விழிகள் 11

eiHW97A65297-c90e81d5

அலீஷாவின் குரல்வளையை இறுகப்பற்றி அகஸ்டின் சுவற்றில் சாய்த்திருக்க, அவனின் கனல் கக்கும் விழிகளைப் பார்த்து அவளுக்கே உள்ளூர குளிரெடுத்தது. ஆனாலும், முகத்தில் எதையும் காட்டாது அந்த நிலையிலும் கேலியாகச் சிரித்தாள் அவள்.

“என்னை மறந்திருப்பன்னு நினைச்சேன்.” அவனுடைய கரம் கழுத்தில் கொடுத்த அழுத்தத்தில் உண்டான வலியில் திக்கித்திணறி அலீஷா சொல்ல, “ஒரு தடவைதான் உன்னை சந்திச்சேன். அந்த நாளை மறக்கவே முடியாத மாதிரி பண்ணிட்ட. சின்னப் பொண்ணுன்னு உதவி பண்ண வந்தவன்கிட்டயே அவனுக்கு ரொம்ப பிடிச்ச பொருளை ஆட்டைய போட்டு ஓடி ஒளிஞ்சவதானேடி நீ? அன்னைக்கு நீ பண்ண வேலையால நான் வீட்டுல வாங்கின அறைய மறக்கவே மாட்டேன். இதுல என்னை கரெக்ட் பண்ண ஜென்ம பந்தம், உறவுன்னு பொய்யு வேற.” அகஸ்டின் பற்களை கடித்துக்கொண்டுச் சொன்னான்.

“வாட் அ லவ்லி மெமொரீஸ்!” கேலியாக சொன்ன அலீஷாவின் நினைவுகள் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்த, அகஸ்டினின் நினைவுகளும் பத்து வருடத்திற்கு முன் நடந்த அந்த சம்பவத்திற்குதான் சென்றது.

பத்து வருடங்களுக்கு முன்,

அப்போது மாயாவும் ரோஹனும் இத்தாலிக்கு செல்வதற்காக ஏற்பாடுகளைச் செய்துக்கொண்டிருந்த தருணம் அது.

வீட்டில் ‘நானும் செல்வேன்.’ என பதினெட்டு வயது அகஸ்டின் பிடிவாதம் பிடிக்க, அலைஸ்ஸிற்கோ அந்த நாட்களில் அவனை அனுப்ப கொஞ்சமும் விருப்பம் இல்லை. அவனின் முடிவுக்கு மறுப்பு தெரிவித்து அவர் அடம்பிடிக்க, அந்த இரவு நேரத்தில் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கோபமாக வெளியேறியிருந்தான் அகஸ்டின்.

“அவங்க பொறந்து வளர்ந்த ஊர்தானே! அப்றம் என்னதான் பிரச்சனை அவங்களுக்கு? அவங்களோட வாழ்க்கைய அவங்க இஷ்டப்படி வாழுறாங்க. ஆனா, நான் என்ன பண்ணணும், என்ன படிக்கணும்னு கூட நானா முடிவு பண்ண கூடாது. நான் இப்போ மேஜர். ஐ ஹேவ் ஆல் ரைட்ஸ் டூ டிஸைட்.” கத்திக்கொண்டு வேகமாக சைக்கிளை ஓட்டியவாறு சென்றவனது விழிளில் சிக்கியது, அந்த தெருமுனையில் வெள்ளைச் சுடிதாரில் நின்றிருந்த சிறுபெண்.

ஒருவித படபடப்போடு, கைகளை பிசைந்துக்கொண்டு அவள் நின்றிருந்த விதமே உணர்த்தியது, அவளுக்கு ஏதோ பிரச்சினையென்று. அவளைப் பார்த்ததுமே அவனுடைய கால்கள் தரையை தேய்த்தவாறு நின்றுவிட, சைக்கிளை நிறுத்திவிட்டு அவளை நோக்கிச் சென்றான் அகஸ்டின். ஆனால், அரும்பு மீசையுடன் தன்னை நோக்கி வரும் ஆண்மகனை பார்த்த பதினான்கு வயது அலீஷாவுக்கு பக்கென்றானது.

