விழிகள் 19

ei4ZIPF33799-017b37d2

“அம்மா, மருந்து சாப்பிடாம ஏன் இப்படி அடம் பிடிக்குற? ப்ளீஸ்ம்மா, நான் சீக்கிரம் வந்துருவேன். இப்படி பண்ணாத!” அலீஷா அங்குமிங்கும் நடந்தவாறு அலைப்பேசியில் மாதவியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க, மறுமுனையில் மாதவி என்ன கேட்டாரோ? “அது… அதும்மா…” என்று திணற ஆரம்பித்துவிட்டாள் அவள்.

“முக்கியமான வே..வேலைம்மா, மும்பை வரைக்கும் வந்திருக்குகேன். நான் சம்பாதிச்சாதானே உன்னை காப்பாத்த முடி…” அவள் சொல்லி முடிக்கவில்லை, மறுமுனையில் அவள் அம்மா கண்டுபிடித்து கேட்ட கேள்வியில், “சோரிம்மா, தினு கூடதான் வந்திருக்கேன்.” என்றாள் தயக்கமாக. தாய் அறியாத சூலா!

மறுமுனையில் மாதவி ஏதோ சொல்ல, “ம்மா, ஒன்னும் பிரச்சினை இல்லை. நீ கவனமா இரு! இன்னும் மூனே நாள்தான். நான் வந்துருவேன். வந்ததுமே பாத்திரம் கழுவுற வேலைக்காச்சும் போய் உன்னை குணப்படுத்திருவேன். எனக்குன்னு இருக்குறது நீதான். உனக்கு எதுவும் ஆக கூடாதும்மா.” அலீஷா விழிகள் கலங்கச் சொன்னாள்.

சரியாக, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற மஹியின் செருமல். வேகமாகத் திரும்பியவள், “அம்மா, சாந்தி அக்கா கூடவே இரு! என்கிட்ட ஃபோன் இல்லை. சீக்கிரம் வந்துருவேன். வந்ததும் ஒன்னா சேர்ந்து பானிபூரி சாப்பிடலாம். இப்போ நான் வச்சிடுறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்து மஹியிடம் அலைப்பேசியை நீட்டினாள்.

அவனும் ஏதோ யோசனையினூடே அலைப்பேசியை வாங்க, அதேநேரம் கதவு தட்டும் சத்தத்தில் ஆத்வி கதவைத் திறக்க, ஓவியம் வரையும் பெரிய சட்டகத்தை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான் அகஸ்டின்.

“பெரிய ரவிவர்மர்னு மேடமுக்கு நினைப்பு! இவ கேட்டான்னு இந்த மடையனும் என்னை வாங்கிட்டு வரச் சொல்லி டார்ச்சர் பண்றான். ஏய் திருட்டெலி, ஒழுங்கு மரியாதையா காசு கொடுத்துரு!” அகஸ்டின் கிட்டதட்ட மிரட்ட, உதட்டை பிதுக்கியவாறு அவனை நோக்கியவள், “க்கும்! அத்தனை பெரிய கம்பனி நடத்துறீங்க. ஆனா, இருநூறு ஓவா போர்ட் வாங்கி தந்துட்டு காசு திருப்பி கேக்குறீங்க.” என்று நொடிந்துக்கொண்டாள்.

அகஸ்டினோ முறைத்தவாறு மேலும் ஏதோ பேச வர, “ஷட் அப் அகஸ்த்து!” என்ற மஹி, “அவன கண்டுக்காத அலீ!” என்றுவிட்டு கிட்டதட்ட முடிக்கும் நிலையிலிருந்த தன் ஆக்கத்தை தூர நின்று உற்று நோக்கினான். ஏதோ ஒரு உந்துதலில் எதேர்ச்சையாக அவனுடைய பார்வை பக்கவாட்டாகத் திரும்ப, இத்தனைநேரம் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஆத்வி பட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அந்த முத்த சம்பவத்திலிருந்து இருவருக்குமிடையில் ஏதோ ஒரு விலகல். அகஸ்டினுடன் அதிகம் பேசாதவள், மஹியிடம் பேசுவதில் உண்டான தயக்கத்தில் அகஸ்டினிடமே பேச்சை வளர்க்க, மஹிக்கும் அவளின் விலகல் புரியத்தான் செய்தது.

