விழிகள் 14

ei29JFR24337-1ee49d3e

கதவைத் திறக்க அந்த உருவம் முயற்சி செய்துக்கொண்டிருக்க, சரியாக ஒரு கரம் அதன் தோளைத் தொட்டது. அவ்வளவுதான், அந்த உருவத்திற்கோ தூக்கி வாரிப்போட்டது.

யாரென நிதானமாக அது திரும்பிப் பார்க்க முயல, அதன் கையை வளைத்து சுழற்றி சுவற்றில் சாய்த்தவன், “யார் நீ?” என்று கோபமாகக் கேட்க, அந்த உருவத்திற்கோ சந்தோஷம் கலந்த ஆச்சரியம்! விழி விரித்து, “தினு…” ஆச்சரியக் குரலில் சுவற்றில் முகத்தை வைத்தவாறு உற்சாகக் குரல் எழுப்ப, இப்போது அதிர்வது அகஸ்டினின் முறையானது.

“எலீ…” அவன் திகைப்போடு அழைத்தவாறு சட்டென கைகளை இழுத்துக்கொள்ள, “முகமே பழுத்திருச்சு.” கேலியாகச் சொல்லி கன்னத்தை தேய்த்தவாறு திரும்பிய அலீஷா, “ஹிஹிஹி… ரசகுல்லா.” என்று இழித்து வைத்தாள்.

அவளை உக்கிரமாகப் பார்த்த அகஸ்டின், “அங்க தொட்டு இங்க தொட்டு என் வீட்டுலயே திருட வந்துட்டியா திருட்டெலி? ஆமா… வாசல்ல கார்ட்ஸ் இருந்திருப்பாங்களே, எப்படி உள்ள வந்த?” சற்று ஆச்சரியமாகவே கேட்டான்.

“அதெல்லாம் இந்த அலீஷாவுக்கு சல்ப மேட்டரு. நம்ம தொழில் அப்படிப்பா. ஆமா… இதுதான் என் வருங்கால மாமியார் வீடா?” அவள் சுற்றி முற்றி பார்த்தவாறுக் கேட்க, “என் வீடு.” அழுத்தமாகச் சொன்னான் அவன்.

“பரவாயில்லை நல்லாதான் செதுக்கியிருக்கீங்க. இருந்தாலும், பெயின்ட் கலரையும், லைட்டையும் மாத்திரு. உள்ள வந்ததுமே பேய் பங்களாவுக்குள்ள வந்த மாதிரி இருந்துச்சு.” அவள் பாட்டிற்கு பேசிக்கொண்டு போக, சரியாக மேல் தளத்திலிருந்த அலைஸின் அறை விளக்கு ஒளிரப்பட்டது.

அதைப் பார்த்ததுமே ‘எதற்கு அவளை காப்பாற்றுகிறோம்?’ என்பது கூட தெரியாது அலீஷாவின் கைப்பிடித்து சுவற்றுக் பின்னால் மறைந்துக்கொண்டான் அகஸ்டின். சுவற்றில் அலீஷா சாய்ந்து நின்றிருக்க, கிட்டதட்ட அவள் உடலோடு ஒட்டாத குறையாக நின்றிருந்த அகஸ்டின், மெல்ல எட்டி வெளியே நோட்டமிட்டான்.

ஆனால், அலீஷாவின் பார்வை முழுவதும் அகஸ்டினின் மேல்தான். வந்த வேலையையும் மறந்து, தன்னோடு மூச்சு காற்று கலக்கும் தூரத்திற்கு நெருங்கி நின்றிருந்த தன்னவனையே ரசித்துக்கொண்டிருந்தவள், “அது எப்படிடா, நைட்டுக்கு தூங்கும் போது கூட ஆப்பிள் பழம் மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்க?” என்று கேட்டு அப்பட்டமாக வழிய, அவளை முறைத்துப் பார்த்தான் அவன்.

“யார் செஞ்ச புண்ணியமோ கார்ட்ஸ் கண்ணுல சிக்காம தப்பிச்சிட்ட. இப்போவும் பாவமேன்னு உன்னை நான் காப்பாத்தியிருக்கேன். சோ, நீயே போறது பெட்டர்.” அகஸ்டின் அழுத்தமாகச் சொல்ல, “எதே? அதெல்லாம் முடியாது. பேமன்ட் வாங்கினதுக்கு அப்றம் கஸ்டமருக்கு துரோகம் செய்ய கூடாதுன்னு என் தொழிலோட கொள்கை. அவங்க கேட்டதை கொடுத்தே ஆகணும்.” வீராப்பாக அவள் பேசவும், “யார் அவங்க?” புருவத்தை நெறித்தவாறுக் கேட்டான் அவன்.

