விழிகள் 16

ei71YD474068-d825c133

அகஸ்டின் கோபமாக அறைந்ததில், கன்னத்தைப் பொத்திக்கொண்டு அதிர்ந்துப்போய் அவனைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் அலீஷா.

“தினு…” தழுதழுத்த குரலில் விழிகள் கலங்கிப்போய் தன்னவனை அவள் அழைக்க, அவளின் முழங்கையைப் பிடித்து ஆவேசமாக இழுத்தவன், “எங்கடி என் செயின்?” கிட்டதட்ட கர்ஜிக்க, அவனின் இத்தகைய கோபத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வாயில் வார்த்தைகள் கூட வராது திகைத்து நின்றிருந்தாள்.

ஆனால், அவனோ அவளின் தோள்களைப் பற்றி குலுக்கி, “சொல்லுடி! எங்கடி என் செயின்? கொண்டு போய் வித்துட்டியா? சொல்லுடி இடியட்!” என்று தாறுமாறாக கத்த, “தி..தினு சத்தியமா நான் விக்கல்ல. சின்ன வயசுலயிருந்து என் கூடவேதான் வச்சிருக்கேன். காலையில வரும் போது கூட கழுத்துல இருந்துச்சு. சத்..சத்தியமா எனக்கு தெரியல. என்னை நம்பு, ப்ளீஸ்.” அவனின் கோபத்தைப் பார்த்து உதட்டை பிதுக்கி அழும் நிலைக்கே சென்றுவிட்டாள் அவள்.

அதைக் கேட்டு “ச்சீ…” என்று அவளை உதறி தள்ளிய அகஸ்டின், “உன்னை போய் நம்ப சொல்றியாடி? அதான், என் செயின வித்துட்டு தொலைச்ச மாதிரி அப்பட்டமா நாடகமாடுற. பொண்ணாடி நீயெல்லாம், வெட்கமா இல்லை? உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு. அப்போ அதை என்கிட்டயிருந்து திருடின. இப்போ தரலன்னாலும் ஏதோ உன்கிட்ட சேஃப்பா இருக்குன்னு நிம்மதியா இருந்தேன். ஆனா, மறுபடியும் என்னை ஏமாத்துறல்ல? இதுல காதலாம் காதல்! மண்ணாங்கட்டி. நான் யாருன்னு தெரியுமாடி உனக்கு? நீயெல்லாம் போய்… அந்த செயினோட வெல்யூ உனக்கென்னடி தெரியும். அப்போவே அதை தொலைச்சிட்டு ரொம்ப ஃபீல் பண்ணேன். இப்போ… என் முகத்துலயே முழிக்காத!” உச்சக்கட்ட கோபத்தில் தன்னை மீறி வார்த்தைகளை விட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, உறைந்துப் போய் நின்றுவிட்டாள் அலீஷா.

விழிகளில் விழிநீர் வழிய, தன்னவன் பேசிய வார்த்தைகளில் உண்டான தாக்கத்தில் எவ்வளவு நேரம் அதே இடத்தில் நின்றாளோ?

முயன்று தன்னை சுதாகரித்து, ‘எங்க தொலைச்ச அலீ?’ நெற்றியை தட்டியவாறு யோசித்தவளுக்கு அப்போதுதான் காலையில் நடந்த சம்பவம் நியாகத்திற்கு வந்தது. பட்டென்று விழிகளைத் திறந்தவளின் சிவந்த விழிகளே அவளின் கோபத்தை பறை சாட்ட, சட்டைக் கையை மடித்துவிட்டுக்கொண்டவாறு,  “நானே பெரிய தில்லாலங்கடி, என்கிட்டயே உங்க வேலைய காட்டிட்டீங்கல்ல? இருங்கடா வரேன்.” பற்களைக் கடித்துக்கொண்டுச் சென்றாள்.

அன்றிரவு,

மொத்த குடும்பமும் உணவு மேசையில் அமர்ந்திருக்க, உதட்டை பிதுக்கி பாவமாக முகத்தை வைத்து அமர்ந்திருந்த தன் மனைவியையும், எங்கோ வேடிக்கைப் பார்ப்பது போல் பாவனை செய்துக்கொண்டிருந்த அகஸ்டினையும் முறைத்தவாறு அமர்ந்திருந்தார் ரோஹன்.