தான் செய்ததை உதட்டைச் சுழித்தவாறுப் பார்த்தவன், “ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது. ஆனா, என்னன்னுதான் தெரியல. ச்சே! இன்னும் மூனேநாள்தான். எனக்கே நான் பண்ணது பர்ஃபெக்டா தெரியல. ஓ கோட்!” தலையில் கை வைத்து அப்படியே கட்டிலில் புலம்பியவாறு அமர்ந்துவிட, “அப்படியில்லை தீரா, ரொம்ப நல்லா இருக்கு. உன் ஆர்ட்தான் செலக்ட் ஆகும். ட்ரஸ்ட் மீ!” சமாதானப்படுத்த முயன்றாள் ஆத்வி.

அகஸ்டினோ நாடியில் கை வைத்து மஹி செய்ததை சுற்றி வந்தவாறு ஆராய்ச்சியாய் பார்க்க, அகஸ்டின் கொண்டு வந்த வண்ணப்பூச்சு தூரிகைகளை பார்த்தவாறு, “லைட்ஸ் யூஸ் பண்ணா நல்லாயிருக்கும். மை ஐடியா பாஸ்.” என்றாள் அலீஷா சாதாரணமாக.

வேகமாக அவளைத் திரும்பிப் பார்த்த மஹி, யோசனையாக புருவத்தைச் சுருக்கி மனதில் அந்த விம்பத்தைக் கொண்டு வந்து திருப்திப்பட்டு விழிகள் மின்ன அலீஷாவை நோக்கினான். அடுத்தகணம் குடுகுடுவென ஓடிச்சென்று, “தேங்க்ஸ் அலீ, நீதான் செல்லக்குட்டி என் அசிஸ்டன்ட்.” அத்தனை உற்சாகத்தோடு சொல்லி அவளின் கன்னங்களைப் பிடித்து கிள்ளிவிட்டு, அங்கிருந்து விறுவிறுவென வெளியேற, “நொட் பேட்!” என்றாள் ஆத்வி.

‘இந்த திருட்டு மூளைக்குள்ள இத்தனை கலைநயமா?’ என்ற ரீதியில் அவளை குறுகுறுவென பார்த்த அகஸ்டினுக்கு, அலீஷா கெத்தாக கோலரை தூக்கி விட்டுக்கொண்டு கொடுத்த பாவனையில் சிரிப்புதான் வந்தது.

அப்போதே அலீஷா சொன்ன யோசனையின்படி தன் வேலையை ஆரம்பித்த மஹி, சாப்பிட மட்டுமே இடைவேளையெடுத்து இரவு வரை அதிலேயே கவனமாக இருக்க, அறை ஜன்னலிலிருந்து ஹோட்டலின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அகஸ்டின்.

அவனுக்கு இங்கு வந்த நாளிலிருந்தே சந்தேகம். ‘ஒருவேள, அந்த ஹிட்லரோட வேலையா இருக்குமோ? மே பீ, மூனு நாளாகியும் அமைதியா இருக்காங்கன்னா, கண்டிப்பா எங்களை கண்டுபிடிச்சு ஃபோலோவ் பண்ண ஆளுங்கள ஏற்பாடு பண்ணியிருப்பாங்க. ச்சே!’ உள்ளுக்குள் தன் மாமாவை திட்டியவாறு அவன் இருக்க, உள்ளே வேகமாக வந்த ஆத்வியோ, “இன்னும் சாப்பிட எதுவும் ஆர்டர் பண்ணல்லையா? எனக்கு பசிக்குது.” எரிச்சலாக கத்த ஆரம்பித்தாள்.

அப்போதுதான் தன் வேலையிலிருந்து விழிகளை நகர்த்தி அவளை உற்று நோக்கினான் மஹி.

அவளோ அவன் பார்த்ததும் அமைதியாக, அலைப்பேசியை சோஃபாவில் தூக்கிப் போட்டவன், “ஆர்டர் பண்ணுங்க.” என்றுவிட்டு கைகளை கழுவச் செல்ல, வேகவேகமாக அலைப்பேசியை எடுத்து ஆத்வி அதை நோண்டச் செல்ல, அவளிடமிருந்து சட்டென்று அதை பிடுங்கினாள் அலீஷா.