“கஸ்டமரை காட்டிக் கொடுக்குறதும், நம்ம ஆள கூட்டிக் கொடுக்குறதும் ஒன்னுன்னு என் அப்பா சொல்வாரு. தொழில் தர்மம் ரசகுல்லா. அடிச்சிக் கேட்டாலும் கஸ்டமர காட்டிக் கொடுக்க மாட்டா இந்த அலீஷா.” அவள் சொன்னதைக் கேட்டதுமே, “மண்ணாங்கட்டி! உன்னை நல்லா வளர்த்திருக்கான் உன் அப்பன், கையில கிடைச்சான்… செத்தான். ” அகஸ்டின் பற்களைக் கடிக்க, “வாயில போட்டுக்கோ! என் குருவே என் அப்பாதான். அப்றம் சாமியா வந்து கண்ணை குத்திருவாரு.” விழிகளை உருட்டி அவள் சொன்ன விதத்தை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

நெற்றியை நீவி விட்டுக்கொண்டவன், மேலும் அவளை நெருங்கி, “நீ ரொம்ப அழகா இருக்க. அழகா பேசுற. ஆனா, எதுக்காக இந்த தொழில் பண்ணிக்கிட்டு இருக்க? லுக், இதெல்லாம் விட்டுரு! ஐரா கம்பனீஸ்ல உன் படிப்புக்கு ஏத்த மாதிரி நல்ல வேலை நான் ரெகமென்ட் பண்ணி எடுத்து தரேன். அந்த மனோகரனை பத்தி யோசிக்காத! ஐ வில் ஹேன்டில் ஹிம். ஐ ஹோப், யூ அன்டர்ஸ்டேன்ட்.” நிதானமாகப் பேசி அவள் விழிகளை நோக்க, அவளும் அவனின் விழிகளையே சற்று நேரம் இமை மூடாதுப் பார்த்திருந்தாள்.

அடுத்தகணம், “போடாங்கு…” என்று அவள் வாயைப் பொத்திச் சிரிக்க ஆரம்பிக்க, அகஸ்டினுக்கு எதுவுமே புரியவில்லை. கேள்வியாக அவளையேப் பார்த்திருந்தான்.

“ஹோட்டல்ல பரோட்டா மாஸ்டருக்கு அசிஸ்டனா கூட போவேன். ஆனா,  உங்க கம்பனிக்கு அடிச்சி கேட்டாலும் வேலைக்கு வர மாட்டேன். முட்டாப் பசங்கடா நீங்க!” அவள் கேலியாகச் சொல்ல, கை முஷ்டியை இறுக்கி ஆத்திரத்தோடு கிட்டதட்ட அடிப்பது போல் வந்தவனின் மார்பில் கை வைத்து தடுத்து, “அனுபவம் பேசுது தினுக்குட்டி. ஃபேக் செர்டிஃபிகேட்ஸ், மினிஸ்டர் ரெகமென்டேஷன் இருந்ததுமே இங்லீஷ் தெரியாத, ப்ளஸ்டூ மட்டும் முடிச்ச எனக்கு வேலைய தூக்கி கொடுத்துட்டாங்க தட் மல்டி நேஷனல் கம்பனி ஐரா. இதுல நீங்க முட்டாள்களா, நான் புத்திசாலியான்னே தெரியல.” என்ற அலீஷாவின் வார்த்தைகளில் அத்தனை கேலி!

“வாட்! ப்ளஸ்டூவா?” அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு அடுத்த அதிர்ச்சி.

அடுத்து அலீஷா, “ஷ்ஷ்… கொஞ்சம் காதை கொடு!” என்று சொல்லி, அகஸ்டின் குனிந்ததும் “இன்னொரு மேட்டர் தெரியுமா ரசகுல்லா? உன் கம்பனியில மட்டுமில்ல, உங்க வீட்டுல கூட ஸ்பை இருக்காங்க. இல்லைன்னா, வேலையே தெரியாத நான் எல்லாம் எப்படி அந்த ஐரா கம்பனியில கொஞ்சநாள் காலத்தை ஓட்டினேன், இதுவரை வராத வீட்டோட ஆஃபீஸ்ஸ கண்டுபிடிச்சேன்?” என்றுவிட்டுச் சிரிக்க, “இடியட்ஸ்!” படித்தும் சுற்றி நடப்பதை உணராது முட்டாளாக நடந்துக் கொள்பவர்களை நினைத்து பற்களைக் கடித்துக்கொண்டான்.

