விழிகள் 13

eiSWFWX62660-346c3a88

மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தவளை விழி விரித்து நோக்கியவன், பின் முறைத்துப் பார்க்க, கேலிச் சிரிப்புடன் அவனெதிரே வந்து நின்றாள் அலீஷா.

“மை ரசகுல்லா, இரண்டு நாளா ஆளையே காணோம். உன்னை பார்க்காம ஏங்கிப் போவேன்னு யோசிக்க மாட்டியா? ஆமா… என்னை ரொம்ப மிஸ் பண்ணியா என்ன?” அலீஷா பேசிக்கொண்டே அவனை நெருங்க, இரண்டடி பின்னால் நகர்ந்தவன், “கீப் சோஷியல் டிஸ்டன்ஸ்.” என்றுவிட்டு ஒற்றை விரலால் அவளை மேலிருந்து கீழ் காட்டி, “என்ன கோலம் இது?” என்று கேட்டான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

குனிந்து தான் அணிந்திருந்த கருப்பு ஷர்ட் மற்றும் பேன்ட்டை பார்த்தவள், சிரிப்புடன் நிமிர்ந்து “இதுதான் அலீஷா. அது வெறும் வேஷம்தான். நம்ம தொழிலுக்கு இதான்ப்பா கம்ஃபோர்டபிள். அன்னைக்கு கூட அந்த சாரிய கட்டியிருந்ததாலதான் உன்கிட்ட சிக்கிட்டேன். இல்லைன்னா, நம்ம ஸ்பீடே வேற.” கெத்தாக கோலரை தூக்கிவிட்டுக் கொள்ள, “மேய்க்குறது எருமை, இதுல பெருமை.” கடுப்பாகச் சொன்ன அகஸ்டின், “வாய திறந்தாலே பொய்யு! ஏமாத்துக்காரி! திருட்டெலி!” படபடவென பொரிந்தான்.

“அங்க மட்டும் என்ன வாழுதாக்கும்?” அலீஷா, அகஸ்டின் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க, வேகமாக அவளை நெருங்கி, “ஆமாடி நான் தப்பு பண்ணுவேன்தான். ஆனா, உன்னை… உன்னை மாதிரி கிடையாது.” கிட்டதட்ட ஒற்றை விரலை நீட்டி கத்தவே ஆரம்பித்துவிட்டான். அவளோ கொஞ்சமும் அவனின் கோபத்தை கண்டுக்கொள்ளவில்லை.

தன் முகத்திற்கு நேராக நீட்டியிருந்த அவனுடைய விரலில் பாய்ந்து முத்தமிட்டவள், “லவ் யூ தினு.” காதலோடுச் சொல்ல, “கனவு காணுறதோட நிறுத்திக்கோ!” ஏளனமாகச் சொல்லிவிட்டு மீண்டும் வண்டியில் ஏறச் சென்றான் அகஸ்டின்.

அடுத்தகணம், அவனுடைய கரத்தை சட்டென இறுகப் பற்றி, “நிறைய விஷயங்கள் எனக்கு இப்போவும் கனவா மட்டும்தான் இருக்கு. நிறைய இழந்திருக்கேன். அந்த லிஸ்ட்ல உன்னை சேர்த்துற மாட்டேன். எனக்கு நீ வேணும். நான் இழந்ததுக்கெல்லாம் ஈடா நீ எனக்கு கிடைச்சிருக்க. அவ்வளவு சீக்கிரம் விட மாட்டேன்.” என்ற அலீஷாவின் வார்த்தைகளில் அத்தனை உறுதி. அகஸ்டினோ அலட்சியமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு எதுவும் பதில் பேசாது வண்டியில் ஏறி, வண்டியை உயிர்ப்பிக்க போனான்.

அப்போதும் அவனை செல்ல விடாது வழி மறைத்து நின்றவள், தன் பின் பாக்கெட்டிலிருந்த செயினை எடுத்து அவன் முன் ஆட்டிக் காட்ட, விழிகள் மின்ன, “மை செயின்.” என்றவாறு அதை பிடுங்க அகஸ்டின் வரவும், அதை பின்னால் இழுத்துக்கொண்டாள் அலீஷா.