மிரட்சியாக அவள் அவனை நோக்க, “ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்டவாறு அகஸ்டின் நெருங்கியதுமே, ஆடையின் பின்புறத்தை மறைத்தவாறு சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டாள் அவள். அவளுடைய முகமே அவளின் பயத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.

“ஏய், ச்சில்! ஏன் பயப்படுற? ஆமா… உன் பெயரென்ன? இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”  தன்னை மீறிய அக்கறையுடன் கேட்டவாறு அகஸ்டின் அவளை நெருங்க, “ப்ளீஸ், பக்கத்துல வராதீங்க. போ…போங்க!” திக்கித்திணறி சொன்னவள், மேலும் தன்னை சுவற்றுடன் சாய்த்துக்கொண்டாள். அதுவும் இரு கைகளைக் கொண்டு அவள் பின்புறத்தை மறைக்க முயற்பட, அவனுக்கு ஏதோ ஒன்று தவறாகத் தோன்றியது.

“ஏய் குட்டிப்பொண்ணு, பயப்படாத! நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன். உனக்கு ஏதோ பிரச்சினைன்னு புரியுது. யூ டோன்ட் நீட் டூ டெல் மீ தட். பட், உன் வீடு எங்கேன்னு மட்டும் சொல்லு, ஐ வில் ஹெல்ப் யூ.” வார்த்தைகளால் மட்டுமன்றி விழிகளாலும் அவளுக்கு அவன் உணர்த்த, அவனின் சாம்பல் நிற விழிகளையே ஆழ்ந்து நோக்கினாள் அலீஷா. ஏனோ அந்த விழிகள் பொய் உரைப்பதாக அவளுக்கு தோன்றவில்லை.

தலை குனிந்துக்கொண்டு மெல்ல முன்னோக்கி வந்தவள், மெல்ல திரும்பி நின்றுக்கொள்ள, வெள்ளை ஆடையின் பின்புறத்தில் தெரிந்த சிவப்பு கறையைப் பார்த்தவனுக்கு எல்லாமே புரிந்துப் போனது. ‘ஓ ஷீட்!’ உள்ளுக்குள் நினைத்தவாறு, அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது தான் டீஷர்ட்டுக்கு மேல் அணிந்திருந்த ஷர்ட்டை கழற்றி அவளிடம் நீட்டினான் அவன்.

“இதை இடுப்புல கட்டிக்கோ! கம்ஃபோர்டபிள்லா ஃபீல் பண்ணுவ.” அகஸ்டின் சொல்ல, அதை வாங்கி ஷர்ட்டின் முழு நீள கைகளை இடுப்பில் கட்டிக்கொண்டவளுக்கு இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது.

“ரொம்ப நன்றி.” அலீஷா மென்புன்னகையுடன் சொல்ல, “தட்ஸ் ஓகே.” எதையோ சாதித்த பெருமையில் பெருந்தன்மையோடு அகஸ்டின் சொல்ல, மெதுவாக அவனை நெருங்கினாள் அவள்.

அவனும் புருவங்களைச் சுருக்கி அவளை கேள்வியாக நோக்க, கிட்டதட்ட மூச்சு காற்று படும் தூரத்திற்கு அவனை நெருங்கி, பெருவிரலை நிலத்தில் ஊன்றி எம்பி நின்றவள், அவனின் சாம்பல் நிற விழிகளையே இமை சிமிட்டாது பார்த்திருந்தாள்.

“ரொம்ப அழகா இருக்கு இந்த சாம்பல் கண்ணு.” ஆச்சரியமான குரலில் அவள் சொல்ல, முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன், “நீயும் ரொம்ப அழகா இருக்க, டோல் மாதிரி.” என்றான் ரசனையோடு. அவளும் சிரித்தவாறு அவனை விட்டு விலகி நின்றுக்கொள்ள, “உன் வீடு எங்கேன்னு சொல்லு, நான் கூட்டிட்டு போறேன்.” என்று அகஸ்டின் சொன்னதும்தான் தாமதம், “வேணாம்.” வேகமாக மறுத்தாள் அவள்.