அவருக்குதான் அகஸ்டின் மாயாவை எந்த பாதுகாப்புமின்றி வெளியே அழைத்துச் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே செய்தி வந்துவிட்டதே!

“அவ்வளவு பனிஷ்மென்ட் வாங்கியும் திருந்தமாட்டீங்கல்ல நீங்க?” ரோஹன் அடக்கப்பட்ட கோபத்தோடு கேட்க, உணவை சாப்பிடுவது போல் ஒருசேர தட்டில் முகத்தை புதைத்தவர்களைப் பார்க்க சுற்றியிருந்தவர்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“மாயா, இவன் என் சாயல்ல இருந்தாலும் குணம் அப்படியே உன்னோடதுதான். சத்தியமா மஹிதான் உன் பையன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்.” அலைஸ் சிரித்தவாறு சொல்ல, “மஹி அப்படியே என் வளர்ப்பாக்கும்!” பெருமையாக சொல்லிக்கொண்டார் கீர்த்தி.

ஆனால், மஹியோ யாருடைய பேச்சிலும் கலந்துக்கொள்ளவில்லை. அவனுடைய பார்வை அடிக்கடி தன் அலைப்பேசி திரையில்தான் படிந்திருந்தது. சின்ன ஒலி எழும்பினாலும் அவசரமாக அலைப்பேசி திரையைப் தன் தோழனை அகஸ்டினும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

சரியாக, கரண்டியால் கண்ணாடி குவளையில் தட்டி, எல்லோருடைய கவனத்தையும் தன் மேல் திருப்பிய மாயா, ரோஹனை புன்னகையுடன் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “லெட் மீ டெல் யூ வன்திங், அது… நான் பிஸ்னஸ்லயிருந்து விலகலாம்னு இருக்கேன்.” சட்டென்று சொல்ல, சுற்றியிருந்தவர்களோ அதிர்ந்து விழித்தனர்.

“என்னாச்சு அத்தை?”

“வாட்ஸ் ரோங் மாயா?”

“மாம் ஏன்?” 

“இது உனக்கு முன்னாடியே தெரியுமா ரோஹன்?” இவ்வாறு சுற்றி பல ஆச்சரியக்குரல்கள்.

ரோஹனோ பதிலளிக்காது தன் மனைவியையே பார்த்திருக்க, ஆழ்ந்த பெருமூச்செடுத்து, “அம்மாவுக்கு அப்றம் ஐராவோட இடத்தை காப்பாத்த பிஸ்னஸ்ஸ கையிலெடுத்தேன். இப்போ வரைக்கும் என்னால முடிஞ்ச அளவு ஐரா கம்பனீஸுக்குன்னு ஒரு தனி இடத்தையே உருவாக்கிட்டேன். ஆனா, இனி போதும்னு தோனுது. என் ரூஹிக் கூட நிம்மதியா சந்தோஷமா வாழணும்னு ஆசையா இருக்கு. பணம் இருக்கு, ஆனா இயந்திர வாழ்க்கை. இந்த பாரத்தை மனசுலயிருந்து இறக்கி வைக்கணும்னு நினைக்கிறேன். அதான்…”

மாயா பேசிக்கொண்டேப் போக, எல்லோருக்கும் அவருடைய நிலை சற்று புரியத்தான் செய்தது. ஐரா கம்பனிகளின் மொத்த சம்ராஜ்யத்தை ஒற்ற ஆளாக இத்தனை வருடங்களாக ஆளும் மாயாவின் திறமையில் அவர்கள் வியக்காத தருணங்களில்லை. ஒரு கிளையை பொறுப்பெடுத்து நடத்தவே திணறும் தன் நிலையை நினைத்து சலித்துக்கொண்ட அலைஸிற்கு மாயாவின் ஆசை நியாயமானதாகவே தோன்றியது. மாயா சிறுவயதிலிருந்து ஆசைப்படும் வாழ்க்கையும் அதுவே! ஆனால், இதிலிருந்து விடுபட முடியாத கடமை அவருக்கு இருந்தது.