ஏற்கனவே பசி வயிற்றை கிள்ள, அலீஷாவின் செய்கையில் கடுப்பாக அவளை ஆத்வி நோக்க, “இன்னைக்கு வெளியில போய் சாப்பிடலாமே…” தயக்கமாக அலீஷா இழுக்கவும், அகஸ்டினும் ஆத்வியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

வந்ததிலிருந்து மஹி வேலையில் இருக்க, இவர்கள் இருவர்தான் கையில் அலைப்பேசியும் இல்லாமல், செய்வதற்கும் எதுவுமின்றி நேரத்தை ஓட்ட படாத பாடுபடுகின்றனர்.

ஆத்வியோ ஆர்வமாக தலையாட்டி, “அப்போ மும்பையில இருக்குற பெஸ்ட் ஹோட்டலுக்கு போகலாம்.” என்று சொல்ல, “நோ நோ, அதுக்கு முன்னாடி பப்புக்கு போகலாம். பார்ட்டிக்கு போய் எவ்வளவு நாளாகுது.” பதிலுக்கு உற்சாகமாக அகஸ்டின் சொன்னான் என்றால், இதற்கெல்லாம் மாறாக “அதெல்லாம் வேணாம். டைம் வேஸ்ட்.” என்றான் மஹி சலிப்பாக.

இதில் அலீஷாவுக்குதான் தலை வலியே வந்துவிட்டது.

“எல்லாரும் ஷட் அப் பண்ணுங்க! உங்களையெல்லாம் எங்க கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும்.” கேலியாக இதழை வளைத்து சிரித்தவாறு சொன்னவள், அடுத்த சில நொடிகளில் மூவரையும் இழுத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறினாள்.

மஹியோ முகத்தை பெரிய தொப்பியால் மறைத்திருக்க, வெளியே வந்ததுமே வேகமாக அங்கிருந்த டேக்ஸியை அழைக்கச் சென்ற அகஸ்டினை பாய்ந்து பிடித்து, “இப்போ எதுக்கு காரு? சார் கார், ஃப்ளைட் இல்லாம எங்கேயும் போக மாட்டீங்களோ? பக்கத்துலதான், நடந்தே போகலாம்.” என்றுவிட்டு தன்னவனை இழுத்துக்கொண்டு முன்னே நடந்தாள் அலீஷா.

இங்கு மஹியோ, “வாட்எவர்!” என்று சாதாரணமாக தோளை குலுக்கிவிட்டு அந்த இரவு நேர காலநிலையை ரசித்தவாறு பின்னால் செல்ல, ஆத்வியும் அவனை ஒட்டியவாறே நடந்தாள்.

பத்து நிமிடமாக அங்குமிங்கும் விழிகளை சுழலவிட்டு அவள் பாட்டிற்கு கால்நடையாகச் சென்றுக்கொண்டிருந்த அலீஷா, “ஏய் எலி, எங்கதான்டி கூட்டிட்டு போற? ச்சே! இட்ஸ் இர்ரிடேட்டிங்.” என்று அகஸ்டின் கடுகடுக்கவும், சட்டென நின்று “வந்தாச்சு, வந்தாச்சு.” என்றாள் உற்சாகமாக.

ஆத்வியோ ஆர்வமாக ஹோட்டலை தேட, “என் கண்ணுக்கு எட்டின தூரத்துக்கு ஒரு ஹோட்டலும் இல்லை. இதோ இந்த கூட்டம் நிறைஞ்ச தள்ளு வண்டி கடையொன்னுதான் இருக்கு. எலி, நீ எதை சொன்னேன்னு…” சுற்றிமுற்றிப் பார்த்தவாறு பேசிக்கொண்டேச் சென்ற அகஸ்டினுக்கு தூக்கி வாரிப்போட்டது.

