய, அவளின் பாவனையில் வாய்விட்டுச் சிரித்தவாறு அமர்ந்திருந்த அகஸ்டினின் தோளை சுரண்டியவன், “இல்லை. எனக்கு புரியல. என்னாச்சு?” என்று கேட்டான் ஆச்சரியக்குரலில்.

“உனக்கு சொன்னா புரியாது மச்சான்.” வாய்விட்டு சிரித்தவாறுச் சொல்லிவிட்டு அகஸ்டின் எழுந்துச் செல்ல, “ஏசப்பா!” பெருமூச்சு விட்டுக்கொண்டான் வெங்கட்.

அன்றிரவு,

எல்லோரும் ஒன்றாக உணவு மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அலைஸோ முழங்கையால் சஞ்சய்யை தட்டி, அகஸ்டினை கண்களால் காட்டினார். அவருக்கும் தன் மனைவி எதை உணர்த்துகிறாள் என்பது புரிந்துப் போனது.

விழிகளை அழுந்த மூடித் திறந்த சஞ்சய், குரலை செறுமி “அகி, ஒன்னு கேள்விப்பட்டேன். நிஜமாவா?” என்று கேட்டு வைக்க, அகஸ்டினோ சாப்பிடுவதை நிறுத்தி விழிகளை மட்டும் உயர்த்தி அவரை நோக்கினான்.

“ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட ரொம்ப க்ளோஸ்ஸா பழகுறியாமே! உழவுத்துறை தகவல் வந்திச்சு.” அவர் சொல்ல, கையிலிருந்த முள்கரண்டியால் உணவை குத்தி, “அந்த உழவுத்துறை மட்டும் என் கையில சிக்கிச்சு… சட்னிதான்.” கடுப்பாகச் சொன்னான் அகஸ்டின்.

“ஹிஹிஹி… அதுல என்னப்பா இருக்கு.” சஞ்சய் அசடுவழிய, இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ஆத்விக்குதான் பக்கென்று இருந்தது. “மாமா, ஃப்ரென்டா கூட இருக்கலாம்ல?” அவள் குறுக்கிட்டு பதில் சொல்ல, விழிகளை உயர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தட்டில் முகத்தை புதைத்துக்கொண்டான் மஹி.

“ஃப்ரேன்டெல்லாம் இல்லை.” அகஸ்டின் பட்டென்றுச் சொல்ல, அதில் ‘வாட்!’ என்று பதறிய ஆத்விக்கு, “அப்போ கேர்ள் ஃப்ரென்டா மருமகனே?” கீர்த்தி ஆர்வமாகக் கேட்ட கேள்வியின், “அதுவும் கிடையாது.” என்ற அகஸ்டினின் பதிலில், ‘அப்பாடா!’ என்றிருந்தது.

“அப்போ…” அலைஸ் ஒரு மாதிரி இழுக்க, “ச்சே! இப்போ உங்களுக்கு என்னதான் வேணும்?” கத்திவிட்டான் அவன்.

“இல்லைப்பா, சும்மா தெரிஞ்சிக்கதான். ஆமா… அந்த பொண்ணு பேரு கூட ஏதோ…” சஞ்சய் நெற்றியை தட்டியவாறு இழுக்க, “அலீஷா” மெல்ல தன் கணவரின் காதில் கிசுகிசுத்தார் அலைஸ்.

“ஆங் அலீஷா. பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கு. நோர்த் இந்தியன் பொண்ணா என்ன?” அவர் கேட்க, “அப்பா ராஜஸ்தான், அம்மா தமிழ்நாடு.” நிமிர்ந்துப் பார்க்காது பதில் சொன்னான் அவன். இவர்கள் கேட்கும் கேள்வியில் அவனுக்கோ அத்தனை எரிச்சல்!

“டேய்! உங்கப்பனுக்கும் உனக்கும் உள்ளூர்ல பொண்ணே கிடைக்கலயா? வேற ஸ்டேட், வேற கன்ட்ரி பொண்ணுதான் வேணுமோ?” தருண் கேலியாகக் கேட்டுச் சிரிக்க, சஞ்சய்யோ தன் நண்பனை முறைத்தார் என்றால், ‘என்னடா ஏதேதோ பேசுறீங்க? அவனுக்கே எண்ணம் இல்லைன்னாலுல் பேசியே வர வைச்சிருவீங்க போல!’ உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள் ஆத்வி.

மஹியோ ‘தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்ற ரீதியில் குனிந்த தலை நிமிராது இருக்க, மேசைக்கு கீழாக மெல்ல காலை விட்டு அவன் காலை ஆத்வி வருடவும், திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தான் அவன். அவன் பார்த்ததுமே விழிகளால் அகஸ்டினை காட்டி அவள் உதட்டை பிதுக்க, பெருமூச்சுவிட்டு தோளை அலட்சியமாகக் குலுக்கிவிட்டு அவன் மீண்டும் குனிந்துக்கொள்ள, ‘போடா… சோத்துக்கு செத்தவனே!’ மானசீகமாக அவனை திட்டித் தீர்த்தாள் அவள்.

ஆனால், மஹி உணவில் கவனமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவனுடைய சிந்தனை முழுவதும் வேறெங்கோ மிதந்துக்கொண்டிருந்தது. எதையோ தீவிரமாக யோசிக்கின்றானென்று அவனுடைய புருவ முடிச்சுகளும், உணவை அவன் அளந்துக்கொண்டிருக்கும் விதமுமே காட்டிக் கொடுத்தது. அதை அகஸ்டினும் கவனிக்கத்தான் செய்தான்.

“இன்னும் ஒரு வாரத்துல நம்ம கம்பனியில பார்ட்டி அர்ரேன்ஜ் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு மாசமும் கம்பனியில அர்ரேன்ஜ் பண்றதுதான். பட், திஸ் டைம் கொஞ்சம் ஸ்பெஷல். இந்தியாவுல நம்ம ப்ரோடெக்ட்ஸ்ஸோட விற்பனை ரொம்ப அதிகமா இருக்கு, லாஸ்ட் ரிபோர்ட்டோட கம்ப்பெயார் பண்ணும் போது. சோ, திஸ் பார்ட்டி ஃபோர் அவர் வர்க்கர்ஸ்.” அலைஸ் சொல்ல,

“வாவ்!”

“தட்ஸ் க்ரேட் நியூஸ்!”

சந்தோஷமாக வந்தன அங்கிருந்தவர்களின் வார்த்தைகள். ஆனால், இப்போது மஹியோடு சேர்த்து அகஸ்டினும் எதையோ ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தான்.