“ஏன் வேணாம்? பார்க்க ரொம்ப சின்னப்பொண்ணா தெரியுற. அதுவும் இப்படியொரு நிலையில, இந்த மாதிரி இடத்துல, இந்த நேரத்துல இப்படி நிக்குறது சரியில்லை. நீ மொதல்ல…” என்று பேசிக்கொண்டே சென்றவன், “அய்யோ! உங்க சைக்கிள எவனோ திருட பார்க்குறான். இப்போ ஓடுறான். பிடிங்க.” பதட்டமாக வந்த அலீஷாவின் குரலில் சட்டென்று பேச்சை நிறுத்தி, “எவன்டா அவன்?” என்று கத்தியவாறு தன் சைக்கிளை நோக்கி ஓடினான்.

நான்கைந்து அடிகள் வைத்த பிறகுதான் ஏதோ ஒன்று உணர்த்த, அவசரமாக தன் கழுத்தை தடவிப் பார்த்தவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. “என் ஃபேவரிட் செயின்…” என்று கத்தியவாறு பேன்ட் பாக்கெட்டை தடவ, அது பர்ஸ்ஸில்லாது வெறுமையைக் காட்டியது. உடனே அலீஷா இருந்த திசையை அவன் நோக்க, அங்கு அவள் இருந்தாள்தானே!

“எங்க போனா அந்த குட்டிப்பொண்ணு?” சுற்றி முற்றி பதட்டமாக தேடியவனுக்கு அப்போதுதான் உரைத்தது, பாக்கெட்டிலிருந்த மொத்தப் பணத்தையும் கழுத்திலிருந்த ப்ளாட்டினம் கற்கள் பதித்த பெட்டி போன்ற லோக்கெட் வடிவத்துடன் கோர்க்கப்பட்ட அவனுடைய செயினையும் அவள் திருடிச் சென்றது.

அன்றிரவு அவளிடம் செயினைத் தொலைத்து அலைஸ்ஸின் கையால் ‘பொறுப்பில்லாதவன்!’ என்ற திட்டோடு வாங்கிய அறையை அவனால் மறக்கவே முடியாது.

இருவரின் நினைவுகளும் நடந்த சம்பவத்தை மீட்ட, அலீஷாவுக்கு முட்டிக்கொண்டு சிரிப்பு வந்ததென்றால், அகஸ்டினுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியிருந்தது.

“யூ க்னோ வாட் தினு, இந்த சாம்பல் கண்ணு இதுதான்… இதுதான் உன்னை எனக்கு அடையாளம் காமிச்சது. ஏதோ மேக்னட் வச்சிருக்கடா அதுல.” அவனுடைய கோபப் பிடியில் இருந்துக்கொண்டு அத்தனை காதலோடு அலீஷா பேச, “மண்ணாங்கட்டி!” பற்களை கடித்தவன், “அன்னைக்கு உன் பேக்ல கம்பனியோட முக்கியமான டொக்யூமென்ட்ஸ் பார்த்தேன். யாருக்குடி வேலை பார்க்குற? யாரோட ஸ்பைன்னு நீயே சொல்லிரு!” மிரட்டலாக கேட்டான்.

“நான் எவனுக்கு கீழேயும் வேலை பார்க்கல. இந்த ஸ்டீலிங் பிஸ்னஸ்ஸ நான் சோலோவா பண்ணிக்கிட்டு இருக்கேன். என்ட், தொழில் தர்மம் யாரையும் காட்டிக்கொடுக்க கூடாது. சாமி கண்ண குத்திரும்.” விழிகளை உருட்டி அவள் சொன்ன தோரணையை யார் பார்த்திருந்தாலும் கோபம் மறந்து ரசித்திருப்பார்கள். ஆனால், அகஸ்டின் ரசிக்கும் மனநிலையில் இல்லை போலும்!