அவன் அலீஷாவை நோக்கும் முன், வேகமாக ஓடி அங்கிருந்த கூட்டத்திற்குள் புகுந்தவள், “அண்ணா, எட்டு  சாப்பாத்தி காரம் தூக்கலா உருளைக்கிழங்கு பொறியல்.” என்று தன் ஆர்டர்களை ஹிந்தியில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

இவர்கள் மூவருக்கும்தான் எதுவும் புரியவில்லை. இதுவரை இது போன்ற உணவுகளை அவர்கள் உண்டதும் இல்லை. வீட்டுச் சாப்பாடு இல்லையேல், வசதிபடைத்த உணவகத்திலிருந்து வரவழைத்த உணவுகள். அலீஷாவை பார்த்த மூவரின் விழிகளிலுமே ஒரு அதிருப்தி.

அதுவும், அங்கிருந்த கூட்டம், அந்த இடத்திலிருந்த வாசனை, திறந்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்த்த ஆத்விக்கு குமட்டிக்கொண்டே வந்துவிட்டது.

தேவையானதை முட்டி மோதிச் சொல்லி, நான்கு உணவு தட்டுகளை அலேக்காக எடுத்து வந்த அலீஷா, “எப்படி நம்ம திறமை? இதுக்கெல்லாம் ஒரு தனி டேலன்ட்டு வேணும்ப்பா.” பெருமையாக சொல்லிக்கொள்ள, அவளை உக்கிரமாகப் பார்த்த அகஸ்டின், “எங்களை என்ன உன்னை மாதிரி நினைச்சியா? உன் தகுதிக்கு இது பொருத்தமா இருக்கும். ஆனா, எங்க வீட்டுல ஒருவேளை சாப்பாடுக்கே நாங்க செலவு பண்ற காசு உன் ஒருவார வருமானமா இருக்கும். பார்க்கவே அருவருப்பா இருக்கு. ச்சே! நாய குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அதோட புத்தி தெருவுக்குதான் போகுது.” என்றான் பற்களை கடித்துக்கொண்டு.

அலீஷாவுக்கு விழிகள் கலங்கிவிட்டது.

“ஷட் அப் இடியட்! பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு, பாவம் டா அவ!” தன் நண்பனை கடிந்த மஹி, அலீஷாவின் கையிலிருந்த இரண்டு தட்டுகளை வாங்கி, “நோ ப்ரோப்ளம் அலீ, அவன கண்டுக்காத!” அவனுக்கு பிடித்தம் இல்லையென்றாலும், ஒரு தட்டை அகஸ்டினின் கையில் திணித்துவிட்டு தன் தட்டிலிருந்ததை சாப்பிடப் போனான்.

“தீரா, எப்படி உன்னால சாப்பிட முடியுது? இந்த சாப்பாட்டை சாப்பிட்டா அவ்வளவுதான். என் ஷேப்பே போயிரும், அப்றம் என் வேலை போயிரும். ஓ மை கோட்! அப்றம்…” பேசிக்கொண்டே சென்ற ஆத்வி, அடுத்து மஹி முறைத்த முறைப்பில் வேகமாக அலீஷாவின் கையிலிருந்த தட்டை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தாள்.

அகஸ்டினுக்கு அத்தனை கோபம். ஆனாலும், தற்போது பசியைப் போக்க வேறு வழியின்றி ஒருவாய் சாப்பிட்டவன், அடுத்தநிமிடம் சட்டென்று நிமிர்ந்து மற்ற இருவரையும்தான் நோக்கினான். அதேநேரம் மற்ற இருவரும் கூட ஒருவரையொருவர் உணவை சுவைத்துக்கொண்டு விழிகள் மின்ன பார்த்துக்கொள்ள, அடுத்து அலீஷாவே எதிர்ப்பார்க்காதது போல் உணவை ரசித்து உண்ண ஆரம்பித்துவிட்டனர் மூவரும்.

தள்ளு வண்டியில் விற்கப்படும் உணவின் சுவையை முதல்முறை உணருகின்றனர். அந்த சுவையில் மூவருமே மூழ்கிவிட, அதைப் பார்த்ததும்தான் அலீஷாவுக்கு அத்தனை திருப்தி.

