விழிகள் 10

eiS964L96360-073de2b6

கேளிக்கை விருந்துக்கு செல்வதற்காக கோட் சூட்டில் தயாராகி ஆளுயர கண்ணாடி முன் கோர்ட்டை சரி செய்தவாறு அகஸ்டின் நிற்க, கதவை தட்டி உள்ளே வந்தார் அலைஸ்.

“என்ன மாம் இந்த பக்கம்?” திரும்பாது கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தவாறு அவன் கேட்க, தன் கையிலிருந்த அலைப்பேசியையும் பர்ஸ்ஸையும் டீபாயின் மேல் வைத்து, புன்னகையுடன் தன் மகனருகில் சென்றார் அவர்.

அகஸ்டினோ அவரை கேள்வியாக நோக்க, அவன் கையில் ப்ளேட்டினம் கற்கள் பதித்த ப்ரேஸ்லெட்டை போட்டு விட்டவர், “திஸ் இஸ் ஃபோர் யூ.” என்றுவிட்டு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டார். “லுக்ஸ் நைஸ்.” புன்னகையுடன் சொன்னவனும் தன் தாயை அணைத்து விடுவித்தான்.

“இப்போ நாங்க பண்றது எல்லாமே உனக்கு கோபத்தை உண்டாக்கலாம். ஆனா, இதெல்லாமே உன் நல்லதுக்குதான்னு கூடிய சீக்கிரம் புரியும்.” அலைஸ் சொல்ல, அகஸ்டினோ எதுவும் சொல்லவில்லை. தரையை வெறித்தவாறு அவன் நின்றிருக்க, அலைஸிற்கோ அவனின் மனநிலையை மாற்ற ஒரு யோசனை தோன்றியது.

அவனுடைய கோர்ட்டை சரி செய்தவாறு, “அகி, இன்னைக்கு பார்ட்டில உன் கூட டான்ஸ் பண்ண அந்த பொண்ணுக்கிட்ட கேட்டியா என்ன? பார்க்க ரொம்ப நல்ல பொண்ணா தெரியுறா. உன் கூட எல்லாம் எப்படி பழகுறா?” அடக்கப்பட்ட சிரிப்புடன் அவர் கேட்க, “உங்களுக்கு சொன்னா புரியாதும்மா.” அதே அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னான் அகஸ்டின்.

“ஏதோ சொல்ற. வாட்எவர்!” என்றுவிட்டு அலைஸ் அங்கிருந்து வெளியேறியிருக்க, மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவனுக்கு மூளைக்குள் பல யோசனைகள். அலைஸ் சென்ற அடுத்த சில நொடிகளிலே ஏதோ ஒரு சத்தம்!

உடனே தன் அலைப்பேசியை எடுத்து பார்த்த அகஸ்டின், அதில் எந்தவிதமான அழைப்புக்களும் வராததில் ‘சத்தம் எங்கிருந்து வருகின்றதென’ அறையை சுற்றி ஆராய்ந்தான். சரியாக அவன் கண்களில் சிக்கியது டீபாயின் மேலிருந்த அலைஸின் அலைப்பேசி.

வேகமாக அதை நெருங்கி திரையை நோக்கிய அகஸ்டினுக்கு, திரையில் தெரிந்ததை பார்த்ததும் கோபம் பன்மடங்காக பெருகியது. காரணம், தன் மடிக்கணினியை உயிர்ப்பிக்கும் போது எச்சரிக்கை குறுஞ்செய்தி வருவது போல் அலைஸ் ஏற்பாடு செய்து வைத்திருக்க, அந்த எச்சரிக்கை குறுஞ்செய்தியே அது.

பற்களை நரநரவென கடித்தவன், அடுத்தகணம் மின்னல் வேகத்தில் அறையிலிருந்து வெளியேறினான். அடுத்த ஒருமணி நேரத்தில் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ? தன் கசங்கிய கோர்ட்டை தேய்த்துவிட்டவாறு கேளிக்கை விருந்து நடைபெறும் மண்டபத்தில் நின்றிருந்தான் அவன்.

‘ச்சே! நடந்த களவரதுல ட்ரெஸ்ஸு வேற கசங்கி போச்சு. நம்மள விட ஸ்ட்ரென்த்தா இருப்பான் போல! தாடையில விழுந்த அடி இன்னும் வலிக்குது.’ தாடையை முகத்தை சுருக்கியவாறு தடவி விட்டுக்கொண்டு எதேர்ச்சையாக மண்டப வாசல் புறம் பார்வையை திருப்பியவனின் விழிகள் சாரசர் போல் விரிந்தன. அங்கு அகஸ்டின் வாங்கிக் கொடுத்த டிஸைனர் சேலையில் ஒருவித தயக்கத்தோடு நின்றிருந்தாள் அலீஷா.