ஆனால், இங்கு ஒருவன் மட்டும் அடுத்து மாயா சொல்ல வருவதை படபடக்கும் இதயத்தோடு கேட்டிருந்தான். அது வேறு யாருமல்ல மஹியேதான்.

“அதான்… ஐரா கம்பனீஸ்ஸோட மொத்த பொறுப்பையும் மஹிக்கிட்ட ஒப்படைக்கலாமேன்னு முடிவு பண்ணிட்டேன். பீ ரெடி ஸ்வீட்ஹார்ட்!” மாயா புன்னகையோடு சொல்ல, “வாவ் தீரா! கங்கிராட்ஸ்.” ஆத்வி துள்ளிக் குதிக்காத குறையாக சந்தோஷத்தோடு சொல்ல, சுற்றியிருந்த பெரியவர்களுக்கும் அத்தனை சந்தோஷம்.

“கூடிய சீக்கிரம் போர்ட் மீடிங் அர்ரேன்ஜ் பண்ணி ஷெயார்ஹோல்டர்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணணும். கூடவே, ப்ரெஸ் மீடிங் அர்ரேன்ஜ் பண்ணி மொத்தப் பேருக்கும் ஐரா கம்பனீஸ்ஸோட அடுத்த டிரெக்டர் யாருன்னு அறிவிக்கணும்.” அலைஸ் சொல்லி, “கங்கிராட்ஸ் மை பாய்.” மஹியின் தலை முடியை செல்லமாக கலைத்து வாழ்த்த, சிலையாக சமைந்துப் போய் அமர்ந்திருந்தான் அவன்.

சரியாக, அவனுடைய அலைப்பேசித் திரை மின்ன, அதைப் பார்த்தவனுக்கு அதில் தெரிந்த விண்ணப்பத்திற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் கடிதத்தை பார்த்ததும் ‘ஏன் எனக்கு மட்டும் இத்தனை சோதனை?” என்றுதான் இருந்தது.

ஆனால், தன் மகனையே அமைதியாக பார்த்திருந்த ரோஹனுக்கு நன்றாகவே அவனுடைய நிலை புரிந்தது. மாயாவின் வார்த்தைகளை நியாபகப்படுத்தியவர், எதுவும் பேசாது அமைதியாகவே அங்கிருந்து நகர்ந்தார்.

அங்கிருந்து மொத்தப் பேரும் நகர்ந்து தத்தமது அறைக்குச் செல்ல, படுக்கையில் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்த அகஸ்டினுக்கு ஏனோ அலீஷாவின் நினைவுதான். ‘அதிகமா பேசிட்டேனோ? இல்லை அகி, அவள திட்டினதுல தப்பேயில்லை. செயின வித்துட்டு நல்லா நடிக்கிறா ஃப்ரோடு!’ தனக்குத்தானே பேசியவாறு மெதுவாக கண்களை மூடப் போனவன், அலைப்பேசியின் ஒலியில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான்.

வேகமாக அலைப்பேசியின் திரையைப் பார்த்தவனுக்கு, திரையில் தெரிந்த எண் புதிதாகத்தான் தெரிந்தது. ‘இந்த நேரத்துல யாரு?’ யோசித்தவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்று அவன் சொன்ன அடுத்தகணம், “மிஸ்டர்.அகஸ்டின், நான் விஜய்பாலன், **** போலிஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டரா இருக்கேன். கொஞ்சம் ஸ்டேஷனுக்கு வர முடியுமா?” என்று ஒருவர் பேச, அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“ஏன் சார், என்னாச்சு?” பதறியபடி அகஸ்டின் கேட்க, “அலீஷா உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுதானே? நீ வாங்க முதல்ல, சொல்றேன்.” அவர் அழுத்தமாகச் சொல்லவும், இவனுக்கு எதுவுமே புரியவில்லை.

வீட்டில் சொல்ல விரும்பாது எப்போதும் போல் திருட்டுத்தனமாக வீட்டிலிருந்து வெளியேறியவன், தனது வண்டியைக் கூட எடுக்காது ஆட்டோ ஒன்று பிடித்து அவர் சொன்ன காவல் நிலையத்திற்கு சென்று நின்றான்.