“செய்றது திருட்டுத்தொழில். இதுல என்னடி தொழில் தர்மம், கொள்கைன்னு…” சிவந்த விழிகளுடன் கத்திய அகஸ்டின், “ஐ டோன்ட் வோன்ட் யூவர் ஆன்சர். ஐ ஆல்ரெடி க்னோ.” அழுத்தமாக உரைத்து, “ஹர்ஷி கோஸ்மெடிக்ஸ்” என்றான் வெற்றிச் சிரிப்போடு.

முதலில் சற்று அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தோடு விரிந்த அவளுடைய விழிகள், பின் மெச்சுதலாக ஒரு பார்வைப் பார்க்க, “என் கூட வா!” என்று அவள் கரத்தை இறுகப் பற்றி அகஸ்டின் இழுத்துச் செல்லும் போது கூட ஏதோ கிடைக்காத வரம் கிடைத்த சந்தோஷத்தோடே அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள் அவள். ‘தான் மாட்டிக்கொண்டோம்.’ என்ற பயமும் பதட்டமும் கொஞ்சமும் அவள் முகத்தில் இல்லை.

தன் புல்லட்டில் அவளை அழைத்துச் செல்ல விரும்பாது, ‘அவள் தப்பித்துவிட்டால்?’ என்ற பயத்தோடு டேக்ஸியில் ‘ஹர்ஷி கோஸ்மெடிக்ஸ்’ என்று பொன்னெழுத்துக்களால் பெயர் பொறிக்கப்பட்டு, இப்போது வளர்ந்து வந்துக்கொண்டிருக்கும் அந்த கம்பனியின் முன் வண்டியை நிறுத்தச் சொன்னான் அகஸ்டின்.

வந்து இறங்கியதுமே அவள் முழங்கையைப் பற்றி தரதரவென உள்ளே இழுத்துச் சென்றவன், அங்கிருந்த யாரையும் கொஞ்சமும் மதிக்கவில்லை. வாசலில் நின்றிருந்த காவலர்கள் தொடக்கம் ரிசெப்ஷனில் நின்றிருந்த பெண் கத்திய கத்தல்கள் கூட அவன் காதில் விழவில்லை. ஆனால், அகஸ்டின் உள்ளே நுழைந்த அடுத்த சில நொடிகளில் ரிசெப்ஷனில் அமர்த்தப்பட்டிருந்த பெண்ணிற்கு வந்த செய்தியில் அவள் உட்பட, காவலர்களும் அமைதியாகிவிட்டனர்.

அங்கிருந்தவர்களிடம் கத்தி, மிரட்டி அந்த முக்கிய அறையை கண்டுக்கொண்டவன், ‘மனோகரன் டிரெக்டர் ஆஃப் ஹர்ஷி கம்பனீஸ்’ என்று பெயர்ப்பலகை தாங்கியிருந்த கதவை ‘படார்’ என தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கு இவன் வருவதை முன்கூட்டியே அறிந்து தயாராக ஹர்ஷி கம்பனியின் உரிமையாளர் மனோகரன் தன் இருக்கையில் சாய்ந்தமர்ந்திருக்க, அவருக்கு பக்கத்தில் நின்றிருந்தான் அவரின் காரியதரிசி விஷ்ணு.

உள்ளே வந்த அகஸ்டின், அலீஷாவை அறையில் உதறிவிட்டு, “ஹெலோ மிஸ்டர்.மனோகரன், உங்க மொத்த ப்ளானையும் இந்த அகஸ்டின் கெடுத்துட்டான்னு கோபம் வரலயா என்ன? ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்க. நேர்மையா முன்னேறுறதை விட்டுட்டு குறுக்குவழி தேவைப்படுது. அசிங்கமா இல்லை?” கேலியாக ஆரம்பித்து அடக்கப்பட்ட கோபத்தோடு முடிக்க, அவர் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியின் சாயலும் இல்லை.

தன் முதலாளியின் காதருகில் குனிந்த விஷ்ணு, “பாஸ், இதுவா அந்த வெள்ளைக்கார பையன்?” என்று ஆச்சரியக்குரலில் கேட்டு, “அப்படி இவன்கிட்ட என்ன இருக்குன்னு என் ஆளு இவன் பின்னாடி சுத்துறா?” என்று கேட்டு அகஸ்டினை முறைக்க, “உனக்கு உன் பிரச்சினை!” எரிச்சலாக முணுமுணுத்தவாறு எழுந்து, அகஸ்டினின் எதிரில் வந்தார் மனோகரன்.