அவளை உக்கிரமாகப் பார்த்தவன், “அன்னைக்கே உன்கிட்டயிருந்து இதை எடுத்திருக்கணும். ஆனா,  எனக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு உனக்கு தெரிஞ்சா எங்கே நீ தப்பிச்சி போயிருவியோன்னு அதை அப்படியே வச்சிட்டேன். ஒழுங்கு மரியாதையா கொடுடி!” பற்களைக் கடிக்க, “அதுக்கு முன்னாடி ஒரு க்யூரியோசிட்டி ரசகுல்லா. இத்தனை வருஷமா இந்த லோக்கெட்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு தெரியல. நானும் ஏதேதோ பண்ணிப் பார்த்தேன். பட், உடைக்க தோனல. இப்போ இதை திறந்து காட்டு, திருப்பி கொடுக்குறதை பத்தி யோசிக்கிறேன்.” விழிகளில் குறும்புடன் சொன்னாள் அவள்.

“ச்சே!” சலித்தவாறு அவள் கையிலிருந்த லோக்கெட்டை சரியான விதத்தில் பிடித்து அகஸ்டின் ஒரு அழுத்தம் கொடுக்க, அதுவோ சட்டென திறந்துக்கொண்டது. ஆர்வமாக அலீஷாவின் விழிகள் அதை நோக்க, அவளிதழ்களோ லோக்கெட்டுக்குள் சின்ன சின்ன வைரக் கற்களால் பொறிக்கப்பட்டிருந்த ‘அகஸ்டின்‘ என்ற பெயரை மெல்லிய புன்னகையுடன் உச்சரித்தன.

அவளுடைய கவனம் அதிலிருப்பதை உணர்ந்து அகஸ்டின் வேகமாக அதை எடுக்க வர, அவனை விட அவள் புத்திசாலி போலும்!

“என்ன அவசரம் தினு?” கேலியாகக் கேட்டவாறு அவனுடைய கைக்கு அகப்படாதவாறு இரண்டடி பின்னால் நகர்ந்தவள், அதை தன் கழுத்தில் மாட்டி சட்டைக்குள் லோக்கெட்டை போட்டுக்கொள்ள, “ஏய் திருட்டெலி, தரேன்னுதானேடி சொன்ன!” அதிர்ச்சி கலந்த கோபத்தோடு கேட்டான் அவன்.

“யோசிக்கிறேன்னுதானே சொன்னேன்! தரேன்னு சொல்லவே இல்லையே…” இரு புருவங்களையும் ஏற்றி இறக்கி கேலியாகச் சொல்லி, “என்கிட்ட இருக்குறது உன்கிட்ட இருக்குறதுக்கு சமம்தான் தினுபேபி. எப்படியும் என்கிட்ட நீ வந்துருவ. அதுவரைக்கும் இது என்கிட்டயே இருக்கட்டும்.” அத்தனை நம்பிக்கையோடு அலீஷா பேச, “இவளை…” அவனால் பற்களை கடித்து முறைக்க மட்டும்தான் முடிந்தது.

“என்கிட்ட அடி வாங்குறதுக்குள்ள ஓடிப் போயிரு!” அத்தனை கோபத்தோடுச் சொன்ன அகஸ்டின் மீண்டும் வண்டியை உயிர்ப்பிக்கப் போக, அப்போதும் அவனை அவள் விட்ட பாடில்லை.

“ஆஃபீஸுக்கு கிளம்புறியா? கிளம்பு! கிளம்பு! ஆனா ஒன்னு, நான் இல்லைன்னு தைரியத்துல மத்த பொண்ணுங்ககிட்ட கடலை போட்ட… அவ்வளவுதான். பிச்சிருவேன் பிச்சு! ஈவினிங் உனக்காக வெயிட் பண்ணுவேன். குனிஞ்ச தலை நிமிராம வெளியில வரணும்.” அவள் கிட்டதட்ட மிரட்ட, ‘யாருடி நீ?’ என்றுதான் அவனுக்கு கேட்கத் தோன்றியது. 