ஆனால், அலீஷாவின் எண்ணமோ தாறுமாறாக ஏதேதோ திசைக்குச் சென்றுக்கொண்டிருந்தது. தன் முகத்தருகே இருந்த அவனுடைய இதழைப் பார்த்தவளுக்கு ஏனோ முத்தமிட தோன்ற, இதழைக் குவித்து விழிகளை மூடி மெல்ல தன்னவனை நெருங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

அதேநேரம்

அலைஸின் அறை வெளிச்சம் அணைக்கப்பட்டதும், அதைப் பார்த்த அகஸ்டின், அவளின் கரத்தை பற்றி தரதரவென வீட்டின் பின் வாசலுக்கு இழுத்துச் செல்ல, அலீஷாவின் விழிகளுக்குச் சிக்கியது ஒருபக்கச் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த பல்கலைக்கழக பட்டங்களும், பட்டதாரிகள் அணியும் கருப்புநிற தொப்பிகளும்.

அதைப் பார்த்ததுமே அவளுடைய விழிகள் விரிய, கால்கள் தானாகவே நடையை நிறுத்தின.

“தினு, இதெல்லாம்…” அவள் இழுக்க, அவள் சட்டென நின்றதில் கோபமாக கத்த வந்தவன், அவளுடைய ஆச்சரியப் பார்வையைப் பார்த்து சற்று பெருமையாகவே, “எங்க வீட்டுல எல்லாரும் வாங்கின டிகிரீஸ் என்ட் அப்போ அவங்க போட்டிருந்த க்ரெட்யூவேஷன் கேப்ஸ்.” என்று சொல்ல, அலீஷாவின் விழிகளோ சட்டென கலங்கியது. கூடவே, அவளுடைய நினைவலைகள் அவளுடைய பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பீடு வந்த தருணம் வீட்டில் நடந்த களவரத்தைதான் நினைத்துப் பார்த்தது.

“அப்பா, ப்ளஸ்டூல ரொம்ப நல்ல மார்க், அடுத்த வீட்டு சுகி கூட காலேஜ் போக போறாளாம். எனக்கு கூட…” பதினேழு வயது அலீஷா தயங்கியவாறு வீராவிடம் கேட்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவளை ஒரு பார்வைப் பார்த்தவர், நிதானமாக அவளெதிரே எழுந்து நின்றார்.

அவளோ தன் அப்பாவையே ஆர்வமாகப் பார்க்க, அடுத்தகணம் தன் அம்மாவின் கன்னத்தில் விழுந்த அறையில் அலீஷாவுக்கு சர்வமும் அடங்கிவிட்டது. “அப்பா…” பயந்தபடி அழைக்க, அடக்கப்பட்ட கோபத்தோடு அவளை நோக்கினார் வீரா.

அதே கோபத்தோடு அவளின் தலையை தடவியவர், “உன் மேல ரொம்ப பாசம் செல்லம், அடிக்க மனசு வரல. ஆனா, அது உனக்கு விழ வேண்டியது. இனி, படிப்பு, காலேஜ்னு என் முன்னாடி பேசிக்கிட்டு வராத, புரியுதா?” அழுத்தமாக உரைத்துவிட்டு செல்ல, அவள்  விழிகளிலிருந்து ஒரு சொட்டு விழிநீர் தரையைத் தொட்டது. அன்று போல் இன்றும்.

“நானும் படிச்சி பெரிய பெரிய டிகிரி வாங்க வேண்டியவ. என் விதி! கிரகம் இந்த தொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன்.” அகஸ்டினின் பார்வை தன் மீது இருப்பது புரிந்து, கேலியாகச் சொன்னாலும் ஏனோ அவளுக்குள் சுவற்றிலிருந்த புகைப்படங்களைப் பார்த்ததும் அத்தனை ஏக்கம்!

அகஸ்டினோ அவளையேப் பார்த்திருக்க, “இந்த வீட்டுல மொட்டை மாடி இருக்கா?” சட்டென கேட்டாள் அலீஷா.