“வெல்கம் அகஸ்டின். ஒரு கம்பனியோட சீக்ரெட்ட அதோட போட்டிக் கம்பனி கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறது ஒன்னும் தப்பில்லையே! எனிஹவ், என்னோட ஸ்பைய நீ கண்டுபிடிச்சிட்ட. புத்திசாலிப் பையன்தான் நீ. இனிமே நேர்மையா முன்னேற ட்ரை பண்றேன். நவ் யூ மே கோ.” அவர் சாதாரணமாகவே சொல்ல, அலீஷாவுக்கே ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.

‘என்னாச்சு இந்த பெருசுக்கு? நம்மக்கிட்ட முழு பேமன்ட் தராமலயே வேலைய கச்சிதமா முடிக்கணும்னு டோர்ச்சர் பண்ணிச்சு. இப்போ நான் மாட்டிக்கிட்டு ப்ளானே சொதப்பிட்டு… ஆனாலும், அசால்ட்டா பேசுது. இது நல்லதுக்கில்லையே… ஒருவேள, தினுவ அனுப்பிட்டு நம்மள நல்லா வச்சி செய்ய இருக்கானோ? ஆத்தீ!’ உள்ளுக்குள் பதறிவிட்டாள் அலீஷா.

ஆனால், மனோகரன் பேசியதில் அகஸ்டின்தான் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். புரியாது மனோகரன் அவனை கேள்வியாக நோக்க, “இங்க வா!” விஷ்ணுவை சிரித்தவாறு அழைத்தான் அவன்.

விஷ்ணுவும் புருவத்தை சுருக்கி அவனை கேள்வியாகப் பார்த்தவாறு அவனை நெருங்கினான். அவன் வந்து நின்று, “என்ன?” என்று முறைப்புடன் கேட்டதும்தான் தாமதம், அவனை அகஸ்டின் ஓங்கி  அறைந்திருக்க, அதிர்ந்துப் போய் கன்னத்தைப் பொத்தியவாறு, “ஏன் மேன்?” என்று பாவமாகக் கேட்டான் அவன்.

“திஸ் இஸ் ஃபோர் இப்படி ஒரு முட்டாள ஸ்பையா அனுப்பினதுக்கு. வயசுல பெரியவங்க அடிக்க முடியாதுல்ல, அதான்.” மனோகரனைப் பார்த்துச் சொன்னவன், மீண்டும் விஷ்ணுவின் மறு கன்னத்தில் அறைந்து, “திஸ் இஸ் ஃபோர்…” என்று இழுத்தவாறு, “என் சைத்துவ மிரட்டினதுக்கு.” மனோகரனை மேலும் நெருங்கி, சிவந்த விழிகளுடன் அழுத்தமாகச் சொன்னான்.

இப்போதுதான் மனோகரனின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, அதில் திருப்திப்பட்ட அகஸ்டினின் நினைவுகள் நேற்றிரவு நடந்ததிலிருந்து இன்று காலை நடந்த சம்பவங்கள் வரை மீட்டிப் பார்த்தது.

நேற்றிரவு, மஹிக்கு வந்த அழைப்பை எப்போதும் போல் அகஸ்டின் ஏற்று அலைப்பேசியை காதில் வைத்ததும்தான் தாமதம், மறுமுனையில் படபடவென பொறிய ஆரம்பித்தது ஒரு குரல்.

“என்ன மிஸ்டர்.மஹேந்திரன் பயம் விட்டுப் போச்சா? அன்னைக்கு ஏதோ வெறும் பயத்தை மட்டும் காமிக்க ஒன்னும் பண்ணாம அவள விட்டுட்டோம். பட், எல்லா நேரமும் அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது. நாளைக்குள்ள நாங்க கேட்ட டீடெய்ல்ஸ் வரலன்னா, அப்றம் நடக்குற விளைவுகளுக்கு நாங்க பொறுப்பில்லை.” மறுமுனையிலிருந்த குரல் மிரட்டிவிட்டு அலைப்பேசியை துண்டித்திருக்க, அகஸ்டினுக்கோ அத்தனை அதிர்ச்சி!