அகஸ்டின் அவளையே இமைக்காது பார்க்க, அவளுடைய பார்வையும் அவன் மேல்தான் படிந்திருந்தது. காதில் குடை ஜிமிக்கி ஆட, மெல்ல அலீஷா நடந்து வர, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளும் கோர்ட் சூட்டில் ஆணழகனாக நின்றிருந்தவனை ரசித்துக்கொண்டே அவனை நோக்கி வர, திடீரென “அய்யோ! அம்மா…” என்ற சத்தம். சேலை தடுக்கி அலீஷா தரையில் விழுந்திருக்க, அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. அவன் மட்டுமல்ல அங்கு சுற்றியிருந்த சிலருக்கும்.

‘கிருஷ்ணா! ஏன் என்னை இப்படி சோதிக்குற? மானமே போச்சு, ச்சே! நம்மள ரொம்ப அசிங்கமா நினைச்சிருப்பான். இப்போதான் முதல்தடவை சேலை கட்டியிருக்கோம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.’ உள்ளுக்குள் பொறுமியவாறு அலீஷா கஷ்டப்பட்டு எழுந்து நின்று, தன்னை நோக்கி வந்தவனைப் பார்த்து “ஹிஹிஹி…” என்று அசடுவழிய, சிரித்துக்கொண்டே அவளை நெருங்கிய அகஸ்டின், “ரொம்ப அழகா இருக்க.” என்றான் சிரிப்போடு.

சற்று நேரத்திற்கு முன் நடந்தது மறந்து அவளும் வெட்கப்பட்டுச் சிரிக்க, தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான் அவன். சிரிப்போடு அவன் கரத்தின் மேல் தன் கரத்தை அவள் வைத்ததும், எல்லோரும் நடனமாட தயாராக நின்ற மேடையை நோக்கி அவளை அழைத்துச் சென்றான்.

இவன் அழைத்துச் செல்லும் அதேநேரம்தான் அலைஸ், கீர்த்தி மற்றும் ஆத்விகா மண்டபத்திற்குள் நுழைந்தனர். வந்தவர்களுக்கு அகஸ்டின் அலீஷாவுடன் நடனமாட தயாராக நின்றதை பார்த்ததும் அத்தனை ஆச்சரியம்!

“அக்கா, இதுவா அந்த பொண்ணு?” கீர்த்தி வாயைப் பிளந்த வண்ணம் கேட்க, ஆத்விக்கு இருவர் நெருங்கி நிற்பதை பார்க்கவே ஜீரணிக்க முடியவில்லை. ‘அவனுக்காக பார்த்து பார்த்து ரெடியாகி நான் வந்தா இவன் என்னடான்னா அவ கூட டான்ஸ் பண்றான்? ஷீட்!’ மானசீகமாக புலம்பித் தள்ளிவிட்டாள் அவள்.

தான் காதலிக்கும் ஒருவன் இன்னொரு பெண்ணுடன் நெருங்கி நின்றால், எந்த பெண்ணால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? அந்த மனநிலைதான் ஆத்விக்கும். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் தான் மனதால் உடையப் போவதை அவள் அறிந்திருக்கவில்லை.

இங்கு மேடையில் அலீஷாவின் ஒரு கரத்துடன் தன் கரத்தை கோர்த்து, சேலையினூடாக தெரிந்த அவளின் வெற்றிடையில் மற்ற கரத்தை அழுத்தமாக பதித்து அகஸ்டின் பாதங்களை முன்னோக்கி பின்னோக்கி அசைத்து நடனமாட, அலீஷாவும் அவனுக்கேற்ப உடலை அசைத்து நடனமாடினாள். கூடவே அந்த மேடையில் இன்னும் சில ஜோடிகளும் இவர்களுடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்தனர்.

“வந்ததுமே டான்ஸ்ஸா? பொறுமையா சாப்பிட்டுட்டு டான்ஸ் பண்ணியிருக்கலாம். பசிக்குது.” அலீஷா ஆடியவாறேச் சொல்ல, “இன்னும் கொஞ்சம்தான். அதுக்கப்றம் மொத்த பசியும் பறந்துரும்.” என்றான் அகஸ்டின் அவளை சுழற்றியவாறு.