விழிகளை புறங்கையால் துடைத்துவிட்டு அவளும் தன் உணவைச் சாப்பிட, “பாராட்டுற அளவுக்கு எல்லாம் இல்லை. ஏதோ நல்லா இருக்கு. பசிக்கு சாப்பிடலாம்.” அப்போதும் தன் ஈகோவை விட்டுக்கொடுக்காது பேசி, ஐந்து சப்பாத்திகளுக்கு மேல் சாப்பிட்டு விட்டான் அகஸ்டின்.

அதுவும், தானே கூட்டத்திற்குள் புகுந்து தப்பித்தப்பி தெரிந்த ஹிந்தியை பேசி உணவை வாங்கிக்கொண்டும் வந்தான் அவன்.

மூவருமே வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து நகர, “தேங்க்ஸ் அலீ. நான் இதுவரைக்கும் இப்படி சாப்பிட்டது கிடையாது. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.” மஹி சொல்ல, ஆத்வியோ அங்கிருந்த ஆண்கள் அவளை மேலிருந்து கீழ் பார்ப்பதை உணர்ந்து மஹியின் முழங்கையைப் பிடித்து ஒட்டி நின்றுக்கொண்டாள். அதில் திடுக்கிட்டு அவளை நோக்கியவன், அவளுடைய பார்வை செல்லும் திசையைப் பார்த்துவிட்டு கொஞ்சமும் யோசிக்காது தோளோடு அவளை அணைத்துக்கொண்டான்.

இங்கு அகஸ்டினோ, “நியூஸ் பேப்பர டிஷு பேப்பர் மாதிரி கொடுக்குறானுங்க கஞ்சப்பசங்க.” என்று திட்டியவாறு அலீஷா கொடுத்த காகிதத்தில் கைகளை துடைத்துவிட்டு எதேர்ச்சையாகத் திரும்ப, அவன் விழிகளுக்கு சிக்கியது அந்த கருப்புநிற கார். அதைப் பார்த்ததுமே அவனுக்கு அத்தனை கடுப்பு!

“எங்க போனலும் பின்னாடியே வருவானுங்க. பேசாம நாமளும் சாதாரண குடும்பத்துலயே பொறந்திருக்கலாம் போல!” வாய்விட்டு முணங்கியவாறு திரும்பியவனின் பார்வை அலீஷாவின் மீது படிய, அவனுக்குள் ஏதோ ஒரு ஏக்கம். அவனுக்கு மட்டுமல்ல, மஹி மற்றும் ஆத்விக்கு கூட.

அங்கிருப்பவர்களுடன் ஏதோ பல நாட்கள் பழகியது போல் பேசி அவர்கள் தட்டிலிருந்த உணவையே அலீஷா சாப்பிட, அதைப் பார்க்கும் முவருக்கும் சுற்றி கட்டுப்பாடுகள் இல்லாத அவளின் சுதந்திரத்தைப் பார்த்து அத்தனை ஆச்சரியம்.

என்னதான் சுதந்திரமாக இருப்பது போல் வெளியில் தெரிந்தாலும், வியாபார எதிரிகளுக்கு பயந்து காவலர்களின் கண்காணிப்பில் ஒரு பாதுகாப்பு வலையத்திற்குள்தான் மூவரும் இருக்கின்றனர். அந்த எரிச்சலை அகஸ்டின் வெளிப்படையாக காட்டுகிறான் என்றால், அதை ஏற்று வாழப் பழகிக்கொண்டனர் மற்ற இருவரும்.

அதன்பிறகு, அங்கிருந்து மூவரும் வீதியோரமாக நடந்து வர, பின்னால் ஏதோ ஒரு சலசலப்பு!

நால்வரும் பட்டென்று திரும்ப, போதையில் தள்ளாடியபடி “சோ..ரி பாஸ் முன்னாடி போங்க. தங்கச்சிங்க பத்திரம்.” வாய் குளறியபடி சொன்ன ஒருவனின் பார்வை ஆத்வியை விழுங்குவது போல் பார்க்க, அவனுக்கு பக்கத்திலிருந்த இரு ஆடவர்களின் பார்வையிலும் ஏதோ ஒரு வித்தியாசம்.

அதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி ஒலிக்க, மஹியின் முழங்கையை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

அந்த ஆடவர்களை முகத்தை அஷ்டகோணலாக வைத்துப் பார்த்தவர்கள், திரும்பி மீண்டும் தங்களின் வழியில் நடக்கத் தொடங்க, அடுத்து நடந்த சம்பவத்தில் அனலுக்குள் விழுந்தது போல் ஆத்விக்கு உடலே பற்றியெரிய ஆரம்பித்துவிட்டது. போதையிலிருந்த அந்த ஒரு ஆடவன் செய்த காரியம் அப்படி!

அவளுடைய பின்புறத்தை அவன் வேண்டுமென்றே உரசிச் செல்ல, அதில் உண்டான அருவருப்பில் ஆத்வி, “தீரா…” என்று கத்திவிட, திடுக்கிட்டு அவளை நோக்கியவனுக்கு, சிரித்தவாறு சென்ற அந்த மூவரையும் பார்க்க கோபம் தாறுமாறாக எகிறியது. ஆத்வியை அலீஷாவிடம் தள்ளிவிட்டு சட்டை கையை மடித்து விட்டவாறு சென்றவன், அவளை தொட்ட இளைஞனை பொழக்க ஆரம்பித்தான்.

மஹியிடம் அத்தனை ஆக்ரோஷம்! “ஹவ் டேர் யூ டச் மை கேர்ள்?” ஆத்திரத்துடன் கத்தியவாறு மஹி அவனை நடுவீதியில் வைத்து அடிக்க, பின்னாலிருந்து மஹியின் முதுகில் உதைத்தான் ஒருவன். அதில், முன்னால் சமநிலையின்றி விழப்போய் கால்களை தரையில் ஊன்றி சமன்படுத்தி, நெற்றியில் பூத்த வியர்வையை துடைத்துவிட்டு கோபமாகத் திரும்பியவனின் விழிகளுக்கு தன்னை உதைத்தவனுடைய காலை முறுக்கிக்கொண்டிருந்த அகஸ்டின்தான் தெரிந்தான்.

இத்தனைநேரம் பார்த்துக்கொண்டிருந்த அகஸ்டினுக்கு, மஹியை ஒருவன் அடித்ததுமே கோபம் உச்சத்திற்கு எகிற, மஹியை உதைத்தவனை புரட்டி எடுத்துவிட்டான். இருவரும் அந்த மூவரை அடிக்கும் அடியில் அலீஷாவிற்குதான் வயிற்றில் பயபந்து உருள ஆரம்பித்துவிட்டது.

வேறுவழியின்றி, “அய்யோ போலிஸ்! போலிஸ் வர்றாங்க. ஓடுங்க.” கத்திக்கொண்டு அலீஷா ஆத்வியை இழுத்துக்கொண்டு வேறொரு பாதைக்குள் ஓட, ஏற்கனவே இத்தாலியிலிருக்கும் போது இதில் அனுபவப்பட்டவர்கள், அலீஷா கத்தியதும், “ஆத்தீ!” என்று சுற்றிமுற்றி பார்க்காது அவள் பின்னால் ஓடிவிட்டனர்.

அந்த பாதையை கடந்ததும் அலீஷா வயிற்றை பிடித்துக்கொண்டுச் சிரிக்க, இடுப்பில் கைக்குற்றி அவளை முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தனர் இரு ஆடவர்கள்.

எதேர்ச்சையாக மஹியின் பார்வை ஆத்வியின் மீது படிய, இதழை நாவால் ஈரமாக்கியவாறு ஒருவித பதட்டத்தோடு நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவனுக்கே பாவமாக இருந்தது. அருகில் சென்று அவள் கரத்தை இறுகப் பற்றி, “எவ்ரிதிங் இஸ் ஆல்ரைட்.” ஆறுதலாகச் சொல்ல, அவளுக்கு புதுவித உணர்வு!

இதுவரை மஹியின் மீது நட்பைத் தாண்டி அவளின் பார்வை இருந்ததில்லை. ஆனால் இப்போது…

அவனுடைய விழிகளையே அவள் பார்த்திருக்க, அப்போதுதான் அங்கிருந்த சோளங்கள் விற்கும் வண்டியைப் பார்த்த அலீஷா, “ரசகுல்லா வா! சோளம் சாப்பிடலாம்.” உற்சாகமாக சொன்னவாறு அவன் கதற கதற இழுத்துக்கொண்டுச் சென்றாள்.