ஆனால், ‘அமைதியாகச் செல்வது மேல்’ என்று நினைத்தான் போலும்! எதுவுமே பேசாது அவளை விடாது முறைத்தவாறு மின்னல் வேகத்தில் வண்டியைச் செலுத்தினான் அவன். “உன் மனசு கண்டிப்பா என்னை மிஸ் பண்ணும் தினு, சோ, இதை வச்சிக்கோ!” இடம், பொருள் எதையும் கண்டுக்கொள்ளாது பல முத்தங்களை காற்றில் பறக்க விட்டாள் அலீஷா.

அடுத்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு வந்தவனுக்கு, அவள் சொன்னது போல்தான் இருந்தது. அவனுடைய பார்வை அடிக்கடி அவனுக்கெதிரிலிருந்த இருக்கையின் மீதுதான் படிந்தது. அலீஷாவுக்கு அலுவலகத்தில் வழங்கப்பட்ட இடம் அது.

ஏனோ அந்த இடத்தை அடிக்கடி நோக்கியவனுக்கு, இன்று காலை பார்த்தவளுக்கும் அந்த இருக்கையில் இதற்கு முன் அமர்ந்திருந்தவளுக்கும் மலையளவு வித்தியாசம் தெரிந்தது. அதுவும், விழிகளை உருட்டி மிரட்சியான பார்வையுடன், அடிக்கடி நழுவிய துப்பாட்டை தோளோடு சேர்த்து சரிசெய்தவாறு, மெல்லிய குரலில் பேசும் அலீஷாவின் விம்பம்தான் அவனுடைய மனக்கண்ணில்.

‘ச்சே! பொண்ணா அவ? பேயு… எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கா. மறுபடியும் என் முன்னாடி வாடி! சட்னிதான் நீனு.’ உள்ளுக்குள் எரிச்சலாக நினைத்தவாறு வேலையில் கவனத்தை செலுத்திய அகஸ்டினுக்கு, விழிகள் அடிக்கடி அந்த இடத்தை நோக்குவதை மட்டும் தடுக்க முடியவில்லை.

அன்று மாலை, வேலை முடியும் போது கிட்டதட்ட காலை அலீஷா பேசியதை மறந்தே இருந்தான் அவன். எப்போதும் போல் வண்டியை உயிர்ப்பித்து மிதமான வேகத்தில் அகஸ்டின் வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்க, “ரசகுல்லா…” என்று கத்தியவாறு அவனை முட்டி மோதுவது போல் ஒரு ரோயல் என்ஃபீல்ட் வண்டி வேகமாக வர, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான் அவன்.

முகமூடி மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்த அந்த உருவத்தை அவன் உற்று நோக்க, “தினு, டவுட்டே வேணாம். இட்ஸ் அலீஷா வீராவேதான். எப்படி நம்ம திறமை?” வண்டியை அவனுக்கு ஈடாக செலுத்தியவாறு அவனுக்கு கேட்கும்படி அலீஷா கத்த, அவள் புல்லட்டை லாவகமாக ஓட்டும் விதத்தை ஆச்சரியமாகப் பார்த்தவன், “ஏய் எலி? யாரோட வண்டிடி இது?” அதிர்ந்த குரலில் கேட்டான்.

“உன்னை பார்க்க வரணும். ஆனா, ஆட்டோவுக்கு காசு பத்தல. அவசரத்துக்கு இந்த புல்லட் ரோட்டோரமா அநாதையா கிடந்திச்சு. தூக்கிட்டோம்ல!” கெத்தாக அலீஷா சொல்லிச் சிரிக்க, “திருட்டெலி, திருந்த மாட்டல்ல நீனு?” கோபமாகக் கேட்ட அகஸ்டின், சிவப்பு வீதி விளக்கு ஒளிர்வதைப் பார்த்து பல வண்டிகளோடு தன் வண்டியையும் நிறுத்தினான்.

“உனக்கு சொந்தமில்லாத பொருள் மேல அதிகம் உரிமை கொண்டாடாத! ஒருநாள் அதுக்கு சொந்தமானவங்ககிட்ட திரும்பி போயிரும். என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.” தன் பக்கத்தில் வண்டியை நிறுத்திய அலீஷாவிடம் அவன் சொல்ல, சிறிதுநேரம் அவனை உற்று நோக்கியவள், வீதி விளக்கைப் பார்த்துவிட்டு, “ஓகே, ஒரு போட்டி வச்சிக்கலாம். நான் சொல்ற இடம் வரைக்கும் நமக்குள்ள பைக் ரேஸ். நான் ஜெயிச்சேன்னா…. என் நம்பிக்கை பொய்யாகாது. என்ன சொல்ற?” புருவத்தை உயர்த்திக் கேட்டாள் சிரிப்புடன்.