“ஆஹான்! நான் ஒன்னு கேக்கலாமா? அந்த பொண்ணு ஏன் நம்மள முறைச்சி பார்த்துட்டே இருக்கு? ஒருவேள, ரொம்ப வேண்டப்பட்ட பொண்ணா?” அலீஷா விழிகளால் அந்த திசையைக் காட்டி அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க, அத்திசையை நோக்கிய அகஸ்டினின் உடல், அங்கு தன்னையே முறைத்துக்கொண்டு நின்றிருந்த ஆத்வியைப் பார்த்ததும் ஒருநொடி அசைவை நிறுத்தியது.

ஆனால், அது ஒரு நொடிதான். மீண்டும் தன்னை சுதாகரித்து அலீஷாவின் இடையை வளைத்து ஆடியவாறு, “ஐயாவோட முகராசி அப்படிம்மா.” கேலியாக சொல்லி அவன் சிரிக்க, அவளுக்கும் அவன் சொன்ன தோரணையில் சிரிப்புதான் வந்தது.

அவளுடைய கரத்தை இறுகப்பற்றி அவளிடமிருந்து விலகி, அவளை சுழற்றியவன், அவளை விழுவது போல் கொண்டு சென்று கரங்களால் இடையை வளைத்து தாங்கிக் கொள்ள, அலீஷாவும் அவன் கழுத்தைச் சுற்றி கையைப் போட்டு அவன் சாம்பல் நிற விழிகளையே ஊடுருவும் பார்வை பார்த்தாள்.

‘அலீஷா, உன் லவ்வ சொல்லுடி! இதுதான் சரியான நேரம். இப்போவே சொல்லிரு!’ அவளுடைய மனம் படபடக்க, மீண்டும் அகஸ்டின் அவளை ஒரு சுற்று சுற்றி தன் முகம் நோக்கி அவள் முகத்தை கொண்டு வந்த அடுத்தகணம், “ஐ லவ் யூ தினு.” என்றாள் அலீஷா காதலுடன்.

விழிகள் விரிய, அவளையேப் பார்த்தவாறு அகஸ்டின் சிலை போல் நிற்க, “தினு…” மீண்டும் அலீஷா அழைத்ததும்தான் தாமதம், “என் கூட வா!” என்று அவளின் கரத்தைப் பற்றி தரதரவென வெளியே இழுத்துச் சென்றான் அவன்.

மண்டபத்திலிருந்து வெளியேறி அகஸ்டின் ஒரு இடத்தில் நிற்க, அவனுடைய கரத்திலிருந்து தன் கரத்தை உறுவியவாறு, “எதுக்காக என்னை இங்க இழுத்துட்டு வந்தீங்க? ஐ க்னோ, யூ லவ் மீ. இருந்தாலும் வார்த்தைகளால கேட்கணும்னு…” அலீஷா திக்கித்திணறி இழுத்தாள்.

அவனும் அவளை நிமிர்ந்து கூட பார்க்காது, “ஆங் லவ் யூ டூ… லவ் யூ டூ…” என்று சொன்னவாறு அலைப்பேசியை நோண்ட, இவளுக்குதான் சப்பென்றானது. ‘என்ன ஏதோ பிச்சை போடுற மாதிரி சொல்றான்?’ உள்ளுக்குள் நினைத்தவள், “ஏங்க, நான் லவ் யூ சொன்னேன்.” என்று அழுத்திச் சொல்ல, அவள் பேச்சை அவன் கண்டுக்கொண்டால்தானே!

ஒரு எண்ணிற்கு அழைத்த அகஸ்டின், “ரூம் ரெடியா? ஐ அம் ஆன் த வேய்.” என்று பேசியவாறு அலீஷாவை இழுத்துக்கொண்டுச் செல்ல, “எதே ரூம்மா?” கத்திக் கேட்டுவிட்டாள் அவள்.

“ஷ்ஷ்…” உதட்டில் விரல் வைத்து சொன்னவன், “சீக்கிரம் ஏறு!” என்று அவசரப்படுத்த, ‘என்னடா நடக்குது இங்க?’ மானசீகமாக புலம்பியவாறு அவனின் புல்லட்டின் பின்னால் அவள் அமர, மின்னல் வேகத்தில் ஒரு இடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான் அகஸ்டின்.

ஆனால், அதேநேரம் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ஆத்வியின் விழிகளில் தாரை தாரையாக விழிநீர் வழிந்துக்கொண்டிருந்தது. இருவர் நடனமாடுவதை மனக்குமுறலுடன் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, அவர்கள் நடனமாடிக்கொண்டே பேசிக்கொண்டது எதுவும் கேட்கவில்லை. ஆனால், சட்டென அகஸ்டின் அலீஷாவை வெளியே இழுத்துச் செல்வதை பார்த்தவளுக்கு அவர்களுக்குள் ‘என்ன?’ என்பதை தெரிந்துக்கொள்வதில் ஆர்வம்!