மஹியும் ஆத்வியின் கரத்திலிருந்து தன் கரத்தை பிரித்தெடுத்து, “அலீ, எனக்கும்…” என்று கத்தியவாறு அவர்களின் பின்னால் ஓட, அதில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ஏக்கமாக மஹியை நோக்கினாள் ஆத்வி.

சுடச்சுட நான்கு சோளத்தை வேக வைத்தெடுத்து, அதை உப்பு நீரில் கலந்தெடுத்து அலீஷாவிடம் அந்த பெண்மணி கொடுக்க, மூவரிடமும் ஒவ்வொன்றை கொடுத்துவிட்டு தனக்கானதை உச்சிக்கொட்டி ரசித்து சாப்பிட ஆரம்பித்தாள் அலீஷா. அவள் கையில் தந்ததும் அந்த சூட்டில் அதை பிடிக்கக் கூட தடுமாறி, ‘எப்படி உண்ணுவது?’ என்று கூட தெரியாது அவளையேப் புரியாது பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் மூவரும்.

அவர்களிள் பார்வையை கவனித்தவள், “நான் என்ன ஷோவா காட்டுறேன்? சாப்பிடுங்க.” என்று கடுகடுக்க, அவள் சாப்பிடுவது போல் மூவரும் சாப்பிட ஆரம்பிக்க, உப்புச் சுவையில் அந்த சூடான சோளத்தின் சுவை தேன் சுவையாக அவர்களின் நாவில் நின்றுவிட்டது என்னவோ உண்மைதான். அலீஷாவை தவிர மூவருக்குமே இதெல்லாம் புதிதுதானே!

“அலீ, எனக்கொரு டவுட். ஏன் இப்போ கம்பனியில வேலைக்கு வர்றதில்லை? எதுவும் இன்ஃபோர்ம் பண்ணாம வேலைக்கு வர்றதில்லைன்னு அத்தை சொன்னாங்க.” அலீஷாவையே கூர்ந்துப் பார்த்தவாறு ஆத்வி கேட்க, ‘கேர்ள் வில் பீ கேர்ள்தான்’ மனதுக்குள் நினைத்து தன்னவளை முறைத்துப் பார்த்தான் மஹி.

அகஸ்டினோ, ‘சொல்லு! நீதான் தைரியமான ஆளாச்சே!’ என்ற ரீதியில் ஒரு பார்வைப் பார்க்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… அது… நான் சொந்தமா பிஸ்னஸ் பண்றேன்.” அலீஷா திருதிருவென விழித்தவாறு சொன்னதும், “க்ரேட்!” என்ற ஆத்வி, “என்ன பிஸ்னஸ்?” கேட்டுவிட்டு அவளை கேள்வியாக நோக்கினாள்.

‘உனக்கெதுக்குடி வெண்ண?’ மனதிற்குள் பொறுமிக்கொண்டவள், “அது உங்களுக்கு சொன்னா புரியாது அக்கா. சும்மா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு ஒன்னும் கிழிக்க முடியாது. அப்படிப்பட்ட வேலை!” அலீஷா அத்தனை பெருமையாகச் சொல்ல, “ஓஹோ! சூப்பர்.” ஆச்சரியமாகச் சொன்ன ஆத்வி, அப்போதுதான் தன் மணிக்கட்டைப் பார்த்து, “ஐ லோஸ்ட் மை ப்ரேஸ்லெட், ஓ ஷீட்!” பதறியபடிச் சொன்னாள்

இங்கு அலீஷாவோ, ‘என்கிட்டயாடி கேள்வி கேக்குற? இனி இது எனக்குதான்.’ உள்ளுக்குள் வில்லத்தனமாக நினைத்தவாறு அவளிடமிருந்து திருடிய செயினை பாக்கெட்டுக்குள் போட, தன்னவள் பேசிய பேச்சில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க படாத பாடுபட்டுக்கொண்டிருந்த அகஸ்டின், அடுத்து அலீஷா செய்த காரியத்தில் வாய்விட்டு சிரித்துவிட்டான்.