உள்ளே வேகமாகச் சென்றவன், அங்கிருப்பவர்களைச் சந்தித்து விடயத்தைச் சொல்ல, அடுத்தநொடி காவல்துறை மேலாளரைச் சந்திக்க அழைத்துச் சென்றார் ஒருவர். அவரெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவனுக்கு முதல்தடவை மனம் படபடவென அடித்துக்கொண்டது. “சார் அலீஷா…” கோப்புகளை புரட்டியவாறு அமர்ந்திருந்த போலிஸ் அதிகாரியிடம் தயக்கமாக அகஸ்டின் இழுக்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவனை முறைத்தார் அவர்.

சரியாக, “தினு…” என்ற அலீஷாவின் குரல். குரல் வந்த திசைக்கு வேகமாகத் திரும்பியவன், அங்கு  ஓரமாக முட்டிப்போட்டு தரையில் அமர்த்தப்பட்டிருந்த அலீஷாவை விழிகளை விரித்துப் பார்த்து அந்த மேலதிகாரியை புரியாதுப் பார்த்தான்.

அவரோ அவனின் அதிர்ந்த பாவனையை கூர்ந்துப் பார்த்தவாறு, “பார்க்க இந்த ஊர் ஆளுங்க மாதிரி இல்லையே! சரி அதை விடுங்க, இவ உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட பொண்ணா?” என்றுக் கேட்க, கொஞ்சமும் யோசிக்காது “அய்யோ சார், இவ யாருன்னே எனக்கு தெரியாது.” பட்டென்று அகஸ்டின் சொல்லவும், “பொய்யு… பொய்யு…” இரு கைகளையும் ஆட்டி கத்த ஆரம்பித்துவிட்டாள் அலீஷா.

அவளை முறைத்தவனுக்கு, விசிலடித்தவாறு வேறெங்கோ பார்ப்பது போல் அவள் பாவனை செய்யவும், ‘இவளை என்ன செய்தால் தகும்?’ என்றுதான் இருந்தது. அந்த மேலதிகாரியும் அவனை சந்தேகமாக பார்க்க, “வேண்டப்பட்ட பொண்ணெல்லாம் இல்லை சார், தெரியும்.” ஒருவித அவமானத்தோடுச் சொன்ன அகஸ்டின், அடுத்து அந்த மேலதிகாரி கேட்ட, “அப்போ அந்த பொண்ணு பண்ற எல்லா திருட்டுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கு. ரைட்?” என்ற கேள்வியில் ஆடிப்போய் விட்டான்.

முயன்று தன்னை சுதாகரித்து, “சார்,யூ க்னோ வெல் அபௌட் ஐரா கோஸ்மெடிக்ஸ்,  அங்கதான் நான் வர்க் பண்றேன். என்னைப் போய் திருட்டுத்தொழில் பண்றியான்னு கேக்குறது கொஞ்சமும் நல்லாயில்லை.” அடக்கப்பட்ட கோபத்தோடு சொன்னவனின் பொசுக்கும் பார்வை அடிக்கடி அலீஷாவின் மீதுதான் படிந்தது.

அகஸ்டின் சொன்னதைக் கேட்டதும் அந்த அதிகாரியின் புருவங்கள் யோசனையில் சுருங்க, “சோரி, அந்த பொண்ணோட ஃபோன செக் பண்ணதுல உங்களுக்குதான் அவ அடிக்கடி அழைச்சிருக்கா. பார்க்க படிச்ச பையனாட்டம் இருக்கீங்க. போயும் போயும் ஏன் இந்த மாதிரி பொண்ணுங்க கூட சவகாசம் வச்சிக்கிறீங்க? ஏற்கனவே இரண்டு, மூனு திருட்டு கேஸ் இந்த பொண்ணு மேல. இப்போ இது வேற…” என்று அவர் சொன்னதும், “என்னாச்சு?” அலீஷாவை ஓரக்கண்ணால் முறைத்தவாறு கேட்டான் அவன்.

“இன்னைக்கு **** ஏரியாவுல சில ரவுடிப் பசங்க கூட அடிதடி சண்டை, பொண்ணா இதுன்னு எனக்கே சந்தேகம் வந்திருச்சு. ஆரம்பத்துல வந்த கம்ப்ளைன்ட் சின்ன சின்ன திருட்டுக்கேஸா இருந்ததால பொருள வாங்கிட்டு வார்ன் பண்றதோட விட்டேன். இப்போ நடு ரோட்ல சண்டை போடுற அளவுக்கு போயிருச்சு. இப்போ நீங்களே சொல்லுங்க, நான் உங்கள சந்தேகப்பட்டதுல தப்பே இல்லல்ல?” அந்த அதிகாரி கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை.