“இருக்கு. பட், ஃபோர் வாட்?” அவன் புரியாதுக் கேட்க, உற்சாகமாக விழிகளை விரித்தவள், “சும்மா வாத்து கோழின்னுக்கிட்டு… வா, போகலாம்.” அகஸ்டினின் கைகளை இறுகப்பிடித்து மாடிப் படிகளில் ஏறினாள் அவள். “ஏய் பெருச்சாலி, நில்லுடி! யாராச்சும் பார்த்துற போறாங்க. என் மாமனுங்க வேற என் மேல இருக்குற சந்தேகத்துல எங்கேயாச்சும் கேமராவ ஒளிச்சி வச்சிருக்க போறாங்க.” பதறியபடி அவள் இழுத்த இழுப்பிற்குச் சென்றான் அகஸ்டின்.

ஒரு கட்டத்தில் மாடிக்குச் செல்வதற்கு வழி தெரியாது தடுமாறியவளை, அவனே அழைத்துக்கொண்டுச் சென்று நிற்க, தடுப்புச் சுவரிலிருந்து கீழே எட்டிப் பார்த்து, “எம்புட்டு உயரம்?” என்று ஆச்சரியப்பட்ட அலீஷா, வானத்தில் தெரிந்த முழுநிலவை இரவு நேர தென்றலுடன் சேர்ந்து ரசிக்க, ‘ஙே’ என அவளை ஒரு பார்வைப் பார்த்தான் அவன். ஏனோ அவள் முகத்தில் தெரியும் குழந்தை உற்சாகம் அவனுக்கு வினோதமாகத்தான் தோன்றியது.

“ஏன் இதுக்கு முன்னாடி மாடியே பார்த்ததில்லையா?” அவன் கேலியாகக் கேட்க, “எங்க வீட்டுல எல்லாம் மாடியே கிடையாது. சொல்லப்போனா, எங்க ஏரியாவுல எவன் வீட்டுலேயும் மொட்டை மாடி இல்லை. எனக்கு மொட்டை மாடியில நிலாவ பார்த்துட்டே படுக்கணும்னு ரொம்ப ஆசை. எங்க வசதிக்கு மாடி வீடு வாங்குறது எல்லாம் நினைச்சும் பார்க்க முடியல. திருடுற பணம் குடும்பத்தை நடத்தவே சரியா போகுது.” எரிச்சலாக பேசிக்கொண்டுச் சென்றாள் அவள்.

அதில் ஏளனமாக இதழை வளைத்தவன், “இதுலேயே மேடமுக்கு புரியல்லையா என்ன, தகுதிக்கு மீறி ஆசைப்படுறோம்னு? மாடி வீட்டுல வாழணும்னு கனவு வச்சிருக்க நீ பத்து மாடி வீட்டை கூட கட்ட வசதியிருக்குற வீட்டுப் பையன காதலிக்குற. என்ன, இப்படியே செட்ல் ஆகலாம்னு நினைப்போ?” விஷ அம்புக்கள் போல் வார்த்தைகளை அவளை நோக்கி வீச, உள்ளுக்குள் உடைந்துவிட்டாள் அலீஷா.

விழிகள் கலங்கினாலும் அதை இமை சிமிட்டி அடக்கியவள், வலியுடனான புன்னகையுடன் தன்னவனை நெருங்க, புருவத்தைச் சுருக்கி அவளை கேள்வியாக நோக்கினான் அகஸ்டின்.

“முதல்தடவை நாம சந்திச்சது உனக்கு நியாபகம் இருக்கா?” அலீஷா கேட்க, அவளை முறைத்தவன், “அதை மறக்கவே மாட்டேன்டி.” பற்களைக் கடித்துக்கொண்டுச் சொன்னான். அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.

“அந்த நேரம் உன் ஸ்டேட்டஸ், பணம் எதுவுமே எனக்கு தெரியல. இதோ இந்த சாம்பல் நிற கண்ணு மட்டும்தான் என் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சி போச்சு. ஒருவேள, அந்த பதினாலு வயசுலேயே உன்னை காதலிக்க ஆரம்பிச்சிட்டேனோ, என்னவோ? அதனாலதான் உன் பர்ஸ்ஸை அப்பாவோட கையில கொடுத்த நான், செயின என் கூடவே வச்சிக்கிட்டேன்.”