அதனாலே அவர்கள் பின்னால் இவளும் வர, அடுத்து அலீஷா தன் காதலை சொல்லி அதற்கு சாதகமாக அகஸ்டின் பதில் சொன்னதை பார்த்ததும் ஆத்விக்கு வாழ்வே சூனியமானது போலாகிவிட்டது.

‘என்னை உனக்கு பிடிக்கலயா அகி? என்னை நீ காதலிக்கலயா? நீதானேடா என் முதல் காதல். முடியலடா, ரொம்ப வலிக்குது.’ அலீஷாவுடன் புல்லட்டில் சென்றுக்கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை. அங்கிருந்து கால் போன போக்கிற்கு சென்றாள் அவள்.

இங்கு ஒரு அபார்ட்மென்ட்டின் முன் தன் வண்டியை நிறுத்தினான் அகஸ்டின். வண்டியிலிருந்து இறங்கிய அலீஷா அந்த இடத்தைப் புரியாதுப் பார்க்க, அவள் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான் அவன்.

உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த ரிசெப்ஷனில் பேசி ஒரு அறைக்கான சாவியை வாங்கியவன், “போகலாமா?” என்று கேட்டவாறு அவள் தோள் மேல் கைப் போட்டு உள்ளே அறைக்கு அழைத்துச் செல்ல, உள்ளுக்குள் பயபந்து உருண்டாலும் முகத்தில் அதை காட்டாது, “இங்க எது…எதுக்கு வந்திருக்கோம் தினு?” தட்டுத்தடுமாறி கேட்டாள் அவள்.

தங்களுக்காக அறையினுள் நுழைந்த அகஸ்டின் அவளை முன்னே தள்ளி, “லவர்ஸ் என்ன பண்ணுவாங்களோ அதை நாமளும் பண்ண வேணாமா? அதான்…” என்றவாறு அறைக் கதவைத் தாளிட்டு கதவின் மேல் சாய்ந்து நின்றான். அடுத்தகணம் அலீஷாவுக்கு தூக்கி வாரிப்போட, “எதே? லவ்வ சொல்லி ஒரு மணித்தியாலம் கூட ஆகியிருக்காது. அதுக்குள்ளயேவா?” மிரட்சியான குரலில் வந்தன அவளுடைய வார்த்தைகள்.

அவளுடைய திணறலில் அகஸ்டினின் இதழ்கள் கேலியாக வளைய, தான் அணிந்திருந்த கோர்ட்டை கழற்றியவாறு, “என்ன பேபி நீ, இதுக்கே பயந்தா எப்படி? என்னை காதலிக்கிறேன்னு சொல்ற, எனக்காக உன்னை தர மாட்டியா என்ன?” ஏளனமாக அவன் கேட்டுக்கொண்டே அவளை நோக்கி வந்தான். அவன் முன்னோக்கி வருவதில் இவளுக்குதான் இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

மெல்ல பின்னால் நகர்ந்தவாறு, “தி…தினு, என்ன இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு. நாம வேணா கல்யாணத்துக்கு அப்றம்…” அவள் சொல்ல, “ச்சு ச்சு ச்சு… இல்லை பேபி, உனக்கு ஃபேஷனே தெரியல.” என்றுவிட்டு வேகமாக அவளை நெருங்கி தன்னை நோக்கி இழுத்தான் அகஸ்டின்.

அவளும் அவன் மார்பில் மோதி நிற்க, “முன்னாடிதான் லவ், கல்யாணம் அப்றம் அது நடக்கும். இப்போ எல்லாம் லவ் சொன்னதுமே நடக்க வேண்டியது நடந்து முடிஞ்சிதான் கல்யாணமே! ட்ரென்டிங்கு ஏத்த மாதிரி நாமளும் நடந்துக்க வேணாமா?” விளக்கம் கொடுத்தவாறு அவள் கன்னத்தில் தன்னிதழால் அவன் உரச, அதில் நெளிந்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனிடமிருந்து விலக அலீஷா முயற்சிக்க, அவன் விட்டால் தானே!

அவளை பக்கத்திலிருந்த கட்டிலில் தள்ளி விட்டவன், அவள் எழுவதற்கு முன் அவள் மேல் படர்ந்திருந்தான். அதுவும் அவள் விழுந்ததில் அணிந்திருந்த சேலை தாறுமாறாக விலகியிருக்க, அவளின் வெற்றிடையில் கரத்தை அழுந்த பதித்தவன், “ஆரம்பிக்கலாமா ஸ்வீட்ஹார்ட்?” ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்க, “வே…வேணாம் தினு. இது தப்பு. ப்ளீஸ் வேணாம்.” கிட்டத்தட்ட கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் அலீஷா.