மெதுவாக எழுந்தவன், “அலீஷா கூட பேசலாமா சார்?” அனுமதி கேட்டு, அவர் தலையசைத்ததும் அவளருகில் சென்றான். அவளோ கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி உதட்டி பிதுக்கியவாறு எழுந்து நிற்க, “உன் கூட பழகினதுக்கு என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா?” அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்க அகஸ்டின், “ச்சீ… திருந்தவே மாட்டல்ல? என்னை போய் திருட்டுத்தொழில் பண்றியான்னு கேக்குறான்டி அந்த ஆளு. உன்னாலதான்டி எல்லாம். அவர் மொதல்லயே விஷயத்தை சொல்லியிருந்தா இந்த பக்கமும் வந்திருக்க மாட்டேன். ஏன் என் உயிரை வாங்குற?” என்று திட்டிக்கொண்டேப் போக, அவளுக்கு விழிகள் கலங்கிவிட்டது.

யாரும் கவனிக்காதவாறு சட்டைக்குள் கையை விட்டு மறைத்து வைத்திருந்த செயினை எடுத்த அலீஷா, சற்று அகஸ்டினை நெருங்கியவாறு நின்று அவனுடைய கைகளில் வைக்க, விழி விரித்தான் அவன்.

“இது எப்படி…” அவன் ஆச்சரியமாகக் கேட்க, “அது தினு, இதை எடுக்க போய்தான் சண்டை ஆயிருச்சு. சீக்கிரம் மறைச்சி வை! ரொம்ப நேரமா இவனுங்களுக்கு தெரியாம மறைச்சி வைக்க படாத பாடுபட்டேன். ஏன்னா, இவனுங்க என்னை விட பெரிய திருடனுங்க.” என்றுவிட்டு வாயைப் பொத்திச் சிரித்தாள் அவள்.

அவனோ அவளையேதான் பார்த்திருந்தான். “சோரி தினு, நான் வேணும்னு தொலைக்கல. காலையில ஏரியாவுல அந்த ரவுடி பசங்க கூட சின்ன பிரச்சினை, அவனுங்க என்னை இடிச்சிட்டு போகும் போதே யோசிச்சிருக்கணும். அவனுங்ககிட்டதான் செயின் இருந்துச்சு. அதான், கேக்க போய் அடிதடி சண்டை ஆகிட்டு. என்ன… பொண்ணு உடம்பு பஞ்சுன்னு கூட புரியாத காட்டானுங்க முகத்துலயே அடிச்சிட்டானுங்க. லைட்டா வீங்கிப் போச்சு. யப்பா…” கண்ணுக்கு கீழே வீங்கியிருந்த காயத்தைக் காட்டி அலீஷா பாவமாகச் சொல்ல, ஏனோ அவனுக்கும் அவளை நினைத்து பரிதாபமாக இருந்தது.

“நீ போ தினு, எனக்கு இது ஒன்னும் புதுசில்ல. உன்னை தொல்லை பண்ணதுக்கு சோரி.” அவள் தயங்கியவாறுச் சொல்ல, வேறெதுவும் பேசாது செயினை பாக்கெட்டுக்குள் வைத்து மேலதிகாரியின் முன் வந்தமர்ந்த அகஸ்டின், ஒரு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அமைதியாக அமர்ந்திருக்க, அவரோ கேள்வியாகப் பார்த்தார்.

அவன் நினைத்ததுப் போல் அடுத்த சில நொடிகளிலே அந்த காவல்நிலைய எண்ணிற்கு அழைப்பு வர, அதை ஏற்று பேசிய மேலதிகாரியின் விழிகள் பிதுங்க, சட்டென்று அகஸ்டினை திகைத்துப் பார்த்துவிட்டு, அலீஷாவைப் பார்த்தார். நடப்பது புரிந்து அகஸ்டினின் இதழில் மெல்லிய புன்னகை!