அலீஷா சொல்லிவிட்டு ஒற்றைக் கண்ணைச் சிமிட்ட, ‘திருடிட்டு பேசுற பேச்சைப் பாரு!’ உள்ளுக்குள் பொறுமிக்கொண்டாலும் அவளுடைய பேச்சை சற்று ஆர்வத்தோடே கேட்டான்.

மீண்டும் அவளே தொடர்ந்தாள். “டெய்லி ராத்திரி இந்த கண்ணு என் நியாபகத்துக்கு வந்துரும். மறுபடியும் எப்போவாச்சும் பார்க்க மாட்டேனான்னு ஏங்கியிருக்கேன். ஃபைனல்லி, பத்து வருஷத்துக்கு அப்றம் அதுவும் நடந்திச்சு.” அலீஷா சொல்லிக்கொண்டே போக, “சூப்பர் ஸ்டோரி. பட், உனக்கென்ன என்னை பார்த்தா கேனயன் மாதிரி தெரியுதா? இவங்க பத்து வருஷம் என்னையே நினைச்சிக்கிட்டு இருந்தாங்களாம். நான் கூடதான் நிறைய பொண்ணுங்கள சந்திச்சிருக்கேன். இரண்டுநாளைக்கு அப்றம் முகமே மறந்துரும். யாருக்கிட்ட கதை விடுற?” அவளை இடைவெட்டி கேலித்தொனியில் நம்பாத குரலில் கேட்டான் அகஸ்டின்.

குறும்பாகச் சிரித்தவள், “அன்னைக்கு நீ வர்றதுக்கு முன்னாடி நிறைய பேர் என்னை பார்த்தும் கண்டுக்காத மாதிரி போனாங்க. பட், நீ யாரு என்னன்னு தெரியல. எனக்கு ஆறுதல் சொல்லி, போட்டிருந்த ஷர்ட்ட என் மானத்தை காப்பாத்த கழட்டிக் கொடுத்த. அப்போவே உன் மேல வந்த காதல் பத்து வருஷம் உனக்காக காக்க வச்சது. பட், நம்மளோட இரண்டாவது சந்திப்பு கண்டிப்பா ஆஃபீஸ்ல கிடையாது.” என்றுவிட்டு அலீஷா ஒரு திகதியை நெற்றியை தட்டியவாறுச் சொல்ல, அதில் அதிர்ந்து விழித்தான் அவன்.

காரணம், இத்தாலியிலிருந்து அவன் இந்தியாவிற்கு வந்த நாளே அது.

“ரொம்ப நாளா சின்ன சின்ன திருட்டா பண்ணிக்கிட்டு காலத்தை ஓட்டினேன். சட்டுன்னு பெரிய இடத்துல திருட சொல்லிட்டாங்களே நம்மளால முடியுமான்னு அடுத்து எங்க போறதுன்னு கூட தெரியாம ரோட்டோரமா நின்னுக்கிட்டு இருந்தேன். எதேர்ச்சையா என் பார்வையில நீ விழுந்த. கார்லயிருந்து ஏதேதோ முணுமுணுத்து திட்டிக்கிட்டு முறைச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்த. மீசை, தாடி வளர்ந்திருக்கு. மத்தபடி பெரிய மாற்றம் எல்லாம் இல்லை. பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன்.” என்றுவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தவள், நாடியை நீவி விட்டவாறு தன்னவனை மேலிருந்து கீழ் அளவிட்டாள்.

“அப்போ தாடி, மீசை இல்லாம இருந்த சின்னப்பையன், இப்போ பெரிய பையன். ஆனா, சும்மா சொல்லக் கூடாது. செம ஹோட் பேபி நீ.”  சிரிப்புடன் அலீஷா சொல்ல, அகஸ்டினுக்கே சற்று வெட்கம் வந்துவிட்டது. அதை மறைத்து, “இடியட்!” பொய்க் கோபத்தோடு அவன் சொல்ல, அவனையே பார்த்திருந்தவளின் பார்வையோ வேறுவிதமாக மாறியது. அவளுடைய பார்வை வித்தியாசத்தை அவனும் கவனிக்கத்தான் செய்தான்.

“வாட்?” ஒற்றை புருவத்தை அவன் ஏற்றி இறக்க, கொஞ்சமும் யோசிக்காது அவனுடைய சட்டைக் கோலரைப் பிடித்திழுத்து, “இதுக்கு மேல முடியல தினு.” என்ற அலீஷா அவனுடைய இதழை சிறைச் செய்திருக்க, விழிகளை விரித்துக்கொண்டான் அவன். ஒரு கரம் அவனுடைய சட்டையில் இருக்க, மறுகரம் அகஸ்டினின் பின்னந்தலையில் அழுத்தமாகப் பதிந்திருந்தது.