யோசனையில் புருவத்தை நெறித்தவன், வண்டியின் க்ரிப்பை முறுக்கியவாறு “சேலன்ஜ் அக்செப்டட்!” என்றுவிட்டு பச்சை விளக்குக்காக காத்திருக்க, முத்துப் பற்கள் தெரிய சிரித்தவாறு பாதையை கவனித்தாள் அலீஷா. சரியாக, பச்சை விளக்கு ஒளிர்ந்த அடுத்தகணம், இரு வண்டிகளும் மின்னல் வேகத்தில் பறந்தன.

அகஸ்டின் முந்திச் செல்ல, அலீஷா முந்திச் செல்ல என மாறி மாறி போட்டி போட்டு இருவரும் வண்டியை செலுத்த, மற்ற வாகனங்களுக்கிடையில் லாவகமாக வண்டியை செலுத்தும் அலீஷாவைப் பார்த்தவனுக்கு நிஜமாகவே ‘என்ன பொண்ணுடா இவ?’ என்றுதான் இருந்தது. சரியாக, அலீஷா வெற்றிப்புள்ளியாகச் சொன்ன  பாதையை நெருங்க, அந்நேரம் அலீஷாவுக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த அகஸ்டின், பின்னால் வந்துக்கொண்டிருந்தவளிடம் பெருவிரலை தலை கீழாக காட்டி பழிப்பு காட்ட, அவளோ பற்களைக் கடித்துக்கொண்டாள்.

‘எனக்கு தினு வேணும். பத்து வருஷ காத்திருப்பு வீணாக நான் விட மாட்டேன். என்னால என்னைக்கும் இவன விட்டுக்கொடுக்க முடியாது.’ உள்ளுக்குள் ஒரு உறுதியுடன் நினைத்துக்கொண்டவள், புழுதி கிளம்ப அத்தனை வேகத்தோடு வண்டியைச் செலுத்தினாள். சரியாக அந்த பாதையை அகஸ்டின் நெருங்க, அவனை முந்திக்கொண்டு அந்த பாதையை அடைந்த அலீஷா, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவன் செய்தது போலவே பெருவிரலை தலை கீழாக வைத்து பழிப்புக் காட்ட, இப்போது முறைப்பது அகஸ்டினின் முறையானது.

அவள் பக்கத்தில் வண்டியை நிறுத்தியவன், விடாது அவளை முறைக்க, கெத்தாக கோலரை தூக்கி விட்டுக்கொண்டாள் அவள். “அலீஷா ஒன்ன நினைச்சா அதை நடத்தாம விட மாட்டா.” சினிமா வசனம் பேசி அவள் பேசிய பேச்சில், அகஸ்டினுக்கு அத்தனை கடுப்பு. எதுவுமே பேசவில்லை அவன்.

அவனை காதலாகப் பார்த்தவாறு, “லவ் யூ ரசகுல்லா.” என்ற அலீஷா, பின்னால் எட்டிப் பார்த்து  “ஒரு முக்கியமான க்ளைன்ட்ட மீட் பண்ண போறேன். நாளைக்கு பார்க்கலாம். என்ட், ஒரு மேட்டர். போகும் போது ஒரே வழியால போகுது. கிடைக்குற சந்துக்குள்ள வண்டிய விட்டு எடக்குமடக்கா போ! அப்போதான் மாட்டிக்க மாட்ட.” என்றுவிட்டு வேகமாகச் சென்றிருக்க, ஒரு நிமிடம் அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவனை சுற்றி வளைத்த போலிஸ் வண்டியைப் பார்த்ததும் அதன் அர்த்தம் அப்போது அவனுக்கு புரிந்தது.