ஆனால், அந்த விடாக் கண்டன் அவளை விடும் எண்ணத்தில் இல்லை. “பத்துநிமிஷம்தான் ஸ்வீட்ஹார்ட், எல்லாம் முடிஞ்சிரும். கொஞ்சம் பொறுத்துக்கோ!” என்றவாறு அவள் கழுத்தில் அகஸ்டின் முகத்தை புதைத்து வாசம் பிடிக்க, ஒரு பக்கம் அவன் மேல் காதல் கொண்ட மனம் அந்த சுகத்தில் அவன் பக்கம் சாய்ந்தாலும், மறுபுறம் ‘எதுவோ தவறாக நடப்பதாக’ மனம் எச்சரித்துக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் முடியாமல், “தினு, என்னை விடுங்க!” அவனை அவள் தள்ள, அப்போதும் கேட்காது கழுத்திலிருந்து மெதுமெதுவாக அவன் இதழை கீழே கொண்டுச் செல்ல, ‘இதற்கு மேல் பொறுமையாக சொல்வது வேலைக்காகாது.’ என்று புரிந்துக்கொண்டாள் போலும்!

மொத்த பலத்தையும் சேர்த்து அவனை தள்ளிவிட்டவள், வேகமாக பாய்ந்து எழுந்து சேலையை இடையில் சொருகி பின்னால் தன் பாதுகாப்புக்கென கூடவே வைத்திருக்கும் கத்தியை எடுத்து அவனை நோக்கி நீட்டினாள்.

“எனக்குதான் பிடிக்கலன்னு சொல்றேன்ல, அப்றம் ஏன்? ஐ லவ் யூ பட், இது வேணாம். என் அனுமதி இல்லாம என்னை தொடணும்னு நினைக்காத!” விழிகளில் தீர்க்கத்துடன் அலீஷா பேச, அகஸ்டினின் முகத்தில் கொஞ்சமும் கோபத்தின் சாயல் புலப்படவில்லை. புன்னகையுடனே எழுந்து நின்றவன், “ஸ்வீட்ஹார்ட், என்னை ஹர்ட் பண்ணுவியா?” என்று கேட்டவாறு மெல்ல அவளை நெருங்கினான்.

அவளோ கேள்வியாக புருவத்தைச் சுருக்கி, பின் ‘இல்லை’ என்று உதட்டைப் பிதுக்கி தலையசைத்தவாறு கத்தியை மெதுவாக கீழிறக்க, அந்த கணத்தை பயன்படுத்திக்கொண்ட அகஸ்டின், மின்னல் வேகத்தில் அவளை நெருங்கி அவளின் குரல்வளையைப் பிடித்து சுவற்றில் சாய்த்திருந்தான். அவனின் இந்த தாக்குதலை அவள் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லையென்பது அவளின் அதிர்ந்த முகத்திலே அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒரு கை அவளின் குரல்வளையை பிடித்திருக்க, மற்ற கை கத்தியை ஏந்தியிருந்த அவளின் கரத்தை இறுகப் பற்றியிருந்தது. அவனுடைய விழிகளோடு சேர்த்து முகமும் கோபத்தில் சிவந்திருக்க, “திருடி!” ஆத்திரத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான் அவன். அவனுடைய வார்த்தையில் ‘இவனுக்கு எப்படி?’ உள்ளுக்குள் நினைத்து முதலில் அதிர்ந்து விழித்தவள், பின் ஏளனச் சிரிப்போடு “பரவாயில்லையே! நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்ட. அப்போ பத்து வருஷமா நீயும் என்னை நினைச்சிக்கிட்டுதான் இருக்கியா தினு?” கேலியாக கேட்டாள் அலீஷா.

அதில் உண்டான ஆத்திரத்தில், “மறக்குற ஆளாடி நீனு? சாதா எலின்னு நினைச்சேன். அப்றம்தான்டி தெரிஞ்சது நீ ஒரு திருட்டு பெருச்சாலின்னு.” என்று சொன்னவாறு தன் கரத்தில் மேலும் அழுத்தத்தைக் கூட்டியவன், “நீயெல்லாம் திருந்தவே மாட்டல்ல?” என்று கேட்டு முறைக்க, கஷ்டப்பட்டு இதழ் பிரித்து சிரித்தாள் அவள்.