அழைப்பைத் துண்டித்ததைக் கூட உணராது, சிலை போல் அகஸ்டின் நின்றிருக்க, அப்போதுதான் மஹி வேகமாக வந்து அலைப்பேசியை பிடுங்கினான்.

அடுத்தநாள் அலைஸ், அகஸ்டினுடன் பேசிவிட்டு சென்ற அடுத்த சில நொடிகளிலேயே அறையில் அவர் வைத்துவிட்டுச் சென்ற அவரின் அலைப்பேசிக்கு மடிக்கணினி திறக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை குறுஞ்செய்தி வர, அதைப் பார்த்தவனுக்கு நன்றாகப் புரிந்துப் போனது, அலைஸ் தனதறைக்கு வந்த சமயத்தை பயன்படுத்தி மஹி செய்திருக்கும் வேலை.

அடுத்தகணம் வேகமாக மஹியின் அறைக்குச் சென்றவன், கதவை நிதானமாக திறந்து கதவு நிலையில் சாய்ந்தவாறு, “எனக்கே இப்போ சந்தேகமா இருக்கு, நீ நிஜமாவே மாயா அத்தையோட பையன்தானா? அவங்களோட பையனா இருந்துக்கிட்டு தப்பை சரியா பண்ணத் தெரியாத தத்தியா இருக்கியே, அதான்.” கேலியாகச் சொல்ல, மடிக்கணினியில் தீவிரமாக எதையோ செய்துக்கொண்டிருந்த மஹி, திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தான்.

“இந்த மாதிரி தப்பு பண்ணும் போது டோர்ர லோக் பண்ணணும். இது கூட தெரியாம… அய்யோ அய்யோ! எனிவேய், லேப்டாப்ப கொடு!” அகஸ்டின் அழுத்தமாக கேட்டவாறு அவனை நெருங்க, “நா…நான் ஒன்னும் தப்பு பண்ணல்ல அகஸ்த்து, ஒரு முக்கியமான வேலை அதான். நீ மொதல்ல இங்கிருந்து கிளம்பு!” பதட்டமாகச் சொன்னவாறு அவனெதிரே வழிமறைப்பது போல் நின்றான் மஹி.

“வழியில நிக்காத!” கோபமாக கத்தி அவன் மார்பில் கை வைத்து அகஸ்டின் தள்ள, கால்களை தரையில் ஊன்றி சமன்படுத்தியவனுக்கும் அவன் தள்ளி விட்டதில் ஏகத்துக்கும் கோபம் எகிறியது. அதுவும், ஏற்கனவே ஆத்வி அவனைக் காதலிப்பதில் ‘வெளிப்படுத்தி விடக் கூடாதென’ உள்ளுக்குள் அடக்கி வைத்திருக்கும் கோபமும் அவன் தள்ளிவிட்ட கடுப்பில் சேர்ந்துக்கொண்டது.

“என்னை ஏன்டா தள்ளி விடுற?” அகஸ்டினின் கன்னத்தில் அவன் ஓங்கி குத்தியிருக்க, “ஆங்… என்னடா அடிக்குற? நான் அப்படிதான்டா பண்ணுவேன். முடிஞ்சா இப்போ என் மேல கை வைடா!” பதிலுக்கு கத்தியவாறு அவனின் முகத்தில் அகஸ்டின் குத்த, “உன்கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கிருக்கு. மொத்தத்தையும் இப்போ தீர்க்குறேன்.” அவன் மேல் பாய்ந்து அடிக்க ஆரம்பித்தான் மஹி.

இருவரும் தரையில் விழுந்து, உருண்டு பிரண்டு, சிறுபிள்ளைப் போல் மாறி மாறி அடித்துக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் இருவருக்குமே மூச்சு வாங்க, மூச்சு வாங்கியவாறு பக்கவாட்டாகத் திரும்பி அகஸ்டின் முறைத்துப் பார்க்க, மஹியின் முகத்திலோ கொஞ்சமும் கோபத்தின் சாயல் இல்லை.