அதேநேரம்,

“மஹி, ரொம்ப நிதானமா இரு! பதட்டப்படாத! யூ ஆர் ஓகே. மெதுவாக அந்த பொய்ன்ட்ல இதை பேஸ்ட் பண்ணணும்.” தனக்குத்தானே பேசியவாறு சிப்பியினால் தான் கட்டிய கோபுரத்தின் உச்சியிற்கு பொறுத்த வேண்டிய சிற்பியை மெதுவாக, நிதானமாக மஹேந்திரன் பொறுத்தப் போக, “வாவ்!” என்றொரு குரல்.

அதில் திடுக்கிட்டு வேகமாக அவன் திரும்ப, அவன் திரும்பிய வேகத்தில் அவனுடைய கை கோபுரத்தின் மேற்பகுதியில் பட்டு, அந்த பகுதியே கீழே விழுந்துவிட, மொத்த சிற்பிகளும் இப்போது தரையில்தான்.

“ஓ கோட்! சோரி… சோரி தீரா.” பதட்டமாக மன்னிப்பு வேண்டியவாறு கீழே விழுந்திருந்ததை ஆத்வி எடுக்கப் போக, அவளுடைய முழங்கையைப் பிடித்திழுத்தவன், “என்னை டிஸ்டர்ப் பண்ணா எனக்கு சுத்தமா பிடிக்காது.” என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு. முதல்தடவை அவளுடன் சற்று கடுமையாக நடந்துக்கொள்கிறான்.

அவன் பேசிய விதத்தில் அரண்டவள், மலங்க மலங்க விழித்தவாறு நிற்க, அவளை தள்ளிவிட்டு கீழே விழுந்திருந்ததை சுத்தம் செய்ய தொடங்கினான் மஹி. சிறிதுநேரம் அவனுடைய கோபம் புரிந்து, கைகளை பிசைந்தவாறு அமைதியாக நின்றிருந்த ஆத்வி, “ஐ அம் சோரி தீரா, நான் வேணும்னு… ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதான்…” திக்கித்திணறி பேசினாள்.

ஏற்கனவே இருந்த கோபத்தோடு அவளைப் பார்த்தவள், “வாட்?” என்று கிட்டதட்ட கத்திவிட, ‘ரொம்பதான் கோபப்படுறான்.’ உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டவள், வேகமாக தன் அலைப்பேசியை எடுத்து அதிலிருந்த அறிவிப்பைக் காட்டி, “தீரா, மும்பையில மிஸஸ்.ரோஷினி நடத்துற ஆர்ட் கேலரில ஒரு ஷோ பண்றாங்க. இதுல பெஸ்ட் பீஸ் ரெடி பண்றவங்களுக்கு தனி ஷோவே கொடுக்குறாங்க. இதுல மட்டும் நீ கலந்துக்கிட்டா ரொம்ப ஃபேமஸ் ஆகிருவ. ஒருவேள, யாரும் பண்ணாததை நீ பண்ணிக் காட்டினா கின்னஸ்ல கூட நீ பேர் எடுக்கலாம். எப்படி?” சொல்லி முடித்து, ஆர்வமாக அவனைப் பார்த்தாள்.

சில நொடிகள் அதை உற்று நோக்கியவன், பின் அலைப்பேசியை அவளிடமே நீட்டி, “நொட் இன்ட்ரெஸ்டட்.” என்றுவிட்டு தன் வேலையில் கவனமாக, “க்கும்!” நொடிந்துக்கொண்டவள், “ஆமா… உன் ஆளு எப்படியிருக்கா? எனக்கு அது யாருன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.” உற்சாகமாக பேசிக்கொண்டே போக, உணர்ச்சியற்ற ஒரு பார்வை பார்த்தவன், எதுவுமே பேசவில்லை. ஆனால், அவளும் விட்டபாடில்லை.

“ஒருவேள, உன் ஆளு அலைஸ் அத்தை மாதிரி இட்டாலியனா இருப்பாளோ? இல்லைன்னா, மாயா அத்தை மாதிரி வெளிநாட்டு தமிழ் பொண்ணா இருப்பாளோ?” ஆத்வி யோசிப்பது போல் பாவனை செய்ய, அவளையே இமை சிமிட்டாதுப் பார்த்தவன், “கீர்த்தி அத்தை மாதிரி ஒரு இந்தியன் பொண்ணு.” என்றான் குறும்பாக.