அவளை பிடித்துத் தள்ளக் கூட அவனால் முடியவில்லை. அவன் நினைத்தால் விலகியிருக்க முடியும். ஆனால், பெண்மையின் இதழ்ச்சுவை ஆண்மகனான அவனை விலக விடவில்லை. முதலில் இசைந்துக் கொடுக்காது இருந்தவன், ஒரு கட்டத்தில் அவளின் முத்தத்திற்கு இசைந்துக்கொடுக்க ஆரம்பிக்க, சட்டென அலீஷாவுக்கு ஒரு அழைப்பு!

பேன்ட் பாக்கெட்டிலிருந்த அலைப்பேசியின் அதிர்வில் முத்தத்தை தொடர்ந்துக்கொண்டே அதையெடுத்து திரையைப் பார்த்தவள், அடுத்தகணம் அவனை விட்டு விலகி மின்னல் வேகத்தில் சென்று மறைந்திருந்தாள்.

ஆனால், இங்கு அகஸ்டினோ ‘இப்போ என்னாச்சு?’ மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்றான் என்றால், தூக்கம் வராது மாடிக்கு வந்த மஹியோ இந்தக் காட்சியைப் பார்த்து, ‘அடப்பாவி!’ என்று வாயில் கை வைத்துக்கொண்டான்.

அடுத்தநாள்,

உணவு மேசையில் எல்லோரும் அமர்ந்திருக்க, யாரையும் நிமிர்ந்துக் கூடப் பார்க்காது தட்டில் முகத்தை புதைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தன் மகனை கவனித்த அலைஸ், “அலீஷா நாலைஞ்சு நாளா ஆஃபீஸ் பக்கமே வரல்லையே அகி, உனக்கு ஏதாச்சும் தெரியுமா என்ன? வன் வீக்தான் டைம். அதுக்குள்ள இன்ஃபோர்ம் பண்ணலன்னா, அவளோட மெயிலுக்கு டெர்மினேஷன் லெட்டர்தான் போகும்.” என்று சொல்ல, சட்டென நிமிர்ந்தான் அவன்.

“சோ வாட்? அது அவளோட பிரச்சினை. என்கிட்ட எதுக்கு சொல்றீங்க?” அகஸ்டின் கடுப்பாகக் கேட்க, “உன் ஆள பத்தி உன்கிட்ட கேக்காம பக்கத்து வீட்டாளுக்கிட்டயா கேப்பாங்க?” தன் பங்கிற்கு மஹி வேறு கேலிச் செய்ய, “என்ன சிட்டி ரோபோ காமெடி எல்லாம் பண்ணுது?” பதிலுக்கு கேலிச் செய்தான் அகஸ்டின்.

இவர்களின் பேச்சில் சுற்றியிருந்தவர்களுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

“அகி, அந்த பொண்ணுக்கிட்ட சீக்கிரம் பேசு! நம்ம கம்பனிக்குன்னு சில ரூல்ஸ் என்ட் ரெக்யூலேஷன்ஸ் இருக்கு. வேண்டப்பட்டவங்களா இருந்தாலும் சலுகையெல்லாம் கிடையாது.” விறைப்பாக அலைஸ் சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல, போகும் அவரைப் பார்த்தவனுக்கு ஒன்றுதான் தோன்றியது.

‘க்கும்! கோப்ரேட் வர்ல்ட்ல கொடி கட்டி பறக்குற கம்பனிய முட்டாளாக்கியிருக்கா அந்த திருட்டெலி. இது கூட தெரியாத தந்தியா இருந்துக்கிட்டு பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’

இவ்வாறு சில நாட்கள் நகர, அன்று…

சூரியன் உதயமாகும் முன்னே வீட்டில் ஒவ்வொருவரினதும் ஆரவார சத்தம். தூங்கிக்கொண்டிருந்த அகஸ்டினுக்கு விழிகளைக் கூட திறக்க முடியவில்லை. இருந்தும் விழிகளை சிரமப்பட்டுத் திறந்து, “எவன்டா அவன் காலங்காத்தால…” என்று சில பல கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே கதவைத் திறந்தவனுக்கு அத்தனை அதிர்ச்சி!