கிட்டதட்ட அழும் நிலையில் இருந்தான். “என்னை மன்னிச்சிரு அகஸ்த்து.” தழுதழுத்த குரலில் மஹி சொல்ல, “ஐ திங், மாமாவும் அத்தையும் உன்னை குப்பைத்தொட்டியிலுந்து எடுத்து வளர்த்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் சைத்து.” கேலியாகச் சொன்னவன், “கொஞ்சநாளாவே நீ சரியில்லை. காத்து கருப்பு எதுவும் அடிச்சிட்டோன்னு நினைச்சேன். அப்றம்தான் புரிஞ்சிக்கிட்டேன், அந்த நடமாடும் பார்லர் உன்னை வசியம் பண்ணி வச்சிருக்கான்னு. ஏன்டா, ஆள பார்த்தா இத்தனை வருஷம் உன் கூட இருந்தவனை மறந்துருவியா?” சற்று ஆதங்கத்தோடு முடித்தான்.

மஹிக்குதான் குற்றவுணர்ச்சியாகிப் போனது. ஏனோ தன் மனநிலையை சொல்லவும் அவனுக்கு தைரியமில்லை.

அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்தவனாக, “ஆத்விய யாரு கடத்தியிருக்காங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும், ரைட்? அப்போ ஏன் எங்ககிட்ட மறைச்ச சைத்து? இந்த பிரச்சினைய நீ தனியாளா ஹேன்டல் பண்ணணும்னு நினைச்சியா என்ன? தட்ஸ் இம்போஸிபள்!” அகஸ்டின் விழிகளை உருட்டிச் சொல்ல, தயக்கமாக அவனை ஏறிட்டான் அவன்.

“ஐ டோன்ட் க்னோ, வாட் டு டூ. ஆத்விய நான் எந்தளவு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியும். அன்னைக்கு அவள கடத்திட்டாங்கன்னு தெரிஞ்சதும் துடிச்சி போயிட்டேன்டா. மறுபடியும் அவளுக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சதும், நிதானமா யோசிக்க முடியல.” ஒருவித தயக்கத்தோடு மஹி சொல்ல,

“ஐ அம் டேம்ன் ஷுவர், கண்டிப்பா இந்த இடத்துல மாயா அத்தையோ, ரோஹன் மாமாவோ இருந்திருந்தா உன்னை மாதிரி முட்டாளா நடந்திருக்க மாட்டாங்க.” அழுத்தமாக சொன்ன அகஸ்டின், “இதுக்கு காரணம் யாரு?” என்று கேட்டு மஹியை கூர்மையாக நோக்கினான்.

இதற்குமேல் மறைக்க முடியாதென மஹிக்கும் தோன்றியது போலும்! ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், “ஆரம்பத்துல யாருன்னு தெரியல ப்ரைவேட் நம்பர்னுதான் இருக்கும். ஆனா, இன்னைக்கு காலையில ஒரு நம்பர்ல இருந்து கூப்பிட்டிருந்தாங்க. அந்த நம்பர்… ஹர்ஷி கோஸ்மெடிக்ஸ்ஸோட எம்.டி மிஸ்டர்.மனோகரனோடது?” என்று சொல்லி முடிக்க, இங்கு மனோகரனின் எதிரே நின்றுக்கொண்டு இதழை ஏளனமாக வளைத்துச் சிரித்தான் அகஸ்டின்.

நடந்ததை அகஸ்டின் சொல்லி முடிக்க, ‘மென்டல் மாதிரி வேலை பார்த்திருக்கியேடா மென்டல்!’ உள்ளுக்குள் திட்டியவாறு விஷ்ணுவை மனோகரன் கொலைவெறியாக பார்த்தார் என்றால், ‘ஆத்தீ! பதட்டத்துல எந்த நம்பர்லயிருந்து கூப்பிடுறோம்னு கூட கவனிக்காம இப்படி சிக்கிட்டோமே!’ உள்ளுக்குள் பதறிவிட்டான் அவரின் காரியதரிசி.