“ரியலி?” அவளுடைய விழிகள் ஆச்சரியமாக விரிய, “அப்போ இந்த ஊர் பொண்ணா? இங்க வந்ததிலிருந்து காதலிக்கிறியா தீரா?” ஆச்சரியம் குறையாது அவள் கேட்க, ‘இல்லை’ எனும் விதமாக அழுத்தமாகை தலையாட்டி, “சின்னவயசுலயிருந்து காதலிக்கிறேன்.” என்ற மஹி, அதற்குமேல் அவளை எதுவும் கேட்க விடவில்லை.

தரதரவென அவளின் முழங்கையைப் பற்றி இழுத்துச் சென்று வெளியில் தள்ளியிருக்க, “தீரா, இப்போ நீ ரொம்ப ரொம்ப கெட்டப் பையனாயிட்ட.” கதவை கோபமாக காலால் உதைத்துவிட்டு ஆத்வி சென்றாள் என்றால், விழியிலிந்து வழிந்த கண்ணீரை கதவில் சாய்ந்து நின்றவாறு துடைத்து விட்டுக்கொண்டான் அவன்.

அடுத்தநாள், ஞாயிற்றுக் கிழமையின் புண்ணியத்தில் அகஸ்டின் வேலைக்குச் செல்லவில்லை. மதியம்தான் கண் விழித்தவன், வெளியில் எங்கும் செல்லாது சாப்பிடுவது, அலைப்பேசியில் விளையாடுவது போன்ற அதி முக்கியமான வேலைகளில் ஈடுபட்டு மீண்டும் இரவில் குப்புறப்படுத்து தூங்கிவிட, அந்த வீட்டின் சுவரை தாண்டி உள்ளே குதித்தது ஒரு உருவம்.

மெல்ல பதுங்கிச் சென்று அங்கு சுற்றியிருந்த பாதுகாவலர்களின் கண்ணில் சிக்காது வீட்டுக்குள் அந்த உருவம் நுழைய, அதிலே தெரிந்தது இது போன்ற காரியங்களில் அதற்கிருக்கும் அனுபவம். வீட்டிற்குள் நுழைந்ததுமே கொஞ்சமும் தாமதிக்காது அலைப்பேசியில் தன்னை அனுப்பிய ஆட்கள் அனுப்பிய வீட்டின் வரைப்படத்தை பார்த்தவாறு அவர்கள் சொன்ன இடத்திற்குதான் பதுங்கிச் சென்றது.

‘இந்த பணக்காரங்க மஞ்சள், வெள்ளைன்னு பல்பெல்லாம் யூஸ் பண்ண மாட்டாங்களா? ஏதோ பேய் பங்களாவுக்குள்ள நுழைஞ்ச மாதிரியே இருக்கு.’ உள்ளுக்குள் புலம்பியவாறு ஒரு அறையை அது தேட, சரியாக அதன் விழிகளுக்குச் சிக்கியது அதன் தேடல்.

“ஆஃபீஸ் ரூம்” அறைக்கதவில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை வாய்விட்டு முணுமுணுத்தவாறு அதை நெருங்கி, சுற்றி முற்றி யாரும் வருகிறார்களா? என பார்த்தவாறு அந்த கதவை திறக்க முயற்சிக்க, அதுவோ பூட்டப்பட்டிருந்தது.

தன்னிடம் இருக்கும் சாவிக் கொத்தைக்கொண்டு ஏதேதோ செய்து கதவைத் திறக்க முயற்சிக்க, அதுவோ திறந்தபாடில்லை. “இவனுங்க பேசிய பேச்சைக் கேட்டு அசால்ட்டா உள்ள வந்துட்டோம். ஆனா, கதவை இம்புட்டு பாதுகாப்பா பூட்டி வச்சிருக்கானுங்களே! ”  மானசீகமாக நினைத்தவாறு அப்போதும் முயற்சி செய்த வண்ணம் இருந்தது.

அடுத்த சிலநொடிகளில் சட்டென ஒரு கரம் அதன் தோளைத் தொட,  அந்த உருவத்திற்கோ தூக்கி வாரிப்போட்டது.