பவ்வியமாகப் பேசி அழைப்பைத் துண்டித்தவர், “க்ரிம்னல் லோயர் வெங்கடேஷ் சாருக்கு வேண்டப்பட்டவங்களா நீங்க? எவ்வளவு பெரிய லோயர் அவரு. சோரி சார், எனக்கு உங்கள பத்தி சரியா தெரியல. நீங்க அந்த பொண்ண இப்போவே கூட்டிட்டு போங்க. ஆனா, கொஞ்சம் மூளையில உரைக்கிற மாதிரி புரிய வைங்க.” சற்று பணிவாகவே பேச, ஒரு தலையசைப்போடு எழுந்து நின்ற அகஸ்டின், வாயைப் பிளந்து பார்த்தவாறு நின்றிருந்த அலீஷாவின் கரத்தைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்றான்.

வெளியில் வந்ததுமே வக்கீல் வெங்கடேஷிற்கு அவசரமாக அழைத்த அகஸ்டின், “அங்கிள், இது நமக்குள்ளேயே இருக்கட்டும். ப்ளீஸ், யாருக்கிட்டேயும் சொல்லிடாதீங்க. எனக்கு வேற வழி தெரியல. ஒரு பொண்ணு சம்மந்தப்பட்ட விஷயம் அதான்… ப்ளீஸ் அங்கிள்.” கெஞ்சாதக் குறையாகக் கேட்க, மறுமுனையில் என்ன பதில் வந்ததோ, “தேங்க்ஸ் அங்கிள்.” என்றுவிட்டு சிரிப்போடு அழைப்பைத் துண்டித்தான்.

ஆனால், தன்னெதிரே எதுவுமே தெரியாதது போல் நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு மறைந்து கோபம் உச்சத்திற்குச் சென்றது.

“ரசகுல்லா அது…” அலீஷா ஆரம்பிக்க, “ஷட் அப்! ஏதோ போனாமோகுதுன்னு காப்பாத்திட்டேன். இதுக்கு மேல ஏதாச்சும் பண்ண… நானே உன்னை தரதரன்னு இழுத்துட்டு போய் இவங்ககிட்ட பிடிச்சி கொடுத்துடுவேன்.” சிறுகுழந்தையை மிரட்டுவது போல் அவன் மிரட்டிய விதத்தில், வாய்விட்டுச் சிரித்தவள், மெதுவாக அவனை நெருங்கி, “பெரிய லோயர்கிட்ட பேசி சாதா ரோட்டு சண்டையில மாட்டிக்கிட்ட என்னை காப்பாத்தியிருக்க. அப்போ இது லவ்வுதானே ஜெஸி?” குறும்பாகக் கேட்டாள்.

அவனுக்கோ ‘இவளை என்ன செய்தால் தகும்?’ என்றுதான் இருந்தது. “உன்னை…” என்று சுற்றிமுற்றி ஒரு கல்லை தேடியெடுத்து அகஸ்டின் திரும்ப, அந்தகணம் அலீஷா அங்கு இருந்தால்தானே! அவளை துரத்திவிட்டதில் வெற்றிப்புன்னகை புரிந்தவன், செயினை எடுப்பதற்காக பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட, அடுத்து அழுவதா, சிரிப்பதா? என்றே அவனுக்கு தெரியவில்லை.

அவள்தான் மீண்டும் அவனிடமிருந்து செயினை சுட்டு விட்டாளே! “திருட்டு பெருச்சாலி!” தன்னை மீறி சிரித்துவிட்டான் அகஸ்டின்.

இவ்வாறு இரண்டு நாட்கள் கழிந்திருக்க, அன்றிரவு டீஷர்ட் கேப்பால் முகத்தை மறைத்தவாறு ஒரு உருவம் பதுங்கி பதுங்கி வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறி காவலர்கள் யாரினதும் கண்ணில் சிக்காது எப்படியோ தப்பித்து அந்த இடத்தை விட்டே சென்று நின்றது என்னவோ ரயில் நிலையத்திற்குதான்.

எப்படியோ அனுமதிச்சீட்டை வாங்கிவிட்டு, ‘அப்பாடா!’ என்று அமர்ந்த உருவத்திற்கு “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் தூக்கி வாரிப்போட்டது.